65. ஐரோப்பாவின் ஆயுதக் காலமும் 1914-18 உலக யுத்தமும்
அமெரிக்காவில் நீராவிப் படகு மற்றும் ரயில்வேயை உருவாக்கிய, உலகம் முழுவதும் பிரிட்டிஷ் நீராவிக் கப்பல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய, பொருள் அறிவியலின் முன்னேற்றம் ஐரோப்பிய கண்டத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது. மனித வாழ்க்கையில் குதிரைகள் போக்குவரத்துக்குப் பயன்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்ததை உணர்ந்திருந்தனர். கடல் கடந்த அயலக விரிவாக்கத்தை பிரிட்டன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. ரஷியா மட்டுமே கிழக்கு நோக்கிய திசையில் சைபீரிய வரை ரயில்வேயை விரிவுபடுத்தியது. ஜப்பானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகத், தென் கிழக்கு ஆசியாவில் பாரசீகம் மற்றும் இந்திய எல்லைகள்வரைத் தனது கவனத்தைத் திருப்பி, பிரிட்டனை எரிச்சலூட்டியது.
மனித வாழ்வின் முழு சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து கொள்வதற்கு, ஏனைய ஐரோப்பிய சக்திகள், தங்கள் விவகாரங்களைப் பரந்த அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டியிருந்தது. அது, ஏதோவொரு தன்னார்வ ஒருங்கிணைப்பு அல்லது சில ஆதிக்க சக்திகளால் திணிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாக இருக்கலாம். நவீன சிந்தனையின் போக்கு, முந்தைய மாற்று திசையில் இருந்தாலும் அனைத்து அரசியல் பாரம்பரியச் சக்தியும் ஐரோப்பாவைப் பிந்தியதை நோக்கியே உந்தித் தள்ளியது.
மூன்றாம் நெப்போலியன் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, புதிய ஜெர்மன் சாம்ராஜ்யத்தின் ஸ்தாபனம் ஜெர்மனியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட ஐரோப்பா என்னும் சிந்தனையை நோக்கி, மக்களின் நம்பிக்கையையும் அச்சத்தையும் தூண்டியது. கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக ஐரோப்பிய அரசியலில் நிலவிய அசாதாரண அமைதியே, இதைச் சாத்தியப்படுத்தும் மையக் கருத்தாகம். சார்லே மேக்னே சாம்ராஜ்யம் பிளவுபட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய அரசியலில் முன்னிலை வகிக்க வேண்டுமென ஜெர்மனியுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்த ஃபிரான்ஸ், தனது பலவீனத்தை உணர்ந்து கொண்டு ரஷியாவுடன் நெருக்கமானது. ஆஸ்திரிய சாம்ராஜ்யத்துடன் ஜெர்மனி இணைந்து கொண்டது. முதலாம் நெப்போலியன் காலத்திலேயே, ஆஸ்திரியா புனித ரோமன் சாம்ரஜ்யம் என்னும் தகுதியை இழந்துவிட்டது.
காண்டினெண்டல் விவகாரங்களில் முதலில் பிரிட்டன் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதுபோல் இருந்தது. ஆனால் ஜெர்மன் கடற்படையின் தீவிர வளர்ச்சியைத் தொடர்ந்து, ஃப்ரான்கோ ஜெர்மன் குழுவுடன் படிப்படியாகத் தன்னை நெருக்கமாக இணைத்துக் கொண்டது. இரண்டாம் வில்லியம் சக்ரவர்த்தி (1888-1918) கடல் கடந்த அயலக விஷயங்களில் ஜெர்மனியை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதால், பிரிட்டன், ஜப்பான் மற்றும் அமெரிக்க நாடுகளை அதன் எதிரிகளாக்கியது.
மேற்கூறிய நாடுகள் அனைத்தும் காலப்போக்கில் ஆயுதங்கள், தளவாடங்களுடன், தங்கள் ராணுவத்தைப் பலப்படுத்திக் கொண்டன. ஆண்டுக்கு ஆண்டு துப்பாக்கிகள், கருவிகள், போர்க் கப்பல்கள், பீரங்கிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்தன. போர் மேகங்கள் சூழ்ந்து கொள்ள, போர் வெடிக்கும் அபாயம் தொலை தூரத்தில் இல்லை என்பது தெளிவானது. ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் கூட்டாகப் ஃபிரான்ஸ், ரஷியா மற்றும் செர்பியா மீது போர் தொடுத்தன. பெல்ஜியம் வழியாக ஜெர்மன் படைகள் ஊடுருவியவுடன், ஜப்பானுடன் இணைந்து பிரிட்டன் அதற்கு ஆதாவுக் கரம் நீட்டியது. ஜெர்மன் நாட்டுடன் துருக்கி சேர்ந்து கொண்டது. பொ.ஆ.1915-ல் ஆஸ்திரியாவுக்கு எதிராக இத்தாலி களமிறங்கியது. ஜெர்மனிக்கு எதிராக பொ.ஆ.1916 ருமேனியாவும் பொ.ஆ.1917-ல் அமெரிக்காவும் சீனாவும் போரில் குதிக்க நிர்பந்திக்கப்பட்டன.
இவர்கள் யார் சரி யார் தவறு? யார் போருக்குக் கரரணம்? என்னும் வாத விவாதங்களில் இறங்கப் போவதில்லை. இந்தப் ‘பெரிய போர்’ ஏன் தொடங்கியது என்னும் கேள்வியை விடவும் இதை முன்கூட்டியே எதிர்பார்த்துத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஏன் யாரும் ஈடுபடவில்லை என்னும் கேள்வியே முக்கியம் மற்றும் சுவாரஸ்யமானது. கோடிக்கணக்கான மனிதர்கள் ‘தேசபக்தி மிக்க முட்டாள்களாக’, அக்கறையின்றிப், பொறுப்பின்றி இந்தப் பேரழிவைத் தடுக்கத் தவறிவிட்டனர். ஐரோப்பிய ஒற்றுமை என்னும் போர்வையில், இயக்கத்தை வழிநடத்திய சிறிய குழுவே, இப்போரில் தீவிரம் செலுத்தியது என்பது மனித குலத்துக்கே கொடுமையான விஷயம்.
போர் தொடர்பான நுணுக்கமான விஷயங்களை இங்கே விரிவாகப் பதிவு செய்வது சாத்தியமில்லை. அடுத்த சில மாதங்களில், நவீன தொழில்நுட்ப அறிவியல் போரின் தன்மையையே மிக ஆழமாக மாற்றிவிட்டது. அறிவியல் அதிகாரத்தை, எஃகு மீதான அதிகாரத்தை, தொலை தூரம் மீதான அதிகாரத்தை, நோய் மீதான அதிகாரத்தை, வழங்குகிறது. ஆனால், அதிகாரம் நன்றாக அல்லது மோசமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது, உலகின் தார்மிக மற்றும் அரசியல் நுண்ணறிவைப் பொறுத்தே அமையும்.
வெறுப்பு மற்றும் சந்தேகத்தின் பழங்காலக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஐரோப்பாவின் அரசுகள், தங்களிடம் அழிவு மற்றும் எதிர்ப்பின் முன்மாதிரியற்ற சக்திகள் இருப்பதை, உணர்ந்தனர். இந்தப் போர் உலகெங்கும் தீயாகப் பரவி இழப்புகளை ஏற்படுத்தியது. முதல் கட்டப் போரில் பாரிஸ் மீது ஜெர்மனியும் கிழக்குப் ப்ரஷியா மீது ரஷியாவும் படையெடுத்தன. பின்னர் இரு படையெடுப்புகளும் திரும்பப் பெறப்பட்டன. தாக்குதல் முறையிலிருந்து பதுங்குகுழிகள் அமைத்துக்கொண்டு தற்காப்பு முறைக்குப் போர் மாறியது. ஐரோப்பா முழுவதும் எதிரெதிர் நாடுகள் பதுங்கு குழிகளில் படைகளை நிலைநிறுத்தின. அதிக அளவிலான இழப்பும் சேதாரமும் இன்றி, முன்னேற்றம் சாத்தியப்படவில்லை.
படை வீரர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியது. இவர்களுக்குத் தேவையான உணவு, உடை, ஆயுதங்கள் ஆகியவற்றைச் சம்பந்தப்பட்ட நாட்டின் மக்களே கவனிக்கும் அளவுக்குக் கட்டமைக்கப்பட்டன. ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே தயாரிக்க அனுமதிக்கப்பட்டன. வேறெந்தப் பொருளின் உற்பத்திக்கும் தடை விதிக்கப்பட்டது. உடல் வலுவும் திறனுமுள்ள ஆண்கள் ராணுவத்திலும் கடற்படையிலும் வீரர்களாகவோ, ஆயுதங்கள் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணியாளர்களாகவோ ஈடுபடுத்தப்பட்டனர். தொழிற்சாலைகளில் பெண்கள் அதிக அளவில் பணி அமர்த்தப்பட்டனர்.
இந்தப் போரில் ஐரோப்பிய மக்கள் தொகையின் சரி பாதியினர் தங்கள் வேலையை மாற்றிக் கொண்டோ, மாற்ற நிர்பந்திக்கப்பட்டோ, விரும்பியோ, விரும்பாமலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சம்பந்தப்பட்ட நாடுகளின் ராணுவப் பணியில் இணைந்து கொண்டனர். சமூக ரீதியாக வேரோடு பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடப்பட்டனர். கல்வி, அறிவியல் பணிகள் கட்டுப்படுத்தப்பட்டன அல்லது ராணுவப் பணிக்குத் திருப்பி விடப்பட்டன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. சுதந்திரமாகக் கருத்துகளை வெளியிடப் பத்திரிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ராணுவம் விடுக்கும் செய்திகளும் அரசுக்குச் சாதகமாகவும் ஆதரிக்கும் பிரசாரங்களுமே வெளியாயின.
முன்னேற்றமின்றி காணப்பட்ட போர் நடவடிக்கைகள், திடீரென ராணுவங்களுக்கு உதவி செய்த மக்கள் மீதும் அவர்கள் வழங்கும் உணவுப் பொருள்கள் மீதும் திரும்பின. ஆகாயப் படை விமானங்கள் மூலம் தாக்குதல் நடைபெற்றது. தொலை தூரம் சுடும் நவீன துப்பாக்கிகள், பீரங்கிகள், சக்தி வாய்ந்த விஷ வாயு நிரப்பட்ட கையெறி குண்டுகள் ஆகியவை பதுங்குக் குழிகள் மீது வீசப்பட்டன. மண்ணோடு மண்ணாக வீரர்கள் செத்து மடிந்து சமாதி ஆகவோ, பதுங்கு குழிகளை விட்டு வெளியேறவோ, இந்த யுக்தியை அனைவரும் கையாண்டனர். முப்படைகளுள் ஆகாய விமானப் படையே புரட்சிகரமாவும் தீவிர நாசகாரப் படையாகவும் விளங்கியது.
மனித வரலாற்றில் இதுவரை நடந்த முந்தைய போர்களில், சண்டையிடும் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட இரண்டு இடங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் இப்போது எல்லா இடங்களிலும் எல்லா நாடுகளும் சண்டையிட்டன. எப்போது, எங்கு, எப்படி குண்டு விழும் என்னும் அச்சத்தில் மக்கள் உறைந்தனர். ஜெப்பேலின் (Zeppelin) என்ற பெயருடன் குண்டுகள் வீசித் தாக்கும் போர் விமானம் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இது எதிரிகளின் படைகள் மீது குண்டு வீசி அழிப்பதைத் தாண்டி, மக்கள் வாழும் குடியிருப்புகள் மீதும் குண்டு வீசி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. ராணுவப் படையை மட்டுமே தாக்க வேண்டும் அப்பாவிக் குடிமக்களைத் தாக்கக்கூடாது என்னும் பண்டைய பண்பாடும் நாகரிகமும் இப்போர்களில் பின்பற்றப்படவில்லை. அத்தகைய கொள்கை பழங்கதை ஆகிவிட்டது.
