Skip to content
Home » வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

வளர்ச்சியின் கதை #1 – அறிமுகம்

சமத்துவமின்மையின் யுகம்

1940 முதல் 1950 வரையிலான பத்தாண்டுகள் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் உலகப் போர் நிகழ்ந்து முடிந்தது. முதல் அணு ஆயுத வெடிப்பை உலகம் கண்டது. காலனியாதிக்கத்தில் இருந்த பல்வேறு மூன்றாம் உலக நாடுகள் விடுதலை அடையத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அரசியல் நிறுவனங்கள் தோன்றின. உலக வரலாற்றின் போக்கில் மிகமுக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய பல நிகழ்வுகள் இக்காலகட்டத்தில் நடைபெற்றன.

1949ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள், ஹேரி ட்ரூமன் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றபின் ஆற்றிய உரையும் இதே அளவுக்கு முக்கியமானது. உலகப்போர் முடிந்து, அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் பனிப்போர் தொடங்கவிருந்த சூழலில் இவரது உரை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அதில் தனது வெளியுறவுக் கொள்கையாக நான்காம் திட்டம் ஒன்றை ட்ரூமன் அறிமுகம் செய்கிறார். ‘Point Four Programme / Four Points Speech’ என்று அழைக்கப்பட்ட இந்தப் புகழ்பெற்ற உரையில் உலகப் பொருளாதார மீட்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருந்தது. சுதந்தரத்தை விரும்பும் நாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் முன்னேற நினைக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என்றார் ட்ரூமன். இந்த திட்டத்தின் நான்காம் கொள்கையைப் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்.

‘அமெரிக்கா ஒரு புதிய துணிவான திட்டத்தைத் தொடங்க உள்ளது. இதுவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நாம் பெற்ற பலன்களை உலகின் ‘வளர்ச்சிக்குன்றிய’ (Underdeveloped) நாடுகளின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்கவுள்ளது. உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமையிலும், நோயிலும், மோசமான வாழ்வியல் நிலையிலும் உள்ளனர். சரியான உணவு அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அமெரிக்கா இது போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் அறிவியல், தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பத் தளங்களில் முன்னேறியுள்ளது. வழங்குவதற்குப் பொருள் இல்லையெனினும் தொழில்நுட்பம், வளர்ச்சி மாதிரி (Growth Model) போன்றவற்றை இந்த வளர்ச்சி குன்றிய நாடுகளுக்குப் பகிரும் முடிவை அமெரிக்கா எடுக்கவுள்ளது.’

மிகவும் புகழ்பெற்ற இந்த நான்கு அம்ச உரையில்தான் முதன் முதலில் ‘அன்டர் டெவலப்ட்’ என்ற பதம் அரசியல் தளத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.

ட்ரூமனின் பதவியேற்பு உரை
ட்ரூமனின் பதவியேற்பு உரை

வளர்ச்சியின் யுகம்

புதிதாக விடுதலையடைந்த நாடுகளை ‘வளர்ச்சியடையாத’ அல்லது ‘வளர்ச்சிக்குன்றிய நாடுகள்’ என்று அழைத்த ட்ரூமன் அவற்றின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும் என்று கூறியிருந்தார். இந்த உரையைத் தொடர்ந்து ‘வளர்ச்சி’ என்ற பதம் உலகளவில் பரவலாகப் பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற உலக அமைப்புகள் ‘வளர்ச்சிக்கான’ அடிப்படைகளை ஆராயவும் அதன் செயல்திட்டங்களை வகுக்கவும் தொடங்கின. இதன் பின்பான உலக வரலாற்றைப் பொருளாதார மற்றும் அரசியல் அறிஞர்கள் ‘வளர்ச்சியின் யுகம்’ என்கின்றனர்.

வளர்ச்சி யுகத்தில்தான் வளர்ச்சி நடைபெற்றது என்பதல்ல இதன் பொருள். மனித சமூகத்தில் நாகரிகம் என்றொன்று தொடங்கும் முன்பே ‘வளர்ச்சி’ நடந்துகொண்டுதான் இருந்தது. இருப்பினும், ட்ரூமனின் இந்த உரைக்குப் பின்பு உள்நாட்டு அரசியல் முதல் உலக அரசியல் வரை அனைத்தும் வளர்ச்சி என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டது. இதன் தாக்கம் நாடுகள் முதல் பிராந்தியங்கள் வரை இருந்தது. அப்போது விடுதலை பெற்றிருந்த இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியா உலக அரங்கில் தவிர்க்க முடியாத, தலைசிறந்த சக்தியாக உருவாக வேண்டும். காலனியாதிக்கத்தின்மூலம் தவறவிட்ட தருணங்களை இந்தியா விரட்டிப்பிடிக்க வேண்டும். இதற்குத் துணை நிற்கப்போகும் தொழிற்சாலைகள், பெரும் அணைத்திட்டங்கள் போன்றவை ‘நவீன இந்தியாவின் கோவில்கள்’ என்றார் இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. இந்தக் கனவு இன்று வரையிலும் நம் மக்களுக்கு இருக்கிறது. இதற்கு ஒரு பெரிய உதாரணம், ‘இந்தியா 2020’ என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிரசாரம் செய்த ‘இந்திய வல்லரசுக்’ கனவு. அப்படி 2020ஆம் ஆண்டு இந்தியா வல்லரசாக, ஒரு வளர்ந்த நாடாக மாறிவிடும் என்று கனவு கண்டவர்களில் நானும் ஒருவன்.

வளர்ச்சி என்றாலோ வல்லரசு என்றாலோ என்னவென்று புரியாத காலம் அது. ஆனால் வளர்ந்த நாடு என்றால் என்னவென்று யோசிக்கையில் மனதில் நிழலாடியது இதுதான். வானை முட்டும் கட்டடங்கள், இரவைப் பகலாக்கும் வெளிச்சம் வீசும் நகரங்கள், நவீன கார்களும் ஏசி வாகனங்களும் பறக்கும் சாலைகள், நவீன தொழில்நுட்பம் நிறைந்த கப்பல்கள், விமானங்கள், ஆயுதங்கள் கொண்ட போர்ப்படைகள், எந்நேரமும் எல்லாப் பொருட்களையும் வாங்கி குவிக்கும் மக்கள், நிறைந்து வழியும் கடைத் தெருக்கள். இன்னும் பல. அதாவது, வளர்ந்த நாடு என்றால் அது அமெரிக்கா போல் ஐரோப்பா போல இருக்கவேண்டும். இந்தியா ‘வளரும் நாடு’ என்றால் அது வளர்ந்து முடித்த பிறகு அமெரிக்கா போல் ஐரோப்பா போல் மாறவேண்டும். இதுதான் வளர்ச்சி பற்றிய பொது பிம்பம்.

பின்னர் பொருளாதாரம் பற்றிய அறிமுகம் கிடைத்த பின்னர், எந்நேரமும் பொருளாதார வளர்ச்சி என்று காட்டப்படும் எண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். உலகிலேயே அதிவேகமாக வளரும் நாடு இந்தியாதான் என்று கூறும் புள்ளி விவரங்களை சேகரித்து, இன்னும் எத்தனை ஆண்டுகளில் சீனாவை நாம் முந்துவோம், எத்தனை ஆண்டுகளில் அமெரிக்காவை முந்துவோம் என்றெல்லாம் கணக்கிட்டுப் பார்த்துள்ளேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் பலரும் இதைத்தான் செய்திருப்பார்கள்.

ஆனால் 2020 கடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் அனைவரும் எதிர்பார்த்தது நடந்தது போல் தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு வருடமும் புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா என்ற பெயரில் புதுப்புது திட்டங்களும் தேர்தல் வாக்குறுதிகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. தற்போது ‘வளர்ச்சி’ பற்றிய கருத்து எனக்கும் சரி, சமூகத்திற்கும் சரி பெரிய அளவில் மாறிவிட்டது. அதற்குக் காரணம் வளர்ச்சி என்ற கருத்தாக்கத்தில் சேர்ந்துகொண்ட வேறு இரண்டு பார்வைகள். ஒன்று சூழலியம், மற்றொன்று சமத்துவம்.

மனிதர்களின் யுகம்

2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் நோபல் பரிசு வென்ற அறிவியல் அறிஞர் பால் க்ரட்ஸன் அமர்ந்திருக்கிறார். இவர் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வேதியியல் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றவர். அந்தக் கலந்துரையாடல் இவ்வாறு தொங்கி வைக்கப்பட்டது.

‘Holocene எனப்படும் புவியியல் யுகம் சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் கடைசி மிகப் பெரிய பனியுகம் (Ice Age) முடிந்தபிறகு தொடங்கியது. அந்தக் காலத்தில்தான் நாம் இன்னமும் வாழ்கிறோம்.’

க்ரட்ஸன் உடனே எழுந்து மறுக்கிறார்.

‘தற்போது நாம் இருக்கும் யுகத்தை ‘Holocene’ என்று கூறுவதை நிறுத்துங்கள். நாம் இப்போது ‘Anthropocene’ யுகத்தில் இருக்கிறோம். மனிதனின் தடங்கள் இன்று உலகின் அனைத்து மூலைகளிலும் தென்படுகிறது. அவன் காலடி எடுத்து வைக்காத தீவுகளிலும், பனியுறை பிரதேசங்களிலும்கூட அவன் எரித்து வெளியேற்றும் கரிமப் பொருட்களின் துகள்களும், அவனது அணுகுண்டுகள் வெளியிடும் அணுக்கதிர்வீச்சும் தென்படுகின்றன. மனிதன் உலக இயக்கங்களை மிகப்பெரிய அளவில் மாற்றத் துவங்கிவிட்டான். அதனால் இது ‘Anthropocene’ என்னும் மனிதர்களின் யுகம்.’

இந்த அறிவிப்பு உலகம் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. புவியியல் அறிஞர்கள் இதனை மிகத்தீவிர ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். புவியின் பாறைகள் பொதுவாக எரிமலை வெடிப்பு, ஆறுகள், கடல் போன்றவற்றின் படிதல் போன்ற பல்லாயிரம் ஆண்டுகளாக நடக்கும் நிலவியல் மாற்றங்களினால் பல்வேறு அடுக்குகளாக நிலைபெற்றிருக்கும். ஒவ்வொரு அடுக்கும் புவியின் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நமக்கு உணர்த்தும்.

வட அமெரிக்காவில் கொலராடோ நதி ஓடும் பகுதியான கிராண்ட் கான்யன் போன்று மிக ஆழமாக அரிக்கப்பட்ட நிலஅமைப்புகளில் இந்த அடுக்குகள் வெளிப்படையாகத் தெரியும். ஒவ்வொரு அடுக்கின் தன்மைகளை வைத்து அவற்றின் காலத்தையும் நிகழ்வுகளையும் புவியியல் அறிஞர்கள் புரிந்துகொள்வார்கள். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கும் பகுதிகள் புவியியல் யுகங்களாகப் பிரிக்கப்படும் (காண்க படம்).

கிராண்ட் கான்யனில் காணப்படும் புவியியல் அடுக்குகள்
கிராண்ட் கான்யனில் காணப்படும் புவியியல் அடுக்குகள்

இது போன்று மனிதர்களின் செயல்பாடுகள் புவியியல் மற்றும் நிலவியல் அமைப்புகள் வரை தெரிந்தால் இதனை ஆந்த்ரோபோசின் யுகமாகக் கருதலாம் என்று புவியியல் அறிஞர்கள் முடிவு செய்து அதற்கான ஆய்வுகளைத் தொடங்கினர். ஒரு சாரார் இதனை ஏற்றுக்கொள்கின்றனர்; பிறிதோர் சாரார் ஏற்றுக்கொள்வதில்லை. இவர்களுக்கு இடையில் நடக்கும் அறிவியல் விவாதங்களுக்கு நாம் இப்பொழுது செல்லவேண்டாம். நாம் கவனிக்க வேண்டியது, ஆந்த்ரோபோசின் என்பது உலக அளவில் அரசியல் பதமாக உருவாகிவிட்டது என்பதைத்தான்.

மனிதரின் செயல்பாடுகள் உலகம் முழுவதையும் பாதிக்கின்றன என்பது பல்வேறு ஆய்வுகள்மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான காலநிலை மாற்றத்துக்கான குழு (ஐபிசிசி) அறிக்கையிலும் பிற ஆய்வுகளிலும் ‘காலநிலை மாற்றம் அதி வேகமாக நடைபெறுகிறது. இதற்கு மனிதரின் செயல்பாடுகளே முக்கியக் காரணம்’ என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆந்த்ரோபோசின் யுகம் என்னும் பதம் இன்றைய உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

சரி அதனால் என்ன எனும் கேள்வி எழுகிறதா? இந்த யுகம் மனித செயல்பாடுகளினால் உருவான யுகம் என்றாலும் இந்த யுகத்தின் முடிவினைக் காண மனிதர்கள் இல்லாமல் போகலாம் என்று எச்சரிக்கின்றன பல்வேறு ஆய்வறிக்கைகள். உதாரணமாக மனித செயல்பாடுகளால் இதுவரை கண்டிராத வேகத்தில் புவி வெப்பமயமாதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் காலநிலை பெரிய அளவில் மாற்றம் பெறும். மனித இனம் உயிர்வாழ நம்பியிருக்கும் இயற்கையின் சுழற்சிகள் (நீர், கரிமம், நைட்ரஜன்), உணவுச் சங்கிலி, உயிரூட்டம், பல்லுயிரியம் போன்ற பல அமைப்புகள் தற்போது இருக்கும் இயல்பில் இருந்து வேறு இயல்புக்கு உருமாறும். இவ்வளவு விரைவில் நடக்கும் மாற்றத்திற்கு மனித இனமோ அல்லது தற்போது இருக்கும் பிற உயிரினங்களோ தாக்குப்பிடிக்காமல், மாறும் சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள இயலாமல் அழிந்துபோகும். இதுவரை ஐந்து உயிர்ப்பேரழிவைக் கண்டுள்ள உலகம், அடுத்து ஆறாம் உயிர்ப்பேரழிவையும் சந்திக்கும். மனித யுகம் மனிதர்களை மட்டுமின்றி முழு புவியையும் இந்த அளவுக்கு மாற்றியமைத்துள்ளது. இன்னமும் தீவிரமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இப்போது நாம் வாழ்வது ஆந்த்ரோபோசின் யுகத்தில் என்றால் அது எப்போது தொடங்கியது? இதற்கும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தொழில்மயமான உலகுக்குள் நுழைந்த 1800ஆம் நூற்றாண்டின் தொடக்கம்தான் மனித யுகத்தின் தொடக்கம் என்றனர் சிலர். ஆனால் நாம் மேலே கண்ட ‘வளர்ச்சியின் யுகம்’ தொடங்கிய அதே காலமான 1940கள்தான் ஆந்த்ரோபோசின் யுகத்தின் தொடக்கமும் என்கின்றனர் வேறு சிலர்.

1940களுக்குப் பின்புதான் சூழலியல் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியது. சூழலியல் கோட்பாடுகளும் அவற்றை முன்னெடுக்கும் அமைப்புகளும் மின்னல் வேக மாற்றங்களை அடைந்தன. இதனை ‘The Great Acceleration’ என்கின்றனர் (காண்க படம்). அதிலும் குறிப்பாக முதல் அணுவெடிப்பு நிகழ்ந்த 1945ஆம் வருடம்தான் ஆந்த்ரோபோசின் யுகத்தின் தொடக்கம் என்பது இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. வளர்ச்சி யுகத்தைத் தொடங்கி வைத்த ‘வளர்ச்சி நாயகன்’ ஹேரி ட்ரூமன்தான் அணு ஆயுத வெடிப்பின்போதும் அமெரிக்காவின் அதிபராக இருந்தார். வளர்ச்சி யுகம்தான் ஆந்த்ரோபோசின் யுகம்.

Great Acceleration Graphs
‘Great Acceleration Graphs’ எனப்படும் இவ்வரைபடங்கள் அனைத்தும் 1940-50களில் உச்சத்தை நோக்கி திரும்புவதைக் காணலாம்.

புவியின் சூழல் அமைப்புகளுக்குதான் இந்த வளர்ச்சி யுகம் பெரியதோர் பிரச்சனையாக இருந்திருக்கிறது. மக்களுக்காவது ஏதேனும் நன்மை நிகழ்ந்திருக்கிறதா என்றால் ஆம், நிகழ்ந்தது. ஆனால் அனைத்து மக்களுக்கும் அது நிகழவில்லை. அதனால்தான் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை ‘சமத்துவமின்மையின் யுகம்’ என்று அழைக்கிறோம்.

சமத்துவமின்மையின் யுகம்

வளர்ச்சியின் யுகம் தொடங்கி 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் உலகின் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே மிகப்பெரிய பொருளாதார இடைவெளி நிலவுகிறது. இது இன்னும் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆக்ஸ்ஃபாம் என்னும் சர்வதேச ஆய்வு நிறுவனம் உலக சமத்துவமின்மை குறித்து அளிக்கும் புள்ளிவிவரங்கள் இவை.

  • உலகின் 6.9 பில்லியன் மக்களிடம் இருக்கும் செல்வத்தைக் காட்டிலும் முதல் 1% மக்களிடம் இரண்டு மடங்கு அதிகமான செல்வம் உள்ளது.
  • உலகின் மக்கள் தொகையில் பாதி, அதாவது சுமார் 3.4 பில்லியன் மக்கள் மாதம் 5000 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில், கொடிய வறுமையில் வாழ்கின்றனர்.
  • உலகளவில் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் 24% குறைவான வருமானம் பெறுகின்றனர், 50% குறைவான சொத்துடைமை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
  • ஐந்தில் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவதில்லை.

இன்னமும் புள்ளிவிவரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னமும் தண்ணீர் சேகரிக்க பல மணிநேரம் செலவிடும் பெண்களைக் கிராமங்களில் காணலாம். இதே உலகில்தான் வீட்டு மொட்டைமாடிகளில் நீச்சல் குளம் கொண்ட நகரங்களும் இருக்கின்றன.

21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின் இந்த நிலை இன்னும் மோசமாகி வருகிறது. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏழைகளின் சதவிகிதம் மேலும் அதிகரித்துக்கொண்டும், செல்வந்தர்களின் சதவிகிதம் குறைந்துகொண்டும் செல்கிறது. அவர்களின் மூலதனக் குவிப்பு கூடிகொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் வளர்ச்சி யுகத்தின் ‘வளர்ச்சி’ அனைவருக்குமான வளர்ச்சியாக இல்லாமல் போனதுதான். இதனால் இது ‘சமத்துவமின்மையின் யுகம்’ எனப்படுகிறது.

சமத்துவமின்மையின் யுகம்

சமத்துவமின்மைக்கு மூலதனக் குவிப்பு, தாராளமயம், உலகமயம், காலனியம், நவீன காலனியம் என்று பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தனிமனிதர்களுக்கு இடையில் மட்டுமின்றி நாடுகளுக்கு இடையிலும் இந்தச் சமத்துவமின்மை அதிதீவிர அளவில் உள்ளது. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக அங்குள்ள செல்வந்தர்களின் வளர்ச்சிக்காக மூன்றாம் உலக நாடுகளான ஆப்பிரிக்க, தென் அமெரிக்க, தெற்காசிய நாடுகள் சுரண்டப்படுகின்றன.

‘வளர்ச்சி’யின் மீதிருந்த நம்பிக்கை உடைந்ததைத் தொடர்ந்து வளர்ச்சிக்குப் பிந்தைய யுகம் (Post-Development Era) தொடங்குகிறது. வளர்ச்சி சுரண்டலுக்கே இட்டுச்செல்கிறது என்பதைக் கண்டதும் ‘வளர்ச்சிவாதம்’ (Developmentalism) எனும் கருத்தாக்கம் உருவானது. அதைத் தொடர்ந்து வளர்ச்சிக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் உலகம் முழுவதும் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

இதற்கெல்லாம் அடித்தளமாக சூழலியலும் மானிட சமத்துவமும் இருக்கின்றன. இவற்றை சிவப்பு, பச்சை கோட்பாடுகள் (Red and Green Ideologies) என்கின்றனர் அறிஞர்கள். சமத்துவமின்மைக்கு இட்டுச்செல்லும் வளர்ச்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் சிவப்பு, பச்சை இயக்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இயக்கங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இது வளர்ச்சி எனும் கருத்தாக்கத்தின் கதை. பிறப்பு, எழுச்சி, ஆதிக்கம், எதிர்ப்பு, சரிவு, இறப்பு என்று அனைத்து அத்தியாயங்களையும் கொண்ட ஒரு பெரும் கதையாக இது விரிந்து நிற்கிறது. அந்தக் கதையைத்தான் நாம் இங்கே காணப்போகிறோம்.

(தொடரும்)

பகிர:
ஹரி பாரதி

ஹரி பாரதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டமும் லயோலா கல்லூரியில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தற்போது ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார். சூழல், சமூகப் போராட்டங்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்துவருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *