66. ரஷியப் புரட்சியும் பஞ்சமும்
மைய சக்திகளின் சரிவுக்கு முன்பே, பைஜாண்டின் சாம்ராஜ்யத்தின் தொடர்ச்சியாகக் கருதப்பட்ட ரஷியாவின் அரை முடியாட்சி சரிந்தது. போருக்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே ஜார் மன்னரின் ஆட்சி நிர்வாகம் நாசமாகத் தொடங்கியிருந்தது. ரஸ்புதீன் (Rusputin) என்னும் போலி மதப் போதகனின் கைகளில் ஜார் மன்னரின் ஆட்சியும் அதிகாரமும் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தது, பொது நிர்வாகம் குடிமைப் பணிகள், ராணுவம் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சமும் திறமை இன்மையும் தலைவிரித்தாடியது. ஆனால், போரின் தொடக்கத்தில் ரஷியா முழுவதும் தேசப் பற்று ஆர்வம் தழைக்கத் தொடங்கியது. முறையான பயிற்சி பெற்ற அதிகாரிகளோ, வீரர்களோ, தளவாடங்களோ, கருவிகளோ இல்லாத ராணுவம் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியவுக்கு எதிராகப் போர்க்களம் புகுந்தது.
பலவீனமான ரஷியப் படைகள் பொ.ஆ.1914 செப்டம்பரில் கிழக்குப் பிரஷியாவுக்குள் ஊடுருவியது. பாரிஸ் மீது தாக்குதல் தொடுத்த ஜெர்மன் படைகளைச் சமாளிக்கக் கணிசமான போர்ப் பயிற்சியற்ற ரஷியர்களே, கேடயமாக நிறுத்தப்பட்டிருந்தனர். முடிவில், ஆயிரக் கணக்கான ரஷிய வீரர்கள் ஜெர்மன் படையினரால் கொன்று குவிக்கப்பட்டனர். ஒருவகையில் ஃபிரான்ஸுக்கு ஏற்பட வேண்டிய சேதாரம் முழுவதையும் ரஷியா தாங்கிக்கொண்டது என்றும் சொல்லலாம். ரஷிய வீரர்களுக்குப் போதிய ராணுவப் பயிற்சி இல்லை என்பதுடன், துப்பாக்கிகளும் இல்லாமல், வெறும் கையோடு போருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜார் மன்னரின் முட்டாள்தனமா அல்லது அவருக்குத் தவறான ஆலோசனை கூறி, பலவீனமான ராணுவத்தை ஜெர்மனிக்கு எதிராக்க் களமிறக்கிய ரஸ்புதீனின் கைங்கர்யமா என்பது இன்னும் புரியாத புதிர்தான். இதன் காரணமாக ஜார் மன்னனுக்கு எதிராகப் பொது மக்கள் மட்டுமின்றி ராணுவத்தினரும் கொதித்தெழுந்தனர். மௌனப் புரட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது. ஜெர்மனியுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளும் இரகசியப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாக வதந்திகள் உலவின.
1916 டிசம்பர் 29ஆம் தேதி போலி மத போதகரான ரஸ்புதீன் பெட்ரோகிராடில் நடைபெற்ற இரவு விருந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலைக்குப் பிறகு, ஜார் ஆட்சியைச் சரி செய்யும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மார்ச் மாத வாக்கில், ரஷியா முழுவதும் புரட்சிக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. உணவுக்கான போராட்டங்கள் நடைபெற்றன. நிலமையைக் கட்டுப்படுத்த ‘டூமா’ (Duma) என அழைக்கப்படும் ரஷியப் நாடாளுமன்றத்தை முடக்கவும் தலைவர்களைக் கைது செய்யவும் ஜார் மன்னர் உத்தரவிட்டார்.
1917 மார்ச் 15-ல் ஜார் மன்னர் தனது பதவியைத் துறந்து, இளவரசன் எல்வாஃப் (Lvoff) வசம் பொறுப்புகளை ஒப்படைத்தார். கெரென்ஸ்கி (Kerensky) தலைமையில் தற்காலிக ரிபப்ளிகன் குடியரசு நிறுவப்பட்டது. புதிய ஜார் பதவி ஏற்றுக் கொண்டதால், மக்கள் புரட்சி கட்டுக்குள் வந்து நிலையை சீரடையும் என எதிர்பார்த்தனர். ஆனால், புதிய அரசு மக்கள் நம்பிக்கை இழந்ததுதான் மிச்சம். ஜார் ஆட்சி, போர்கள், துன்பங்கள், துயரங்கள், ஆகியவற்றிலிருந்து உடனடி விடுதலை பெறவேண்டும் என்பதில் மக்கள் தீவிரமாக இருந்தனர். தீவிரமடைந்த ‘சமூகப் புரட்சியை’ கெரென்ஸ்கியால் சுலபமாக எதிர்கொள்ள முடியவில்லை.
ரஷியாவின் நேச நாடுகளுக்கு, ரஷியாவில் நடைபெறும் உண்மை நிலை தெரியவில்லை. ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ரஷியா மிண்டும் தாக்குதல் நடத்தத் தயாராக வேண்டுமென்றும் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் ஆலோசனை கூறின. ஆனால், திடீரென லேடிவியா (Lativa) தலைநகர் ரிகா (Riga) மீது, ஜெர்மனியின் கடற்படை அதிரடித் தாக்குதல் நடத்தவே, பால்டிக் (Baltic) நாடுகளுக்கு ஆதரவாக பிரிட்டன் தனது படைகளைத் திருப்பிவிட்டது.
பிரிட்டனை நம்பி ரஷியா மோசம் போனதுதான் மிச்சம். நேச நாடுகளின் ஆதரவுப் படைகள் இல்லாமல், தன்னந்தனியே போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ரஷியா தள்ளப்பட்டது. அதேநேரம் ஜெர்மனிக்கு எதிராக அட்மிரல் ஃபிஷர் (Admiral Fisher) தலைமையில் போரிட்ட பிரிட்டன் கடற்படையாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. ஜெர்மன் கடற்படை பால்டிக் நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி பிரிட்டனைத் தோற்கடித்தது.
ரஷிய மக்கள் எப்படியேனும் போரை நிறுத்தவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். பெட்ரோகிராடில் (Petrograd) பொது மக்கள், தொழிலாளர்கள், படை வீரர்களை உள்ளடக்கி ‘சோவியத்’ (Soviet) என்ற பெயரில் புதிய அமைப்பு உருவானது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் (Stockholm) சோஷியலிஸ்ட்களின் சர்வதேச மாநாடு நடத்தவும் அழைப்பு விடுத்தது. பெர்லினில் உணவுக்கான போரட்டங்கள் தீவிரமடைந்தன. தொடர் போர்கள் காரணமாக ஆஸ்திரியா மற்றும் ஜெர்மன் வீரர்கள் சோர்வடைந்தனர். இந்நிகழ்வுகளின் தீவிரம் காரணமாக, ஸ்டாக்ஹோம் மாநாடு, நியாயமான சமாதானத்தை ஏற்படுத்தும் என கெரென்ஸ்கி நம்பினார். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்கொடுக்க முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் மேற்கத்திய நேச நாடுகளை வேண்டிக் கேட்டுக்கொண்டார்.
இம்மாநாடு நடைபெற்றால், சோஷியலிசம் மற்றும் ரிபப்ளிகனிசம் ஆகியவை உலகளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சினர். பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவளித்தும் ஒத்துழைப்பு வழங்க நேச நாடுகள் மறுத்துவிட்டன. நேச நாடுகளிடமிருந்து தார்மிக மற்றும் உடல் ரீதியான உதவி இல்லாது போகவே, ‘மிதவாதி’ ரஷியக் குடியரசு, மகிழ்ச்சியின்றித் தன்னந்தனியாக ஜூலையில் கடைசிக் கட்டப் போராட்டத்தில் இறங்கியது. ஆரம்ப வெற்றிகள் நிலைக்காமல் தோல்வியைத் தழுவியது. அடுத்த தாக்குதலாக உள்நாட்டுக் கலவரங்கள் ரஷியாவில் ஆங்காங்கே பயங்கரமாக வெடித்தன.
ரஷிய ராணுவத்தில், குறிப்பாக வடக்கு எல்லையில், 1917 நவம்பர் 7-ல் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கெரென்ஸ்கி அரசு கவிழ்ந்து, லெனின் தலைமையில், போல்ஷ்விக் சோஷியலிஸ்ட்களின் சோவியத் அமைப்பு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. மேற்கத்திய சக்திகளைப் பொருட்படுத்தாமல், அவர்களது ஆதரவு இல்லாமலேயே, சமாதான உடன்படிக்கைக்கு உறுதி அளித்தார். 1918 மார்ச் 2 ஆம் தேதி பிரஸ்ட்-லிடோவிஸ்க் (Brest-Litovsk) என்ற இடத்தில் ரஷியாவும் ஜெர்மனியும் தனி சமாதான உடனபடிக்கையில் கையெழுத்திட்டனர்.
கெரென்ஸ்கி கால அரசியல்வாதிகளைப் போன்று போல்ஷ்விக் சோஷியலிஸ்ட்கள் வாய்ச்சொல் வீரர்களாகவோ புரட்சியாளர்களாகவோ இல்லை. மாறாகத் முரட்டுத்தனமான வெறிபிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். ரஷிய அதிகாரத்தைக் கைப்பற்றியது, உலகளாவிய சமூகப் புரட்சியின் தொடக்கமே என உறுதியாக நம்பினர். தீவிர விசுவாசம், முழுமையான அனுபவமின்மை ஆகியவற்றின் அடிப்படையில், சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கை மாற்றத் தொடங்கினர்.
மேற்கண்ட அசாதாரண பரிசோதனையைச் சமாளிக்கவோ, உதவவோ, வழிகாட்டவோ மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளுக்குப் போதிய அனுபவமும் திறனும் இல்லை. ஊடகமும் எந்த நிபந்தனைக்கு உட்பட்டும் என்ன விலை கொடுத்தேனும் ரஷிய அபகரிப்பாளர்களை அழிப்பதில் தீவிரமாக இருந்தது. முடிந்தவரை சோவியத் தலைவர்களைக் கேவலப்படுத்த, அருவருப்பான மற்றும் அசிங்கமான பிரசாரங்கள் பன்னாட்டுப் பத்திரிகைகளில் முடுக்கி விடப்பட்டன. போல்ஷ்விக் தலைவர்கள், இரத்தம் குடிக்கும் காட்டேரிகளாகவும் மக்களைக் கொள்ளையடித்துச் சுரண்டும் கொடுங்கோலர்களாகவும் சித்திரிக்கப்பட்டனர். ஜார் மன்னன் மற்றும் ரஸ்புதீன் காலத்தை அப்பழுக்கற்ற வெண்ணிறத் தூய்மையின் வடிவமாகப் போற்றிப் பாராட்டினர்.
கிளர்ச்சியாளர்களும் சமூக விரோதிகளும் ஊக்குவிக்கப்பட்டனர். கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகப் போராட ஆயுதங்களும் அவற்றை வாங்க மானியமும் வழங்கப்பட்டன. ஐந்து ஆண்டுகள் தொடர்து நடைபெற்ற போர்களினால், ஏற்கெனவே தளர்ந்தும் சோர்ந்தும் போயிருந்த ரஷியாவை ஆள வேண்டிய நிர்பந்தத்தில், ரஷிய போல்ஷிவிக்குகள் இருந்தனர்.
இந்தச் சூழலில் ஏற்கனவே களைத்துப்போன ரஷிய வீரர்கள் பல்வேறு நாடுகளில் போர்க் களத்தில் இருந்தனர். ஆர்க்கேஞ்சல் (Archangel) மீது பிரிட்டன் படையெடுப்பு, கிழக்கு சைபீரியாவில் ஜப்பான் ஊடுருவல், தெற்கிலே ருமேனியா, ஃப்ரெஞ்ச் மற்றும் கிரேக்கப் படைகள், சைபீரியால் ரஷிய அட்மிரல் கோல்ட்சாக் (Koltchak) மற்றும் ஃப்ரெஞ்ச் கடற்படை ஆதரவுடன் க்ரீமியாவில் தளபதி டெனிகென் (Deniken) என எல்லாத் திசைகளிலும் போர்கள் உச்சத்தில் இருந்தன.
அதே ஆண்டு ஜூலையில் தளபதி யூடெனிச் (Yudenitch) தலைமையிலான எஸ்தோனிய இராணுவம் கிட்டத்தட்ட பீட்டர்ஸ்பர்க்கைக் கைப்பற்றும் நிலையில் இருந்தது. ஃபிரெஞ்ச் தூண்டுதல் கரணமாக ரஷியா மீது போலந்து புதிய தாக்குதலைத் தொடுத்தது. தளபதி டெனிகன் (Deniken) செய்ததைப் போலவே தளபதி ரெங்கலும் (Wrangel) சொந்த நாட்டையே நாசமாக்கும் வேலையில் ஈடுபட்டார். 1921 மார்ச்சில் க்ரான்ஸ்டாட்-இல் (Cronstadt) கப்பல் மாலுமிகள் கலகம் நடைபெற்றது.
பல்வேறு முனைகளிலிருந்து அரங்கேறிய அனைத்துத் தாக்குதல்களையும் லெனின் தலைமையிலான ரஷிய அரசு சமாளித்தது. லெனின் நிர்வாகத் திறன், விடா முயற்சி ஆகியவற்றுடன் கடினமான சூழலில் மக்களும் அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். பொ.ஆ.1921 இறுதியில் பிரிட்டனும் இத்தாலியும் லெனின் தலைமையிலான ரஷிய கம்யூனிஸ்ட் ஆட்சிக்குத் தங்கள் ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்கின.
அந்நியத் தலையீடு மற்றும் உள்நாட்டுக் கலகங்களை முடிறியடிப்பதில் போல்ஷ்விக் அரசு வெற்றி கண்டது. ஆனால் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் அடிப்படையில், ரஷியாவில் ஒரு சமூக ஒழுங்கை அதனால் நிறுவ முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற போர்கள் ரஷியப் பணத்தின் மதிப்பை முற்றிலும் அழித்துவிட்டன. போர்க் காலத்தில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. கம்யூனிசக் கொள்கைகள் அடிப்படையில் திட்டமிடப்பட்ட தொழில் வளர்ச்சி வெற்றி அடையவில்லை.
ரஷ்யக் குடியானவர் சிறு நிலங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்தாலும் பசியோடு இருந்தார். அவரைப் பொறுத்தவரை ரஷியக் கம்யூனிசம் என்பது பறக்கும் திமிங்கிலத்தைப் போலிருந்தது. ரஷியப் புரட்சி பெரும் ஜமீந்தார்களின் நிலத்தில் ஒரு சிறு பகுதியைக் அவருக்குக் கொடுத்தது உண்மையே. அவரால், எந்தப் பயிரையும் வியாபார ரீதியாக விளைவித்துச் சந்தைப்படுத்த முடியவில்லை. அவரது தனிப்பட்ட தேவைக்குக் கூட அவரால் பயிரிட முடியவில்லை.
ரயில் பெட்டிகளை நீண்ட காலம் பயன்படுத்தாதன் காரணமாக, அவை துருப்பிடித்து உருக்குலைந்தன. குடியிருப்புகள் பாழடைந்து சிதிலமடைந்தன. ஆங்காங்கே பலர் செத்து விழுந்தனர். இருப்பினும் ரஷிய ராணுவம் எல்லைகளில் எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்தது. பொ.ஆ.1921-ல் மிகப் பெரிய பஞ்சமும் வறட்சியும் ரஷியாவைத் தாக்கியது. பட்டினியாலும் நோயாலும் லட்சக்கணக்கில் மக்கள் மடிந்தனர்.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.