67. உலகின் அரசியல் மற்றும் சமூக மறுகட்டமைப்பு
இந்த வரலாற்று நூல், ஏற்கனவே திட்டமிடப்பட மற்றும் வரையறுக்கப்பட்ட அளவுகோல் காரணமாகச் சிக்கலான மற்றும் கடுமையான சர்ச்சைகளை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள், குறிப்பாக மிகப் ‘பெரிய போரை’ முடிவுக்குக் கொண்டு வந்த வெர்சேல்ஸ் ஒப்பந்தம் (Treaty of Versailles), ஆகியவை பற்றி விரிவாக விளக்கப் போவதில்லை.
இந்தப் பெரிய போர் பயங்கரமானது, மகத்தானது, எதையும் தொடங்கவில்லை, எதையும் முடிக்கவில்லை, எந்தப் பிரச்னையையும் தீர்க்கவில்லை. இந்த உலகத்தை வீணடித்து வறுமை நிலைக்குத் தள்ளியதுடன் லட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்தது. ரஷியாவை முற்றிலும் தரைமட்டமாக்கியது. அபாயகரமான மற்றும் அனுதாபமற்ற பிரபஞ்சத்தில், திட்டமிடலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல், முட்டாளாகவும் குழப்பத்தோடும் வாழ்கிறோம் என்பதேயே இந்தக் கோரக் காட்சிகள் நினைவூட்டுகின்றன.
தேசிய மற்றும் ஏகாதிபத்தியப் பேராசைகளும் அதீத ஆர்வங்களின் கொடூரமான அகங்காரங்களுமே, மனித இனத்தை இந்தச் சோகத்துக்குள் தள்ளிவிட்டன. போரின் சோர்வுகள், களைப்புகள், பாதிப்புகளிலிருந்து இந்த உலகம் சிறிது சிறிதாக மீண்டு வருகிறது. போர்களும் புரட்சிகளும் எதையும் சாதிக்காது. இவற்றின் மனித இனத்துக்குச் செய்த அதிகபட்ச சேவை என்னவெனில், கடினமான மற்றும் வலி மிகுந்த வழியில், காலாவதியான விஷயங்களை ஒழித்ததுதான்.
இந்தப் பெரிய போர் ஐரோப்பாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக அகற்றியது. சூழலைப் பயனபடுத்தித் தன்னை முன்னிறுத்த முயன்ற ரஷியாவின் ஏகாதிபத்தியத்தையும் உடைத்தது. பல முடியாட்சிகளையும் வீழ்த்தியது. ஆனாலும் இன்னும் ஐரோப்பாவில் பல கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. எல்லைகள் பதற்றத்தோடு காணப்படுகின்றன. பெரிய ராணுவங்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், போர்க் கருவிகளைக் குவிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன.
வெர்சேல்ஸ் அமைதி மாநாடு, போரின் மோதல்களையும் தோல்விகளையும் அலசி ஆராய்ந்து, தர்க்க ரீதியான தீர்வுகளுக்கு ஏற்பச் செயல்படத் தவறிவிட்டது. ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி மற்றும் பல்கேரிய நாடுகள் அமைதி மாநாட்டின் விவாதங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அமைதி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கட்டளையாக ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். மனிதநலம் என்னும் கோணத்தில் மாநாட்டுக்கான இடத் தேர்வு துரதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும். பொ.ஆ.1871-ல் இதே வெர்சேல்ஸில், வெற்றிகரமான அநாகரிகச் சூழலில், புதிய ஜெர்மன் சாம்ராஜ்யம் அப்போது பிரகடனப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது அதே வெர்சேல்ஸ் அரண்மனையிலுள்ள கண்ணாடி அரங்கில் (Hall of Mirrors) தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரிய போரின் தொடக்கத்தில் தோன்றிய தாரள குணங்களும் உயர் பண்புகளும் நீர்த்துப் போய்விட்டன. வெற்றி பெற்ற நாடுகள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் துன்பங்களையும் அறிந்தே இருந்தனர். தோற்ற நாடுகள் ஜெயித்த நாடுகளுக்குத் தண்டனையாகவும் இழப்பீடாகவும் பெரும் தொகை செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்னும் உண்மையை மூடி மறைக்கப்பட்டது. போர் இயற்கையாகவும் ஐரோப்பியப் போட்டி தேசியவாதங்களின் தவிர்க்க முடியாத பின்விளைவுகளாலுமே நிகழ்ந்தது.
போர் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன், சுதந்திரமான இறையாண்மையோடு வாழும் தேசிய இனங்களின், அத்யாவசிய தர்க்க ரீதியான நிறைவுவாகும். இந்தப் பெரிய போர், அதன் வடிவில் இப்போது வரவில்லை எனில், அடுத்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளில், எந்தவொரு அரசியல் ரீதியான ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தடுக்காத பட்சத்தில், பிரம்மாண்ட பேரழிவு வடிவத்தில், அப்போது நிச்சயம் திரும்ப வந்திருக்கும்.
முட்டை போடுவதற்காகவே படைக்கப்பட்ட கோழி எப்போது வேண்டுமானாலும் முட்டையிடலாம். அதுபோல், போருக்காகவே கட்டமைக்கப்பட்ட வெறி பிடித்த நாடுகள், எப்போது வேண்டுமானாலும் போரில் களமிறலாம். ஆனால், போர் முடிந்த பிறகு, போருக்கும் சேதாரத்துக்கும் உயிர்களின் மரணத்துக்கும் உடைமைகளின் அழிவுக்கும் தோற்ற நாடுகளே காரணம் எனப் பழிசுமத்தி, இழைப்பீட்டைப் பெறுவது ஜெயித்த நாடுகள் காலம் காலமாகக் கடைப்பிடிக்கும் வழக்கமான பாணிதான்.
ஜெர்மனி மீது பிரான்ஸும் பிரிட்டனும் குற்றம் சுமத்தின. ரஷியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீது ஜெர்மனி பழியைப் போட்டது. ஆனால் சிறுபான்மை அறிவார்ந்த சமூகம் மட்டுமே, ஐரோப்பாவின் சிதறுண்ட அரசியல் சட்டத்தில் குற்றம் இருப்பதாக எண்ணியது. வெர்சேல்ஸ் ஒப்பந்தம் முன்மாதிரியான மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டது. காயமடைந்தவர்கள், இறந்தவர்கள், சேதாரங்களுக்குத், தோற்ற நாடுகள் கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்ற மிகப் பெரிய தண்டனையை வழங்கியது. பன்னாட்டு உறவுகளை மீண்டும் சீரமைக்கப், போருக்கு எதிராக ‘உலக நாடுகள் சங்கம்’ (League of Nations) என்னும் அமைப்பை உருவாக்கியது. ஆனால் அதன் முனைவுகள் வெளிப்படையாகவோ நேர்மையாகவோ போதுமானதாகவோ இல்லை.
நிரந்தர அமைதிக்காக சர்வதேச உறவுகளை ஒழுங்கமைக்க ஐரோப்பா ஏதேனும் முயற்சி செய்திருக்குமா என்பது சந்தேகமே. லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பின் முன்மொழிவு, அமெரிக்க அதிபர் வில்சனால் நடைமுறை அரசியலுக்காகவே கொண்டுவரப்பட்டது. அமெரிக்க செனேட்டின் முழு ஆதரவு அதற்கு இருந்தது. ஐரோப்பாவின் தலையீட்டைத் தடுத்த பழைய மன்ரோ கோட்பாடு அல்லது கொள்கைகைத் தாண்டி, சர்வதேச உறவுகள் தொடர்பான தனித்துவமான புதிய யோசனைகள் எதையுமே அமெரிக்கா உருவாக்கவில்லை,
இப்போது திடீரென காலத்தின் கட்டாயம் கருதிப் பிரச்னைக்கான அதன் பங்களிப்பை வழங்க அமெரிக்கா அழைக்கப்பட்டது. ஆனால், அதனிடம் எந்தத் தீர்வும் இல்லை. அமெரிக்க மக்களின் இயல்பான மனநிலை, நிரந்தர உலக அமைதியை நோக்கியே காணப்பட்டது. இருப்பினும் பழைய உலக அரசியலின் மீதான பாரம்பரிய அவநம்பிக்கையும் பழைய உலக சிக்கல்களில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் பழக்கமும் இணைந்தே இருந்தது.
உலகப் பிரச்னைகளுக்கான அமெரிக்கத் தீர்வை இன்னும் அமெரிக்கர்கள் சிந்திக்கத் தொடங்கவில்லை. ஆனால், ஜெர்மனிக்கு எதிரான கூட்டாளிகளுடன் இணைய அமெரிக்கர்களை இழுத்துவிட்டதற்கு முக்கியக் காரணம் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரசாரமே. அமெரிக்க அதிபர் வில்சனின் ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ திட்டம் தனித்துவமான அமெரிக்க உலகத் திட்டத்தை உருவாக்குவதற்கான குறுகியகால அறிவிப்பின் முயற்சியே. இது ஒரு முழுமையற்ற மற்றும் ஆபத்தான திட்டம் மட்டுமே.
இருப்பினும் ஐரோப்பாவில் இது முதிர்ச்சியான அமெரிக்கக் கண்ணோட்டமாகக் கருதப்பட்டது. பொ.ஆ.1918-19 போர் காரணமாகச் சோர்ந்து போயிருந்த மனிதகுலம் அது மீண்டும் நடைபெறாத வண்ணம் தடுப்பதற்கு, எந்தத் தியாகத்தைச் செய்யவும் ஆர்வமாக இருந்தது. ஆனால் இந்த இலக்கை அடைவதற்கு எந்தவொரு அரசும் தனது இறையாண்மை சுதந்திரத்தில் ஒன்றைக்கூட விட்டுத் தரத் தயாராக இல்லை. உலக லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பை நிறுவப் பொதுவெளியில் அதிபர் வில்சன் பேசிய கருத்துகள், ஒரு கட்டத்தில் உலகிலுள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எழுச்சியைக் கண்டது.
ஆனால் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அதிபர் வில்சன் தலைவர்களுடன்தான் உரையாடினாரே தவிர, மக்களுடன் அல்ல. அவரது பேச்சு அமெரிக்காவின் முதிர்ச்சியை வெளிப்படுத்திய காரணத்தால், மகத்தான வரவேற்பைப் பெற்றது. அதிபர் வில்சன் தொலைநோக்குப் பார்வையும் திறமையும் கொண்டவர் என்றாலும் பரிசோதனை முனைவுகளில் அவரது உற்சாகம் வீணாகிப் போனது.
அவரது ஆற்றல் குறித்து டாக்டர் எமிலி ஜோஸ்ஃப் தில்லான் (Dr Emely Joseph Dhillon) தனது ‘தி பீஸ் கான்ஃபரென்ஸ்’ (The Peace Conference) என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ‘அதிபர் வில்சன் தரை இறங்கியபோது குயவரின் கரங்களுக்காகக் காத்துக் கிடக்கும் கள்மண்ணாக ஐரோப்பா காத்திருந்தது. போரும் தடைகளும் இல்லாத ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்வதாக மோசஸ் கூறிய போது, கேள்வி கேட்காமல் அவரைப் பின்பற்றத் தயாரான மக்களைப்போல், வில்சனைப் பின்பற்ற நாடுகள் தயாராக இருந்தன. அவர்களுடன் எண்ணத்திலும் சிந்தனையிலும் வில்சன் அந்த அளவுக்கு உயர்ந்திருந்தார்’.
‘ஃப்ரான்ஸ் மக்கள் வில்சனை அன்போடும் ஆசையோடும் தலைவணங்கினர். நான் சந்தித்த பாரிஸ் தொழிலாளர் கட்சித் தலைவர்கள், அவரைக் கண்டதும் கண் கலங்கியதாகவும் அவரது உன்னதமான திட்டங்கள் வெற்றி பெறத் தண்ணீரிலும் நெருப்பிலும் கூடக் குதிக்கத் தயார் என்றும் உறுதி அளித்தனர். இத்தாலியிலுள்ள உழைக்கும் தொழிலாளர்களுக்கு பூமியைப் புதுப்பிக்கும் சொர்க்கத்தின் சங்க நாதமாக விளங்கினார். ஜெர்மானியர்களோ அவரையும் அவரது கொள்கைகளையும் தங்களைப் பாதுகாக்கும் நங்கூரமாகக் கருதினர்’.
அமெரிக்க அதிபர் வில்சன் பற்றித் தனது நூலில் ஹெர் ம்யூலோன் (Her Muehlon) குறிப்பிடுகையில் ‘ஜெர்மானியர்களுக்குக் கடுமையான தண்டனையை வில்சன் விதித்தாலும் கூட, அவர்கள் எந்தவொரு வார்த்தையும் முணுமுணுக்காமல், அதை அப்படியே தெய்வவாக்காக ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு ஜெர்மனி மற்றும் ஆஸ்திரிய மக்கள் வில்சனைத் தங்களைப் பாதுகாக்க வந்த ரட்சகராகவே எண்ணி வணங்குகிறார்கள். துன்பத்திலும் துயரத்திலும் ஆதரவளிக்கும் ஆபத்பாந்தவனாக அவர்களது நெஞ்சில் வில்சன் நிறைந்திருந்தார்’.
வில்சன் மீது மக்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக எழுந்த அதீத எதிர்பார்ப்புகள் இவை. ஆனால் அனைத்து நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப் போயின. கானல் நீராயின. வில்சன் எவ்வாறு முழுமையாக ஏமாற்றினார் என்பதும் அவர் உருவாக்கிய லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு எவ்வாறு பலவீனமாகவும் பயனற்றதாகவும் போனது என்பதும் விளக்க முடியாத நீண்ட நெடிய சோகக் கதை. கனவுகளிலும் கற்பனைகளிலும் செயல் வீரராகக் காட்சி அளித்தவர், நிஜத்தில் செயல் திறன் அற்றவரானார்.
அமெரிக்கா தனது அதிபரின் கருத்துகளிலும் செயல்களிலும் முற்றிலும் உடன்பாடு இல்லையென எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அவர் உருவாக்கிய லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பிலும் இணைய மறுத்தது. முற்றிலும் தயாராகமல், அவசர அவசரமாக ஈடுபடுத்தப்பட்டதாக, அமெரிக்க மக்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினர். உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, பழைய உலகுக்குக் கொடுக்க ஒன்றுமில்லை என்பதை ஐரோப்பாவும் உணர ஆரம்பித்தது.
குறைப்பிரசவத்தில், ஊனமுடன் பிறந்த சவலைக் குழந்தையானது லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பு. விரிவான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அரசியலமைப்பு, வெளிப்படையான அதிகார வரம்புகள் ஆகியவை சர்வதேச உறவுகளின் பயனுள்ள மறுசீரமைப்புக்குப் பெரும் தடையாகவே மாறிவிட்டன. லீக் என்னும் அமைப்பு இல்லாதிருந்தாலே பிரச்னை தெளிவாகியிருக்கும் என்று சொல்லும் அளவுக்கு விமர்சனங்கள் கடுமையாயின. இருப்பினும் அந்த அமைப்பு உருவான புதிதில் உலகம் அதை உற்சாகத்துடன் வரவேற்றது.
பூமியிலுள்ள மக்கள் அனைவரும் நாடுகள் அரசுகள் வேறுபாட்டைக் கடந்து, உலகப் போரை எப்படியேனும் தடுத்து நிறுத்த ஒன்றிணைந்ததும் வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய விஷயம்தான். மனித விவகாரங்களில் பிரிவினையை உண்டாக்கித், தவறாக நிர்வகிக்கும் குறுகிய பார்வை கொண்ட அரசுகளுக்குப் பின்னால், உலக ஒற்றுமைக்கும் உலக ஒழுங்குக்குமான, உண்மையான சக்தி இருக்கிறது என்பதுடன் தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது.
பொ.ஆ.1918 முதல் ‘மாநாடுகளின் யுகத்தில்’ உலகம் நுழைந்தது. இவற்றுள் பொ.ஆ.1921-ல் அமெரிக்க அதிபர் வாரென் ஹார்டிங்க் (Warren Harding) தலைமையில் வாஷிங்டனில் நடந்த மாநாடு மகத்தான வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பொ.ஆ.1922-ல் ஜெனோவாவில் நடைபெற்ற மாநாட்டின் வாத விவாதங்களில் ஜெர்மனி மற்றும் ரஷியப் பிரதிநிதிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இவை பற்றி அதிகம் விளக்கப் போவதில்லை.
பெரிய போரைப் போன்ற பேரழிவுகளும் படுகொலைகளும் தவிர்க்கப்பட வேண்டுமெனில், மனிதகுலம் மிகப் பெரிய மறுசீரமைப்புப் பணியைச் செய்தாக வேண்டும். லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பை மேம்படுத்துவதாலோ மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றுவதாலோ புதிய யுகத்தின் சிக்கலான அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது.
மனித உறவுகளின் அறிவியல், தனிப்பட்ட & குழு உளவியல், நிதி & பொருளாதார அறிவியல் கல்வி ஆகியவற்றுக்கு, அமைப்பு ரீதியான திட்டமிட்ட வளர்ச்சியும் முறையான பயன்பாடும் தேவைப்படுகிறது. அறிவியல், இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. குறுகிய, காலாவதியான, இறந்த, இறக்கும் தார்மிகச் சிந்தனைகள், அரசியல் கருத்துகள், தெளிவான மற்றும் எளிமையான கருதுகோள்களால் மாற்றப்பட வேண்டும்.
ஆனால், தற்போது மனிதனைச் சுற்றியுள்ள ஆபத்துகள், குழப்பங்கள் மற்றும் பேரழிவுகள் கடந்த கால அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவை. விஞ்ஞானம் முன் எப்போதும் இல்லாத ஆற்றலுடன் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளதே இதற்கு முக்கியக் காரணம். கட்டுப்பாடற்ற ஆற்றலை மனிதனுக்கு வழங்கியுள்ள அதே அச்சமற்ற சிந்தனையின் விஞ்ஞான முறையும் தெளிவான அறிக்கையும் விரிவான திட்டமிடலுமே, அதைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
மனிதன் இன்னும் வளர் இளம் பருவத்தில்தான் இருக்கிறார். அவரது பிரச்னைகளுக்கு, அதிகரிக்கும் கட்டுப்பாடற்ற வலிமை காரணமே தவிர, முதுமை மற்றும் சோர்வு அல்ல. இந்தப் புத்தகத்தில் அனைத்தையும் ஒரே கோணத்தில் பார்ப்பதுபோல் அணுகினால், தொலைநோக்குச் சிந்தனை மற்றும் கட்டுப்பாட்டை நோக்கிய வாழ்க்கையின் உறுதியான போராட்டத்தைப் காணலாம். அவற்றின் உண்மையான விகிதத்தில், தற்போதைய காலத்தின் நம்பிக்கைகளையும் ஆபத்துகளையும் உணரலாம்.
மனித மகத்துவத்தின் தொடக்க காலங்களில் நாம் இப்போது இல்லை. ஆனால் மலரின் அழகு, சூரிய அஸ்தமனத்தின் எழில், விலங்குகளின் குதூகலமான இயக்கம் ஆயிரக்கணக்கான கண்கவர் இயற்கை வளம் மிக்க நிலப்பரப்புகளின் வனப்பு ஆகியவை, வாழ்க்கை நமக்கு என்ன செய்ய முடியும் என்பதற்கான சில தகவல்களை வழங்குகின்றன. உறைந்த மற்றும் ஓவியக் கலையின் சில படைப்புகளில், சிறந்த இன்னிசையில், உன்னதமான கட்டடங்களில், மனத்தை மகிழ்விக்கும் வண்ணமயமான தோட்டங்களில், சில செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. கைவசமுள்ள பொருட்களால் மனிதன் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான சான்றுகளாக இவை விளங்குகின்றன.
கட்டுப்பாடற்ற, தொடர்ந்து அதிகரிக்கும் சக்தியும் ஆற்றலும் தற்போது நம்மிடம் இருக்கின்றன. நாளுக்கு நாள் வலிமையும் சாகசங்களும் சாதனைகளும் விரிவடைந்து கொண்டே போகின்றன. ஆனால், நமது இரத்த சம்பந்தமுள்ள குழந்தைகள் மகிழ்ச்சியான வாழ்வு வாழத், தற்போதைய மனித இனம் பிரம்மாண்ட அரண்மனை அல்லது அழகான தோட்டத்தை விடவும் ஒற்றுமையும் அமைதியும் தவழும் புதியதோர் உலகை அமைத்துத் தர இயலுமா? நமது வளமான கற்பனைகளையும் கனவுகளையும் நிஜமாக்குமா?
மனிதன் சாதித்தது என்ன? தற்போதை நிலயில் அவனது சிறு வெற்றிகளை இந்த வரலாற்றில் பதிவு செய்துள்ளோம். ஆனால், இவை அனைத்தும் அவன் இன்னும் கடக்கவேண்டிய தூரங்களுக்கும் செய்யவேண்டிய பற்பல சாதனைகளுக்கும் முன்னோட்டமாக அமையும்.
(முற்றும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.