Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

சமையல் கலையிலும் மருத்துவத்திலும் தொடங்குகிறது ரசாயனம் எனும் வேதியியலின் கதை. களிமண் பிடித்து பானை, செங்கல் செய்தது, நெருப்பில் எரித்து, பின்னர் பானைகளில் உணவு சமைத்தது ஆகியவை கற்காலத்திலேயே பிறந்த வழக்கங்கள். சீன தேசத்துக் குயவர்கள் சில தாதுக்களைக் கலந்து வெள்ளிபோல பளபளக்கும் பீங்கான் பானை, ஜாடி, தட்டு, ஆகிய கலங்களை உருவாக்கினர். இவை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பிரபலமாயின.

பண்டைய நான்கு நாகரீகங்களான இந்திய, சீன, எகிப்திய, சுமேரிய நிலங்களிலும், அவற்றின் வழித்தோன்றல்களிலும் இரும்பு, செம்பு, வெங்கலம், தங்கம், வெள்ளி, பாதரசம் என்று சில உலோகங்களைத் தாதுக்களிலிருந்து காய்ச்சியெடுத்துப் பதனிட்டது வேதியியலின் அடுத்த கட்டம். இவை நகரங்களும், பெரும் சாம்ராஜ்ஜியங்களும் உருவாக வழிவகுத்தன. பாரத நாட்டிலிருந்து பண்டைய எகிப்துக்கும், சுமேரியாவுக்கும் சிறப்பான எஃகு ஆயுதங்கள், குறிப்பாக வாள்கள், ஏற்றுமதியாயின. இயந்திரம் செய்வதில் வல்லமை மிக்க யவனர்களும் இதைக் கண்டு வியந்தனர். வேறு எந்த நாட்டிலும் இந்தத் தொழில்நுட்பம் பதினெட்டாம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.

எகிப்தில் மன்னர்களின் சடலங்கள் அழுகாமல் பாதுகாக்கும் வேதியியல் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடைசி வரை ரகசியமாகவே நிலைத்தன. பஞ்சுத் துணிகளுக்கு வண்ண வண்ணச் சாயம் பூசும் ரகசியத்தால் பாரதம் துணிகள் தயாரிப்பில் ஈடில்லா நாடாக ஈராயிரம் ஆண்டுகள் கோலோச்சியது. தமிழ்ச் சங்க இலக்கியமும், ஐம்பெருங்காப்பியமும், வடமொழி நூல்களும் சிறப்பான உலோக இயந்திரங்கள் செய்வதில் யவனர்களின் தனிப்பெரும் திறமையைப் போற்றுகின்றன. பாரதத்திலும் பல்வேறு பகுதிகள் பற்பல வேதியியல் கலைகள் ஓங்கின.

‘மகத வினைஞரும் மராட்ட கம்மரும் அவந்தி கொல்லரும் யவன தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மோடு கூடி கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை’ எனும் மணிமேகலை செய்யுள் ஓர் உதாரணம்.

பண்டை நாகரீகங்களின் வேதியியல்

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மைலீதஸ் (Miletus) எனும் நாட்டில் வாழ்ந்த கிரேக்க மேதை தேலீஸ் (Thales), நீரே அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படை என்று கூறினார். ஓரிரு தலைமுறைக்குப் பின் வந்த அனாக்ஸிமாந்தர் (Anaximander), நீரில்லை, காற்றே அடிப்படை என்றார். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எம்பொடோக்ளீஸ் (Empedocles), இவ்விருவரையும் மறுத்து நீர், நெருப்பு, காற்று, மண் இந்த நான்கும் அடிப்படை என்றார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில், எம்பொடோக்ளீஸை ஆதரித்தார். ஆனால் கிரகங்களும் நட்சத்திரங்களும் ஈத்தர் என்ற ஐந்தாம் பூதத்தால் ஆனவை என்று மொழிந்தார். அடுத்த 2100 ஆண்டுகளுக்கு இதுவே ஐரோப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக நிலவியது.

பாரத நாட்டிலும் வேத காலம் தொட்டு, நீர், நெருப்பு, காற்று, மண், ஆகாயம் இவை ஐந்தும் உயர்திணை உயிர்களுக்கும், அஃறிணைப் பொருட்களுக்கும் அடிப்படைப் பூதங்கள் என்று கருதப்பட்டன. வைசேசிகம், தர்க்கம் போன்ற இந்தியத் தரிசனங்களில் இவ்வைந்தோடு காலம், திசை, மனம், ஆத்மா நான்கும் சேர்ந்து, ஒன்பது திரவியங்கள் உள்ளன என்பதும், ஏழு அடிப்படைப் பதார்த்தங்களுள் திரவியம் ஒரு வகை என்பதும், பிரமாணத் தகவல்கள். 1861இல் பிறந்து 1944இல் மறைந்த ஆசிரியர் பிரஃபுல்ல சந்திர ராய், இந்திய வேதியியலைக் கீழுள்ள ஐந்து காலகட்டங்களாக வகுத்தார்.

கிமு 600 வரை வேத காலம்
கிமு 600 முதல் கிபி 800 வரை ஆயுர்வேத காலம்
கிபி 800 முதல் கிபி 1100 வரை மாற்றங்களில் காலம்
கிபி 1100 முதல் கிபி 1300 வரை தந்திர காலம்
கிபி 1300 முதல் கிபி 1500 வரை மருத்துவ வேதியியல் காலம்

பாரதம், சீனா, எகிப்து, சுமேரிய நாகரிகங்களின் வேதியியல் சரித்திரத்தை இந்த அத்தியாயத்திலோ இந்தக் கட்டுரைத் தொடரிலோ சொல்ல இயலாது. அந்தக் கல்வியும் எனக்கில்லை. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் நடந்த முக்கிய மாற்றங்களை மட்டும் இங்கே காண்போம்.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டன்டைன் எனும் ரோம மன்னன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். பழைய கிரேக்க, ரோம, ஐரோப்பிய மதங்களை அழித்து, கோயில்களை இடித்து, கலைகளை ஒழித்து, நூல்களை எரித்து, தடை செய்து, புறக்கணித்து, கிறிஸ்தவ மதத்தை ஐரோப்பா முழுவதும் அவனும், அவன் பின்னர் வந்த அரசர்களும் நிலைநாட்டினர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் காத் (Goth) எனும் ஆதி ஜெர்மானியர்கள் இத்தாலி மீது நடத்திய போர்களில், ரோமாபுரி அழிந்து ரோம ராஜ்ஜியம் துண்டுதுண்டாகச் சிதறியது.

கிறிஸ்தவத்தின் ஒற்றைத் தெய்வமான யெகோவாவை நிலைநாட்ட, நூற்றுக்கணக்கான தெய்வங்கள் கொண்ட பழைய தெய்வங்களும், அதைப் பறைசாற்றிய புத்தகங்களும் சர்வநாசமாயின. ஆனால் பாரசீகத்திலும் இன்றைய இராக்கிலும், கிரேக்க நூல்களும் அவை பறைசாற்றிய அறிவியலும் தொடர்ந்தன. எம்பொடோக்ளீஸும், அரிஸ்டாட்டில் போன்றோரின் கிரேக்க நூல்கள் அரபு மொழியில் எழுதப்பட்டன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சை லுன் (Cai Lun) எனும் சீனர் உருவாக்கிய காகிதம் தயாரிக்கும் முறை அத்தேசத்தைக் கல்வியில் ஈடில்லா நாடாக ஒரே நூற்றாண்டில் உயர்த்தியது. பத்தாம் நூற்றாண்டில் வெடிமருந்து (gunpowder) செய்யும் முறையைச் சீனர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் துப்பாக்கி அல்லது பீரங்கி செய்யும் அளவுக்கு அங்கே உலோகக்கலை உயரவில்லை. பட்டாசு, பானைகளில் வெடி நிரப்பி தூக்கி எறியும் இயந்திரங்கள் செய்ததே அவர்களின் சாதனை.

சை லுன், சீனர் உருவாக்கிய காகிதம் தயாரிக்கும் முறை
சை லுன், சீனர் உருவாக்கிய காகிதம் தயாரிக்கும் முறை

குலேபகாவலி

ஐந்தாம் நூற்றாண்டில் ரோம ராஜ்ஜியமும் பாரசீகமும் நிலைகுலைய, ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய இஸ்லாம், அந்நாகரீகங்களின் இடத்தை நிரப்ப அரேபியருக்கு உதவியது. ஒரே நூற்றாண்டில் எகிப்து, வட ஆப்பிரிக்கா, இஸ்பானியா, இராக், பாரசீகம், மத்திய ஆசியா அனைத்தும் அரேபியர் ஆட்சிக்குள் வந்தன.

ஆனால் அங்கு உருவாகிய பெரிய இஸ்லாமிய அப்பாஸி பேரரசு அரபுநாட்டு நகரங்களான மெக்கா மதீனாவிலோ, சிரியாவிலோ, எகிப்திலோ, பாரசீகத்திலோ உருவாகவில்லை. மாறாக, இராக்கில் பாக்தாத் நகரம் தலைநகராக உருவாகியது. அப்பாஸி எனும் பெயரில் மங்கோலியப் படையெடுப்பு வரை நிலவிய இவ்வரசில், அப்தல்லா முகமது அல்-மன்சூர் (Abdallah Muhammad al-Mansur) எனும் அரசன் ஆண்டுவந்தான். இம்மன்னனே பாக்தாத் நகரை நிறுவியவன்.

‘சென்றீடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்’ என்று சுப்பிரமணிய பாரதி பாடினான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்-மன்சூர் இதே கட்டளையையிட, பாரசீக, சமஸ்கிருத, கிரேக்க, பஃலாவி, மொழிகளிலுள்ள அறிவியல் நூல்கள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. கிழக்கே மத்திய ஆசியா முதல், மேற்கே வடமேற்கு ஆப்பிரிக்கா வரை, மற்ற கலைகளோடு வேதியியலும் பரவியது.

ஐரோப்பாவில் இருண்ட காலம் தொடங்கிய இருநூறு ஆண்டுகளில் பாக்தாத் மையமான அப்பாஸி நாட்டில் அறிவியல் வளர்ந்தது. அல்-மன்சூர் பேரன் ஹரூண் அல்-ரஷீத் (Haroun al-Rashid), பாக்தாதில் ஒரு பெரிய நூலகத்தை உருவாக்கினான். அலிபாபா, அலாவுதீன், குலேபகாவலி ஆகிய ஆயிரத்தொரு இரவு கதைகளில், பல சம்பவங்களின் களம் பாக்தாத். பல்வேறு கதைகளில் ஹரூண் அல்-ரஷீத் ஒரு முக்கிய பாத்திரம்.

இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு வேதியியல் கருத்துகள் சென்றிருக்கலாம். ஆனால், இந்தியாவில் கிடைக்கும் தாதுக்களும், மூலிகைத் தாவரப் பொருள்களும் இல்லாமல் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வது கடினம். இந்தியாவிலிருந்து சென்ற இன்றியமையாத அறிவுப் பொக்கிஷம், கணிதமே ஆகும்.

ஆர்யபடர் எழுதிய ‘ஆரியபடீயம்’, பிரம்மகுப்தன் எழுதிய ‘பிராஹ்ம்ஸ்புட சித்தாந்தம்’ ஆகிய நூல்கள் ஒன்று முதல் ஒன்பது வரை (numerals) இந்திய எண் வடிவங்களையும், பூஜ்ஜியம் (zero) என்னும் சக்திவாய்ந்த எண்ணையும், இடஞ்சார் குறியீட்டையும் (place value system), அல்ஜீப்ரா (algebra) என்று அழைக்கப்படும் பீஜ கணிதத்தையும், திரிகோணமெட்றி (trignometry) என்னும் ஜ்யா கணிதத்தையும் பாக்தாத்தில் அறிமுகம் செய்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாக்தாத் சென்ற லியோனார்டோ ஃபிபொநாச்சி (Leonardo FiBonacci) எனும் இத்தாலிய வணிகர், இந்தக் கணிதத்தை இத்தாலிக்கு அறிமுகப்படுத்தினார். லைபர் அபாகை (Liber Abaci) எனும் நூலில் மோடஸ் இண்டோரம் (Modus Indorum) என்றழைக்கப்பட்ட இந்தியக் கணித முறைகளையும், விதிகளையும் விளக்கினார்.

ஐரோப்பிய வணிகத்திற்கும் சமூகத்திற்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எனும் சுனாமியைக் கிளப்பிவிட்ட பூகம்பமே இந்தியக் கணிதமும் இந்திய எண்வடிவங்களும்தான். ஆர்யபடரின் அற்புத விளக்கு என்று கணிதத்தை வர்ணித்தால் மிகையாகாது.

அல்-மன்சூரின் காலத்தில் வாழ்ந்த ஜாபீர் இப்னு ஹய்யான் (Jabir bin Hayyan) வானியல், ஜோதிடம், கணிதம், மருத்துவம், வேதியியல் என்று பல்துறை வித்தகராக விளங்கினார். வேதியியலின் அரபுச் சொல் அல்கெமி. தாவர மாமிசத் தாதுப் பொருட்களிலிருந்து பல்வேறு மருந்துகளையும், வாசனைத் திரவியங்களையும் செய்யப் புகழ்பெற்ற கலையானது அல்கெமி. ஆனால் அறிவியல் மட்டுமல்ல, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் எல்லாம் கலந்தது. அரபு நாட்டு மருந்துகளும் திரவியங்களும், அல்கெமி என்ற பெயரில் ஐரோப்பாவில் பரவின. லத்தீன மொழியிலும் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் இவர் பெயரை ஜெபர் (Jeber / Geber) எனக் குறித்தனர்.

இவருடைய அரபு புத்தகங்களைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஜெரார்ட் (Gerard) என்பவர் லத்தீனத்திற்கு மொழிபெயர்த்தார்.

ஜாபீர் இப்னு ஹய்யான்
ஜாபீர் இப்னு ஹய்யான்

காட்டமான சில அமிலங்களும், க்ஷாரம் எனும் சில அல்கலிகளும் பாக்தாதில் கண்டுபிடிக்கப்பட்டன. காஜல் எனும் கண்ணில் தீட்டும் மையை மதுச்சாரத்தில், தக்கச் சூரணங்களைக் கலந்து தயாரித்தனர். கண் மைக்கு அரபு பெயர் கஹல். அதனால் மதுச்சாரம் ஆல்கஹால் எனப் பெயர் பெற்றது. இதில் ஒரு வகைதான் சாராய மதுபானங்கள். அல்கெமி (alkimi/alchemy), அல்கலி (alkali), ஆல்கஹால் (alcohol), அல்ஜீப்ரா (algebra) ஆகியவை அரபு மொழியிலிருந்து லத்தீனத்தில் ஒலி மாறாமல் தற்பவச் சொற்களாக நுழைந்தன.

ஓர் உலோகத்தை வேறு ஓர் உலோகமாக மாற்றலாம் என்றும் ஜெபர் தன் நூல்களில் மொழிந்தார். பஞ்சபூதம் அல்லது நான்கு பூதமே அனைத்துப் பொருள்களும் அடிப்படை என்பது பழைய நம்பிக்கை. காய்ச்சியோ, இடித்தோ, எரித்தோ, கரைத்தோ, உருக்கியோ, உலுக்கியோ எந்தப் பொருளிலிருந்தும் பூதங்களை சேர்த்தும் கழித்தும் அதன் தன்மையை மாற்றலாம் என்பது இதன் அனுமானத் தொடர்ச்சி.

‘மந்திராவதிக் கல்’  (philosopher’s stone) என்ற ஒரு சக்திவாய்ந்த மணியை அல்கெமி கூறும் வினைகளால் உருவாக்கலாம். அந்த மந்திரவாதிக் கல் கிடைத்துவிட்டால், அதை வைத்து இரும்பையும் ஈயத்தையும் தங்கமாக்கலாம் என்ற நம்பிக்கை, மிகப் பரவலாகப் பல நூற்றாண்டுகளாக நிலவியது.

மகாபாரதத்தில் கண்ணனும் ஜாம்பவானும் மல்லுச்சண்டையிடத் தூண்டிய சியாமந்தக மணி இதுவே என்று சிலர் நம்புகின்றனர். காலம் காலமாக ஆயிரக்கணக்கான மருத்துவரும் ரசாயனரும் கற்றோரும் மற்றோரும் இந்த மணியைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஹாரி பாட்டர் நெடுங்கதையின் முதல் கதையின் மையமும் தலைப்பும் (Harry Potter and the Philosopher’s Stone) இந்த மந்திரவாதிக் கல் என்பது, அதைப் படித்த கோடிக்கணக்கானவருக்குத் தெரியும். மந்திரவாதிக் கல்லைப் பரிசோதனைகளால் செய்யலாம் என்று வாழ்நாளையே வீணடித்தவர்கள் பலர். அதைச் செய்யும் ரகசியம் தெரியும் என்று சொல்லி ஏமாற்றியவர்கள் அதைவிட அதிகம்.

1403இல் சாதா உலோகங்களைத் தங்கமாக மாற்ற முயற்சிக்கும் அனைத்துப் பரிசோதனைகளுக்கும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றித் தடை விதித்தது. ஆனால் ரகசிய முயற்சிகள் அங்கும் தொடர்ந்தன. மற்ற நாடுகளில் இப்படிச் சட்டம் இயற்றப்பட்டதா என்று தெரியவில்லை.

ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்

பதிமூன்றாம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் எனும் அரசன் நகரமோ, எழுத்தோ, நாகரீகமோ இல்லாத மங்கோலிய நாடோடிச் சமூகங்களை ஒன்றுசேர்த்து, மத்திய ஆசியா, பாரசீகம், அப்பாஸி இராக், சீனம், கிழக்கு ஐரோப்பா, ருசியா ஆகிய நாடுகளை வென்று, அதுவரை யாரும் காணாத மிகப் பிரம்மாண்டத் தேசத்தை உருவாக்கினான். கோடிக்கணக்கில் பிணங்கள் குவிந்து, பெரும் நகரங்கள் சீரழிந்தன. ஆனால் அடுத்த நூறு ஆண்டுகளுக்குச் சீன, அரேபிய, பாரசீக, ஐரோப்பிய மக்களின் அறிவியலும் தொழில்நுட்பமும் மங்கோலியப் பேரரசின் எல்லா மூலைகளையும் சென்றடைந்தன.

காட்டுமிராண்டியாக மட்டுமே வரலாற்றில் சித்தரிக்கப்படும் செங்கிஸ்கான், நாட்டுமிராண்டியாகவும் நகரமிராண்டியாகவும் மாறி ஓர் அறிவியல் மிராண்டி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான். சீனக் காகிதம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பரவியது. சீன வெடிமருந்து பாரசீகத்தின் சிறந்த உலோகத்திறனோடு கலந்து மத்திய ஆசியாவின் துருக்கியரும் உஸ்பெக்கரும் துப்பாக்கியும் பீரங்கியும் செய்ய மூலக்காரணமாக அமைந்தது.

மங்கோலியர் மூலமாகச் சீன தேசத்துக் காகிதம் ஐரோப்பவுக்குச் சென்றபோது ஜெர்மனியில் யோஹான் குடன்பெர்க் ஓர் அச்சு இயந்திரத்தை உருவாக்கினார். சீன தேசத்தில் எட்டாம் நூற்றாண்டில் நடந்த கல்விப் புரட்சிபோல் ஐரோப்பாவில் கல்விப் புரட்சியின் விதை இங்கே நடப்பட்டது. மார்ட்டின் லூதர் எனும் ஜெர்மானியர் திருச்சபைகளின் அதிகாரத்தை எதிர்த்து ஒரு பிரகடனத்தை வெளியிட, அதன் அச்சுப்பிரதிகள் பல்வேறு நாடுகளில் பரவி கிறிஸ்தவத்தில் பிளவை உருவாக்கி, பிராட்டஸ்டண்ட் மதப்பிரிவைப் பெற்றுத்தந்தது. பழைய கிரேக்க லத்தீன நூல்களைப் பல்லாயிரம் ஐரோப்பியர் படித்து உள்வாங்கி தங்கள் பண்டைய வரலாற்றைப் புரிந்துகொண்டதால், பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு கலாச்சார மறுமலர்ச்சி நிகழ்ந்தது. இத்தாலியில் பொலோன்யா, நாப்போலி, வெனிஸ், ஜெனோவா, மிலானோ ஆகிய பல்வேறு நகரங்களில் வணிகமும் கலையும் தொழில்நுட்பமும் அறிவியலும் புதுப்பொலிவு பெற்றன. இவற்றில் மிக முக்கிய நகரம் ஃபிரன்ஸே.

காகிதம் கல்விப் புரட்சிக்கும், அறிவியல் புரட்சிக்கும் மட்டும் அடித்தளமல்ல. வணிகப் பொருளியல் புரட்சிகளுக்கும் அடித்தளம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் எகிப்தில் நுழைந்து, பண்டைய எகிப்தியக் கோயில்களையும் மதங்களையும் அழித்து, அந்த நாட்டை கிறிஸ்தவ நாடாக மாற்றும்முன், நாணல் போன்ற புல்வகை செடியிலிருந்து பெறப்பட்ட பாபிரஸ் எழுத்து ஊடகமாய் விளங்கியது. எகிப்தில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதிலும்கூட.

அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாகரீகம் பின்வாங்க, கல்வியும் பாபிரஸும் வேகவேகமாக மறைந்தன. காகிதம் வரும் வரை, ஐரோப்பாவில் ஆட்டு மாட்டுத் தோல்களைப் பதனிட்டுச் செய்த பார்ச்மெண்ட் எனும் எழுத்து ஊடகமே கோலோச்சியது. அதுவரை தங்கம், வெள்ளி, செப்பு, ஈய நாணயங்கள் புழங்கின. சீன காகிதம் வந்த சில ஆண்டுகளில் காசோலை, உறுதிச்சீட்டு (promisory note) ஆகிய வணிகப் பத்திரங்கள் பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலியில் தோன்றின.

செங்கிஸ்கானின் பேரன் குப்லாய்கான் சீன மன்னனாக ஆண்ட காலத்தில் அங்கே பத்து வருடங்கள் தங்கிய மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகன், தாயகம் திரும்பி தன் பயணக்கட்டுரைகளைப் பிரசூரித்தான். அதில் மூன்று நூற்றாண்டுகளாகக் காகிதம் சீன வணிகத்தில் புழக்கம் என்பதையும் விவரித்தான்.

இதற்குப் பின்னர் கம்பெனிகளில் பங்கு, காகித நாணயம் என்று பதினேழாம் நூற்றாண்டில் வர்த்தகம் பிரம்மாண்டமாய் மாறின. ஆங்கிலேய, டச்சு, பிரெஞ்சு, டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிகள் 1600களில் தொடங்கின. இவ்வாறு இத்தாலிய வணிகத்தின் வெற்றிக்கும், பின்னர் ஐரோப்பிய வளர்ச்சிக்கும், செல்வத்திற்கும் கல்வி ஊடகமாக மட்டுமல்ல, வணிக ஊடகமாகவும் காகிதம் முக்கியத்துவம் பெற்றது.

வெற்றிடத்தின் வெற்றி

1564 முதல் 1642 வரை இத்தாலியின் ஃபிரன்ஸே (Firenze) நகரில் (ஆங்கிலத்தில் இந்த நகரை ஃப்ளோரென்ஸ் Florence என்பர்) வாழ்ந்த கெலீலியோ கெலிலெய், வானியல் புதுமைகளுக்கும் இயற்பியல் சோதனைகளுக்கும் உலகப்புகழ் பெற்றவராக இருந்தார். தொலைநோக்கி வழியே சந்திரனைப் பார்த்து, அதன் இருட்டும் வெளிச்சமும் பள்ளத்தாக்கும் மலையும் என்று உணர்ந்தார். வியாழன் கிரகத்தைத் தொலைநோக்கியில் பார்த்து, அதை நான்கு துணைக் கிரகங்கள் சுற்றுவதை அறிவித்தார். சூரியனைத் தொலைநோக்கியில் பார்த்து அதில் பெரும் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

ஃப்ளோரென்ஸ் நகரின் அதிபர் பல சுரங்கங்களின் சொந்தக்காரர். அவற்றிலிருந்து நீரை இறைக்க நிறைய பம்புகள் இருந்தன. ஆனால் எந்தப் பம்பாலும் முப்பத்திமூன்று அடிக்கு (பத்து மீட்டர்) மேல் நீரை ஏற்றமுடியவில்லை. அவர் கெலீலியோவின் உதவியை நாடினார். கெலிலீயோ காற்றின் எடையை அளக்க அப்பொழுது முயன்றுவந்தார். தராசில் ஒரு தட்டில் காற்றடைத்த பாட்டிலையும், மறுதட்டில் மணல் குவியலையும் வைத்து, பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, காற்றின் கனம் நீரின் கனத்தில் நானூறில் ஒரு பகுதி என்று கணக்கிட்டார்.

ரோமாபுரியில் பாந்தியான் என்ற பெரிய கோவில் இருந்தது; இன்றும் உள்ளது. அதன் உயரம், அகலம், நீளம் ஆகியவற்றைப் பெருக்கி அதிலுள்ள காற்றின் கனம் ஒன்றரை லட்சம் பவுண்ட் (சுமார் எழுப்பத்தி ஐந்தாயிரம் கிலோ) என்று கணித்தார். இவ்வளவு கனமான காற்றை பாந்தியானின் உள்ளே நிற்கும் ஒரு மனிதனால் தாங்கமுடியுமா? கெலீலியோவிற்குக் குழப்பம். பாட்டிலில் இருந்தால் காற்றுக்குக் கனம் உண்டு. வெளியில் கனம் இல்லை என்று தவறான முடிவுக்கு வந்தார். இந்தக் காற்றின் அழுத்தம் அந்த முப்பதடிக்கு மேல் நீர் இறைப்பதைத் தடுக்கிறது என்று தோன்றினாலும், அவருக்கு மாற்று வழி ஏதும் தோன்றவில்லை.

எவஞ்சலிஸ்தோ தாரிசெல்லி (Evangelisto Torricelli), கெலீலியோவின் அறிவியல் வாரிசாகத் தோன்றினார். முப்பதடிக் குழாயில் நீரை நிரப்பி சோதனைகள் செய்வது கடினம். அதனால் நீரைவிடப் பதிமூன்று மடங்கு அடர்த்தியான பாதரசத்தை, ஒரு கண்ணடிக் குழாயில் வைத்துப் பரிசோதித்தார். இதற்கு ஓரிரண்டு அடி நீளக் குழாய் போதும். இரண்டடிக் குழாயில் முக்கால்வாசி பாதரசம் நிரப்பி, அதன் வாயைத் தன் விரலால் அடைத்து, பாதரசம் நிறைந்த ஒரு திறந்த பாத்திரத்தில் அதைக் கவிழ்த்தார். முழுப் பாதரசமும் பாத்திரத்தில் உள்ள பாதரசத்துடன் கலக்கவில்லை. குழாயின் உச்சியில் சில அங்குலத்துக்கு ஒரு சின்ன இடைவெளி தெரிந்தது. அது வெற்றிடம் (vacuum) என்று தாரிசெல்லி யூகித்தார். பாத்திரத்திலுள்ள பாதரசத்தின் மேல் காற்றின் அழுத்தம், குழாயின் உள்ளே வெற்றிடத்தை உருவாக்கி, அது காலியாகவிடாமல் தடுக்கிறது என்று கருதினார். பூமியின் மேல் ஒரு காற்றுக்கடல் மிதக்கிறது என்று முன்மொழிந்தார்.

குழாய் காலியாகி, பின் குலுக்கியபோது ஒரு வினோத ஒளி வீசியது. இதை அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆராய்ந்த பிரான்சிஸ் ஹௌக்ஸ்பீ (Francis Hauksbee), இதற்கு மின்சாரமே காரணம் என்று கண்டறிந்தார்.

ஜெர்மனியின் மேக்டபர்க் (Magdeburg) நகரில் வாழ்ந்த ஆட்டோ வான் கெரிக்கே (Otto von Guericke), தாரிசெல்லியின் பரிசோதனையைத் தானும் செய்துபார்த்தபோது, மழைக்காலத்தில் குழாயின் வெற்றிடத்தின் அளவு மாறுவதைக் கவனித்தார். மழைமேகம் சூழ்ந்தால் தட்பவெட்ப நிலை மாறி, காற்றழுத்தம் மாறுவதால், பாதரசத்தின் உயரம் மாறுகிறது என்று கருதி, அந்த உயரத்தின் அளவு காற்றின் அழுத்தத்தைக் குறிக்கிறது என்று கணித்தார். இந்தப் பாதரசக் குழாயே பாரோமீட்டர் (barometer) எனும் கருவியாகியது. வானிலை எனும் துறை இதிலிருந்து தொடங்கியது.

கெரிக்கேவின் வெற்றிட சோதனை

கெரிக்கே இன்னும் பெரிய வெற்றிடத்தை உருவாக்க, ஆறடி விட்டமுள்ள இரண்டு செப்பு அரைக்கோளங்களைத் தயாரித்தார். அவை இரண்டையும் சேர்த்தால் ஒரு முழுக்கோளம். இந்தக் கோளத்தின் உள்ளிருந்த காற்றை வெளியேற்றவும், மீண்டும் காற்றை உள்புகுத்தவும் ஒரு காற்றுப் பம்பை உருவாக்கினர். உள்ளே காற்றிருக்கும் வரை இரண்டு அரைக்கோளங்களையும் பிரிக்கமுடியும். உள்ளிருக்கும் காற்றை அகற்றி உள்ளே வெற்றிடம் உண்டானால், இரண்டு கோளங்களைக் கயிறு கட்டி எதிரெதிர் திசையில் ஆறு ஆறு குதிரைகளை வைத்து இழுத்தாலும் அவற்றைப் பிரிக்க முடியவில்லை. பின்னர் பம்பு வழியாக உள்ளே காற்று செலுத்தியபின், சுலபமாக இரண்டும் பிரிந்தன. இந்த விசித்திரக் காட்சியை இத்தாலியின் பல ஊர்களில் செய்துகாட்டிப் புகழ் பெற்றார் கெரிக்கே. செப்புக் கோளத்தின் உள்ளே வெற்றிடம் உண்டானபோது, கோளத்தின் வெளித்தடத்தில் காற்று மண்டலத்தின் அழுத்தம் இயங்குவதால், கோளத்தின் இரு பாதி, குதிரைகள் வைத்தும் பிரிக்கமுடியாத இறுக்கம் கொண்டவை என்று கெரிக்கே முன்மொழிந்தார்.

எரித்தல், காய்ச்சல், பொடித்தல், அரைத்தல், வேகவைத்தல், புளிக்கவைத்தல் என்று வினைகளே அடிப்படையாக நிலவிய வேதியியலை, வெற்றிடமும் காற்றின் குணமும் உணர்த்திய சோதனைகள், ஒரு புது திசையில் இழுத்துச் சென்றன.

0

1660இல் லண்டனில் ராஜ்ஜிய சங்கம் நிறுவப்பட்டது என்று பார்த்தோம். இதன் மூலகர்த்தாக்களில் ஒருவர் ராபர்ட் பாயில். இவரது தந்தை பெரும் செல்வந்தராகி முதலாம் கார்க் துரை என்று இங்கிலாந்தில் ஜமீன்தாராகப் பட்டம் பெற்றார். அவருக்குப் பதினான்காம் குழந்தையாக அயர்லாந்தில் பிறந்த ராபர்ட் பாயில், அறிவியல் ஆர்வத்தால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் வாடகைக்கு ஓர் அறை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1657இல் கெரிகேவின் குதிரைச் சோதானையைப் பற்றி படித்ததால், ஒரு வெற்றிட பம்பு செய்து காற்றைப் பற்றிய பரிசோதனைகளைச் செய்தார். இதற்கு உதவியாளராக ராபர்ட் ஹூக் என்பவரை நியமித்தார். பிற்காலத்தில் மைக்ரோஸ்கோப் எனும் கருவியை வடித்து, உயிரி செல்லைக் கண்டுபிடித்தவர் இந்த ஹூக்.

பாயில் பம்பு

இறைவனின் படைப்பில் வெற்றிடம் என்று ஒன்று இருக்கவே முடியாது என்பது அக்கால அறிஞர்கள் பலரின் கருத்து. இறைவன் எப்படி யோசிப்பான், என்ன செய்வான், என்ன செய்யமாட்டான் என்று நம்பிக்கையின் அடிப்படையில் கூறுவது முறையல்ல. பரிசோதனைகள் செய்து அதன் விளைவை வைத்து நிரூபிக்க வேண்டும் என்று பாயில் வாதாடினார். அவர் எழுதிய ஸ்கெப்டிக்கல் கெமிஸ்ட் நவீன வேதியியலின் முக்கிய நூலாகும்.

ஆனால் பாயில் நாத்திகர் அல்ல. தீவிர கிறிஸ்தவர். எத்தனை அறிவியல் நூல்கள் எழுதினாரோ அதற்குச் சமமாக கிறிஸ்தவ மத நூல்களையும் எழுதினார். புதிதாக 1642இல் சென்னையில் ஜார்ஜ் கோட்டை கட்டியிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர் பாயில். கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப உலகெங்கும் குறிப்பாக இந்தியாவிற்கும் நிதி அனுப்பியவர்.

பாயிலுக்கும் மந்திரவாதிக் கல் செய்யலாம் எனும் நம்பிக்கை இருந்தது. 1403இல் இயற்றப்பட்ட சட்டத்தை நீக்க அவர் போராடினார். 1688இல் இதில் வெற்றி பெற்றார். ஆனால் 1691இல் இறந்துவிட்டார்.

இயற்பியலில் பெருஞ்சாதனைகள் படைத்த மாமேதை ஐசக் நியூட்டன் பத்தாண்டு காலம் இந்த மந்திரவாதிக் கல்லை உருவாக்க பல அல்கெமி சோதனைகளைச் செய்து ஏமாந்தார். இயற்பியல் யானைக்கு வேதியியலில் அடி சறுக்கல்.

பாஸ்பரஸ் – எரியாத தீ

இதற்குமுன்பே ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் 1630இல் பிறந்த ஹெனிக் பிராண்ட் (Hennig Brand), மந்திரவாதிக் கல்லைத் தயாரிக்கும் ஆர்வத்தில் அல்கெமி ஆராய்ச்சி செய்து வந்தார். சிறுநீரைக் காய்ச்சி, ஆறவைத்து, ஒருவிதத் திரவியமாக மாற்றி, வடிகட்டி, மீண்டும் காய்ச்சி, வெள்ளைப்புகை வந்தபின் வடிகட்டினால் பாஸ்பரஸ் எனும் பொருள் கிட்டியது. தீயுமில்லை தழலுமில்லை. ஆனால் நெருப்பைப்போல் ஜொலித்தது. மற்ற பொருட்களைக் கொளுத்தவில்லை. ஆனால், இலேசாகச் சுடவைத்தாலோ, தீயிட்டாலோ விசித்திரமாக எரிந்தது. இருட்டிலும் ஒளி வீசியது. தனக்குத் தெரிந்த சாத்திரத்தைப் பின்பற்றி மூத்திரத்தைக் காய்ச்சி வடித்து தங்கம் அடையவில்லை என்று ஆத்திரம் அடையவில்லை பிராண்ட். புதியதொரு தனிமத்தைக் கண்டுபிடித்த புகழில் லயித்தார். ஹாம்பர்க் நகரில் பிறந்து வேதியியல் சாதனை படைத்த ஹெனிக் பிராண்டைவிட, அவ்வூரின் பெயர் கொண்ட ஹாம்பர்கர் சாண்ட்விச்தான் இன்று உலகப்புகழ் பெற்றது.

யோஹான் கிராஃப்ட் (Johann Kraft) எனும் ஜெர்மானியருக்கு பாஸ்பரஸ் தயாரிக்கும் ரகசியத்தை இருநூறு தாலருக்கு (thaler) விற்றார் பிராண்ட். தங்கம் வரவில்லை தாலர் வந்தது. ராபர்ட் கிராஃப்டை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் லண்டன் வர அழைத்தார். முதலில் வர மறுத்த கிராஃப்ட், பெரிய அளவு பணம் தருவதாக மன்னர் சொன்னதும் லண்டன் சென்றார். அங்கு மன்னர், ராபர்ட் பாயில், ராபர்ட் ஹூக் ஆகியோருக்கு பாஸ்பரஸை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அதைத் தயாரிக்கும் ரகசியத்தைச் சொல்லவில்லை.

5700 லிட்டர் மூத்திரத்தைக் காய்ச்சி 120 கிராம் பாஸ்பரஸ்தான் பெற்றார் பிராண்ட். இந்த ரகசியத்தை மற்றவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மூத்திரத்தில் வந்தது என்று தெரிந்துகொண்டபின் பல முயற்சிகளைச் செய்து அந்த ரகசியத்தை பாயில் கண்டுபிடித்தார். இதேகாலத்தில் யோஹான் நுக்கல் (Johann Knuckel) என்பவரும் பாஸ்பரஸ் செய்ய பிராண்டிடம் கற்றுக்கொண்டார். காட்ஃப்ரீட் லெய்ப்நிட்ஸ் (Gottfried Leibnitz) எனும் ஜெர்மானியக் கணித மேதை இதைக் கேள்விப்பட்டு, நுக்கலை வரவழைத்தார். நுக்கல் இதற்கு எத்தனை மூத்திரம் தேவை என்று விளக்கிய பின், படைவீரர்களிடம் அதைச் சேகரிக்க லெய்ப்நிட்ஸ் ஆணையிட்டார். அது போதாது என்று கணித்த பின், சுரங்கத் தொழிலாளிகளிடம் சேகரித்து, பீப்பாய்களில் வரவழைக்கத் திட்டம் வகுத்தார். இதற்குள் அவருக்கு அரசியல் ரீதியாக வேலைகள் வந்துவிட்டதால் வெளியூர் செல்லும் கட்டாயம். அந்தக் கடமை முடிந்து ஊர் திரும்பிய பின் பாஸ்பரஸ் செய்ய லெய்ப்நிட்ஸ் ஆர்வம் இழந்து விட்டார் போலும்.

இதெல்லாம் அருவருப்பாக இருக்கலாம். ஆனால் ஆட்டு மாட்டுத் தோல் செப்பனிடுவதற்கு மூத்திரம் ஒரு முக்கிய திரவியம். நாற்றம் அதிகம் என்பதால் இந்தத் தோல் தொழில்கள் ஊருக்கு வெளியே நடந்தன. மிகவும் ஏழையானவர்கள் சிறுநீரைப் பானைகளிலும் வாளிகளிலும் சேகரித்து தோல் தொழிலாளிக்குச் சிறிதளவே பணத்திற்கு விற்றுவந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செயற்கை ரசாயனத் தொழிற்சாலைகள் தொடங்கியபின், இதெல்லாம் நின்றது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செயற்கை எரு தயாராகும் முன்னர், மாடு, ஆடு குதிரைச் சாணிகளெல்லாம் பயிர் விளைக்க முக்கிய எருக்கள். பாஸ்பரஸ் தயாரிப்பும் தோல் பதனிடுவதில் பயன்பட்டது.

தீக்குச்சிகளைத் தயாரிப்பதில் பாஸ்பரஸ் முக்கிய திண்மம். புது விதத்தில் நெருப்பை உருவாக்க வழி வகுத்ததால் வேதியியலில் அதற்குச் சிறப்பான இடம்.

ஃப்ரைட்ரிக் பாட்கர் (Johann Friedrich Böttger) என்பவரின் கதை இன்னும் விசித்திரமானது. இளவயதில் தனக்கு மந்திரவாதி கல் செய்யத் தெரியும் என்று சுமார் கி.பி. 1700இல் புரளி கிளப்பிவிட, பிரஷிய நாட்டு அதிபர் ஃப்ரெடெரிக் இவரை அரண்மனைக்கு அழைத்தார். உண்மை தெரிந்துவிட்டால் தலை போய்விடும் என்று பயந்து, பக்கத்து சேக்ஸனி நாட்டுக்கு பாட்கர் தப்பி ஓடினார். ஆனால் சேக்ஸனி மன்னர் அகஸ்டஸ், பாட்கரின் புரளியைக் கேட்டு, அவரைக் கைது செய்து, மந்திரவாதிக் கல்லைத் தயாரிக்கக் கட்டளையிட்டார். வேறு வழியில்லாமல் எதை எதையோ வரவழைத்து, ஏதேதோ சோதனைகள் செய்து மூன்று நான்கு ஆண்டுகள் தள்ளினார் பாட்கர். பேராசையால் அதுவரை பொறுமை காத்த அகஸ்டஸ், திடீரென்று ஒருவாரம் கெடு வைக்க, பாட்கருக்கு விமோசனமாக வால்தர் வான் சிர்ண்ஹவுஸ் (Walther von Tschirnhaus) வந்தார். அவர், இத்தனை நாட்கள் மன்னனை ஏமாற்றிவிட்டதாகச் செய்தி பரவினால் மன்னருக்குத்தான் கெட்ட பெயர் என்று ஆலோசனை கூறினார். தன் ஆலையில் பீங்கான் செய்ய பாட்கரை முயற்சிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மந்திரவாதிக் கல் செய்ய இயலாதவராயினும், அல்கெமியில் பாட்கர் திறமையானவர் என்று அவர் கருத்து. இதை அகஸ்டஸ் ஏற்றுக் கொண்டார்.

ஓராண்டுக்குள் சிர்ண்ஹவுஸ் இறந்துவிட்டார். ஆனால் அவர் செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து வந்த பாட்கர், ஒரு வித பீங்கான் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். சீன பீங்கான் இறக்குமதி செய்ய மிக விலை அதிகமென்பதாலும், பாட்கரின் பீங்கானால் செல்வம் ஈட்ட முடிந்ததாலும், மரண தண்டனை பெறாமல் தப்பித்தார். மேலும் செல்வந்தராகி வசதியாகவே வாழ்ந்தார். மன்னரும் பீங்கானை வெள்ளைத் தங்கம் என்று சொல்லிக்கொண்டு சமாதானம் அடைந்தார்.

0

காற்றின் அழுத்தத்தை மட்டுமல்ல, வெப்பத்தையும் அளக்க ஒரு சில கருவிகளைச் செய்ய கெலிலீயோ முதல் பலர் முயன்றனர். காற்று, நீர், மதுச்சாரம் ஆகிய திரவியங்கள் நிறைந்த குழாய்களே இதற்கு முன்னோடிகள்.

தாரிசெல்லியின் பாதையில், வெப்பத்தை அளக்க பாதரசக் குழாயை முதலில் 1712இல் வடித்தவர் போலந்து தேசத்து டேனியல் ஃபேரன்ஹீட் (Daniel Fahrenheit). 1742இல் ஸ்வீடனில் ஆண்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) நீரின் வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டு வெப்பமானிக்கு (Thermometer) அளவுகோல் வடித்தார். பனி உருகி நீராக மாறும் வெப்பத்தைப் பூஜ்ஜியமாகவும், நீர் கொதித்து நீராவியாக மாறும் வெப்பத்தை நூறு எனவும் இலக்குகள் தீட்டினார்.

இவை யாவும் வேதியியலை ஒரு புதிய திசையில் செலுத்த அடித்தளம் அமைத்தன.

0

________
உதவிய வலைத்தளங்கள், புத்தகங்கள், காணொளித்தொடர்கள்

– The Last Sorcerers – Richard Morris
– History of Hindu Chemistry – Prafulla Chandra Roy
– பல்வேறு இணையதளங்கள்
– விக்கிப்பீடியா

பகிர:
கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *