52. அரசியல் பரிசோதனைகளின் காலம்: ஐரோப்பாவில் பிரம்மாண்ட முடியாட்சி, நாடாளுமன்றம் மற்றும் குடியரசு
இலத்தீன் திருச்சபை நொறுங்கியது. புனித ரோமானிய சாம்ராஜ்யம் அழிவின் விளிம்புக்குப் போனது. பொ.ஆ.16-ம் நூற்றாண்டு தொடங்கி ஐரோப்பாவின் வரலாறு, இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி உருவாகும் புதிய சூலுக்கு ஏற்ற, புதிய வகை அரசுகளைத் தேடிய மக்களின் உணர்வுகளைச் சொல்லும் கதையே. பண்டைய உலகில் காலங்காலமாக வம்சங்கள், இனங்கள், மொழிகள் ஆகியவற்றின் மாற்றம் நடைபெற்றாலும் முடியாட்சிகளின் கட்டமைப்பு, நிர்வாக முறை, கோயில்கள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அப்படியேதான் இருந்தன. இன்னும் சொல்வதெனில், மக்களின் வாழ்வு முறையில்கூட எந்த மாற்றமும் நடைபெறவில்லை.
ஆனால், நவீன ஐரோப்பாவில், பொ.ஆ.16 நூற்றாண்டு தொடங்கி ஆளும் வம்சங்களிலும் மாற்றம் ஏற்பட்டன. ஆனால் அவை முக்கியமல்ல. அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் ஏற்பட்ட பல்வேறு விரிவான பரிசோதனைகளில்தான் வரலாற்றின் சுவாரஸ்யம் அடங்கி உள்ளது. நாம் ஏற்கெனவே சொன்னதுபோல், உலக அரசியல் வரலாறு, புதிய சூழலுக்கு ஏற்ப, மனித இனம் அதன் அரசியல் மற்றும் சமூக முறைகளை மாற்றியமைக்கும் முனைவே. ஆனால், சூழல்கள் மிக அதிகமாகவும் வேகமாகவும் மாறியதால், அவற்றை ஏற்றுக் கொள்ளும் முனைவு சிக்கலாகிப் போனது.
இந்த ஏற்பு தன்னிச்சையாவும் விருப்பமின்றியும் நடைபெற்றது. மனிதர் ஆர்வமோடும் விருப்பமோடும் எந்த மாற்றத்தையும் தானாக ஏற்றுக்கொள்ளமாட்டார். சூழல்களுக்குப் பின்னுள்ள மாற்றங்களைக் காலம் தாழ்த்தியும் கட்டாயத்தின் பேரிலும் திணிக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் இயல்புடையது மனித குணம். எனவே பொ.ஆ.16-ம் நூற்றாண்டு தொடங்கி மனித இனத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாறுகளின் கதை, பொருத்தமற்றவை, வசதி குறைந்தவை மற்றும் எரிச்சலூட்டுபவை. முந்தைய வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிடுகையில், மனித சமூகங்களுக்கு எதிரான உணர்வுபூர்வ மற்றும் அவசியமான புனரமைப்பின் தேவைகள், மெதுவாகவும் தயக்கத்துடனும் உணரப்படுகிறது.
காட்டுமிராண்டிகளின் படையெடுப்புகள், பண்டைய உலகின் மனித விவகாரங்களைப் பல நூறு ஆண்டுகளாக முடக்கிவைத்துள்ளன. இச்சூழலில் சாம்ராஜ்யம் பாதிரியார், விவசாயி, வியாபாரி ஆகியோரின் சமநிலையை ஒழுங்கற்றதாக ஆக்கியதால், மனித வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? மனித விவகாரங்கள் பன்மடங்கு சிக்கலானவை என்பதால், அவையும் பன்மடங்காவும் பல்வகையாகவும் உள்ளன. ஆனால், அனைத்து மாற்றங்களும் ஒரே காரணத்துக்காக, அதாவது, பொருள்களின் இயற்கை தொடர்பான அறிவு வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்காகவே நிகழ்கின்றன.
தொடக்கத்தில் அறிவார்ந்த மக்களின் சிறு சிறு குழுக்களாக, மெதுவாகப் பரவி, கடந்த 500 ஆண்டுகளில் மிக வேகமாக அதிக அளவிலான மக்கள் தொகையைச் சென்றடைந்தது. மனித வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் அவர்களின் நிலைகளிலும் எதிரொலித்தது. அறிவு வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு இணையாக, இந்த மாற்றமும் மென்மையான தொடர்புடன் நடைபெற்றது. பொதுவாகவே, தொடக்க நிலை ஆசைகளின் மற்றும் மன நிறைவுகளின் அடிப்படையில், வாழ்க்கையைத் திருப்தியற்றதாகக் கருதவேண்டும் என்னும் எண்ணம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சேவை மனப்பான்மையுடன் உறவைத் தேடுவதுடன், பெரிய அளவிலான வாழ்க்கையிலும் பங்கேற்க முடியும்.
இது உலகெங்கும் கடந்த இருபது நூற்றாண்டுகளாகப் பாவிய கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் உள்ளிட்ட மிகப் பெரிய மதங்களின் பொதுவான குணாதிசயமாகும். பழைய மதங்கள் செய்ததைப் போலின்றி, மனிதனின் உணர்வோடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இவை இருக்கின்றன. ரத்த வெறி பிடித்து நரபலி கொடுக்கும் பூசாரி, கோயிலைக் கொண்ட மதங்களைப் போலின்றி, இம்மதங்கள் மாறுபட்டு நவீனத்துடன் உள்ளன. முந்தைய நாகரிக மக்களிடம் காணப்படாத மனித இனத்தின் பொதுவான பிரச்னைகள் மீதான பங்களிப்பு, பொறுப்பு மற்றும் தனிநபர் சுயமரியாதை ஆகியவற்றைப் படிப்படியாகப் பெற்றன.
பண்டைய நாகரிகங்கள் தொடர்பான எழுத்துகளை எளிமைப்படுத்துவதும் விரிவுபடுத்துவதுமே அரசியல் மற்றும் பொது வாழ்க்கை நிலைகளில் ஏற்பட்ட கணிசமான மாற்றம். இதன் காரணமாக மிகப் பெரிய சாம்ராஜ்யங்களும் அரசியல் புரிதல்களும் நடைமுறைச் சாத்தியமாயின மற்றும் தவிர்க்க இயலாதாயின. போக்குவரத்துக்காக, முதலில் குதிரையும் பின்னர் ஒட்டகமும் பயன்படுத்தப்பட்டன. இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சக்கரம் பொருத்தப்பட்ட ஊர்திகள், சாலைகள் விரிவாக்கம் மற்றும் ராணுவத்தின் திறம் மேம்பாடு ஆகியவை அடுத்தடுத்துத் தொடர்ந்தன.
நாணயங்களின் பயன்பாடு காரணமாகக் கடன், உரிமை மற்றும் வர்த்தக முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. இது வசதியான முறை எனினும் அபாயகரமான வகையில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சாம்ராஜ்யங்கள் பிரம்மாண்டமாக உருவெடுத்தன. அவற்றுக்கு இணையாக மக்களின் சிந்தனைகளும் விரிவடைந்தன. உலக மதங்களின் பிரசாரம் தலைதூக்கவே, பூர்வகுடிக் கடவுள்கள் காணாமல் போயினர். சமயச் சார்பு ஆட்சிகளின் காலம் ஆரம்பமானது. வரலாறும் புவியியலும் பதிவு பெறத் தொடங்கின. மனிதர் தனது தவறுகளை உணர்ந்து, அறிவுக்கான தேடலில் கவனமும் ஆர்வமும் செலுத்தினார்.
கிரேக்கத்திலும் அலெக்ஸாண்ட்ரியாவிலும் மிகச் சிறப்பாக ஆரம்பமான அறிவியல் நடைமுறை, மேலும் தொடர முடியாமல், பல்வேறு தடைகளுக்கு உள்ளானது. டியோடோனிக் (Teutonic) காட்டுமிராண்டிகளின் ஊடுருவல், மங்கோலியப் படைகளின் மேற்கத்திய படையெடுப்பு, வலிமையான மத மறுகட்டமைப்பு, கொள்ளை நோய்கள், ஆகியவை அரசியல் மற்றும் சமூக ஒழுங்கின் மிது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தின.
மோதல் மற்றும் குழப்பம் நிறைந்த இக்கட்டத்திலிருந்து நாகரிகம் மறுபடியும் வெளிப்பட்ட போது, பொருளாதார வாழ்க்கைக்கான அடிப்படையாகத் திகழ்ந்த அடிமைத்தனம் விலகியது. தகவல் மற்றும் தொடர்புக்கான புதிய ஊடகம் அச்சு வடிவில் தயாராவதற்குக் காகித ஆலைகள் நிறுவப்பட்டன. இதனைத் தொடர்ந்து அப்போது முதல், அறிவுத்தேடலின் அமைப்பு ரீதியான அறிவியல் செய்முறை மீட்டெடுக்கப்பட்டது.
பொ.ஆ.16-ம் நூற்றாண்டு தொடங்கி அமைப்புரீதியான சிந்தனையின் தவிர்க்க முடியாத துணைப் பொருள்களாகப் புதுபுதுக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மனிதர்களுக்கு ஒருவருடன் ஒருவர் இருந்த இடைச்செயலையும் இடைத் தொடர்பையும் கருத்துப் பரிமாற்றத்தையும் பாதிக்கத் தொடங்கின. விரிவான செயல்பாடு, பரஸ்பரம் பலன்கள் அல்லது பாதிப்புகள், ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு வழிவகுத்தன. அதுவரை மனித மனத்தில் எந்த மாற்றமும் நிகழாத சூழலில், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் ஏற்பட்ட பேரழிவுகள் மனித சிந்தனையை விரைவுபடுத்தின.
கடந்த நானூறு ஆண்டுகளாக மனித இனத்தின் வரலாறு, சிறையில் அடைக்கப்பட்ட கைதிபோல் தூங்கி வழிந்துகொண்டும் விகாரமாகக் கிளறிக்கொண்டும் அமைதியற்றும் இருந்தது. மனிதரை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலை, தீப்பிடிக்கும் பட்சத்தில் தட்டி எழுப்பி, வாய்ப்புகளை வழங்கிச் சமூக விழிப்புணர்வு கொள்ளவைக்காமல், பண்டைய மற்றும் பொருத்தமற்ற கனவுகளிலேயே உழல வைத்தது. அவரும் எரிவதைப் பற்றிய உணர்வின்றி உறக்கத்தில் இருந்தார்.
வரலாறு என்பது தனிமனிதக் கதைகளை மட்டுமின்றி சமூக வாழ்க்கைகளையும் உள்ளடக்கியது. வரலாற்று ஆவணங்களில் பதிவாகியுள்ள கண்டுபிடிப்புகள் அனைத்தும் தொடர்புகளைப் பாதிக்கும் தவிர்க்க முடியாத கண்டுபிடிப்புகளே. பொ.ஆ.16-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுள் மிக முக்கியமானவை அச்சுக் காகிதம் மற்றும் கடற்பயணங்களின் போது கப்பலில் செல்வோர், திசைகளைத் தெரிந்து கொள்ள உதவும் திசைகாட்டி (Mariner’s Compass).
கற்பித்தல், பொதுத் தகவல் பரிமாற்றம், விவாதம், அரசியல் செயல்பாடு ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியதுடன், செலவுகளையும் கணிசமாகக் குறைக்க அச்சுக் காகிதம் உதவியது. கடற்பயணிகளுக்கான திசைகாட்டி, உலகத்தை ஒன்றாக்கியது. இவற்றுக்கு இணையான மற்றொரு கண்டுபிடிப்பு பொ.ஆ.13-ம் நூற்றாண்டில், மங்கோலியர்கள் மேற்கத்திய உலகுக்கு அறிமுகப்படுத்திய துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளின் அபரிமித பயன்பாடும் மேம்பாடுமாகும். வெடி மருந்துகளின் பயன்பாடு காரணமாக, நகரங்களைச் சுற்றி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட மதில்கள் மற்றும் கோட்டைகளின் பாதுகாப்பு அர்த்தமற்றுப்போயின. துப்பாக்கிகள் நிலப்பிரபுத்துவத்தை அழித்தன. கான்ஸ்டாண்டிநோபிள் துப்பாக்கிகளுக்கு வீழ்ந்தது. மெக்ஸிகோ மற்றும் பெரு நாடுகள் ஸ்பெயின் துப்பாக்கிகளுக்கு முன் தோற்றுச் சரணடைந்தன.
பொ.ஆ.17-ம் நூற்றாண்டு முறையான அறிவியல் சாதனைகளைக் கண்டது. இந்தக் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் சென்றவர்களுள் முக்கியமானவர்கள் பொ.ஆ.1561-1626-ல் வாழ்ந்த சர் ஃபிரான்சிஸ் பேக்கன் (Sir Francis Bacon) மற்றும் இங்கிலாந்தின் சான்சிலர் லார்ட் வெருலம் (Lord Verulam). இவர் பொ.ஆ.1540-1603-ல் இங்கிலாந்து கோல்செஸ்டர் (Colchester) நகரத்தைச் சேர்ந்த தத்துவ அறிஞரான கில்பர்ட்டின் (Gilbert) மாணவர். அறிவியல் ஆய்வுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற தனது கனவை வெளிப்படுத்தி, தி நியூ அட்லாண்டிஸ் (The New Atlantis) என்ற தலைப்பில் அறிவியல் கற்பனைப் புதினம் ஒன்றை எழுதினார் பேக்கன்.
அறிவியல் ஆய்வு, நூல்கள் வெளியீடு, அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் ராயல் சொஸைடி ஆஃப் லண்டன் (Royal Society of London), ஃப்ளோரண்டைன் சொஸைடி (Florentine Society) போன்ற தேசிய அமைப்புகள் தோன்றின. இந்த ஐரோப்பிய அறிவியல் அமைப்புகள் ஏராளமான கண்டுபிடிப்புகளின் ஊற்றுக்கண்களாக விளங்கின. பல நூற்றாண்டுகளாக மனித சிந்தனைகளின் மீது ஆதிக்கம் செலுத்தி முடக்கிய, உலகின் கோரமான இறையியல் வரலாறு தொடர்பான அழிவு விமர்சனத்துக்கும் வழிவகுத்தது.
அச்சுக் காகிதம் மற்றும் கடல் பயணங்களுக்கான திசைகாட்டி போன்று மனித இனத்துக்கான புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் எதுவும் பொ.ஆ.17-18-ம் நூற்றாண்டுகளில் நிகழவில்லை. ஆனால் இவ்விரு நூற்றாண்டுகளில் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவு மற்றும் அறிவியல் ஆற்றல்களின் குவிப்பு தொடர்ந்து நடைபெற்றது. இதன் பலனை அடுத்து வந்த பொ.ஆ.19-ம் நூற்றாண்டு பெற்றது.
உலக வரைபடத்தின் ஆய்வுகளும் புதுபுது நாடுகளின் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன. டாஸ்மேனியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உலக வரைபடத்தில் இடம் பெற்றன. பொ.ஆ.18-ம் நூற்றாண்டு இறுதியில் கிரேட் பிரிட்டனில் உலோகவியல் தொழிற்சாலைகளில் நிலக்கரியின் பயன்பாடு அறிமுகமானதைத் தொடர்ந்து இரும்பின் விலை குறைந்தது. இரும்பு வார்ப்புகளை உருவாக்க மரத்தை எரிப்பது குறைந்து, நிலக்கரியை எரிப்பது அதிகரித்தது. பெரிய அளவிலான இரும்பு வார்ப்புகள் உருக்கம் மற்றும் உருவாக்கம் காரணமாக எந்திரங்களின் தயாரிப்பு பெருகியது.
மரங்கள் மொட்டு, மலர், காய், பழம் ஆகியவற்றை அடுத்தடுத்து வழங்குவதுபோல், அறிவியலும் மனித இனத்துக்கான கண்டுபிடிப்புகளை வழங்கும் இயல்புடையது. பொ.ஆ.19-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தை முன்பு பார்த்திராத வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் காலம் எனக் கூறலாம். நீராவி, எஃகு, ரயில் வண்டிகள், கப்பல்கள், பாலங்கள், எந்திரங்கள், மின்சாரம் என மனித இனத்துக்குத் தேவையான அழகான, திருப்தியளிக்கும் பொருள்களின் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
பொ.ஆ.16-ம் நூற்றாண்டு தொடங்கி மனிதனின் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையை, தான் அடைபட்டிருக்கும் சிறைச்சாலை தீப்பற்றி எரிவது பற்றிய கவலையின்றி, ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காணும் மனிதனோடு ஏற்கெனவே ஒப்பிட்டிருந்தோம். பொ.ஆ.11-ம் நூற்றாண்டு ஐரோப்பிய மனம் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒருங்கிணைப்பின் கீழ், இலத்தீன் ஏகாதிபத்தியம் மற்றும் புனித ரோமானிய சாம்ராஜ்யக் கனவுகளில் திளைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக, கத்தோலிக்க ஆதரவுடன் ஐந்தாம் சார்லஸ் கனவுலகில் சஞ்சரிக்கையில், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் லூதரும் (Luther) கத்தோலிக்கத் திருச்சபை ஒற்றுமையை நார் நாராகக் கிழித்துத் தொடங்கவிட்டுக் கொண்டிருந்தனர்.
பொ.ஆ.17-18-ம் நூற்றாண்டுகளில் இக்கனவு தனிப்பட்ட முடியாட்சிக்கு வழிகோலியது. இக்காலக்கட்டத்தில், முடியாட்சியை ஒருங்கிணைக்கும் முனைவின் கதையை, ஐரோப்பா முழுமைக்குமான வரலாறு பல்வேறு கோணங்களில் கூறும். பலவீனமான அக்கம் பக்கப் பிராந்தியங்களில் தனது அதிகாரத்தை வலுப்படுத்துதல், நில உரிமையாளர்களின் தொடர் எதிர்ப்பு, வெளிநாட்டு வர்த்தகம், உள்நாட்டுத் தொழில் அதிகரிப்பு, வியாபாரிகள், வசதியானவர்களின் வளர்ச்சி, முடியாட்சியின் தலையீடு, கட்டாய வரி வசூல் ஆகியவை உதாரணத்துக்குச் சில. எந்தவொரு பக்கத்துக்கும் உலகளாவிய வெற்றி கிடைக்கவில்லை.
ஓரிடத்தில் மன்னனின் கை ஓங்கி இருக்கிறது. மற்றொரு இடத்தில் அரசனை விடவும் தனி மனிதன் வெற்றிக்கொடி நாட்டுகிறார். சூரியனைக் கிரகங்கள் சுற்றி வருவதுபோல், தேசிய உலகின் மையப்புள்ளியாக மன்னன் இருப்பதைக் காண்கிறோம். வேறோர் பகுதியில் உறுதியான வணிக வர்க்கம் குடியரசை நிலைநிறுத்துகிறது. இவ்வாறாக பல்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு அரசு முறைகள் சோதனை முயற்சியாகச் செயல்பட்டன.
மேற்கூறிய அனைத்து அரசுகளிலும் பொதுவாக ஒருவர் இருப்பதைக் காண்கிறோம். அவர்தான் மன்னனுக்கு மதகுருவாகவும் ஆலோசனை வழங்கும் அமைச்சனாகவும் ஆட்டிப்படைக்கும் சர்வ வல்லமை படைத்த கத்தோலிக்கத் திருச்சபைப் பிரதிநிதி. வேறு சில நிகழ்வுகளும் நடந்தன. ஹாலந்து புராடெஸ்டெண்ட் மற்றும் குடியரசு நாடானது. சக்ரவர்த்தி ஐந்தாம் சார்லஸ் மகனான இரண்டாம் ஃபிலிப் ஆட்சியைத் தூக்கி ஏறிந்தது.
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி, அமைச்சர் வோல்சே (Wolsey), ராணி எலிசபெத், அமைச்சர் பர்லே (Burleigh), ஆகியோர் முழுமையான மன்னர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைக்க முற்பட்டனர். ஆனால், முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லெஸ் ஆகியோரின் கூட்டுச் சதியால் அவர்களது திட்டம் சீர்குலைந்தது. மக்களுக்கு ராஜ துரோகம் செய்த குற்றத்துக்காக முதலாம் சார்லஸ் தலை பொ.ஆ.1649-ல் துண்டிக்கப்பட்டது. இது ஐரோப்பிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொ.ஆ. 1660 வரையிலான அடுத்த பன்னிரு ஆண்டுகளுக்கு பிரிட்டன் குடியரசாக விளங்கியது. நாடாளுமன்றம் முழு அதிகாரத்துடன் திகழ மன்னராட்சி நிலையற்று ஆட்டம் கண்டது. கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு மன்னர் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்திய பெருமை மூன்றாம் ஜார்ஜையே (பொ.ஆ.1760-1820) சேரும். இருப்பினும் ஏனைய ஐரோப்பிய ஆட்சியாளர்களில் மன்னர் ஆட்சியை வெற்றிகரமாக மீட்டெடுக்க அடித்தளம் அமைத்த பெருமைமைக்கு உரியவர்கள் ஃபிரெஞ்ச் அமைச்சர்கள் கார்டினல் ரிச்சேலியூ (1585-1642) மற்றும் கார்டினல் மஜாரின் (1602-1661) ஆகியோரே. இந்த வலுவான அடித்தளம் காரணமாக நீண்ட காலம் மன்னனாக இருந்தவர், தனித்துவமான குணங்களும் கணிசமான திறன்களும் கொண்ட, ‘தி கிராண்ட் மோனார்க்’ (The Grand Monarque) என அழைக்கப்படும் பதினாங்காம் லூயி (King Louis XIV) (பொ.ஆ.1643-1715).
ஐரோப்பிய மன்னர்களிலேயே பதினான்காம் லூயி முன்மாதிரியான மன்னர் எனில் மிகையல்ல. அவரது அடிப்படை ஆர்வங்களை விடவும் இலட்சியம் பெரிதாக இருந்தது. சிக்கலான வெளியுறவுக் கொள்கை காரணமாக நாட்டையே திவாலாக்கும் நிலைக்குத் தள்ளினார். பிரான்ஸ் எல்லைகளை ரைன் (Rhine) மற்றும் பைரனீஸ் (Pyranees) நதிகளைத் தாண்டி ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்துவரை விரிவுபடுத்தி ஒருங்கிணைக்க வேண்டும் எனபதே அவரது ஆசை.
புனித ரோமானிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி சார்லே மேக்னேவுக்கு பிறகு தானே சக்ரவர்த்தியாக வேண்டுமென விரும்பினார். போரிட்டு மன்னர்களை வீழ்த்தி சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளவதைவிடவும் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆதரவைத் திரட்டுவதே சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான முறையென நினைத்தார். மக்கள் கொடுத்த வரிப்பணத்தை ஐரோப்பிய மன்னர்களுக்கு வாரி இறைத்தார். இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ், போலந்து மன்னர் உள்பட பலர் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவர் சக்ரவர்த்தியாக ஆதரவு தர உறுதி அளித்தனர்.
ஃபிரான்ஸ் நாட்டின் வேர்சேல்ஸ் (Versailles) நகரில் இருந்த பதினான்காம் லூயியின் பிரம்மாண்ட அரண்மனை, ஏனைய ஐரோப்பிய மன்னர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு பூலோக சொர்க்கமாக விளங்கியது. கண்கவர் பூங்காக்கள், தோட்டங்கள், பலகணிகள், கண்ணாடி அலங்காரங்கள், திரைச்சீலைகள், விளக்குகள், நீரூற்றுகள் ஆகியவைற்றைக் கண்டு பாராட்டுவதற்குப் பதிலாக பொறாமைத் தீயில் வெந்தனர். லூயி அரண்மனையைப் பார்த்து மற்ற ஐரோப்பிய மன்னர்களும் அரண்மனை கட்டுவதில் ஆர்வம் செலுத்தினர். லூயி மனனனின் வேர்சேல்ஸ் அரண்மனையை மிஞ்சும் வகையில் தங்களது அரண்மனை ஜொலிக்க வேண்டுமென ஒவ்வொரு ஐரோப்பிய மன்னனும் ஆசைப்பட்டார். கஜானா கையிருப்பு, வரவு செலவு பற்றிக் கவலைப்படாமல், எப்படியேனும் லூயி வேர்சேல்ஸ் அரண்மனையை விடவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதே, அவர்களின் லட்சியமாக இருந்தது.
அரசர்களைத் தொடர்ந்து பிரபுக்கள், அமைச்சர்களும் தங்களது குடியிருப்புகளை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் தொடங்கினார்கள். இந்த ஆர்வம் ஒரு வகையில் தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவியது. ஆடை, அலங்காரம் கண்ணாடி, பட்டு, மரம் தோல், ஓவியம் பீங்கான், உலோகம் பளிங்கு ஆகியவற்றின் உற்பத்தியும் தயாரிப்பும் பயன்பாடும் அதிகரித்தன. மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களை வித்யாசமாக அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினர். செல்வச் செழிப்பு அவர்கள் வசிக்கும் அரண்மனைகள் மற்றும் மாளிகைகளைத் தாண்டி, வசதி படைத்த ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் ஆடைகளிலும் அணிகலன்களிலும் எதிரொலித்தது.
தனது ராஜ்ஜியத்தின் சூரியனாகவும் ஏனைய ஐரோப்பிய மன்னர்கள் பொறாமைப்படும் அளவுக்குச் சக்ரவர்த்தியாகவும் லூயி திகழ்ந்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதேநேரம் அவனது சூரியக்கதிர்கள் ஊடுருவ முடியாத ஏழைகள், அடுத்த வேளை சோற்றுக்குக் கூட வழியற்ற அடித்தட்டு மக்கள் வாடி வதங்கினர். சக்ரவர்த்தி, பிரபுக்கள் குடும்பங்களின் ஆடம்பரத்தை ஏக்கத்தோடு பார்த்து ஏழைகள் புழுங்கியது ஏனோ லூயின் கண்களுக்குப் அப்போது புலப்படவில்லை.
முடியாட்சி மற்றும் பரிசோதனை அரசுகள் காலம் முழுவதும் ஜெர்மானியர்கள் அரசியல் ரீதியாகப் பிளவுபட்டே கிடந்தனர். ஜெர்மனி, ஸ்வீடன், பொஹீமியா நாடுகள் அரசியல் இலாபங்களுக்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக (பொ.ஆ.1618-1648) பேரழிவுப் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக, அடுத்த நூறு ஆண்டுகளுக்கு ஜெர்மானியர்களின் ஆற்றல் முற்றிலுமாக வீணாகிப் போனது. பொ.ஆ.1648-ல் ஏற்பட்ட வெஸ்ட்ஃபேலியா சமாதான (Peace of Westphalia) உடன்படிக்கையைத் தொடர்ந்து, சமரசங்களுடனேயே போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்ட முடிவில் சாம்ராஜ்யத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சமஸ்தானங்கள், பிரபுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் மற்றும் சுதந்திரமான பகுதிகள் என ஆங்காங்கே பிரிந்து கிடந்தன. ஸ்வீடனின் ஆக்கிரமிப்பு ஜெர்மனி வரை நீண்டது. ஆனால், ரைன் நதியைத் தாண்டி தனது எல்லைகளை விரிவுபடுத்த விரும்பிய ஃபிரான்ஸால், ரைன் நதிக்கரையைக் கூடத் தொட முடியவில்லை.
பொ.ஆ.1701-ல் தனி ராஜ்யமாக உருவான ப்ரஷியா (Prussia), தொடர்ந்து நடைபெற்ற பல போர்களில் வெற்றி பெற்று முன்னேறத் தொடங்கியது. பொ.ஆ.1740-1786 வரை ஆட்சி செய்த மன்னன் ஃப்ரெட்ரிக் தி கிரேட் ஆஃப் ப்ரஷியா (Fredrick the Great of Prussia) ஜெர்மானியிலுள்ள போட்ஸ்டாம் (Potsdam) நகரில் தனது அரண்மனையை அமைத்துக் கொண்டார். மக்களின் பேச்சு மொழி மற்றும் அரசவை நடவடிக்கைகள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்தன. ஃபிரெஞ்ச் இலக்கியம் செழிக்கக், கிட்டத்தட்ட ஃபிரான்ஸுக்குப் போட்டியாக அதன் கலாசாரத்தையே பின்பற்றினார்.
பொ.ஆ.1714-ல் எலக்டார் ஆஃப் ஹானோவர் (Elector of Hanover) இங்கிலாந்தின் அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சாம்ராஜ்யத்துக்கு பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாக இருந்த முடியாட்சி நாடுகளின் பட்டியலில், இங்கிலாந்தும் இணைந்து கொண்டது. ஆஸ்திரிய நாட்டின் ஐந்தாம் சார்லஸ் வம்சம் சக்ரவர்த்தி பட்டத்தையும் ஸ்பானிஷ் வம்சம் ஸ்பெயின் நாட்டையும் தக்கவைத்துக்கொண்டன.
இப்போது கிழக்கே மீண்டும் ஒரு சக்ரவர்த்தி உருவானார். பொ.ஆ.1453-ல் கான்ஸ்டாண்டிநோபில் வீழ்ச்சிக்குப் பிறகு, மாஸ்கோவின் கிராண்ட் ட்யூக் (Grand Duke of Moscow) மாமன்னன் (பொ.ஆ.1462-1505) இவான் (Ivan) பதவிக்கு வந்தார். பைஜாண்டின் சாம்ராஜ்யத்தின் அரசு முத்திரையான இரட்டைத் தலைகொண்ட கழுகு (Byzantine Double Headed Eagle) சின்னத்தைக் கையில் ஏந்தி, பைஜாண்டின் சிம்மாசனத்தின் வாரிசு நானே எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார். இவான் தி டெரிபிள் (Ivan The Terrible) என அழைக்கப்படும் இவரது பேரன் நான்காம் இவான் (பொ.ஆ.1533-1584), சாம்ராஜ்யத்தின் மேன்மை தங்கிய சீசர்–ஜார் (Ceaser–Tzar) என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். இருப்பினும் ரஷ்யா பொ.ஆ.17-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே ஆசிய நாடாக அறியப்பட்டது.
மேற்கத்திய விவகாரங்களில் ரஷ்யாவைப் பங்கேற்க வைத்த பெருமை (பொ.ஆ.1682-1725) ஜார் பீட்டர் மன்னனையே (Tzar Peter the Great) சேரும். நேவா (Neva) ஆற்றங்கரையில் உள்ள பீட்டர்ஸ்பர்க்கில் தனது சாம்ராஜ்யத்துக்காக கட்டிய பிரம்மாண்ட அரண்மனை, பின்னாளில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய உறவுகளுக்கான ஜன்னலாக விளங்கியது. பிரெஞ்ச் கட்டடக் கலைஞரின் உதவியுடன், மொட்டை மாடி, நீரூற்றுகள், அடுக்குகள், ஓவியங்களின் அரங்கம், பூங்கா ஆகியவற்றுடன் வசிப்பதற்கான பங்களாவை, பதினெட்டு மைல்கள் தள்ளி பீட்டாராஃப் (Peterhof) நகரில் உருவாக்கினார். ப்ரஷ்யாவைப் போலவே ரஷ்யாவிலும் அரசவை நடவடிக்கைகளின் மொழியாகப் ஃபிரஞ்ச் அங்கீகாரம் பெற்றது.
ஆஸ்திரியா, ப்ரஷியா மற்றும் ரஷியா நாடுகளுக்கு இடையே துரதிருஷ்டவசமாக போலந்து (Poland) ராஜ்ஜியம் சிக்கிக்கொண்டது. நன்கு கட்டமைக்கப்படாத இந்த ராஜ்ஜியத்தின் கடிவாளம் செல்வக்குடியில் பிறந்த நிலச்சுவாந்தார்கள் வசமே இருந்தது. மன்னனுக்குப் பெயரளவில் அரசாட்சி என்பதைத் தாண்டி, அதிக அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. போலந்தை சுதந்திரமான நட்பு நாடாக வைத்திருக்க ஃபிரான்ஸ் பல்வேறு முனைவுகளை மேற்கொண்டாலும் போலந்தின் எதிர்காலம் அதன் அண்டை நாடுகளான ஆஸ்திரியா, ப்ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் கைகளில்தான் இருந்தது.
அப்போது சுவிட்சர்லாந்து பல்வேறு குடியரசு மண்டங்களின் குழுவாக விளங்கியது. வெனிஸ் குடியரசாகத் திகழ்ந்தது. ஜெர்மனியைப் போன்று இத்தாலியும் பிரபுக்கள் மற்றும் இளவரசர்கள் இடையே பிளவுபட்டுக் கிடந்தது. கத்தோலிக்க நாடுகளின் இளவரசராக போப் அதிகாரம் செலுத்தி வந்தார். இருப்பினும் மீதமுள்ள கிறிஸ்தவ நாடுகளின் இளவரசர்கள் கைநழுவிச் சென்று, அவர்களது நம்பிக்கையையும் ஆதரவையும் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் போப் இருந்தார். ஐரோப்பா முழுவதும் பொதுவான அரசியல் எண்ணம் நிலவவில்லை. பிரிவினைகளும் வேறுமைகளும் தலைவிரித்தாடின.
இறையாண்மை மிக்க ஒவ்வொரு இளவரசரும் குடியரசும் ஒன்றின் மீது மற்றொன்று செல்வாக்கையும் அதிகாரத்தையும் பெருக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டின. அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் வகையில், நட்பும் பகையுமான, வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. இத்தகைய இறையாண்மை மிக்க பல்வேறு நாடுகளைக் கொண்ட யுகத்தின் கடைசிக் கட்டத்தில் ஐரோப்பியர்களாகிய நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதனால் உண்டன பகை, வெறுப்பு, சந்தேகங்களால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய நவீன நுண்ணறிவுடன் ஒப்பிடும்போது, அக்காலத்திய வரலாறு வீண் பேச்சாகவும் அர்த்தமற்றதாகவும் சோர்வளிக்கும் வகையிலேயும் உள்ளன. பெரும்பான்மைப் போர்கள் மன்னனின் அந்தப்புர ஆசை நாயகியின் விருப்பத்துக்கு இணங்கவும் அமைச்சர்களின் பொறாமைக் குணம் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன எனப் பதிவு செய்யப்பட்டிருகின்றன. அதிலுள்ள சொல்லப்பட்டிருக்கும் லஞ்சம், பகை ஆகியவை அறிவுள்ள மாணவரை வெறுப்பூட்டும்.
பல்வேறு தடைகள் இருப்பினும் படிப்பதும் சிந்திப்பதும் பரவின. கண்டுபிடிப்புகள் பன்மடங்கு பெருகின. பொ.ஆ.18-ம் நூற்றாண்டு இலங்கியங்கள், அரசவை மற்றும் கொள்கை முடிவுகள் மீது, ஆழ்ந்த சந்தேகங்களையும் விமர்சனங்களையும் வைக்கும் வகையில் தோன்றின. வோல்டயர் (Voltaire) எழுதிய கேண்டைட் (Candide) என்ற நூலில் ‘ஐரோப்பிய உலகின் திட்டமிடப்படாத குழப்பத்துடன் கூடிய எல்லையற்ற சோர்வு’ என்னும் வாசகத்தைக் காண்கிறோம்.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.