Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #5 – தொட்டனைத்தூறும் மின்சாரம்

Charles de Coulomb

ஹௌக்ஸ்பீ, ஸ்டீவென் கிரே, மாத்தையாஸ் போசா போன்றவர்களின் சாகசங்களால் கேளிக்கையாக, விநோதமாக விளங்கிய மின்சாரம், சிஸ்தர்ணே, அப்பே நொல்லெ, பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோரின் பணியால் 1750க்குப் பின் கௌரவமான அறிவியலாகப் பார்க்கப்பட்டது. மின்னல் பாதுகாப்பு கம்பங்களால் மின்னல் தவிர்க்கப்படும் என்று பிராங்க்ளின் முதலில் தவறாக நினைத்தது பலிக்கவில்லை. எனினும், மின்னல் தாக்கியும் (இடி விழுந்தது என்று நாம் பாரதத்தில் சொல்வோம்) ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தப்பித்தன. இதனால் விஞ்ஞானிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்த அறிவியல்மேல் புது மரியாதை உருவானது. மின்னலை அடக்கும் மேதைகள் என்று இவர்கள் போற்றப்பட்டனர்.

பிராங்க்ளின் மின்னலைக் காத்தாடியால் தீண்டினார் என்று தவறாக வதந்தி பரவியதில், அதை முயன்று பார்க்கிறேன் அங்கும் இங்கும் ஓரிருவர் மாண்டு போயினர்.

ராபர்ட் கிளைவ் பிளாசி போரில் வென்று, வங்காளத்தின் அதிபதியான 1757இல், இங்கிலாந்துக்கு பிராங்ளின் பயணம் சென்றார். அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவுமே அவர் பயணம் அமைந்தது. ஆயினும், அறிவியல் ஆர்வலர்களும் அவரைக் கலந்து சந்தித்துப் பேசினர். லண்டன் ராஜ்ஜிய சங்கம் அவரை தங்கள் உறுப்பினராக, ஃபெல்லோ ஆஃப் தி ராயல் சொசைட்டி (எஃப்.ஆர்.எஸ்) எனச் சேர்த்துக்கொண்டது. நியூட்டன் போன்ற மேதைகளுக்கு வழங்கிய காப்லி பதக்கத்தை அவருக்கும் வழங்கியது.

லண்டன் ராஜ்ஜிய சங்கத்தைப்போலவே பெர்மிங்காமில் இயங்கிய பௌர்ணமி சங்கமும் அவரை வரவேற்றது. மேத்தியு பௌல்டன், ஜோசஃப் பிரீஸ்ட்லீ போன்றோருடன் ஃபிராங்க்ளின் நட்பு கொண்டாடினார். பிராங்க்ளின், பிரீஸ்ட்லி இருவருமே சகலகலா வல்லவர்கள். பிராங்க்ளினின் தூண்டுதால் மின்சாரத்தின் வரலாற்றை ஆராய்ந்து பிரீஸ்ட்லி ஒரு புத்தகம் எழுதினார்.

ஆனால் அடுத்த நாற்பது ஆண்டுகளில் புதிதாக ஏதும் மின்சாரக் கருவிகள் உருவாகவில்லை. பிராங்க்ளின் போன்றோர் இதை மின்சாரத் தீ என்று வர்ணித்தனர். மற்றவர்கள் மின்சாரத் திரவியம் என்று வர்ணித்தனர்; மின்னூட்டம் (ஆங்கிலத்தில் சார்ஜ் charge) என்றும் சிலர் வர்ணித்து வந்தனர். போனில் சார்ஜ் ஏறுகிறதா, என்று கேட்கிறோம் அல்லவா? அதே.

சார்ல்ஸ் கூலும் எனும் பிரெஞ்சு படைவீரர் ஒரு சிறந்த எஞ்ஜினியர். உராய்வு எனும் இயற்பியல் துறையின் அடிப்படை விதிகளைக் கண்டுபிடித்து வகுத்தவர் இவரே. மின்னூட்டத்தின் அளவை முதலில் அளக்க முயன்று வெற்றிகரமாக அதன் விதிக்கு ஒரு கணிதச் சமன்பாட்டையும் நிறுவினார். ஸ்ப்ரிங் எனும் சுருள்விசையாலும், தானே உருவாக்கிய உராய்வு கருவிகளாலும், மின்சாரம் தன்னினத்தை தள்ளினால் எவ்வளவுதூரம் தள்ளுகிறது, எதிரினத்தை ஈர்த்தால் எவ்வளவு தூரம் ஈர்க்கிறது, தள்ளினால் எவ்வளவு வலுவாக தள்ளும், ஈர்த்தால் எவ்வளவு வலுவாக இழுக்கும் என்று பரிசோதனைகளால் கண்டுபிடித்தார். ஈர்க்கும் விசையைக் கவர்ச்சி மின்விசை, தள்ளும் விசையை விலக்கும் மின்விசை என்று அழைக்கிறோம். ஐசக் நியூட்டன் புவியீர்ப்புச் சக்திக்குச் சமைத்த சமன்பாட்டைப்போலவே, மின்விசைக்கு சார்ல்ஸ் கூலும் வடிவமைத்த சமன்பாடும் வடிவத்தில் ஒத்துப்போனது.

மின்னூட்டத்தை கியூ (q) எனும் ஆங்கில எழுத்தாலும், மின்விசையை எஃப் (F) எனும் எழுத்தாலும், தூரத்தை டி (d) எனும் எழுத்தாலும் அவர் குறித்தார்.

F=C * q1 * q2/ d *d

என்பதே அவர் படைத்த மின்னூட்டச் சமன்பாடு.

இதில் C என்பதற்கு கூலும் கான்ஸ்டண்ட் என்று பெயர். இரு பொருட்களின் மின்னூட்டத்திற்கு நேராகவும், இடைவெளியின் வர்கத்திற்கு நேர்மாறாகவும் உண்டாவது மின்விசை.

மேலும், வாட் என்பது சக்திக்கு அளவையானதுபோல், நியூட்டன் என்பது விசைக்கு அளவையானதுபோல், மின்னூட்டச் சக்திக்கு கூலும் என்பதே அளவையானது.

காலம் சென்றது. பிரீஸ்ட்லீயின் ஆர்வம் மின்சாரத்தை விட்டுவிலகி வேதியியல் பால் திரும்பியது. 1770களில் அவர் காற்றில் பற்பல வகைகள் இருப்பதைச் சோதனைகள் மூலம் உணர்ந்தார். பிரான்சில் அந்துவான் லவோசியே என்பவரைச் சந்தித்து அவரிடம் இவற்றைக் காட்டினார். லவோசியே வேறு சோதனைகள் செய்து வேதியியலையே புரட்டிப்போட்டார். இச்சம்பவங்களைப் பின்னால் தனியே பார்ப்போம். பௌல்டனின் நண்பர் ஜேம்ஸ் வாட் நீராவி எஞ்ஜினை இக்காலத்தில்தான் ஆராய்ந்துவந்தது வரலாற்றுக் குறிப்பு.

நுணலும் தன்காலால் எழும்

1790களில் இத்தாலியில் வாழ்ந்த லுயிகி கால்வானி ஓர் உயிரியல் ஆசிரியர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் போலோன்யா நகரில் நிறுவப்பட்ட ஐரோப்பாவின் மிகத் தொன்மைவாய்ந்த போலோன்யா பல்கலைகழகத்தில் அவர் பணி செய்தார். மருத்துவம் தொடர்பாகப் பல விலங்குகளின் சடலங்களை வைத்து உடலின் உருப்புகள் பற்றிப் பாடம் நடத்தி வந்தார்.

அப்பல்கலைக்கழகம் லாரா பாசி என்ற பெண்ணை 1776இல் அறிவியல் பேராசிரியராய் நியமித்தது. லாரா அம்மையாருக்கு மின்சாரத்தில் பெரும் ஆர்வம். பெஞ்சமின் பிராங்க்ளினின் கருத்துக்களை முன்மொழிந்து லேடன் ஜாடி, மழையில் காத்தாடி, மின்சார ராட்டினம் என்று பல கருவிகளை வரவழைத்து அறிவியல் உரைகள் நடத்தியவர் அவர். லாரா பாசி 1778இல் இறந்துவிட்டாலும், அவரது இயந்திரங்கள் அங்கே இருந்தன. அந்த இயந்திரம் இருந்த மேசையில் ஒரு தலையில்லாத் தவளையின் சடலம் இருந்து. எதேச்சையாக அதன் மேல் மின்சாரம் பாய, சடலமான தவளையின் கால் துடித்தது. இதை கால்வானி கவனித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.

லுயிகி கால்வானி
லுயிகி கால்வானி

ராபர்ட் கிளைவின் செயலாளராக கல்கத்தாவில் பணி செய்தவர் ஆங்கிலேயர் ஜான் வால்ஷ். பிளாசி போரில் கிளைவ் வெற்றி பெற, வால்ஷ் பெரும் செல்வந்தர் ஆனார். இங்கிலாந்துக்குத் திரும்பியவர் அரசியலிலும் அறிவியலிலும் ஈடுபட்டார். சில மீன்களால் மின்சாரம் உருவாக்க முடியும் என்பதை ஆராய்ந்து, லண்டன் சங்கத்தின் உருப்பினராகி, கோப்லி மெடல் பெற்றவர். விலாங்கு மீன், டார்பீடோ என்றெல்லாம் பல வகை மீன்களால் மின்சாரம் உருவாக்க முடியும் என்பது தெரியவந்தது.

இது உயிரியல் மின்சாரம் (Bio Electricity) என்று பெயரிடப்பட்டது. ஆனால் இறந்த தவளை மின்சாரத்தால் துடிக்கும் என்பது கால்வானிக்கும் மற்ற அறிவியல் வல்லுனர்களுக்கும் பேரதிர்ச்சி தந்தது. கால்வானியும் அவர் மாணவர்களும் செத்த தவளைகளை வைத்துக்கொண்டு பல்வேறு பரிசோதனைகளைச் செய்தனர். தவளைகள்போல் பல விலங்குகளின் சதையும் மின்சாரத்தால் துடித்தன என்றும், மின்சாரம் நரம்புகளினூடே பாய்கிறது என்றும் கால்வானி கண்டுபிடித்தார். எல்லா விலங்குகளிலும் மின்சாரத்தீ அல்லது மின்சாரத் திரவியம் பாய்கிறது என்று அவர் கருதினார்.

ஐசக் நியூட்டனின் புவியீர்ப்புச் சக்தி கண்டுபிடிப்பு, பெஞ்சமின் பிராங்க்ளினின் மின்னல் பரிசோதனைகள் ஆகியவைபோலவே இதுவும் ஐரோப்பாவில் பிரம்மாண்ட கிளச்சியை உண்டாக்கியது.

லண்டன் பட்டணத்தில் பூதம்

கால்வானியின் உறவினர் ஜிசுப்பி ஆல்தீனி இதை மிஞ்சி பல்வேறு மிருகங்களோடு சோதனைகளைத் தொடர்ந்தார். பல கொடூரமான சோதனைகளைச் செய்து பொதுவிடங்களில் கண்காட்சியாக நடத்தினார். ஒரு செத்த மாட்டின் துண்டித்த தலையில் மின்சாரம் பாய்ச்சி, அதனைக் கண் பிதுங்கவும், நாக்கு துடிக்கவும் வைத்தார். உச்சக்கட்டமாக, இங்கிலாந்திற்குச் சென்று, ஜார்ஜ் ஃபாஸ்டர் என்ற தூக்கிலிடப்பட்டு இறந்த குற்றவாளியின் பிணத்தைப் பெற்று, அந்தப் பிணத்தில் மின்சாரப் பரிசோதனைகள் செய்தார். இறந்தவர்களின் பூத உடலில் மின்சாரம் பாய்ச்சி மீண்டும் உயிர்வாழ செய்யமுடியும் என்று சிலர் நம்ப தொடங்கினார். அதனால் இது போன்ற பரிசோதனைகள் தொடர்ந்தன.

இயேசு ஒருவரே சிலுவையில் மாண்டபின் மீன்டெழுந்து வந்தார் என்று நம்பியிருந்த கிறித்தவ ஐரோப்பாவில் இந்தக் காட்சிகளின் சமூக தாக்கம் என்னவாக இருந்திருக்கும்? வாழ்க்கை, மரணம், நம்பிக்கை, தெய்வம், தொன்மை எனப் பலவும் பற்பல கேள்விகளுக்கு உட்பட்டன. சமூகப் புரட்சிகளும், அரசியல் புரட்சிகளும் நடந்த காலம் இது என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். (1776இல் அமெரிக்கப் புரட்சி தொடங்கி போராக மாறியது. 1789இல் போர் முடிந்து சுதந்திரமும் பெற்றது. இந்தச் சுதந்திரப் போரில் அமெரிக்காவுக்கு பெஞ்சமின் பிராங்களினின் புகழாலும், இங்கிலாந்துடன் போட்டியாலும் பிரான்சின் நிதியுதவி கிடைத்தது. 1789இல் பிரான்சிலேயே புரட்சி நடந்து மன்னராட்சி வந்தது. நிற்க.)

பலருக்கு இது போன்ற காட்சிகள் கொடூரக் கனவுகளை உண்டாக்கின. அப்படி ஒரு கொடூரக் கனவைக் கண்ட மேரி ஷெல்லி என்னும் பெண், இதன் அடிப்படையாக பிராங்கன்ஸ்டைன் எனும் புகழ் பெற்ற நாவலைப் பிற்காலத்தில் இங்கிலாந்தில் எழுதினார். கதைகளைப் புதுவிதமாக எழுதி நாவல் (புதினம்) என்று பெயரிட்டு காதல் கதைகளும், வரலாற்றுக் கதைகளும் அக்காலத்தில் இலக்கியத்தில் கொடிகட்டிப் பறந்தன. அதில் விஞ்ஞானப் புனைவு என்ற புதியதொரு வகையாக இந்த நாவல் தலை தூக்கியது.

மழைக்காலத்தில் மேகத்திலிருந்து தவளைகளுக்கு மின்சாரம் பாயுமா என்று கால்வானி சோதனை செய்தார். இதற்காக அவர் தன் வீட்டு இரும்பு வேலியில் செத்த தவளைகளைச் செப்புக் கொக்கியில் தொங்கவிட்டுக் கவனித்தார். மேகத்திலிருந்து மின்சாரம் ஏதும் தவளைமீது பாயவில்லை. ஆனால் மழையின்றி மேகமின்றி வெயில் அடித்த ஒருநாள், கொக்கியில் தொங்கவிட்ட ஒரு தவளையின் கால் துடித்தது. இது கால்வானிக்கோ அவர் மாணவர்களுக்கோ ஏன் என்று புரியவில்லை.

இந்த வினோதத்தை அதே இத்தாலியில் வாழ்ந்த அலெசாண்ட்ரோ வோல்டா விளக்கினார். தன் பெற்றோர் விருப்பப்படி வழக்கறிஞராகத் தொழில் செய்யச் சட்டக் கல்வி பயின்ற வோல்டா, தன்னார்வத்தால் அறிவியல் கற்றுக்கொண்டு வேதியியல் பேராசிரியர் ஆனார். சதுப்பு நிலங்களில் எரியும் வாயுக்களில் மீத்தேன் என்று ஒரு புது வகை வாயுவை அடையாளம் கண்டு புகழ் பெற்றார். அப்பே நொல்லே, முஷன்ப்ரோக், பிராங்ளின் எழுதிய புத்தகங்களைப் படித்து மின்சாரத்தில் ஆர்வம் கொண்ட வோல்டா, எலக்ட்ரோஃபோரஸ் என்ற கருவியைப் பிரபலமாக்கினார். கால்வானியின் தவளைப் பரிசோதனை நடக்கும் வரை இத்தாலியில் தலைசிறந்த மின்சார விஞ்ஞானியாக வோல்டாதான் புகழ்பெற்றிருந்தார்.

கால்வானி செய்த தவளைப் பரிசோதனைகளை தானும் செய்து பார்த்தார். தன் எலக்ட்ரோஃபாரஸ் புகழை கால்வானி மிஞ்சிவிட்டார் என்று பொறாமையோ என்னவோ, தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். செத்த தவளை மட்டுமின்றி உயிருள்ள தவளையோடும் ஆராய்ந்தபோது, அதுவும் மின்சாரத்தால் துடிக்கக் கண்டார். விலாங்கு மீன்களைப்போலன்றி, இது பயோ எலக்டிரிசிடி இல்லை என்று வாதாடினார்.

செம்புக் கம்பி, இரும்புக் கம்பி என்று இருவகை உலோகங்களோடு பரிசோதனைகள் செய்தபோது, இரும்பும் செம்பும் தொட்டுக்கொண்டதால் மின்சாரம் உருவாகியது என்று யூகித்தார். மற்ற சில உலோகங்களையும் இணைத்துப் பரிசோதனைகள் செய்தார். வெள்ளியும் துத்தநாகமும் இணைத்தால் அதிக மின்சாரம் தாக்குவதைப் புரிந்துகொண்டார். வெள்ளி நாணயத்தையும், துத்தநாக நாணயத்தையும் தன் நாக்கில் வைத்தப்போது நாக்கிலே சுருக்கென்று எதோ செய்ய, இது மின்சாரம் என்று உணர்ந்ததாகச் செவிவழி செய்திகள் உண்டு. கண்ணன் வாயிலே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டதைப்போல் வோல்டா ஏன் நாவிலே நாணயங்களைப் போட்டுக்கொண்டார்? இருவித கரண்டிகள் (ஸ்பூன்) எதேச்சையாக நாவில் பட்டு ஷாக்கடிக்க, காசு என்ன கசக்கவா போகிறது என்று நினைத்தார் போலும்.

பேசும், சுவைக்கும் கருவியாக மட்டுமே நாம் நாக்கினைக் கருதுகிறோம். ஆனால் வோல்டாவுக்கு மின்சாரத்தை அளக்க நாக்கே முக்கியக் கருவியானது. இரு உலோகக் கம்பிகளைத் தண்ணீரிலோ, அமிலத்திலோ வைத்தால் இன்னும் பலமாக மின்சாரம் பாய்ந்ததை அறிந்தார்.

அதன்பின் தவளையோ எந்த உயிரினமோ தேவையில்லை. இந்த மின்சாரம் வேதியியல் நிகழ்ச்சி. கால்வானி நினைத்ததுபோல் உயிரியல் தயாரிப்பு அல்ல என்று வோல்டா முன்மொழிந்தார்.

இந்த விளக்கத்தால் வோல்டாவின் புகழ் மென்மேலும் பெருகியது. வோல்டா கட்சி, கால்வானி கட்சி என்று இரு கட்சிகளாகப் பிரிந்து விவாதங்கள் நடந்தன. வெற்றிபெற்ற வோல்டா இதற்குக் கால்வானிசம் என்றே பெருந்தன்மையாகப் பெயரிட்டார். அடுத்த முப்பது ஆண்டுகள் இந்தப் பெயரே நிலவியது.

குறிப்பாக கில்பர்ட் முதல் பிராங்க்ளின் வரை தேய்த்து தேய்த்து உருவாகிய மின்சாரம் ஒரு கணத்தில் பொறியாய் தெரிக்கும் ஸ்டாடிக் மின்சாரமாக இருந்தது. ஆனால் இந்தப் புதிய வேதியியல் மின்சாரம் தொடர்ந்து பாயும் மின்சாரமாய் விளங்கியது. இதுவே உண்மையான பேட்டரி என்னும் மின்கலனின் ஆரம்பமாக விளங்கியது.

1796இல் பிரான்சு படைகள், நெப்போலியன் எனும் தளபதியின் தலைமையில், இத்தாலியைப் போரில் தாக்கி வென்றன. முக்கிய அதிகாரிகளும், கல்லூரி பேராசிரியர்களும் பிரான்சின் அரசை ஏற்றுக்கொண்டு விசுவாச உறுதிமொழி ஏடுக்குமாறு கட்டளை பிறந்தது. கால்வானி இதை ஏற்க மறுத்தார். அதனால் அவர் பதவியிழந்து, தன் கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். அடுத்த வருடமே காலமானார். வோல்டா பிரான்சு அரசை ஏற்றுக்கொண்டதால் கௌரவிக்கப்பட்டார்.

மின்சாரம் ஓட்டி திரவியம் தேடு

பல கலங்களில் நீரையோ, அமிலத்தையோ வைத்து, ஒவ்வொன்றிலும் இரு உலோகங்களை இறக்கி, அவற்றைக் கம்பிகளால் ஒரு தொடராக இணைத்தார் வோல்டா. அனைத்துக் கலங்களின் மின்சாரமும் கூட்டிச்சேர்ந்தார்போல் அதிகமாக மின்சாரம் கிடைத்தது. 1800இல் வோல்டா புதியதொரு முயற்சியைச் செய்தார். செப்பு நாணயங்களையும், துத்தநாக நாணயங்களையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தார். இடையே உப்புநீரில் தோய்த்த அட்டைகளை வைத்தார். இதிலிருந்து பலமாக மின்சாரம் உருவாகியது. இதற்கு வோல்டா குவியல் என்று பெயர் வைத்தார்.

வோல்டா குவியல்
வோல்டா குவியல்

இங்கிலாந்தில் வாழ்ந்த வில்லியம் குருக்‌ஷாங்க் என்னும் மருத்துவர், ஒன்றின் மேல் ஒன்றாக இருந்த வோல்டா குவியலைப் பக்கவாட்டாகச் சாய்த்தார். உப்பு நீர் நிறைந்த கலத்தில் அடுத்தடுத்துச் செம்பு, துத்தநாகத் தகடுகளை அடுக்கினார். இந்தத் தகடுகளுக்கு எலக்ட்ரோடு (மின்முனை) என்ற பெயர் அமைந்தது. இது வோல்டாவின் செங்குத்துக் குவியலைவிட நீண்ட நேரம் மின்சாரம் தந்ததால், இந்த வடிவமே விஞ்ஞான உலகில் பரவலானது. லேடன் ஜாடி வரிசைக்கு பேட்டரி என்ற பெஞ்சமின் பிராங்க்ளின் வைத்த பெயர், பிற்காலத்தில் வோல்டா குவியலுக்குப் பெயராக மருவியது.

இங்கிலாந்தில் வில்லியம் நிக்கோல்சனும், ஆந்தனி கார்லைலும் வோல்டா குவியலில் இரண்டு உலோக எலக்ட்ரோடுகளிலும் காற்றுக்குமிழிகள் உருவானதை நோக்கினர். மேலும் ஆராய்ந்தபோது ஓர் எலக்ட்ரோடில் ஆக்ஸிஜன் (உயிர்வாயு) குமிழிகளும், மற்ற எலக்ட்ரோடில் ஹைட்ரோஜன் (நீரகம்) குமிழிகளும் உருவானதை அறிந்தனர். மின்சாரம் பாய்வதால் கலத்தில் உள்ள நீரின் மூலக்கூறுகள் இவ்விறு அணுக்களாகப் பிரிகிறது என்று கண்டறிந்தனர். மின்சாரத்தால் இந்த ரசாயன மாற்றத்திற்கு எலக்ட்ரோலிசிஸ் (மின்பகுப்பு) என்று பெயர் சூட்டினர்.

இதே சமயம் குருக்‌ஷாங்க் நீருக்கு பதில், பல்வேறு திரவியங்களில் எலக்ட்ரோலிசிஸ் பரிசோதனைகளைச் செய்தார். லெட் அசிடேட், காப்பர் சல்ஃபேட், சில்வர் நைட்ரேட் ஆகிய திரவியங்களில் எலக்ட்ரோலிசிஸ் செய்தபோது, ஹைட்ரொஜன் சேரும் எலக்ட்ரோடில், தூய்மையான லெட் (காரீயம்), செம்பு (காப்பர்), வெள்ளி (சில்வர்) ஆகிய உலோகங்கள் குவிந்தன. இந்தத் திரவியங்கள் எலக்ட்ரோலைட் (மின்பகுளி) எனப் பெயர் பெற்றன.

குருக்‌ஷாங்க் பேட்டரி
குருக்‌ஷாங்க் பேட்டரி

பல பொருட்களுக்கு முலாம் பூசும் சிறுதொழிலாக எலக்ட்ராலிசிஸ் ஒரு புதிய தொழில் துறையைத் தொடங்கிவைத்தது. மின்சாரம் மூலம் தங்கம், வெள்ளி, செம்பு பூசுவது அதிவேகமாகப் பரவி, மக்களின் மனதைக் கவர்ந்தது. இன்றையக் கவரிங் நகைகள் பெரும்பாலும் இப்படித்தான் தங்க, வெள்ளி, கவரிங் (கவசம்) பெறுகின்றன. பிற்காலத்தில் துருபிடிக்காமல் இருக்க குரோமியம் போன்ற உலோகங்களில் இரும்பை எலக்ட்ராலிசிஸ் வழியாகப் பூசி, பற்பல கருவிகளின் இயந்திரங்களின் ஆயுளை நீடித்தனர். இவ்வகையில், சென்னை குரோம்பேட்டையின் பெயர், இந்த குருக்‌ஷாங்க் செய்த லீலை.

மின்னலிலும் மேகத்திலும் பொறித்த மின்சாரம், தவளையிலும் மற்ற விலங்குகளிலும் பாயும் மின்சாரம், பற்பல திரவியங்களிலும் பாய்ந்து வேதியியலிலும் வினோதங்களை விளைவித்தது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற நாராயணனை பிரகலாதன் வர்ணித்ததுபோல் பார்த்த இடமெல்லாம் மின்சாரம் வெளிப்பட்டது. தொட்டனைத்தூறும் மின்சாரம் என்பதே வோல்டா குவியலின் வரப்பிரசாதம்.

காற்றினிலே வரும் போதை – ஹம்ஃப்ரீ டேவி

டிரெவிதிக் பிறந்த அதே கார்ன்வால் மாவட்டத்தில் அவருக்குப் பதிமூன்றாண்டுகளுக்கு முன் 1778இல் பிறந்த ஹம்ஃப்ரீ டேவி. இவர் மின்சாரத்தின் அடுத்த ஆட்டநாயகனாகக் களமிறங்கினார். மறக்கப்பட்ட, தூற்றப்பட்ட டிரவெதிக் போலன்றி அதற்கு நேரெதிராக தன் வாழ்நாளில் அறிவியல் உலகின் நட்சத்திர நாயகனாக, இன்றும் மறக்கப்படாத மாமேதை ஹம்ஃப்ரீ டேவி. பதினாறு வயதிலியே தன் தந்தையை இழந்தாலும், ஜான் டாங்கின் என்ற குடும்ப நண்பர் கல்வி கற்க பண உதவி செய்ததால் இளம் வயதிலேயே ஒரு மருத்துவரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார். பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டு, அந்துவான் லவோசியே இயற்றிய புதிய வேதியியல் நூலைப் படித்து, வேதியியல் மேல் தீராக் காதல் கொண்டார்.

ஹம்ஃப்ரீ டேவி
ஹம்ஃப்ரீ டேவி

மருத்துவமனையிலும், இல்லத்திலும் ஓயாமல் ரசாயனப் பொருட்களோடு பரிசோதனைகள் செய்து, உற்றார் உறவனரின் பொறுமையையும் சோதித்தார். ‘ஒரு நாள் இவன் லீலைகளால் நம் வீடே வெடிக்க போகிறது’ என்று அவன் அக்கா அலுத்துக்கொள்வாள்.

கவிதைகள் புனைவுகள் இரண்டிலும் வல்லமை கொண்டார் டேவி. ஜேம்ஸ் வாட்டின் மகன் கிரகரி வாட்டுடன் அவருக்கு நட்பு கிடைத்து. பௌர்ணமி சங்கத்துப் பிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது. கார்ன்வாலுக்கு தாமஸ் பெட்டோஸ் சுற்றுலா வந்தபோது டேவியின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டு வியந்து, பிரிஸ்டல் நகரில் தான் நடத்தி வந்த காற்றியல் நிறுவனத்தில் சேர வாய்ப்பளித்தார். 1772இல் ஜோசப் பிரீஸ்ட்லி காற்று பலவகையானது என்று கண்டுபிடித்து வேதியியல் புரட்சி செய்தார். அதில் ஒன்று நைட்ரஸ் ஆக்ஸைடு எனும் வாயு.

அந்நிறுவனத்தில் பொது மக்களுக்கு விஞ்ஞானப் புதுமைகளைக் கண்காட்சியாகக் காட்டும் கடமையும் ஒன்று. அற்புதமான மேடைப் பேச்சாளராக அப்போது அவதரித்தார் டேவி. நைட்ரஸ் ஆக்சைடு வாயுவைச் சுவாசித்த டேவி, அது மிக இன்பமான ஒரு போதையைத் தந்தது என்று நண்பர்களுக்கு வர்ணித்தார். அவர்களும் அதைச் சுவாசிக்க விரும்பினர். போதை மட்டுமில்ல ஒரு மகிழ்ச்சி. பலருக்கு அடக்க முடியாத சிரிப்பையும் மூட்டிவிட்டது. அதனால் அதற்கு சிரிப்பூட்டும் வாயு (லாஃபிங் கேஸ்) என்றே பெயர் அமைந்துவிட்டது. மேத்தையாஸ் போசாசின் மின்சார முத்தங்கள் சமூகக்களியாட்டம் ஆனது போலவே, நைட்ரஸ் ஆக்சைடு களியாட்டங்களும் பிரபலமாயின. போசாவின் கண்காட்சிகளைப்போலவே டேவியின் கண்காட்சிகளும் இல்லதரசிகளை, பொதுவாகப் பெண்களைய அதிகம் கவர்ந்தன. மகளிருக்கு விஞ்ஞான ஆர்வமூட்டுவதைத் தன் லட்சியங்களில் ஒன்றாக டேவி தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

நைட்ரஸ் ஆக்சைடு பற்றி 580 பக்கம் கொண்ட புத்தகத்தை டேவி இயற்றினார். இதைப் படிக்கவே நடுநடுவில் நைட்ரஸ் ஆக்சைடு தேவைப்படலாம்.

விஞ்ஞானி மட்டுமல்ல, டேவி புலவரும் அல்லவா? அக்காலத்துப் புகழ் பெற்ற ஆங்கில மொழிப் புலவர்களான வில்லியம் வர்ட்ஸ்வர்த், சாமுவெல் டெய்லர் காலரிட்ஜு, ராபர்ட் சதீ ஆகியோரும் இந்தக் களியாட்டங்களில் கலந்துகொண்டனர். கொடி பறக்கும் காற்றினிலே கவி பறக்கும் இங்கிலாந்தில், பரந்த ஆட்சி செய்தது நைட்ரஸ் டையாக்சைடு தென்றல்.

நைட்ரஸ் ஆக்சைடு களியாட்டம்
நைட்ரஸ் ஆக்சைடு களியாட்டம்

1784இல் கல்கத்தாவில், வங்காள ஆசிய சங்கத்தை (ஏசியாட்டிக் சொசைட்டீ ஆஃப் பெங்கால்) நீதிபதி சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இயற்றினார். இதன் ஆண்டிதழில் மகாபலிபுரத்தைப் பற்றி வில்லியம் சேம்பர்ஸின் கட்டுரை பிரசூரமாகியது. இந்தியாவின் வரலாறு, மொழி, கலை, இலக்கியம், இசை, அறிவியல் பற்றிய தகவல்கள் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இதன் பாதிப்பில் ராபர்ட் சதீ, ‘கெகாமாவின் சாபம்’ என்ற ஒரு காவியத்தை ஆங்கிலத்தில் புனைந்தார். கெகாமா எனும் பிராமண பூசாரி யமனை வென்று, அமிர்தம் பெற்று இறவாமை அடைய சிவபெருமானுக்கு யாகம் செய்கிறார். அவர் மகன் ஆர்வலன் இறந்துவிட, ஆர்வலனைக் கொன்ற லாதூர்லதை பழி வாங்க கெகாமா திட்டம் தீட்டுகிறார். உடனே அவனும், கலியல் எனும் அவன் காதலியும் கடல்வழியே நீந்தி மகாபலிபுரம் அடைந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் தஞ்சம் புகுந்ததாக செல்கிறது அந்தக் கற்பனை கதை. மகாபலிபுரத்தின் கதை இங்கிலாந்தை அடைந்ததுபோல், சில ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பனி பணியாளர்கள் இந்தியாவுக்கு வரும்போது வர்ட்ஸ்வர்த், காலரிட்ஜு ஆகியோர் கவிதைகளை இந்தியாவிற்குக் கொண்டுவந்தனர். மின்சார முத்தங்களும் நைட்ரஸ் ஆக்சைடு களியாட்டமும் கப்பலில் வந்ததா என்று தெரியவில்லை. வந்திருந்தால் கல்கத்தாவிலும் மதராசிலும் பம்பாயிலும் அறிவியல் ஆர்வம் அன்றே வளர்ந்திருக்கலாம்.

1799இல் கட்டபொம்மன் தூக்கிலடப்பட்டு, திப்பு சுல்தானை ஆங்கிலேயர் கொன்றனர். அவ்வாண்டு லண்டனில் ராஜ்ஜிய நிறுவனம் (ராயல் இன்ஸ்டிடியூஷன்) என்னும் புதியதோர் அறிவியல் சங்கம் நிறுவப்பட்டது. பெரும் செல்வந்தர்களும், துரைமார்களும், பாராளுமன்ற உருப்பினர்களும் இந்தச் சங்கத்தை நிறுவினர். விஞ்ஞான உரைகளுக்காகப் புகழ் பெற்ற ஹம்ஃப்ரீ டேவியை அந்நிறுவனத்தில் உரையாளராக அழைத்தனர். அவரும் ஏற்றுக்கொண்டு பிரிஸ்டல் நகரை விட்டு லண்டன் சென்றார்.

ஆனால் இதுநாள் வரை பயின்ற வேதியியல் உரை நடத்தாமல் புதிதாக புகழ் பெற்ற கால்வானிசத்தைத் தன் முதல் உரைக்குத் தலைப்பாக எடுத்துக்கொண்டு, ஒரு பரபரப்பான உரையும் கண்காட்சியும் நடத்தி லண்டனை நைட்ரஸ் ஆக்சைடு இல்லாமலேயே மயக்கினார் டேவி.

பிறகு கால்வானிசம் எனும் மின்சாரத்தில் ஆர்வத்தைத் தீவிரமாகச் செலுத்தினார். 880 சதுர அடி பரப்பில் இரண்டாயிரம் தகடுகள் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய மிகப்பெரிய பேட்டரியை (வோல்டா குவியலை) உருவாக்கினார். அதிக மின்னழுத்தம் கொண்ட பேட்டரி அது.

1802இல் இந்த பேட்டரியை வைத்து ஒரு பிளாட்டினம் கம்பியில் செலுத்தியபோது அந்தக் கம்பி மிகவும் சூடாகி, ஜொலித்தது. வேறு சில உலோகங்களும் இதுபோல் மின்சாரம் பாய்வதால் சூடாகி ஒளிவீசும் என்று கண்டறிந்தார் டேவி. எண்பது ஆண்டுகளுக்குப் பின் இதுவே தாமஸ் எடிசனுக்கு மின்விளக்குச் செய்ய தூண்டுதலாயிற்று.

1806இல் உலோகங்களுக்குப் பதிலாக கார்பன் எலக்ட்ரோடுகளோடு பரிசோதனை செய்தபோது டேவி வேறொரு அதிசயத்தைக் கண்டுபிடித்தார். இரண்டு கார்பன் எலக்ட்ரோடுகள் அருகருகே கொண்டுவந்தால் ஒரு மிகப்பிரகாசமான ஒளி பொறி உதித்தது. கொஞ்சம் இடைவெளி அதிகரித்தால் ஒன்றிலிருத்து மற்றொன்றுக்கு ஒரு வளைவாக, மிகப்பிரகாச ஒளி பரவியது. டேவியின் பெரிய மின்னழுத்த பேட்டரியில்தான் சாத்தியமானது. சிறிய மின்னழுத்தமான வோல்டா குவியலில் இந்தப் பொறியோ மின்வளையமோ உண்டாகவில்லை. இந்த மின்சார ஒளி ஆயிரம் முதல் நாலாயிரம் வாட் விளக்கின் பிரகாசம் தந்தது. இல்லங்களையும் அலுவலங்களையும் ஒளியூட்ட இது தகாது. சர்கஸ்களிலும் திருவிழாக்களிலும் மட்டுமே மின்வளைவு விளக்குப் பிரபலமானது.

1807இல் எலக்ட்ரோலைட்டாகப் பல்வேறு திரவியங்களைப் பரிசோதனை செய்தபோது, பெரிய மின்னழுத்தத்தால் அந்தத் திரவியங்களின் மூலக்கூறுகள் உடைந்து தனிமங்கள் உண்டாகி எலக்ட்ரோடுகளில் படிவதைக் கண்டறிந்தார் டேவி. 1807இல் சோடியம் பொடாசியம் என்று இரு தனிமங்கள், 1808இல் பேரியம், கேல்சியம், ஸ்டார்ன்சியம், மெக்னிசியம், 1809இல் போரான் என்று பல தனிமங்களை அடுத்தடுத்து டேவி எலக்ட்ராலிஸிஸ் மூலம் கண்டுபிடித்தார். தலைச் சிறந்த வேதியியல் ஆய்வாளர் என்று அவரின் புகழ் மென்மேலும் பரவியது.

1812இல் ஒரு பரிசோதனை செய்தபோது ஒரு விபத்தாகி அடிபட்டார். தமக்கு உதவியாளர் தேவை என்று கருதி, சமீபத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்த மைக்கல் ஃபாரடே என்பவரை உதவியாளராக ஏற்றுக்கொண்டார். இப்பேர்ப்பட்ட அபார குருவையும் மிஞ்சிய சிஷ்யன் மைக்கல் ஃபாரடே. அவர் கதையை அடுத்து பார்ப்போம்.

0

________
உதவிய வலைத்தளங்கள், புத்தகங்கள், காணொளித்தொடர்கள்

– காணொளி: எலக்ட்ரிசிடி – கேத்தி லவ்ஸ் பிசிக்ஸ்
– லூனார் மென் – ஜென்னி அக்லோ
– ஜோசஃப் பிரீஸ்ட்லீ – மின்சார கட்டுரைகள்
– தமிழ்நாடு பாடநூல் கழகத்துப் பாடநூல்கள்
– விக்கிப்பீடியா
– பல வலைதளங்கள்

_________
படம்: சார்ல்ஸ் கூலும் (Charles de Coulomb)

பகிர:
கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *