Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #32

53. ஆசியாவிலும் அயலகங்களிலும் ஐரோப்பியர்களின் புதிய சாம்ராஜ்யங்கள்

மத்திய ஐரோப்பா பிரிந்தும் குழப்பத்திலும் இருந்த சூழலில், மேற்கு ஐரோப்பியர்கள், குறிப்பாக டச்சுக்காரர்கள், ஸ்கேண்டிநேவியர், ஸ்பானியர், போர்சுகீசியர், ஃப்ரெஞ்சுக்கார்ர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் உலகின் அனைத்துக் கடல்களிலும் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தப் போராடிக் கொண்டிருந்தனர். அச்சு எந்திரத்தின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவின் அரசியல் எண்ணங்களை முற்றிலுமாகக் கலைத்தாலும் பெருங்கடல்களில் மிதக்கும் கப்பல்களின் கண்டுபிடிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியது. உப்புநீர் நிறைந்த கடல்களின் கடைசி எல்லை வரை, பரந்துபட்ட ஐரோப்பிய அனுபவங்களை விரிவுபடுத்தியது.

டச்சு மற்றும் வட அட்லாண்டிக் ஐரோப்பியர்களின் முதல் அயலகக் குடியிருப்புகள், காலனியாக்கத்துக்காக இல்லாமல், வர்த்தகத்துக்காவும் சுரங்கப் பணிகளுக்காகவுமே நடைபெற்றன. இதில் முதலில் களமிறங்கி வெற்றி கண்டவர்கள் ஸ்பெயின் நாட்டவர்கள். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்கா முழுவதும் தங்களது ஆதிக்க வரம்புக்குள் கொண்டு வந்தனர். அடுத்ததாகப் போர்ச்சுகீசியர் தங்களுக்கான பங்கு வேட்டையில் ஈடுபட்டனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எஜமானராகச் செயல்படும் ரோமாபுரியின் போப் நடுவராக இருந்து பாகப்பிரிவினை செய்தார். பொ.ஆ.1494-ல், பிரேசில், வெர்டே தீவுகள் முனைக்கு (Cape Verde Islands) மேற்கே உள்ள அனைத்தையும் போர்ச்சுகல் நாட்டுக்கும் அமெரிக்காவின் மீதமுள்ள பகுதிகளை ஸ்பெயின் நாட்டுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

திருப்தி அடையாத போர்ச்சுகல் தெற்கு மற்றும் கிழக்காக எல்லைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தது. பொ.ஆ.1497-ல் லிஸ்பன் (Lisbon) நகரிலிருந்து புறப்பட்ட வாஸ்கோடகாமா (Vasco Da Gama) வெர்டே தீவுகள் முனையைச் சுற்றிக்கொண்டு ஜான்சிபார் (Zanzibar) வழியாக இந்தியாவிலுள்ள கோழிக்கோடு – கொல்லம் (Calicut) நகரை அடைந்தார். பொ.ஆ.1515-ல் ஜாவா (Java) மற்றும் மொலுகாஸ் (Molucass) நகரங்களில் போர்ச்சுகீசியக் கப்பல்கள் காணப்பட்டன என்றும் இந்தியப் பெருங்கடலில் வியாபார மையங்களை நிறுவுவதில் தீவிரம் செலுத்தின என்றும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் மொசாம்பிக் (Mozambique), கோவா (Goa) மற்றும் சீனாவில் மகேவோ (Macao) மற்றும் டைமூர் (Timor) ஆகியவை இன்றைக்கும் போர்ச்சுகல் கட்டுப்பாட்டில் உள்ளன. (நூலாசிரியர் இதை 1922-ல் எழுதினார் என்பதை நினைவில் கொள்ளவும்).

போப்பின் உத்தரவின்படி ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் அமெரிக்காவைப் பிரித்துக் கொடுத்த ஒப்பந்தத்தை, பங்கு கிடைக்காத நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கிலாந்து, டென்மார்க், ஸ்வீடன், டச் நாடுகள் வட அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் தங்கள் உரிமைகளைக் கோரின. கத்தோலிக்க நாடான ஃபிரான்ஸ், வாடிகன் போப்பின் பாகப் பிரிவினையை ஒப்புக் கொண்டது. புராடெஸ்டண்ட் நாடுகள் ஏற்கவில்லை. போப்பின் இச்செய்கையால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்தன. கிடைத்த நாடுகள் சொந்தம் கொண்டாடக் கிடைக்காதவை உரிமை கோரிப் போராடின.

கடல் தாண்டிய நாடுகளைப் பிடிப்பதில், நீண்ட காலப் போராட்டத்தில், ஏனைய ஐரோப்பியர்களை விடவும் ஆங்கிலேயர்களே வெற்றி பெற்றார்கள். ஜெர்மனியின் சிக்கலான விஷயங்களில் டென்மார்க்கும் ஸ்வீடனும் தீவிரமாக சிக்கிக்கொண்டதால், கடல் கடந்து அயலக நாடுகளைக் கைப்பற்றும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கவில்லை. ‘வடக்கின் சிங்கம்’ என வர்ணிக்கப்பட்ட ஸ்வீடனின் திறன், புராடெஸ்டெண்ட் அரசன் கஸ்டாவஸ் அடால்ஃபஸ் (Gustavas Adolphus) செயல்களால் வீணானது.

தூரத்துக் கிழக்கு சாம்ராஜ்யப் போட்டியாளர்கள் பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் ஃபிரான்ஸ். அமெரிக்காவுக்கான போட்டியாளர்கள் பிரிட்டன், ஃபிரான்ஸ், ஸ்பெயின். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் ஆங்கிலேயக் கால்வாயின் (English Channel) சில்வர் ஸ்ட்ரீக் (silver Streak) மீதான பிரிட்டனின் ஆதிக்கம் அதிகம் என்பதால், கடல் கடந்த வணிகங்களிலும் பயணங்களிலும் பிரிட்டனே முன்னிலை வகித்தது.

ஐரோப்பா குறித்த சிந்தனையிலேயே ஃபிரான்ஸ் மூழ்கிக் கிடந்தது. பொ.ஆ.18-ம் நூற்றாண்டு முழுவதும் ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மானியக் குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்று கொண்டிருந்தது. இதன் காரணமாக்க் கிழக்கிலும் மேற்கிலும் கிடைத்த விரிவாக்க வாய்ப்புகள் அனைத்தும் கை நழுவிப்போயின. பொ.ஆ.17-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் நிலவிய மத மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாகப் பல ஆங்கிலேயர்கள் அமெரிக்காவிலேயே நிரந்தமாகவே குடியேறத் திட்டமிட்டு இங்கிலாந்தை விட்டு வெளியேறினர். ஆழமாக வேரூன்றி எண்ணிக்கையிலும் பலத்திலும் அமெரிக்காவில் தங்களை அதிகரித்துக்கொண்ட காரணத்தினால், அந்நாட்டு விடுதலைப் போராட்டம் பிரிட்டிஷாருக்கு மிகப் பெரிய அனுகூலத்தைத் தந்தது.

பொ.ஆ.1756-1760-ல் நடைபெற்ற போர்களில் பிரிட்டிஷ் மற்றும் அதன் அமெரிக்க காலனிகளிடம் கனடாவை இழந்தது ஃபிரான்ஸ். சில ஆண்டுகள் கழித்துப் பிரிட்டிஷ் டிரேடிங்க் கம்பெனி அதாவது கிழக்கு இந்தியக் கம்பெனி, இந்திய தீபகற்பத்தில், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் நாடுகள் வசம் இருந்த பெரும்பான்மை இடங்களையும் கைப்பற்றிக் கொண்டது. பாபர், அக்பர் மற்றும் அவர்களது வழித்தோன்றல்களின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம் சுக்குநூறாகத் சிதற, இலண்டனிலிருந்து வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதையும் தனது அதிகார வரம்புக்குள் கொண்டு வந்தது.

கடல் வாணிகம் மற்றும் கடல் பயணங்களுக்காக மட்டுமே இங்கிலாந்து ராணி எலிசபெத் காலத்தில், கிழக்கு இந்திய கம்பெனி தொடங்கப்பட்டது. படிப்படியாகக் கப்பல்களில் ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் உரிமையைப் பெற்றது. மசாலா, தேயிலை ஆகியவற்றின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கிழக்கு இந்திய கம்பெனியினர், இந்திய அரசர்களின் இடங்களையும் பகுதிகளையும் வளைத்துப் போட்டனர். பொன்னும் பொருளும் நகைகளுமாக வருவாயைப் பெருக்கிக்கொண்டனர். அவர்களுடைய வியாபாரத்தைத் தடுக்கவோ எதிர்க்கவோ யாரும் துணியவில்லை. வியாபாரம் செய்யக் கப்பல்களில் வந்த கப்பல் தலைவன், மாலுமிகள், சாதாரண குமாஸ்தாக்கள், ஊழியர்கள்கூட இந்தியாவிலிருந்து திரும்பி இங்கிலாந்தில் இறங்கும் போது, பெரும் செல்வந்தர்களாகியிருந்தனர். பொருள்களை வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்திய கம்பெனியினர், காலப்போக்கில் இந்திய வளங்களை இங்கிலாந்துக்குச் சுரண்டி எடுத்துக்கொண்டு போனார்கள்.

இந்தியா மிகப் பிரம்மாண்ட மற்றும் செல்வச் செழிப்பு மிக்க நாடு. கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் அந்நாடு இருந்த சூழலில், அத்தகைய மனிதர்கள் என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை யோசித்துச் செயல்படும்நிலையில் இருந்திருக்கவில்லை. இந்தியா அவர்களுக்கு விசித்திரமான நாடு. வித்தியாசமான கடுமையான சூரிய வெளிச்சம். மாறுபட்ட இனம். பழுப்பு நிறத்தோல். கோயில்கள் மற்றும் வேறுபட்ட நாகரிகம் நடத்தை. இவை எல்லாவற்றை விடவும் அவர்களுடைய அக்கறைக்கு அப்பாற்பட்டவர்களாக, இந்தியர்கள் விளங்கினார்கள்.

இங்கிலாந்து திரும்பிய கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகள் மிரட்டுதல், பணம் பறித்தல் உள்ளிட்ட செயல்களை இழைத்ததாகப் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டினர். ராபர்ட் க்ளைவ் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து பொ.ஆ.1774-ல் தற்கொலை செய்து கொண்டார். பொ.ஆ.1778-ல் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் மீது குற்றம் சுமத்திப் பின்னர் பொ.ஆ.1792-ல் விடுவித்தனர். உலக வரலாற்றில் இவை விநோதமானவை என்பதுடன் இப்படி முன்னெப்போதும் நிகழ்ந்ததுமில்லை.

தனக்குக் கீழுள்ள ஒரு இலண்டன் வணிக நிறுவனம் பிரிட்டிஷ் மகுடத்தின் ஆதிக்கத்திலுள்ள அனைத்து டொமினியங்களை விடவும் மக்கள் தொகையிலும் செல்வத்திலும் பெரிய நாட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, இங்கிலாந்து நாடாளுமன்றம் தாமதமாகவே உணர்ந்து கொண்டது. ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது தொலை தூர, அற்புதமான, யாரும் எளிதில் செல்ல முடியாத நாடாகவே அன்றைக்கு இருந்தது.

சாகசத்தை விரும்பும் ஏழை இளைஞர்கள், இந்தியாவுக்குச் சென்று பல ஆண்டுகள் கழித்துச் செல்வந்தர்களாகவும் கோபம் கொண்ட முதியவர்களாகவும் திரும்பினர் என ஆங்கிலேயர்கள் நம்பினர். கீழை நாடான இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை. இந்தியா குறித்த எந்தப் புரிதலும் இல்லாத காரணத்தால், கிழக்கு இந்திய கம்பெனியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் ஆங்கிலேயர்கள் திணறினார்கள்.

பெரும்பான்மை மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் கடல் தாண்டிய சாம்ராஜ்யங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஆசியாவில் இரு பிரம்மாண்ட நில ஆக்கிரமிப்புகள் படுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொ.ஆ.1368-ல் மங்கோலிய அரசைத் தூக்கியெறிந்த சீனா, உள்ளூர் மிங்க்ஸ் (Mings) வம்சத்தின் கீழ் பொ.ஆ.1644 வரை செழித்தது. தொடர்ந்து மற்றொரு மங்கோலிய இனமான மன்சூஸ் (Manchus) சீனாவை மீண்டும் வீழ்த்தி பொ.ஆ.1912 வரை ஆட்சி செய்தது. மற்றொரு நாடான ரஷ்யா கிழக்கே முன்னேறி உலக விவகாரங்களில் தன்னை வல்லரசாக நிலைநிறுத்த வளர்ந்து கொண்டிருந்தது. கிழக்கும் இன்றி மேற்கும் இன்றி, மத்திய ஆசியாவின் அதிகார மையமாக ரஷ்யா வளர்ச்சி கண்டது.

ரஷ்யாவின் விரிவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக விளங்கியவர்கள் புல்வெளி மக்களான கோசாக்ஸ் (Cossacks) எனப்படும் கிறிஸ்தவர்கள். மேற்கே போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளின் நிலப்பிரபுத்துவ விவசாயத்துக்கும் கிழக்கே தார்தார்க்கும் (Tartar) இடையே அவர்கள் தடையை உருவாக்கினர். பொ.ஆ.19-ம் நூற்றாண்டு அமெரிக்காவின் மேற்குப் பகுதி காட்டுமிராண்டிகளைப்போல், தார்தார்கள் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதி காட்டுமிராண்டிகள். இவர்கள், ரஷ்யாவில் தாக்குப் பிடிக்க முடியாத குற்றவாளிகள், தண்டிக்கப்பட்ட அப்பாவிகள், புரட்சி அடிமைகள், மதப் பிரிவினர், திருடர்கள், நாடோடிகள் மற்றும் கொலைகாரர்கள்,

இவர்கள் தெற்குப் புல்வெளிகளில் அடைக்கலம் தேடியதுடன், போலந்துகள், ரஷ்யர்கள் மற்றும் தார்தார் ஆகியோருக்கு எதிராக உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் விடுதலை கோரியும் போர்கோலம் பூண்டனர். தார்தார்களிடமிருந்து தப்பியவர்களும் கிழக்கே ஊடுருவி கோசாக்ஸுடன் கலந்தனர். ஸ்காட்லாந்து மலையகக் குலங்களை பிரிட்டிஷ் அரசு தனது படைகளில் இணைத்துக் கொண்டதுபோல், எல்லையோர மக்கள் படிப்படியாக ரஷியாவின் அரசு சேவைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆசியாவில் புதிய நிலப்பகுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. மங்கோலிய நாடோடிகளுக்கு எதிராகப் பாதுகாப்புக் கவசமாக, முதலில் துருக்கிஸ்தானிலும் பின்னர் ஆமூர்வரை சைபீரியா முழுவதும் களமிறக்கப்பட்டனர்.

பொ.ஆ.17-18-ம் நூற்றாண்டுகளில் மங்கோலியர்களின் வலிமை குறைந்ததற்கான காரணத்தை விவரிப்பது கடினம். மத்திய ஆசியாவில் செங்கிஸ்கான் மற்றும் தைமூர் ஆகியோர் கோலோச்சிய அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் மங்கோலியர்களின் செல்வாக்கும் அரசியல் முக்கியத்துவமும் உச்சத்திலிருந்து அதளபாதாளத்துக்கு சரிந்தது. பருவ கால மாற்றம் கொள்ளைநோய், மலேரியா போன்ற தொற்று ஆகியவை வீழ்ச்சிநிலைக்குக் காரணமாக இருக்கலாம்.

சீனாவில் தொடங்கி சிறிது சிறிதாகப் பரவிய பௌத்தத்தின் அமைதிப் பிரசாரச் செல்வாக்கமும் தாக்கமும் காரணம் எனச் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ, 16-ம் நூற்றாண்டில் மங்கோலியா தார்தார் மற்றும் துருக்கியர்கள் அண்டை நாடுகள் மீது படையெடுப்பது குறைந்து, அவர்கள் மீது மேற்கே கிறிஸ்தவ ரஷ்யாவும் கிழக்கே சீனாவும் படையெடுப்பது அதிகரித்தது. 17-ம் நூற்றாண்டு குழுவதும் கோசாக்ஸ் இனம் ஐரோப்பிய ரஷ்யாவிலிருந்து கிழக்கு முழுவதும் ஊடுருவினர். எங்கெல்லாம் விவசாயச் சூழல் அவர்களுக்குச் சாதமாக அமைந்ததோ அங்கெல்லாம் குடியேறினர். தெற்கே கோட்டைகளுடன் டர்கோமான் (Turkoman) இனம் வலுவாகவும் தீவிரமாகவும் இவர்களது ஊடுருவலுக்கும் குடியேற்றங்களுக்கும் தடையாக விளங்கியது.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *