Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு #3 – ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #3 – ஜார்ஜ் ஸ்டீவென்சன் : படிக்காத மேதை படைத்த பாதை

1781இல் ராபர்ட் ஸ்டீவென்சனுக்கும், அவரது மனைவி மேபலுக்கும் பிறந்தவர் ஜார்ஜ் ஸ்டீவென்சன். ரிசர்ட் டிரெவிதிக்கைவிடப் பத்து ஆண்டுகள் இளையவர்.

இன்று உலகெங்கும் தண்டவாளங்களில் ஓடும் ரயில்வண்டிகளின் தந்தை என்ற புகழ் பெற்றவர் ஜார்ஜ் ஸ்டீவென்சன். 1690களில் தாமஸ் சேவரி முதன்முதலில் வடிவமைத்த நீராவி எஞ்ஜின், அவருக்குப் பின்னர் நியூகமென், ஜேம்ஸ் வாட், ரிச்சர்ட் டிரெவிதிக் என்று நான்கு தலைமுறைகளும், 130 ஆண்டுகளும் கடந்த பின்புதான் நீராவி எஞ்ஜின் ஸ்டீவென்சனின் கைங்கரியத்தில் ரயில்வண்டிகளை இழுக்கும் புரட்சி எஞ்ஜினாக மாறியது.

130 ஆண்டுகாலம் எடுத்துக்கொண்டது புரட்சியல்ல, பரிணாம வளர்ச்சி அன்றோ? ஆனால் அதன் விளைவு போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சி. சமூகத்தில் அதைவிடப் பெரிய புரட்சி என்பதே நிதர்சனம்.

டிரெவிதிக்கைப் போலவே ஸ்டீவென்சனின் (ஸ்டீஃபன்சன் அல்ல. ஆங்கிலத்தில் ஃப என்று எழுதினாலும் அதை வெ என்றே உச்சரிக்க வேண்டும்) தந்தையும் சுரங்கத் தொழிலாளி. டிரெவிதிக் பிறந்தது இங்கிலாந்தின் தென்மேற்கு கோடியில் கார்ன்வால் மாவட்டம். ஸ்டீவென்சன் பிறந்தது வடகோடியில் நார்தம்பர்லாண்ட் மாவட்டம். டிரெவிதிக் சில ஆண்டுகள் பள்ளிக்கூடத்தில் படித்தார். ஸ்டீவென்சன் பள்ளிக்குச் செல்லவேயில்லை. பதினெட்டு வயதில்தான் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். அந்த மாவட்டத்தின் வட்டார ஆங்கிலம் லண்டன் நகர மக்களுக்குப் பாதி புரியாது.

ஸ்டிவென்சனுக்கு இருபது வயதானபோது ஹம்ஃப்ரீ டேவி என்ற மாபெரும் விஞ்ஞானி ஓர் அற்புதமான சுரங்க விளக்கைக் கண்டுபிடித்தார். நிலக்கரிச் சுரங்கத்தில் சில விஷவாயுக்கள் உண்டாகும். தொழிலாளிகள் மூச்சு திணறி மயக்கமுறுவர். சிலர் இறந்தே போவர். அந்த வாயு தீப்பற்றி சுரங்கம் முழுதும் தீ பரவி தொழிலாளிகளைக் காவு வாங்கிய சில விபத்துக்களும் நடந்தன.

இப்படி விபத்துகளைத் தடுக்க, அபாயம் தவிர்க்கும் எச்சரிக்கை விளக்கை (மின்சார விளக்கல்ல, திரியில் எரியும் அகல் விளக்கு) வேதியியல் விஞ்ஞானியான டேவி உருவாக்கினார். ஆனால் அதேசமயம் அனுபவத்திறமையால் ஓர் எச்சரிக்கை விளக்கை ஸ்டீவென்சனும் கண்டுபடித்தார். படிப்பறிவில்லாத ஒரு சுரங்கத் தொழிலாளி, ஒரு விஞ்ஞான மேதைக்குச் சமமாக வெறும் அனுபவத்தால் மட்டும் ஒரு விளக்கை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை என்று டேவியும், அவரது மேல்தட்டு விஞ்ஞான நண்பர்களும் ஸ்டீவென்சனை இகழ்ந்தனர்.

அவரை ஜார்ஜ் என்று பெயர் சொல்லாமல் ஜோர்டி என்று நையாண்டிச் சொல்லால் குறிப்பிட்டனர். 21ஆம் நூற்றாண்டிலும் அம்மாவட்ட மக்கள் பொதுவாக ஜோர்டி என்றே குறிப்பிடும் பழக்கமுண்டு. லண்டன் மக்கள் மேல் வாழ்நாள் முழுதும் அவநம்பிக்கையும், மேல்தட்டு மக்களின் காழ்ப்பை வெறுக்கும் மனப்பான்மையும் ஜார்ஜ் ஸ்டீவென்சனின் மனதில் வளர்ந்தது.

அன்றைய காலகட்டத்தில் சுரங்கத்தில் உள்ளே மரத்தினாலும் இரும்பினாலும் தண்டவாளங்கள் போடப்பட்டு போனி குதிரைகள் மூலம் கரிகள் எடுக்கப்பட்டன. நிலத்தடி நீர் இறைத்து வெளி கடத்த நீராவி எஞ்ஜின்கள் இருந்தன. அவற்றைப் பழுது பார்க்கச் சிறுவயதிலேயே ஜார்ஜ் ஸ்டீவென்சன் கற்றுக்கொண்டார். இருபது வயதில் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகள் சிறு வயதில் இறந்துவிட்டாள். ஓரிரு ஆண்டுகளில் மனைவியும் இறந்துவிட்டாள். மகன் ராபர்ட்டை திருமணம் ஆகாத அக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ஜார்ஜ் பல இடங்களில் பல வேலைகள் செய்யக் கற்றுக்கொண்டார். கடிகாரம், கருவிகள், காலணிகள் எனப் பலவற்றையும் பழுது பார்த்து திறமையை வளர்த்துக்கொண்டார். ஒரு வாட் எஞ்ஜினோடு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததால் அதன் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

தந்தை ஒரு விபத்தில் கண் இழக்க, மீண்டும் சொந்த ஊருக்கே வந்தார். டிரெவிதிக்கின் சிறிய எஞ்ஜினைப் பார்த்து அந்த மாவட்டத்தில் பலரும் சிறிய சிறிய எஞ்ஜின்களைச் சோதனை முறையில் உருவாக்கினார்கள். மலைப்பகுதியிலிருந்து சமநிலம் அல்லது நதி வரை செல்லும் சிறிய எஞ்ஜின்களைத் தயாரித்து, ஒரு சில கிலோமீட்டர் மட்டும் ஓடும் ரயில் வண்டிகளைச் செய்தனர். இது போன்ற சில எஞ்ஜின்களோடு பயின்று சிறப்பான எஞ்ஜினியார் ஆனார் ஸ்டீவென்சன்.

மற்றவர்கள் வடிவமைத்த எஞ்ஜினைப் பார்த்துத்தான் இவரே எஞ்ஜின் வடிவமைத்தார். குறிப்பாக மேதியு மர்ரே வடிவமைத்த வில்லிங்டன் எனும் எஞ்ஜினைப் பார்த்து, புளூக்கர் என்ற எஞ்ஜினை ஸ்டீவென்சன் படைத்தார். வில்லிங்கடன் எனும் ஆங்கில ராணுவத் தளபதி நெப்போலியனைப் போரில் (1815) தோற்கடித்தவர். புளூக்கர் என்பவர் அவருக்கு உதவிய ஜெர்மானியத் தளபதி.

பல சுரங்க அதிபர்கள் அவரிடம் சிறிய ரயில் எஞ்ஜின்களைச் செய்யக் கோரினர். கில்லிங்வர்த் எனும் இடத்தில் முப்பது டன் கரியை இழுக்கும் ஓர் எஞ்ஜினைச் செய்தார். இது ஒரு மணிக்கு 6 கி.மீதான் செல்லும். இவ்வாறு பதினாறு எஞ்ஜின்கள் செய்தார் என்று ஒரு செவிவழிச் செய்தி கூறுகிறது. ஆவணங்கள் இல்லை.

எஞ்ஜின்கள் சரியாக ஓடினாலும் தண்டவாளங்கள் கனம் தாங்காமல் பழுதாவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு சில பட்டறைகளில் இரும்புக் கம்பிகளை ரோலர்கள் இடையே செலுத்தி, ஈரத்துணியைப் பிழிவதுபோல் பிழிந்து, பின்பு தண்ணீரால் குளிரவைத்தால் அவை காஸ்ட் ஐயர்னைவிடப் பலமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. பிழிந்த இரும்பே (Wrought Iron) தண்டவாளங்களுக்குச் சரி என்று ஜார்ஜ் ஸ்டீவென்சன் முடிவெடுத்தார். அதுவே தக்க முடிவாக இருந்தது. டிரெவிதிக்கின் தோல்வியை ஸ்டீவென்சன் வெற்றியாக மாற்றியதற்குப் பிழிந்த இரும்புத் தண்டவாளங்களே மூலமுதற் காரணம்.

1821இல் அவருடைய நாற்பதாம் வயதில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. ஸ்டாக்டன் முதல் டார்லிங்க்டன் வழியாக டீஸ் எனும் நதிவரை ஒரு ரயில் பாதை தயாரிக்கப் பாராளுமன்றம் திட்டம் அறிவித்தது. ஜார்ஜ் மகன் ராபர்ட் ஒரு சிறப்பான எஞ்ஜினியராகத் தேர்ச்சி பெற்றான். இவன் டிரெவிதிக்குடன் தென் அமெரிக்காவுக்குச் சென்று பயிற்சி பெற்று, அவரைச் சிக்கலிலிருந்து காப்பாற்றும் சம்பவமும் நடந்தது. மீண்டும் இங்கிலாந்து வந்த மகன் ராபர்ட் தலைமையில் ரயில் எஞ்ஜின் செய்யும் கம்பெனியை நிறுவி அவனிடமே புது எஞ்ஜினை வடிவமைக்கும் பணியை ஒப்படைத்தார் ஜார்ஜ். தன்னுடைய முழுக் கவனத்தையும் தண்டவாளத்தின் மேல் செலுத்தினார்.

ரயில் போகும் பாதை சேறும், சதுப்பு நிலமும் கொண்ட பூமி. ஒரு லட்சம் கருங்கல்களை வெட்டி 40.கி.மீ. தூரத்திற்குத் தண்டவாளத்தைத் தாங்கும் அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. மண் உறுதியில்லாத சேற்று நிலங்களில் மிதக்கும் பாலங்கள் அமைத்து அதன் மேல் தண்டவாளங்களை நிறுவினார். லோகோமோஷன் என்று ஓர் எஞ்ஜினை வடிவமைத்தார். ரயில் பாதையை முழுமையாக அமைக்க நான்கு வருடங்கள் ஆயின. குறித்த நாளில் ஜார்ஜ் தானே லோகோமோஷன் ரயில் எஞ்ஜினை இயக்கி வெற்றிகரமாக முதல் ரயில் பயணத்தை நடத்திக்காட்டினார். சுமார் நாற்பதாயிரம் மக்கள் ரயில் பாதை முழுதும் கூடி ரயில் செல்வதைப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.

இந்த ஸ்டாக்டன் டார்லிங்டன் பயண வெற்றி மக்களுக்கும் அதிபர்களுக்கும் பெரிய ஊக்கம் தந்தது. நிலக்கரியை 40 கி.மீக்கு இழுக்கும் ரயில் வண்டியால் பயணிகளையும் அழைத்துச்செல்ல முடியாதா? கடந்த அரை நூற்றாண்டில் பிரமாண்டமாக வளர்ந்திருந்த மேன்செஸ்டர் நகரத்திலிருந்து லிவர்பூல் எனும் துறைமுக நகரம் வரை ஒரு நெடிய பாதையை அமைக்கப் பாராளுமன்றம் ஆணையிட்டது. தண்டவாளங்களை ஜார்ஜ் ஸ்டீவென்சனே திட்டமிட்டுப் பல இடையூறுகளை வென்று கட்டினார்.

கால்வாய் சொந்தக்காரர்களும், படகோட்டிகளும், குதிரை வண்டி முதலாளிகளும் தங்கள் தொழிலுக்கும் வருமானத்திற்கும் ஆபத்து என்பதைப் புரிந்துகொண்டு, ரயில் எஞ்ஜின்களின் ஆபத்தையும் சமூகச் சீர்கேட்டையும் கண்டித்துப் பிரசாரம் செய்தனர். குதிரைப் பயணத்தைவிட வேகமான ரயில் பயணத்தில் கரிப்புகையால் முடியும் தோலும் கருகிவிடும், தீ பற்றி எரியும், உடல் உறுப்புகளெல்லாம் வேகத்தில் உடலுக்குள்ளேயே அழிந்துவிடும், தோல் உரியும் என்று பயமுறுத்தினார்கள். பத்திரிகைகளில் இப்படிப்பட்டக் கதைகளும் அச்சாகின. இந்த வதந்தி மரபு இன்றும் தொடர்கிறது அல்லவா?

ஆனால் மக்களுக்கும் அரசுக்கும் ரயில் மேல் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்ததால் அதைத் தடுக்க முடியவில்லை. லண்டன் வாசிகளின் ஏளனமும் கர்வமும், அவர்கள் வகுத்த இடையூறுகளும் மீண்டும் ஸ்டீவென்சனை வாட்டின. ஆனால் அவர் மனோதிடத்துடன் எல்லாவற்றையும் கடந்துவிட்டார்.

ஒரு சில இடங்களில் நதியைக் கடக்கும் பாலங்களைக் கட்ட வேண்டியிருந்தது. பாலங்களில் புதுமை செய்து சேங்கி எனுமிடத்தில் புதிய பாலமும் அமைத்தார். இதை அமைக்கவும் நான்கு வருடம் ஆகியது. ஆனால் எஞ்ஜின்களைப் போட்டி முறையில் தேர்ந்தெடுக்க அரசு ஆணையிட்டது. ராக்கெட் என்ற பெயரில் ராபர்ட் ஒரு சிறப்பான எஞ்ஜினைத் தயாரித்தார்.

1829இல் இந்த ரயில் பாதை திறக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட எஞ்ஜின்களில் ராக்கெட்டும் ஒன்று. பௌர்ணமி மனிதருள் ஒருவரும் ஜேம்ஸ் வாட்டின் நண்பருமான ஜோசப் பிரீஸ்ட்லீயும், பிரெஞ்சு விஞ்ஞானி அந்துவான் லவோசியேவும் வேதியியலில் ஒரு பெரும் புரட்சியே செய்திருந்தனர். நீராவி எஞ்ஜின் புரட்சிக்கும் சமமான வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சி.

வேறு பல துறைகளில் உள்ள முன்னேற்றங்களோடு இதுபோன்ற பல துறை பரிணாம வளர்ச்சிகள், எஞ்ஜின் செய்யும் தொழில்நுட்பத்தில் பெரிதும் உதவியது. போட்டியில் ராக்கெட் வெற்றி பெற்றது. நெப்போலியனை வென்ற வெலிங்டன் அரசியலில் நுழைந்து பிரதமர் ஆகியிருந்தார். ராக்கெட்டின் முதன் பயணத்தைப் பார்க்க அவரும் வந்திருந்தார்.

மேஞ்செஸ்டர் லிவர்பூல் ரயில் பாதையின் வெற்றியும், ராக்கெட்டின் வெற்றியும் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கின. அடுத்த இருபது ஆண்டுகளில் இங்கிலாந்தில் மட்டுமே பதினைந்து ரயில்வே கம்பெனிகள் தோன்றின.

மற்ற நாடுகளிலும் போக்குவரத்திற்காக ரயில் பாதைகளும் வண்டிகளும் உலகெங்கும் பரவின. 1853இல் இந்தியாவிலும் மும்பை முதல் டாணா வரை ஒரு ரயில் முதன்முதல் இயங்கியது.

உலகெங்கும் நிலக்கரி தேடப்பட்டது. பல நூறு சுரங்கங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.

அடுத்த இருபது வருடங்கள் தந்தையும் மகனும் நடத்திய கம்பெனிக்கு இதில் முக்கிய பங்கு இருந்தது. 1833இல் ஹம்ஃப்ரீ டேவியின் எச்சரிக்கை விளக்கை ஸ்டீவென்சன் திருடவில்லை, சொந்தமாகக் கண்டுபிடித்தார் என்று ஓர் இங்கிலாந்தின் மக்களவை அமைத்த குழு அறிவித்தது. 1847இல் மெக்கானிக்கல் பொறியாளர் சங்கம் ஒன்று நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக ஸ்டீவென்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதினெட்டு வயது வரை படிப்பறிவே இல்லாத ஒருவர் உலகையே மாற்றிய மேதாவியாக அறியப்பட்டு, இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் கீழ்த்தட்டு மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் வாழ்க்கை வரலாறு ஒரு பக்கக் கதையாக அச்சடிக்கப்பட்டுப் பல நகரங்களில் ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது. 1857இல் அவரது வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக சேமுவல் ஸ்மைல்ஸ் எழுதி வெளியிட்டார். டிரெவிதிக்போல் சமூகத்தாலும் நண்பர்களாலும் புறக்கணிக்கப்படாமல் கௌரவ நிலை அடைந்தே வாழ்ந்தார். அவருடைய பெயரும் புகழும், திறமையான சாதனையாளரும் தொழில் பங்காளியுமான மகன் ராபர்ட்டுக்கும் அவர் வாழ்நாளிலேயே கிடைத்தது. 1999இல் மேத்திவ் பௌல்டனையும், ஜேம்ஸ் வாட்டையும் ஐம்பது பவுண்டு நோட்டில் பதித்து கௌரவித்த இங்கிலாந்து அரசாங்கம், ஸ்டீவென்சன் படத்தை ஐந்து பௌண்ட் நோட்டில் பதித்துக் கௌரவித்தது.

வணிக விளைவுகள்

படகு வழியாக நாள் கணக்கில் நகர்ந்த கரியும் இரும்பும் செம்பும் இப்போது மணிக்கணக்கில் ரயிலில் நகரத் தொடங்கின. அதனால் தாதுப் பொருட்களின் விலை மிகவும் மலிவாகின. அத்தோடு அதே ரயில்கள் அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச் சென்றதால் தூரத்துச் சரக்குகள் விலை குறைந்தன. ஜேம்ஸ் வாட்டின் காலத்திற்கு முன்பு இங்கிலாந்தில் ஒரு பருத்திப் புரட்சி (உண்மையில் நெசவு புரட்சி) நிகழ்ந்தது. ரயில்களால் அதன் தாக்கம் கடலைத்தாண்டி மற்ற நாடுகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. இங்கிலாந்தில் பருத்தி ஆலைகள் செய்த ஆடைகள் உலகெங்கும் பரவின. அதிகாரத்தின் மையம் லண்டன், தொழிற்சாலையின் மையம் பெர்மிங்காம் என்றால், பருத்தி ஆலைகளின் மையம் மேஞ்சஸ்டர். அங்கிருந்து லிவர்பூல் நகருக்கு முதல் ரயில் ஓடியது அதிசயம் அல்ல.

ஜேம்ஸ் வாட் கிளாஸ்கோவிலிருந்து லண்டன் வரை நடக்கப் பன்னிரண்டு நாள் ஆயிற்று. 1845ஆம் ஆண்டு இரு நகரங்களும் ரயிலால் இணைந்தபோது அது பன்னிரண்டு மணி நேரப் பயணமாகக் குறுகியது. யாதும் ஊரே என்ற கணியன் பூங்குன்றனாரின் சொல்லை நிலைநாட்டிய பெருமை ரயில்வண்டியைச் சேரும். இதைப் போன்ற பல காரணங்களால் தொழில் புரட்சி இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டை வரலாறு காணா வல்லரசாக மாற்றியது.

அடுத்த இருபது ஆண்டுகளில் பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ருஷியா என்று அனைத்து ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா கனடாவும் ரயில்களைப் பெற்றன. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ வெற்றிகளால் இந்தியா, பர்மா போன்ற நாடுகளும், குடியேற்றத்தால் கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்தன. இந்நாடுகளிலெல்லாம் மற்ற ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு முன்பே ரயில்பாதைகள் கட்டப்பட்டன. தண்டவாளத்தின் அடியில் உள்ள மரங்களையும் ஜல்லிகற்களையும் தவிர, ஆணி முதல் எஞ்ஜின் வரை, இங்கிலாந்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுக் கடல் வழியாகப் பற்பல நாடுகளுக்குப் பரவின.

செல்வத்துள் செல்வம் கரிச்செல்வம்

மனித உழைப்பாலும், மாடு, குதிரை போன்ற மிருக உழைப்பாலும் மட்டுமே இயங்கிவந்த யுகம் முடிந்து இயந்திரங்களின் யுகம் ஏற்கெனவே ஜேம்ஸ் வாட் எஞ்ஜினால் தொடங்கியது.

ஆனால் நிலக்கரி அதிகமுள்ள நாடுகளில் மட்டும் அதுவரை செயல்பட்டது. ரயில் வண்டியும், பிறகு கரி எஞ்ஜின் கப்பல்களும் இயங்கத் தொடங்கியவுடன் நிலக்கரியின் தேவை உலகெங்கும் அதிகரித்தது. தங்கம், வெள்ளி ரத்தினங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வருடங்களாக வளர்ந்த ஆசையும் பேராசையும் நிலக்கரி மோகம் பேராசையாக மாறி பற்றி எறிந்தது. நீராவி எஞ்ஜின்கள் தொழிலாளிகளின் உடல் வருத்தமும் வியர்வையையும் குறைக்க வந்த வரப்பிரசாதமாக நினைக்கலாம். அதேசமயம் தொழிற்சாலைகள் உருவாகி லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் எஞ்ஜினியரிங் என்ற தொழிலைப் பேணி வளர்த்து, கௌரவம் சேர்த்தன. பல்லாயிரம் ஆண்டுகள் கல்வி பயிலா மக்கள் கல்வி பெற்றனர். இயந்திரங்களின் மேல் ஆளும் வர்க்கமும், மேல்தட்டு மக்களும் ஆர்வம் காட்டி கல்விமுறையே மாறத் தொடங்கியது.

இப்படி எல்லாம் மாறுவதற்கு ஓரிரண்டு நூற்றாண்டு ஆனது. ஸ்டீவென்சனின் பெயரிலோ, டிரெவிதிக் பெயரிலோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் உலகில் உள்ளதா? முக்கால்வாசி ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயர்தான் நிலவுகிறது.

நூற்றுக்கணக்கான குடிசைத்தொழில்கள் தொழிற்சாலைகளுக்கு இடம்பெயர்ந்தன. தயாரிப்பு விலை மளமளவென்று சரிந்தன. கற்பனை செய்யமுடியாத புதிய பொருட்கள் தயாரிக்கப்பட்டன. தனிப்பட்டவர்களின் செல்வமும், நாடுகளின் செல்வமும் வரலாறு காணாத வேகத்தில் வளர்ந்தன.

அதேநேரம், சுரங்கத்தில் நிலக்கரி தோண்டுவது தோள்வலியைப் பிரதானமாகக் கொண்ட தொழில் அல்லவா? சுத்தியலும் மண்வெட்டியும் அரிவாளும் பிரதான கருவிகளாகத் தொடர்ந்தன. விவசாயத்திலும் கைவினைகளிலும் ஈடுபட்ட பல்லாயிர மக்கள், இருட்டுச்சுரங்ககளில் கடுமையான உழைப்புக்கு ஆட்பட்டனர். பின்னாளில் தொழிற்சங்கம், சோசியலிசம், கம்யூனிசம் போன்றவை தோன்ற நிலக்கரி பெருக்கம் முக்கியக் காரணம்.

சமூக விளைவுகள்

மற்ற நாடுகளைப்போல இங்கிலாந்தில் பலநூறு ஆண்டுகளாக அடிமை முறை நிலைத்தது. குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்யும் வழக்கம் இருந்தது. அதை எதிர்த்து அடிமை ஒழிப்பு போராட்டங்களும் கிட்டத்தட்ட ஐம்பதாண்டாக நடந்து வந்தது. 1829இல் மேஞ்சஸ்டர் லிவர்பூல் ரயில் ஓட்டினார் ஸ்டீவென்சன். 1833இல் இங்கிலாந்து அரசு தன் ஆதிக்க நாடுகளில் அனைத்திலும் அடிமை முறையை ரத்து செய்தது (முப்பது வருடத்திற்குப் பின்பே இதை ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவிலும் செய்தார்). மனிதாபிமானம் ஒரு பக்கம் இருந்தாலும் இதில் வர்த்தக லாபமும் முக்கியம். அடிமைகளைவிட மலிவாக, தரமாக நீராவி எஞ்ஜின்களால் தொழிற்சாலைகளில் பண்டங்களைத் தயாரிக்க இயன்றது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் அடிமைமுறை ரத்து செய்யப்பட்டது. கிழக்கிந்தியா கம்பெனியின் ஆட்சியில் இருந்த நாடுகளுக்கெல்லாம் அடிமை முறையை ரத்து செய்ய 1843 வரை பத்து ஆண்டு அவகாசம் அந்தச் சட்டத்தால் கொடுக்கப்பட்டது.

காலனி ஆதிக்கம் கோலோச்சிய அந்த 19ஆம் நூற்றாண்டில் ஆசிய நாடுகளில் குடிசைத்தொழில்கள் ஒழிந்து, கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர் என்பது இந்த வரலாற்றின் மறுபக்கம். அதேசமயம் அதே காலனிய நாட்டு மக்கள் தங்களுக்கு ரயில்வண்டிகளையும் தொழிற்சாலைகளையும் வரவேற்றனர்.

இவை பலவும் நாம் அறிந்த செய்திகள்தான். ஆனால் சமூகச் சீர்கேடுகள் எல்லாம் அன்னியர் ஆட்சியால் வந்தது என்றும், முன்னேற்றம் எல்லாம் விஞ்ஞானிகளால் வந்தது என்றும் நம் விருப்ப வெறுப்புக்கு ஏற்றவாறு பிரித்து, எதிரும் புதிருமாக நாம் சிந்தனைகளையும் புரிதல்களையும் அமைத்துக் கொள்கிறோம். சட்டமும் அரசாங்கமும் ஆதிக்கமும் போரும் வரலாறும் தனி நிகழ்வுகள் என்றும், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தனிப்பட்ட நிகழ்வுகள் என்றும் கருதிக்கொள்கிறோம். ஆனால் நாம் அனைத்தையும் சேர்த்துத்தான் பார்க்கவேண்டும். எஞ்ஜின் கதையோடுதான் சமூக வரலாறும் தோன்றுகிறது.

0

________
உதவிய வலைத்தளங்கள், காணொளித்தொடர்கள்

– ஆன் தி ரெயில்ஸ் – பிபிசி காணொளித் தொடர்
– விக்கிப்பீடியா
– என்சைக்ளோபீடியா பிரடானிகா

பகிர:
கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *