50. இலத்தீன் திருச்சபையின் சீர்திருத்தம்
இலத்தீன் திருச்சபை கடுமையான பாதிப்பைச் சந்தித்தது; துண்டாடப்பட்டது; தப்பிப் பிழைத்த பகுதிகூட விரிவான புதுப்பித்தலுக்கு உள்ளானது. பொ.ஆ.11-ம் மற்றும் பொ.ஆ.12-ம் நூற்றாண்டுகளில் திருச்சபை, கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தின் யதேச்சதிகாரத் தலைமையின் கீழ் வந்ததையும் 14-ம் மற்றும் 15-ம் நூற்றாண்டுகளில், மனித மனங்கள் மற்றும் விவகாரங்களின் மீதான அதன் அதிகாரம் படிப்படியாகச் சரியத் தொடங்கியதையும் விரிவாகப் பார்த்தோம்.
தொடக்க காலங்களில் அதன் முக்கிய ஆதரவாகவும் சக்தியாகவும் விளங்கிய மத ஆர்வம் பின்னாளில் தற்பெருமை, வறட்டு கௌரவம், துன்புறுத்தல், அதிகாரத்தை மையத்தில் குவித்தல் ஆகியவற்றின் காரணமாகவும் இரண்டாம் ஃப்ரெட்ரிக்கின் நயவஞ்சக சந்தேகத்தாலும் மன்னர்களிடையே திருச்சபைக்குக் கீழ்ப்படியாமைப் போக்கை ஊக்குவித்தது. கிரேட் ஸ்கிஸம் (Great Schism) என அழைக்கப்படும் மேற்கு ரோமானிய திருச்சபை மற்றும் கிழக்கு பைஜாண்டின் பழைமைவாத திருச்சபை ஆகியவற்றுக்கு இடையேயான மிகப் பெரிய பிளவு அதன் மத மற்றும் அரசியல் கௌரவத்தைக் கணிசமாகக் குறைத்தது. கலக சக்திகள் இப்போது இரு பக்கங்களிலிருந்தும் அதைத் தாக்கின.
ஆங்கிலேயனான ஒய்க்ளிஃப் (Wycliff) பிரசாரங்கள் ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவின. பொ.ஆ.1398-ல் செக் நாட்டைச் சேர்ந்த ஜான் ஹஸ் (John Huss) பிரேக் (Prague) பல்கலைக்கழகத்தில் ஒய்க்ளிஃப் பிரசாரங்கள் மீது தொடர் சொற்பொழிவுகள் நடத்தினார். அவரது சொற்பொழிவுகள் படித்தவர்களைத் தாண்டி நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களிடம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தின. மாபெரும் பிளவைச் சரிக்கட்டக் கான்ஸ்டன்ஸ் என்னும் இடத்தில் பொ.ஆ.1414-1418-ல் அனைத்துத் திருச்சபைகளின் கூட்டம் நடைபெற்றது.
உயிருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உறுதிமொழியுடன், இந்தக் கூட்டமைப்பில் கலந்து கொள்ள ஜான் ஹஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நம்பிப் பங்கேற்க வந்தவரை, மதங்களுக்கு எதிரான கொள்கை உடையவர் எனக் குற்றம் சுமத்திக் கைது செய்தனர். வழக்கு முடிவில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பொ.ஆ.1415-ல் உயிரோடு எரித்துக் கொன்றனர்.
பொஹீமிய மக்களைச் சாந்தப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், முடிவில் ஹஸ்ஸைட் மக்களிடையே அமைதியின்மைக்கும் கிளர்ச்சிக்கும் வழிவகுத்தன. தொடர்ந்து நிகழ்ந்த மதச் சண்டைகள் இலத்தீன் கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தின் பிளவுக்குக் காரணமாயின. இந்தக் கிளர்ச்சிக்கு எதிராக, ஒருங்கிணைந்த கிறிஸ்துவத்தின் போப்பாகத் தேர்வான போப் ஐந்தாம் மார்ட்டின், சிலுவைப் போருக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொண்டார்.
ஐந்து சிலுவைப் போர்களும் படுதோல்வி அடைந்தன. பொ.ஆ.13-ம் நூற்றாண்டில் வால்டென்சஸ் (Waldenses) எதிராகத் திரண்டதுபோல் பொ.ஆ.15-ம் நூற்றாண்டில் பொஹீமியாவுக்கு (Bohemia) எதிராகத் திரண்டனர். ஹஸ்ஸைட் போர்வீரர்களின் அணிவகுப்பு மற்றும் வீர முழக்கத்தைக் கேட்டவும் பொஹீமி படைகள் சிதறி ஓடின. சண்டை போடவும் திறனற்று, பொ.ஆ.1436-ல் வெள்ளைக் கொடி ஏந்தி ஹஸ்ஸைட்களுடன் சமாதானமாகப் போக முடிவெடுத்தனர். பாஸில் (Basle) நகரில் புதிய திருச்சபை அமைப்பை உருவாக்கினர். இதில் இலத்தீன் நடைமுறைப் பயன்பாட்டுக்கு எதிரான பல ஆட்சேபங்கள் ஏற்கப்பட்டன.
பொ.ஆ.15-ம் நூற்றாண்டில் பரவிய மிகப் பெரிய கொள்ளை நோய் ஐரோப்பிய சமூகக் கட்டமைப்பைக் கடுமையாகப் பாதித்தது. பொது மக்களிடையே மிகப் பெரிய அளவில் துன்பமும் அதிருப்தியும் நிலவின. இங்கிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகளில் பிரபுக்கள் மற்றும் ஜமீந்தார்களுக்கு எதிராகக் விவசாயிகள் வெகுண்டு போர்க்கொடி உயர்த்தினர். ஹஸ்ஸைட் போர்களுக்குப் பிறகு, விவசாயிகளின் இத்தகைய கிளர்ச்சிகள், மதச் சாயல்களுடன் ஜெர்மனியில் தீவிரமடைந்தன.
இதன் வளர்ச்சிக்கு அச்சுப் பதிப்புகளின் செல்வாக்கு கணிசமாக உதவியது. பொ.ஆ.15-ம் நூற்றாண்டு மத்தியில் ஓரிடம் விட்டு மற்றோர் இடம் எடுத்துச் செல்லத்தக்க அச்சு எந்திரங்கள் ஹாலந்து மற்றும் ரைன்லாந்து நாடுகளில் பயன்படுத்தப்பட்டன. இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் இந்த அச்சுக் கலை மிக வேகமாகப் பரவியது. பொ.ஆ.1477-ல் இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டரில் காக்ஸ்டன் (Caxton) அச்சு எந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
அச்சு எந்திரங்கள் கண்டுபிடிப்பின் மிகப் பெரிய உடனடிப் பயன் மக்களிடையே கிறிஸ்தவத்தைப் பரப்ப, விவிலியம் அதிக எண்ணிக்கையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. கூடவே சர்ச்சைகளும் பெருகின. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவில் படிப்பவர் எண்ணிக்கை கூடியது. திருச்சபை குழம்பியும் பிரிந்தும் கிடந்த நிலையில், அதன் யதேச்சதிகாரத்தைக் குறைக்க மன்னர்கள் திரண்ட காரணத்தால், சொத்துகளையும் ஆதிக்கத்தையும் பாதுகாத்துக்கொள்ள இயலாத சூழலில், மக்கள் தெளிவான எண்ணங்களுடன், உண்மையான பல தகவல்களை மேலும் அறிந்துகொள்ள அச்சுக் கலை உதவியது.
ஜெர்மனியில் திருச்சபை மீதான தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் பொ.ஆ.1483-1546-ல் வாழ்ந்த மார்ட்டின் லூதர் (Martin Luther). திருச்சபையின் பழமையான மரபுவழி மற்றும் நடைமுறைகளை எதிர்த்து பொ.ஆ.1517-ல் விட்டன்பர்க்கில் (Wittenberg) சர்ச்சைகளைக் கிளப்பினார். முதலில் அவர் இலத்தீன் மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்தார். பின்னர் தனது எண்ணங்களையும் கருத்துகளையும் பொது மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஜெர்மன் மொழியில் அறிக்கைகளாக அச்சடித்து விநியோகித்தார்.
திருச்சபைக்கு எதிராக அப்போது ஹஸ் போர்க்கொடி உயர்த்திய நேரத்தில் அடக்கியதுபோல், இப்போது மார்ட்டின் லூதரை அடக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அச்சு எந்திரம் அறிமுகமானதைத் தொடர்ந்து மிக வேகமாகத் தனது கருத்துகளை அரசர்கள் தொடங்கி அடித்தட்டு மக்கள்வரை பரப்பினார். ஹஸ் காலத்துக்கும் மார்ட்டின் லூதர் காலத்துக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடு அச்சு எந்திரத்தின் அறிமுகம். எனவே, ஹஸ்ஸை அடக்கியதுபோல் மார்ட்டின் லூதரை அவ்வளவு எளிதாகத் திருச்சபையால் அடக்க முடியவில்லை.
படிப்பறிவு, பல்வகை எண்ணங்கள் மற்றும் திருச்சபையின் மீதான நம்பிக்கை குறைவு ஆகியவை அதிகரிக்கவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ரோமாபுரி திருச்சபைக்கும் பொது மக்களுக்கும் இடையே நிலவிய மத ரீதியான உறவைத் துண்டிக்க மன்னர்கள் முயன்றனர். ரோமாபுரி திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு இன்றுவரை கத்தோலிக்க போப்க்கு எதிராகப் பல நாடுகள் உள்ளன. அவற்றுள் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஸ்வீடன், நார்வே, டென்மார்க், வடக்கு ஜெர்மனி, பொஹீமியா (ஜெக் -Czech) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
பெரும்பான்மை மன்னர்கள் தங்கள் குடிமக்களின் தார்மிக மற்றும் அறிவுசார் சுதந்திரத்தின் மீது கடுகளவும் அக்கறை செலுத்தவில்லை. ரோமாபுரிக்கு எதிராகத் தங்களை வலுப்படுத்திக் கொள்ள மக்களின் மத ஐயங்கள் மற்றும் கிளர்ச்சிகளைப் பயன்படுத்தினர். ரோமபுரிக்கு எதிராக உரசலும் மோதல் போக்கும் மக்களிடையே பரவத் தொடங்கவே, இயக்கத்தின் மீதான தங்கள் பிடியை இறுக்கிக் கொள்ள முனைந்தனர். தங்கள் கட்டுப்பாட்டில் ‘தேசிய திருச்சபை’ (National Church) ஒன்றை ஒவ்வொரு மன்னரும் தத்தம் நாடுகளில் அமைத்துக் கொண்டனர்.
இயேசு நாதரின் போதனைகளில் எப்போதுமே ஓர் ஆர்வமுள்ள உயிர்த் துடிப்பைக் காணலாம். அவை விசுவாசம், திருச்சபைக்கு அடிபணிதல், நீதி மற்றும் தனி மனிதனின் சுயமரியாதைக்கான நேரடி விண்ணப்பமாக இருக்கும். மன்னர்களின் திருச்சபைகள் ரோமாபுரியின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டாலும் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே போப்பின் தலையீடு இருந்ததைப்போல், மன்னனின் தலையீடும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினர். மக்கள் மீதான ஆதிக்கம் போப்பின் கைகளிலிருந்து சம்பந்தப்பட்ட நாடுகளின் மன்னர்களுக்கு மாறியதைத் தவிர, வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை.
இதை எதிர்க்கும் வகையில் அரசு திருச்சபைகளின் விதிகளுக்குக் கட்டுப்பட மாட்டோம் என்றும் விவிலியம் மட்டுமே எங்கள் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறை என ஒரு பிரிவு போர்க்கொடி தூக்கியது. தொடர்ந்து இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் பல பிரிவுகள் தோன்றின. இவர்கள் நான்-கன்ஃபார்மிஸ்ட் (Non-Conformist) அதாவது இணங்க மறுப்பவர்கள் என அழைக்கப்பட்டனர்.
பொ.ஆ.17-ம் மற்றும் பொ.ஆ.18-ம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து அரசியலில் இப்பிரிவினர் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்தனர். இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக மன்னர் இருக்கக்கூடாது எனக் கடுமையாக ஆட்சேபித்து மிரட்டல் விடுத்தனர். தங்களது எச்சரிக்கைக்கு உடன்படாத காரணத்தால், பொ.ஆ.1649-ல் இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்லஸ் தலையைத் துண்டித்துத் தங்கள் வெறியைத் தணித்துக்கொண்டனர். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து நான்-கன்ஃபார்மிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் குடியரசு நாடாக விளங்கியது.
இலத்தீன் கிறிஸ்தவத்தின் அதிகாரக் கட்டுப்பாட்டிலிருந்து, வடக்கு ஐரோப்பாவின் பெரும் பகுதி பிரிந்து சென்றது ‘சீர்திருத்தம்’ எனப்படுகிறது. இந்த இழப்புகள் தொடர்பான அதிர்ச்சியும் அழுத்தமும் ரோமானிய திருச்சபையில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தின. திருச்சபை மறுசீரமைக்கப்பட்டு அதன் வாழ்வில் புத்துணர்வு பொங்கியது. இந்த மறுமலர்ச்சிக்குக் காரணமாக முக்கியமானவர்களுள் ஒருவர் ஸ்பெயின் நாட்டு ராணுவ வீரனான இளைஞன் இனிகோ லோபெஸ் டி ரிகால்டே(Inigo Lopez de Recalde) என்ற இயற்பெயர் கொண்ட புனித இன்னேஷியஸ் லயோலா (St Ignatius of Loyola).
இளம் வயதில் காதல் களியாட்டங்களில் ஈடுபட்டவர் தீடீரென அனைத்தையும் துறைந்து, பொ.ஆ.1538-ல் பாதிரியார் ஆனார். சொஸைடி ஆஃப் ஜீசஸ் (Society of Jesus) என்ற அமைப்பைத் தொடங்கி ராணுவத்தின் துணிச்சலான மரபுகளையும் ஒழுக்கங்களையும் மதச் சேவைகளில் புகுத்தினார். ஜெசூஸ்ட்ஸ் (Jesuits) என அழைக்கப்படும் சொஸைடி ஆஃப் ஜீசஸ் உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் பிரசார அமைப்புகளுள் ஒன்றாக விளங்கியது.
இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவில் கிறிஸ்தவத்தைப் பரப்பும் தீவிரப் பணிகளில் ஜெசூட்ஸ் ஈடுபட்டது. ரோமானியத் திருச்சபையின் மிக வேகமாகச் சிதைவைத் தடுத்து நிறுத்திய பெருமையும் இதற்குண்டு. கத்தோலிக்க உலகின் கல்வித் தரத்தைக் கணிசமாக உயர்த்தியது. கத்தோலிக்க நுண்ணறிவு தர நிலையை உயர்த்தியதுடன், கத்தோலிக்க மனச்சாட்சியையும் விரைவுபடுத்தியது. புராடெஸ்டெண்ட் ஐரோப்பாவைப் போட்டிக் கல்வி முனைவுகளுக்குத் தூண்டியது. இன்றைக்கு ரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபை வீரியத்தோடும் ஆக்கிரமிப்பு நடத்தையோடும் உள்ளது எனில், ஜெசூட்ஸ் மறுமலர்ச்சியே அதற்கு முக்கியக் காரணம்.
51. சக்ரவர்த்தி ஐந்தாம் சார்ல்ஸ்
சக்ரவர்த்தி ஐந்தாம் சார்ல்ஸ் ஆட்சியின்போது புனித ரோமானிய சாம்ராஜ்யம் ஒரு வகையான உச்சகட்டத்தை எட்டியது. ஐரோப்பா இதுவரை காணாத மிகச் சிறந்த அசாதாரண மன்னர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். சார்லேமேக்னேவுக்குப் பிறகு மிகப் பெரிய மன்னனாகவும் சில காலம் விளங்கினார். இவரது சிறப்புக்கும் புகழுக்கும் இவர் மட்டுமே காரணமல்ல. இவரது தாத்தா சக்ரவர்த்தி முதலாம் மேக்ஸ்மில்லன் (Maxmillan, 1459-1519) வழி வந்த பெருமையாகும். சில குடும்பங்கள் தங்களுக்குள் சண்டையிட்டன; சில உலகளாவிய அதிகாரத்தை நோக்கிப் பயணம் செய்தன. ஹாப்ஸ்பர்க் (Habsburg) வம்சத்தினர் ராஜ வம்ச திருமண பந்தங்கள் மூலம் தங்கள் நிலையை மேம்படுத்திக்கொண்டனர்.
மேக்ஸ்மில்லன் தொடக்க காலத்தில் ஆஸ்திரியா, ஸ்டிரியா (Styria), அல்ஸ்செஸ் (Alsace) பிரான்ஸின் ஒரு பகுதி, ஹாப்ஸ்பர்க் (Habsburg) பரம்பரைச் சொத்து ஆகியவை அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. பர்கண்டி (பிரான்ஸ்) மற்றும் நெதர்லாந்து நாட்டு இளவரசிகளை மணந்து கொண்டார். முதலாம் மனைவி இறந்தவுடன் பர்கண்டி கைவிட்டுச் சென்றாலும் நெதர்லாந்து தொடர்ந்து மேக்ஸ்மில்லன் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்தது. பிறகு பிரிட்டானி (Brittany) இளவரசியைத் திருமணம் செய்ய முயன்று தோல்வி அடைந்தார்.
பொ.ஆ.1493இல், தந்தை மூன்றாம் ஃப்ரெட்ரிக் (Fredrick) மரணத்துக்குப் பிறகு மேக்ஸ்மில்லன் சக்ரவர்த்தி ஆனார். கடைசியாக மிலன் நகரப் பிரபுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். தனது மகனை ஸ்பெயின் நாட்டு அரச குடும்பத்தின் ஃபெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லா தம்பதிகளின் மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். கொலம்பஸ் கடற்பயணத்துக்கு உதவிய ஃபெர்டினாண்ட் மற்றும் இஸபெல்லா இவர்கள்தான். இதன் காரணமாக, ஒன்றுபட்ட ஸ்பெயின், சார்டினியா (Sardinia), இரு சிஸிலி சாம்ராஜ்யங்கள், பிரேசிலுக்கு மேற்கே உள்ள அமெரிக்கா ஆகியவை அவரது அதிகார எல்லைக்குள் வந்தன.
அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி, துருக்கியர்கள் ஐரோப்பாவில் விட்டுச் சென்ற சரி பாதி பகுதி, தாத்தா மேக்ஸ்மில்லன் காலத்து ராஜ்யங்கள் அனைத்தும் அவரது பேரனான ஐந்தாம் சார்லஸுக்கு பரம்பரை மரபு வழியாக வந்து சேர்ந்தன. பொ.ஆ.1506-ல் நெதர்லாந்து முழுவதும் அவர் வசமானது. இவரது இன்னொரு தாத்தாவான ஃபெர்டினாண்ட் பொ.ஆ.1516-ல் மரணமடைந்தார். அவரது மகள், அதாவது ஐந்தாம் சார்லஸ் தாய், மனநலம் பாதிக்கப்பட்டவள் என்பதால் ஸ்பெயின் சாம்ராஜ்யமும் இயல்பாகவே அவர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பொ.ஆ.1519-ல் தாத்தா மேக்ஸ்மில்லன் இறக்கவே பொ.ஆ.1520-ல் 20 வயதான ஐந்தாம் சார்ல்ஸ் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார்.
புத்திசாலித்தனமான முகம் இல்லை எனினும் ஐந்தாம் சார்ல்ஸ், இளமையும் அழகும் கொண்டவர். அவரது சம காலத்து ஐரோப்பிய மன்னர்களும் இவரைப் போலவே இளம் வாலிபர்களாக இருந்தனர். பொ.ஆ.1515-ல் பிரான்ஸ் மன்னனாக 21 வயது முதலாம் ஃப்ரான்சிஸ், பொ.ஆ.1509-ல் இங்கிலாந்து மன்னனாக 18 வயது எட்டாம் ஹென்றி பட்டத்துக்கு வந்தனர். இந்தியாவில் பொ.ஆ.1526-ல் பாபர் மற்றும் துருக்கியில் பொ.ஆ.1520-ல் சுலைமான் தி மாக்னிஃபிசண்ட் (Suleiman The Magnificent) சக்ரவர்த்தி ஆனார்கள். பொ.ஆ.1513-ல் கத்தோலிக்க ரோமானிய போப் பத்தாம் லியோ புகழும் செல்வாக்கும் பெற்றவராகத் திகழ்ந்தார்.
புனித ரோமானிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக ஐந்தாம் சார்ல்ஸ் முடிசூட்டிக்கொள்வதை ரோமானிய கத்தோலிக்கத் திருச்சபையின் பத்தாம் லியோ போப், பிரான்ஸ் மன்னன் முதலாம் ஃப்ரான்சிஸ் மற்றும் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி ஆகியோர் கடுமையாக எதிர்த்தார்கள். ஐந்தாம் சார்ல்ஸ் சக்ரவர்த்தி ஆகும்பட்சத்தில், அனைத்து அதிகாரங்களும் தனி ஒருவரிடம் குவிந்துவிடும் என்றும் சர்வ வல்லமை படைத்தவனாகி விடுவார் என்றும் அஞ்சினார்கள். எனவே அவர் சக்ரவர்த்தியாகத் தேர்வாவதைத் தடுக்க முதலாம் ஃப்ரான்சிஸ்ஸும் எட்டாம் ஹென்றியும் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்துடன் களம் இறங்கினார்கள். இருப்பினும் தோல்வியே மிஞ்சியது. பொ.ஆ.1273 முதல் ஹாப்ஸ்பர்க் வம்ச சக்ரவர்த்திகளின் நீண்ட நெடிய பரம்பரைப் பெருமையும் லஞ்சமும் சக்ரவர்த்தியாக ஐந்தாம் சார்ல்ஸ் தேர்வாக உதவின.
இளைஞன் என்பதால் ஆரம்பத்தில் சார்லஸை அவரது அமைச்சர்கள் கைப்பாவையாகப் பயன்படுத்தினார்கள். போதிய அனுபவம் இல்லாத காரணத்தால், எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்தார். ஆனால் காலப்போக்கில் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு, அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்தினார். அமர்ந்திருக்கும் மிக உயர்ந்த பதவியின் சிக்கல்களையும் அச்சுறுத்தல்களையும் புரிந்துகொள்ளத் தொடங்கினார். பதவி, புகழையும் அதிகாரத்தையும் தரும். அதே சமயம் பாதாளத்தில் தள்ளிவிடும் அபாயமும் அதிகம் என்பதைத் தெளிவாகவே உணர்ந்திருந்தார்.
தொடக்கம் முதற்கொண்டே ஜெர்மனியில் நடைபெற்ற மார்ட்டின் லூதரின் ஆர்பாட்டங்கள் சார்லஸுக்குச் சங்கடத்தையே உண்டாக்கின. சீர்திருத்தவாதிகளை சார்லஸ் ஆதரித்ததற்கு ஒரே காரணம் ரோமானிய போப் இருவருக்கும் பொதுவான எதிரியாகப் போனதுதான். தான் சக்ரவர்த்தியாகத் தேர்வாவதை போப் எதிர்த்த காரணத்தால், போப்புக்கு எதிரான சீர்திருத்தவாதிகளை சார்லஸ் ஆதரித்தார். ஆனால் கத்தோலிக்க நாடான ஸ்பெயினில் வளர்ந்த காரணத்தால், மார்ட்டின் லூதரை எதிர்க்கவேண்டிய சூழல் உருவானது. புராடெஸ்டெண்ட் மன்னர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். குறிப்பாக எலெக்டர் ஆஃப் சாக்ஸனியோடு (Elector of Saxony) ஒத்துப்போகவில்லை.
கிறிஸ்தவம் இரு பிரிவுகளாக உடைவதற்குக் காரணமான மோதலில், சார்லஸும் சிக்கிக் கொண்டார். அவர் நேர்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரக் கடுமையாக உழைத்தார். ஆனாலும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஜெர்மனியில் நடைபெற்ற விவசாயிகளின் கிளர்ச்சி, அரசியல் மற்றும் மதக் கலவரங்களுடன் கலந்தது. கிழக்கு மற்றும் மேற்கிலிருந்த அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், உள்நாட்டுக் கலவரங்களை இன்னும் மோசமாக்கின.
மேற்கே பரம வைரியான முதலாம் ஃப்ரான்ஸிஸ் மற்றும் கிழக்கே பிரான்ஸுடன் நட்பு பாராட்டும் துருக்கி. சார்லஸுக்கு ஸ்பெயினில் ஓரளவு பணமும் படை பலமும் இருந்தாலும் ஜெர்மனியிடமிருந்து எதிர்பார்த்த எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிகள், அவனது சமூக மற்றும் அரசியல் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கின.
இங்கிலாந்துக்கும் ஃபிரான்ஸுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். எனவே எதிரியின் எதிரி நண்பன் என்ற கணக்கில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியோடு கைகோர்த்து, ஃப்ரான்ஸையும் துருக்கியையும் எதிர்க்க சார்லஸ் முடிவெடுத்தார். வடக்கு இத்தாலி முதன்மையான போர்க்களம் ஆனது. ஃபிரான்ஸின் மீது படையெடுத்த ஜெர்மனி கடுமையாகப் போரிட்டும் மார்செல்ஸைக் கைப்பற்ற முடியாத நிலையில், இத்தாலியில் அதன் வசமிருந்த மிலன் நகரையும் இழந்தது.
பெவியா (Pavia) நகரம் மீது படையெடுக்க ஃபிரான்ஸ் மன்னன் முதலாம் ஃப்ரான்ஸிஸ் உத்தரவிட்டார். நீண்ட காலம் நடைபெற்ற போரில் முதலாம் ஃப்ரான்சிஸ் படுதோல்வி அடைந்தார். ஜெர்மன் படைகள் அவரைப் போர்க்கைதியாகச் சிறைப்பிடித்தது. கான்ஸ்டபிள் ஆஃப் போர்பான் (Constable of Bourbon) தலைமையில் மிலனில் இருந்த ஜெர்மன் படைகள் பொ.ஆ.1527-ல் ரோமாபுரி மீது தாக்குதல் நடத்தி அந்நகரைச் சூறையாடின. இவ்வாறாக இத்தாலியும் சார்ல்ஸ் ஆளுகையின் கீழ் வந்தது.
கொலையும் கொள்ளையும் நடந்துகொண்டிருக்கும்போதே, உயிருக்குப் பயந்து போப் புனித ஆஞ்சலோ கோட்டையில் தஞ்சம் புகுந்தார். சமாதானமாகப் போகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ரோமாபுரி 400,00 ட்யூகாட்ஸ் (Ducats) தங்க நாணயங்களைக் கப்பமாகத் தர வேண்டும். ஜெர்மன் மன்னன் ஐந்தாம் சார்லஸை ரோமாபுரிச் சக்ரவர்த்தியாக முடிசூட்ட வேண்டும் என்று முடிவானது. போப் ஜெர்மனிக்குக் கப்பப் பணம் கொடுத்த பிறகே போர் முடிவுக்கு வந்தது. பொ.ஆ.1530-ல் போப் போலோக்னாவில் (Bologna) ஐந்தாம் சார்லஸுக்கு சக்ரவர்த்தி மகுடம் முடிசூட்டினார். ரோமானியச் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட கடைசி ஜெர்மானியனும் சார்லஸ்தான்.
அதே நேரம் துருக்கியர்கள் ஹங்கேரிக்குள் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். 1526-ல் ஹங்கேரியைத் தோற்கடித்து அதன் மன்னரையும் கொன்றனர். சுலைமான் தி மெக்னிஃபிசண்ட், தலைநகர் புடாபெஸ்டைக் (Budapest) கைப்பற்றியத் தொடர்ந்து பொ.ஆ.1529-ல் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவையும் (Vienna) நெருங்கினர். துருக்கியர்களின் ஊடுருவல், சக்ரவர்த்தி சார்லஸுக்கு கவலையைத் தந்தது. துருக்கியர்களை விரட்டி அடிக்கக் கடுமையாகப் போராடினார். தங்கள் நாட்டு எல்லையில் எதிரிகளான துருக்கியர்கள் தயார்நிலையில் வலுவாக இருப்பதைப் பார்த்தும் ஜெர்மன் இளவரசர்கள் ஒன்றிணையாதது கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்.
வெல்ல முடியாதவராக ஃப்ரான்ஸ் மன்னன் முதலாம் ஃப்ரான்சிஸ் சில காலம் விளங்கினார். இருப்பினும் 1538-ல் நடைபெற்ற ஃப்ரெஞ்ச் போரில் அவரை வீழ்த்தித் தெற்கு ஃப்ரான்ஸைக் கைப்பற்றினார். ஆனால் இவரிடம் அவர் நட்பு பாராட்டவே இருவரும் நண்பர்கள் ஆனார்கள். துருக்கியைப் பழிவாங்க சார்லஸ் மற்றும் ஃப்ரான்சிஸ் கூட்டணி அமைத்துக்கொண்டனர்.
கத்தோலிக்க ரோமாபுரியின் ஆதிக்கத்திலிருந்து பிரிந்துசெல்ல முடிவெடுத்த ஜெர்மன் புராடெஸ்டெண்ட் மன்னர்கள், புதிதாக ஷிமால்கால்டிக் லீக் (Schmalkaldic League) என்னும் அமைப்பை சார்லஸுக்கு எதிராக ஏற்படுத்தினர். ஜெர்மனியில் உள்நாட்டுக் குழப்பம் அதிகமாகவே, சார்லஸ் தனது முழு கவனத்தையும் தனது நாட்டின் மீதே திருப்ப வேண்டிவந்தது.
சூழ்ச்சிகள், ராஜ தந்திரங்களுடன், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இளவரசர்களுக்கு இடையே நடைபெற்ற ரத்த வெறி கொண்ட சண்டைகள் பேரழிவுக்கே வழிவகுத்தன. சாக்கு மூட்டைக்குள் அடைக்கப்பட்ட பாம்புகள், எவ்வாறு ஒன்றை ஒன்று வளைந்து நெளிந்து தாக்கிக் கொண்டிருக்குமோ, அவ்வாறே, முரண்பட்ட கொள்கைகள் கொண்ட இவர்கள் மத்திய ஐரோப்பாவை சீரழித்ததுதான் மிச்சம்.
இந்தக் குழப்பத்தில் ஆத்மார்த்தமாகவும் உண்மையாகவும் இருப்பவர்களை அடையாளம் காண சார்லஸ் தவறிவிட்டார். ஐரோப்பாவைத் துண்டாடும் மத முரண்பாடுகளை, உண்மையான இறையியல் வேறுபாடுகள் என முடிவுகட்டும் அளவுக்கு நல்லவனாக இருந்தார். குழுக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போயின. சூத்திரங்களும் ஒப்புதல் வாக்குமூலங்களும் முயன்று பார்க்கப்பட்டன. ஜெர்மன் வரலாற்றைப் படிக்கும் மாணவன், நியூரம்பர்க் மத சமாதானம் (Religious Peace of Nuremberg), ராடிஸ்பன் அமைப்பின் சமாதானம் (Settlement at the Diet of Ratisbon), இண்டெரிம் ஆஃப் ஆக்ஸ்பர்க் (Interim of Augsburg) ஆகியவை குறித்த விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.
விரிவடைந்த மதச் சிக்கல்கள், உண்மை மற்றும் சமூக நீதிக்கான பொது மக்களின் ஆர்வம் அறிவுசார் பரவல் ஆகியவை உலகெங்கும் காணப்பட்டன. மதங்களுக்கு எதிரான கொள்கைகளைக் கடுமையாகக் கண்டித்துப் புத்தம் எழுதியதற்காக, இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றிக்கு ‘(கிறிஸ்தவ) மத நம்பிக்கைகளின் பாதுகாவலர்’ (Defender of Faith) என்ற பட்டத்தை வழங்கி போப் பாராட்டினார். ஆனால் ஹென்றியின் கத்தோலிக்கப் பாசம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
ஆன் பொலின் (Anne Boleyn) என்னும் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவும் இங்கிலாந்து திருச்சபையின் ஏராளமான சொத்துகளையும் செல்வத்தையும் அபகரிக்கவும் ஹென்றி முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இதற்கு வசதியாக 1530-ல் ரோமானிய கத்தோலிக்க போப்புக்கு எதிரான புராடெஸ்டெண்ட் பிரிவினருடன் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு முன்னோடியாக ஏற்கனவே நார்வே, ஸ்வீடன், டென்மார்க் மன்னர்கள் கத்தொலிக்கத்துக்கு எதிரான புராடெஸ்டெண்ட் பிரிவுக்கு மாறிவிட்டனர்.
மார்ட்டின் லூதர் மறைந்த சில மாதங்களுக்குப் பிறகு, பொ.ஆ.1546-ல் ஜெர்மனியில் மதப் போர் தொடங்கியது. புராடெஸ்டெண்ட் சாக்ஸன் படை, லாசோ (Lachau) என்ற இடத்தில் படுதோல்வி அடைந்தது. சக்ரவர்த்தி சார்லஸின் பரம எதிரியான ஃபிலிப்ஸ் ஆஃப் ஹெஸ்ஸே (Philips of Hesse) கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு வருடமும் கப்பம் செலுத்துவதாகத் துருக்கியர்கள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். பொ.ஆ.1547-ல் சார்லஸுக்கு நிம்மதி தரும் செய்தியாக ஃபிரான்ஸ் மன்னன் முதல் ஃப்ரான்சிஸ் மரணமடைந்தார். சற்று ஓய்ந்திருந்த மதக் கலவரங்கள், பொ.ஆ.1552-ல் ஜெர்மனியில் மீண்டும் தொடங்கின. சமாதானங்கள், உடன்படிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இதேபோன்ற சமநிலை இல்லாத அரசியல் சூழல், அடுத்த முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. ஐரோப்பிய உயர்வுக்காக, ஐரோப்பிய எண்ணம் முழுவதும் ஒருங்கிணைந்து செயல்பட்டது ஆச்சரியமான மற்றும் சுவாரஸ்யமான விஷயமே. அமெரிக்கா என்னும் மிகப் பெரிய கண்டத்தின் அரசியலில், இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் துருக்கி நாடுகள் ஆர்வம் செலுத்தவில்லை. ஆசியாவுக்குப் புதிய கடல் பயண வழிகளையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அமெரிக்க கண்டத்தில் பல விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்டெக்ஸ் (Cortex), மெக்ஸிகோவின் நியோலித்திக் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினார். அதே ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிஸாரோ (Pizarro) பொ.ஆ.1530-ல் பனாமா கால்வாயைக் கடந்து பெரு நாட்டை வென்றெடுத்தார். மேற்கூறியபடி, ஏனைய ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க அரசியலில் ஆர்வம் செலுத்தாத நிலையில், ஸ்பெயின் மட்டுமே மெக்ஸிகோ மற்றும் பெரு நாடுகளைக் கைப்பற்றிக் கொள்ளை அடித்துத் தனது கஜானாவை நிரப்பிக்கொண்டது.
பொ.ஆ.1552-ல் செய்து கொண்ட பாஸ்ஸோ ஒப்பந்தம் (Treaty of Passau) காரணமாக, சார்லஸின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி என்ற பதவி அலுப்புத் தட்டத் தொடங்கியது. ஐரோப்பியப் போட்டியாளர்களின் எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள இயலாத சகிப்பின்மை அதிகரித்தது. திறமையான ஆட்சியாளராக எப்போதும் இருந்ததே இல்லை. செயலற்ற தன்மையுடன் கீல்வாதமும் சேர்ந்து கொண்டது. இவை அனைத்துமே பொறுப்பிலிருந்து விலகக் காரணமாகின. சக்ரவர்த்தி பதவியைத் துறந்தார். சாம்ராஜ்யத்தைப் பங்கு போட்டார். ஜெர்மனியைச் சகோதரன் ஃபெர்டினாண்டுக்கும் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தை மகன் ஃபிலிப்புக்கும் பிரித்துக் கொடுத்தார்.
கருவேலமரம் மற்றும் கஷ்கொட்டை மரங்கள் நிரம்பிய போர்சுகல் நாட்டின் டாகஸ் (Tagus) பள்ளத்தாக்கில் யஸ்டே (Yuste) என்ற இடத்திலுள்ள மடாலயத்தில் மீதிக் காலத்தை கழித்தார். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சார்லஸ் சக்ரவர்த்தி பதவியிலிருந்தும் உலக வாழ்விலிருந்தும் ஓய்வு பெற்று அமைதி தேடி போனதுபோல் தோன்றும். ஆனால் அப்படியொன்று அவர், சுகபோகங்களை உதறிவிட்டு வாழவில்லை. அரச அவைதான் இல்லையே தவிர, அதற்குண்டான அனைத்து வசதிகளோடு, 150க்கும் அதிகமான வீரர்களின் பாதுகாப்போடுதான் வாழ்ந்தார். அவரது மகன் ஃபிலிப் உண்மையிலேயே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கு உதாரணமான உத்தமமான பிள்ளைதான்.
ஐரோப்பிய ராஜாங்க விவகாரங்களை நிர்வகிப்பதில் சார்லஸுக்கு ஆர்வம் குறைந்தாலும் அவருக்கு வேறு உடனடி நோக்கங்கள் இருந்தன. ஸ்பெயினிலுள்ள வல்லடோலிட் (Valladolid) நகர அரசு செயலர், பிரேசிலுள்ள க்விக்ஸாடா (Quixada) நகரச் செயலருக்கு அனுப்பும் தினசரிக் கடிதங்களில், (சக்ரவர்த்தி) சார்லஸ் அன்றாடம் சாப்பிடும் உணவு அல்லது அவரது உடல்நிலை பற்றிய குறிப்புகள் இருக்கும். வர்ணனையுடன், தொடர்கதைபோல் அடுத்தடுத்து அனுப்பப்படும் எல்லாக் கடிதங்களிலும் அது தவறாமல் இடம் பெறும்.
ஸ்பெயினின் வல்லடோலிட் நகரிலிருந்து போர்சுகலின் லிஸ்பன் நகருக்குக் கடிதங்களை எடுத்துச் செல்வபவர், ஜரண்டில்லா (Jarandillaa) வழியாக மாற்றுப்பாதையில் சென்று சார்லஸுக்குத் தேவையான சுவையான உணவுகளை வாங்கிச் செல்ல வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சார்லஸுக்குத் தவறாமல் மீன் உணவு விசேஷமாகத் தயாரித்து அளிக்கப்படும். அங்கு கிடைக்கும் குளத்து மீன்கள் சிறிய அளவில் இருந்ததால், வல்லடோலிட் நகரிலிருந்து பெரிய அளவிலான மீன்கள் எடுத்து வந்து கொடுப்பார்கள். மீன்தான் என்றில்லை; மீனைப் போன்ற குணம் கொண்ட எதுவாக இருந்தாலும் விலாங்கு மீன், தவளை, சிப்பி, நெத்திலி என நீர் வாழ் உயிர்கள் அனைத்தையும் சுவைத்துச் சாப்பிடுவார்.
பொ.ஆ.1554-ல் போப் மூன்றாம் ஜூலியஸ் வழங்கிய ஆணை மூலம் காலை நேரத்தில் சாப்பிடாமல் இருக்கும் சடங்கிலிருந்து சார்லஸ் விலக்கு பெற்றார். நன்றாகச் சாப்பிடுவது, தூங்குவது, இவைதான் சார்லஸின் தற்போதைய வேலை. படிப்பதில் ஆர்வம் இல்லை. ஆனால் சாப்பிடும்போது யாரெனும் ஒருவர் முக்கிய விஷயங்களை அவருக்குப் படித்துச் சொல்வார். பாடல்கள், இசையில் நாட்டம் உண்டு. அதிகமான பிரியம் வைத்திருந்த மனைவி இறந்த பின், வாழ்க்கை மீதான பிடிமானம் குறைந்து, மதம் தொடர்பான சடங்குகளில் கவனம் செலுத்தினார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற பாதிரிகளுடன் தம்மைத்தாமே தண்டித்துக்கொள்ளும் சடங்குகளில் ஈடுபடுவார். காலப்போக்கில் மதம் மீதான பற்று மதவெறியாக மாறியது.
வல்லடோலிட் பகுதியில், கத்தோலிக்கத்துக்கு எதிராக இயங்கும் புராடெஸ்டெண்ட் பிரிவினர் பிரசாரம் செய்த போது, கோபமடைந்தார். கடுமையான எச்சரிக்கை விடுத்தார். குற்றவாளிகளை மன்னித்து விடுவித்தால், அவர்கள் மீண்டும் அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். எனவே, அவர்களுக்குக் கருணைக் காட்டாமல், தீவிர தண்டனை அளிக்க வேண்டுமென் உத்தரவிட்டார். தவறான கொள்கைகளைத் திருத்திக் கொள்ளாமல் பிடிவாதமாக இருப்போர் உயிரோடு கொளுத்தப்பட்டனர்; தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டவர்களின் தலை துண்டிக்கப்பட்டன.
யாரேனும் மரணமடைந்தால், அவர்களது இறுதிச் சடங்குளில் பங்கேற்பதுடன், உடலை அடக்கம் செய்வதற்கு முன், ஆன்மா அமைதியாக உறங்க நடத்தப்படும் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதை சார்லஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவனது மனைவி இறந்து ஓராண்டு நிறைவின்போது, அவளது நினைவாகத் துக்கம் கடைப்பிடித்தார். இறந்தவர்களுக்கான சடங்குகள் செய்வதில் அவரது ஆர்வம் எல்லை மீறிக், கிட்டத்தட்ட வியாதியாகவே ஆகிவிட்டது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இறந்த பின்னர் தனக்குச் செய்யவேண்டிய இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை, வாழும் போதே முன்கூட்டியே திட்டமிட்டார். ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, தனது இறுதி ஊர்வலத்தையும் கல்லறையில் நடைபெறும் இறுதிச் சடங்குகளையும் தானே முன் நின்று நடத்தி ஒத்திகை பார்த்தார். கல்லறை முழுவதும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. எங்கும் சோகமயம். வந்திருந்தவர்கள் துக்கத்தின் அடையாளமாக கருப்பு அங்கிகள் அணிந்திருந்தனர். இரவை வெளிச்சமாக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. சார்லஸ் இறுதிச் சடங்கைக் காண சாம்ராஜ்யமே திரண்டு வந்திருந்தது. கருப்புத் துணியால் போர்த்தப்பட்ட சவப் பெட்டியைச் சுற்றி அனைவரும் நின்றுகொண்டு அழுது கொண்டிருந்தனர். இறந்தவருக்கு கிறிஸ்தவ முறைப்படிச் செய்ய வேண்டிய சடங்குகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின. இசைக் கலைஞர்கள் சோக கீதம் இசைத்தனர். படை வீரர்கள் அணிவகுத்து அஞ்சலி செலுத்தினர்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சவப்பெட்டி மீது மலர்களைத் தூவினர். அரசு ஊழியர்களும் உறவினர்களும் மக்களும் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்த கதறிக் கதறி அழுதனர். கையில் மெழுகுவர்த்தியுடன் இவை அனைத்தையும் சார்லஸ் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது ஆத்மாவைப் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவிடம் ஒப்படைக்கும் அடையாளமாக மெழுகுவர்த்தி திரியைப் பாதிரியார் கையில் வைத்தார். தனது இறுதிச் சடங்கைத் தானே காணும் பாக்கியம் பெற்றவர் உலகிலேயே ஐந்தாம் சார்லஸ் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
தனது இறுதிச் சடங்குகளைப் பார்க்கும் பேறு பெற்றவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கவில்லை. இந்தக் கூத்து அரங்கேறிய அடுத்த இரு மாதங்களில் அமைதியாக (பொ.ஆ.1558) மரணத்தைத் தழுவினார். சகோதரன் மற்றும் மகனுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட அவரது சாம்ராஜ்யமும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தது. மொத்தத்தில் ஆயிரம் ஆண்டுகள் ஐரோப்பா முழுவதும் பரவியிருந்த புனித ரோமானிய சாம்ராஜ்யம் ஃப்ரெஞ்சு நெப்போலியனின் எழுச்சிக்குப் பின்னர் மெள்ள மெள்ளச் சரிந்து முடிவுக்கு வந்தது. ஆனால், இன்றுவரை அதன் புதைக்கப்படாத பாரம்பரியம் அரசியல் சூழலை மாசுபடுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.