56. நெப்போலியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஐரோப்பாவில் நிலவிய அசாதாரண அமைதி
முழுமையான சமூக மற்றும் பன்னாட்டு அமைதி நிலவுவதைத் தடுத்ததுடன், பொ.ஆ.1854 – 1871 வரை சுழற்சியாகப் போர்கள் நடைபெறவும் இரு முக்கிய விஷயங்கள் காரணிகளாக அமைந்தன. முதலாவது, சம்பந்தப்பட்ட அரசவை நீதிமன்றங்கள், நியாயமற்ற சலுகைகளை மீட்டெடுக்கவும் சிந்தனை, எழுத்து, கற்பித்தல், சுதந்திரத்தில் தலையிடுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன. இரண்டாவது காரணம்: வியன்னா ராஜதந்திரிகள் வரைந்த சாத்தியமற்ற எல்லைகோடுகள்.
கடந்தகாலச்சூழலை நோக்கித் திரும்புவதே ஸ்பெயின் முடியாட்சியின் உள்ளார்ந்த மனநிலையாக இருந்தது. அதன் முதல் மற்றும் வெளிப்படையான திட்டமும் அதுதான். ரோமானியத் திருச்சபைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கும் விசாரணை மன்றங்களும் மீட்டெடுக்கப்பட்டன. அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும் ஸ்பானிய காலனிகள், ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் பின்பற்றி, ஐரோப்பிய அதிகார மையத்துக்கு எதிராகப் போர்குரல் எழுப்பின. குறிப்பாக பொ.ஆ.1808-ல் நெப்போலியனின் சகோதர்ர் ஜோசஃப், ஸ்பெயின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டபோது, இந்த எதிர்ப்பு கிளம்பியது.
தென் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டனாக தளபதி போலிவார் (Bolivar) உருவெடுத்தார். ஸ்பெயினால் இந்தப் புரட்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அமெரிக்க விடுதலைப் போரைப் போல இந்த விடுதலைப் போரும் நீடித்துக்கொண்டே போனது. நிறைவாக, புனிதக் கூட்டணியின் உணர்வுகளுக்கு இணங்க, ஐரோப்பிய மன்னர்கள் ஸ்பெயினுக்கு உதவ வேண்டுமென ஆஸ்திரியா கோரிக்கை விடுத்தது. ஆனால், பிரிட்டன் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்த்தது. பொ.ஆ.1823-ல் அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த மன்ரோ (Monroe), திட்டமிட்ட முடியாட்சி மறுசீரமைப்புக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய அரசியல் கட்டமைப்பை அமெரிக்காவில் அமல்படுத்த முனைவது சட்டவிரோதமான செயலாகக் கருதப்படும் என எச்சரித்தார்.
பின்னாளில் அவரது எச்சரிக்கை வாசகங்களே ‘மன்றோ கோட்பாடு’ (Doctrine of Monroe) ஆனது. அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசுதான் இருக்கவேண்டும்; இணையாக அல்லது நிழலாகக் கூடுதல் அரசு எதுவும் இயங்க அனுமதியில்லை என்பதே அக்கோட்பாடு. இதன் காரணமாக அமெரிக்காவில் வேறெந்த பெரிய வல்லரசுகளும் தடம் பதிக்க முடியவில்லை. ஸ்பானிய அமெரிக்காவின் புதிய மாகாணங்கள், தங்களுக்கான தலைவிதியை விருப்பப்படித் தாமே நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தனது காலனிகளை ஸ்பெயின் முடியாட்சி இழந்தாலும் ஐரோப்பிய கான்சர்ட் (Concert of Europe) பாதுகாப்புடன் ஐரோப்பாவில் செய்ததுபோல் செய்ய முடிந்தது. ஐரோப்பிய காங்கிரஸ் ஆதரவுடன், பொ.ஆ.1823-ல், ஸ்பெயின் கிளர்ச்சியை ஃப்ரான்ஸும் நேபிள்ஸ் கிளர்ச்சியை ஆஸ்திரியாவும் முடிறியடித்தன. பொ.ஆ.1824-ல் பதினெட்டாம் லூயி மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த பத்தாம் சார்லெஸ், பத்திரிகை மற்றும் பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தைப் பறித்தார். சர்வ வல்லமை கொண்ட அதிகார மையமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
பொ.ஆ.1789-ல் கொளுத்தப்பட்டுத் தீயின் கோரமான நாக்குகளுக்கு இரையான பிரபுக்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கு ஈட்டுத் தொகை வழங்க, அரசு கஜானாவிலிருந்து ஒரு பில்லியன் ஃப்ராங்க் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பொ.ஆ.1830-ல் போரட்டங்கள் வெடித்தன. பத்தாம் சார்லெஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட ட்யூக் ஆஃப் ஆர்லியன்ஸ் ஃபிலிப்பின் (Duke of Orleans) மகன் லூயி ஃபிலிப் மன்னராக நியமிக்கப்பட்டார்.
பிரிட்டன் புரட்சிக்கு ஆதரவளித்தாலும் ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனியில் தாராளவாதிகளின் ஆதிக்கம் அதிகமிருந்த காரணத்தால், மற்ற ஐரோப்பிய முடியாட்சிகள் இம்முடிவில் தலையிட விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டன. ஃபிரான்ஸில் மன்னராட்சி தொடர்ந்தது. லூயி ஃபிலிப் ஃபிரான்ஸின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட அரசராக, அடுத்த பதினெட்டு ஆண்டுகளுக்கு (1830-1848) ஆட்சி புரிந்தார்.
முடியாட்சியின் எதிர்வினைச் செயல்களின் தூண்டுதலால், வியன்னா காங்கிரஸ் சமாதான உடன்படிக்கை அமைதியற்று ஊசலாடிக்கொண்டிருந்தது. வியன்னா பிரபுக்கள் வரைந்த அறிவியல் சாத்தியமற்ற எல்லைக்கோடுகள், மனஅழுத்தத்தை அதிகரிக்கவே வழிவகுத்தன. எதிராகத் திரண்டவர்கள், அதிகார வர்க்கத்துக்கு மட்டுமின்றி மனித இனத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கினர். பல்வேறு மொழிகள், பல்வேறு இலக்கியங்கள், பல்வேறு சிந்தனைகள், பல்வேறு மதங்கள், இன்னும் குறிப்பாக மத மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், மக்களை நிர்வகிப்பது இயலாத செயலானது.
பல்வேறு மொழிகளும் நம்பிக்கைகளும் நிலவும் சுவிட்சர்லாந்தில் வேண்டுமானால் இது சாத்தியப்படக்கூடும். ஆனாலும் அங்கும் உள்ளூர் சுயாட்சியே உச்சமாக உள்ளது. பல பிரிவுகளைக் கொண்ட மக்கள் வாழும் மேசிடோனியா மாவட்டங்களிலும் கிராமங்களிலும் சிறு தன்னாட்சி அந்தஸ்துடன் பஞ்சாயத்து அமைப்புகள் நிர்வாகத்தைக் கவனித்தன. வியன்னா காங்கிரஸ் பிரபுக்கள் வரைந்த ஐரோப்பிய வரைபடத்தைப் பார்த்தால், உள்ளூர் மக்களின் எரிச்சலைத் தூண்டும் நோக்கத்துடன் திட்டமிட்டதைக் காணலாம்.
பழைய ஸ்பானிஷ் / ஆஸ்திரிய / நெதர்லாந்தில் வாழும் ஃப்ரெஞ்ச் பேசும் கத்தோலிக்க மக்களை, டச் பேசும் புராடெஸ்டண்டுகளுடன் இணைத்து, நெதர்லாந்தில் முடியரசு அமைத்தனர். டச் குடியரசு அழிவுக்கும் இதுவே காரணமானது. வெனிஸ் பழைய குடியரசுடன், மிலன் வரையிலுமான வடக்கு இத்தாலி முழுவதையும் ஜெர்மன் மொழி பேசும் ஆஸ்திரியர்களிடம் கொடுத்தனர். ஃப்ரெஞ்ச் மொழி பேசும் சாவோய் (Savoy) நகரைத் துண்டுகளாகச் சிதறிய இத்தாலியுடன் இணைத்து சாரிடினியா (Sardinia) முடியாட்சியை மீட்டெடுத்தனர். ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் குடியேறிய ஜெர்மன், செக்கோஸ்லோவேகியா, ருமேனியா, இத்தாலி மக்கள், பொ.ஆ.1772-1795 காலத்தில் போலந்து நாட்டை ஆஸ்திரியா கையகப்படுத்தியது. இந்நிகழ்வுகள் அனைத்தும் சிக்கலை மேலும் அதிகப்படுத்தின.
கத்தோலிக்க மற்றும் குடியரசு சிந்தனை கொண்ட போலந்து மக்கள் வாழும் பகுதிகள் கிரேக்க பழமையான ஜார் ஆட்சியோடும் முக்கியமான மாவட்டங்கள் புராடெஸ்டண்ட் ப்ரஷியாவோடும் இணைக்கப்பட்டன. ஒத்துவராத நார்வே மற்றும் ஸ்வீடன் மக்கள் ஒரே மன்னரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டனர். ஜெர்மனி அபாயகரமான கட்டத்தில் தனித்து விடப்பட்டது. ஜெர்மன் கூட்டமைப்பில், பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் இருந்த ப்ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகள் ஏராளமான சிறு சிறு நாடுகளைக் கொண்டிருந்தன. ஜெர்மன் மொழி பேசும் ஹோல்ஸ்டீன் (Holstein) பகுதியை டென்மார்க் மன்னர் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜெர்மன் கூட்டமைப்பில் இடம் பெற்றார். நெதர்லாந்து மன்னராக இருந்தாலும் பலர் ஃப்ரெஞ்ச் பேசியதால், லக்ஸம்பர்க் ஜெர்மன் கூட்டமைப்பில் சேர்ந்தது.
ஜெர்மன் இலக்கிய எண்ணங்களின் அடிப்படையில் ஜெர்மன் மொழி பேசுபவர்கள், இத்தாலி இலக்கிய எண்ணங்களின் அடிப்படையில் இத்தாலி மொழி பேசுபவர்கள், போலந்து இலக்கிய எண்ணங்களின் அடிப்படையில் போலிஷ் மொழி பேசும் மக்கள் இவர்கள் எல்லாம் தத்தமது மொழியில் தமது விஷயங்களை வெளிப்படுத்தியும் செயல்படுத்தியும் வந்தால் மற்றவர்களைவிடவும் மேலானவர்களாவும் உதவும் மனம் கொண்டவராகவும் இருப்பர் என்னும் உண்மை முற்றிலும் மறைக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ஜெர்மனியின் பிரபலமான பாடல் ஒன்றில் ‘ஜெர்மன் மொழி பேசப்படும் இடங்களெல்லாம் ஜெர்மன் தந்தையர்நாடு’ என்ற வரிகள் இடம்பெற்றன.
பொ.ஆ.1830-ல் ஃபிரெஞ்ச் புரட்சிக்கு எதிராகவும் நெதர்லாந்து அரசுடன் டச் இணைந்ததற்கு எதிராகவும் ஃபிரெஞ்ச் மொழி பேசும் பெல்ஜியம் கிளர்ந்து எழுந்தது. இந்தச் சூழல் குடியரசாக மாற அல்லது ஃபிரான்ஸுடன் இணைய வழிவகுக்கும் என அஞ்சி, நிலைமையக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அமைதியை நிலைநிறுத்த சாக்ஸே-கோபர்க்-கோதா (Saxe-Coburg-Gotha) பிரிவைச் சேர்ந்த முதலம் லியோபோல்டை (Leopold I) பெல்ஜியம் மன்னராக நியமித்தனர். பொ.ஆ.1830-ல் இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பயனற்ற போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்த போலந்தில் போராட்டக் கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன.
பொ.ஆ.1825-ல், முதலாம் அலெக்ஸாண்டரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாம் நிக்கோலஸை (Nicholas) வீழ்த்திக் குடியரசு அரசாங்கம் பதவியேற்றது. இருப்பினும் பயங்கர கலவரம் மற்றும் வன்முறை காரணாக குடியரசால் ஓராண்டுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போலிஷ் மொழிக்குத் தடை விதிக்கப்பட்டது. கிரேக்க பழமை திருச்சபைக்குப் பதிலாக ரோமானிய கத்தோலிக்கம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவிக்கப்பட்டது.
பொ.ஆ.1821-ல் துருக்கிக்கு எதிராக கிரேக்கத்தில் கிளர்ச்சி வெடித்தது. ஏனைய ஐரோப்பிய அரசுகள் ஆதரவு அளிக்காமல், வேடிக்கை பார்த்த காரணத்தால், ஆறு ஆண்டுகள் போராடியும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் போராட்டம் மங்கிப் போகவில்லை. நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் கிளர்ச்சியாளர்களும் கிரேக்கர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். நிறைவாகக், கிளர்ச்சியின் தீவிரத்தைக் கண்ட பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ரஷிய நாடுகள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.
பொ.ஆ.1827-ல் நவரீனோ (Navarino) என்ற இடத்தில் நடைபெற்ற கடற்போரில் ஃப்ரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகள் துருக்கியைத் தோற்கடித்தன. ஜார் மன்னர் துருக்கிக்குள் ஊடுருவினார். பொ.ஆ.1829-ல் கையொப்பமான ஏட்ரியானோபிள் (Adrianople) ஒப்பந்ததைத் தொடர்ந்து கிரேக்கம் விடுதலை பெற்றாலும் பண்டைய குடியரசுப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மன் நாட்டு பவேரியா (Bavaria) இளவரசர் ஓட்டோ (Otto) கிரேக்க மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். டான்யூப் (Danube) மாகாணங்கள் மற்றும் செர்பியாவில் (Serbia) கிறிஸ்தவ ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். நாட்டிலிருந்து துருக்கியர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டும்வரை ரத்த ஆறு ஓடிக்கொண்டேயிருந்தது.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.