Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #40

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #40

62. நீராவிக் கப்பல்கள் மற்றும் ரயில்வேக்களின் புதிய அயலக சாம்ராஜ்யங்கள்

பொ.ஆ.18-ம் நூற்றாண்டு இடையூறு விளைவிக்கும் சாம்ராஜ்யங்கள் மற்றும் ஏமாற்றமடைந்த விரிவாக்கவாதிகளின் காலமாகவே முடிவுக்கு வந்தது. பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் அவற்றின் அமெரிக்க காலனிகளுக்கு இடையேயான நீண்ட நெடிய, கடினமான, சோர்வூட்டும் பயணம் தாய்நாட்டுக்கும் குடியேறிய நாட்டுக்கும் அடிக்கடி வந்து போவதைத் தடுத்தது. இதன் காரணமாகச் சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து காலனிகளில் குடியேறிய மக்கள், தங்களுக்கான சமூகங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டனர். இச்சமூகங்கள் புதிய எண்ணங்கள், புதிய சிந்தனைகளுடன், வித்தியாசமாகவும் வேறுபட்டும் இருந்தன. பேச்சு வழக்கும் மொழியும் கூட மாறுபட்டிருந்தன.

கப்பல் போக்குவரத்தின் நிச்சயமற்ற இணைப்பு காரணமாகக் குடியேறியவர்கள் மேலும் சிரமப்பட்டனர். இந்தியாவிலுள்ள பிரிட்டன் போன்ற அந்நிய சமூகங்களின் வர்த்தக நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களுக்கு ஆதரவையும் வாழ்வாதாரத்தையும் வழங்கிய ஒரே காரணத்துக்காக அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. அதே போன்ற சூழல் கனடாவிலுள்ள ஃபிரான்ஸின் பலவீனமான வர்த்தக நிலையங்களுக்கும் ஏற்பட்டன. இதன் காரணமாகவே, கடல் கடந்த ஆட்சிக்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டதாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களுக்குத் தோன்றியது. பொ.ஆ.18-ம் நூற்றாண்டு மத்தியில் ஐரோப்பாவுக்கு வெளியே, உலக வரைபடத்தில் பரந்து விரிந்திருந்த ஐரோப்பிய ‘சாம்ராஜ்யங்கள்’, பொ.ஆ.1820-ல் மிகச் சிறியதாகச் சுருங்கின. ரஷியா மட்டுமே எப்போதும்போல் ஆசியா கண்டம் முழுவதும் தனது சிறகுகளை விரித்திருந்தது.

குறைந்த மக்கள் தொகை கொண்ட கனடாவின் ஆற்றங்கரை மற்றும் ஏரிக்கரைப் பிராந்தியங்கள்; வனாந்திரப் உட்பகுதியில் ஹட்சன் பே நிறுவனத்தின் கம்பளி வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள்; கிழக்கு இந்திய கம்பெனிக் கட்டுப்பாட்டில் இந்திய தீபகற்பத்தின் மூன்றில் ஒரு பகுதி; கறுப்பர்கள் மற்றும் டச் புரட்சிக்காரர்கள் வாழும் நன்நம்பிக்கை முனை (Cape of Good Hope) கடலோர மாவட்டங்கள்; மேற்கு ஆப்பிரிக்காவின் சில வர்த்தக மையங்கள்; மேற்கு இந்தியத் தீவுகளின் ஜிப்ரால்டர் மால்டா ஜமைகாவில் அடிமைகள் வாழும் பகுதிகள்; தென் அமெரிக்காவின் பிரிட்டிஷ் கயானா, ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவில் நாடு கடத்தப்பட்ட ஆயுள் கைதிகளுக்கான சிறைச்சாலைகள், ஆகியவை 1815-ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டிலும் அதிகாரத்திலும் இருந்தன.

க்யூபா மற்றும் ஃபிலிபைன்ஸின் சில பகுதிகள் ஸ்பெயின் கட்டுப்பாட்டிலும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் போர்சுகல் கட்டுப்பாட்டிலும் ஈஸ்ட் இண்டீஸ் டச் கயானா மற்றும் சில தீவுகள் ஹாலந்து கட்டுப்பாட்டிலும் மேற்கு இந்தியத் தீவுகளில் சில தீவுகள் டென்மார்க் கட்டுப்பாட்டிலும் மேற்கு இந்தியத் தீவுகளில் சிலவும் ஃபிரெஞ்ச் கயானாவும் ஃபிரான்ஸ் கட்டுப்பாட்டிலும் இருந்தன. ஐரோப்பிய நாடுகள் இவ்வாறாக உலகெங்கும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தினாலும் கிழக்கு இந்திய கம்பெனி மட்டுமே விரிவாக்க முனைவுகளில் தீவிரமாக ஈடுபட்டது.

