Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #39

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #39

60. அமெரிக்காவின் விரிவாக்கம்

போக்குவரத்தில் நிகழ்ந்த புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து உடனடியாகவும் அதிரடியாகவும் தீர்வுகளைக்கண்ட உலகின் முக்கியப் பிராந்தியம் வட அமெரிக்கா. பொ.ஆ18-ம் நூற்றாண்டு மத்தியில் அரசியல் ரீதியாக அமெரிக்கா தன்னை உருவகப்படுத்திக் கொண்டதுடன், தனது அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் தாராளவாதக் கருத்துகளை உறுதிபடத் தெளிவாக்கியது. அரசு–திருச்சபை, மகுடம் பட்டங்கள் ஆகியவற்றை விலக்கிக் கொண்டு, சுதந்தரத்துக்கான ஒரு வழிமுறையாக சொத்துகள் பாதுகாப்பில் கவனம் செலுத்தியது. வளர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமையை வழங்கியது. வாக்களிப்பது, கட்டமைப்பு ரீதியான அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கினாலும் புதிய தலைமுறையின் ஆற்றலையும் முனைவையும் பொது நல ஊக்கத்தையும் எந்த வகையிலும் தடுக்க முடியவில்லை.

பரந்து விரிந்த அமெரிக்கக் கண்டத்தை ஒருங்கிணைப்பதில் போக்குவரத்து வாகனங்களின் பங்களிப்பு அளப்பரிது. ரயில், நீராவிப் படகு, தந்தி ஆகியவை பல்வேறு மாகாணங்களாகவும் இனக்குழுக்களாகவும் பிரிந்து கிடந்த அமெரிக்க்க் கண்டத்தை ஒருமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. இவை இல்லாவிட்டால் அமெரிக்க ஒருங்கிணைப்பு அப்போதைக்குச் சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. மேற்கு நோக்கிய மக்கள் தொகை இடப்பெயர்வு மந்தமாக அல்லது தாமதமாகியிருக்கும். மத்திய சமவெளிப் பகுதிகளைத் தாண்டியிருக்காது. கடற்கரை தொடங்கிச், சற்றேறக் குறைய அமெரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியான மிஸ்ஸோரி ஆற்றங்கரைவரை, மக்கள் தொகை பரவலாக இருநூறு ஆண்டுகள் பிடித்தன. ஆற்றைத் தாண்டி பொ.ஆ.1821-ல் உருவான முதல் நீராவிப் படகு மாகாணம் மிஸ்ஸோரி. ஆனால் பசிஃபிக் பெருங்கடல் வரையிலான மீதிப் பகுதிகளில் மக்கள் குடியேற, ஒரு சில பத்தாண்டுகள் மட்டுமே ஆயின.

திரைப்படமெடுக்கும் நிதி ஆதாரங்கள் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால், பொ.ஆ.1600 தொடங்கி வட அமெரிக்க வரைபடத்தை, மக்கள் தொகைப் பெருக்கம் உள்பட, காட்டியிருப்போம். 100 மக்களைக் கொண்ட இடத்தைப் புள்ளியாகவும் 1,00,000 மக்கள் வாழும் பகுதியை நட்சத்திரமாகவும் குறியிட்டுப் புள்ளிகளாலும் நட்சத்திரங்களாலும் விளக்கியிருப்போம். அடுத்த இருநூறு ஆண்டுகளுக்குக் கடலோர மற்றும் நீர்நிலைகளுள்ள பகுதிகளான இந்தியானா, கெண்டகி ஆகிய மாகாணங்களிலும் பொ.ஆ.1810-ல் கான்ஸாஸ் (Kansas), நெப்ராஸ்காவிலும் (Nebraska), நீராவிப் படகுகள் வழியே மக்கள் பெருக்கம் நடைபெற்றது. பொ.ஆ.1830க்குப் பிறகு ரயில்கள் ஓடத் தொடங்கியவுடன், மக்கள் தொகைப் பெருக்கம் வேகமெடுத்து ஓடியது. 100 மக்களைக் குறிக்கும் புள்ளிகள் திடீரென 1,00,000 மக்களைக் குறிக்கும் நட்சத்திரங்களாக மாறின. ரயில் தண்டவாளங்கள் ஓடும் பகுதிகள் தோறும் மக்கள் குடியேறத் தொடங்கினர்.

அமெரிக்காவின் வளர்ச்சி உலக வரலாற்றில் எந்தவொரு முன்னுதாரமும் இல்லாத, ஒரு நேர்த்தியான செய்முறையாகும். இதுவொரு புது வகையான நிகழ்வும்கூட. மக்கள் தொகை இடப் பெயர்வுக்கு ரயில்கள் முக்கியக் காரணம். ரயில்கள் இல்லையெனில் இது சாத்தியப்பட்டிருக்காது என்பது உண்மை. ரயில் மற்றும் தந்தி ஆகியவை வந்திருக்காவிட்டால் வாஷிங்டனிலிருந்து கலிஃபோர்னியாவை நிர்வகிப்பதை விடவும் பெகின் (இல்லினாய்) பகுதியிலிருந்து நிர்வகிப்பது எளிதாகியிருக்கும்.

அமெரிக்காவின் வளர்ச்சி பிரமாண்டம் என்பதுடன் சீரானது கூட. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நியூ இங்கிலாந்து மனிதனைப் போலவே இருந்த வெர்ஜீனியா மனிதனை விடவும் இன்றைக்கு, நியூயார்க் மனிதனைப் போலவே சான் ஃபிரான்சிஸ்கோ மனிதன் உள்ளார். ஒருங்கிணைப்புச் செய்முறை தடையின்றி நடக்கிறது. அமெரிக்கா ரயில்வே, தந்தி ஆகியவற்றால், பேச்சிலும் சிந்தனையிலும் பின்னிப் பிணையப்பட்டுத் தனக்குத்தானே நல்லிணக்கத்துடன் இயங்குகிறது. விரைவில், ஆகாய விமானப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு உதவியில் முக்கிய அங்கம் வகிக்கும் (1920களில் எழுதப்பட்ட புத்தகம் இது).

அமெரிக்காவின் மிகப் பெரிய சமூகம் வரலாற்றில் புதிய அம்சம். நூறு மில்லியன் மக்களுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய சாம்ராஜ்யங்கள் இருந்துள்ளன. எனினும் அவை பல்வேறு மக்களைக் கொண்ட சமூகங்களாகவே இருந்தன. இதுபோல் ஒற்றைச் சிந்தனை கொண்ட மக்கள் இதற்கு முன் இருந்ததில்லை. இந்தப் புதிய விஷயத்துக்கு ஒரு புதிய சொல் தேவைப்படுகிறது. ஃபிரான்ஸ் அல்லது ஹாலந்தை நாடு என அழைப்பதுபோல் ஐக்கிய அமெரிக்காவை நாடு என்றே அழைக்கிறோம். ஆனால் இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஆட்டோமொபைல் வாகனத்துக்கும் ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டிக்கும் உள்ள வேறுபாடு போன்றுதான். இந்நாடுகள் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு காலங்களில் உருவானதுடன், வெவ்வேறு வேகங்களில், வெவ்வேறு வழிகளில் செயல்பட ஆரம்பித்தன.

ஆனால், தற்போதைய மகத்தான மற்றும் பாதுகாப்பான உச்ச நிலையை அடைவதற்கான பாதையில், அமெரிக்க மக்கள் மோதலின் ஒரு கட்டத்தைக் கடக்க வேண்டியிருந்தது. தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்காவுக்கு இடையே தீவிரமாகி வரும் நலன்கள் மற்றும் யோசனைகளின் மோதலைத் தவிர்க்க, ஆற்று நீராவிப் படகுகள், ரயில்கள், தந்தி, உள்ளிட்ட வசதிகள் போதுமான வேகத்தில் விரைந்து வரவில்லை. தென் அமெரிக்க மாகாணங்கள் அடிமை வர்த்தகத்துக்கு ஆதரவளிப்பவை. வட அமெரிக்காவில் அனைவரும் சுதந்திரமானவர்கள்.

ஏற்கெனவே பல விஷயங்களில் முரண்பட்டுக் கிடந்த தென் மற்றும் வட அமெரிக்க மாகாணங்களுக்கு இடையேயான மோதல், ரயில் மற்றும் நீராவிப் படகுகளின் வருகைக்குப் பின் இன்னும் தீவிரமானது. புதிய போக்குவரத்து வசதிகள் வடக்கையும் தெற்கையும் ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற கேள்வி எழவே வழிவகுத்தன. சமரசத்துக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயின. வட அமெரிக்கா சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் இருந்தது. ஆனால் தென் அமெரிக்கா, நேர்மாறாக, ஏராளமான மலைத் தோட்டங்களுடன், இருள் சூழ்ந்து இறுக்கமாகவே காட்சியளித்தது.

மக்கள் பெருக்கம் காரணமாகப் புதிய பகுதிகள், வளரும் அமெரிக்கக் கட்டமைப்பில் மாகாணமாக உருவானபோது, ஏற்கெனவே நிலவும் இருவகையான எண்ணங்கள் இன்னும் தீவிரமாயின. குடிமக்களிடையே சுதந்திரம் நிலவும் மாகாணமா அல்லது அடிமைத்தனம் நிலவும் மாகாணமா என்ற யோசனை வலுப்பெற்று மோதல்கள் வெடித்தன. பொ.ஆ.1883முதல் அமெரிக்காவிலுள்ள அடிமைத்தனத்துக்கு எதிரான அமைப்பு, அடிமைத்தனப் பரவலைத் தடுக்கக் குரல் கொடுத்ததுடன், நாடு முழுவதும் அது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கடுமையாகப் போராடியது.

அமெரிக்க ஐக்கியத்தில் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்ட போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மெக்ஸிகோ குடியரசின் ஓர் அங்கமாக டெக்ஸாஸ் இருந்தாலும் அமெரிக்கர்கள் தங்கள் காலனியாக்கத்தை அங்கு விரிவுபடுத்தினார்கள். பொ.ஆ.1835-ல் மெக்ஸிகோவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்த பிறகு, பொ.ஆ.1844-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைந்தது. மெக்ஸிகன் சட்டப்படி அடிமைத்தனத்திலிருந்து டெக்ஸாஸுக்கு விலக்கு அளித்திருந்தது. ஆனால், டெக்ஸாஸ் பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, அடிமைத்தனத்துக்காகத் தெற்கு மீண்டும் டெக்ஸாசைக் கோரிப் பெற்றது.

கடல்வழிக் கப்பல் போக்குவரத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஏராளமான ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவில் குடியேறத் தொடங்கினர். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக விவசாயப் பகுதிகளாக இருந்த அயவா (Iowa), விஸ்கான்ஸின், மின்னேசோட்டா (Minnesotta), ஓரேகான் (Oregon) ஆகியவை மாகாண அந்தஸ்துக்கு உயர்ந்தன. இவற்றின் பெரும்பான்மை, செனேட் மற்றும் மக்கள் பிரதிநிதி அவையில் அடிமைத்தனத்துக்கு எதிரான கொள்கைக்கு வலுவூட்டின.

அதிக எண்ணிக்கையில் அடிமைகளைப் பணியமர்த்திய தென் அமெரிக்கப் பருத்திப் பயிர் நிலச்சுவான்தார்கள், வட அமெரிக்காவின் அடிமைத்தன ஒழிப்புப் பிரசாரத்தால் எரிச்சல் அடைந்தனர். அடிமை எதிர்ப்புப் பிரிவினர், காங்கிரஸில் ஆதிக்கம் பெறுவது தங்களுக்கு நல்லதல்ல என்ற முடிவுக்குத் தென் அமெரிக்க நாடுகள் வந்தன. எனவே தங்களது தனித்துவத்தைப் பாதுகாக்கவும் அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவும் யூனியனிலிருந்து பிரிவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கினர். வடக்கிலிருந்து விடுவித்துக்கொண்டு, மெக்ஸிகோ மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுடன், பனாமா வரையிலான பகுதிகளுடன் இணையத் திட்டமிட்டனர்.

அடிமைத்தனம் ஏனைய மாகாணங்களில் விரிவுபடுத்துவதை, ஆபிரஹாம் லிங்கன் கடுமையாக எதிர்த்தார். அடிமைத்தனத்தை எதிர்க்கும் பிரிவுக்கு 1860-ல் லிங்கன் தலைவரானதைத் தொடர்ந்து, யூனியனிலிருந்து பிரிந்தே ஆக வேண்டும் என்பதில், தெற்கு இன்னும் தீவிரமாக இயங்கியது. தெற்கு கரோலினா பிரிவினைக்கான அவசர சட்டத்தை இயற்றியதுடன் போருக்கான பிரகடனத்தையும் வெளியிட்டது.

மிஸ்ஸிஸிப்பி, ஃப்ளோரிடா, அலபாமா, ஜார்ஜியா, லூயிசியானா, டெக்ஸாஸ் அகியவை கரோலினாவுக்கு ஆதரவளித்தன. அலபாமாவிலுள்ள மோண்ட்கோமெரியில் (Montgomery) நடந்த மாநாட்டில் ‘அமெரிக்கக் கூட்டமைப்பு நாடுகளின்’ தலைவராக ஜெஃபர்சன் டேவிஸ் (Jefferson Davis) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் ‘நீக்ரோ இன மக்களின் அடிமைத்தனம்’ தேவை என்னும் மிக முக்கியத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க விடுதலைப் போருக்குப் பிறகு பிறந்த புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். பொ.ஆ.1809-ல் கெண்டகி மாகாணத்தில் பிறந்து இந்தியானாவிலும் பின்னர் இல்லினாயிஸிலும் குடியேறினார். மிக மிக ஏழ்மைக் குடும்பம் என்பதால், இருக்க நல்ல வீடோ உடையோ உணவோ இல்லாமல் கஷ்டப்பட்டார். பள்ளிப் படிப்புக்கும் வசதியில்லை என்பதால் தாயாரே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். பதினேழு வயதில் தடகளம் ஓட்டப் பந்தயம் மற்றும் மல்யுத்த வீரனாக வலம் வந்தார். அலுவலக குமாஸ்தாவாகவும் கிடங்குக் காப்பாளராகவும் சில காலம் பணி புரிந்தார். பொ.ஆ.1834-ல் 25 வயதில் இல்லினாயிஸ் மாகாண அவையில் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இல்லினாயிஸில் நீக்ரோ அடிமைத்தனம் மிகப் பெரிய பிரச்னையாகக் கொழுந்துவிட்டு எரிந்தது. இல்லினாயிஸ் தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும் செனேட்டருமான டக்ளஸ், அடிமைத்தனம் நீட்டிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பேச்சாற்றலும் பாரம்பரியப் பெருமையும் வலிமையும் மிக்க எதிரியான டக்ளஸை எதிர்த்து ஆபிரஹாம் லிங்கன் முசு வீச்சுடன் போராட வேண்டியிருந்தது. இருவருக்கும் இடையே நடைபெற்ற அதிபர் தேர்தல் போட்டியில் லிங்கன் வெற்றி பெற்று 1861 மார்ச் 4ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கிடையே வாஷிங்டன் கூட்டாட்சியிலிருந்து விலகிக் கொள்ளத் தென் அமெரிக்க நாடுகள் கடுமையாகப் போராட்டிக் கொண்டிருந்தன.

அமெரிக்க உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது. கூட்டாட்சிப் படை வீரர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் தொடங்கி கடைசிக் கட்டப்போரில் பத்து லட்சம் என்னும் எண்ணிக்கையைத் தொட்டது. புதிய மெக்ஸிகோ மற்றும் கிழக்குக் கடலுக்கு நடுவே இருந்த பரந்து விரிந்த பகுதியில் போர் நடைபெற்றது. ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உந்துதல் எதிர் உந்துதலுக்கும் நம்பிக்கை அவநம்பிக்கைக்கும் விரக்திக்கும் வழி வகுத்தன.

வட அமெரிக்கா யூனியன் (Union) அடிமை ஒழிப்புக்கும் தென் அமெரிக்கா கன்ஃபெடரேட் (Confederate) அடிமை ஆதரவுக்கும் தலை தாங்கின. தொழில் வளர்ச்சி, ஆயுதங்கள், மக்கள் தொகை, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளில் வட அமெரிக்கா முன்னிலை வகித்தது. ஆனாலும் வழிநடத்தத் தகுதியான தளபதி அமையவில்லை. மாறாகத் தென் அமெரிக்கா பலவீனமாக இருந்தாலும் அதன் தளபதி லீ (General Lee) திறமைசாலியாக இருந்தார்.

அமெரிக்க உள்நாட்டுப் போர் நான்கு ஆண்டுகள் மட்டுமே நடைபெற்றாலும் வட அமெரிக்க மக்கள் உடல் ரீதியாகவும் தார்மிக ரீதியாகவும் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளானார்கள். எல்லையோர மாகாணங்களில் தந்தை, மகன், மகள், சகோதரர்கள் என குடும்ப உறுப்பினர்களே யூனியன் என்றும் கன்ஃபெடரேட் என்றும் பிரிந்தனர். வட அமெரிக்க மக்களிடையே இக்குழப்பம் நிலவினாலும் ஆபிரஹாம் லிங்கனின் மன உறுதி அவர்களை ஒருங்கிணைத்தது. யூனியனுக்காகவும் அமைதிக்காவும் நீக்ரோ அடிமைத்தனத்துக்கு எதிராகவும் அவர் துணிவுடன் குரல் கொடுத்தார். எதிர்த்து நின்றார். மாறுபட்ட கொள்கைகளோடு அமெரிக்கா துண்டு துண்டாகச் சிதறக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார்.

போரின் ஆரம்ப கட்டங்களில் காங்கிரஸும் ஃபெடரல் தளபதிகளும் விரைவான விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொண்ட போது, ஆபிரஹாம் லிங்கன் தீவிரமாக எதிர்த்து அவர்களின் உற்சாகத்தை குன்றச் செய்தார். படிப்படியாகப் பல கட்டங்களாக விடுதலை பெறுவதில் உறுதியாக இருந்தர். பொ.ஆ.1862 – 1863 ஆண்டுகளில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே சென்றதில் மக்களின் தொடக்க கால ஆர்வமும் உற்சாகமும் குறையத் தொடங்கின. தோற்றவர்கள், துரோகிகள், பதவி நீக்கப்பட்ட தளபதிகள், சுயநல அரசியல்வாதிகள், சோர்ந்தும் தளர்ந்த மக்கள், ஊக்கமிழந்த படைகள் ஆகியவை லிங்கனுக்குப் பெரும் கவலையை அளித்தன. எதிர்த்தரப்பும் இதே நிலையில் இருந்தது ஒன்றே அவருக்கான ஆறுதலாக இருந்தது.

பிரிட்டன் ஆங்கிலேய அரசு அலபாமா உள்ளிட்ட அதி வேகக் கப்பல்களை கன்ஃபெடரேட்களுக்கு வழங்கியதைத் தொடர்ந்து அவை அமெரிக்க வணிகக் கப்பல்களை வியாபாரம் செய்ய விடாமல் துரத்தியடித்தன. ஃப்ரான்ஸும் இடையிடையே கன்ஃபெடரேட்டுக்கு ஆதரவாகவும் யூனினனுக்கு எதிராகவும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தது. அனைத்துத் தடைகளையும் தகர்த்து லிங்கன் வெற்றிக் கொடி நாட்டினார். அவருக்கு உற்சாகம் அளித்த இரு விஷயங்கள், கன்ஃபெடரேட் தலைநகர் ரிச்மண்ட் வீழ்ச்சியும் தலைவர் ஜெஃபர்சன் டேவிஸ் சரணாகதியுமே. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்ய ரிச்மண்ட் நகருக்குள் அடியெடுத்து வைத்தார்.

நிறைவாக வட அமெரிக்க யூனியன் படைகள் க்ராண்ட் (Grant) மற்றும் ஷெர்மன் (Sherman) ஆகிய இருவரின் கூட்டுத் தலைமையில் வெற்றி வாகை சூடின. பொ.ஆ.1865 ஏப்ரல் 9-ல் அபோமேடாக்ஸ் கோர்ட் ஹவுஸ் (Appomattox Court House) என்னும் இடத்தில் தென் அமெரிக்க கன்ஃபெடரேட் தளபதி லீ சரணடைந்தார். அடுத்த ஒரு மாதத்தில் ஏனைய தென் அமெரிக்கப் பிரிவினைப்படைகளும் ஆயுதங்களை ஒப்படைத்ததைத் தொடர்ந்து, கன்ஃபெடரேஷன் தோல்வி உறுதியானது. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1865 ஏப்ரல் 11 தலைநகர் வாஷிங்க்டனுக்குத் திரும்பி லிங்கன் நிகழ்த்திய உணர்ச்சி மிக்க வீர உரையே அவரது வாழ்நாளின் கடைசி உரையாக அமைந்தது. அடிமை ஒழிப்பு, கறுப்பர் ஆதரவு, நல்லிணக்கம் மற்றும் தோற்கடிக்கப்பட்ட மாநிலங்களில் விசுவாசமான அரசாங்கத்தை மறுகட்டமைத்தல் ஆகியவையே அவரது உரையின் கருப்பொருளாகத் திகழ்ந்தன. பொ.ஆ.1865 ஏப்ரல் 14 இரவு ஃபோர்ட் கொட்டகையில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, பூத் (Booth) என்பவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். ஆபிரஹாம் லிங்கன் மறைந்தாலும் அவர் கனவு கண்ட, பாடுபட்டு உருவாக்கிய அமெரிக்க யூனியன் இன்று உலக வரலாற்றில் முன்னணி நாடாக விளங்குகிறது.

61. ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாக ஜெர்மனியின் எழுச்சி

ஃப்ரெஞ்சுப் புரட்சி, நெப்போலியன் சாகசங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற அமைதிக்கும் அரசியல் சூழல்களின் நவீன மீட்டெடுப்புக்கும் ஐரோப்பா திரும்பியதை ஏற்கெனவே பார்த்தோம். நூற்றாண்டின் மத்தி வரை எஃகு, ரயில்வே, நீராவிக் கப்பல் கையாளுதலின் புதிய வசதிகள், அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நகரத் தொழில்மயமாக்கம் காரணமாக சமூகப் பதற்றம் அதிகரித்தது. ஃபிரான்ஸ் வெளிப்படையான அமைதியற்ற நாடாகத் தொடர்ந்தது. பொ.ஆ.1830 மற்றும் 1848-ல் ஃபிரான்ஸ் இரு புரட்சிகளை எதிர்கொண்டது. நெப்போலியன் போனபார்ட் சகோதரி மகனான மூன்றாம் நெப்போலியன், ஃப்ரான்ஸின் முதல் அதிபராகவும் 1862-ல் சக்ரவர்த்தியாகவும் முடி சூட்டிக் கொண்டார்.

பாரிஸ் நகரை மறுசீரமைத்ததிலும் புனரமைத்ததிலும் மூன்றாம் நெப்போலியனுக்கு மிகப் பெரிய பங்குண்டு. பொ.ஆ.17-ம் நூற்றாண்டு சுத்தமும் சுகாதாரமுமற்ற நகரை, எழில் கொஞ்சும் விசாலமான, இலத்தீன் மயமாக்கப்பட்டப் பளிங்கு நகரமாக, மாற்றிய பெருமை அவரையே சேரும். ஃபிரான்ஸை முழுமையாகக் கட்டமைத்து நவீன சாம்ராஜ்யமாக உருவாக்கினார். பொ.ஆ.17-18-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவை வீண் போர்களில் மும்முரமாக வைத்திருந்த பெரும் வல்லரசுகளின் போட்டித் தன்மையைப் புதுப்பிக்கும் மனப்பன்மை அவரிடமும் இருந்தது. அதே நேரம் ரஷியாவின் முதலாம் ஜார் நிக்கோலஸ் (1825-1856) தெற்கிலுள்ள துருக்கி சாம்ராஜ்யத்தையும் கான்ஸ்டாண்டிநோபிளையும் கைப்பற்றுவதில் தீவிரமாகக் களமிறங்கினார்.

நூற்றாண்டு முடிவில் ஐரோப்பா மீண்டும் போர்களில் சிக்கிக்கொண்டது. அண்டை நாடுகளைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவியது. கிரிமியன் (Cremian) போரில் துருக்கிக்கு ஆதரவாகவும் ரஷியாவுக்கு எதிராகவும் இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும் சார்டீனியா ஆகியவை களமிறங்கின. ஜெர்மனியைத் தோற்கடிக்க ப்ரஷியா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா கைகோர்த்தன. ஆஸ்திரியாவிடமிருந்து வடக்கு இத்தாலியை விடுவித்தது ஃபிரான்ஸ். பிரிந்து கிடந்த இத்தாலி, ஒரே சாம்ராஜ்யமாகப் படிப்படியாக ஒருங்கிணையத் தொடங்கியது.

அமெரிக்க உள்நாட்டுக் கலகத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, மெக்ஸிகோ மீது போர் தொடுக்க, மூன்றாம் நெப்போலியனுக்கு தவறான ஆலோசனை கூறினார்கள். அவர்களை நம்பி மேக்ஸ்மிலன் தலைமையில் நெப்போலியன் படைகளை அனுப்பினார். ஆனால், அங்கு நடைபெற்ற கலவரத்தில் மேக்ஸ்மிலன் சுட்டுக் கொல்லப்பட்டார். பொ.ஆ.1870-களில் ஐரோப்பாவின் தலைமைப் பொறுப்புக்கு ஃப்ரான்ஸும் ப்ரஷியாவும் மோதிக்கொண்டன. ப்ரஷியா போருக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. ஃபிரான்ஸின் நிதி நிலைமை தடுமாற்றத்தில் இருந்ததால் தோல்வியைத் தழுவியது.

ஃப்ரான்ஸின் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, ஜெர்மனி அதன் மீது பொ.ஆ.1870 ஆகஸ்டில் படையெடுத்தது. செப்டம்பரில் செடன் (Sedan), அக்டோபரில் மெட்ஸ் (Metz), ஜனவரியில் பாரிஸ் என அடுத்தடுத்த மாதங்களில் ஃப்ரான்ஸின் முக்கிய நகரங்கள் வீழ்ந்தன. பொ.ஆ.1871 ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) சமாதான ஒப்பந்த அடிப்படையில், அல்சேஸ் (Alsace) மற்றும் லோரைன் (Lorraine) ஆகிய ஃபிரஞ்சு மாகாணங்களை ஜெர்மனிக்கு இழப்பீடாகத் கொடுத்த பிறகே போர் நின்றது. ஆஸ்திரியா நீங்கலாக ஜெர்மனி ஒருங்கிணைந்த சாம்ராஜ்யமானது.

ப்ரஷிய மன்னன் ஐரோப்பிய சீசர்களில் ஒருவனாக ஜெர்மன் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார். அடுத்த நாற்பத்துமூன்று ஆண்டுகளுக்கு ஐரோப்பிய கண்டத்தின் சக்தி வாய்ந்த நாடாக ஜெர்மனி விளங்கியது. பொ.ஆ.1877-78-ல் ரஷியாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான போர் மற்றும் பால்கன் பகுதியில் சில மறு சீரமைப்புகள் ஆகியவற்றைத் தவிர, ஐரோப்பிய எல்லைப் பகுதிகள் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு சண்டை சச்சரவின்றி அமைதியாகவே காணப்பட்டன.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *