1771இல் ஜேம்ஸ் வாட் பரிசோதனைகள் செய்து வந்த காலத்தில் இங்கிலாந்தின் கார்ன்வால் மாவட்டத்தில் பிறந்தவர் ரிச்சர்ட் டிரெவிதிக். தந்தை பெயரும் ரிச்சர்ட், தாயார் ஆன். ஆறு குழந்தைகளில் ஐந்தாவதாகப் பிறந்த ரிச்சர்ட் மட்டுமே ஆண் குழந்தை. கார்ன்வால் மாவட்டத்தில் செம்பு, தகரம் இத்தியாதி எனப் பல்வேறு தாதுக்கள் பரவலாக மண்ணில் புதைந்திருந்தன. நம் பாரதத்தில் பிகார், ஒரிசா மாநிலங்களில் புதைந்திருப்பதைப்போல.
அப்படி ஒரு சுரங்கத்தில் தாதுப்பொருட்கள் தோண்டும் ஒரு குழுவின் தலைவராக அவரது தந்தை இருந்தார். ஜேம்ஸ் வாட் உருவாக்கிய எஞ்ஜின்களில் ஒன்று, அவர் வேலை செய்த சுரங்கத்திலும் நீரை வெளியேற்றும் பம்பு மோட்டாராகப் பயன்பட்டது.
ஒரு பள்ளி ஆசிரியர் டிரெவிதிக்கை அடங்காதவன், பிடிவாதமானவன், கட்டுப்பாடில்லாதவன், பள்ளிக்குச் சரியாக வராதவன், பாடத்தில் கவனம் செலுத்தாதவன் என்றெல்லாம் வர்ணித்தார். ஆனால் டிரெவிதிக்குக்கு கணிதத்தில் மிகவும் ஆர்வம் காட்டும் மறுமுகம் ஒன்றும் இருந்தது.
ஜான் ஹார்வே என்பவருக்குச் சொந்தமான டிங்டாங் சுரங்க கம்பெனியில் பத்தொன்பது வயதிலேயே சேர்ந்து, மிக விரைவாக ஆலோசனையாளர் எனும் உயர் பதவி அடைந்தார் டிரெவிதிக். கம்பெனி முதலாளியின் மகளைக் கல்யாணம் செய்துகொண்டு இவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றார்கள். அதிசயமாக ஆறு பேரும் நீண்ட நாள் வாழ்ந்தனர்.
0
பௌல்டன்-வாட் கம்பெனி நீராவி விசைகளை மளிகைப்பொருள்போல விற்கவில்லை. சுரங்கத்தை வந்து பார்த்து, அளவெல்லாம் எடுத்து, கட்டடம் கட்டுவதுபோல் நிறுவினர். வாட் எஞ்ஜின் பழைய நியூகமென் எஞ்ஜினைவிட ஐந்து மடங்கு ஆழத்திலிருந்து நீரை வெளியே எடுக்கும் திறனைக் கொண்டிருந்தது. இதற்காகக் குறைவான நிலக்கரியே செலவழிக்கப்பட்டது. கார்ன்வால் மாவட்டத்தில் தகர, செம்புச் சுரங்கங்கள் பல உண்டு. ஆனால் நிலக்கரி சுரங்கம் ஏதும் கிடையாது. இங்கிலாந்தின் வட மாவட்டங்களிலிருந்து நிலக்கரியைத் தெற்கிலுள்ள கார்ன்வாலுக்குக் கொண்டு வரவேண்டும். பெரும்பான்மையாகக் கரியைப் படகில் ஏற்றி, கால்வாய் வழியாகக் கொண்டுவந்தனர். படகுகளைக் கரையில் நடக்கும் குதிரைகளை வைத்து இழுப்பார்கள்.
அக்காலத்தில் இங்கிலாந்திலும் சாலைகள் எல்லாம் மாட்டுவண்டி, குதிரைவண்டி போகும் மண் சாலைகள்தான். இன்றுபோல் தார் சாலைகள் கிடையாது நிலக்கரி, இரும்பு, செம்பு போன்ற கனமான தாதுப்பொருள்களை நதிகளிலும் கால்வாய்களிலும் கொண்டு செல்வதே எளிமை. செலவும் குறைவு. பற்பல இடங்களில் மேடுகளைத் தாண்டவும், குன்றுகளைத் தாண்டவும் பாலம் கட்டி, கால்வாய் கட்டிய காலம் அது. ஆனால் எல்லா இடங்களிலும் இதைச் செய்ய இயலவில்லை.
தண்டவாளம் போட்டு, சக்கரம் பொருத்திய வண்டியை அதில் செலுத்த யாருக்கு முதலில் தோன்றியது, யார் செயல்பட்டார் என்பது வரலாற்றுச் சுவடுகளில் படியவில்லை. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் (புத்தர் பிறக்கும் முன்) கிரேக்க நாட்டிலும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் (தமிழ்நாட்டின் சங்க காலத்தில்) சீன தேசத்தில் மரத்தால் செய்யப்பட்ட தண்டவாளங்களின் எச்சம் இங்குமங்கும் கிடைக்கின்றன.
ஜேம்ஸ் வாட், ட்ரெவிதிக் ஆகியோர் பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே மரத்தண்டவாளங்கள் இருந்துள்ளன. அதிகப் பளுச் சுமக்கும் வண்டிகளை ஓட்ட, மரத்தண்டவாளங்களுக்கு இரும்புக் கவசம் போட்டு வண்டியோட்டினர். பிறகு இரும்பிலேயே தண்டவாளம் அமைத்தனர். தண்டவாளங்களில் சின்ன சின்ன மரவண்டிகள் போகும். அதன் அளவு நாலைந்து அடி நீளம், மூன்று, நான்கு அடி அகலம்தான் இருக்கும். இவற்றைக் குதிரைகள் இழுக்கும். இவற்றில் மூலம் நாடு முழுக்க நிலக்கரிப் போக்குவரத்து நடக்கும். இந்தப் போக்குவரத்து முறையில் நிலக்கரியை ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குக் கொண்டுபோகவே சில நாட்கள் ஆகும்.
அதனால் குறைவாகக் நிலக்கரி செலவழிக்கும் இயந்திரங்கள் தேவைப்பட்டன. இந்தச் சூழ்நிலையில்தான் ரிச்சர்ட் ட்ரெவிதிக் டிங்டாங் சுரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நீராவி எஞ்ஜினை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஜேம்ஸ் வாட் எஞ்ஜின் முப்பது அடி உயரம் இருக்கும். நீராவியின் அழுத்தம் பெரிய ஆபத்து. ஜேம்ஸ் வாட்டின் முக்கிய சாதனை அழுத்தத்தால் வெடிக்காத எஞ்ஜினைத் தயாரித்தது. நீராவி அழுத்தம் காற்று அழுத்தம் போன்றது. நாம் கார், பஸ், சைக்கிள், ஸ்கூட்டர் டயர்களில் காற்றை பம்பு வைத்து நிரப்புகிறோம். அவை 30 பிஎஸ்ஐ (PSI = pounds per square inch) அழுத்தம் இருக்கும்.
ஜேம்ஸ் வாட் எஞ்ஜினில் ஐந்திலுருந்து பத்து பிஎஸ்ஐ நீராவி அழுத்தம்தான் உச்சக்கட்டம். இதற்கு மேல் அழுத்தத்தை ஏற்றினால் இரும்பு சிலிண்டர்கூட வெடித்துவிடும். தொழிலாளிகளுக்குக் காயம், மரணம் என்று விபத்து நேராமல் தவிர்க்க அவர் குறைந்த அழுத்தத்தையே விரும்பினார். தனி கண்டென்ஸருக்குப் பாராளுமன்றத்திடம் 25 வருடக் காப்புரிமை வாங்கியதால், மற்றவர் புதிய ஆராய்ச்சிக்கும் ஜேம்ஸ் வாட் தடையாக இருந்தார்.
ட்ரெவிதிக் வித்தியாசமாக யோசித்தார். ஜேம்ஸ் வாட்டின் மிக முக்கியக் கருவியான எக்ஸ்டர்னல் கண்டென்சரே தேவையில்லை என்று அவர் கருதினார். கண்டென்ஸரே இல்லாத நீராவி விசையை உருவாக்கினார்.
0
இன்று மெக்கானிக்கல் பொறியியல் படித்த மாணவர் யாவருக்கும் ஜேம்ஸ் வாட்டும், அவர் முன்னோடிகளும் நீர்க்காய்ச்சும் பாய்லரை அல்லது சிலிண்டரைத் தண்ணீர் வைத்துக் குளிரச்செய்தார்கள், ஜேம்ஸ் வாட் கண்டென்சர் வைத்தார் என்பதே கேட்பதற்கு விசித்திரமாக இருக்கும். இந்தப் பின்னணியில் கண்டென்சரை டிரெவிதிக் வேண்டாம் என்று ஒதுக்கியதே அவ்வளவு பெரிய புரட்சி சிந்தனை. இன்றைக்கு கண்டென்ஸர் இல்லாத பாய்லர்தான் இயல்பு, உலக வழக்கம், அடிப்படை அறிவு என்று நினைக்குமளவு பாய்லர் பொறியியல் வளர்ந்துள்ளது.
அந்த 25 ஆண்டு காலத்தில் (வாட் காப்புரிமை நீடித்த 1775 முதல் 1800 வரை) பாய்லர் தரம் உயர்ந்தது. இரும்பின் தரம் மேம்பட்டது. ஜோசஃப் ப்ரீஸ்ட்லீ, அந்துவான் லவோய்சியே போன்றவர்களின் வேதியியல் ஆராய்ச்சிகளால் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் இவற்றின் குணங்களை விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் சிறப்பாகப் புரிந்துகொண்டனர். வேதியியல் என்ற துறையே அப்பொழுது பிறந்ததுதான். இது எப்பேர்ப்பட்ட வரலாற்று அதிசயம் என்று விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் உணர்வதில்லை.
பொதுவாக அவர்களுக்கு வரலாற்றில் ஆர்வம் இருப்பதில்லை. அரசியல், போர், ஆட்சி அதிகாரம், மன்னராட்சி, மக்களாட்சி என்பதே வரலாறு என்று நினைக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், புலவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அறிவியல் பொறியியல் வரலாற்றில் ஆர்வமேதும் இருப்பதில்லை. நிற்க, இந்த வேதியியல் கதையைத் தனியாகப் பார்ப்போம்.
கை ஏந்தி, சுத்தியால் கொல்லுப்பட்டரை வேலை சென்ற காலம் மாறி, ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரத்தால் இயங்கிய ராட்சச சுத்தியல்கள் இரும்பைச் செப்பனிட்டன. மரக்கப்பல்களுக்கு இரும்புக்கவசங்கள் தயாரிக்க இந்த இயந்திரச் சுத்தியல்கள் தேவைப்பட்டன. ஜேம்ஸ் வாட்டுக்குத் தரமான சிலிண்டரைச் செய்துகொடுத்த ஜான் வில்கின்சன், வாட்டின் எஞ்ஜின்களை வாங்கி தன் ஆலைகளில் இதைத்தான் செய்து வந்தார்.
கண்டென்சர் வேண்டாம் என்று ஒதுக்கிய டிரெவிதிக், பலமான எஞ்ஜின் செய்ய அதிக அழுத்தம் தாங்கும் பாய்லர்களை வடிவமைத்தார். முப்பது பிஎஸ்ஐ அழுத்தம் தாங்கும் பாய்லர்கள் செய்யப்பட்டன. உயர்ந்த அழுத்தத்தால் விபத்து ஏற்படும் என்ற ஜேம்ஸ் வாட்டின் பயமும் கவலையும் இவருக்கு இல்லை.
அப்படி விபத்தைத் தவிர்க்கச் சில கருவிகளைத் தயாரித்தார். வெப்பம் அதிகமானால் தானாக நெருப்பை அணைக்கும் கருவி, வெப்பத்தைக் குறைக்கும் கருவி, அதிகபட்ச நீராவியை வெளியேற்றும் குழாய் (எக்ஸாஸ்ட் பைப் / பிளாஸ்ட் டியூப்) போன்ற கருவிகளை உருவாக்கினார். இதனால் நிலக்கரி செலவு பாதியாய் குறைந்தது. இதையடுத்து பௌல்டன்-வாட் எஞ்ஜினை விடுத்து, ட்ரெவிதிக் எஞ்ஜினை வாங்கப் பல சுரங்க முதலாளிகள் முன்வந்தார்கள். செல்வமும் பெயரும் புகழும் அரசாங்க செல்வாக்கும் உள்ள ஜேம்ஸ் வாட், மேத்யூ பௌல்டன் இருவரும் வக்கீல்களை வைத்து வழக்கு தொடுத்து ட்ரெவிதிக்கைக் காப்புரிமை வழக்கு போட்டு நிறுத்த பார்த்தனர். ஆனால் முடியவில்லை.
ஆறடி இரண்டங்குல உயரமாக வாட்டசாட்டமானவர் ட்ரெவிதிக். நண்பர்கள் அவரை அன்பாக கார்னிஷ் ராட்சஸன் என்று அழைத்தனர். அவரது இயந்திரம் கார்ன்வால் சுரங்களில் பரவலானதால் அதை கார்னிஷ் எஞ்ஜின் என்றும் அழைத்தனர். ட்ரெவிதிக் ராட்சனாக ஆக இருக்கலாம். ஆனால் உலகளந்தபெருமாளை வாமன அவதாரமாகச் சுருக்கியதுபோல், ஜேம்ஸ் வாட்டின் இருபது அடி, முப்பது அடி உயரமான இயந்திரத்தை அவர் நாலைந்து அடி உயரத்திற்குச் சுருக்கி விட்டார்.
உயரமும் அகலமும் குறைந்ததால் இயந்திரத்தின் கனமும் அபாரமாகக் குறைந்தது. ஒரு வண்டியில் பூட்டினால் தன்னையே இழுக்கும் சக்தி வல்லதாய் எஞ்ஜினின் கனம் குறைந்தது.
இதற்கிடையே பௌல்டன்-வாட் கம்பெனியின் பிரதான பொறியாளரான வில்லியம் மர்டாக், கார்ன்வால் மாவட்டத்தில் ரெட்ருத் எனும் சிற்றூரில் குடிப்புகுந்தார். அவர் பக்கத்து வீட்டில் ட்ரெவிதிக் குடிப்புகுந்தார்.
அங்கே வில்லியம் மர்டாக் ஒரு நீராவி எஞ்ஜினை ஒரு வண்டியில் பொருத்தி பரிசோதனை செய்தார் என்று சில குறிப்புகள் உள்ளன. அவர் கட்டுப்பாட்டில் இருந்து அந்த வண்டி தப்பியோடி சாலையில் சென்றுவிட்டது என்றும், இருட்டில் அந்தச் சாலையில் வந்த ஒரு பாதிரியார் இதைப் பார்த்தார் என்றும், எரியும் நெருப்போடு புகைய, புகைய ஆளில்லா இயந்திரத்தைப் பார்த்து கொள்ளிவாய் சைத்தானே பூலோகத்தில் அவதாரம் எடுத்துவிட்டது என்றும் பதறிய அந்தப் பாதிரியாரைச் சமாதான படுத்தவே வில்லியம் மர்டாக்கிற்குப் பெரும் பிரயத்தனம் ஆகிவிட்டது என்றும் ஒரு கதையும் உண்டு. இது கதையா நிஜமா என்று தெரியவில்லை. ஆனால் வில்லியம் மர்டாக் அதற்குப் பின்பு ஓடும் வண்டியைத் தயாரிக்கவில்லை. அடுத்த இருபது ஆண்டுகளில் அவர் படகுகளில்தான் நீராவி இயந்திரத்தைப் பொருத்தி, நீர் போக்குவரத்தில் ஒரு புது யுகத்தைத் தொடங்கினார்.
எப்படியும் வில்லியம் மர்டாக்கிடம் ஏதோ சில பாடங்களை ட்ரெவிதிக் கற்றிருப்பார் என்பது உறுதி. நான்கைந்து ஆண்டுகளில் டிரெவிதிக் ஒரு எஞ்ஜினைத் தயாரித்தார். அடுப்பைக் கீழே வைத்து, அதன் மேலே பாய்லர் அண்டாவை வைத்து, அதில் உண்டாகும் நீராவியை ஒரு செங்குத்தான சிலிண்டரில் செலுத்தி, பிஸ்டன் தண்டை இயக்கும் யந்திரங்களைத்தான் சேவரி, நியூகமன், ஜேம்ஸ் வாட் எல்லாரும் உருவாக்கினர்.
ட்ரெவிதிக் மிகவும் வித்தியாசமாக யோசித்தார். செங்குத்தான அண்டாவைப் பக்காவாட்டாகப் படுக்கவைத்தார். அண்டாவுக்குக் கீழே இருந்த அடுப்பை அண்டாவுக்கு உள்ளே கொண்டு வந்தார். அண்டாவுக்குள் சில குழாய்களை நுழைத்தார். நெருப்பின் வெப்பத்தில் உருவான வாயுவை அந்தக் குழாய்களில் செலுத்தினார். நம் வீட்டில் அடுப்பு மேல்வைத்து பால் காய்ச்சும் பாத்திரத்தின் நிலையிலிருந்து, குளியலரை கெய்சர் அல்லது இம்மர்ஷன் ஹீட்டர் நிலைக்கு அதைக் கொண்டுவந்தார்.
ஏற்கெனவே கண்டென்ஸர் வேண்டாம் என்று ஒதுக்கியவராயிற்றே! நீராவியைக் கழிவாக வெளியே அனுப்பக் குழாய் அமைத்தார்.
1801இல் இந்தப் புதுமைகளைக் கொண்டு ஒரு பலகையில் நான்கு சக்கரம் அமைத்து, இந்த அண்டாவை அதன் மேல்வைத்து, பிஸ்டனால் சக்கரத்தை இணைத்து ஒரு நடமாடும் வண்டியாய் (கொள்ளிவாய் சைத்தான் Puffing Devil) சாலைகளில் ஓட்டிக்காட்டினார். சிலிண்டருக்கு வெளியே நீட்டியிருந்த பிஸ்டன் நேராகச் சக்கரத்தைச் சுழற்றியது. இந்தப் பெயரைப் பார்த்தால் அந்த மிரண்டுபோன பாதிரி கதை உண்மையோ என்று ஐயம் எழுகிறது.
ஆனால் மண் சாலைகளால் அந்த வண்டியின் கனத்தைத் தாங்க முடியவில்லை. அப்பொழுது ஸ்டீயரிங் வீல் கிடையாது, பிரேக் கிடையாது. அதனால் வண்டிபோகும் திசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்றாம் நாள் சாலையோரம் பள்ளத்தில் விழுந்துவிட்டது அந்த வண்டி. அதை விட்டுவிட்டு பக்கத்தில் ஓர் உணவகத்திற்கு உண்ணவும், பானங்கள் அருந்தவும் சென்றனர். எஞ்ஜின் வெடித்து வண்டி சிதறியது. டிரெவிதிக் அலட்டிக்கொள்ளவில்லை. லண்டன் கேரேஜ் என்று வேறொரு வண்டியைத் தயாரித்தார். ஆனால் சாலைகளில் அதனாலும் சரியாகச் செல்லமுடியவில்லை. நீராவி கார் அல்லது பஸ் என்று இவற்றைச் சொல்லலாம். பொறியியல் ரீதியாக வெற்றி. ஆனால் வர்த்தகத்தில் தோல்வி.
தற்காலிகமாகச் சாலையில் ஓடும் வண்டியை விட்டுவிட்டு கொல்லுப்பட்டறைக்கும் சுரங்கத்திற்கும் இந்தச் சிக்கனமான சக்தி வாய்ந்த கார்னிஷ் எஞ்ஜினைச் செய்து விற்றார் டிரெவிதிக். ஒரு தொழிற்சாலையில் தொழிலார்களின் கவனக்குறைவில் ட்ரெவிதிக் எஞ்ஜின் வெடித்து நான்கு பேர் இறந்துபோனார்கள். அதிகமான அழுத்தமே விபரீதமானது என்று ஜேம்ஸ் வாட் பொதுமேடையில் கூக்குரல் எழுப்பி, ட்ரெவித்திக்கைத் தூக்கிலிடவேண்டும் என்றெல்லாம் பேசினார். ஆனால் அப்படி ஒன்றும் ஆகவில்லை.
மண் சாலையில் தானே கட்டுப்படுத்த முடியவில்லை. தண்டவாளத்தில் ஓட்டினால் ஸ்டியரிங் தேவையேயில்லை என்று சேமுவல் ஹாம்ஃப்ரே என்ற இரும்புப் பட்டறை முதலாளி, டிரெவிதிக்கைத் தூண்டிவிட்டார். அவரே பென்னி டேரன் என்ற இடத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டருக்கு இரும்புத் தண்டவாளத்தைப் போட்டும் கொடுத்தார். இந்தத் தண்டவாளத்தில் செல்ல டிரெவிதிக் ஒரு நீராவி எஞ்ஜினை உருவாக்கினார். பென்னிடேரன் எஞ்ஜின் என்று பின்னர் புகழ்பெற்ற இது ஐந்து ரயில் பெட்டிகளில், பத்தாயிரம் கிலோ இரும்பையும் எழுபது பயணிகளையும் இழுத்துச் சென்றது. இதுவே நீராவி எஞ்ஜின் இழுத்த முதல் புகைவண்டி என்று சொல்லலாம்.
ஆனால் அந்த எஞ்ஜின் கனம் தாங்காமல் தண்டவாளங்கள் அங்கும் இங்கும் உடைந்தன.
Catch-Me-Who-Can முடிஞ்சா பிடிச்சுக்கோ என்று மேலும் ஒரு ரயில்வண்டியை உருவாக்கினார். இது போக்குவரத்துக்கு அல்ல. ஒரு கேளிக்கை வண்டி. ஒரு மைதானத்தில் வட்டமாகத் தண்டவாளப் பாதையை அமைத்து அதில் குதிரைகளைவிட வேகமாக நீராவி எஞ்ஜின் வண்டி இழுக்கும் என்று காட்டுவதற்கே செய்தது. திருவிழாவில் ராட்டினம்போல டிக்கட் போட்டு விற்றனர். ஓரிரு மாதங்களில் எஞ்ஜின் கனம் தாங்காமல் இதன் தண்டவாளமும் அங்கும் இங்கும் உடைந்தது.
தண்டவாளங்களின் இயலாமை, அக்காலத்து காஸ்ட் ஐயர்ன் எனும் இரும்பின் பலவீனம், உடையும் தன்மை அடுத்த இருபதாண்டுகளுக்கு நீராவி ரயில் வண்டி ஓடாமல் இருக்கப் பெரும் தடையானது. நான்கைந்து ஆண்டுகளில் ரயில் வண்டி கனவை விட்டுவிட்டார் ட்ரெவிதிக். அவருடைய பிடிவாத குணமும், இயல்பான முரட்டுத்தனமும் வாழ்வில் பெரும் இடைஞ்சல்களாக இருந்தன. ஜேம்ஸ் வாட்டிற்கு மேத்தியு பௌல்டன் என்ற அற்புதமான வியாபாரத் திறமை கொண்ட நண்பர் கிடைத்ததுபோல் ரிச்சர்ட் டிரெவிதிக்கிற்கு யாரும் நண்பரோ, ஆலோசகரோ கிடைக்கவில்லை. ட்ரெவிதிக் எஞ்ஜின்கள் பாய்லர்களாக, இடம்பெயரா கருவிகளாக மட்டும் புகழ்பெற்றன. சுரங்கத்திற்கும், கொல்லறைகளுக்கும் மட்டுமே அதிகம் விற்பனையாகின.
பின் டிரெவிதிக்குக்குத் தென் அமெரிக்காவில் சுரங்கத்தில் எஞ்ஜின் அமைக்க அழைப்பு வந்தது. பத்து, பதினைந்து வருடம் அங்கே சென்று அதைச் செய்தார். கொலம்பியா, ஈகுவடார், பெரு போன்ற நாடுகளில் வாட் எஞ்ஜின் இயங்காத உயரத்தில் தன் இயந்திரத்தை நிர்மாணித்து பல வெற்றிகளைக் கண்டார், நல்ல பணம் சம்பாதித்தார். ஆனால் அங்கும் சில சண்டை சச்சரவுகள். கோஸ்டா ரிக்கா நாட்டில் போர்ச் சூழலில் மாட்டிக்கொண்டு, எல்லாப் பணத்தையும் இழந்து நண்பர் ராபர்ட் ஸ்டீவென்சனிடம் கடன் வாங்கி இங்கிலாந்து திரும்பினார். தன் குடும்பத்தை அனாதையாக இங்கிலாந்தில் விட்டுவிட்டு தென் அமெரிக்கா சென்று விட்டார் என்று இழிவாகப் பேசப்பட்டார். அவர் குடும்பமும் நண்பர்களும் அவரைக் கைவிட்டனர். மேலும் சில சாதனைகள் செய்தும் கடைசிக் காலத்தில் தனிமையாக வாழ்ந்தார்.
டிரெவிதிக் தென் அமெரிக்காவில் இருந்த காலத்தில் ராபர்ட் ஸ்டீவென்ஸனும், அவர் தந்தை ஜார்ஜ் ஸ்டீவென்ஸனும் ரயில் வண்டி பரிசோதனைகள் செய்து தாங்களும் நீராவி விசைகளைப் படைத்து வெற்றி பெற்றனர். ரயில் வண்டிகளின் தந்தை என்று ஜார்ஜ் ஸ்டீவென்சனுக்குப் பட்டம் கிடைத்தது. அந்தச் சாதனைக்கு மூன்றாண்டுகளுக்குப் பின்பு ட்ரெவிதிக் இறந்தார்.
டிரிவித்திக் கட்டிய அறிவு ஏணியில் ஏறியே ஜார்ஜ் ஸ்டீவென்ஸன் வெற்றிபெற்றார். அது வேறு ஒரு தனிக்கதை.
0
________
உதவிய நூல்கள்
– இண்டஸ்ட்ரியல் ரெவலேஷன்ஸ் – பிபிசி தொடர்
– ஆன் தி ரெயில் – பிபிசி தொடர்
– விக்கிப்பீடியா