Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #38

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #38

59. நவீன அறிவியல் மற்றும் சமூக எண்ணங்களின் வளர்ச்சி

பண்டைய நாகரிகங்களின் கல்வி நிலையங்களும் பழக்கங்களும் அரசியல் எண்ணங்களும் யாரும் வடிவமைக்காமலும் யாரும் முன்னுணராமலும் ஒவ்வொரு காலத்தையும் கடந்து, மெதுவாக வளர்ந்தது. பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டில்தான் மனித இனம் தங்களுக்கு இடையேனான உறவுகள் குறித்துச் சிந்திக்கத் தொடங்கியது. அதுவரை நிலவிய நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிக் கேள்வி கேட்டவும் மாற்றி அமைக்கவும் விலக்கவும் முனைந்தனர்.

கிரேக்கம் அலெக்ஸாண்ட்ரியாவில் நிகழ்ந்த அறிவுசார் எழுச்சி குறித்தும் அடிமைகள், மத சகிப்பின்மை, முடியாட்சி உள்ளிட்ட அனைத்தும் சரிந்து வீழ்ந்ததையும் ஏற்கெனவே பார்த்தோம். ஐரோப்பியத் தெளிவின்மையை, இந்த அச்சமற்ற சிந்தனையால் பொ.ஆ.15-16-ம் நூற்றாண்டுகள் வரை உடைக்க முடியவில்லை. தொடர்ந்து, ஐரோப்பாவில் நிகழ்ந்த அரேபிய மற்றும் மங்கோலிய ஊடுருவல்களையும் பார்த்தோம்.

பின்னாளில், பொருள்சார் அறிவு, பொருள்சார் ஆற்றல் மற்றும் பொருள்சார் சாதனைகளைக் கண்டோம். தனிநபர், சமூகம் உளவியல், கல்வி, பொருளாதாரம் தொடர்பான மனித உறவுகள் தொடர்பான அறிவுத்துறைகள் எல்லாம் மிகவும் நுட்பமானவை மற்றும் சிக்கலானவை. ஆனால், பிரிக்க முடியாத வகையில் தங்களுக்குள் உணர்வு ரீதியாகப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வளர்ச்சி கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே மெதுவாகவே வளர்ந்தன. நட்சத்திரங்கள் மற்றும் மூலக்கூறுகள் தொடர்பான மாறுபட்ட கருத்துகளுக்கு, மனிதர்கள் அதிக சுவாரஸ்யமின்றி செவி மடுப்பர். ஆனால், நமது வாழ்க்கை வழிமுறைகள் குறித்த சிந்தனைகள், நம் ஒவ்வொருவர் மீதும் விளைவை ஏற்படுத்திப் பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவார்கள்.

கிரேக்க சிந்தனைவாதிகளில் முதலில் பிளேட்டோவும் பின்னர் அரிஸ்டாட்டிலும் தோன்றினர். ஐரோப்பாவில் அரசியல் வினாக்கள், புதிய வடிவங்களில், கற்பனைக் கதைகளாக, பிளேட்டோவின் குடியரசு மற்றும் சட்டங்கள் தொடர்பாக எழுந்தன. பிளேட்டோவின் படைப்பைத் தழுவி சர் தாமஸ் மூர் (Thomas More) எழுதிய ‘உடோபியா’ (Utopia) மற்றும் நியாபோலிடன் கேம்பெனெல்லா (Neapolitan Campanella) எழுதிய ‘சிட்டி ஆஃப் தி சன்’ (City of the Sun) ஆகிய கற்பனைக் கதைகளை உதாரணம் கூறலாம்.

பொ.ஆ.17-ம் நூற்றாண்டு இறுதியில் அரசியல் மற்றும் சமூக அறிவியல் இலக்கியம் கணிசமான வளர்ச்சியைப் பெற்றது. இதில் முக்கியமாகக் கருதப்படுபவர், வேதியலிலும் மருத்துவத்திலும் கவனம் செலுத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்ட் அறிஞர் ஜான் லாக் (John Locke). அரசு, சகிப்புத்தன்மை, கல்வி ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் சமூக மறுகட்டமைப்பு தொடர்பானவை.

இவருக்குப் பின் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாண்டெக்ஸ்க்யூ (Montesquieu) (பொ.ஆ.1689-1755) என்பவர் சமூகம் அரசியல், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளைத் தீவிரமாக ஆய்வு செய்தார். ஃபிரான்ஸ் முடியாட்சியின் அதிகாரத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார். மனித சமூகத்தைக் கட்டமைப்பதற்கு அதுவரை தடையாக இருந்த பல தவறான எண்ணங்களைப் போக்கி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பொ.ஆ.18-ம் நூற்றாண்டு மத்தியிலும் இறுதியிலும் இவரைப் பின்பற்றிய தலைமுறை, அவர் ஏற்படுத்திய தார்மிக மற்றும் அறிவுசார் மாற்றங்கள் குறித்தத் தங்களது யூகங்களைத் துணிவுடன் தெரிவித்தனர். ஜெசூட் பள்ளிகளின் அறிவார்ந்த எழுத்தாளர்களான ‘என்சைக்ளோபீடிஸ்ட்ஸ்’ (Encyclopaedists) பொ.ஆ.1766-ல் புதிய உலகுக்கான திட்டத்தை அறிவித்தனர். இவர்களுடன் பொருளாதார வல்லுனர்கள் அல்லது இயல்புவாதிகள் (Physiocrats), உணவு மற்றும் பொருள்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் பற்றிய தங்களது தைரியமான மற்றும் கசப்பான கருத்துக்களை முன்வைத்தனர். ‘கோட் டி லா நேச்சர்’ (Code de la nature) என்னும் நூலின் ஆசிரியரான மோர்லே (Morelley) தனியார் சொத்துகளைப் பறிமுதல் செய்து அரசுடையாக்கி, சமூகத்துக்கான கம்யூனிஸ்ட் அமைப்பை முன்மொழிந்தார். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பொ.ஆ.19-ம் நூற்றாண்டு சிந்தனையாளர்களான சோலிஷியலிஸ்ட்களுக்கு இவரே முன்னோடி.

சோஷியலிசம் (Socialism) என்றால் என்ன? இதற்கு நூற்றுக்கணக்கான விளக்கங்கள் உண்டு. இதைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கான சோஷியலிஸ்ட்களும் உள்ளனர். அடிப்படையில் சோஷியலிசம் என்பது, பொது நன்மையின் கோணத்தில் சொத்து பற்றிய கருத்து விமர்சனம். இது பற்றி வரும் அத்யாயங்களில் சுருக்கமாகப் பார்ப்போம். சோஷியலிசம் மற்றும் சர்வ தேசியம் ஆகிய இரு முக்கிய எண்ணங்களின் அடிப்படையில்தான், இன்றைய நமது பெரும்பான்மை அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது.

சொத்து குறித்த யோசனை இனங்களின் போர்க்குண உள்ளுணர்வுகளிலிருந்து எழுகிறது. ஆண் பெண் உள்ளிட்ட மனித இனம் தோன்றுவதற்கு முன் குரங்கு இனமே அனைத்துக்குமான உரிமையாளரக இருந்தது. ஆதிகாலச் சொத்துக்குத்தான் விலங்குகள் போரிடும். நாய் அதன் எலும்புக்கும் பெண் புலி அதன் குகைக்கும் உரிமை கொண்டாடிப் போராடும். சமூகவியலில் ‘ஆதிகால கம்யூன் வாழ்க்கை’ என்ற சொல்லைவிடவும் வேறெந்த முட்டாள்தனமான வெளிப்பாட்டையும் சிந்திக்க இயலாது.

பண்டைய பேலியோலித்திக் காலத்துக் குல மூப்பர் தனது மனைவிகள், பெண்கள், கருவிகள், கண்ணுக்குப் புலப்பட்ட உலகம் (நிலம்) ஆகியவற்றின் மீது சொத்துரிமை கொண்டாடினார். கண்ணுக்குத் தெரிந்த நிலத்தில் வேறொரு மனிதன் திரிவதைப் பார்த்தால் எதிர்ப்பார். முடிந்தால் அவனைக் கொன்றுவிடுவார். அட்கின்ஸன் (Atkinson) ப்ரைமல் லா (Primal Law) என்னும் தனது நூலில் இதை விளக்குகிறார். காலப்போக்கில் பிற இளைய தலைமுறை மீது இந்த மூப்பருக்கு உருவான சகிப்புத்தன்மை, அனுசரித்துச் செல்லும் குணம் இவற்றின் விளைவாகவும் அடுத்தவர் மனைவி, கருவிகள், அணிகலன்கள் மீது உரிமை கொண்டாடுதல், ஒருவர் சொத்தின் மீது மற்றொருவர் பரஸ்பரம் சமரசம் செய்து கொள்ளுதல் இவற்றின் மூலமும் மனித சமூகம் வளர்ந்தது.

இது கண்ணுக்குத் தெரிந்த நிலத்தை விட்டு, இன்னொரு இனத்தை விரட்டியடிக்க, ஆண்கள் மீது திணிக்கப்பட்ட உள்ளுணர்வுடன் கூடிய சமரசம். மலைகள், காடுகள், ஓடைகள் ஆகியவை, உன்னுடைய அல்லது என்னுடைய இடங்களாக இல்லை எனில், அவை நம்முடைய இடமாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் அது தன்னுடைய இடமாக இருக்க வேண்டுமென விரும்பலாம் ஆனால் சாத்தியப்படாது. மற்றவர்கள் நம்மைக் கொன்றுவிடுவார்கள். எனவே சமூகம் என்பது, ஆரம்பத்திலிருந்தே உரிமையைக் குறைத்துக் கொள்வதுதான். இன்றைய நாகரிக உலகில் இருப்பதை விடவும் காட்டுமிராண்டி மற்றும் ஆதிகாலத்தில் உரிமை இன்னும் தீவிரமாகவே நிலவியது. இது தர்க்க அல்லது பகுத்தறிவைவிட, உள்ளுணர்வில் ஆழமாக வேரூன்றி உள்ளது.

இயற்கைக் காட்டுமிராண்டிதனம் நிறைந்த இன்றைய மனிதனுக்கு, உரிமையில் எந்த வரையறையும் இல்லை. எதற்காக வேண்டுமானாலும் சண்டை போடலாம்; எதை வேண்டுமானாலும் உரிமை கோரலாம். பெண்கள், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், மிருகங்கள், காட்டின் திறந்த புல்வெளி, கற்குழி எனச் சொல்லிக் கொண்டே போகலாம். சமூகம் வளர வளர உட்சண்டைகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன. மனிதன் உரிமைகளைப் பெறுவதற்காக்க் கடினமான மற்றும் ஆயத்த முறைகளை உருவாக்கிக் கொண்டார்.

மனிதன் எதை முதலில் தயாரித்தானோ, பறித்தானோ, உரிமை கோரினானோ, அதைச் சொந்தம் கொண்டாடினார். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத போது, கடன் பெற்றவர், கடன் கொடுத்தவருக்கு அடிமையானார். நிலத்தை அபகரித்துக் கொண்டவர், வேறு யாரேனும் அதைப் பயன்படுத்த விரும்பினால், அதற்காகப் பணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தொடங்கிய மனிதனின் வாழ்க்கை, அமைப்பு ரீதியாக மாறுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அனைவருக்கும் சொந்தமான, உரிமையான நிலத்தில் பிறந்த மனிதர், தானே இன்னொருவர்க்குச் சொந்தமாகவும் உரிமைப் பொருளாகவும் மாறிப் போனார்.

பண்டைய நாகரிகங்களின் சமூகப் போராட்டங்கள்பற்றி அதிகம் தெரியவில்லை. வரலாற்று ரீதியாக ரோமானியக் குடியரசில் ஒரு பிரிவினரிடம் கடன் என்பது, பொது அசௌகரியம் என்றும் அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் சிந்தனை எழுந்தது. மேலும் நிலத்தின் வரம்பற்ற உரிமையும் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று கூறினர். பாபிலோனியாவில் அடிமைகளின் சொத்துரிமைகள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டன.

நிறைவாக, நசரேத்தில் இயேசுநாதர் தனது போதனைகளில் சொத்துரிமை கோருபவர்களைக் கடுமையாகச் சாடினார். ‘ஊசியின் காது துவாரம் வழியாக ஒட்டகம் நுழைந்தாலும் நுழையக்கூடும் ஆனால் ஏராளமான சொத்துக்களைக் குவித்துள்ள பணக்காரர்களால் தேவனின் பரலோக சாம்ராஜ்யத்துக்குள் நுழையவே நுழைய முடியாது’ என்றார். செல்வம் மற்றும் சொத்துகளைக் குவிக்கும் வசதிபடைத்தோர் மீதான விமர்சனங்கள், கடந்த இருபத்து ஐந்து அல்லது முப்பது நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. நசரேத் இயேசுநாதர் தோன்றி பத்தொன்பது நூற்றாண்டுகள் கழிந்த நிலையில், மனிதன் சொத்து சேர்க்கக் கூடாது என்னும் கிறிஸ்தவ போதனை உலகெங்கும் வற்புறுத்தப்பட்டது. ‘ஒரு மனிதன் தனக்குச் சொந்தமானதை விருப்பம்போல் செய்யலாம்’ என்னும் எண்ணமும் மற்ற வகையான சொத்துக்கள் தொடர்பாகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

ஆனால், பொ.ஆ.18-ம் நூற்றாண்டு இறுதி வரை, இந்த உலகம் இந்த விஷயத்தில் இன்னும் விசாரணை நிலையிலேயே இருந்தது. நடவடிக்கை எடுக்கும் வகையில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. பேராசை பிடித்த மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் சுரண்டல்களிலிருந்து, சொத்துகளைப் பாதுகாப்பதே அதன் அடிப்படைத் தூண்டுல்களுள் ஒன்றாக இருந்தது. ஃபிரெஞ்சுப் புரட்சி தோன்றியதே பெரும்பாலும் தனியார் சொத்துகளை வரி விதிப்பிலிருந்து பாதுகாக்கத்தான். ஆனால், புரட்சியின் சமத்துவச் சூத்திரங்கள், எந்தச் சொத்துகளைப் பாதுகாக்க விரும்பியதோ அவற்றையே விமர்சனத்துக்கு உள்ளாக்கின. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி ஏராளமான மக்கள் வாடுகையில், மக்கள் அனைவரும் எவ்வாறு சுதந்திரமாகவும் சமமாகவும் இருக்க முடியும்? கடுமையாக உழைக்காவிட்டால் எந்த முதலாளி இவர்களுக்கு உணவளிப்பான்? இருக்க இடம் தருவான்? ஏழைகள் புகார் எழுப்பினர்.

இந்தப் புதிருக்கு ஒரு முக்கிய அரசியல் கட்சி ‘பகிர்ந்து கொள்ளுதல்’ என விடை அளித்தது. சொத்துகக்ளைப் பொதுமைப்படுத்துவதைத் தீவிரமாக்க முனைந்தது. இதே இலக்கை நோக்கி, ஆனால் மாற்றுப் பாதையில், தனியார் சொத்துக்களை முற்றிலுமாக ‘ஒழிக்க’ வேண்டுமென ஆதிகால சோஷியலிஸ்ட்கள் அதாவது ‘கம்யூனிஸ்ட்கள்’ விரும்பினர். அனைத்துச் சொத்துக்களும் அரசாங்கத்துக்கே சொந்தம் என்பதே இவர்களது கொள்கை.

விடுதலை மற்றும் மகிழ்ச்சி ஆகிய இலக்குகளை நோக்கிப் பலவேறு மக்கள் பயணிப்பதுடன், ஒருபுறம் சொத்துரிமையை முடிந்தவரை முழுமையாக்க வேண்டுமென்றும் மறுபுறம் அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் முன்மொழிவது முரணாக உள்ளது. ஆனால், ஒரு வகையில் அது உண்மையும் கூட. இந்த முரணுக்கான குறிப்பு, உரிமை என்னும் ஒற்றைப் பொருளல்ல, பல்வேறு பொருள்களின் பெருந்திரளே.

பொ.ஆ.19-ம் நூற்றாண்டு வளர்ச்சியடைந்தபோதுதான், சொத்து என்பது ஒரு எளிய விஷயம் அல்ல; மாறாக வெவ்வேறு மதிப்புகள் மற்றும் விளைவுகள், உரிமைகள் என்றும் பெரிய சிக்கல் என்பதையும் மனிதர்கள் உணரத் தொடங்கினர். ஒருவரின் உடல், கருவிகள், ஆடைகள் போன்ற பல விஷயங்கள் மனிதனின் தனிப்பட்ட சொத்து. ரயில்வே, இயந்திரங்கள், வீடுகள், பயிரிடப்பட்ட தோட்டங்கள், உல்லாசப் படகுகள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை எந்த வரம்புகளின் கீழ் தனியார் உரிமையின் கீழ் வரலாம் அல்லது எந்த வரம்புகளின் கீழ் கூட்டு நலன் கருதி அரசால் நிர்வகிக்கப்பட்டுப் பொதுக்களத்தில் வரலாம் என்பதை வரையறுக்க வேண்டும்.

நிலைத் தன்மைக்கும் திறமையான நிர்வாகத்துக்கும் நடைமுறையில் மேற்கண்ட கேள்விகள் அரசியல் பிரிவில் வரும். சமூக உளவியல் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி, கல்வி அறிவியல் விசாரணைகளுடன் தொடர்பு கொள்ளும். சொத்து குறித்த விமர்சனம் அறிவியல் என்பதை விடவும் விரிவான மற்றும் உணர்ச்சிகரமான எழுச்சிமிகு நிலையே. ஒரு பக்கம் தனிநபர்கள் தற்போது நாம் அனுபவிக்கும் விடுதலையைப் பாதுகாத்து விரிவுபடுத்துவர். மறுபக்கம் சோஷியலிஸ்ட்கள் நமது உடைமைகளைப் பல திசைகளிலிருந்து திரட்டி, உரிமைகளைத் தடுக்க முனைவார்கள்.

அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக, எந்தவொரு வரி விதிப்பையையும் அரிதாகச் சகித்துக் கொள்ளும் தனிமனிதனுக்கும் எந்த உடைமையையும் மறுக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே பல்வேறு படி நிலை மாற்றங்களை நடைமுறையில் காண்பர். இன்றைய சாதாரண சோஷியலிஸ்ட் ‘கூட்டுப் பண்ணைவாதி’ என அழைக்கப்படுகிறார். கணிசமான அளவுக்குத் தனியார் சொத்தை அனுமதித்தாலும் கல்வி, போக்குவரத்து, சுரங்கம் நில உரிமை, பிரதான உணவுகளின் உற்பத்தி ஆகியவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பார்.

இப்போதெல்லாம் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, திட்டமிடப்பட்ட, மிதவாத சோஷியலிசத்தைக் நோக்கி மனிதர்கள் ஒன்றிணைவதுபோல் தெரிகிறது. கல்வியறிவில்லாத மனிதன் பெரு நிறுவனங்களில் எளிதில் ஒத்துழைக்கவோ வெற்றி பெறவோ மாட்டான் என்பதும் தெளிவாக உணரப்படுகிறது. மிகவும் சிக்கலான கட்டத்தை நோக்கிய ஒவ்வொரு அடியும் தனியார் நிறுவனத்திடமிருந்து அரசு கையகப்படுத்தும் ஒவ்வொரு செயல்பாடும் அவற்றுக்கேற்ப இணையான கல்வி மேம்பாட்டையும் முறையான விமர்சனத்தையும் கட்டுப்பாட்டு அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. சமகால அரசின் ஊடக மற்றும் அரசியல் வழிமுறைகள், கூட்டு நடவடிக்கைகளின் எந்தவொரு பெரிய விரிவாக்கத்துக்கும் ஒத்து வராத அளவுக்கு ஒழுங்கற்றவை.

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இன்னும் குறிப்பாக சுயநல முதலாளிக்கும் அடிபணிய மறுக்கும் தொழிலாளிக்கும் இடையேயான அழுத்தங்கள், மார்க்ஸ் என்னும் பெயரோடு தொடர்புடைய கம்யூனிசத்தின் கடுமையான வடிவத்துடன் உலகளாவிய பரவலுக்கு வழிவகுத்தது. மனித மனங்கள், பொருளாதாரத் தேவைகளின் வரையறைகளுக்கு உட்பட்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மார்க்ஸ் தனது கொள்கைகளை வகுத்துக் கொண்டார். இன்றைய நாகரிகத்தில் வெற்றி முகத்தில் இருக்கும் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே, நலன்களின் முரண்பாடு நிலவுகிறது என்றும் கூறினார்.

எந்திரவியல் புரட்சியால் ஏற்பட்ட கல்வி மேம்பாடு காரணமாகப் பெரும்பான்மைத் தொழிலாளி வர்க்கம் மேலும் மேலும் வர்க்க உணர்வுடன், சிறுபான்மை முதலாளி வர்க்கத்துக்கு விரோதமாக மாறும். ஏதோவொரு வகையில் வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள், அதிகாரத்தைக் கைப்பற்றிப் புதிய சமூக அரசை உருவாக்குவார்கள் என தீர்க்க தரிசனத்துடன் கூறினார். விரோதம் கிளர்ச்சி, சாத்தியமான புரட்சி ஆகியவை புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால், இவை புதிய சமூக அரசை உருவாக்காது; மாறாகச், சமூக அழிவையே உருவாக்கும். உதாரணத்துக்கு, ரஷியாவின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மார்க்ஸிசம் ஆக்கப்பூர்வமற்றதாக நிரூபணமானதைப் பின் வரும் அத்யாயங்களில் பார்ப்போம்.

தேசிய விரோதங்களை, மார்க்ஸ் வர்க்க விரோதங்களால் மாற்ற முயன்றார். முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பை அடுத்தடுத்து மார்க்சிஸம் உருவாக்கியது. ஆனால் நவீன தனிநபர் சிந்தனையின் தொடக்கம் மூலமாகவும் பன்னாட்டு யோசனைகளை எட்ட முடியும். பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித்தின் காலம் தொடங்கி, உலகளாவிய செழுமைக்கு, பூமி தொடர்பான கட்டுப்பாடற்ற வர்த்தகத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு, அதிகரித்து வருகிறது. அரசின் மீதான தனது விரோதப் போக்கைக் கொண்ட தனி மனிதன், சுங்க-காப்பு வரிகள் மற்றும் எல்லைகளுக்கும் விரோதமானவர். தேசிய எல்லைகள் நியாயப்படுத்தும் சுதந்திரமான செயல் மற்றும் நகர்வுகள் மீதான கட்டுப்பாட்டுகளுக்கும் எதிரானவர்.

மார்க்சிஸ்ட்களின் சோஷியலிசத்தைப் போன்று, வர்க்கப் போரும் விக்டோரிய காலத்துப் பிரிட்டிஷ் வணிகர்களின் தனி மனித சுதந்திர வர்த்தகத் தத்துவமும் உணர்விலும் பொருளிலும் மாறுபட்டு நிற்கின்றன. தற்போதுள்ள எந்தவொரு நாட்டின் எல்லைகள் மற்றும் வரம்புகளுக்கு வெளியே, மனித விவகாரங்களின் உலகளாவிய தீர்மானங்களில், அதே வேறுபாடுகள் நிலவுகின்றன. இருப்பினும் வேறு வேறான இவ்விரு சிந்தனைகளைப் பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளது. கோட்பாட்டுத் தர்க்கத்தை, யதார்த்தத் தர்க்கம் வெற்றி கொள்கிறது.

தொடக்கப் புள்ளிகள் பரவலாக வேறுபட்டாலும் தனிமனிதக் கோட்பாடும் சோசலிசக் கோட்பாடும் பொதுவான தேடலின் ஒரு பகுதி என்பதை நாம் உணரத் தொடங்குகிறோம். மிகவும் விசாலமான, சமூக அரசியல் கருத்துகள் மற்றும் விளக்கங்களுக்கான தேடல் மீது, மனிதர்கள் ஒன்றாக வேலை செய்ய முயற்சி செய்யலாம். புனித ரோமானிய சாம்ராஜ்யம் மற்றும் கிறிஸ்தவ மண்டலத்தின் கருத்துகளின் மீது மனிதர்களின் நம்பிக்கை சிதைந்ததால், ஐரோப்பாவில் மீண்டும் தொடங்கிய தேடல், தீவிரமடைந்தது. மேலும் மத்தியதரைக் கடல் உலகத்திலிருந்து பரந்து விரிந்த உலகத்துக்கு, கண்டுபிடிப்பு யுகத்தின் எல்லைகள் விரிவடைந்தன.

சமூகம் பொருளாதாரம் மற்றும் அரசியல் எண்ணங்களின் விரிவாக்கத்தையும் வளர்ச்சியையும் தற்போதைய சூழலில் விவாதிக்கும்போது, முரண்பாடான பிரச்னைகளையும் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும். உலக வரலாற்றைப் படிக்கும் மாணவரின் பரந்த கண்ணோட்டத்தில், மனித மனத்துக்குள் இந்த வழிகாட்டு யோசனைகளின் மறுசீரமைப்பு, இன்னும் நிறைவு செய்யப்படாத பணியே. எந்த அளவுக்கு முடிவடையவில்லை என்பதைக்கூட நம்மால் இன்னும் மதிப்பிட முடியவில்லை.

சில பொதுவான நம்பிக்கைகள் வெளிவருவதுபோல் தோன்றுகின்றன. மேலும் அவற்றின் தாக்கம் இன்றைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் பொதுச் செயல்களில் நன்கு புலப்படுகின்றன. ஆனால், தற்சமயம் மனிதர்களை உறுதியாகவும் முறையாகவும் உணர்தல் நோக்கிக் கட்டாயப்படுத்தப் போதுமான தெளிவோ நம்பிக்கையோ இல்லை. மனிதர்களின் செயல்கள் பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தாலும் பாரம்பரியத்தை நோக்கியே அவை ஒட்டு மொத்தமாக ஈர்க்கப்படுகின்றன.

ஆயினும் ஒரு சுருக்கமான வாழ்நாளுக்கு முன்பிருந்த சிந்தனையுடன் ஒப்பிடும்போது, மனித விவகாரங்களில், ஒரு புதிய ஒழுங்கை வடிவமைக்கும் ஒரு வழிமுறை இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பொருட் சுருக்கம் தெளிவற்ற தன்மையில் மறைந்து, விவரம் மற்றும் சூத்திரங்களில் ஏற்ற இறங்களுடன் காணப்படுகிறது. தெளிவான வளர்ச்சியைப் பெற்றாலும் முக்கிய அம்சங்களில் குறைவான மாற்றங்களே நிகழ்ந்துள்ளன. பல விஷயங்களில், அதிகரிக்கும் விவகாரங்களில், மனித இனம் ஒரே சமூகமாகவும் உருவாவதை, ஒவ்வொரு ஆண்டும் காண்கிறோம். இவ்வகை விவகாரங்களில் பொதுவான உலகளாவிய கட்டுப்பாடும் அவசியமாகிறது.

உதாரணத்துக்கு, இந்தப் பூமி முழுவதும் இப்போது ஒரே பொருளாதாரச் சமூகமாக உள்ளது என்பதே உண்மை. மனித முனைவுக்குக் கண்டுபிடிப்பு வழங்கிய அதிக சக்தியும் வரம்பும் அத்தகைய விவகாரங்களில் தற்போது நிலவும் சர்ச்சைக்குரிய நிர்வாகத்தை, மேலும் வீணாக்கி ஆபத்தானதாக மாற்றியிருக்கிறது. உலகளாவிய வழிகளில் மட்டுமே வெற்றிகரமாகக் கையாளப்பட வேண்டிய வகையில், பன்னாட்டு நலன்களாக நிதி மற்றும் நாணயப் பயனாளிகள் உருவெடுத்துள்ளனர்.

தொற்று நோய்கள் மற்றும் மக்கள் தொகை இடப்பெயர்வு அதிகரிப்புகள், இப்போது உலகளாவிய பிரச்னைகளாக விளங்குகின்றன. மனித நடவடிக்கைகளின் அதிக சக்தியும் வரம்பும் விகிதாசாரமற்ற அழிவுக்கும் ஒழுங்கற்ற தன்மைக்கும் போரை மாற்றியுள்ளன. இதன் காரணமாக, அரசுகளுக்கு இடையேயும் மக்களுக்கு இடையேயுமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழி பயனற்றதாகிவிட்டது. இவை அனைத்தும் இதுவரை இருந்த வேறெந்த அரசாங்கத்தைவிடவும் அதிக அளவிலான மற்றும் விரிவான கட்டுப்பாடுகளுக்காகவும் அதிகாரத்துக்காகவும் கூச்சலிடுகின்றன.

ஆனால், இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு, உலகெங்கிலும் உள்ள ஏதோவொரு வல்லரசின் வெற்றியால் அல்லது தற்போதுள்ள அரசாங்கங்களின் கூட்டுறவால் எழுகிறது என்பதை உணரவில்லை. தற்போதுள்ள அமைப்புகளுடன் ஒப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பாராளுமன்றம், உலக காங்கிரஸ், உலக அதிபர் அல்லது பூமியின் சக்ரவர்த்தி இவைபோல் ஒன்றை உருவாக்குவது பற்றியும் சிலர் சிந்தித்தனர்.

நமது இயற்கையான எதிர்வினை அத்தகைய சில முடிவுகளை நோக்கியே உள்ளது. ஆனால், அரை நூற்றாண்டு ஆலோசனைகள் மற்றும் முயற்சிகளின் விவாதமும் அனுபவங்களும் அந்த முதல் தெளிவான யோசனையின் மீதான நம்பிக்கையை முழுவதுமாக ஊக்கப்படுத்தவில்லை. உலக ஒற்றுமைக்கு எதிர்ப்புகள் மிக அதிகம். அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உலகளாவிய அதிகாரங்களைக் கொண்ட சிறப்புக் குழுக்கள், இயற்கைச் செல்வத்தின் கழிவிலோ மேம்பாட்டிலோ அக்கறை கொண்ட அமைப்புகள், உலக அமைதி, நாணயம் மக்கள் தொகை, சுகாதாரம் தொழிலாளர் நிலைமைகளை சமன்படுத்தும் அமைப்புகள், ஆகியவற்றின் திசையில் சிந்தனையின் சறுக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது.

உலகளாவிய அரசு இருப்பதை உணரத் தவறிய நிலையில், அதன் அனைத்துப் பொதுவான நலன்களும் ஒரே பிரச்னையாக நிர்வகிக்கப்படுவதை உலகம் கண்டுபிடிக்கலாம். மனித ஒற்றுமை அடைவதற்கு முன், தேச பக்தி சார்ந்த சந்தேகங்கள், பொறாமைகளைத் தாண்டி சர்வதேச நலன் பெறுவதற்கு முன், இனத்தின் பொது மனத்தில், மனித ஒற்றுமை பற்றிய எண்ணம் வேண்டும். மேலும் மனித இனம் ஒரே குடும்பம் என்ற எண்ணம் உலகளாவிய அறிவுறுத்தல் மற்றும் புரிதலுக்கான விஷயமாக இருக்க வேண்டும்.

பல நூற்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் மாபெரும் உலகளாவிய மதங்களின் உணர்வு, உலகளாவிய மனித சகோதரத்துவம் பற்றிய எண்ணத்தைப் பராமரிக்கவும் விரிவுபடுத்தவும் போராடி வருகிறது. ஆனால், இன்றுவரை பழங்குடி, தேசிய மற்றும் இன உராய்வுகளின் வெறுப்புகளும் கோபங்களும் அவநம்பிக்கைகளும் ஒவ்வொரு மனிதனையும் மனிதகுலத்தின் சேவகனாக மாற்றும் பரந்த பார்வைகளையும் தூண்டுதல்களையும் துரதிஷ்டவசமாகத் தடுத்து நிறுத்துகின்றன.

பொ.ஆ. 6 – 7-ம் நூற்றாண்டுகளில் நிலவிய குழப்பமும் சீர்குலைவுகளுக்கும் இடையே, ஐரோப்பாவின் ஆன்மாவைக் கைப்பற்ற கிருத்தவ மண்டலத்தின் எண்ணம் போராடியது போல், மனித ஆன்மாவைக் கைப்பற்ற, மனித சகோதரத்துவம் என்ற சிந்தனை போராடுகிறது. இத்தகைய கருத்துகளின் பரப்புதல் மற்றும் வெற்றி என்பது பல அர்ப்பணிப்புள்ள மற்றும் வேறுபடுத்தப்படாத மிஷனரிகளின் வேலையாக இருக்கவேண்டும். எந்தச் சமகால எழுத்தாளராலும் அத்தகைய வேலை எவ்வளவு தூரம் சென்றுள்ளது என்பதை யூகிக்க முடியாது.

சர்வதேச விஷயங்களுடன் சமூக மற்றும் பொருளாதாரக் கேள்விகள் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. ஒவ்வொரு விஷயத்துக்குமான தீர்வு, மனித இதயத்துக்குள் நுழைந்து ஊக்குவிக்கும் அதே சேவை மனப்பான்மை மீதான முறையீட்டில் அமைந்துள்ளது. நாடுகளின் அவநம்பிக்கை, சிக்கலான தன்மை, ஆகியவற்றைப் பிரதிபலிப்பதுடன், பொதுவான நன்மையை எதிர்கொண்டு, தனிப்பட்ட முதலாளி மற்றும் தொழிலாளியின் அவநம்பிக்கை, சிக்கலான தன்மை, அகங்காரம் ஆகியவற்றாலும் பிரதிபலிக்கப்படுகின்றன. தனிநபரின் உடைமைத் தன்மையின் மிகைப்படுத்தல்கள், நாடுகள் மற்றும் பேரரசர்களின் பேராசைக்கு இணையானவை. அவை அதே உள்ளுணர்வுப் போக்குகள், அதே அறியாமை மற்றும் மரபுகளின் தயாரிப்புகள் ஆகும். சர்வதேசியம் என்பது தேசங்களின் சோசலிசம்.

இந்தப் பிரச்னைகளோடு போராடினால் மட்டுமே, உளவியல் அறிவியலில் போதுமான ஆழமும் வலிமையும் இருப்பதையும் திட்டமிட்ட கல்வி முறை, மனித செயல்பாடு மற்றும் கூட்டுறவு புதிர்களுக்கான உண்மையான மற்றும் நிறைவான தீர்வையும் உணர முடியும். பொ.ஆ.1820-ல் மின்சார ரயில் அமைப்பைத் திட்டமிட்ட மனிதர்களைப் போலவே, இன்று உலகின் மிகவும் பயனுள்ள அமைதி அமைப்பைத் திட்டமிடுவதில் நாம் திறமையற்றவர்களாக இருக்கிறோம் ஆனால் அது சமமாக நடைமுறைப்படுத்தக்கூடியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

எந்த மனிதனும் தன் சொந்த அறிவைத் தாண்டிச் செல்லவோ தற்காலச் சிந்தனையைத் தாண்டிய சிந்தனையோ எட்ட முடியாது. மேலும் மனித குலத்தின் எத்தனை தலைமுறைகள், வரலாறு சுட்டிக்காட்டும் உலக அமைதியின் விடியலுக்கு முன், போரிலும் வீணாகவும் பாதுகாப்பின்மையிலும் துயரத்திலும் வாழ வேண்டியிருக்கும் என்பதை நாம் யூகிக்க இயலாது. வீணான மற்றும் குறிக்கோளற்ற வாழ்க்கையில், முன்மொழியப்பட்ட தீர்வுகள் தெளிவற்றதாக இருப்பதுடன், ஆர்வமும் சந்தேகமும் அவற்றைச் சூழ்ந்துள்ளன.

அறிவார்ந்த மறுசீரமைப்பின் மிகப் பெரிய பணி நடந்து கொண்டிருக்கிறது; அது இன்னும் முழுமையடையாத நிலையில், எங்கள் கருத்துகள் தெளிவாகவும் துல்லியமாகவும் வளர்கின்றன. மெதுவாகவா அல்லது வேகமாகவா எனச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவை தெளிவடையும்போது, மனிதர்களின் மனங்கள் மற்றும் கற்பனைகளின் மீது ஆற்றலைச் சேகரிக்கும். தற்போதைய பிடிமானக் குறைபாட்டுக்கு அவற்றின் உறுதியின்மையும் சரியின்மையுமே அடிப்படைக இருக்கின்றன.

பலவிதமாகவும் குழப்பமாகவும் முன்வைக்கப்படுவதால், தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. எனினும் துல்லியம் மற்றும் உறுதி காரணமாக, உலகின் புதிய பார்வை கட்டாய ஆற்றலைப் பெறும். அது தற்போது மிக வேகமான சக்தியைப் பெறலாம். கல்வி புனரமைப்பின் சிறந்த வேலை, தர்க்கரீதியாகவும் அவசியமாகவும் அந்தத் தெளிவான புரிதலின் அடிப்படையில் பின்பற்றப்படும்.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *