Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #33

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #33

54. அமெரிக்க விடுதலைப் போர்

18ஆம் நூற்றாண்டு மூன்றாம் காலாண்டில் ஐரோப்பா நிலைத்தன்மை இன்றித் தன்னுள் பிளவுபட்டுக் கிடந்தது. ஒருங்கிணைக்கும் அரசியல் அல்லது மத எண்ணங்கள் இல்லாமல், அச்சடித்த புத்தகம், அச்சடித்த வரைபடம், கடல் பயணங்களுக்கேற்ற கப்பல்கள், உலகின் கடற்கரைகள் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்னும் கற்பனையும் ஆர்வமும் மட்டுமே நிறைந்திருந்தன. தற்காலிக மற்றும் தற்செயல் அனுகூலங்கள் காரணமாக, ஏனைய மனித இனத்தின் மீது இது திட்டமிடாத, பொருத்தமற்ற எழுச்சியாகவே காணப்பட்டது. இந்த அனுகூலங்களின் நற்பயனாகப் புதிய, பெரிய மற்றும் ஆள் நடமாட்டமற்ற அமெரிக்க கண்டத்தில், மேற்கு ஐரோப்பிய, தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் நியூசீலாந்து மக்கள் பெருமளவில் குடியேறித் தங்களுக்கான இல்லங்களை உருவாக்கிக் கொண்டனர்.

அமெரிக்காவுக்குக் கொலம்பஸ் மற்றும் இந்தியாவுக்கு வாஸ்கோடகமா ஆகிய மாலுமிகளை அனுப்பியதன் முக்கிய நோக்கம் வணிகமே. கீழை நாடுகள் ஏற்கெனவே அதிக மக்கள் தொகையோடு, உற்பத்தியில் சிறந்து விளங்கிக்கொண்டிருந்த சூழலில், வியாபார நோக்கம் பிரதானமாக இருந்ததில் வியப்பேதும் இல்லை. ஆனால், அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் அங்குள்ள சமூகத்தினருக்கு உற்பத்தி மற்றும் வர்த்த முனைவு குறைவாக இருப்பதை அறிந்தனர். ஸ்பெயின் நாட்டவர் அமெரிக்காவில் வெள்ளிச் சுரங்கங்களைத் தேடிக் கண்டுபிடித்ததுபோல், மற்ற ஐரோப்பியர்களும் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் உள்ள சுரங்கங்கள் மற்றும் மலைத் தோட்டங்கள் மீது தங்களது கவனத்தைத் திருப்பினர். அமெரிக்காவில் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள ஐரோப்பிய அரசுகளும் மக்களை ஊக்குவித்தன.

17-ம் நூற்றாண்டில் மதத் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிக்க, ஆங்கிலேய கிறிஸ்தவ சீர்திருத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிலுள்ள நியூ இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். ஆக்ளிதோர்ப் (Oglethorpe) என்னும் ஆங்கிலேய தளபதி, சிறைக்கைதிகளை அமெரிக்க ஜார்ஜியா மாகாணத்துக்குக் கப்பலேற்றினார். டச்சு அரசு அநாதைகளை நன்நம்பிக்கை முனைக்கு (Cape of Good Hope) அனுப்பியது. இவர்களோடு, வளமான வாழ்க்கையைத் தேடி பல ஐரோப்பியர்களும் கடல் கடந்து பயணம் செய்தனர். 19-ம் நூற்றாண்டில் நீராவி எந்திரக் கப்பல் பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் குடியேற ஏராளமான ஐரோப்பியர்கள் குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தனர். ஐரோப்பியர்கள் பெருமளவு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து அவரவர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் குடியேறிய நாடுகளில் தீவிரமாக அமல்படுத்தவும் கடைப்பிடிக்கவும் ஆரம்பித்தனர்.

இந்தப் புதிய சமூகங்கள் கையோடு கொண்டு வந்த நாகரிகம் குடியேறிய புதிய இடங்களில் திட்டமிடப்படாமலும் உணரப்படாமலும் வேகமாக வேரூன்றிப் பரவியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஐரோப்பிய அரசுகள் அவற்றைக் கையாளத் தெரியாமல் தடுமாறின. ஐரோப்பிய அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் அவர்களை வருவாய் ஆதாரங்களை அள்ளித் தரும் அவசியமான மற்றும் தவிர்க்க முடியாத பயண நிறுவனங்களாகக் கருதினர். தனியான சமூக வாழ்வை விரும்பியதாலும் தாய் நாட்டை விட்டு வெகு தூரம் கடல் தாண்டிய இடங்களில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டதாலும் சட்ட ரீதியாக எந்தத் தண்டனைக்கும் அச்சமூகங்களை உட்படுத்த முடியவில்லை.

நிலப்பகுதிகளில் தொடர்புகளைக் குதிரைகள் உறுதிப்படுத்தியதுபோல், 19-ம் நூற்றாண்டு முழுவதும் கடல் கடந்த சாம்ராஜ்யங்களுடனான தொடர்பை பெருங்கடல்களில் மிதக்கும் கப்பல்களே நிலைநிறுத்தின என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 18-ம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டு இறுதியில், வட அமெரிக்காவின் மூன்றில் இரண்டு பகுதிகள் பிரிட்டிஷ் மகுடத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. போர்ச்சுக்கல் வசம் பிரேசிலும் ஒரு சில தீவுகள் ஃப்ரான்ஸ், டென்மாக், நெதர்லாந்து வசமும் ஃப்ளோரிடா, லூயிசியானா, கலிஃபோர்னியா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் ஸ்பெயின் அதிகார வரம்புக்குள்ளும் வந்தன. மெயின் (Maine) மற்றும் ஒண்டேரியோ ஏரிக்குத் தெற்கே உள்ள பிரிட்டிஷ் காலனிகள், ஒரே அரசியல் அமைப்பின் கீழ் வெளிநாட்டு மக்களை ஒன்றிணைக்க இயலாது என்பதை முதன் முதலில் வெளிப்படையாகத் தெரிவித்தன.

பிரிட்டிஷ் காலனிகள் தோற்றம் மற்றும் நடத்தையில் பல்வேறு வகைகளாகப் பிரிந்து கிடந்தன. பிரிட்டிஷ் குடியிருப்புகளைப் போலவே ஃப்ரெஞ்ச், ஸ்வீடிஷ் மற்றும் டச் குடியிருப்புகளும் இருந்தன. மேரிலாந்தில் பிரிட்டிஷ் கத்தோலிக்கர்களும் நியூ இங்கிலாந்தில் பிரிட்டிஷ் புராடெஸ்ட்ண்ட்களும் புலம்பெயர்ந்தனர். நியூ இங்கிலாந்தில் குடியேறியவர்கள் அடிமைத்தனத்தை ஒழித்துத் தங்கள் நிலங்களைத் தாமே உழுதனர். ஆனால், வெர்ஜீனியா மற்றும் தெற்கில் குடியேறிய பிரிட்டிஷார், தோட்டத் தொழிலுக்கு ஏராளமான நீக்ரோ அடிமைகளை இறக்குமதி செய்தனர்.

அமெரிக்க மாகாணங்களில் பொதுவான ஒற்றுமை காணப்படவில்லை. ஒரு மாகாணத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்வது அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்வதை விடவும் கடினமாக விளங்கியது. பிரிட்டிஷ் அமெரிக்கர்களைச் சேர விடாமல் தோற்றமும் இயற்கைச் சூழல்களும் பிரித்தன. ஆனால் இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அரசின் சுயநலமும் முட்டாள்தனமும் பிளவுபட்ட பிரிட்டிஷ் அமெரிக்கர்களை ஒன்றிணைத்தது. பிரிட்டிஷ் அமெரிக்கர்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன. வர்த்தகம் பிரிட்டிஷாருக்குச் சாதமாகமாவும் அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் நடைபெறவும் வலியுறுத்தப்பட்டது. இதனால் அமெரிக்க பிரிட்டிஷாரால் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு சம்பாதிக்க முடியவில்லை.

லாபகரமான அடிமை வியாபாரத்தை பிரிட்டிஷ் அரசே ஏற்று நடத்த முடிவெடுத்து, ஏராளமான நீக்ரோ அடிமைகளை அமெரிக்காவில் இறக்கிவிட்டது. வெர்ஜீனியாவில் குடியேறிய பிரிட்டிஷார் அடிமைகளைப் பணிக்கு அமர்த்தினாலும் காட்டுமிராண்டி நீக்ரோ அடிமைகளின் எண்ணிக்கை பெருகினால் காலப்போக்கில் அவர்களே பெரும் பிரச்னைக்குக் காரணமாவார்கள் என்பதை உணர்ந்திருந்தனர். எனவே பிரிட்டிஷ் அரசு நீக்ரோ அடிமை வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபடுவதையும் வரம்பின்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதையும் எதிர்த்தனர்.

பிரிட்டன் அப்போது தீவிர மன்னர் ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பிடிவாத குணமுடைய மூன்றாம் ஜார்ஜ் (பொ.ஆ.1760-1820) உள்நாட்டு அரசுக்கும் காலனி அரசுகளுக்கும் இடையே தடுமாறிக் கொண்டிருந்தார். அமெரிக்க கப்பல் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும் வகையில், லண்டன் கிழக்கு இந்திய கம்பெனிக்குச் சார்பாக இயற்றப்பட்ட சட்டமே மோதலுக்குக் காரணமானது. புதிய நிபந்தனைகளின் கீழ் அமெரிக்க பாஸ்டன் துறைமுகத்தில், மூன்று சரக்குக் கப்பல்கள் நிறைய தேயிலை இறக்குமதி செய்வதற்காக நங்கூரமிடப்பட்டிருந்தன.

பிரச்னை தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள், துறைமுகத்துக்குள் புகுந்து, பொ.ஆ.1773-ல் தேயிலை முழுவதையும் நடுக்கடலில் கொட்டி அழித்தனர். இரு ஆண்டுகள் கழித்து 1775-ல் பிரிட்டிஷ் அரசு இது தொடர்பாக இரு அமெரிக்கத் தலைவர்களைப் பாஸ்டன் அருகேயுள்ள லெக்சிங்க்டன் (Lexington) நகரில் கைது செய்ய முயன்றது. லெக்சிங்க்டனில் முதன் முதலாக பிரிட்டிஷ் துப்பாக்கிகளிலிருந்து இரு தோட்டாக்கள் வெடித்துச் சிதறின. இதைத் தொடர்ந்து காங்கார்ட் (Concord) நகரில் அமெரிக்கச் சுதந்திரத்தின் முதல் போர் தொடங்கியது.

அமெரிக்க விடுதலைப் போர் தொடங்கினாலும் ஓராண்டு வரை தாய்நாட்டுடனான பற்றையும் தொடர்பையும் காலனிக்காரர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. கிளர்ச்சி மாகாணங்களின் காங்கிரஸ் ‘அதிகாரப்பூர்வ அமெரிக்க சுதந்திரப் போராட்டப் பிரகடனத்தை’ பொ.ஆ.1776 மத்தியில்தான் வெளியிட்டது. ஏனைய காலனிவாதிகளைப் போன்று, ஃபிரான்ஸ் நாட்டுடனான போரில் ராணுவப் பயிற்சி பெற்ற ஜார்ஜ் வாஷிங்க்டன் பொ.ஆ.1776-ல் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். கனடாவிலிருந்து நியூயார்க் செல்ல முயன்ற பிரிட்டிஷ் தளபதி பர்காயின் (Burgoyne) ஃப்ரீமேன்ஸ் ஃபார்ம் (Freeemans Farm) என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டார். உயிர் பிழைக்க, வேறு வழியின்றி சரடோகாவில் (Saatoga) சரணடைந்தார்.
அடுத்த ஆண்டு ஃபிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் கூட்டாக இங்கிலாந்து மீது போர் தொடுத்ததால், அதன் கடல் தொலைதொடர்புகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. பொ.ஆ.1781-ல் பிரிட்டிஷ் படையின் இரண்டாம் தளபதி கார்ன்வாலிஸ் (Cornwallis) வெர்ஜீனியா மாகாணம் யார்க்டவுன் தீபகற்பத்தில் பிடிபட்டார். பொ.ஆ.1783-ல் பாரிஸ் நகரில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானதைத் தொடர்ந்து மெயின் தொடங்கி ஜார்ஜியா வரையிலான 13 காலனிகள் சுதந்திர இறையாண்மை அரசுகளின் ஒன்றியமானது. இவ்வாறாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவானது. ஆனால், கனடா மட்டும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமான நாடாகத் தொடர்ந்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.

அடுத்த நான்கு ஆண்டுகள் இந்த மாகாணங்கள் பலவீனமான மத்திய அரசின் கீழ் இயங்கின. கூட்டமைப்பின் சில பிரிவுகளின்படி, தனித்தனியான சுதந்திரமான சமூகங்களாகப் பிரிவதற்குத் தயாராக இருந்தன. ஆனல், பிரிட்டிஷ் அரசின் விரோத மற்றும் ஃபிரெஞ்ச் அரசின் தீவிரவாத மனப்பான்மை காரணமாக, உடனடிப் பிரிவினை சற்று தாமதமானது. பொ.ஆ.1788-ல் ஜனாதிபதிக்குக் கணிசமான அதிகாரங்களுடன், திறமையான கூட்டமைப்பு அரசை உள்ளடக்கிய புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஒப்புதலும் வழங்கப்பட்டது. பொ.ஆ.1812-ல் பிரிட்டனுடனான இரண்டாம் போர், பலவீனமாக விளங்கிய தேசிய ஒற்றுமைக்குப் புத்துணர்ச்சியையும் புது வேகத்தையும் ஊட்டியது.

மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதிகள் பரந்து விரிந்திருந்ததாலும் விருப்பு வெறுப்புகள் வேறுபட்ட காரணத்தாலும் தொடர்பு வசதிகளும் இல்லாததாலும் ஐரோப்பிய நாடுகளைப் போன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பிளவுபடும் சாத்தியங்களே அதிகம் காணப்பட்டன. அமெரிக்க நாட்டின் உள் மாகாணங்களைச் சேர்ந்த செனேட்டர்கள் மற்றும் காங்கிரஸ்காரர்கள், வாஷிங்க்டன் நகருக்கு வருவது என்பது நீண்ட, நெடிய, அலுப்பான மற்றும் பாதுகாப்பற்ற பயணமாகவே விளங்கியது.

மேலும் பொதுவான கல்வி, இலக்கியம் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றுக்கும் நடைமுறைச் சாத்தியமில்லை. இருப்பினும் தடைகளைத் தகர்க்க நவீன தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டுதான் இருந்தது. நீராவிப் படகு, ரயில், தந்தி ஆகியவற்றின் கண்டுபிடிப்புகள் போக்குவரத்தையும் தொடர்பையும் எளிதாக்கி அமெரிக்கா பிளவுபடாமல் பாதுகாத்தன. மிகப் பெரிய நவீன நாடுகளில் முதலிடம் வகிக்கும் அளவில் பின்னிப் பிணைத்தன.

இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலுள்ள ஸ்பானிஷ் காலனிகள் மேற்கண்ட 13 காலனிகளைப் பின்பற்றி ஐரோப்பாவுடனான தங்களது தொடர்பை அறுத்துக் கொண்டன. இருப்பினும் ஸ்பானிஷ் காலனிகளுக்கு இடையிருந்த பிரம்மாண்ட மலைத் தொடர்கள், பாலைவனங்கள், காடுகள் மற்றும் போர்ச்சுகீஸிய பிரேசில் நாடு ஆகியவை அவர்களுக்குள் ஒன்றியம் அல்லது ஐக்கியம் உருவாகப் பெரும் தடையாக விளங்கின. இதன் காரணமாகப் போர்களாலும் புரட்சிகளாலும் எளிதில் பாதிப்புக்கும் உள்ளாயின.

தவிர்க்க முடியாத பிரிவுக்கு பிரேசில் வேறொரு வழியைப் பின்பற்றியது. பொ.ஆ.1807-ல் நெப்போலியன் தலைமையில் ஃபிரெஞ்ச் படைகள் பிரேசில் தாய்நாடான போர்சுக்கல் மீது தாக்குதல் நடத்தின. நெப்போலியன் போர்ச்சுக்கலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசன் பிரேசிலுக்குத் தப்பிச் சென்று தஞ்சம் புகுந்தார். அந்த வினாடி தொடங்கி, பிரிவினை நிகழும் வரை, போர்ச்சுக்கலை நம்பி பிரேசில் இருக்க வேண்டிய நிலைமாறி, பிரேசிலை நம்பி போர்ச்சுக்கல் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

போர்ச்சுக்கல் மன்னன் மகன் முதல் பெட்ரோ (Pedro I) தலைமையில் தனி சாம்ராஜ்யத்துக்கான அறிவிப்பை பொ.ஆ.1822-ல் பிரேசில் வெளியிட்டது. இருப்பினும் புதிய உலகம் மன்னர் ஆட்சிக்குச் சாதகமாகவும் விசுவாசமாகவும் இல்லை. பொ.ஆ.1899-ல் பிரேசில் மன்னர் யாரும் அறியாத வகையில் ஐரோப்பாவுக்குக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரேசில் ஐக்கிய மாகாணங்கள், ஏனைய குடியரசு அமெரிக்காவைப்போல் ஐரோப்பாவுடனான தங்களது தொடர்பைத் துண்டித்துக் கொண்டன.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *