Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #34

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #34

55. ஃப்ரெஞ்சுப் புரட்சி மற்றும் ஃபிரான்ஸில் முடியாட்சி மீட்டெடுப்பு

தீவிர சமூக மற்றும் அரசியல் காரணிகளால் பிரிட்டன் தன் வசமிருந்து பதின்மூன்று அமெரிக்கக் காலனிகளை இழந்தது. இது ஐரோப்பிய முடியாட்சிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி. ஐரோப்பிய முடியாட்சிகளில் ஃபிரஞ்ச் முடியாட்சியே பொறாமைப்படும் அளவுக்கு முன்மாதிரியாகவும் வெற்றிகரமானதும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், அது அநீதியின் அடிப்படையில் செழித்த காரணத்தால் வியக்கத்தக்க வகையில் சரிந்து வீழ்ந்தது. அசாதாரணமும் புத்திசாலித்தனமும் நிறைந்திருந்தாலும் பொது மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. அரச குடும்பத்தினருக்கும் பிரபுக்களுக்கும் எந்த வரிகளும் இன்றி சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. மாறாக நடுத்தரப் பிரிவு, ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுக் கசக்கிப் பிழியப்பட்டனர்.

பொ.ஆ.1787-ல் ஃபிரெஞ்ச் முடியாட்சி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதிக செலவுகள் மற்றும் வருவாய்க் குறைபாடு குறித்து அரச குடும்பத்தினர், பிரபுகள் உள்பட அனைத்துப் பிரிவு மக்களும் விவாதிக்கவும் ஆலோசனை வழங்கவும் அழைக்கப்பட்டனர். பொ.ஆ.1789-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முந்தைய வடிவம் போன்று ‘ஸ்டேட்ஸ் ஜெனரல்’ (States General) என்ற அமைப்பின் கூட்டம் வெர்சேல்ஸில் (Versailles) நடைபெற்றது. பொ.ஆ.1610-க்குப் பிறகு தொடர்ந்து முடியாட்சி இல்லாததால், இப்போதுதான் இந்த அமைப்பு கூட்டப்பட்டது. பொது மக்களுக்கும் தங்கள் பிரச்னைகள், குறைகளை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பும் கிடைத்தது.

கூட்டத்தில் மூன்றாவது தூணாக விளங்கும் காமன்ஸ் (Commons) அவையைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெற்றதை எதிர்த்து, மூன்று தூண்களுக்கு இடையே கருத்து மோதல்கள் ஆரம்பித்தன. காமன்ஸ் எனப்படும் பொது மக்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கவே, ஸ்டேட்ஸ் ஜெனரல் பெயர் தேசிய அசெம்பிளி (National Assembly) என மாறியது. இருப்பினும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மன்னர் ஆட்சியைத் தக்கவைத்ததுபோல், தேசிய அசெம்பிளியும் பிரான்ஸில் மன்னர் ஆட்சியைத் தக்கவைத்துத் தீர்மானம் நிறைவேற்றியது. பதினாறாம் லூயி (Louis XVI) போராட்டங்களைச் சமாளிக்கத் தயாராகி மாகாணங்களிலிருந்து படைகளைத் தலைநகரில் குவித்தார். பாரிஸ் உள்பட ஃபிரான்ஸ் முழுவதும் கிளர்ச்சிகள் வெடித்தன.

முடியாட்சி மிக வேகமாகச் சரிந்தது. தூங்கிவழிந்துகொண்டிருந்த பாஸ்டில் (Bastille) சிறைச்சாலை போராளிகளால் நிரம்பியது. அரச குடும்பத்தினர், பிரபுக்களின் பிரமாண்ட அரண்மனைகள் விவசாயிகளால் இடித்துத் தள்ளப்பட்டன அல்லது கொளுத்தப்பட்டன. செல்வந்தர்கள் கொல்லப்பட்டனர் அல்லது விரட்டி அடிக்கப்பட்டனர். ஒரே மாதத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவிய பண்டைய மன்னர் ஆட்சி முறை சீர்குலைந்தது. இளவரசர்களும் அவர்களது ஆலோசகர்களும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். பாரிஸ் மற்றும் முக்கிய நகரங்களில் தற்காலிக நகர அரசுகள் அமைக்கப்பட்டன. மன்னர் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க நேஷனல் கார்ட் (National Guard) என்ற பெயரில் தேசியப் பாதுகாப்புப் படை நாடு முழுவதும் நிறுவப்பட்டது. புதிய தலைமுறைக்கான புதிய அரசியலையும் சமூக அமைப்பையும் தேசிய அசெம்பிளி உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புதிய அரசு, முடியாட்சியில் நடைபெற்ற அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அரச குடும்பத்தினருக்கும் பிரபுக்களுக்கும் வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை ரத்து செய்தது. அடிமைத்தனம் பிரபுத்துவம் பட்டங்கள், விருதுகள் உள்ளிட்ட அனைத்தும் நீக்கப்பட்டு, அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சியை நிறுவ விரும்பியது. அரசன் வெர்செல்ஸில் தனக்கான பிரமாண்ட ஆடம்பர அரண்மனையை விட்டு விலகி, பாரிஸிலுள்ள ட்யூலெரிஸ் (Tuileries) நகரில் சாதாரண அரண்மனையில் குடியேறினார்.

அடுத்த இரு ஆண்டுகளுக்குச் சிறப்பான நவீன அரசை உருவாக்கத் தேசிய அசெம்பிளி கடுமையாகப் போராடியது. பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்திய சில திட்டங்கள் வெற்றி பெற்றன; பல தோல்வியத் தழுவின. சித்ரவதை, தன்னிச்சையான சிறை, மதவெறிக்கான துன்புறுத்தல்கள் ஒழிக்கப்பட்டன. ஃப்ரான்ஸ், நார்மண்டி (Normandy), பர்கண்டி (Burgundy) உள்ளிட்ட பண்டைய பிராந்தியங்கள் எண்பது துறைகளாகப் பிரிக்கப்பட்டன. ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு எல்லாப் பிரிவு மக்களும் நியமிக்கப்பட்டனர். நியாயவான்களைக் கொண்ட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மக்கள் மன்றமே நீதிமன்றங்கள் ஆயின.

சர்ச்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. கல்வி, மருத்துவம் மற்றும் தான தருமங்களின் ஈடுபடாத மத அமைப்புகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டன. சர்ச்களில் பணியாற்றும் பாதிரியார்கள், ரோமானிய போப்பின் விருப்பத்துக்கு இணங்க நியமிக்கப்படும் முறைக்குப் பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோரே நியமிக்கப்பட்டனர். இந்த தீடீர் மாற்றத்தால் போப் தன்னிச்சையாகப் பாதிரியார்களை நியமிக்கும் அதிகாரம் பறிபோனது.

கோட்பாடு அடிப்படையில் இல்லாவிட்டாலும் அமைப்புரீதியாக ஃப்ரான்ஸில் உள்ள சர்ச்கள் அனைத்தையும் கத்தோலிக்கப் பிரிவிலிருந்து புராடெஸ்டெண்ட் பிரிவாக மாற்றும் முயற்சியில் தேசிய அசெம்பிளி தீவிரமாகச் செயல்பட்டது. இதன் காரணமாக ரோமாபுரி போப்பால் நியமிக்கப்பட்ட பாதிரியார்களுக்கும் தேசிய அசெம்பிளியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதிரியார்களுக்கும் இடையே, சர்ச்சைகளும் மோதலும் ஆங்காங்கே ஏற்பட்டன.

ஃபிரான்ஸிலிருந்து தப்பியோடி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்த அரச குடும்பத்தினர், பிரபுக்கள், ராஜ குடும்ப விசுவாசிகள், நண்பர்கள் ஆகியோருடன் அரசனும் அரசியும் ரகசியமாக ஆலோசனை நடத்தி வந்தனர். அவர்களின் தீவிர முனைவுகள் காரணமாக, அதுவரை ஃப்ரான்ஸில் நிலவிய பரீட்சார்த்த அரசியல் அமைப்பு முடியாட்சி முறை தீடீரென முடிவுக்கு வந்தது. கிழக்கு எல்லையில் நேச நாடுகளில் ராணுவம் குவிக்கப்பட்டது. ஜூன் மாதம் நள்ளிரவில் அரசனும் அரசியும் குழந்தைகளுடன், ட்யூலெரிஸ் அரண்மனையிலிருந்து வெளியேறி, ஏற்கெனவே தப்பியோடிய பிரபுக்கள் மற்றும் அரச குடும்பத்தினருடன் சேர்ந்து கொள்ள முயன்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக வெர்நெஸ் (Varennes) என்ற இடத்தில் இருவரும் கைதாகி மீண்டும் பாரிஸ் கொண்டு வரப்பட்டனர்.

தப்பியோடிக் கைதான அரசன் மற்றும் அரசி மீது ராஜ துரோக்க் குற்றம் சுமத்தப்பட்டது. நாடு முழுவதும் இருவருக்கும் எதிராக மக்கள் கொதித்து எழுந்தனர். தேச பக்தி கொழுந்துவிட்டு எரியவே ஃபிரான்ஸ் குடியரசாகப் பிரகடனமானது. பொ.ஆ.1793 ஜனவரியில் அரசனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு ஆதரவளித்த ஆஸ்திரியா மற்றும் ப்ரஷியா மீது ஃபிரஞ்சுப் படைகள் தாக்குதல் நடத்தின.

ஃபிரஞ்ச் மக்கள் வரலாற்றில் புதிய மற்றும் விசித்திரமான அத்யாயம் தொடங்கியது. தேச பக்தி, குடியரசு தொடர்பாக மக்கள் மத்தியில் புத்துணர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டன. உள்நாட்டில் பழைய ராஜ விசுவாசிகளும் புதிய அரசுக்கு அடிபணியாதவர்களும் அப்புறப்படுத்தபட்டனர். வெளிநாடுகளில் உள்ள புரட்சிக்காரர்களுக்கு ஆதரவும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. குடியரசு என்ற சொல் ஐரோப்பா முழுவதும் எதிரொலிக்கவே, காலப்போக்கில் எல்லா நாடுகளும் குடியரசாக மாறுவதில் ஆர்வம் கொண்டன.

குடியரசுப் படைகளில் ஃப்ரெஞ்ச் இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்துகொண்டனர். நாடு முழுவதும் மார்செலைஸ் (Marseillaise) என்ற பாடல் பிரபலமானது. மக்களைச் சுண்டி இழுத்து நாட்டுப்பற்றை ஊட்டும் இப்பாடலே பின்னாளில் ஃபிரான்ஸின் தேசிய கீதமானது. பொ.ஆ.1792 இறுதியில் ஃபிரஞ்சுப் படைகள் பதினாங்காம் லூயி வென்றதை விடவும் அதிகப் பகுதிகளைக் கைப்பற்றின. ப்ரசெல்ஸ் (Brussels), சாவோய் (Savoy), மேயென்ஸ் (Mayence), ஷில்ட் (Scheldt), ஹாலந்து (Holland) என அந்நிய மண் எங்கும் ஃபிரெஞ்சுப் படைகள் காலூன்றின. ஆனால், ஃபிரான்ஸ் இத்தோடு நிறுத்தி இருக்கலாம். தடுக்கவோ கேள்வி கேட்கவோ ஆளில்லாமல் முன்னேறிக் கொண்டிருந்த ஃப்ரான்ஸ் திடீரென முட்டாள்தனமான முடிவெடுத்தது.

லூயி மன்னனுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதால், இங்கிலாந்து அரசு லண்டனிலிருந்த ஃபிரான்ஸ் தூதரை அதிரடியாக வெளியேற்றியது. ஃபிரான்ஸ் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட இங்கிலாந்துக்கு உரிமையில்லை என்பதை வெளிப்படுத்த, இங்கிலாந்து மீது போர் தொடுத்தது. உள்நாட்டுக் கலவரங்களை ஒடுக்கி, வெளிநாடுகளிலும் ஃபிரான்ஸ் படைகள் திறமையாகப் போரிட்டு வெற்றிகளைக் குவித்தது உண்மையே. ஆனால் ஃப்ரெஞ்ச் தரைப் படை வலுவாக இருக்கும் அளவுக்கு அதன் கடற்படை இல்லை என்பதே நிஜம். தொடக்க காலம் தொட்டே ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிடவும் இங்கிலாந்தின் கடற்படை உலகப் பிரசித்தம். இதன் காரணமாக இங்கிலாந்து கடற்படையிடம் ஃபிரான்ஸ் படுதோல்வியைத் தழுவியது.

ஃப்ரான்ஸில் நடைபெற்ற உள்நாட்டுப் புரட்சிக்கு இங்கிலாந்து மக்களே ஒரு கட்டத்தில் ஆதரவு தெரிவித்தவர்கள்தான். ஆனால், தேவையின்றி இங்கிலாந்துடன் போர் தொடுத்த காரணத்தால், அந்நாட்டு மக்கள் அனைவருமே விதிவிலக்கின்றி ஃபிரான்ஸுக்கு எதிராகத் திரும்பினர். ஃபிரான்ஸின் மீதிருந்த இரக்கம் கோபமாக மாறியது.

இருப்பினும் அடுத்த சில ஆண்டுகளுக்கு அண்டை நாடுகளின் மீது படையெடுப்பதை ஃப்ரான்ஸ் நிறுத்தவில்லை. பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆஸ்திரியாவை விரட்டியடித்தது. ஹாலந்து நாட்டைக் குடியரசாக்கியது. டெக்ஸெல் (Texel) தீவுகளில் சிக்கிக்கொண்ட டச் கடற்படை, துப்பாக்கிச் சத்தம் கேட்காமலேயே சரணடைந்தது. இத்தாலியைக் கைப்பற்ற மேற்கொண்ட முனைவுகள் சிறுது காலம் நிறுத்திவைக்கப்பட்டன.

பொ.ஆ.1796-ல் ஃப்ரான்ஸ் தளபதியாக நெப்போலியன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஃபிரான்ஸ் மேலும் வலுவடைந்தது. மேண்டுவா (Mantua) வெரோனா (Verona) உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இத்தாலியை வீழ்த்த வேண்டுமென்ற நீண்ட நாள் கனவை நனவாக்கினார். ஃபிரான்ஸ் வெற்றி குறித்து வரலாற்றாசிரியர் அட்கின்சன் கூறுகையில் ‘ஃபிரெஞ்சுக் குடியரசுப் படைகளின் எண்ணிக்கையும் வேகமும் அசாத்தியமானது. மேம்படுத்தப்பட்ட படைகளைத் தாமதப்படுத்தவோ தடுத்து நிறுத்தவோ இயலவில்லை. கூடாரங்கள் வாங்கப் பணமில்லை. பயணிக்கவும் பொருள்கள் தளவாடங்களை ஏற்றிச் செல்லவும் போதிய வாகனங்கள் கிடையாது. எனினும் வசதிகள் இல்லாத காரணத்தால் ராணுவத்தை விட்டு வீரர்கள் ஓடவில்லை. எல்லாவாற்றையும் தாங்கிக்கொண்டு போரிட்ட ஃப்ரெஞ்சு வீரம் வியக்கத்தக்கது’ என்றார்.

பொ.ஆ.1793-க்குப் பின்னர் நவீன போர் முறை அறிமுகமானது. சிறிய படைகள், கூடாரங்கள், ஆகியவற்றுக்கு மாற்றாக விரைவான போக்குவரத்தும் வலிமையான படைகளும் உருவாயின. தாய் நாட்டின் விடுதலைக்காக, மார்செலைஸ் தேசிய கீதத்தைப் பாடிக்கொண்டும் அண்டை நாடுகளில் போராடிக்கொண்டும் அவற்றைச் சுரண்டிக்கொண்டும் குடியரசுப் படைகள் இருந்தன. ஆனால், உள்நாட்டில், பாரிஸில் போராட்டங்கள் ரோப்ஸ்பியர் (Robespierre) என்னும் மதவெறியன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உடல் வலிமையின்றி, கூச்ச சுபாவத்துடன், துரும்பைப்போல் காட்சியளித்தாலும் மனதளவில் ஆற்றலும் நம்பிக்கையும் அவனிடம் இருந்தன. ஃபிரான்ஸ் குடியரசைத் தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியுமென்றும் தன்னை விட்டால் வேறு ஆளில்லை என்றும் கற்பனையில் மிதந்தார். எனவே, அதிகரத்தைத் தொடர்ந்து தக்கவைக்க ஃபிரான்ஸைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற முடிவிலும் திடமாகச் செயல்பட்டார்.

மன்னனுக்கும் ஏனைய ராஜ விசுவாசிகளுக்கும் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை மக்களிடையே குடியரசு எண்ணத்துக்கு வலுவாக வித்திட்டன. இதைத் தொடர்ந்து ஆங்காங்கே கிளர்ச்சிகளும் நடைபெற்றன. மேற்கே, லா வெண்டி-யில் (La Vende) அரசுப் படைகளுக்குக் கட்டாய அள் சேர்ப்புக்கு எதிராகவும் மரபுவழி பாதிரியார்களின் நீக்கத்துக்கு எதிராகவும் மக்கள் கொதித்து எழுந்தனர். ஃபிரஞ்சு டௌலான் (Toulon) அரசுப் படைகளில், ஆங்கிலேய மற்றும் ஸ்பானிஷ் வீரர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு அரண் உருவாக்கத்துக்கு எதிராக, லயான்ஸ் (Lyons) மற்றும் மார்சேல்ஸ் (Marseilles) நகரங்களில் கிளர்ச்சிகள் நடைபெற்றன. கண்ணில்பட்ட அரசு விசுவாசிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அரசு விசுவாசிகளையும் ராஜ குடும்பத்தினரையும் கொல்வதற்குப் புரட்சிகர நீதிமன்றம் (Revolutionary Tribunal) புதுவகை கொடூரமான தண்டனைக் கருவியை அறிமுகப்படுத்தியது. அதுதான் தலையை வெட்டித் துண்டாக்கும் கில்லட்டின் (Guillotine) கருவி. இதன் மூலம் அரசியும் புரட்சியாளன் ரோப்ஸ்பியருக்கு எதிரானவர்களும் கடவுள் இல்லை என்ற நாத்திகர்களும் கொல்லப்பட்டனர். மாதம், வாரம் எனத் தொடங்கி தினந்தோறும் ஏராளமான படுகொலைகள் அரங்கேறின. ரோப்ஸ்பியர் புரட்சிப் போராட்டம் ரத்தத்தில் குளித்தது. போதை மருந்துக்கு அடிமையானவனுக்கு தினமும் போதை மருந்து தேவைப்படுவதுபோல், கொலை வெறியில் ஊறிய புரட்சியாளர்களுக்கு, அன்றாடம் யார் தலையாவது கில்லட்டினால் வெட்டிக் கொல்லாமல் இருக்கமுடியவில்லை.

கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது பழமொழி. இதை நிஜமாக்கும் வகையில், தினசரி நூற்றுக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்த புரட்சியாளன் ரோப்ஸ்பியர், ஒரு நாள் அதே கில்லட்டின் கருவியாலேயே தலை துண்டிக்கப்பட்டு இறந்தான். இவனது மரணத்தைத் தொடர்ந்து ஐவர் அடங்கிய குழு (Directory of Five) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புரட்சியைத் தொடர்ந்து நடத்தியது. வன்முறை வரலாற்றில் இவர்களது ஆட்சி பயங்கரமான திருப்பங்களைக் கொண்டது.

புரட்சிப் பிரசாரத்தின் தாக்கம் ஃபிரெஞ்சுப் படைகளை ஹாலந்து, பெல்ஜியம் சுவிட்சர்லாந்து, தெற்கு ஜெர்மனி, வடக்கு இத்தாலி என பல்வேறு நாடுகளுக்குள் ஊடுருவத் தூண்டியது. ஆங்காங்கே ஆட்சியிலிருந்த மன்னர்கள் தூக்கி எறியப்பட்டனர். முடியாட்சி அகன்று குடியரசாயின. அதே சமயம் வென்ற நாடுகளின் கஜானாவைக் கொள்ளை அடிக்கவும் தயங்கவில்லை. நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐவர் குழுவின் தலமையிலான ஃபிரெஞ்ச் அரசுக்குத் தேவையான பணத்தைப், புரட்சிக் குடியரசுப் படைகள் கொடுத்தன. விடுதலைக்கான புனிதப் போர்கள், சிறிது சிறிதாகப் பண்டைக் காலத்து வன்முறையும் தீவிரமும் நிறைந்த போர்களாக மாறின. ஃபிரான்ஸின் பாரம்பரியப் பெருமை மிக்க வெளியுறவுக் கொள்கை காணாமல் போனது.

நெபோலியன் வருகைக்குப் பிறகு ஃப்ரெஞ்ச் மக்களின் நாட்டுப் பற்று இன்னும் தீவிரமானது. அக்கம் பக்கம் நாடுகளை வென்றெடுத்த ஃபிரான்ஸால், நெருங்க முடியாத நாடாக விளங்கியது இத்தாலி மட்டுமே. நெப்போலியன் ஆட்சியில்தான் இத்தாலியை ஜெயிக்க முடிந்தது. பத்தாண்டு காலம் வெற்றிகளைக் குவித்து ஃபிரான்ஸுக்குப் பெருமை தேடித் தந்த அதே நெப்போலியன், நிறைவாக அவமானகரமான படுதோல்விக்கும் காரணமானார்.

அரச குடும்பத்துக்கு எதிரான ரோப்ஸ்பியரின் தீவிரவாதப் பள்ளியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நெப்போலியன், படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொள்வதிலும் தீவிர கவனம் செலுத்தினார். ஆற்றல் மிகுந்தவனாகவும் இரக்கமற்ற கொடுங்கோலனாகவும் விளங்கினார். ஐரோப்பாவில் உருவாகி வரும் புதிய சக்திகள் பற்றிய அதிகப் புரிதல்கள் இல்லை. அவரது அரசியல் கற்பனைகள், காலாவதியான மேற்கத்திய சாம்ராஜ்யத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டுமென்ற தாமதமான மற்றும் மோசமான முயற்சியில் ஈடுபட வைத்தது. மிச்சம் மீதியிருந்த பண்டைய புனித ரோமானிய சாம்ராஜ்யத்தை அழித்துவிட்டு, ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸை மையமாகக் கொண்ட புதிய புனித சாம்ராஜ்யத்தை அமைக்க விரும்பினார்.

ஆஸ்திரியாவின் சக்ரவர்த்தி, போப் ஆதரவில், புனித ரோமானியச் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார். ஆனால், நெப்போலியன் எழுச்சியையும் தாக்குதலையும் சமாளிக்க முடியாமல், வியன்னாவிலுள்ள ஆஸ்திரியச் சக்ரவர்த்தி, புனித ரோமானியச் சக்ரவர்த்தி என்னும் பதவியைத் துறந்துவிட்டு, ஆஸ்திரியாவுக்கு மட்டுமே மன்னனாக அறிவித்துக் கொண்டார். இதற்கிடையே, நெப்போலியன், ஆஸ்திரிய இளவரசியை மணந்துகொள்ள வசதியாகத், தனது ஃபிரெஞ்ச் மனைவியை விவாகரத்து செய்தார்.

பொ.ஆ.1799-ல் முதல் கௌன்சலாக ஃப்ரான்ஸ் மன்னனாகவும் பொ.ஆ.1804-ல் சார்லேமேக்னேவைப் போன்று ஃப்ரான்ஸ் சக்ரவர்த்தியாகவும் முடிசூட்டிக்கொண்டார். வழக்கமாக ரோமாபுரி வாடிகன் போப்தான் சக்ரவர்த்திக்கு முடிசூட்டுவார். ஆனால், சார்லேமேக்னேவைப் பின்பற்றி நெப்போலியன், பாரிஸில் உள்ள தனது ஆதரவு போப் கையிலிருந்து மகுடத்தை எடுத்துத் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார். இதன் மூலம் ரோமானிய வாடிகன் போப்பின் அதிகாரத்திலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் நெப்போலியன் தன்னை முழுவதுமாக விடுவித்துக்கொண்டார். தனது மகனை ரோமானிய மன்னன் ஆக்கினார்.

அடுத்த சில ஆண்டுகளுக்கு நெப்போலியன் சென்ற இடங்களிலெலலாம் வெற்றிக்கொடி நாட்டினார். இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா, ப்ரஷியா மற்றும் ரஷ்யாவுக்கு மேற்கே ஐரோப்பா முழுவதும் கைப்பற்றினார். ஆனாலும்கூட அவர் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது ஒரேயொரு விஷயம்தான். ஆம். பிரிட்டிஷ் கடற்படையை அவரது முன்னோர்கள் காலம் தொட்டு யாரும் நெருங்கக்கூட முடியவில்லை. நெப்போலியனும் முயன்று பார்த்தார். தோல்விதான் மிஞ்சியது. பொ.ஆ.1805-ல் நடைபெற்ற ட்ரஃபால்கர் (Trafalger) போரில் நெப்போலியன் கடற்படை, பிரிட்டிஷ் கடற்படைத் தளபதி அட்மிரல் நெல்சனிடம் (Admiral Nelson) படுதோல்வி அடைந்தது.

பொ.ஆ.1808-ல் ஸ்பானிஷ் படைகளும் வெல்லிங்க்டன் தலைமையில் பிரிட்டிஷ் படைகளும் ஃபிரெஞ்ச் படைகளை வடக்கு நோக்கி விரட்டியடித்தன. பொ.ஆ.1811-ல் நெப்போலியனுக்கும் ரஷ்ய மன்னன் முதலாம் ஜார் அலெக்சாண்டருக்கும் (Tzar Alexander I) தகராறு மூண்டது. பொ.ஆ.1812-ல் சுமார் 6 லட்சம் வீரர்களுடன் ரஷ்யா மீது நெப்போலியன் படையெடுத்தார். ரஷியாவின் இயற்கை அரணான கடுமையான குளிரையும் படைகளின் போர்த் திறனையும் சமாளிக்க முடியாமல் நெப்போலியன் வீரர்கள் மரணத்தைத் தழுவினர். இதைத் தொடர்ந்து ஜெர்மனியும் ஸ்வீடனும் ஏற்கெனவே தோற்று நிலை குலைந்திருந்த ஃபிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தின.

பொ.ஆ.1814-ல் ஃபவுண்டன்ப்ளூவில் (Fountainbleau) நடைபெற்ற போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார். பதவி இழந்த நெப்போலியன் எல்பா (Elba) தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். எப்படியோ அங்கிருந்து தப்பித்துச் சிதறிய படைகளைத் திரட்டி மீண்டும் போரிட்டார். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ப்ரஷியக் கூட்டும் படைகளிடம் வாட்டர்லூ (Waterloo) என்ற இடத்தில் மறுபடியும் தோல்வி அடைந்தார்.

இம்முறை நெப்போலியனை எளிதாகத் தப்பவிடக்கூடாது என்னும் முடிவுடன், பிரிட்டிஷ் அரசு அவரை அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புனித ஹெலீனா (St Helena) என்னும் ஆள் அரவமற்ற தீவில் சிறை வைத்தது. 1821இல் பிரிட்டிஷ் கைதியாகவே நெப்போலியன் மரணத்தைத் தழுவினார்.

ஃப்ரெஞ்சுப் புரட்சியும் நோக்கமும் போராட்டக்காரர்களின் உழைப்பும் வீணாகிப் போனது. வெற்றி பெற்ற தலைவர்கள் ஆஸ்திரியத் தலைநகரில் கூடி வெற்றி விழா கொண்டாடினர். சற்றேறக் குறைய அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் அமைதி நிலவியது.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *