57. உலோக, பொருளியல் அறிவு வளர்ச்சி
பொ.ஆ.17-18-ம் நூற்றாண்டு முழுவதும் மற்றும் பொ.ஆ.19-ம் நூற்றாண்டு தொடக்கத்தில், ஐரோப்பாவில் மதச் சர்ச்சைகளும் அதிகார மோதல்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அத்தருணம் பொ.ஆ.1648-ல், வெஸ்ட்ஃபேலியா (Westphalia) ஒப்பந்தம் தனது வடிவத்தையும் சாரத்தையும் பொ.ஆ.1815 வியன்னா ஒப்பந்தம் போல் மாற்றிக் கொண்டிருந்தது. நீராவிக் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஐரோப்பாவின் தாக்கம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. ஐரோப்பா மற்றும் ஐரோப்பியமயமான நாடுகளில், அறிவும் உலகம் குறித்த மனித எண்ணங்களும் வளர்ச்சியைக் கண்டன. இந்தக் காலகட்டத்தில், தத்துவ மற்றும் அறிவியல் எண்ணங்களில், பல்கலைக்கழகங்கள் முழுமையான பங்களிப்பை வழங்காமல் ஓரளவே வழங்கின. புரவல ஆதரவினால் கிடைக்கப்பட்ட அறிவு தனிப்பட்ட சுதந்தரமான சிந்தனையாளர்களின் தொடர்புகள் இல்லாத போது, புத்துணர்ச்சியின்றி புதியவற்றுக்குத் தடை போடுபவையாக மரபார்ந்ததாக குறுகியதாகவே இருந்தது.
1662 இல் ‘ராயல் சொசைட்டி’யின் உருவாக்கமும் மற்றும் சர் ஃபிரான்சிஸ் பேக்கனின் கனவை நனவாக்கும் அதன் பணியை ஏற்கனவே பார்த்தோம். பொ.ஆ.18-ம் நூற்றாண்டு முழுவதும் பொருள், இயக்கம், கணிதம் மேம்பாடு, நுண்நோக்கி, தொலைநோக்கி ஆகியவற்றில் கண்ணாடியின் பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், உடற்கூறு அறிவியல் என புதிய கண்டுபிடிப்புகள் வெளிச்சத்துக்கு வந்தன. பாறைகளின் தொல்லுயிர்ப் பதிவுகளுக்குப் (Record of Rocks) புவியியல் அறிவியல் புது விளக்கம் தரும் பெரும் பணி தொடங்கியது.
உலோகங்களின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டைத் தொடர்ந்து தொழிற்துறையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் புதிய எந்திரங்கள் சந்தைக்கு வந்தன. பொ.ஆ.1804-ல் வாட் (Watt) எஞ்சின் பாணியில் போக்குவரத்துக்காக ட்ரெவிதிக் (Trevithick) லோகோமோடிவ் எந்திரத்தைக் கண்டுபிடித்தார். பொ.ஆ.1825-ல் ஸ்டாக்டன் (Stockton) மற்றும் டார்லிங்க்டன் (Darlington) இடையே முதல் ரயில் ஓடியது. பதின்மூன்று டன் எடை கொண்ட ’ராக்கெட்’ (Rocket) ரயில், மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் ஓடும் வகையில் ஸ்டீஃபென்சன் (Stephenson) வடிவமைத்தார். பொ.ஆ.1830-ல் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த சில பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களை ரயில்கள் இணைத்தன.
ரயில்களின் அறிமுகம் தரைவழிப் போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பயண நேரம் கணிசமாகக் குறைந்தது. வில்னா (Vilna) நகரிலிருந்து பாரிஸ் சுமார் 1400 மைல்கள். ரஷ்யப் போரில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின் இந்தத் தூரத்தை நெப்போலியன் 312 மணி நேரத்தில் கடந்தார். அவரது காலத்தில் இருந்த அனைத்துப் போக்குவரத்துச் சாதனனங்களையும் பயன்படுத்தினார். அதிகபட்சம் மணிக்கு 5 மைல்கள் என்ற கணக்கில் பயணிக்க அவரால் முடிந்தது. நெப்போலியன் வேகம் அசாத்தியமானது. வேறு சாதாரணப் பயணி இந்த தூரத்தைக் கடக்க இரு மடங்கு நேரம் எடுத்திருப்பார். பொ.ஆ.1-ம் நூற்றாண்டில் ரோமாபுரி மற்றும் கௌல் (Gaul) நகரங்களுக்கு இடையேயான தூரத்துக்குச் சமமாகக் கூறலாம். ஆனால் ரயில்கள் வந்த பிறகு, இவை அனைத்தும் கடந்த காலக் கதைகளாகிவிட்டன. போக்குவரத்தில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டு முற்றிலும் மாறிப் போனது.
இதே தூரத்தை எட்ட ரயில்கள் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 48 மணி நேரம் மட்டுமே. ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணம் செய்ய முன்பு இருந்த நேரத்தைவிட இப்போது பத்தில் ஒரு பங்குதான். ஆனாலும் ஐரோப்பாவின் எல்லா இடங்களிலும் ரயில் போக்குவரத்து முழுமை அடையவில்லை. பல இடங்களில் சாலைகளில் அப்போது குதிரை பூட்டிய வண்டிகளே ஓடிக் கொண்டிருந்தன. ஆனால், அமெரிக்காவில் ரயில் போக்குவரத்து ஐரோப்பாவை விடவும் வேகமான வளர்ச்சி பெற்றது.
நீராவிப் படகும் நீராவிக் கப்பலும் நதி/கடல் வழிப் போக்குவரத்தை இன்னும் சுலபமாக்கின. பொ.ஆ.1802-ல் ஃபிர்த் ஆஃப் க்ளைட் (Firth of Clyde) கால்வாயில் சார்லோட் டுண்டாஸ் (Charlotte Dundas) என்ற பெயரிலும் 1807இல் ஃபுல்டன் (Fulton) என்பவரின் க்ளெர்மாண்ட் (Clermont) என்ற பெயரிலும் இரு நீராவிக் படகுகள் பிரிட்டிஷ் எஞ்சின்களுடன் நியூயார்க் ஹட்சன் ஆற்றில் மிதந்தன. பொ.ஆ.1819-ல் நியூயார்க் முதல் ஃபிலெடெல்ஃபியா வரை ஃபீனிக்ஸ் (Phoenix) மற்றும் சவானா (Savannah) என்ற பெயர்களில் இரு நீராவிக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டன.
துடுப்புச் சக்கரம் அமைந்த படகுகளே முதலில் தயாரிக்கப்பட்டன. ஆனால் சீற்றம் மிகுந்த கடல்களில் இவை எளிதாக உடைந்ததால் படகையும் உபயோகப்படுத்த முடியவில்லை. பல்வேறு கடுமையான பரிசோதனைகளுக்குப் பிறகு, உடையாத ஸ்க்ரூ (screw) நீராவிக் கப்பல் பயன்பாட்டுக்கு வந்தது. கடல் போக்குவரத்து வேகம் பிடிக்கவே பயண நேரம் கணிசமாகக் குறைந்தது. அட்லாண்டிக் கடலைக் கடக்க முன்பு இரு மாதங்கள் தேவைப்பட்ட நிலையில், பொ.ஆ.1910-ல் ஐந்தே நாள்களில் சாத்தியப்பட்டது. இந்த நாளில், குறிப்பிட்ட நேரத்தில், கப்பல் துறைமுகத்தை வந்தடையும் எனத் திட்டமிடும் அளவுக்கு, நீராவிக் கப்பல்கள் கடல் போக்குவரத்தை விரைவாக்கின.
நிலத்திலும் நீரிலும் நீராவிக் கப்பல்களின் போக்குவரத்து துரிதமடைந்து வரும் தருணம் வோல்டா (Volta), கால்வானி (Galvani) மற்றும் ஃபாரடே (Faraday) ஆகியோரின் பல்வேறு மின்சாரக் கண்டுபிடிப்புகள் மனித இனத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. பொ.ஆ.1835-ல் குறுஞ்செய்தி அனுப்பும் மின்சாரத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டது. பொ.ஆ.1851-ல் இங்கிலாந்துக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையே கடலுக்கு அடியே கம்பி வடம் போடப்பட்டது. தந்தியின் பயன்பாடு உலகம் முழுவதும் பரவலானதைத் தொடர்ந்து, மெதுவாகச் சென்ற செய்திகள், வேகமாகப் பரவின.
நீராவி ரயில் மற்றும் மின் தந்தி ஆகிய இரண்டையும் பொ.ஆ.19-ம் நூற்றாண்டு மத்தியில் அதிரடியான மற்றும் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் எனச் சொல்லலாம். பண்டைய காலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்ப அறிவும் திறனும் அசாதாரண வேகத்தில் உலகெங்கும் விரிவடைந்தன. அன்றாட வாழ்வில் ஸ்டீல், கான்க்ரீட் போன்ற பல்வேறு கட்டமைப்புப் பொருள்களின் பயன்பாடுகள் பெருகியது.
பொ.ஆ.18-ம் நூற்றாண்டு மத்தியில் சுரங்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட இரும்பு உலோகம் கரிக்கட்டைகளை எரித்து உருக்கியும் சம்மட்டியால் அடித்தும் தேவைக்கேற்ற பொருள்களாக வடிவமைக்கப்பட்டன. தொடக்கத்தில் அதிகபட்சம் 2-3 டன்கள் மட்டுமே வெட்டியெடுக்கப்பட்டன. அதே நூற்றாண்டில் கற்கரி (Coke) பயன்பாட்டில் ஊதுலைகள் அறிமுகமாயின. பொ.ஆ.1728-ல் இரும்புத் தகடுகளும் பொ.ஆ.1783-ல் இரும்புக் கழிகளும் கம்பிகளும் பரவலாயின. பொ.ஆ.1838-ல் நீராவிச் சம்மட்டியை நாஸ்மித் (Nasmyth) கண்டுபிடித்தார்.
பண்டைய காலத்தில் உலோகவியல் பயன்பாடு குறைவாக இருந்ததால் நீராவியைப் பயன்படுத்த முடியவில்லை. இரும்புத் தகடுகள், கழிகள், கம்பிகளையும் தயாரிக்க முடியவில்லை. பொ.ஆ.1856-ல் பெஸ்ஸெம்மர் (Bessemer) மற்றும் பொ.ஆ.1864-ல் திறந்த உலை முறையில் எஃகு, இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் உருக்கப்பட்டும் சுத்திகரிக்கப்பட்டும் தேவையான வடிவங்களில் வார்க்கப்பட்டன. தற்போது மின் உலைகள் குறைந்த நேரத்தில் டன் கணக்கில் உலோகங்களை உருக்குகின்றன. இரும்பு, எஃகு உலோகங்களின் பன்முகப் பயன்பாடும் மனித ஆற்றலும் திறனும் பிரமாண்டமாகவும் நவீனத் தொழில்நுட்பத்தோடும் விளங்குகின்றன. பொ.ஆ.19-ம் நூற்றாண்டுக்கு முன்பு, 2000 டன் எடை கொண்ட கப்பல்கள் உலகில் எங்குமே இல்லை. ஆனால், இப்போது 50,000 டன் எடை கொண்ட லைனர் எனப்படும் தொலை தூரப் பிராமாண்டப் பயணக் கப்பல்கள் சர்வசாதாரணமாகிவிட்டன.
பண்டைக் காலங்களில் உலோகங்களை அதன் தன்மைக்கு ஏற்றவாறே பயன்படுத்த இயலும். ஆனால், தற்போது எந்தவொரு உலோகத்தையும் நமது விருப்பங்களுக்கு இணங்க வெட்டி, உருக்கி, வார்த்தெடுத்து கட்டாய மாற்றத்துக்கு உட்படுத்தலாம். இரும்பு, எஃகு ஆகியவற்றுடன், பொ.ஆ.19-ம் நூற்றாண்டுக்கு முன்பு அதிகம் அறியப்படாத, செம்பு, டின் (Tin), நிக்கல், அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களும் பயன்பாட்டுக்கு வந்தன. நம்மிடம் போதிய ஆற்றல் இருந்தும் உலோகவியலில் அதை முழுமையாக உபயோகப்படுத்தவில்லை.
எந்திரவியல் அறிவியலுடன் மின் அறிவியலும் இணையான வளர்ச்சியைப் பெற்றது. பொ.ஆ.19-ம் நூற்றாண்டுகளில்தான் மின் விளக்கு, மின் இழுவிசை வாகனங்கள் உள்ளிட்ட புதுப்புது மின் சாதனங்களும் செம்புக் கம்பி மூலம் மின் ஆற்றலைச் செலுத்தி, எந்திரவியல் இயக்கம் அல்லது ஒளி அல்லது வெப்பமாக மாற்றும் அறிவியலும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தகைய அறிவியலின் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளே இருந்தன. ஆனால் தற்போது ஜெர்மானியர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர்.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இத்தருணத்தில் கல்வியில் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கையில், இலத்தீன் மற்றும் கிரேக்க இலக்கியங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஜெசூட் (Jesuit) எனப்படும் ரோமானிய கத்தோலிக்கத் திருச்சபைப் பள்ளிகள் அதிகாரம் செலுத்தியதால், ஃப்ரெஞ்சுக் கல்வி வளர்ச்சியும் தடைப்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் விஞ்ஞானிகளின் ஆய்வும் பரிசோதனைகளும் பிரிட்டனையும் ஃபிரான்ஸையும் உலகின் வளமும் சக்தியும் மிக்க நாடுகளாக மாற்றினாலும் சம்பந்தப்பட்டநாடுகளின் விஞ்ஞானிகளின் நிலை ஏற்றம் காணவில்லை. விஞ்ஞானிகளின் ஏழ்மையைப் பயன்படுத்திப் பொருளாதாரச் சுரண்டல்களும் நடைபெற்றன. அவர்களின் கண்டுபிடிப்பு உரிமைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி, உலகளவில் சந்தைப்படுத்தி செல்வந்தர்களானவர்களும் உண்டு. தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்தால், உள்ளே ஏராளமான முட்டைகள் இருக்கும் என்றும் அவற்றை விற்று ஒரே நாளில் பணக்காரன் ஆகலாம் என்றும் நம்பிய மூடனைப் போல், நல்ல வேளையாக பிரிட்டனும் ஃபிரான்ஸும் நடந்து கொள்ளவில்லை. புதியவற்றைக் கண்டுபிடிப்பவர்கள், உற்பத்தி செய்பவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் வளம் பெறுவதற்காக இயற்கையே கொடுத்த கொடை என்று கருதினர். எனவே அப்படியாக ஆதாயம் தரும் விஞ்ஞானிகளை ஓர் ஓரமாக உயிருடன் இருந்து வறுமையில் வாடியபடிக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தனர்.
விஞ்ஞானிகள் விஷயத்தில் ஜெர்மானியர்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார்கள். புதிய அறிவியல் வளர்ச்சியை ஊக்குவித்தனர். அறிவு என்பது பயிரைப்போல் உரமிட்டு வளர்க்கவேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். எனவே, ஏனைய நாடுகளை விடவும் விஞ்ஞான ஆய்வுப் பணிகளுக்காக ஜெர்மானியர்கள் அதிக நிதி ஆதாரங்களை ஒதுக்கினர். இதன் காரணமாகப் பொ.ஆ.19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜெர்மனியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு அறிவியல் மாணவரும் கட்டாயம் ஜெர்மன் மொழியைக் கற்க வேண்டிய சூழல் உருவானது.
அனைத்துப் பிரிவுகளிலும் ஜெர்மனி பரவலான முன்னேற்றம் பெற்றாலும் வேதியல் பிரிவில் ஏனைய மேற்கத்திய நாடுகளை விடவும் மகத்தான உச்சத்தை எட்டியது. பொ.ஆ.19-ம் நூற்றாண்டு அறுபதுகள், எழுபதுகளில் தொடங்கிய முன்னேற்றம் எண்பதுகள் தொண்ணூறுகளைத் தாண்டியும் வெற்றி நடைபோட்டது. தொழில்நுட்பத்திலும் தொழிற்துறையிலும் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸைக் காட்டிலும் ஜெர்மனி சீரான மற்றும் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது.
பொ.ஆ.19-ம் நூற்றாண்டின் எண்பதுகளில் புது வகை எஞ்சின் பயன்பாட்டுக்கு வந்தது. நீராவியின் அழுத்த சக்திக்கு மாற்றாக, எரிபொருள் கலவையின் சக்தி, கண்டுபிடிப்புகளின் அத்தியாயத்தில் புதிய கட்டத்தை எட்டியது. எடை குறைந்த அதிகத் திறன் மிக்க எஞ்சின்கள் ஆட்டோமொபைல் துறையில் அறிமுகமாயின. இது பின்னாளில் விமானங்களிலும் விரிவடைந்தது. பொ.ஆ.1897-ல் பறக்கும் எஞ்சினை வாஷிங்க்டன் ஸ்மித்சோனியன் (Smithsonian) நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாங்லே (Langley) கண்டுபிடித்தார்.
பொ.ஆ.1909-ல் மனிதர்கள் பயணம் செய்யத்தக்க விமானங்கள் உபயோகத்துக்கு வந்தன. மோட்டார் வாகனங்களை விடவும் ரயில்கள் தரைவழிப் பயண நேரத்தைக் குறைத்தன. பாய்மரக் கப்பல்களை விடவும் நீராவிக் கப்பல்கள் கடல்வழிப் பயண நேரத்தைக் குறைத்தன. இவை எல்லாவற்றை விடவும் விமானங்கள் வான் வழியே உலகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்லும் நேரத்தைப் பன்மடங்கு குறைந்தன. பொ.ஆ.18-ம் நூற்றாண்டில் லண்டன் – எடின்பரோ பயண நேரம் 8 நாள்கள். பொ.ஆ.1918-ல் பிரிட்டிஷ் விமானப் போக்குவரத்து ஆணையம் பூமியின் சரிபாதி சுற்றளவுத் தொலைவை அதாவது இங்கிலாந்து லண்டன் – ஆஸ்திரேலியா மெல்பர்ன் தூரத்தை, இதே 8 நாள்களில் இன்னும் சில ஆண்டுகளில் கடக்கலாம் என அறிவித்தது.
விவசாய அறிவியலில், குறிப்பாக விவசாய வேதியலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பொ.ஆ.17-ம் நூற்றாண்டில் அதே நிலப் பரப்பளவில் கிடைத்த பயிர் விளைச்சலை விடவும் பொ.ஆ.19-ம் நூற்றாண்டில் நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகம் கிடைக்கும் அளவுக்கு மண் வளத்தை மேம்படுத்தக் கற்றுக் கொண்டனர். மருத்துவ அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாகச், சராசரி மனித ஆயுள் அதிகரித்தது. நோயில் வீழ்ந்து நாள் கணக்கில் வாழ்க்கை வீணாவதும் குறைந்தது.
எந்திரவியல் புரட்சி, மனித வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மனித விவகாரங்களுக்கான புதிய பிரமாண்டப் பொருள் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தது. சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரிவுகளில் பெரும் மறு சீரமைப்புகள் தேவைப்பட்டன. ஆனால், இந்த மறுசீரமைப்புகள் எந்திரவியல் புரட்சியின் துணை விளைவுகளாகவே இருந்தன. அவை இன்றுவரை இன்னும் தொடக்க நிலையிலேயேதான் உள்ளன.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.