நெப்போலியானிக் போர்களில் ஏனைய ஐரோப்பிய நாடுகள் தீவிர கவனம் செலுத்திய நிலையில், கிழக்கு இந்திய கம்பெனி மட்டும் கவர்னர் ஜெனரல்களைத் தொடர்ந்து நியமித்ததன் மூலம் இந்தியாவில் தனது அதிகாரத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வந்தது. வியன்னா அமைதிக்குப் பிறகு, வரிகள் மூலம் வருவாய் வசூல், போர் புரிதல், ஆசிய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்புதல் ஆகியவற்றுடன் திரட்டிய செல்வத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி வைப்பதிலும் குறியாக இருந்தது. பிரிட்டிஷ் நிறுவனம் எவ்வாறு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது என்பதை விவரமாகச் சொல்ல இயலாது. பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள மாகாணங்களை ஒருங்கிணைத்தும் உள்ளூர் சமஸ்தானங்களை அரவணைத்தும் அஸ்ஸாம் சிந்து, ஔத் என எல்லா இடங்களிலும் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.

பொ.ஆ.1857-ல் இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, கிழக்கு இந்திய கம்பெனி சாம்ராஜ்யம் பிரிட்டிஷ் மகுடத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டது. ‘மேம்பட்ட இந்திய அரசுக்கான சிறந்த சட்டம்’ (An Act for the better Government of India) என்னும் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இறையாண்மையின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரலுக்குப் (Governor General) பதிலாக வைஸ்ராய் (Viceroy) மற்றும் கிழக்கு இந்திய கம்பெனிக்குப் பதிலாகச் செக்ரடரி ஆஃப் ஸ்டேட் ஃபார் இந்தியா (Secretary of State for India) நியமிக்கப்பட்டனர். இவற்றை முழுமைப்படுத்தும் வகையில், பொ.ஆ.1877-ல் பீகான்ஸ்ஃபீல்ட் (Beaconsfield) பிரபு தீர்மானத்தின்படி, இங்கிலாந்து ராணி விக்டோரியா இந்தியாவின் பேரரசியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த அசாதாரண வரிகளின் அடிப்படையிலேயே இந்தியாவும் பிரிட்டனும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. மொகலாய சாம்ராஜ்யமாக இருந்த இந்தியா இப்போது கிரேட் பிரிட்டனின் ‘முடிசூட்டப்பட்ட குடியரசு’ (Crowned Republic) ஆக ஆனது. இந்தியா எதேச்சதிகாரி இல்லாத எதேச்சதிகார நாடு. முழுமையான முடியாட்சியின் தீமையை, ஜனநாயக அதிகாரத்தின் ஆளுமையின்மையோடும் பொறுப்பின்மையோடும் அதன் ஆட்சி ஒருங்கிணைத்தது.

இந்தியர்கள் தங்களின் பிரச்னைகளைப் புகாராகத் தெரிவிக்க, அங்கு கண்ணுக்குப் புலப்படும் மன்னர் இல்லை. அவரது சக்ரவர்த்தி ஒரு தங்க அடையாளச் சின்னம். புகாரை இங்கிலாந்தில் துண்டுப் பிரசுரங்களாக அச்சடித்து விநியோகிக்க வேண்டும் அல்லது பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவையில் (British House of Commons) கேள்வியாகக் கேட்கத் தூண்ட வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் பிரிட்டன் விவகாரங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தும் என்பது வெளிப்படை. எனவே இந்தியப் பிரச்னைகள் எதிர்பார்க்கும் அளவு எந்த கவனத்தையும் பெறாது. அங்குள்ள உயர் அதிகாரிகளின் சிறிய குழுவின் தயவில் இருக்க வேண்டியிருந்தது.

ரயில்வே மற்றும் நீராவிக் கப்பல்கள் தீவிரமாக இயங்கும்வரை, இந்தியா தவிர்த்து வேறெந்த ஐரோப்பிய சாம்ராஜ்யமும் பெரிய அளவிலான விரிவாக்கத்தைப் பெறவில்லை. பிரிட்டனிலுள்ள கணிசமான அரசியல் சிந்தனையாளர்கள், அயல்நாட்டு உடைமைகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பலவீனப்படுத்துமே தவிர, வலுப்படுத்தாது எனக் கருதினர். பொ.ஆ.1842-ல் செம்பு மற்றும் 1851-ல் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை ஆஸ்திரேலியக் குடியேற்றங்கள் மெதுவாகவே வளர்ந்தன. போக்குவரத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பிறகே, ஆஸ்திரேலியக் கம்பளி, ஐரோப்பாவில் பெரிய அளவிலான சந்தைப் பொருளானது.

கனடாவில் குடியேறிய பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் மக்களுக்கு இடையே அடிக்கடி நிகழ்ந்த சண்டைகளாலும் கிளர்ச்சிகளாலும் பொ.ஆ.1849 வரை கனடா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறவில்லை. இதனைத் தொடர்ந்து பொ.ஆ.1867-ல், ஃபெடரல் டொமினியன் என்னும் புதிய அரசியலமைப்புச் சட்டம் கனடாவில் உருவான பிறகே உள்நாட்டுப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தன.

கனடாவின் கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றிய பெருமை ரயில்வேயையே சாரும். மேற்கு நோக்கிய விரிவாக்கத்துக்கும் ஐரோப்பாவில் சோளம் உள்ளிட்ட பிற பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கும் அமெரிக்காவைப் போலவே கனடாவுக்கும் ரயில்வே உதவியது. ரயில்வே, நீராவி கப்பல், தந்தி வடக்கம்பிகள்ஆகியவை காலனித்துவ வளர்ச்சியின் அனைத்து நிலைமைகளையும் மாற்றி அமைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

பொ.ஆ.1840-க்கு முன்பே நியூசீலாந்தில் ஆங்கிலேயர்களின் குடியேற்றங்கள் ஆரம்பமாகி விட்டன. தீவில் குடியேற்றம் உள்ளிட்ட ஏனைய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ‘நியூசீலாந்து நில நிறுவனம்’ தொடங்கப்பட்டது. பொ.ஆ.1840-ல் பிரிட்டிஷ் மகுடத்தின் காலனித்துவ நாடுகளுள் ஒன்றாக நியூசீலாந்து இணைக்கப்பட்டது.

கனடா நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், புதிய போக்குவரத்து முறைகள் வழங்கும் புதிய பொருளாதார சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்ட, பிரிட்டிஷ் காலனி நாடுகளுள் முதன்மையானது. தற்போது தென் அமெரிக்கக் குடியரசுகளுள், குறிப்பாக அர்ஜெண்டினா குடியரசு, அதன் கால்நடை மற்றும் காஃபி வர்த்தகங்கள் ஐரோப்பிய சந்தையில் அதிகரித்து வருவதை உணரத் தொடங்கியது. இதுவரை ஐரோப்பிய நாடுகளைத் தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், வாசனைத் திரவியங்கள், தந்தம் மற்றும் அடிமைகள் ஆகியவையே ஈர்த்து வந்திருந்தன.

ஆனால், பொ.ஆ.19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய மக்கள் தொகை பெருக்கம் பிரதான உணவுகளுக்காக வெளிநாடுகளின் இறக்குமதியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் அறிவியல் தொழில்துறை வளர்ச்சி மூலப்பொருள்கள், கொழுப்புகள், மசக்கு, ரப்பர் என இதுவரை புறக்கணிக்கப்பட்ட பொருள்களுக்கான தேவையை உருவாக்கியது.

வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பொருள்கள் மூலம் பிரிட்டன், ஹாலந்து மற்றும் போர்சுகல் நாடுகள், வணிக ரீதியாகச் சிறப்பான பலனைப் பெறுவது தெள்ளத் தெளிவானது. பொ.ஆ.1871-க்குப் பிறகு ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள், மூலப் பொருள்கள் பகுதிகள் அல்லது லாபகரமான நவீனமாக்கல் திறன் கொண்ட ஓரியண்டல் நாடுகளைத் தேடத் தொடங்கின. அமெரிக்காவில் ‘மன்றோ கோட்பாடு’ (Monroe Doctrine) மூலம் பாதுகாப்பற்ற நிலங்கள் மீதான அரசியல் சாகசங்களுக்குத் தடை விதித்திருந்த காரணத்தால், அந்நாட்டைத் தவிர உலகெங்கும் மற்ற இடங்களில் இத்தேடல் ஆரம்பமானது.

ஐரோப்பாவுக்கு அருகிலுள்ள ஆப்பிரிக்கா பொ.ஆ.1850 வரை கறுப்பு மர்மங்கள் நிறைந்த கண்டமாகவே கருதப்பட்டது. எகிப்து மற்றும் கடற்கரை தவிர வேறெதுவும் மக்களுக்குத் தெரியாது. இருப்பினும் இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்துக்குள் முதன் முதலில் ஆய்வு செய்தவர்கள், சாகசப் பயணம் மேற்கொண்டவர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் பற்றி இங்கு விவாதிக்கப் போவதில்லை. அதற்குப் போதிய இடமும் இல்லை. பிக்மி (Pigmy) இன மக்கள், ஒகாபி (Okapi) போன்ற வினோதமான விலங்குகள், அழகான மலர்கள், பழங்கள், பூச்சிகள், பறவைகள், உயிர்க்கொல்லி நோய்கள், இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், மலைகள், காட்டாறுகள், பெரிய ஆறுகள், அருவிகள் ஆகியவை ஆய்வுகளில் தெரிய வந்தன. பதிவு செய்யப்படாத, மறைந்து போன சில நாகரிகங்களும் ஜிம்பாப்வேயில் கண்டெக்கப்பட்டன. இந்தப் புதிய உலகில் ஐரோப்பியர்கள் தடம் பதித்தபோது, அங்குள்ள அரேபிய அடிமைகளிடம் ஏற்கனவே துப்பாக்கிகள் இருப்பதையும் நீக்ரோக்களின் வாழ்க்கை ஒழுங்கற்று இருப்பதையும் அறிந்தனர்.

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள், அதாவது பொ.ஆ.1900-ல், ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு வரைபடமானது. ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்கா கண்டத்தைத் தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொண்டன. காலம் காலமாக அங்கு வாழ்ந்த ஆப்பிரிக்கப் பழங்குடி இன மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டது. நல்ல வருவாய் ஈட்டித் தரும் ரப்பர் தோட்டங்களைக் கைப்பற்ற, ஐரோப்பியர்களும் உள்ளூர் மக்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். அங்கிருந்த அரேபிய அடிமைகள் ரப்பர் தோட்டங்களில் கசிக்கிப் பிழியப்பட்டனர். இந்த விஷயத்தில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் நேர்மையாகவும் நாணயமாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்ளவில்லை.

துருக்கி சாம்ராஜ்யத்தின் கீழ் நீண்ட காலமாக எகிப்து இருந்தாலும் பொ.ஆ.1883-ல் பிரிட்டனின் முழு கட்டுப்பாட்டுக்குள் எப்படியோ எகிப்து வந்தது. இந்தப் போட்டியில் ஃபிரான்ஸும் களமிறங்கிப் பிரிட்டனுடன் மோதியது. பொ.ஆ.1898இல் கர்னல் மார்சந்த் (Marchand) நைல் ஆற்றங்கரைப் பகுதியைக் கைப்பற்ற மேற்குக் கடற்கரையிலிருந்து மத்திய ஆப்பிரிக்காவுக்குள் ஊடுருவினார்.

ஆரஞ்சு நதி மாவட்டம் மற்றும் ட்ரான்ஸ்வால் பகுதிகளைச் சேர்ந்த போயர் (Boers) மற்றும் டச் குடியேற்றக்காரர்கள் தென்னாப்பிரிக்காவில் சுதந்திரக் குடியரசுகளை அமைக்க பிரிட்டிஷ் முதலில் அனுமதி வழங்கியது. பின்னர் 1877-ல் தன்னோடு இணைத்துக் கொண்டதை எதிர்த்து ட்ரான்ஸ்வால் போயர் இன மக்கள் 1881 மஜுபார் ஹில் (Majubar Hill) என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டுத் தங்கள் பகுதியை மீட்டுக் கொண்டனர். ஆனால், 1899-ல் மீண்டும் நடைபெற்ற போரில் ட்ரான்ஸ்வால் போயர்கள் மற்றும் டச் குடியேற்றக்காரர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்து, இரு குடியரசுகளையும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் மறுபடியும் இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பொ.ஆ.1907-ல் ஏகாதிபத்திய அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கப் பிரச்னையை, லிபெரல்கள் (Liberals) கையில் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பிலுள்ள கேப் காலனி (Cape Colony) மற்றும் நேடால் (Natal) ஆகியவற்றுடன் கூட்டாகச் செயல்படவும் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் தன்னாட்சிக் குடியரசுகளாகத் தொடரவும் போயர்களும் டச் குடியேற்றக்காரர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

அடுத்த அரை நூற்றாண்டில், மூன்று சிறிய நாடுகளைத் தவிர ஆப்பிரிக்கா கண்டத்தின் பிரிவினை முழுமை அடைந்தது. மேற்குக் கடற்கரையோரத்தில் விடுதலை பெற்ற நீக்ரோக்கள் வாழும் லைபீரியா (Liberia); முஸ்லிம் சுல்தானின் ஆட்சியின் கீழிருந்த மொராக்கோ (Morocco); பண்டைய மற்றும் விநோதமான பழக்கங்கள் கொண்ட ஒரு வகை கிருத்தவர்கள் வாழும் பழங்குடிப் பகுதியான அபிசினியா (Abyssinia); பொ.ஆ.1896-ல் அடோவா (Adowa) என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இத்தாலியை வீழ்த்தி அபிசினியா தனது சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *