Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #41

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #41

63. ஆசியாவில் ஐரோப்பிய ஆக்கிரமிப்பு மற்றும் ஜப்பானின் எழுச்சி

உலக விவகாரங்களின் நிரந்தரப் புதிய தீர்வாக, ஐரோப்பிய வண்ணங்களில் அவசர கதியில் வரையப்பட்ட ஆப்பிரிக்க வரைபடத்தை எப்படிப் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நம்புவது கடினம். ஆனால், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதைப் பதிவு செய்வது வரலாற்றாசிரியரின் கடமை. பொ.ஆ.19-ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் மனத்தில், ஆழமான வரலாற்றுப் பின்னணியோ விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ பழக்கமோ இல்லை.

ஐரோப்பியர்களுக்குப் பழைய உலகின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் மேற்கத்திய எந்திரவியல் புரட்சி அளித்த தற்காலிக நன்மைகளையே மக்கள் பெரிதாகக் கருதினர். மனித இனத்தின் ஐரோப்பியத் தலைக்கு, நிரந்தர மற்றும் உறுதியான சான்றுகளாக விளங்கும் மங்கோலியர்களின் வெற்றிகள் உள்ளிட்ட நிகழ்வுகளை அவர்கள் முற்றிலும் அறியவில்லை. அறிவியலையும் அதன் பலனையும் மாற்றும் தன்மை தெரியவில்லை. பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களைப் போன்று சீனர்களும் இந்தியர்களும் ஆய்வு பணியைச் சிறப்பாகத் தொடர முடியும் என்பதையும் உணரவில்லை. ஐரோப்பியர்களுக்கு என்றென்றும் உலக மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும்வகையில், மேற்கில் உள்ளார்ந்த மற்றும் அறிவார்ந்த உந்துதல் இருப்பதாகவும் கிழக்கில் உள்ளார்ந்த அலட்சியமும் பழமைவாதமும் இருப்பதாக நம்பினர்.

இம்மேலாதிக்கத்தின் விளைவு காரணமாகப் பல்வேறு ஐரோப்பிய அயலக அலுவலகங்கள், உலகின் காட்டுமிராண்டித்தனமான மற்றும் வளர்ச்சி அடையாத பகுதிகளுக்காக, ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டனர். மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட, பண்பட்ட ஆசிய நாடுகளைச் சீர்திருத்துகிறோம் என்ற போர்வையில் சுரண்டவும் ஆரம்பித்தனர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் உள்ளே ஆபத்தான ஆனால் வெளியே அற்புதமான ஏகாதிபத்யம்; கிழக்கு இந்தியத் தீவுகளில் டச்சுக்காரர்களின் விரிவான இலாபமரமான ஆக்கிரமிப்புகள்; சரிந்து கொண்டிருக்கும் ஓட்டோமென் சாம்ராஜ்யம் ஆகியவை ஆதிக்க சக்திகளின் கனவுகளை நனவாக்க உதவின.

பொ.ஆ.1898-ல் சீனாவின் கியாவ் சாவ் (Kiau Chau) பகுதியை ஜெர்மனியும் வீ-ஹாய்-வீ (Wei-hai-wei) பகுதியை பிரிட்டனும் போர்ட் ஆர்தர் (Port Arthur) துறைமுகத்தை ரஷியாவும் கைப்பற்றின. இதைத் தொடர்ந்து சீனர்கள் மத்தியில் ஐரோப்பியர்கள் மீது வெறுப்புணர்வு அதிகரித்தது. பொ.ஆ.1900-ல் ஏராளமான ஐரோப்பியர்களும் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். தலைநகர் பீகிங்கில் (Peking) நிறுத்தப்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளை முற்றுகையிட்டுப் பயங்கரத் தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்த ஐரோப்பியர்கள், பழி வாங்கும்முகமாகப் பெரும்படையை அனுப்பி முற்றுகையிடப்பட்ட தங்கள் படையை விடுவித்துக்கொண்டனர். மேலும் தண்டனைத் தொகையாகப், பெரும் செல்வத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். சீனாவின் மஞ்சூரியா பகுதியை ரஷியா கைப்பற்ற, திபெத் மீது 1904-ல் பிரிட்டன் படையெடுத்தது.

ஆதிக்க சக்திகளின் போராட்டத்துக்கு நடுவே புதிய சக்தி உருவானது. ஆம். அதுதான் ஜப்பான். இதுவரை வரலாற்றில் ஜப்பானின் பங்களிப்பு மிகக் குறைவே. ஜப்பானின் தனித்துவமான நாகரிகம் மனித இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அளவுக்கோ வடிவமைக்கும் அளவுக்கோ, மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவில்லை. ஜப்பானியர் மங்கோலிய இனத்தினர்; நாகரிகம், எழுத்து, இலக்கியம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தும் சீனர்களிடமிருந்து பெறப்பட்டவை. ஜப்பானின் வரலாறு சுவாரஸ்யமானது மற்றும் அழகானது. கிறிஸ்தவ சகாப்தத்துக்கு முந்தை நூற்றாண்டுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பு மற்றும் வீரம் கொண்ட அமைப்பை உருவாக்கினர். கொரியா மற்றும் சீனா மீதான ஜப்பானின் தாக்குதல்களை, ஃபிரான்ஸில் நடைபெற்ற ஆங்கிலேயர்களின் போர்களுக்கு சமமாகக் கூறலாம்.

பொ.ஆ.16-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுடன் ஜப்பானுக்குத் தொடர்பு உண்டானது. பொ.ஆ.1542-ல் போர்ச்சுகீஸியர்கள் ஜப்பானை அடைந்தனர். பொ.ஆ.1549-ல், இயேசு திருச்சபையின் ஃப்ரான்சிஸ் சேவியர், ஜப்பானில் தனது மதப் பிரசங்கத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஜப்பான் கிறிஸ்தவ மிஷினரிகளை விரும்பி வரவேற்றது. இதைத் தொடர்ந்து மத மாற்றங்களும் அதிக அளவில் நிகழ்ந்தன. மிகப் பெரிய கப்பல்களின் கட்டுமானப் பணிகளுக்கு, வில்லியம் ஆடம்ஸ் ஜப்பானின் நம்பிக்கைக்கு உகந்த ஆலோசகராக விளங்கினார். ஜப்பானில் கட்டப்பட்ட கப்பல்கள் இந்தியா மற்றும் பெரு நாடுகளுக்குப் பயணம் செய்தன. ஜப்பானியர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அங்கு தடம் பதித்த ஸ்பானிஷ் டொமினிஷியன்கள், போர்சுகீஸிய ஜெசூட்கள், பிரிட்டிஷ் மற்றும் டச்சு புராடெஸ்டெண்ட்கள், ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியதுடன், எச்சரிக்கையுடன் இருக்கவும் ஜப்பானியர்களைப் பணித்தனர்.

கிறிஸ்தவத்தைப் பரப்பும் முனைவில் ஜெசூட்கள், அங்குள்ள பௌத்தர்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். நிறைவாக ஐரோப்பியர்கள் குறிப்பாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் சகிக்க முடியாத தொல்லை என்னும் முடிவுக்கு ஜப்பானரியர்கள் வந்தனர். குறிப்பாகப், போப் மற்றும் ஸ்பானிஷ் முடியாட்சியின் அரசியல் கனவுகளை நனவாக்கும் மறைமுகத் திட்டமுடனேயே, கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஜப்பான் வந்துள்ளனர் என்பதையும் அறிந்து கொண்டனர். கிறிஸ்தவர்கள் வந்த நோக்கம் தெள்ளத் தெளிவானதால் விரட்டி அடிக்கப்பட்டனர்.

பொ.ஆ.1638-ல் ஜப்பானிலிருந்த ஐரோப்பியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், மீண்டும் நுழைவதற்கும் ஜப்பான் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இவ்வாறாக, ஐரோப்பியர்கள் எவரும் உள்ளே நுழையா வண்ணம் ஜப்பானின் கதவுகள் மூடப்பட்டன. ஐரோப்பாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. பெரிய அளவிலான கப்பல்களைக் கட்டத் தடை விதிக்கப்பட்டது. கரையோரப் படகுகள் அல்லது சிறிய மீன்பிடிப் படகுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக, ஜப்பானிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வதும் அயல் நாடுகளிலிருந்து ஜப்பானுக்குக் கப்பல் மூலம் ஐரோப்பியர் வருவதும் முற்றிலுமாக நின்று போனது.

அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு ஜப்பான் உலக வரலாற்றின் பிரதான நீரோட்டத்திலிருந்து விலகியே இருந்தது. அழகிய நிலப்பிரபுத்துவ நிலையில் வாழ்ந்த ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில், 5% சாமுராய் அல்லது சண்டையிடும் மனிதர்கள் மற்றும் பிரபுக்களும் அவர்களின் குடும்பத்தினரும் ஆவர். இவர்கள் மீதமிருந்த 95% மக்களை அடக்கி ஆண்டு கொடுங்கோலாட்சி செய்து வந்தனர். இந்நிலை முடிவுக்கு வருவதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஜப்பானுக்கு வெளியே இருந்த மிகப் பெரிய உலகம் தொலைநோக்குப் பார்வை, சிந்தனை மற்றும் புதிய ஆற்றலுடன் வளரத் தொடங்கியது.

தேஷிமா (Deshima) தீவுகளில் தங்களது குடியிருப்பை நிறுவிய டச்சுக்காரர்கள் மூலம் மேற்கத்திய உலகின் அபரிமித வளர்ச்சிக்கு இணையாக, ஜப்பான் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்னும் செய்தி வெளியுலகுக்குப் பரவியது. பொ.ஆ.1837-ல் கோடுகள் மற்றும் நட்சத்திரங்களைக் கொண்ட விநோதமான கொடியுடன், ஜப்பானிய மாலுமிகளைக் கொண்ட ஒரு கப்பல் யேடோ (Yedo) விரிகுடாவுக்குள் ஊடுருவியது. பீரங்கித் தாக்குதல் மூலம் அது விரட்டி அடிக்கப்பட்டது.

பொ.ஆ.1853-ல் கமாடோர் பெர்ரியின் (Commodore Perry) தலைமையில் நான்கு அமெரிக்கப் போர்க் கப்பல்கள் தடை செய்யப்பட்ட கடல்பகுதியில் நங்கூரமிட்டன. ஜப்பானுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து முன்மொழிவுகளை பெர்ரி அனுப்பி வைத்தார். வலுவாக இல்லாத காரணத்தால் ஜப்பானால் முன்மொழிவை மறுக்க முடியவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திட 500க்கும் அதிகமான போர் வீரர்களுடன் கமாண்டர் பெர்ரி ஜப்பான் வீதிகளில் ஊர்வலமாக வந்ததை வெளி உலகம் நம்ப முடியாமல் ஆச்சரியமாகப் பார்த்தது.

அமெரிக்காவைத் தொடர்ந்து, ரஷியா, ஹாலந்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானைக் குறிவைத்துக் களமிறங்கின. ஷிமோனோசெகி (Shimonoseki) ஜலசந்தியில் ஆதிக்கம் செலுத்திய ஜப்பானியப் பிரபு ஒருவன் அந்நியக் கப்பல்கள் மீது குண்டு வீச, இதையே வாய்ப்பாகக் கருதிய பிரிட்டிஷ், ஃபிரெஞ்ச், டச் மற்றும் அமெரிக்கப் போர்க் கப்பல்கள், அவருடைய கப்பல்களைக் குண்டு வீசி முற்றிலுமாக அழிந்தன. இந்தக் கூட்டணிப் படையின் நிர்பந்தம் காரணமாக, பொ.ஆ.1865-ல் கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஜப்பான் தன்னைச் சுற்றித் தானே வரைந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தது. வெளி உலகமும் ஜப்பானுக்காகத் தங்கள் கதவுகளைத் திறந்து வரவேற்றது.

இந்நிகழ்வுகள் ஜப்பானியர்களை அவமானத்தின் உச்சிக்குத் தள்ளின. வியக்கத்தக்க ஆற்றல் மற்றும் புத்திசாலித்தனம் கொண்ட ஜப்பானியர்கள், தங்கள் நாகரிகத்தையும் கலாசாரத்தையும் மீட்டெடுக்க முடிவெடுத்தனர். மனிதகுல வரலாற்றில் ஜப்பானைப்போல் வேறெந்த நாடும் கடுமையாக உழைத்து முன்னேறவில்லை. பொ.ஆ.1866-ல் இடைக்கால மக்களாக, புனைவிய நிலப்பிரபுத்துவக் கலவையாக விளங்கிய ஜப்பான், பொ.ஆ.1899-ல் ஐரோப்பிய சக்திகளுக்கு இணையான முன்னேற்றத்தைக் கண்டது. ஆசியாக் கண்டம் எப்போதுமே ஐரோப்பாவை விடப் பின்தங்கியே இருக்கும் என்னும் எண்ணத்தை உடைத்தெறிந்தது. ஐரோப்பாவின் முன்னேற்றம் ஒப்பீட்டு அளவில் மந்தமே என்பதையும் ஜப்பான் நிரூபித்தது.

பொ.ஆ.1894-95-ல் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையேயான போர் பற்றி அதிகம் விளக்கப் போவதில்லை. மேற்கத்திய பாணியில் ஜப்பான் தனது படைகளை நவீனப்படுத்தியிருந்தது. ஜப்பானின் மறுமலர்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, பிரிட்டனும் அமெரிக்காவும் அதை ஓர் ஐரோப்பிய நாடாகவே கருதிப் பாராட்டின. ஆனால், ஆசியாவில் புதிய இந்தியாக்களைத் தேடுவதில் ஈடுபட்டிருந்த ஏனைய ஐரோப்பிய நாடுகள், இதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதற்கிடையே, மஞ்சூரியா வழியாக கொரியாவுக்குள் ரஷியா ஊடுருவியது.

வியட்னாமின் டோன்கின் (Tonkin) மற்றும் அன்னம் (Annam) பகுதிகளில் ஃப்ரான்ஸ் ஏற்கனவே காலூன்றி இருந்தது. ஜெர்மனியும் தனது பங்குக்குத் தீவிரமாக அண்டை நாடுகளை வேட்டையாடிக் கொண்டிருந்தது. பொ.ஆ.1894-95 ஜப்பான் – சீனா போரில் ஜப்பான் வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம் ஜப்பான், ஐரோப்பாவின் மீது எந்த ஆக்கபூர்வ தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் பிரிட்டன், ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் தெளிவாக இருந்தன. போரில் களைத்துப் போயிருந்த ஜப்பான் மீது படையெடுக்கப் போவதாக இம்மூன்று நாடுகளும் அச்சுறுத்தின.

எப்போது வேண்டுமானலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்னும் நிலையில் அதைச் சமாளிக்க ஜப்பான் தனது படைகளை மீண்டும் சீரமைத்து வலுப்படுத்தியது. அடுத்த பத்தாண்டுகளில் ரஷியாவை எதிர்கொள்ளத் தயாரானது. ஐரோப்பிய ஆணவத்துக்குச் சமாதிகட்டும் வகையில், ஆசிய வரலாற்றில் இதுவொரு சகாப்தம். ரஷிய மக்கள் அப்பாவிகள். தங்களைச் சுற்றி பின்னப்பட்ட வலையையும் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதையும் அறியாதவர்கள். ரஷியாவின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் அறிஞர்கள், ரஷியா மீது திணிக்கப்படும் முட்டாள்தனமான போரை எதிர்த்தனர்.

ஆனால், ஜார் மன்னரைச் சுற்றியுள்ள க்ராண்ட் ட்யூக்ஸ் (Grand Dukes) மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட சில சுயநலமிகள், அவரைப் போருக்குத் தூண்டிவிட்டனர். ஆர்தர் துறைமுகத்துக்கும் கொரியாவுக்கும் ஜப்பானிய வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். ரஷியாவுக்கும் ஜப்பானுக்கும் நடைபெற்ற போரில் ரஷியா படுதோல்வி அடைந்தது. ரஷியாவின் பால்டிக் கப்பல் படை ஷூஷிமா ஜலசந்தியில் (Straits of Tshushima) மூழ்கடிக்கப்பட்டது. சைபீரியன் ரயில்வே பாதை வழியாக ரயில்களில் அனுப்பிவைக்கப்பட்ட ஏராளமான ரஷிய விவசாயிகளும் போர் வீரர்களும் போர்க்களத்தில் மரணத்தைத் தழுவினர்.

ரஷியாவின் தோல்வியை அடுத்து, ஜார் மன்னருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. அவரை எதிர்த்துப் பொதுமக்கள் திரண்டெழுந்தனர். பொ.ஆ.1905-ல் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு, பொ.ஆ.1875-ல் கைப்பற்றிய தெற்கு சகேலென் (Saghalein) பகுதியில் பாதியையும் மன்சூரியாவையும் கொரியாவையும் அபராதமாக, ஜப்பானிடம் ஒப்படைத்தார். இவ்வாறாக ஆசியாவில் ஐரோப்பியர்கள் ஊடுருவலும் படையெடுப்பும் ஒரு வழியாக முடிவுக்கு வரவே கூடாரங்களைக் காலி செய்துகொண்டு நாடு திரும்பினர்.

64. 1914-ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்

பொ.ஆ.1914-ல் நிலவிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் கூறுகளின் மாறுபட்ட தன்மையை, நீராவிக் கப்பலும் ரயில்வேயும் எவ்வாறு ஒருங்கிணைத்தன என்பதை இங்கு நாம் சுருக்கமாகக் காணலாம். அதுவொரு தனித்துவமான அரசியல் சேர்க்கை. முன்னெப்போதும் இதுபோல் நிகழ்ந்ததில்லை.

அயர்லாந்து உட்பட (கணிசமான அயர்லாந்து மக்களின் விருப்பத்துக்கு எதிராக) ஐக்கிய பிரிட்டிஷ் ராஜ்யத்தின் ‘மகுடம் சூட்டிய குடியரசு’ (Crowned Republic) முழு அமைப்புக்கும் முதன்மையானதும் மையமானதும் ஆகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய மூன்று ஐக்கிய நாடாளுமன்றங்களால் உருவாக்கப்பட்டதே பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகும். இதன் பெரும்பான்மை முடிவுப்படியே, அமைச்சரவையின் தலைமை, தரம் மற்றும் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பிரிட்டிஷ் உள்நாட்டு அரசியலில் இருந்து வெளிப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். இந்த அமைச்சகமே, ஏனைய சாம்ராஜ்யத்தின் மீது அமைதி மற்றும் போர் அதிகாரங்களைக் கொண்ட உச்ச அரசாங்கமாக இருந்தது.

பிரிட்டனுக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை ‘மகுடம் சூட்டிய குடியரசுகளான’ ஆஸ்திரேலியா, கனடா, நியூஃபௌண்ட்லாந்து (1583 முதல் பிரிட்டிஷ் உடைமை), நியூசீலாந்து, தென் ஆஃபிரிக்கா, ஆகிய நாடுகள். இவை கிரேட் பிரிட்டன் கூட்டணியிலுள்ள, நடைமுறையில் சுதந்திர மற்றும் சுய-ஆட்சி நாடுகளாகும். ஆனால் ஒவ்வொன்றிலும் அரசு நியமித்த பிரிட்டிஷ் மகுடத்தின் பிரதிநிதி அங்கம் வகிப்பார்.

அடுத்து, சார்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட ராஜ்யங்களுடன், பலுசிஸ்தான் தொடங்கி ஏடன், பர்மா வரையிலான முகலாய சாம்ராஜ்யத்தின் நீட்சியாக விளங்கும் இந்திய சாம்ராஜ்யம். பிரிட்டிஷ் மகுடமும் கிழக்கிந்திய கம்பெனி அரசாங்கமும் (பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டின் கீழ்) அசல் துருக்குமன் (Turkoman) வம்சத்தைப் போலவே ஆட்சி நடத்தின. அடுத்து, எகிப்தின் தெளிவற்ற உடைமை. பெயரளவில் துருக்கிப் பேரரசின் ஒரு பகுதியாகச், சொந்த மன்னராக கெடிவெ (Kedive) இருந்தாலும் சர்வாதிகார பிரிட்டிஷ் அதிகாரப்பூர்வ ஆட்சியின் கீழ் இருந்ததே நிஜம். இன்னும் தெளிவில்லாத ‘ஆங்கிலோ-எகிப்திய சூடான் மாகாணம்’ பிரிட்டிஷ் மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலுள்ள எகிப்திய அரசால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டது.

பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மால்டா ஜமைகா பஹாமாஸ் பெருமுடா நாடுகள் ஆகியவற்றில் நியமிக்கப்பட்ட செயல் அதிகாரிகள், பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த மற்றும் சேராத ஏராளமான பகுதி சுய-ஆட்சி சமூகங்கள். பிறகு, சிலோன் டிரினிடாட் ஃபிஜி (நியமிக்கப்பட்ட கௌன்சில்), ஜிப்ரால்டர் புனித ஹெலினா (ஆளுநர்) ஆகிய நாடுகளில் காலனித்துவ அலுவலகங்கள் மூலம் பிரிட்டிஷ் உள்துறை அரசின், பிரிட்டிஷ் மகுடத்தின் ஆட்சி.

வெப்பமண்டலப் பகுதிகள், பண்படாத உற்பத்திப் பகுதிகள், அரசியல் ரீதியாகப் பலவீனமான மற்றும் பாதுகாக்கப்பட்ட நாகரிமற்ற பூர்விக சமூகங்கள் ஆகியவை ஹை கமிஷனர் (பஸ்டோலாந்து போன்று) அல்லது சார்டர்ட் நிறுவனத்தால் (ரொடீஷியா போன்று) நிர்வகிக்கப்பட்டன. சில சமயங்களில் வெளியுறவு அலுவலகம் அல்லது காலனித்துவ அலுவலகம் ஆகியவை கைப்பற்றிய இடங்களை நிர்வகித்தாலும் பெரும்பாலும் காலனித்துவ அலுவலகமே இப்போது முழுப் பொறுப்பையும் வகிக்கிறது.

மேற்கண்டவை மூலம் எந்த ஒரு அலுவலகமோ எந்த ஒரு மூளையுமோ பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவு. இதற்கு முன்பு சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்டவற்றிலிருந்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சிகள் மற்றும் குவிப்புகளின் கலவையாக இருந்தது. இது பரந்துபட்ட அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்தது. எனவேதான், அதிகாரப்பூர்வக் கொடுங்கோன்மையும் பற்றாக்குறையும் அலட்சியமும் இருந்தபோதிலும் பல இனங்களின் சகிப்புத்தன்மையோடு நீடித்து நிலைக்க முடிந்தது. ஏதெனிய (Athenian) சாம்ராஜ்யத்தைப் போலவே, பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் ஓர் அயலக சாம்ராஜ்யமே. அதன் மார்க்கம் கடல் வழிகள். பொதுவான இணைப்பு பிரிட்டிஷ் கடற்படை.

எல்லா சாம்ராஜ்யங்களைப் போலவே, பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஒருங்கிணைப்பும் தகவல் தொடர்பு முறையைச் சார்ந்தே இருந்தது. பொ.ஆ.16 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மாலுமி, கப்பல் கட்டுதல், நீராவிக் கப்பல்கள் ஆகியவற்றின் வளர்ச்சி இவையெல்லாம் ‘பிரிட்டிஷ் பாணி அமைதி’க்கு (Pax Britannica) வழிவகுத்தது. இருப்பினும் ஆகாயம் மற்றும் வேகமான தரைப்போக்குவரத்தின் புதிய வளர்ச்சிகள் பின்னாளில் இதற்கு எந்நேரமும் இடையூறு விளைவிக்கத் தயாராக இருந்தன.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *