Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #4 – மின்னல் மழை மின்சாரம்

மின்சாரத்தின் கதை மின்னலில் தொடங்கவில்லை. சுமார் கி.பி. 1600இல் ரோமியோ ஜூலியட் போன்ற புகழ் பெற்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதிய காலத்தில், வில்லியம் கில்பர்ட் என்பவர் காந்தங்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நூல் எழுதினார்.

காந்தம் அருகில் இருக்கும் இரும்பை இழுக்கும் சக்தி வாய்ந்தது. ஆனால் மற்ற உலோகங்களை இழுக்காது. இது யாவரும் அறிந்ததே. கி.மு. 6ஆம் நூற்றாண்டில் (கௌதம புத்தருக்கு சற்று முன்) கிரேக்க நாட்டில் வாழ்ந்த தேலீஸ் என்பவர் காந்தங்களைப் பற்றி எழுதியதாகக் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் பதிவுசெய்துள்ளார். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சீனர்கள் காந்தக் கம்பின் ஒரு முனை எப்பொழுதும் வடக்கே திரும்புவதைப் புரிந்துகொண்டு, திசைக் கருவியாகப் பயன்படுத்தினர்.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் (காரைக்கால் அம்மையாரின் சமகாலம்) வராகமிகிரர் எனும் வானியல் விஞ்ஞானி உஜ்ஜையினியில் வாழ்ந்தார். அவர் இயற்றிய பிருஹத் சம்ஹிதை எனும் புத்தகத்தில், இரு காந்தங்களுக்கு இடையே மிதக்கும் இரும்புப் பந்தைப்போல நட்சத்திரக் கூண்டின் நடுவே பூமி எனும் கோளம் மிதக்கிறது என்று, காந்தத்தை உவமையாகக் குறிப்பிடுகிறார்.

கில்பர்ட் இயற்றிய புத்தகத்தில் ஒரு ஆம்பர் (ஒரு வகை அரக்கு) துண்டைப் பூனையின் முதுகில் தடவினால் அதில் ஒரு சக்தி உண்டாகி, சின்னச் சின்னக் காகிதத் துண்டுகளையும், பறவைச் சிறகுகளையும், காந்தம்போல இழுத்துக்கொள்கிறது என்று குறிப்பிடுகிறார். கைப்பட்டால் இந்தச் சக்தியை அரக்கு துண்டு இழந்துவிடுகிறது. ஆனால் அது இரும்பையோ மற்ற உலோகத்தையோ இழுக்கவில்லை. கிரேக்க மொழியில் ஆம்பரின் (அரக்கின்) பெயர் எலக்டிரான். இதனால் இந்தச் சக்திக்கு எலக்டிரான் சக்தி அல்லது எலெக்டிரிசிடி என்று கில்பர்ட் பெயர் சூட்டினார். இதையே தமிழில் மின்சாரம் என்கிறோம்.

காந்தத்தைப்போல மின்சாரம் வடக்கு, தெற்கு என்று திசை காட்டுவதில்லை. காந்தம் நீரில் மூழ்கினாலும் தன் சக்தியை இழக்காது. ஆனால் நீரில் மூழ்கிய உடனே ரோமத்தில் தேய்த்த அரக்கு, தன் மின்சாரச் சக்தியை இழக்கும். இரு காந்தங்கள் ஒன்றை ஒன்று இழுக்கும். ஆனால் ஒரு காந்தத்தைத் திசை திருப்பினால் மற்ற காந்தத்தை அது தள்ளும். மின்சாரம் இழுக்குமே தவிர, தள்ளாது. இவையெல்லாம் கில்பர்டின் ஆய்வுக் குறிப்புகள். இதுபோன்ற இயற்கைக் குறிப்புகளை அக்காலத்தில் இயற்கை தத்துவம் (Natural Philosophy) என்றே அழைத்தனர். சயன்ஸ் என்ற சொல் 19ஆம் நூற்றாண்டில்தான் புழக்கத்தில் வந்தது. அடுத்த 200 ஆண்டுகளுக்கு மின்சாரம் ஒரு பொழுதுபோக்கு வித்தையாக மட்டுமே விளங்கியது. அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவையாக அவதாரம் எடுக்கவில்லை.

ஆம்பர் பறவை சிறகுகளை இழுக்கிறது என்று தேலீஸ் கண்டுபிடித்ததாக கில்பர்ட்டுக்கு இரண்டாயிரம் வருடங்கள் முன்பே அரிஸ்டாடில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதைப் பின்னர் கிரேக்கர்களோ, ஐரோப்பியரோ யாரும் ஆராயவில்லைபோலும். கில்பர்ட் காலத்திற்குப் பின்பும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மின்சார ஆய்வு நடக்கவில்லை. கில்பர்டுக்குச் சமகாலத்தில் வாழ்ந்த இத்தாலிய மேதை கெலீலியோ, பிரெஞ்சு மேதை தேகார்த் போன்றோர் மின்சாரத்தைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை. அவர்களுக்குச் சற்றுபின் வந்த ஐசக் நியூட்டனும், அவருடைய சமகாலத்தவரும்கூட மின்சாரத்தைப் பற்றி ஆர்வம் காட்டவில்லை. நவீன இயற்பியலின் தந்தை என்று கெலீலியோவைச் சிலரும், நியூட்டனைச் சிலரும் கருதுவர். இயற்பியலின் வெகு முக்கிய அம்சங்களில் இன்று மின்சாரமும் ஒன்று. ஆனால் அதிசயமாக அவர்கள் காலத்தில் அது பேசுபொருளாக்கக்கூட இருந்ததில்லை.

1660இல் ராபர்ட் பாய்ல், கிரிஸ்டோஃபர் ரென், வில்லியம் பிரௌங்கர், ராபர்ட் மொரே உள்ளிட்ட சிலர் ராஜ்ய சங்கம் (ராயல் சொசைட்டி) என்ற அறிவியல் சங்கத்தைத் தொடங்கினர். அன்றைய மன்னர் இரண்டாம் சார்லஸ் இதற்கு ஆதரவு தரச் சம்மதித்தார். ‘இயற்கை ஞானம் வளர்க்க வந்த லண்டன் ராஜ்ஜிய சங்கம்’ என்று நீளமாகப் பெயர் சூட்டப்பட்டது. அச்சங்கம் இங்கிலாந்தின் மிகப் புகழ் பெற்ற அறிவியல் சங்கமாக இன்று வரை தொடர்கிறது. சங்கத்தில் அறிவியல் உரையாற்றினர். விவாதம் செய்தனர். கட்டுரைகளை அச்சில் ஏற்றினர். ரசாயனம் அல்லது வேதியியல் கட்டுரைகளை ராபர்ட் பாய்ல், வானியல் இயங்கியல் மற்றும் கணிதக் கட்டுரைகளை ஐசக் நியூட்டன், வில்லியம் ஹெர்சல் போன்றவர் பிரசுரித்தனர். இதைப்போலவே பிரான்சிலும் 1666இல் பிரெஞ்சு மன்னர் ஆதரவில் ஒரு ராஜ்ஜிய சங்கம் தொடங்கியது.

லண்டன் ராஜ்ஜிய சங்கம் அதன் தலைவராக ஐசக் நியூட்டனைத் தேர்வு செய்தது. ஆண்டுக்கு நான்கைந்து முறை தலைவர் அறிவியல் உரைகள் நடத்துவர். சில அறிவியல் புதுமைகளைக் கருவிகளால் செய்துகாட்டி விளக்குவர். ஆனால் நியூட்டன் ஈடில்லா அதிமேதாவி விஞ்ஞானியாக இருந்தாலும், மிக மோசமான உரையாளர். வறட்டு முசுடு. அவர் பிரான்சிஸ் ஹௌக்ஸ்பீ என்பவரைப் பணியமர்த்தி, தனக்குப் பதிலாக உரைகளையும் விளக்கக் காட்சிகளையும் நடத்தும் பொறுப்பைக் கொடுத்தார்.

ஹௌக்ஸ்பீ நல்ல பேச்சாளர். மக்களோடு நன்கு பழகுபவர். அதிவிநீத சுபாவம். நியூட்டன் போன்றோரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடியவர். இதனால் பணியில் நெடுங்காலம் நீடித்தார். ஆனால் அடிக்கடி விளக்கக் காட்சிகளை நடத்த லண்டன் சங்கத்தின் கண்டுபிடிப்புகள் மட்டும் போதவில்லை. கூட்டம் சேர்க்க அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்று அலசினார். பிரான்சில் ழான் பிகார்ட் என்பவர் ஒரு பாதரசம் நிறைந்த பாரோமீட்டரைக் குலுக்கியபோது அது ஒரு புதுவித ஊதா நிற ஒளியை உண்டாக்கியது எனப் படித்தார். தானும் அதைச் செய்து பார்த்தார். பாரோமீட்டர் என்பது காற்றழுத்தத்தை அளக்கும் ஒரு கருவி. ஒரு நீண்ட கண்ணாடிக் குழாயில் பாதரசம் திரவியமாக நிரம்பியிருக்கும். கெலீலியோவின் உதவியாளர் எவாஞ்சிலிஸ்தா தாரிசெல்லி என்பவர் உருவாக்கிய கருவி.

1705இல் ஹௌக்ஸ்பீ கண்ணாடிக் குழாய்க்குப் பதிலாகக் கண்ணாடிக் கோளத்தைச் செய்து அதில் கொஞ்சம் பாதரசம் பூசி, பரிசோதனைகள் செய்தார். பாதரசம் வெம்பி அதன் ஆவியே ஒளிவீசுகிறது என்று யூகித்தார். கோளத்தைத் தேய்க்கத் தையல் இயந்திரம்போல ஒரு ராட்டினத்தை உருவாக்கினார். அதன் பெரிய சக்கரத்தைச் சுழற்றும்போது, அது இரண்டு அச்சுகளுக்கு நடுவே உள்ள கண்ணாடிக் கோளத்தைச் சுழற்றும். சுழல்கின்ற கண்ணாடி கோளத்தின் மேல் கை வைத்தால் இன்னும் பளிச்சென்று ஊதா ஒளி வீசியது. கை பட்டால் இந்தக் கோளத்தில் மின்சாரம் ஏறுகிறது என்று ஹௌக்ஸ்பீ புரிந்துகொண்டார். ஆனால் வேறு ஒன்றும் செய்யவில்லை. இதுவே இன்றைய டியூப்லைட்டிற்கும் நியான் விளக்கிற்கும் முன்னோடி. அதன் நுட்பங்களைப் புரிந்துகொள்ள இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆயிற்று.

ஹௌக்ஸ்பீ ஜெனரேட்டர்
ஹௌக்ஸ்பீ ஜெனரேட்டர்

நியூட்டன் இறந்தது கி.பி. 1727. இதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 1729ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டீவன் கிரே என்பவர் ஒரு கார்க் மூடியுள்ள கண்ணாடிக் குழாயைத் தேய்த்து அதில் மின்சாரம் ஏறுகிறதா என்று பறவைச் சிறகுகளை வைத்துச் சோதித்தார். கண்ணாடிக் குழாயைத் தேய்த்தவுடன் குழாயில் சிறகு ஒட்டிக்கொள்ளும் என்பது அவர் எதிர்பார்ப்பு. ஆனால் சிறகுகளோ தேய்க்கப்படாத கார்க் மூடியில் ஒட்டிக்கொண்டன. அவருக்கு அதிர்ச்சி. மின்சாரம் ஒரு பொருளிலிருந்து அதைத் தொடும் மற்றொரு பொருளுக்குப் பாயுமா? தந்தத்தால் செய்யப்பட்ட பந்து ஒன்றை அந்தக் கண்ணாடியால் தொட்டார். அதிலும் மின்சாரம் ஏறியது. கையால் தொட்டபின் இரண்டிலும் மின்சாரம் நீங்கியது. மாடி ஏறி ஒரு முப்பதடி சணல் கயிற்றில் கட்டி, ஜன்னல் வழியாக அந்தப் பந்தைத் தொங்கவிட்டு, மறுமுனையில் கண்ணாடிக் குழாயில் மின்சாரம் ஏற்றினார். கயிறு வழியாக மின்சாரம் பாய்ந்து பந்திலும் ஏறியது. எழுநூறு அடி நீளப் பட்டு நூல் வைத்து அடுத்தச் சோதனை. அதுவும் வெற்றி. எத்தனை நீளமானாலும் அளவு குறையாமல் மின்சாரம் பாய்கிறது எனப் புரிந்துகொண்டனர். அதைவிட நீளமாக எதுவும் கிடைக்கவில்லை.

நீளத்தை போலவே, அகலம், அடர்த்தி, கனம், நிறம் என்றெல்லாம் மாற்றி மாற்றி சோதித்தார். அவை எதுவும் மின்சாரம் கடத்துவதைப் பாதிக்கவில்லை. பச்சை, நீல நிறப் பொருட்கள் சிறந்த மின்கடத்தி, சிவப்பு மஞ்சள் பொருட்கள் சுமாரான மின்கடத்தி என்றும் பதிவு செய்தார் கிரே.

ஒரு சிறுவனை விதானத்திலிருந்து தொங்கவிட்டு, அவன் காலில் மின்சாரம் ஏற்றினால் அவன் தலை வரை பாயுமா எனப் பரிசோதித்தனர். அச்சிறுவன் தலைமுடி முள்ளம்பன்றி போல் தனித்தனியாய் எழுந்து நின்றது.

ஆனால் சில பொருட்கள் வழியாக மின்சாரம் பாயவில்லை. அதாவது மின்சாரம் பாயும் பொருட்கள் (கண்டக்டர் என்று ஆங்கிலத்தில் பெயர் பெற்றன; தமிழில், மின்கடத்தி), மின்சாரம் பாயா பொருட்கள் (இன்சுலேட்டர்; தமிழில் மின் கடத்தா அல்லது அரிதிற் கடத்தி) என்று இருவகை இருப்பதைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தின் மிக அடிப்படை ஞானம் இது. இதனால் ஸ்டீவன் கிரே அவர்களை மின்சாரத்தின் தந்தை என்று கருதலாம் என்று கேத்தி ஜோசஃப் முன்மொழிகிறார்.

ஸ்டீவென் கிரேவின் மின்சாரக் கட்டுரைகளை லண்டன் ராஜ்ஜிய சங்கம் பிரசுரித்தது. ஆனால் அதன் வானியலும் இயங்கியலும் கணிதமும் பெற்ற கௌரவத்தை மின்சாரம் பெறவில்லை. அது ஒரு கேளிக்கை பொருளாகவே நினைக்கப்பட்டது.

விசித்திரம் யாதெனின் இயற்பியலாளர்களும் மின்பொறியாளர்களும் பெரும்பாலும் கேள்விப்படாத நபர் ஸ்டீவென் கிரே. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை, சதியின் பிழையன்று ஸ்டீவென் கிரே புகழின்மை, விதியின் பிழை நாம் வரலாறு அறியாமை.

ஆனால் பிரான்சில் வாழ்ந்த சார்ல்ஸ் பிரான்சுவா சிஸ்தர்ணே துஃபே என்பவர் விதிவிலக்காக ஸ்டீவன் கிரேயின் கட்டுரைகளைப் படித்தார். அவர் கிரே செய்த பரிசோதனைகளைத் தானும் செய்துபார்த்தார். ஒருபடி மேலாக உலோகங்களிலும் மின்சாரம் பாய்கிறதா என்று சோதித்துப் பார்த்தார். பாயவில்லை. ஆனால் சிஸ்தர்ணேவுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. மின்சாரம் ஏறிய பொருட்களை யாரேனும் கையில் தொட்டால் அப்பொருள் உடனே மின்சக்தியை இழந்துவிடுகிறது. ஒரு இறக்கை ஒட்டிக்கொண்டிருந்தால் அது சட்டென்று விழுந்துவிடுகிறது. அதன்பின் எந்த இறக்கையோ காகிதத் துண்டோ ஒட்டுவதில்லை. இது ஏன் என சிஸ்தர்ணே சிந்தித்தார். அவர், ஒரு உலோகப் பாத்திரத்தை மெழுகு தட்டில் வைத்து, தன் கைப்படாமல் கம்பளியால் தேய்த்தார். அருகே இருந்த இறக்கைகள் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டன.

ஒன்றல்ல! இரண்டு வகை!

ஸ்டீவன் கிரே, ஹௌக்ஸ்பீ போன்றவர்கள் ஏழைகள். ஆனால் சிஸ்தர்ணே பணக்காரர். இரும்பு செம்பு, வெங்கலத்தோடு நிறுத்தாமல் தங்கத்தையும் அவர் பரிசோதனை செய்தார். தங்கத்தைப் பஞ்சு நூல் அளவு மெலிதாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பொற்கொல்லர்கள் வடிப்பதில்லையா? மற்ற அனைத்து உலோகங்களைவிட மிக மெலிதாகவும், மிக தட்டையாகவும் தங்கத்தை இழைக்க இயலும். பறவை இறக்கைகளைவிட மெலிதான கனம் குறைந்த தங்க இழைகளை வைத்து சிஸ்தர்ணே பரிசோதனை செய்தார்.

மின்சாரம் ஏறிய கண்ணாடிக்குழாயில் தங்க இழை எகிறி ஒட்டிக்கொண்டது. சிறிது நேரம் கழிந்தால் ஒட்டியிருந்த தங்க இழை கீழே விழுந்தது. அதன் பின்னர் சில மணித்துளிகள் கண்ணாடிக் குழாயிலிருந்து விலகி விலகி நகர்ந்தது. சிஸ்தர்ணேவுக்கு ஆச்சரியம். மின்சாரம் இழுக்கும் சக்தி அன்றோ? காந்தம்போல் அதற்குத் தள்ளும் சக்தியும் உண்டா என வியந்தார்.

கண்ணாடிக் குழாய், அரக்குக் குழாய் என்று இரு வகைக் குழாய்களோடு பல பரிசோதனைகளைச் செய்தபின், மின்சாரம் இரண்டு வகை என்ற முடிவுக்கு வந்தார். மின்சாரம் ஏறிய கண்ணாடிக் குழாயில் ஈர்க்கப்படும் பொருட்கள் சிறிது நேரத்தில் குணம் மாறி, கண்ணாடிக் குழாயை விலகிச் சென்று அரக்குக் குழாயால் ஈர்க்கப்பட்டன. சில நேரம் கழித்து அரக்கு மீண்டும் குணம் மாறி, அப்பொருட்கள் மீண்டும் கண்ணாடி குழாயால் ஈர்க்கப்பட்டன. வேற்றினம் ஒட்டிக்கொள்ளும், ஓரினம் எட்டித் தள்ளும் என்ற அடிப்படைக் குணம் மின்சாரத்திற்கும் உண்டு என்று புரிந்துகொண்டார்.

கண்ணாடி வகை (விட்ரியஸ்), அரக்கு வகை (ரெசினஸ்) என்று இவ்விரு வகைகளுக்குத் தலா பெயர் சூட்டினார். விட்ரியஸ், ரெசினஸ் இரண்டும் லத்தீனச் சொற்கள். ஜேம்ஸ் வாட்டின் சமக் காலத்தவர் சிஸ்தர்ணே. பிரெஞ்சு தேசத்திலும் அன்றைக்கு லத்தீன் மொழியே மேல்தட்டு மொழியாக, அரசு-கல்வி-கலை-அறிவியல் போன்ற துறைகளின் மொழியாக நிலவியது. தனிப் பிரெஞ்சு இயக்கம் தோன்றப் பலகாலம் காத்திருக்க வேண்டியதிருந்தது.

ஸ்டீவன் கிரே சிறுவனைத் தொங்கவிட்டதுபோலத் தானே தொங்கி மின்சாரத்தைத் தன் மேல் பாய்த்துக்கொண்டார். இது வலி உண்டாக்கியது என்றும், இந்நிலையில் அருகில் வேறு ஒருவர் வந்தால் அவர் மேல் மின்சாரம் பாய்ந்து அவருக்கும் வலித்தது என்று கவனித்தார். ஆனால் ஸ்டீவன் கிரே சொன்னதுபோல் ஒரு பொருளின் நிறத்திற்கும், மின்கடத்தும் குணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சோதனைகள் மூலம் கண்டுபிடித்தார்.

செல்வந்தர் சிஸ்தர்ணே காட்டிய ஆர்வத்தால் மின்சாரத்திற்கு பிரான்சு நாட்டில் மட்டும் கொஞ்சம் கௌரவம் கிடைத்தது. காந்த சக்தியைப்போலவே மின்சாரமும் தன்னினத்தைத் தள்ளியது. மற்ற இனத்தை ஈர்த்தது. இதுவே சிஸ்தர்ணேவின் மிக முக்கியக் கண்டுபிடிப்பு. ஆனால் அவரது புரிதலும் முழுவதும் சரியல்ல என்று பின்னர் தெரியவந்தது. மின்சாரத்தால் எந்தச் சமூகப் பயனோ, வணிகப் பயனோ யாருக்கும் கிட்டவில்லை. இயற்கையின் ஒரு விசித்திரமாக மட்டும் தொடர்ந்தது.

மின்சார மந்திரவாதி

ஸ்டீவன் கிரேயின் ஆராய்ச்சியை அடுத்த படிக்கு சிஸ்தர்ணே கொண்டு சென்றார். ஜெர்மனியில் வாழ்ந்த மேத்தையாஸ் போசா என்பவர் இங்கிலாந்தில் ஹௌக்ஸ்பீ படைத்த இயந்திரத்தை வைத்து ஐரோப்பியக் கண்டத்தையே உலுக்கினார். ஹௌக்ஸ்பீயின் ராட்டினத்தின் மேல் ஒரு கம்பியைப் பொருத்தி, அதற்குப் பிரதான கண்டக்டர் என்று பெயர்சூட்டி, ராட்டினத்தால் கண்ணாடிக் கோளத்தில் மின்சாரம் ஏற்றி, மேலே பட்டு நூலில் தொங்கும் பிரதான கண்டக்டரைத் தொடவைத்தால் அதில் மின்சாரச் சக்தி அதிகமாக ஏறும். மின்சாரத்தீ என்று இதற்குப் படாடோபமாக விளம்பரம் செய்தார்.

மின்சாரம் ஏறிய பிரதான கண்டக்டரை ஒரு கையால் தொட்டு, மறு கைவிரலை ஒரு சாராயம் நிறைந்த பாத்திரத்தின் அருகே கொண்டு செல்வார். விரல் நுனியில் மின்சாரப் பொறி உண்டாகி, சாராயத்தைப் பற்ற வைக்கும். பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் மிரண்டனர். தண்ணீர் நிறைந்த குடத்தின் மேல் ஒரு கரண்டி சாராயத்தை ஊற்றி வைத்து இதைச் செய்யும்போது, இவர் தண்ணீர் தீப்பற்ற வைக்கிறார் என்றே பலரும் வியந்தனர். மின்சார மந்திரவாதி என்று நாடு முழுவதும் புகழ் பெற்றார் போசா.

வேறு சில கண் கவரும் காட்சிகளை அரங்கேற்றினார். அழகான பெண்களை ஒரு முக்காலிமேல் நிற்க வைத்து அவள் பிரதான கம்பியைத் தொடவைத்து, உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். மின்சார முத்தம் பாய்ந்து இருவரும் துடியாய் துடித்தனர். பார்வையாளர்களின் கரகோஷமும் கேட்க வேண்டுமா? அறிவியலுக்காக ஆய்வாளர்கள் செய்யும் தியாகமும் மனோதிடமும் அளவில்லாதது.

போசாவுக்கு ஆங்கிலேயர் மேல் ஏதோ பகை. ஆங்கிலேயர் சிலர் தன் காட்சியைப் பார்க்கவந்தபோது, ஜெர்மானியப் பெண்களுக்கு ஈடாக உலகில் எந்நாட்டுப் பெண்ணும் மின்சார முத்தம் தர முடியாது என்று சூளுரை செய்தார். கூட்டத்தில் இருந்த ஹென்ரி பேக்கர் என்ற ஆங்கிலேயர் இதனால் வெகுண்டெழுந்து, எங்கள் இங்கிலாந்திலும் ஜெர்மனியை மிஞ்சி ஆண்களும் பெண்களும் மின்சார முத்தம் கொடுப்பார் என்று ஏட்டிக்கு போட்டியாய் அறிவித்தார்.

உச்சக்கட்டமாக போசா ஒரு சிறப்புக் கண்ணாடிக் கிரீடத்தைத் தயாரித்து, அதில் சில உலோகக் கம்பிகளைப் பொருத்தி, பிரதானக் கம்பிக்குக் கீழே ஒரு நாற்காலியில் ஒருவரை அமரவைத்து, அவர் தலையில் இந்தக் கிரீடத்தைப் பொருத்தி, இயந்திரத்தை இயக்குவார். ஜன்னல்களெல்லாம் மூடி இருள்சூழ்ந்த அரையில் கண்ணாடிக் கிரீடம் மின்பொறி பட்டு ஒளிவீசும்.

இதைப்போன்ற வித்தைகளை இயந்திரத்தை ஒளித்துவைத்து, ஒரு மாயாஜாலக் காட்சிபோல நடத்தினார் போசா. ஹௌக்ஸ்பீ, கிரே போன்று மக்களுக்கு அறிவியல் விளக்க இந்த லீலைகளில் அவர் இறங்கவில்லை. ஆனால் மின்சாரத்தை வைத்து பணம் சம்பாதித்த முதல் நபர் இவர்தான் என்று தோன்றுகிறது. இங்கிலாந்து, இத்தாலி, துருக்கி என்று பல நாடுகளுக்குச் சென்று தன் விந்தைகளைச் சர்வதேச அளவில் நடத்தினார் போசா.

செல்வந்தர் மாளிகைகளில் போசா நடத்திய கேளிக்கைகளில் பெண்களும் கலந்துகொண்டனர். முத்தமிடும் பெண் மட்டுமல்ல, செல்வந்தர்களின் மனைவிமாரும் மற்ற பெண்டிரும் பார்வையாளர்களாக இருந்தனர். லண்டன் ராஜ்ஜிய சங்கம், பிரெஞ்சு ராஜ்ஜிய சங்கம் போன்று மற்ற ஐரோப்பிய நாடுகளில் நிறுவப்பட்ட அறிவியல் சங்கங்களும் பெண்களை அனுமதிக்கவில்லை. ஆனால் தனிநபர் மாளிகைகளில் நடந்த காட்சிகளில் பெண்களும் முதன் முதலில் அறிவியல் காட்சிகளைக் காண அனுமதிக்கப்பட்டனர். கற்பும் கண்ணியமும் கருதி அவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பலர் வீட்டிலேயே கல்வி பயின்று வந்தனர்.

லேடன் ஜாடி

அருகிலுள்ள நெதர்லாண்ட் நாட்டில் லேடன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் 1745இல் எவால்ட் ஜியார்ஜ் வான் கிளெய்ஸ்டு என்பவர் போசாவின் தீப்பற்றும் சோதனையைச் செய்துபார்த்தார். இதே லேடன் நகரின் அருங்காட்சியகத்தில் சோழர்களின் ஆனைமங்கலம் செப்பேடு உள்ளது என்பது ஓர் ஒட்டுச்செய்தி.

ஒரு கண்ணாடி ஜாடியில் சாராயத்தை வைத்து, கார்க் மூடியிட்டு, அந்த கார்க் வழியே ஒரு இரும்பு ஆணி இறக்கி, ஹௌக்ஸ்பி இயந்திரத்தை வைத்து அதில் மின்சாரத்தைப் புகட்டினார். ஆனால் அது பற்றி எரியவில்லை. ஒரு கை ஜாடியை ஏந்த, மறு கை விரலால் ஆணியைத் தொட்டார். பிரம்மாண்ட அதிர்ச்சி. அறையின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்கு வீசப்பட்டார் கிளெய்ஸ்டு.

லேடன் ஜாடி
லேடன் ஜாடி

இதைப் பற்றி ஆண்டிரேய குனேயஸ், பீட்டர் வேன் மூஷன்பிராக் என்று இருவேறு லேடன் பேராசிரியர்கள் கேள்விப்பட்டனர். சாராயத்துக்குப் பதிலாக நீரை நிரப்பி அதே பரிசோதனை செய்து அதேபோல் தூக்கி எறியப்பட்டார்கள்.

இந்தச் சமயம் பிரான்சின் தலைநகரம் பாரிசில், ழான் அந்துவோன் நொல்லே என்பவருக்கு மின்சாரத்தின் மேல் ஆர்வம் உண்டாயிற்று. இவர் சிஸ்தர்ணேவுக்கும் மூஷன்பிராக்கிற்கும் நண்பர். நொல்லே ஒரு கிறித்தவப் பாதிரி. பெரிய மடத்தின் அதிபதி (அப்பே நொல்லே என்று அவரை அழைத்தனர். அப்பே என்பது மடாதிபதியைக் குறிக்கும் பிரெஞ்சு சொல்).

இதற்கு நூறு ஆண்டுக்கு முன்பு இத்தாலியில் கெலீலியோவைக் கத்தோலிக சர்ச்சும், போப்பும் மிரட்டி மன்னிப்பு கேட்டதால் கிறித்தவர்கள் எல்லாம் அறிவியலை எதிர்க்கும் மதவெறியர்கள் என்று ஒரு பிம்பம் உருவாகியிருந்தது. பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கலீலியோ சொன்னது கிறித்துவ மதநூல் பைபிளுக்கு எதிரான கருத்து என்பதால் அதை எதிர்த்தனர். ஆனால் பலரும் பைபிள் எதிர்க்காத அறிவியலைக் கற்பதில் ஆவலாகவே இருந்தனர். நொல்லே அப்படி ஒருவர். மேலும் அவர் மிகச்சிறந்த பேச்சாளர். அரசரும் மதித்த தத்துவ மேதை. ஒளி, ஒலி, வேதியியல் என்று பல்வேறு துறைகளில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து புகழ்பெற்றவர். அறிவியல் பரிசோதனைகளை மக்களுக்குக் கண்காட்சியாகத் தானே நடத்தியவர்.

மூஷன்பிராக் போல் அவரும் ஒரு ஜாடி செய்தார். அதே மின்சாரத் தாக்கம். ஆனால் அவர் சளைத்துவிடவில்லை. லேடன் ஜாடி என்று பெயர்வைத்து அதை வைத்துப் பல பரிசோதனைகளைச் செய்தார். இந்த ஜாடி மின்சாரத்தைத் தேக்குகிறது என்று புரிந்துகொண்டார். பல பேருக்கு ஒரே தருணத்தில் இப்படிப் பாதிப்பு வருமா என்று சோதித்துப் பார்த்தார். தன் மடத்திலிருந்து இருநூறு சீடர்களை வட்டமாகக் கைகோர்த்து நிறுத்திவைத்து ஒருவர் லேடன் ஜாடியை ஏந்த, வட்டத்தின் கடைசி நபரை முதல் நபர் அருகில் வரவழைத்து ஜாடி மேலுள்ள ஆணியைத் தொடவைத்தார். இருநூறு சீடர்களும் ஒரே நேரம் மின்சாரம் தாக்க அலறிக்கொண்டு நின்ற இடத்திலேயே துள்ளிக் குதித்தனர்.

நொல்லேவுக்கு மெத்த மகிழ்ச்சி. மின்சாரம் ஒரு வட்டத்தில் வருகிறது என்று புரிந்து கொண்டார். இதைக் கேள்விப்பட்ட பிரெஞ்சு மன்னர் தானும் இதைக் காண வேண்டும் என ஆசைப்பட்டார். ஜெர்மனியில் பாவையர் மின்சார முத்தமிட்டுத் துடித்தனர் என்றால், பாரிசில் மடத்துச் சீடர்கள் வட்டமாய் நின்று துடித்தனர். எல்லாம் அறிவியலுக்காக. ஒருவேளை பக்தி, பவ்யம், கல்வி, கண்ணியம் போன்ற குணங்கள் மின்சாரத்துக்குத் தேவையோ என்று மன்னருக்குச் சந்தேகம் எழுந்திருக்கலாம். தன்னுடைய படை வீரர்களை வட்டமாய் கைகோர்த்து நிற்க வைத்து அப்பே நொல்லேவை மின்சாரம் பாய்ச்சக் கேட்டுக்கொள்ள, மின்சாரம் மதச் சார்ப்பற்றது என்று அனைவரும் நிறுவினர்.

மின்சாரத்தின் கைவண்ணத்தை ஹௌக்ஸ்பீ கண்டார். கால்வண்ணத்தை ஸ்டீவன் கிரே கண்டார். இதழ்வண்ணத்தை போசா கண்டார். படைவண்ணம் பிரான்சு மன்னர் கண்டார்.

மின்னல் மழை மின்சாரம்

லேடன் ஜாடி ஐரோப்பாவெங்கும் புகழ் பெற்றுப் பரவியது. சிலர் அமெரிக்காவிற்கும் எடுத்துச் சென்றனர். அமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் வாழ்ந்த பெஞ்சமின் பிராங்க்ளின் ஒரு பத்திரிகையாளர், அச்சு நிறுவன முதலாளி, தபால் நிலையத் தலைமை அதிகாரி எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். அவர் அறிவியல் ஆர்வலராகவும் இருந்தார். பிலடெல்பியாவில் அமெரிக்கத் தத்துவச் சங்கம் ஒன்றை நிறுவிய பிராங்க்ளினுக்கு இங்கிலாந்திருந்து காலின்சன் என்ற நண்பர் சில கருவிகளையும் மின்சாரத்தைப் பற்றிய கட்டுரைகளையும் 1746இல் அனுப்பினார். மின்சார மோகத்தில் மூழ்கினார் பிராங்க்ளின். ஹௌக்ஸ்பீயின் ராட்டின இயந்திரம்போல் ஒன்றை வடிவமைத்து அதில் ஒரு பிரஷ்ஷைப் பொருத்தினார். ராட்டினத்தைச் சுழற்றும்போது இந்த பிரஷ் கண்ணாடிக் கோளத்தைத் தேய்க்கும். தேய்க்க ஆள் தேவையில்லை.

லேடன் ஜாடிகளை வாங்கி சில பரிசோதனைகள் செய்தார். வரிசையாகச் சில ஜாடிகளை இணைத்து அதற்கு விளையாட்டாக பேட்டரி என்று பெயரிட்டார். இந்தப் பெயரே மின்கலனுக்கு நிலைத்துவிட்டது. (ராணுவத்தில் வரிசையாகத் துப்பாக்கிகளை அல்லது பீரங்கிகளை அணிவகுத்தால் அதற்கு பேட்டரி என்று பெயர் இருந்தது. சென்னையில் இன்றுகூட கிளைவ் பேட்டரி என்ற இடம் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே உள்ளது. கோட்டையை காக்க அங்க பீரங்கி அணிவரிசை இருந்ததன் ஆவணம் இந்தப் பெயர். 1748இல் பிலடல்பியா நகரை ராணுவத் தாக்குதலிலிருந்து பாதுகாக்க பிராங்க்ளினும் ஐம்பது துப்பாக்கிகளைக் கொண்ட ஒரு பேட்டரியை உருவாக்கினார்). பிற்காலத்தில் லேடன் ஜாடி உண்மையாக பேட்டரி அல்ல, கெப்பாசிட்டர் என்று விஞ்ஞானிகள் புரிந்துகொண்டனர்.

சிஸ்தர்ணே முன்வைத்ததுபோல் பொருட்களைத் தேய்ப்பதால் உருவாவது அல்ல மின்சாரம் என பிராங்க்ளின் கருதினார். எல்லாப் பொருட்களிலும் ஏற்கெனவே மின்சாரம் உள்ளது. தேய்ப்பதால் அது வெளிப்படுகிறது என்று முன்மொழிந்தார். மேலும் மின்சாரம் இருவகை பட்டதல்ல. வெவ்வேறு பொருள்களில் மின்சார இயல்பு (ஆங்கிலத்தில் சார்ஜ்) அதிகமாகவோ, குறைவாகவோ உள்ளன.

அதிகமான மின்சார இயல்பு (சார்ஜ்) இருப்பதை பாசிட்டிவ், குறைவாக இருப்பதை நெகட்டிவ் என்று பெயர்சூட்டினார். உதாரணத்திற்குத் தன் இயந்திரத்தில் பிரஷ்ஷில் உள்ள அதிக மின்சாரம், குறைவான மின்சாரம் உள்ள கண்ணாடியில் இடம்மாறுகிறது என்று விளக்கினார்.

மின்சாரத்தால் உருவாகும் பொறிகள் அவருக்கு மின்னலை நினைவூட்டின. மின்னலும் மின்சாரம்தான் என்று அவர் யூகித்தார். மழைமேகங்கள் ஒன்றை ஒன்று நெருங்கும்போது, நடுவே பாய்வது மின்சாரம் என்று நம்பினார். மழைமேகங்கள் கூடியிருக்க மின்னலடிக்கும்போது ஓர் உயர்ந்த கட்டிடத்தில் உலோகத்தில் கம்பியை வைத்து, அதன் மறுமுனையை வளைத்து நெளித்து ஒரு குடிசைக்குள்ளே நீட்டினால், அம்முனையில் மின்சாரப் பொறி தோன்றும் என யூகித்தார். புதிதாக யாரோ கட்டிவந்த சர்சின் கூரையில் இப்படிக் கம்பி வைத்து செய்ய நினைத்தார். ஆனால் சர்ச் கட்டுவதற்குத் தாமதமானதால் செய்யவில்லை.

பிராங்க்ளின் தன்னுடைய கருத்துக்களைக் கடிதங்களாக இங்கிலாந்து நண்பர் காலின்சனுக்கு அனுப்பினார். பல்வேறு பரிசோதனைகள், சார்ஜ் என்னும் மின்சார இயல்பின் ஆபத்துகள், மின்சார அதிர்ச்சியைத் தவிர்க்கப் பாதுகாக்கும் கட்டுப்பாடுகள் என்று விவரமாக எழுதியிருந்தார். காலின்சன் அதைப் புத்தகமாய் தொகுத்து வெளியிட்டார்.

பிரான்சில் காம்தெ புஃபான் எனும் தாவர ஆய்வாளர் இந்தப் புத்தகத்தைப் படித்து, அதைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க தாமஸ் தாலிபார்த் என்பவரைக் கேட்டுக்கொண்டார். இருவரும் பிராங்க்ளினின் புத்தகத்திலிருந்து சில பரிசோதனைகளைச் செய்துகாட்டினர். சிஸ்தர்ணேவின் கருத்துகளிலிருந்து மாறுபட்ட பிராங்க்ளினின் கருத்தை சிஸ்தர்ணேவின் நண்பர் ழான் நொல்லேவின் ஏற்றுக்கொள்ளவில்லை. கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் இருந்த பாண்டித்தியப் பகைபோலவே நொல்லேவுக்கும் புஃபானுக்கும் பலமான பாண்டித்தியப் பகை நிலைத்தது.

பிராங்க்ளினின் உயரக் கம்பி மின்னல் பரிசோதனையைச் செய்து பார்க்க, பாரிசுக்கு அருகே தன் கிராம மாளிகை தோட்டத்தில் கம்பி நட்டு, குடிசைக்குப் பதிலாக ஒரு கூடாரத்தை தாலிபார்த் ஏற்பாடு செய்தார். ஆனால் மழை வர வில்லை. அவர் பாரிஸ் சென்ற நாளில் மழைமேகங்கள் சூழ அவருடைய உதவியாளர் அந்தப் பரிசோதனை நடந்ததாகவும், கூடாரத்தில் உள்ள கம்பிமுனையில் மின்சாரப் பொறிகள் தோன்றியதாகவும் கூறினார். தாலிபார்த்தும் புஃபானும் பிரெஞ்சு ராஜ சபையில் இதை அறிவித்தனர், பிராங்க்ளின் புகழைப் பாடினர். மின்சாரம் பற்றி அவ்விருவருக்கும் ஒன்றும் தெரியாது என்றும், இதை மின்சார நிபுணர்கள் செய்தால்தான் உண்மை விளங்கும் என்று நொல்லே எதிர்ப்பு தெரிவிக்க, பல்வேறு இடங்களில் பல்வேறு மின்சார ஆர்வலர்கள் இந்தச் சோதனையைச் செய்து மின்னலும் மின்சாரம்தான் என்று நிறுவினர். பிரான்சு மன்னரின் வெளிப்படையான பாராட்டும் பெற்றார்கள்.

பொறாமையே நொல்லேவின் எதிர்ப்புக்குக் காரணம் என்று புஃபான் கொக்கரித்தார். பிராங்க்ளினின் புகழ் அறிவியல் உலகில் பரவியது. ஓரிரு ஆண்டுகளில் இங்கிலாந்திற்கு அரசியல் ரீதியாக வந்த பிராங்க்ளின், பிரான்சுக்கு வந்தபோது மன்னர் அவரைப் பெரும் பண்டிதராக வரவேற்றார்.

அமெரிக்காவிலிருக்கும்போது சர்ச் கட்டிமுடிக்கக் காத்திருக்காமல், மழைக்காலத்தில் மேகங்களுக்கிடையே உலோகக் கம்பி பொருந்திய ஒரு காற்றாடியைப் பறக்க விட்டு, கையருகே காற்றாடியைச் செலுத்தும் நூலில் ஓர் உலோகச் சாவியை பிராங்க்ளின் தொங்கவிட்டார். தான் முன் ஜாக்கிரதையாக மின்கடத்தா நாற்காலி மேல், ஒரு வீட்டுக்கு உள்ளே நின்றுகொண்டு காற்றாடியை இயக்கினார். சாவியில் மின்பொறி தோன்றியது.

மேகத்திலிருந்து சாவியில் மின்சாரம் தாவியதாக ஒரு கட்டுரையில் தானே உறுதிப்படுத்திக்கொண்டார். கட்டடத்தின் மேல் இப்படி ஒரு திடமான இரும்புக் கம்பம் வைத்து, மெல்லிய செம்பு கம்பியால் அதன் மறுமுனையைப் பூமியில் ஒரு குழியில் இறக்கினால், மின்னலின் தாக்கம் பூமிக்குள் சென்று, கட்டடம் ஆபத்திலிருந்து தப்பிக்கும் என்று யூகித்துச் செயல்படுத்தினார்.

நம் நாட்டில் சமீப காலம் வரை ஒவ்வொரு ஊரிலும் கோயில் கோபுரங்களே மிக உயரமான கட்டடமாக இருக்கும். அதைப்போல மேற்கே கிறித்துவ நாடுகளில் சர்ச்சுகளே மிக உயரமாக இருக்கும். ஆனால் விசித்திரமாகப் பல பாதிரியார்களும், மற்ற ஆன்றோர் சான்றோரும் மின்னல் அல்லது இடி விழுவது கடவுளின் செயல். அதைத் தடுக்க மனிதன் எடுக்கும் நடவடிக்கை தெய்வக் குற்றம் என்றும் வாதாடினர். பல சர்ச்சுகளில் மின் தடுப்பு கம்பம் நட எதிர்ப்பு பலமாக இருந்தது. மற்ற கட்டடச் சொந்தக்காரர்கள் இப்படி நினைக்கவில்லை. தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் ஆலைகளையும் காப்பாற்ற பிராங்க்ளின் அறிவுரை வழியில் மின்கம்பம் நட்டனர். ஒரு சில கணிகையர் மாளிகைகளில்கூட மின்கம்பங்கள் நிறுவினர். கணிகையர் மாளிகைகளில் மின்னல் இடியிலிருந்து பாதுகாப்பு இருப்பதும், ஒரு சில உயரமான சர்ச்சுகள் மின்னலால் தாக்கப்பட்ட பின்னரும், மின் கம்பத்துக்கு எதிர்ப்பு வேகமாகச் சரிந்தது.

கில்பர்ட் காலத்திலிருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகளாகக் கேளிக்கையாகவும், விஞ்ஞான விசித்திரமாகவும் நிலவிய மின்சாரம், அன்றாட வாழ்விற்கு உபயோகமான கருவி என்ற அந்தஸ்தை முதன் முதலில் பெஞ்சமின் பிராங்க்ளின் மூலம் பெற்றது. பிராங்க்ளின் உலகப்புகழ் அடைந்தார்.

0

________
உதவிய வலைத்தளங்கள், காணொளித்தொடர்கள்

– காணொளி: எலக்ட்ரிசிடி – கேத்தி லவ்ஸ் பிசிக்ஸ்
– லூனார் மென் – ஜென்னி அக்லோ
– பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் – வாழ்க்கை வரலாறு
– பெஞ்சமின் பிராங்க்ளின் – காலின்சனுக்கு கடிதங்கள்
– ஜோசஃப் பிரீஸ்ட்லீ – மின்சார கட்டுரைகள்
– மின்சாரத்தின் கதை – டேவிட் போடானிஸ்
– தமிழ்நாடு பாடநூல் கழகத்துப் பாடநூல்கள்
– பல வலைதளங்கள்

0

படம்: William Gilbert M.D. demonstrating his experiments before Queen Elizabeth I (painting by A. Auckland Hunt).

பகிர:
கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *