58. தொழில் புரட்சி
விவசாயம் அல்லது உலோகவியல் கண்டுபிடிப்புகளைப் போன்று, அமைப்பு ரீதியான அறிவியல் வளர்ச்சி காரணமாக மனித அனுபவத்தில் நிகழ்ந்த முற்றிலும் புதிய அம்சத்தையே ‘எந்திரவியல் புரட்சி’ என்று குறிப்பிட்டிருக்கிறோம். இதற்கும் வரலாற்றில் முன்பே நடந்தவற்றின் நீட்சியாக சமூக மற்றும் நிதி சார்ந்தவற்றின் வளர்ச்சியாக உருவான ‘தொழில் புரட்சி’க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பல்வேறு வரலாற்று ஆய்வுகளில் இந்த இரண்டையும் குழப்பிக் கொள்வது வழக்கமாக இருக்கிறது. இவ்விரண்டும் இணைகோடுகளாக வளர்ச்சியையும் மேம்பாட்டையும் பெற்றன. ஒன்றின் மீது மற்றொன்று தொடர்ந்து எதிர்வினையாற்றி வந்தாலும் இவற்றின் அடிப்படையும் வேரும் சாரமும் வெவ்வேறாகும்.
நிலக்கரி, நீராவி, எந்திரங்கள் இல்லாவிட்டால் ஒருவேளை வேறுவகையான தொழில் புரட்சி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அது பிந்திய ரோமானியக் குடியரசின் சமூக மற்றும் நிதி வளர்ச்சியை ஒட்டியே அமைந்திருக்கும். தொழிற்சாலை முறைகூட மின்சாரம் மற்றும் எந்திரங்களின் கண்டுபிடிப்புக்கு முன்பே அமலுக்கு வந்துவிட்டது. தொழிற்சாலைகள் எந்திரத்தின் காரணமாக அன்றி, ‘வேலைப் பிரிவின்’ காரணமாக உருவானவையே.
அட்டைப் பெட்டிகள், அறைக்கலன்கள், வண்ண வரைபடங்கள், புத்தக விளக்கப்படங்கள் ஆகியவற்றை ஊழியர்கள் தயாரித்தனர். அகஸ்டஸ் சீசர் காலத்திலேயே ரோபாபுரியில் தொழிற்சாலைகள் இருந்தன. புதிய நூல்களைப் படியெடுக்கும் ஊழியர்கள் எழுதுவதற்காகப் புத்தக விற்பனையாளர்கள் வாய்மொழியாகவே விவரங்களைக் கூறினர். பொ.ஆ.17-ம் நூற்றாண்டுக்கு முன்பே, வருமானத்துக்காக ஏழைகளைக் கூட்டமாகத் தொழிற்சாலைகளில் பணியமர்த்துவது பிரிட்டனில் நடைமுறையில் இருந்துள்ளது. இது சமூக வளர்ச்சியே தவிர, எந்திரவியல் வளர்ச்சி அல்ல.
பொது ஆண்டுக்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் ரோமானிய சாம்ராஜ்யம் எந்த நிலையில் இருந்ததோ, அதே பாதையில், பொ.ஆ.18-ம் நூற்றாண்டு மத்தியப் பகுதிவரை மேற்கு ஐரோப்பிய சமூக மற்றும் பொருளாதார வரலாறு சென்று கொண்டிருந்தது. ஆனால், ஐரோப்பிய அரசியல் பிளவுகள், அரசியல் பிடிமானங்கள், முடியாட்சிக்கு எதிரான பொது மக்களின் மறுபரிசீலனை, எந்திரவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை புதிய இலக்குகளுக்கு மாற்றின. புதிய ஐரோப்பிய உலகில், மனித ஒற்றுமை மேலும் வலுப்பெற்றது. அடிமைத்தன என்ணத்திலிருந்து விடுபட்டு, எந்திர ஆற்றல் மற்றும் எந்திரத்தின் மீது கவனம் திரும்பியது.
எந்திரவியல் புரட்சி என்பது மனித அனுபவத்தில் புதிய அம்சம். சமூகம் அரசியல், பொருளாதார மற்றும் தொழிற்துறை விளைவுகளைப் பற்றிய கவலையின்றி இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், தொழிற் புரட்சியோ, ஏனைய மனித விவகாரங்களைப் போலவே, எந்திரவியல் புரட்சியால் ஏற்படும் தொடர் ஏற்ற இறக்கங்களினால், ஆழமான மாற்றங்களுக்கு உள்ளானது. ஒருபுறம் செல்வத்தைக் குவிக்கும் பணக்காரர்களுக்கும் அழிந்து கொண்டிருக்கும் சிறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் இடையேயான ஏற்றத் தாழ்வுகள். மறுபக்கம் பொ.ஆ.18-19-ம் நூற்றாண்டுகளில் மூலதனக் குவிப்பு எந்திரவியல் புரட்சி ஆகியவற்றால் வந்த விளைவுகள்.
பண்டைய உலகம் மனித ஆற்றலில் இயங்கிக் கொண்டிருந்தது. எடையைத் தூக்கவும் பாறையை உடைக்கவும் நிலத்தை உழவும் மனிதன் உழைத்தார். எருதுகளும் குதிரைகளும் மனித ஆற்றலுக்கு உதவின. நீராவிக் கப்பல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, கப்பலைச் செலுத்த ஏராளமான அடிமைகள் வியர்வை சிந்தத் துடுப்பு போட்டனர். பண்டைய நாகரிகங்களில், கால்வாய் வெட்டவும் அணைகள் கட்டவும் ஏரி ஆறு குளக்கரைகள் அமைக்கவும் ஏராளமான மனிதர்களின் உடலுழைப்பு தேவைப்பட்டது.
பொ.ஆ.19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய சூழல் உருவானது. பணியை முடிக்க மனித ஆற்றல் தேவைப்பட்டாலும் அவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. உடலுழைப்பு மூலம் பல மனிதர்கள் பல நாள்கள் வியர்வை சிந்தி செய்த வேலையை, எந்திரங்கள் விரைவாகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்து முடித்தன. சில நுணுக்கமான பணிகளுக்கு மட்டும் மனிதன் தேவைப்பட்டார். மனிதன் மனிதனாக மட்டுமே பார்க்கப்பட்டார். மனித மூளை, சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமின்றி, அடிமைகளாக மனித இனம் வாழ்ந்த காலம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது.
உலோகங்களின் புதிய வடிவங்கள் பண்டைய விவசாய முறையை மாற்றியமைத்தன. நாற்று நடவும் விதைக்கவும் உழவுக்கும் அறுவடைக்கும் எந்திரங்கள் வந்துவிட்டன. பண்டைய ரோமானிய நாகரிகம் மனித இனத்தை அடிமைப்படுத்தி உடலுழைப்பைக் கசக்கிப் பிழிந்தது. ஆனால் நவீன நாகரிகமோ எந்திரங்கள் மூலம் மனித மூளையை மட்டும் பயன்படுத்தியது. இதன் காரணமாக எந்திரங்களுக்கும் மின் ஆற்றலுக்குமான செலவுகள் குறைய, மனித உழைப்புக்கான விலை/முக்கியத்துவம் அதிகரித்தது.
மனித விவகாரங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டன. பண்டைய நாகரிக ஆட்சியாளர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிலைநிறுத்த அடிமைகளைப் பணியமர்த்தினர். ஆனால், பொ.ஆ.19-ம் நூற்றாண்டு தொடங்கி அடிமைத்தனம் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்னும் சிந்தனை பரவலானது. தொழிற்துறை திறன் மேம்பட சாதாரண மனிதனுக்குக் கல்வியறிவைப் புகட்டவேண்டும். தொடக்கத்தில் ஆசியாவில் இஸ்லாமும் ஐரோப்பாவில் கிறிஸ்தவமும் சாதாரண மனிதனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தால் மட்டுமே தங்கள் மதத்தைப் பரப்ப முடியுமென உணர்ந்திருந்தன.
கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தில் பல பிரிவுகள் காரணமாக பேதங்கள் இருந்தாலும் மதந்தைப் பரப்புவதில் இணைந்தே இருந்தன. பொ.ஆ.19-ம் நூற்றாண்டு முப்பதுகள் மற்றும் நாற்பதுகளில் கிறிஸ்தவத்தைப் பரப்ப இங்கிலாந்தில், கத்தோலிக்கத் திருச்சபைத் தேசியப் பள்ளிகளும் புராடெஸ்டெண்ட் பிரிட்டிஷ் பள்ளிகளும் பெருகின. அதே நூற்றாண்டு இரண்டாம் பாதியில் மேற்கு ஐரோப்பா முழுவதும் கல்வியோடு மதத்தையும் பரப்பப் பள்ளிச்சாலைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டன. கல்வியறிவு வளர்ச்சிக்கு மதங்களைத் தாண்டி, தொழிற்புரட்சியும் முக்கிய காரணமாக விளங்கியது.
ரோமானியக் குடியரசின் பொருளாதாரப் புரட்சியை, ரோமாபுரியின் சாதாரண மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளவும் இல்லை; முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. நாம் இப்போது தெளிவாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்வதுபோல், ரோமானியர்கள் தாங்கள் வாழும் காலத்தில், கண் முன் நடைபெற்ற மாற்றங்களை தெரிந்து கொள்ளவில்லை. ஆனால், பொ.ஆ.19-ம் நூற்றாண்டில் நடைபெற்ற தொழிற்புரட்சியைப் பொது மக்கள் முழுமையாகக் கண்டனர். அவர்களே நேரடியாகப் பாதிக்கப்பட்டனர் என்பதை விடவும் கல்வியறிவு பெற்ற காரணத்தால், அது குறித்துப் படித்தும் எழுதியும் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும் வழிவகுத்தது. முன்பு இது சாத்தியப்படவில்லை.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.