49. ஐரோப்பியர்களின் அறிவுசார் மறுமலர்ச்சி
பொ.ஆ.12-ம் நூற்றாண்டு முழுவதும் ஐரோப்பிய நுண்ணறிவு, துணிச்சலையும் ஓய்வையும் குறிப்பாக, கிரேக்க அறிவியல் ஆய்வுகளையும் இத்தாலிய தத்துவவாதியான லுக்ரேடியஸ் (Lucretius) ஊகங்களையும் மீட்டெடுக்கும் அறிகுறிகளைக் காண்கிறோம். சிலுவைப் போர்களைத் தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாடு, மக்களின் மனத் தூண்டுதல் ஆகியவை சந்தேகமின்றி மறுமலர்ச்சிக்கான முக்கிய காரணங்களாக விளங்கின.
வர்த்தகம் மீண்டும் சூடுபிடித்தது. கல்வித் தரம் மேம்பட்டு, சாதாரண மனிதர்களுக்கும் பரவியது. பொ.ஆ.13-ம் மற்றும் பொ.ஆ.14-ம் நூற்றாண்டுகள் வெனிஸ், ஃப்ளாரன்ஸ், ஜெனொவா, லிஸ்பன், பாரிஸ், ப்ரூக்ஸ், இலண்டன், ஆண்ட்வெர்ப், ஹாம்பர்க், நியூரம்பர்க், நோவ்கோரோட், விஸ்பி, பெர்கன் ஆகிய நகரங்களின் சுதந்திரமான வளர்ச்சிக்கான காலம். இவை அனைத்துமே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வர்த்தக மையங்கள்.
போப்கள் மற்றும் மன்னர்களுக்கு இடையேயான மோதல்கள், மதவெறியர்களின் வெளிப்படையான துன்புறுத்தல், காட்டுமிராண்டித்தனம் ஆகியவை, தேவாலயங்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்க வைத்தன. அடிப்படை அம்சங்கள் குறித்த விவாதங்களுக்கும் வழிவகுத்தன. அரிஸ்டாடிலை மீட்டெடுப்பதில் அரேபியர்களின் பங்களிப்பையும் ஐரோப்பியர்களின் மறுமலர்ச்சி மனத்தின் மீது அரேபிய தத்துவமும் அறிவியலும் பரவ, இரண்டாம் ஃப்ரெட்ரிக் காரணமாக இருந்ததையும் பார்த்தோம்.
மக்களின் எண்ணங்களைக் கிளறும் வகையில், யூதர்களின் செல்வாக்கும் கணிசமாக இருந்தது. தேவாலயங்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதே அவர்களது முக்கியப் பணியாக விளங்கியது. இவற்றுக்குச் சிகரம் வைத்தது போல், தகரத்தைத் தங்கமாக்கும் ரசவாதிகள் குறித்த ரகசிய மற்றும் வசீகரமான அனுபவப்பூர்வ அறிவியல் விசாரணைகளும் பெருகத் தொடங்கின.
மக்கள் மனத்தில் ஏற்பட்ட இந்த ஐயங்களும் கிளர்ச்சிகளும் சுதந்திர மற்றும் படித்தவர்கள் மத்தியில் மட்டுமே ஏற்படவில்லை. முன்பு எப்போதும் இல்லாத வகையில் சாதாரண மனிதர்களின் மனமும் விழிப்புணர்வு பெறத் தொடங்கியது. பாதிரியார்கள், துன்புறுத்தல்கள் இவை அனைத்தையும் தாண்டி கிறிஸ்தவ போதனைகள் சென்ற இடமெல்லாம் ஏதோவொரு மன மாற்றத்தை ஏற்படுத்தின. தனி மனித மனச்சாட்சிக்கும் உண்மைக் கடவுளுக்கும் இடையே நேரடித் தொடர்பை நிறுவியது. மன்னன், மதகுரு அல்லது மதம் எதுவாக இருப்பினும் அவை குறித்த தனிப்பட்ட முடிவெடுக்கும் ஆற்றலை எளிய மனிதர்களுக்கு வழங்கியது.
பொ.ஆ.11-ம் நூற்றாண்டு தொடங்கி தத்துவ விவாதங்கள் ஐரோப்பாவில் மீண்டும் தொடங்கின. பாரிஸ், ஆக்ஸ்ஃபோர்ட், போலோக்னா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தோன்றின. அடுத்து வரவிருக்கும் அறிவியல் யுகத்தின் தெளிவான சிந்தனைக்கு அவசியமான படைப்புகளின் மதிப்புக்கும் அர்த்தம் தொடர்பான கேள்விகளுக்கும் ‘இடைக்காலத் தத்துவக் கல்வி’ மாணவர்கள் பதிலளித்தனர். இவர்களுள் சற்று வித்தியாசமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழ நவீன பரிசோதனை அறிவியல் மேதையான ரோஜர் பேகான் (1210-1293). நமது வரலாற்றுப் பதிவில் அரிஸ்டாடிலை அடுத்து இரண்டாம் இடத்தில் வைக்கத் தகுந்தவர்.
அவரது எழுத்துகள் அனைத்தும் அறியாமைக்கு எதிரான புரட்சிக் கருத்துகளைக் கொண்டவை. இன்றைய மனிதன் உலகத்தைப் புனிதத்தன்மைக்கு இணையான வேடிக்கை என்றும் குழந்தைத்தனமும் விகாரமான வழிமுறைகளையும் கொண்டவை என்றும் அதிக அபாயம் இல்லாதவை என்றும் கூறுவார். படுகொலை, பட்டினி அல்லது கொள்ளை நோயால் சாகாத இடைக்கால மக்கள், அவர்களது ஞானம் நம்பிக்கையின் முழுமை மற்றும் இறுதிநிலையை உணர்வுப்பூர்வமாக நம்பினர். அவர்கள் மீதான எந்த பிரதிபலிப்பையும் மிகவும் கசப்பான முறையில் எதிர்ப்பதைத் தவிர்த்தனர்.
பேகானின் எழுத்துகள் இருளைப் போக்கும் மின்னல் கீற்றுபோல் இருக்கும். தனது காலத்து அறியாமையைப் போக்கவும் ஞானத்தை அதிகரிக்கவும் பரிந்துரைத்தார். பரிசோதனையின் அவசியம் ஞானத் தேடல் ஆகியவைற்றில் அரிஸ்டாடிலின் ஆன்மா அவரிடம் உள்ளதைப் பார்க்கிறோம். ‘பரிசோதனை, பரிசோதனை’ என்பதே பேகானின் முழக்கமாக இருந்தது.
இருப்பினும் அரிஸ்டாடிலுடனான ஒப்பீடே ரோஜர் பேகானுக்குச் சிக்கலை வரவழைத்தது. உண்மைகளை நேரடியாகச் சந்திக்கத் துணிவற்ற மக்கள் அரிஸ்டாடிலின் மோசமான இலத்தீன் மொழிபெயர்ப்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இது குறித்து பேகான் சற்று கோபமாகக் கூறுகையில் ‘எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், அரிஸ்டாடிலின் புத்தகங்கள் அனைத்தையும் கொளுத்த ஆணையிட்டிருப்பேன். அவருடைய நூல்களின் ஆய்வு நேரத்தை வீணடிப்பதுடன், தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி அவர்களது அறியாமையையே வளர்க்கின்றன’ என்றார்.
‘உலகத்தைப் பாருங்கள். கோட்பாடுகள் மற்றும் அதிகாரிகளால் ஆளப்படுவதை நிறுத்துங்கள்’ என மனித இனத்துக்கு பேகான் அறைகூவல் விடுத்தார். அதிகாரத்துக்கான மரியாதை, வழக்கம் உணர்வறியாக் கூட்டம் கற்பிக்க முடியாத வீண் பெருமை இயல்புகள், ஆகிய அறியாமைக்கான நான்கு வகை ஆதாரங்களைக் கண்டித்தார். இவற்றை கடக்கும் பட்சத்தில் சக்தி வாய்ந்த உலகத்தின் கதவுகள் மனிதர்களுக்காகத் திறக்கும் என்றார்.
பெரிய கப்பல்கள் ஆறு அல்லது கடலைக் கடக்கத் துடுப்புகளுக்குப் பதிலாக எந்திரங்கள்; மிருகங்களைக் கட்டி இழுக்கும் வண்டிகளுக்குப் பதிலாக கார்கள்; பறவைகளுக்கு உள்ள இறக்கைகளைப் போன்று செயற்கையான இறக்கைகளுடன் பறக்கும் எந்திரங்கள்; என்றெல்லாம் பேகான் மனித ஆற்றலைக் கணித்தார். ஆனால் பேகான் இவற்றை எழுதி சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகே மனிதன் மறைந்திருக்கும் தனது ஆற்றலை ஆய்வு செய்யத் தொடங்கினார். மனித விவகாரத்தின் ஆழத்தில், ஆற்றல் இருப்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டார்.
சரசெனிக் (Saracenic) உலகம் கிறிஸ்தவத்துக்கு, அதன் தத்துவவாதிகள் மற்றும் ரசவாதிகளுக்குத், தேவையான தூண்டுதலை வழங்கியதுடன், ‘காகிதம்’ என்னும் புதிய பொருளையும் அறிமுகப்படுத்தியது. ஐரோப்பிய அறிவுசார் மறுமலர்ச்சிக்கு காகிதம் வழிவகுத்தது எனக் கூற முடியாது. ஏனெனில், பொ.ஆ.மு.2 ஆம் நூற்றாண்டிலேயே சீனாவில் காகிதத்தின் பயன்பாடு தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
பொ.ஆ.751-ல் சமர்க்கண்ட் அரேபிய முஸ்லிம்கள் மீது சீனா தாக்குதல் தொடுத்துப் பலரைக் கைதிகளாகச் சிறைப்பிடித்தது. அவர்களுள் சிலர் காகிதம் தயாரிப்பதில் நிபுணர்கள். சீனா அவர்களிடமிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பட்தைக் கற்றுக்கொண்டது. 9-ம் நூற்றாண்டு அரேபியக் காகித கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றை இன்றைக்கும் காணலாம்.
கிரேக்கம் வழியாக அல்லது ஸ்பெயினை மீண்டும் கிறிஸ்தவர்கள் கைப்பற்றிய போது, மூரிஷ் காகித்த் தொழிற்சாலை மூலம் காகிதம் கிறிஸ்தவ சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்திருக்கலாம். ஆனால், கிறிஸ்தவ ஸ்பானிஷ் காலத்தில் காகிதம் மிகப் பரிதாபகரமாகச் சீரழிந்தது. பொ.ஆ.13-ம் நூற்றாண்டு இறுதிவரை கிறிஸ்தவ ஐரோப்பாவில் தரமான காகிதம் உற்பத்தியாகவில்லை. பின்னாளில், இத்தாலிதான் நல்ல காகிதத் தயாரிப்பில் உலகத்துக்கே வழிகாட்டியது.
பொ.ஆ.14-ம் நூற்றாண்டு இறுதியில் காகிதம் ஜெர்மனியை அடைந்தது. அதே நூற்றாண்டு இறுதியில் ஏராளமான புத்தகங்கள் அச்சிடும் அளவுக்கு வணிகரீதியான பயன்பாட்டுக்கு வந்தது. அச்சு இயற்கையான மற்றும் அவசியமான கண்டுபிடிப்பாக மாறவே, புதிய மற்றும் தீவிரமான கட்டத்துக்குள், உலகின் அறிவுசார் வாழ்க்கை தடம் பதித்தது. அச்சு லட்சக் கணக்கான மனங்களைப் பங்கேற்க வைத்து ஒன்றிணைத்தது.
அச்சு முறை அறிமுகமானதன் உடனடிப் பலன், உலகெங்கும் விவிலியத்தின் பிரதிகள் ஏராளமாக அச்சாகின. பள்ளிப் பாடப் புத்தகங்களின் விலை குறைந்தது. படிப்பு பரவலாகத் தொடங்கியது. படிப்பதற்கு தெளிவாகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் அச்சாகின. எழுதியதைப் படிக்க முடியாமலும் படித்ததைப் புரிந்துகொள்ள முடியாமலும் மூளையைக் கசக்கிய காலம் மாறிப், படிக்கும் போதே தடையின்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.
படிப்பதற்கான வசதி அதிகரிக்கவே, படிக்கும் ஆர்வமும் மக்களிடையே பெருகியது. படிப்பது என்பது கற்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த புதிர் மற்றும் அதிக செலவாகும் விஷயம் என்னும் மாயை தகர்ந்தது. படிக்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்ததுபோல், எழுதும் ஆர்வமும் மக்களிடையே பெருகியது. இலத்தீன் மொழியில் எழுதாமல், மக்களுக்குப் புரியும் எளிய மொழியில் எழுதினர். இவ்வாறாகப் பொ.ஆ.14-ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய இலக்கியத்தின் உண்மையான வரலாறு தொடங்குகிறது.
ஐரோப்பிய மறுமலச்சியில் சரசெனிக்களின் பங்களிப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நாம் இனி மங்கோலிய வெற்றிகளையும் செல்வாக்கையும் காண்போம். ஐரோப்பியப் புவியியல் கற்பனையைப் பெருமளவு தூண்டிவிட்டனர். கிரேட் கான் ஆட்சியில் ஆசிய மற்றும் மேற்கு ஐரோப்பாவுக்கு இடையே நிலவிய தடைகள் அகற்றப்பட்டன. அனைத்துச் சாலைகளும் தற்காலிகமாகத் திறக்கப்பட, ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியும் காரகோரம் (Karakoram) அவையில் அங்கம் வகித்தனர். ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் நடுவே கிறிஸ்தவமும் இஸ்லாமும் விதைத்த மதப் பகை உணர்வு குறைந்தது. மங்கோலியர்களை கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றும் பணியை போப்கள் தீவிரமாக மேற்கொண்டனர். அதுவரை அவர்களுக்கு இருந்த ஒரே மதம் ஷன்மனிஸம் (Shanmanism) என்னும் பல தெய்வ வழிபாடு முறையே. போப் பிரதிநிதிகள், இந்திய பௌத்தப் பூசாரிகள், பார்சீக்கள், இத்தாலிய சீனக் கைவினைக் கலைஞர்கள், பைஜாண்டைன் அர்மீனிய வியாபாரிகள், பாரசீக, இந்திய வான சாஸ்திர நிபுணர்கள், கணிதவியலாளர்கள் ஆகியோர் மங்கோலிய அரசவையை அலங்கரித்தனர்.
மங்கோலியர்களின் பிரசாரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றி வரலாறு நமக்கு அதிகம் சொல்கிறது. ஆனால் கல்வி கற்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் பற்றிய செய்திகள் அதிகம் இல்லை. எந்த ஒன்றின் மூலகர்த்தாக்களாக இல்லையென்றபோதிலும் அறிவைப் பரவச் செய்பவர்களாகவும் உலக வரலாற்றில் செல்வாக்கைச் செலுத்தும் பிரமாண்ட வழிமுறை குறித்தும் அறிந்திருந்தனர். செங்கிஸ்கான் மற்றும் குப்ளாய் கான் தொடர்பான மிகு புனைவுக் கதைகளின் அடிப்படையில் பார்த்தால், மாவீரர் அலெக்சாண்டர் அல்லது அருளாள – அரசர் சார்லமெய்ன் போன்ற புரிதலும் படைப்பூக்கமும் மிகுந்த மன்னர்களைப் போல் இருந்திருப்பதாகத் தோன்றுகிறது.
மங்கோலியர்களின் அரசவைக்கு வந்த முக்கியமான வெனிஸ் நகரப் பயணி மார்க்கோ போலோ (Marco Polo). ஏற்கெனவே சீனாவுக்குப் பயணம் செய்த தனது தந்தை மற்றும் மாமனுடன் பொ.ஆ.1272-ல் மார்க்கோ போலோ சீனாவுக்கு வந்து தனது அனுபங்களைப் பதிவு செய்தார். போலோவின் தந்தை மற்றும் மாமனின் முந்தைய வருகையால் ஏற்கெனவே ஈர்க்கப்பட்ட கிரேட் கான் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார். அவர் சந்தித்த முதல் ‘இலத்தீன்’ நபர்கள் இவ்விருவர்தான். அவர்களது கல்வி முறை, கிறிஸ்தவ மதம் மற்றும் ஐரோப்பா பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் செலுத்தியதுடன், அவற்றை விளக்க ஆசிரியர்களைச் சீனாவுக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டினார்.
முந்தைய பயணத்தின் போது க்ரீமியா (Crimea) வழியாகச் சென்ற போலோக்கள் இம்முறை பாலஸ்தீனம் வழியாக சீனாவை அடைந்தனர். கைவசம் இருந்த தங்க பிஸ்கட் மற்றும் கிரேட் கான் அளித்த சில முத்திரைகள் கடல் வழிப் பயணத்தை சுலபமாக்கியது. ஜெரூசலம் புனித தேவாலய விளக்கு எரியப் பயன்படுத்தும் எண்ணெய் சிறிது வேண்டுமென கிரேட் கான் கேட்டது ஞாபகம் வந்தது. எனவே மூவரும் ஜெரூசலத்தில் எண்ணெய் வாங்கிக்கொண்டு பின்னர் சிலிஷியா (Cilicia) வழியாக அர்மீனியா சென்றனர்.
அத்தருணம் எகிப்து சுல்தான் மங்கோலிய ராஜ்யங்கள் மீது படையெடுத்துக் கொண்டிருந்ததால், எகிப்திய கடல் எல்லைகளைத் தாண்டி வடக்காகப் பயணத்தைத் தொடந்தனர். வழியே பாரசிக வளைகுடாவிலுள்ள மெஸொபொடேமியா மற்றும் ஆர்மஸ் (Ormuz) பகுதிகளை அடைந்தனர். ஆர்மஸ்ஸில் சில இந்திய வியாபாரிகளைச் சந்தித்தனர். ஏதோவொரு காரணத்துக்காகக் கப்பல் மூலம் கடல் வழிப் பயணத்தைத் தொடராமல், பாரசீகப் பாலவனம் ஊடே, தரை வழிப் பயணத்தைத் தொடங்கினர். பால்க் (Balkh), பாமீர் (Pamir), காஷ்கர் (Kashgar), கோடான் (Kotan), லோப் நோர் (Lob Nor) ஆகிய பகுதிகளைக் கடந்து ஹுவாங்க்-ஹோ (Hwang-Ho) பள்ளத்தாக்கைத் தாண்டி பீகிங்க் (Peking) நகரை அடைந்தனர்.
இளைமையும் புத்திசாலித்தனமும் நிறைந்த மார்க்கோ போலோ மிக விரையில் குப்ளாய் கானைக் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. தார்தார் (Tartar) மொழியை நன்கு கற்றுக் கொண்டார். தூதர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டதால், சீனாவுக்கு உள்ளேயும் வெளிநாடுகளுக்கும் அரசு முறையில் அனுப்பி வைக்கப்பட்டார். முதலில் தென் மேற்குச் சீனப் பகுதிக்குச் சென்றார். வழியெங்கும் கண்ட காட்சிகளைப் பதிவு செய்தார். பசுமையான வயல் வெளிகள், பூத்துக் குலுங்கும் சோலைகள், பொங்கிப் பாயும் ஆறுகள், பயணிகள் தங்குவதற்கு சத்திரங்கள், திராட்சை உள்ளிட்ட பழத் தோட்டங்கள், பட்டுத் தயாரிப்பு ஆலைகள், பட்டு ஆடைகள் நெய்யும் தறிகள், தங்க ஆபரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், எங்கெங்கு காணினும் பௌத்த விகாரங்கள் என சீனா மகிழ்ச்சி நிறைந்த செல்வச் செழிப்பான நகரம் என வர்ணிக்கிறார்.
நூற்றுக்கணக்கான யானைகளைக் கொண்ட பர்மாவின் படையை வர்ணித்த மார்க்கோ போலோ, அவற்றை மங்கோலிய வில்லேந்திய வீரர்கள் அழித்ததையும் பெகு (Pegu) வணிக நகரைக் கைப்பற்றியதையும் விவரிக்கிறார். ஜப்பானில் கணக்கிட முடியாத அளவுக்குத் தங்கம் கொட்டிக் கிடந்ததாகக் கொஞ்சம் மிகையாகவே, அந்நாட்டின் புகழ் பாடினார். மூன்றாண்டு காலம் யாங்க் –சௌ (Yang-Chow) ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
மார்க்கோ போலோவை வெளிநாட்டுப் பிரஜையாகப் பார்க்காமல் உள்ளூர் மக்களில் ஒருவராகவே சீனர்கள் பார்க்கும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றினார். தூதராக இந்தியாவுக்கும் மார்க்கோ போலோ அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். பொ.ஆ.1277-ல் சீன சாம்ராஜ்ய அரசவையில் முக்கியப் பதவியில் மார்க்கோ போலோ நியமிக்கப்பட்டதாக சீன ஆவணம் பதிவு செய்துள்ளது. மார்க்கோ போலோ தனது பயணக் குறிப்பில் இப்பதவி தொடர்பாக அளித்த தகவல்களின் உண்மைத் தன்மை இதன் மூலம் நிரூபணமாகிறது.
மார்க்கோ போலோவின் பயண கட்டுரைகள் ஐரோப்பிய கற்பனைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொ.ஆ.15-ம் நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கியங்களில், குறிப்பாக ஐரோப்பிய இலக்கியங்களில், மார்க்கோ போலோவின் பயணக் கட்டுரையில் இடம் பெறும் பெயர்களுடன், கேதே (வடக்கு சீனா), கேம்பூலக் (பீகிங்க்) ஆகியவையும் இடம் பெற்றன.
ஐரோப்பியர்கள் பலரைக் கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்ல மார்க்கோ போலோவின் கடற்பயணக் கட்டுரைகள் தூண்டுகோலாக அமைந்தன எனில் மிகையல்ல. இருநூறு ஆண்டுகள் கழித்து டிராவல்ஸ் ஆஃப் மார்க்கோ போலோ (Travels of Marco Polo) நூலைப் படித்தவர்களுள், இத்தாலி ஜெனோவா (Genoa) மாலுமி கிருஸ்டஃபர் கொலம்பஸ்ஸும் (Christopher Columbus) ஒருவர். மேற்காக உலகைச் சுற்றி சீனாவை அடைவதுதான் அவரது திட்டம். இது பற்றி கொலம்ப்ஸ் எழுதிய டிராவெல்ஸ் (Travels) பயணக்குறிப்புகளை இன்றைக்கும் ஸ்பெயின் செவில் (Seville) நகரிலுள்ள ஆவணக் காப்பகத்தில் காணலாம். மேற்கு நோக்கிப் பயணிக்க வேண்டுமென கொலம்பஸ் எண்ணியதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
பொ.ஆ.1453-ல் கான்ஸ்டாண்டிநோபிளைத் துருக்கியர்கள் கைப்பற்றும்வரை அந்நகரம் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கான வர்த்தக நகராமாக விளங்கி வந்தது. இத்தாலி ஜெனோவா (Genoa) நகர மக்களும் அங்கு சுதந்திரமாக வியாபாரம் செய்தனர். ஆனால், ஜெனோவாக்களின் ஜன்ம விரோதிகளான இலத்தீன் வெனீஷியர்கள் (Venice), கிரேக்கர்களுக்கு எதிராகவும் துருக்கியர்களுக்கு நட்பாகவும் இருந்தனர். துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றிய பின்னர் ஜெனோவாக்களின் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.
உலகம் உருண்டை என்னும் உண்மை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியவே, மேற்கு நோக்கிய பயணம் மூலம் சீனாவை அடையும் திட்டம் சரியாகவும் வெளிப்படையாகவும் தோன்றியது. இத்திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் இரு விஷயங்கள் அமைந்தன. முதலாவது, கடற்பயணிகளுக்கான திசைகாட்டும் (Mariners Compass) கருவியின் கண்டுபிடிப்பு.
கருமேகங்கள் இல்லாமல், நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும் வானம் இருந்தால் மட்டுமே, கடல் பயணத்தில் கப்பல் செல்லும் திசையைத் தெரிந்து கொள்ளமுடியும் என்னும் சங்கடமான நிலை இனி இல்லை. தட்ப வெப்ப நிலை எப்படி இருப்பினும் இக்கருவி மூலம் திசைகளை அறியலாம். அடுத்த விஷயம் முன்னோடிகளாக, நார்மன் (Norman), கடெலோனியன் (Catalonian), போர்ச்சுகீஸ் (Portuguese) நாட்டு மாலுமிகள் ஏற்கனவே அட்லாண்டிக் கடலிலுள்ள கனெரி (Canary), மெடீரா (Madeira) மற்றும் அஜோர் (Azore) தீவுகளுக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பி உள்ளனர்.
திட்டம் தயாரானாலும் கடற்பயணத்துக்குத் தேவையான கப்பல்களும் பயணச் செலவுகளுக்கு அரசு உதவியும் கிடைக்காமல், கிறிஸ்டஃபர் கொலம்பஸ் திண்டாடினார். ஐரோப்பாவின் பல அரசவைகளுக்குச் சென்று மன்றடினார். நிறைவாக ஸ்பெயின் நாட்டு அரசரும் அரசியுமான ஃபெர்டினாண்டும் இஸபெல்லாவும் தேவையான கப்பல்களையும் பயணச் செலவுகளையும் அளிக்க முன் வந்தனர்.
பெயர் தெரியாத பெருங்கடலில், மூன்று சிறிய கப்பல்களில், கொலம்பஸ் சக மாலுமிகளுடன் கடற்பயணத்தைத் தொடங்கினார். 2 மாதங்கள் 9 நாள்கள் கழித்து அவர் ‘ஏதோவொரு இடத்தை’ அடைந்தார். அவரது கப்பல் நின்ற இடம் வேறெந்த ஐரோப்பியரும் யாரும் பயணித்திராத இடம். அதுவொரு புத்தம் புதிய கண்டம். பழைய உலகம் கண்டறியாத இடம். ஆனால், அவரோ தான் கண்டுபிடித்த இடம் ‘இந்தியா’ என எண்ணினார். தங்கம் பருத்தி, வித்தியாசமான விலங்குகள், பறவைகள், மதம் மாற்ற, இரு கண்களிலும் வண்ணம் தீட்டிய இரண்டு செவ்விந்தியர்களுடனும் ஸ்பெயினுக்குத் திரும்பினார். அவர் கண்டுபிடித்த நாடு இந்தியா என உறுதியாக நம்பியதால், தன்னோடு அழைத்து வந்தவர்களை ஆயுட்காலம் முடியும்வரை இந்தியர்கள் என்றே அழைத்தார். ஆனால் அடுத்த பல ஆண்டுகளில், பலர் மேற்கொண்ட தொடர் கடற்பயணங்களுக்குப் பிறகே, கொலம்ப்ஸ் கண்டுபிடித்த புதிய கண்டம் இந்தியா அல்ல என்றும் அது ‘அமெரிக்கா’ என்றும் உலகம் புரிந்துகொண்டது.
கொலம்பஸின் வெற்றிகரமான கடற்பயணம் மேலும் பலரை ஊக்குவித்தது. பொ.ஆ.1497-ல் போர்ச்சுகீஸியர்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவை வந்தடைந்தனர். பொ.ஆ.1515-ல் போர்ச்சுகீஸிய கப்பல்கள் ஜாவாவை (Java) அடைந்தன. பொ.ஆ.1519-ல் ஸ்பெயின் நிறுவனத்தில் வேலை பார்த்த போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மெகல்லன் (Megallen) செவில் துறைமுக நகருக்கு மேற்கே ஐந்து கப்பல்களுடன் பயணம் மேற்கொண்டார். மூன்று வருடங்கள் கழித்து பொ.ஆ.1522-ல் ஐந்தில் விட்டோரியா (Vittoria) என்ற ஒரு கப்பல் மட்டுமே மீண்டும் செவில் (Seville) துறைமுகத்தை அடைந்தது. இதன் மூலம் ‘விட்டோரியா’ (Vittoria) உலகைச் சுற்றி வந்த முதல் கப்பல் என்னும் பெருமையைப் பெற்றது. அதில் பயணித்த 280 மாலுமிகளுள் 32 நபர்கள் மட்டுமே உயிருடன் திரும்பினர். இதில் சோகமான விஷயம் என்னவெனில் ஃபிலிபைன்ஸ் தீவுகளில் தலைமை மாலுமியான மெகல்லனே கொல்லப்பட்டார் என்பதுதான்.
அச்சடித்த புத்தகங்கள், புதிய விலங்குகள், பறவைகள், செடி, கொடிகள் உள்ளிட்ட தாவரங்கள், விநோதமான பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், மது பானங்கள், உலோகங்கள் எனப் புதிய நிலப்பரப்புகளையும் வாழ்க்கை முறைகளையும் கதவுகளையும் ஐரோப்பியர்களுக்குத் திறந்து விட்டது. புதைக்கப்பட்ட கிரேக்க இலக்கியங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மறந்து போன அவை மீண்டும் அச்சடிக்கப்பட்டுப் புத்துயிர் பெற்றன. மக்களின் புதிய சிந்தனைகள், பிளேடோவின் கனவுகளுக்கும் குடியரசு காலப் பாரம்பரிய சுதந்திரத்துக்கும் கண்ணியத்துக்கும் வண்ணம் தீட்டின.
மேற்கு ஐரோப்பாவுக்கு சட்டம் ஒழுங்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ரோமானிய சாம்ராஜ்யம் என்றாலும் இலத்தீன் கிறிஸ்தவத் திருச்சபையே அதை மீட்டெடுத்தது. பேகனிய மற்றும் ரோமானிய ஆட்சி காலத்தில் புதுமைத் தாகமும் ஆர்வமும் இரண்டாம்பட்சமானவையாகவும் அதிகார மையத்தால் கட்டுப்படுத்தப்பட்டவையாகவுமே இருந்தன. இலத்தீனிய சிந்தனைக் காலம் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. பொ.ஆ.13-ம் மற்றும் பொ.ஆ.16-ம் நூற்றாண்டுகளுக்கு இடையே, செமிட்டிக் மற்றும் மங்கோலியர்களின் செல்வாக்கும் கிரேக்க இலக்கியங்களின் மறுகண்டுபிடிப்பும் உச்சம் தொட்டன. இதன் காரணமாக, ஐரோப்பிய ஆரியர்கள், இலத்தீன் பாரம்பரியத்திலிருந்து பிரிந்து சென்று, மனித இனத்தின் அறிவுசார் தலைமைப் பண்புக்கு மீண்டும் தங்களை உயர்த்திக் கொண்டனர்.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.