சம்பந்தப்பட்ட எதிரி நாட்டின் ராணுவத்துக்காக உணவு தானியங்களை உற்பத்தி செய்தவர்கள், ஆயுதங்கள் தளவாடங்கள் தயாரித்தவர்கள், உடைகள் தைத்தவர்கள், மரத்தை வெட்டி குடியிருப்புகளைக் கட்டியவர்கள், ரயிலில் வீரர்களை ஏற்றிச் சென்ற ஊழியர்கள் என ராணுவம் தொடர்பான எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். கிடங்குகள், தொழிற்சாலைகள், விவசாய விளை நிலங்கள் அனைத்தும் குண்டு வீசி அழிக்கப்பட்டன. போர் நடைபெற்ற ஒவ்வொரு மாதமும் விமானத் தாக்குதல் தீவிரமானது. இன்னும் கொடுமையின் உச்சமாக, வான்வழித் தாக்குதல்கள் இரவு நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடைபெறத் தொடங்கியது.
லண்டனும் பாரிஸும் இரவு நேரத் தாக்குதல்களுக்கு உள்ளானதால் மக்கள் தூக்கத்தைத் துறந்தனர். குண்டு வெடிப்புகள் இரவைப் பகலாக்கின. தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு முழுவதும் ஒலி எழுப்பியவாறே நகரை வலம் வந்தன. இறந்த உறவினர்களின் ஒப்பாரி ஓலம் நெஞ்சைப் பிழிந்தது. இந்தக் கோரக் காட்சிகளைக் கண்ட வயதானவர்களின் ஆரோக்கியமும் குழந்தைகளின் மனதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
பெரும் போரைத் தொடர்ந்து உடனடியாக உயிர்க் கொல்லி நோய் பரவுவது வாடிக்கையான விஷயம். ஆனால், ஏனோ பொ.ஆ.1918 வரை போருக்குப் பிறகு உடனடியாக எந்தவொரு கொள்ளை நோயும் பரவவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ அறிவியல் எந்தவொரு கொடிய தொற்று நோயும் பரவாமல் பாதுகாத்தது. இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இன்ஃப்ளுவென்ஸா (Influence) என்னும் கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோய் திடீரென மின்னலாகப் பரவி லட்சம் கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. கொள்ளை நோயுடன் பஞ்சமும் பட்டினிச்சாவும் சேர்ந்து கொண்டன. இவை பிறகு கட்டுப்படுத்தப்பட்டன என்பது வேறு விஷயம்.
விவசாயிகள் பயிர்த் தொழிலை விட்டுவிட்டுப், போர் தொடர்பான வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதால், உணவு உற்பத்தியும் வேளாண்மையும் பாதிக்கப்பட்டன. கையிருப்பில் உள்ள உணவுகளை, ஊர்திகள் மூலம் சாலைகள், விமானங்கள் மூலம் ஆகாயத்தில், கப்பல்கள் மூலம் கடல் வழியாக எடுத்தசெல்ல முடியாமல் அனைத்தும் அடைக்கப்பட்டன. எனவே இருக்கும் உணவைப் பொது மக்களுக்கு விநியோகிக்க ரேஷன் (Ration) முறை அமலுக்கு வந்தது. உணவைத் தொடர்ந்து, உடை, குடியிருப்பு, வணிகம் பொருளாதாரம் என அனைத்தும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. போரில் செத்த படைவீரர்கள் எண்ணிக்கைக்கு இணையாக, பஞ்சத்தாலும் பட்டினியாலும் உயிர்க்கொல்லி நோயாலும் மக்கள் செத்தனர். பொ.ஆ.1918 நவம்பரில் போர் முடிவுக்கு வந்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி ஆகியவற்றை உள்ளடக்கிய மைய சக்திகள் (Central Powers) தோல்வியைத் தழுவின.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.