காற்றுக்குக் கனம் உண்டு என்று கெலிலீயோ கண்டுபிடித்தார். கனத்தால் காற்றுக்கு அழுத்தம் உண்டு என்று தாரிசெல்லி உணர்ந்தார். அதைக் கணிக்க பாரோமீட்டரை உருவாக்கினார். குதிரைகள் இழுத்தும் பிரிக்க முடியாத செம்புக் கோளத்தால் காற்றழுத்தத்தின் பலத்தை ஆட்டோ வான் கெரிக்கே நிறுவினார்.
ஸ்பெயர் (Speyer) எனும் ஜெர்மானியச் சிற்றூரில் பிறந்து, மருத்துவராகி, ஆஸ்திரிய மன்னர் லியோபோல்டுக்கு அமைச்சராகிய யோகான் யாக்கிம் பெஃகர் (Johann Joachim Becher), 1667இல் பஞ்சபூதக் கொள்கையைத் தூக்கி எறிய முனைந்தார்.
காற்றும் நெருப்பும் பூதங்களே இல்லை என்று ஃபிசிகா சப்டெரேனா (Physica Subterranea) என்ற நூலில் மொழிந்த பெஃகர், மண் எனும் பூதமே மூன்று வகையானது என்றார். நிலைக்கும் மண் (terra lapidea), பாயும் மண்(terra fluidia), எரியத்தக்க மண் (terra pinguis) என்று இவற்றை வகைப்படுத்தினார். இதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. யான் பாப்டிஸ்ட் வேன் ஹெல்மாண்ட் (Jan Baptist van Helmont) என்பவர் காற்றில் பல வாயுக்கள் (gas) உள்fளன என்றார். கேயாஸ் (chaos) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து கேஸ் (gas) என்ற சொல்லைப் படைத்தார். ஆனால் இதற்கு அவர் எந்தச் சான்றையும் தரவில்லை.
பெஃகரின் கருத்தைச் சற்றே மாற்றி, டெரா பிங்குயிஸ் எனும் எரியத்தக்க மண்ணை ஃப்ளாஜிஸ்டான் (phlogiston) என்று பெயர் சூட்டினார் அவரது மாணவர் ஜியோர்ஜ் எர்ண்ஸ்ட் ஸ்டாஃல் (Georg Ernst Stahl). இது அவர் உருவாக்கிய பெயர் அல்ல. நூறாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்த சொல். ஆனால் ஆளுக்கு ஒரு விதமாக அதை அர்த்தம் செய்தனர்.
ஃப்ளாஜிஸ்டான் பற்றிய ஸ்டாஃலின் தெளிவான விளக்கம் எண்பது ஆண்டுகள் நிலைத்தது.
மரம், துணி, கரி, காகிதம் போன்றவை எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் அந்தச் சாம்பல் எரிவதில்லை. ஏன்? மரம், துணி, காகிதம் போன்ற எரியத்தக்கப் பொருட்களில் ஃப்ளாஜிஸ்டான் என்று ஐம்புலன் அறிய இயலா ஓர் அடிப்படை பூதம் (element) உள்ளது. அவை எரியும்போது இந்த ஃப்ளாஜிஸ்டானை இழந்துவிடுவதால், மீதமுள்ள சாம்பல் எரிவதில்லை. பொதுவாக எந்தப் பொருளை எரிக்க இயலாதோ, அதில் ஃப்ளாஜிஸ்டான் இல்லை. இதுவே ஃப்ளாஜிஸ்டான் தத்துவம் (phlogiston principle) என்றார்.
தர்க்க ரீதியாக இது சிறப்பான வாதம். அதனால் இது அறிவியல் என்று ஏற்கப்பட்டது.
0
ஸ்டீவென் ஹேல்ஸ் (Stephen Hales) 1727இல் வெஜிடபிள் ஸ்டாடிக்ஸ் (Vegetable Staticks) எனும் புத்தகத்தை இயற்றினார். இலைகளில் உள்ள மிக நுண்ணிய துளைகளால் செடிகள் காற்றை உள்வாங்கிக்கொள்கின்றன என்று கண்டறிந்தார். காய்கறிகளையோ இலைகளையோ வேகவைத்தால் அவற்றிலுள்ள நீர் வேகவைக்கும் பாத்திரத்தின் மூடியில் ஆவியாய் படிந்து, குளிர்ந்தபின் நீர்த்துளிகளாய் மாறும். இந்த நீரை ‘பதுங்கிய நீர்’ (fixed water) என்று அழைத்தனர். இதேபோல் செடிகளில் ‘பதுங்கிய காற்று’ (fixed air) இருப்பதாகவும் நம்பினர்.
கண்ணாடிக்குழாயில் பரிசோதனைகளில் உருவாகும் காற்றைத் தப்ப விடாமல் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்ற, காற்றடைப்புத் தொட்டி (pneumatic trough) என்ற கருவியை ஹேல்ஸ் உருவாக்கினார். செடிகளின் மறைந்த நீரை ஜாடியில் சிறைபிடிக்க இது உதவியது. தாரிசெல்லியின் முறையை இது ஒத்தது.
வியாதிகளைத் துர்நாற்றக் காற்று உருவாக்குகிறது என்று மருத்துவர்கள் அக்காலத்தில் பரவலாக நம்பினர். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. மலேரியா நோய்க்கு இப்படித்தான் பெயர் வந்தது. இத்தாலிய மொழியில் மல (mala) என்றால் கெடுதல், அரியா (aria) என்றால் காற்று (ஆங்கிலத்தில் air எனும் சொல்லுக்கு இதுவே வேர்ச்சொல்). நல்ல காற்றை வீசி, தீயக் காற்றை விலக்க, வென்டிலேட்டர் (ventilator) எனும் பெரிய விசிறிகளை ஹேல்ஸ் தயாரித்தார். நெற்களஞ்சியத்தில் இந்த வென்டிலேட்டர் காற்று வீசியதால் நெல்லில் ஈரப்பதம் குறைந்து, சேதமும் அழுகலும் நன்கு குறைந்தன. கப்பல்களில் மர அழுகலைக் குறைக்கவும், கப்பல்களிலும் சிறைகளிலும் நல்லகாற்று வீசி மாலுமிகளுக்கும் கைதிகளுக்கும் உடல்நலத்தைப் பெரிதும் மேம்படுத்தின இக்கருவிகள்.
0
1727இல் பிறந்த ஜோசஃப் பிளாக் (Joseph Black) ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 1757இல் மருத்துவப் பேராசிரியராகச் சேர்ந்தார். சிறுநீரகக் கற்களை (kidney stones) கரைக்கச் சில மருந்துகளைத் தேடிச் செய்த ஆராய்ச்சியில் சுண்ணாம்பைச் சுடவைத்தாலோ, சில அமிலங்களோடு கலந்தாலோ அது ஒருவித வாயுவை உருவாக்குவதைக் கண்டுபிடித்தார். ஸ்டீவென் ஹேல்ஸின் காற்றடைப்புத் தொட்டியால் இந்த வாயுவைப் பிடித்தார். எதேச்சையாக அந்த வாயு ஒரு மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டது. ஒரு கண்ணாடிக் கலத்தில் பிடித்து, அதில் மெழுகுவத்தி, பஞ்சுத்திரி, காகிதம் என்று பல எரியும் பொருள்களை இறக்கினார்.
நீரில் மூழ்கவைத்தால் எப்படித் தீ அணையுமோ அதேபோல் இந்த வாயு தீயை அணைக்கிறது என்று கண்டுபிடித்தார். இதற்கு ‘பதுங்கிய காற்று’ (fixed air) என்று பெயர் வைத்தார். இன்று இதை நாம் கார்பன் டைஆக்ஸைட் (carbon dioxide) என்று அறிவோம். கலத்திலிருந்து இந்த வாயு தப்பி, சூழ்ந்த காற்றுடன் கலக்காமல், கலத்திலேயே தங்கியதால் அது காற்றைவிட கனமானது என்று யூகித்தார் பிளாக்.
1761இல் நீராவியின் குணத்தையும் பனிக்கட்டிகளின் குணத்தையும் பரிசோதிக்கும்போது மறைவெப்பத்தைக் (latent heat) கண்டுபிடித்தார் பிளாக். அதே கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பரிசோதனைகளைச் செய்து வந்த ஜேம்ஸ் வாட், இவரிடம் விளக்கம் கேட்டார் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.
0
1766இல் ஹென்றி கேவண்டிஷ் (Henry Cavendish) சில உலோகங்களோடு அமிலம் கலந்தால் ஒரு புதுவித வாயு உருவானதைக் கண்டுபிடித்தார். காற்றடைப்புத் தொட்டி வழியாக இந்தக் காற்றை ஒரு ஜாடியில் பிடித்து, இதுவும் ஜோசப் பிளாக்கின் பதுங்கிய காற்றைப்போல் தீயை அணைக்குமா என்று பரிசோதித்துப் பார்த்தார். ஆனால் இதுவோ எதிர்பார்ப்புக்கு நேரெதிராக ஜ்வாலை விட்டு எரிந்தது. இதற்கு ‘பற்றி எரியும் காற்று’ (Flammable air) என்று கேவண்டிஷ் பெயர் சூட்டினார். இதை இன்று நாம் ஹைட்ரஜன் (hydrogen) என்று அழைக்கிறோம்.
காற்று ஒரு பூதமா, பல வாயுக்கள் கலந்த கலவையா என்று விவாதம் நடந்தது. ஃப்ளாஜிஸ்டான் கூடியதால் பற்றி எரியும் வாயு உருவானது என்று கருதினார் கேவண்டிஷ்.
0
ஜோசப் பிரீஸ்ட்லீ
1734இல் நெசவாளர் ஜோனஸ் – மேரி தம்பதியருக்குப் பிறந்தவர் ஜோசப் பிரீஸ்ட்லீ. ஆறு குழந்தைகளில் மூத்தவர்.
எட்டாம் ஹென்றி (Henry VIII) தன் ஆட்சிக்காலத்தில் கி.பி.1530களில் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் (Anglican) மதத்தை நிறுவினார். ரோமாபுரியிலுள்ள போப்பின் அதிகாரத்தை மறுத்து, தானே ஆங்கிலிக்கன் சர்ச்சின் தலைவர் என்று அறிவித்தார். இரண்டுமே கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகள்தாம். ஆயினும், மன்னரின் தலைமையை ஏற்காத மந்திரிகள் மற்றும் துரைகள் மரண தண்டனை பெற்றனர். மன்னர் இறந்தபின் ஆட்சிக்கு வந்த அவரது மகள் ராணி மேரி, மீண்டும் கத்தோலிக்க மதத்தை இங்கிலாந்தில் நிறுவினார்.
ஆயிரக்கணக்கில் ஆங்கிலிக்க மதத்தினர் இங்கிலாந்தை விட்டுத் தப்பியோடினர். ஐந்து வருடங்களில் மேரி இறந்தார். அவரது தங்கை முதலாம் எலிசபெத் ஆட்சிக்கு வந்து தந்தை ஹென்றி நிறுவிய ஆங்கிலிக்க மதத்தை இங்கிலாந்தின் தேசிய மதமாக மீண்டும் அறிவித்தார். ஆனால் ஹென்றி காலத்திலும் மேரி காலத்திலும் நடந்த மாற்று மத வேட்டையும், மரண தண்டனையும் எலிசபெத் ஆட்சியில் அவ்வளவு குரோதமாகத் தொடரவில்லை. தொண்டர்கள் அடித்துக்கொண்டாலும் தலைவர்கள் ஓரளவு சகிப்புத்தன்மையை வளர்த்தனர். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்தில் மதக்கலவரங்கள் நிலவின. பின்னர் வந்த முதலாம் சார்லஸ் மன்னர் காலத்தில், ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell) தலைமையில் இங்கிலாந்தின் பாராளுமன்றம் மிகவும் பலம்பெற்று, அதை எதிர்த்த சார்லஸ் மன்னனைச் சிரச்சேதம் செய்தது. கிராம்வெல் இறந்தபின் இரண்டாம் சார்லஸ் மன்னரானார்.
கத்தோலிக, ஆங்கிலிக்க மதங்கள் இரண்டையுமே முழுவதும் ஏற்காத கிட்டத்தட்ட இருபது புதுவிதச் சர்ச்சுகள் இங்கிலாந்தில் அங்குமிங்கும் முளைத்தன. மன்னர் மதம் உருவாக்கினால், மக்களும் உருவாக்கலாம் என்று கருதினர் போலும். பிரீஸ்ட்லி பிறந்த 18ஆம் நூற்றாண்டில், பகுத்தறிந்து ஒவ்வாமை (Rational Dissenter) என்று பல இயக்கங்கள் தம்மை அறிவித்தன. அப்படி ஓர் இயக்கம் நடத்திய பள்ளியில் ஜோசப் பிரீஸ்ட்லீ ஆரம்பக் கல்வி பெற்றார். சிறு வயதிலேயே லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளைக் கற்றார். போர்த்துகல் நகருக்குச் சென்று வணிகத்தில் ஈடுபட முடிவெடுத்து, பதினேழாம் வயதில் ஃப்ரெஞ்சு, இத்தாலியம், ஜெர்மன், அரபு, அரமாயிக் மொழிகளையும் கற்றார்.
ஆனால் அது வாய்க்கவில்லை. மதபோதகராக நீடம் மார்கட்டில் (Needham Market) வேலை கிடைத்தது. அவருடைய போதனைகள் அவ்வூர் மக்களுக்குப் பிடிக்கவில்லை. சர்ச்சில் கூட்டம் குறைந்து வேலை இழந்தார். நேண்ட்விச் (Nantwich) என்னும் ஊரில் பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தது. தரம் குறைவான இலக்கண நூல்களைச் சகிக்க முடியாமல், ஆங்கில இலக்கணத்தின் அடிப்படைகளை விளக்கும் நூல் (Rudiments of English Grammar) ஒன்றை இயற்றினார் பிரீஸ்ட்லீ.
1761இல் வாரிங்கடன் (Warrington) என்ற ஊருக்குப் பணி மாற்றம் பெற்று, மேரி வில்கின்சன் எனும் பெண்ணை மணந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன. வரலாற்று மோகம் பிடிக்க, கிறிஸ்தவ மதத்தின் வரலாற்றையும் அறிவியல் வரலாற்றையும் ஆராய்ந்தார். அறிவியலால் இயற்கையை அறிதல் ஒவ்வொரு மனிதனையும் மேம்படுத்தும், இறைவன் படைத்த இயற்கையை அறிதல் நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை என்று வாதாடினார். 1765இல் பல கல்விக் கட்டுரைகளை இயற்றினார்.
இங்கிலாந்துக்கு வந்திருந்த பெஞ்சமின் ஃப்ராங்கிளினுடன் நட்பு கொண்டார். ஃப்ராங்கிளினைப்போல் பிரீஸ்ட்லியும் ஒரு சகலகலா வல்லவர். விஞ்ஞானி, மதபோதகர், பாதிரியார், பள்ளி ஆசிரியர், கல்வியாளர், பன்மொழிப் புலவர், இலக்கண ஆசிரியர், வரலாற்று வல்லுநர், அறிவியல் வரலாற்று நூலாசிரியர், அரசியல் தத்துவ போதகர், பேச்சாளர், பிரச்சாரகர் என்று அவருக்குப் பல முகங்கள்.
ஃப்ராங்கிளினின் தூண்டலில் 1767இல் மின்சாரத்தின் வரலாறு ‘A History of Electricity’ என்று ஒரு புகழ் பெற்ற புத்தகம் இயற்றினார். அலெசாண்ட்ரோ வோல்டா (Alesssandro Volta), வில்லியம் ஹெர்ஷல் (William Herschel) போன்ற விஞ்ஞானிகளும் இந்தப் புத்தகத்தை ஆவலாகப் படித்தனர்.
1768இல் அரசாங்க நிர்வாக அடிப்படைக் கொள்கைபற்றி ‘Essays on the First Principles of Government’ என்று ஒரு நூல்எழுதினார். 1772இல் ஒளியை ஆராய்ந்து ஒளியின் வண்ணம், பாதை, குணம், விதி போன்றவற்றை விவரித்து ‘Optics’ என்று ஒரு புத்தகம் எழுதினார். ஆனால் இந்தப் புத்தகத்தை அறிஞர்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை.
இந்த காலகட்டத்தில் ப்ரீஸ்ட்லி வேதியியலில் ஆர்வம் காட்டினார். ஜோசப் பிளாக் செய்த பரிசோதனைகளைத் தானும் செய்து பார்த்தார். பதுங்கிய காற்றை உருவாக்கியதோடு நில்லாமல், நீரில் அதைக் கலந்தார். அதன் சுவை வித்தியாசமாக இருந்தது. ஜீரணத்துக்கு உதவியதுபோல் இருந்தது. நீண்ட கடல் பயணத்தால் தோன்றும் ஸ்கர்வி (scurvy) நோய்க்கு மருந்தாக இருக்கலாம் என்று பிரீஸ்டிலி முன்மொழிந்தார்.
இதை நாம் இன்று கார்பனேடட் நீர் (carbonated water) என்று அழைக்கிறோம். கோலி சோடாவுக்கும் கொக்ககோலாவுக்கும் இதுவே முன்னோடி. ஆனால் பிரீஸ்ட்லீக்கு இதன் வணிக லாபம் தெரியவில்லை. ஜெர்மனியின் ஜெஜெ ஷ்வெப் (J J Schweppe) இந்தப் புதிய பானத்தை ஆலையில் தயாரித்துப் பெரும் செல்வந்தர் ஆனார். ‘ஷ்வெப்ஸ்’ (Schweppes) எனும் பானம் இன்றும் விற்பனையில் உள்ளது.
லண்டன் ராஜ்ஜியச் சங்கம் பிரீஸ்ட்லீக்கு கோப்லி (Copley) பதக்கத்தைக் கொடுத்து கௌரவித்தது.
ஷெல்பர்ன் பிரபுவின் (Earl of Shelburne) குழந்தைகளுக்கு ஆசிரியராக ப்ரீஸ்ட்லீ வேலைக்குச் சேர்ந்தார். கால்னே நகரில் தொழில். அங்கும் பல பரிசோதனைகளைத் தொடர்ந்தார்.
காற்றே அவனது போதி மரம்
1772இல் இருந்து 1777 வரை ஏழு புதிய ‘காற்றுகளை’, அதாவது வாயுக்களை பிரீஸ்ட்லீ கண்டுபிடித்தார். இவை உயிரியல், இயற்பியல், வேதியியல் எல்லாம் கலந்த எளிமையான, ஆனால் அபாரமான புரட்சிகரமான சோதனைகள், கண்டுபிடிப்புகளாக இருந்தன. நைட்ரஸ் காற்று (nitrous air), மெஃபிடிக் காற்று (mephitic air), அமிலக் காற்று (acid air) என்று மொத்தம் ஏழு விதக் காற்றுகளை அடையாளம் கண்டார்.
மூடிய கண்ணாடி ஜாடியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து கவனித்தார். சில நிமிடங்களில் தீபம் அணைந்துவிட்டது. திரியில் இருந்த ஃப்ளாஜிஸ்டான் எரியும்போது காற்றில் உள்ள ஒரு தனி வாயுவுடன் கலந்து, அதனுடன் ஃப்ளாஜிஸ்டான் சேர்க்கிறது. தீ எரிய ஃப்ளாஜிஸ்டான் இல்லாத ஒரு வாயு வேண்டும் என்று யூகித்தார். இதை ‘ஃப்ளாஜிஸ்டானிழந்த காற்று’ என்று பெயரிட்டார். இதை நாம் ஆக்சிஜென் என்கிறோம்.
பிறகு ஓர் எலியை ஜாடியில் அடைத்து வைத்து கவனித்தார். சில நிமிடங்களில் மூர்ச்சை விட்டு எலி இறந்தது. தவளை போன்ற சிறு விலங்குகளும் அடைத்த ஜாடியில் சில நேரத்திற்குப் பின் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்தன.
எலியையும் மெழுகுவர்த்தியையும் சேர்த்து ஜாடியில் வைத்து பரிசோதித்ததில், எலி முன்பைவிடச் சீக்கிரம் மாண்டது. மெழுகுவர்த்தியும் சீக்கிரம் அணைந்தது. விலங்குகள் மூச்சுவிடும்போது காற்றில் ஃப்ளாஜிஸ்டான் இணைவதால் அவை இறக்கின்றன என்று யூகித்தார்.
ஜாடிக்குள்ளே ஒரு செடியை வைத்து கவனித்தார். எத்தனை நேரம் ஆனாலும் செடி வாடவேயில்லை. செடிகளின் சுவாசமும் விலங்குகளின் சுவாசமும் வேறுபோல என்று யூகித்தார். செடிகளுக்கு ஃப்ளாஜிஸ்டானிழந்த காற்றுத் தேவையில்லையோ?
ஜாடியில் செடியோடு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தார். தனியாக எரிந்ததைவிட மிக நீண்ட நேரம் மெழுகின் தீபம் எரிந்துகொண்டே இருந்தது. அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை! இது என்ன அதிசயம்?
செடியோடு எலியை ஜாடியுள்ளே வைத்தார். நீண்ட நேரம் எலி சாகவில்லை. மாறாக முன்பைவிட சுறுசுறுப்பாக, துருதுருவென்று அங்கும் இங்கும் உலவியது. ஒருவேளை செடி இனம் ஃப்ளாஜிஸ்டானிழந்த காற்றைத் தயாரிக்கிறதோ?
பிரிஸ்ட்லீக்கு ‘எரி கண்ணாடி’ (burning glass) என்ற ஒரு பெரிய லென்ஸை யாரோ பரிசாய் வழங்கினர். ஒருபுறம் சூரியனின் ஒளியை இது சேர்த்து, மறுபுறம் தொகுத்து, தக்க இடத்தில் வைத்த பொருளை வெப்பமூட்டி தீ பற்றச் செய்யும் (அதனால் எரி கண்ணாடி எனும் பெயர்).
பாதரச உப்பை (மெர்குரி கேல்க்ஸ் – mercury calx) ஒரு கண்ணாடி ஜாடியில் சிறு தட்டில் வைத்து, எரி கண்ணாடியால் ஜாடியைத் திறக்காமல் பற்றவைத்தார். அதே ஜாடியில் எலியை வைத்தால், அது நெடுநேரம் வாழ்ந்தது. தீபம் நெடுநேரம் எரிந்தது. பாதரச உப்பை எரித்தால் அது ஃப்ளாஜிஸ்டானிழந்த காற்றை உருவாக்குகிறது என்று முடிவெடுத்தார். தானும் இந்தக் காற்றைச் சுவாசித்துப் பார்த்தார். மிகுந்த உற்சாகமும் சொல்லொணா சுறுசுறுப்பும் அவர் உடலை முழுதும் ஆட்கொண்டது.
எவ்வளவு எளிமையான பரிசோதனைகளால் எப்பேர்ப்பட்ட அபார ஞானத்தை ஜோசப் பிரீஸ்டிலீ பெற்றார்! அறிவியல் உலகிற்குப் பெற்றும் கற்றும் தந்தார்!!
ஜாடிகளில் வேள்வி செய்து, கேள்வி எழுப்பி, காற்றே எனக்கு போதி மரம். நாளும் எனக்கது சேதி தரும் என்று காட்டினார்.
நீட்டோலை வாசியா நின்றான்
இதற்கிடையே நண்பர் தியோஃபிலஸ் லிண்ட்சியின் (Theophilus Lindsey) தூண்டுதலில் யூனிடேரியன் (Unitarian) என்ற புதிய சமயத்தை உருவாக்கி, அதற்கு ஒரு சர்ச் அமைத்து, அடிக்கடி அதன் கொள்கைகளை போதனை செய்து வந்தார் பிரீஸ்ட்லி. அவர் இல்லமே யுனிடேரியன் சர்ச்சாகவும், அவரது நூலகமாகவும், பரிசோதனைக்கூடமாகவும் நிலைத்தது. கிறிஸ்தவ மதத்தில் புகுந்த இடைச்செருகல்கள் – ‘Corruptions of Christianity’ என்னும் ஒரு நூலையும் எழுதினார்.
எஜமானர் ஷெல்பர்ன் பிரபுவும் இந்த யூனிடேரியன் சர்ச்சில் சேர்ந்தார். அறிவியல் ஆராய்ச்சிகள், இயற்கையைப் பகுத்தறிவது, மதத்தின் முக்கிய அம்சங்கள் என்று பிரீஸ்ட்லீ தன் பெயருக்கேற்ப வாதாடினார். இயேசு கிறிஸ்து தெய்வமல்ல, மனிதன்தான் என்பது இந்தச் சர்ச்சின் ஒரு கொள்கை. இதனால் இயேசுவை தெய்வம் என்று வணங்கிய பலர் பிரீஸ்ட்லீயை வெறுத்தனர், அல்லது ஒடுக்கினர்.
ஷெல்பர்ன் பிரபுவுடனும் அவர் குடும்பத்துடனும் சில மாதங்கள் ஐரோப்பா சுற்றுப்பயணம் சென்றார். பிரான்சின் பாரிஸ் நகரில் ஆந்துவான் லவோய்சியேவைச் (Antoine Lavoisier) சந்தித்து தன் பரிசோதனைகளைக் காட்டினார். லவோய்சியே சில பரிசோதனைகளைச் செய்து வேதியியலின் அடிப்படையே மாற்றிப்போட்டார். அது அடுத்த கதை.
1779இல் ஷெல்பர்ன் பிரபுவுடன் கருத்து வேற்றுமை தோன்ற, பதவி விலகி பிர்மிங்காம் நகரம் சென்றார். ஜேம்ஸ் வாட், மேத்யு போல்டன் ஆகியோருடன் பௌர்ணமி சங்கத்தின் (Lunar Society) தொடர்பும் கிடைத்தது.
பிரீஸ்ட்லி, அடிமை வியாபாரத்தையும் அடிமை முறைகளையும் எதிர்த்தார். அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். பிரெஞ்சுப் புரட்சி வெடித்தபோது அதற்கும் ஆதரவு தெரிவித்தார். இதை இங்கிலாந்தின் மன்னர் ஜார்ஜும் அவர் ஆதரவாளர்களும் தேச துரோகமாகக் கருதினார். பிர்மிங்காமில் அரசியல் கலவரம், மதக்கலவரம் மூண்டு பிரீஸ்ட்லீயின் இல்லம் /சர்ச் /சோதனைக்கூடம் கொளுத்தப்பட்டது. குடும்பத்தோடு உயிர் தப்பி வேறு ஊருக்கு ஓடினார். இந்தக் கலவரங்களை மன்னரும், ஆளுங்கட்சியும் பலரும் ஆதரித்தனர். பிரீஸ்ட்லீ போன்றவர்களுக்குத் தக்கப் பாடமாக இதை நினைத்தனர்.
ஓரிரு ஆண்டுகளில் தன் தாய்நாடான இங்கிலாந்தில் தனக்கு இடமில்லை என்று முடிவெடுத்து, 1794இல் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கே அவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து. துணை ஜனாதிபதிகள் ஜெஃபர்சனும், ஜான் ஆடம்ஸும் அவரது பெரிய ரசிகர்கள். பழைய நண்பர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் இதற்குள் இறந்துவிட்டார். ஆனால், அவர் வாழ்ந்த பிலடெல்பியா நகரில்தான் பிரீஸ்ட்லி குடியேறி, பத்தாண்டுகள் வாழ்ந்தார். 1804இல் காலமானார்.
சிரிக்கத்தகாத நேரத்தில் சிரித்த கர்ணனைப்போல, அரசியல் களத்திலும் சமூகத்திலும் குறிப்பறிய மாட்டாது பேசியும் எழுதியும், நாட்டைவிட்டே ஓடவேண்டிய நிலைமைக்கு ஜோசப் பிரீஸ்ட்லீ வந்தாலும், பிற்காலத்தில் அவருக்குத் தாய்நாட்டில் மரியாதை கிடைத்தது. இல்லம் எரிக்கப்பட்ட பிர்மிங்காமில் சிலை வைக்கப்பட்டது. கல்லூரிகளுக்கும் கட்டடங்களுக்கும் அவர் பெயர் சூட்டப்பட்டன.
0
________
உதவிய வலைத்தளங்கள், புத்தகங்கள், காணொளித்தொடர்கள்
– Great Scientific Experiments – Rom Harre
– Experiments and Observations on Air – Joseph Priestley
– Vital Forces – Graeme Hunter
– பல்வேறு இணையதளங்கள்
– விக்கிப்பீடியா