1743இல் மேல்தட்டு நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்த அந்துவான் லவோய்சியே (Antoine Lavoisier) பள்ளிக்காலம் முடிந்தவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். லவோய்சியே ஒரு பன்முக வித்தகர். பல துறைகளில் ஆர்வமுள்ளவர். கல்லூரியில் சட்டப் படிப்புகள் அவருக்கு மிக எளிதாக இருந்தன.
புதிய துறைகளான புவியியல், இயற்பியல், வானியல், கணிதம், தாவரவியல் மருத்துவம் என்று பல துறைகளில் ஆர்வம் காட்டினார். இதனால் பல சாதனையாளர்கள் நண்பராயினர். இதில் ஐவரோடு சீடராகப் பயின்று பயன்பெற்றார்.
அப்பே நிக்கலாஸ் த லகேய்ல் (Abbé Nicolas de Lacaille) ஒரு வானியல் வல்லுநர். மேற்கே அமெரிக்கக் கண்டங்களுக்கும், கிழக்கே இந்தியாவுக்கும் சீனத்திற்கும் வணிகக் கப்பல்கள் அதிகம் பயணித்த காலத்தில், பூமத்திய ரேகைக்குத் தெற்கே தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிக் கடல் ஆகிய இடங்களுக்குக் கப்பல்வழி அறிவியல் பயணம் சென்றவர்களுள் ஒருவர்.
வடகோள நாடுகளில் தெரியாத வானத்தின் தென்பகுதி, தென்துருவம் ஆகியவற்றை எல்லாம் இந்தப் பயணங்களில் கண்டு, தொலைநோக்கி மூலமும், வானியல் கருவிகளின் வாயிலாகவும் பல குறிப்புகளை எடுத்து, தென்கோள வானத்தின் முதல் வரைபடம் வரைந்தவர் லகேய்ல். அதுவரை அறியப்படாத பதினான்கு ராசி மண்டலங்களை முதலில் கண்ட ஐரோப்பியர். அந்த ராசிகளுக்குப் பெயர் சூட்டியவர்.
சிம்மம், ரிஷபம், மேஷம் என்ற விலங்குகளின் பெயர் வைக்காமல், ஹோரோலோஜியம் (Horologium கடிகாரம்), அண்ட்லியா (Antlia காற்றடிக்கும் பம்பு), கேலம் (Caelum உளி), மைக்ரோஸ்கோபியம் (Microscopium நுண்நோக்கி), டெலெஸ்கோபியம் (Telescopium தொலைநோக்கி), ஆக்டன்ஸ் (Octans கோணமானி), பைக்ஸிஸ் (Pyxis திசைக்காட்டி) என்று அக்காலப் புதிய அறிவியல் கருவிகளின் பெயர்களைச் சூட்டினார்.
அம்மையப்பனைபோல் வானியலோடு ஒட்டிய கணிதத்தில் புலி லகேய்ல். கடற்பயணங்கள் முடிந்து பாரிஸ் நகரில் அவர் வாழ்ந்த கடைசிக் காலத்தில் லவோய்சியே இவருக்கு மாணவரானார். இவரிடம் கணிதத்தையும், சீராக நுண்ணியமாக அளவெடுக்கும் திறனையும் லவோய்சியே கற்றார்
மின்சார வரலாற்றில் ஏற்கெனவே நாம் பார்த்த மடாதிபதி அப்பே நொல்லே (Abbé Nollet) லவோய்சியேவின் மற்றொரு குரு. பரிசோதனை பிரியராகிய நொல்லே, சித்திரம்போல் பரிசோதனையும் கைப்பழக்கம் என்று தம் மாணவர்களுக்கு நன்று உணர்த்தியவர். அரசும் கிறிஸ்தவ மடமும் ஓர் அதிபதியைச் சூழ்ந்த மையங்களாயினும், அறிவியல் என்பது ஒரு குடியரசு (Science is a Republic) என்று கருதியவர் நொல்லே.
பெர்ணார்து து ஜுஸ்ஸூ (Bernard du Jussieu), மருத்துவம் துறந்து தாவர ஆராய்ச்சி மேற்கொண்டவர். செடிகளின் வரலாறு என்ற ஒரு நூலின் ஆசிரியர். பாரிஸ் நகர் தாவரவியல் தோட்டத்தில் செடி விரிவுரையாளர்.
புவியியல் எனும் புதிய துறையின் முக்கிய ஆய்வாளார் ழான் எதியேன் கெத்தார்த் (Jean Etienne Guettard). லவோய்சியே உதவியுடன் பிரெஞ்சு நாட்டின் முதல் புவியியல் வரைபடம் தொகுத்தவர்.
இவ்வாறு பல்வேறு துறை வல்லுநர்களிடமும் பாடம் பெற்ற லவோய்சியே, ஜிப்ஸம் (gypsum) எனும் உப்பின் குணங்களை ஆராய்ந்து, பிரெஞ்சு அறிவியல் மன்றத்தில் (French Academy of Sciences) ஓர் ஆய்வுரை சமர்ப்பித்தார். லண்டன் ராஜ்ஜிய சங்கத்தைப்போலவே அறிவியலை ஆராயவும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவும் உருவான பிரெஞ்சு அறிவியல் மன்றம், உறுப்பினர் சேர்ப்பதிலும், நிர்வாகத் திட்டத்திலும் மிகவும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டது. அரசாங்கத்தின் ஒரு துறையாகவே அம்மன்றம் விளங்கியது. உறுப்பினர்களுக்கு அரசாங்கம் சம்பளம் தந்தது.
பாரிஸ் நகரில் தெரு விளக்குகள் நிறுவ 1765இல் ஒரு சிறப்பான திட்டம் தீட்டியதற்கு லவோய்சியேவிற்கு ஒரு பதக்கம் வழங்கியது இந்த மன்றம். 1772இல் உறுப்பினராக அவரைச் சேர்த்துக்கொண்டது.
1769இல் ஃபார்ம் ஜெனரேல் (Ferme Generale) எனும் நிலவரி கம்பெனியில் பல பங்குகளை வாங்கினார் லவோய்சியே. இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி, தான் போரில் வென்ற நிலங்களில் ஜமீன்தார்களை நியமித்து மக்களிடம் வரி சேர்க்கும் பணியை விதித்து, அதில் ஒரு பங்கை, தான் பெற்றுக்கொண்டது. அதேபோல விவசாயிகளிடம் வரி வசூலிக்க, பிரெஞ்சு அரசால் நியமிக்கப்பட்ட கம்பெனிதான் ஃபார்ம் ஜெனரேல்.
இரண்டு வருடங்களுக்குப் பின் மரீ பால்ஸ் (Marie Paulze) என்ற பதின்மூன்று வயது பெண்ணை இருபத்தி எட்டு வயதான லவோய்சியே திருமணம் செய்துகொண்டார். நிலவரி கம்பெனியின் ஒரு மூத்த பங்காளியின் மகள் இந்த மரீ. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்ததால் பெரிய வரதட்சணையோடு மணக்கோலம் புகுந்தாள் மரீ.
விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், குறிப்பாகப் புகையிலையின் தரத்தை மேம்படுத்தவும், புகையிலையில் ஏகாதிபத்தியம் செலுத்திய இந்த நிறுவனம், லவோய்சியேவை ஆராயக் கட்டளையிட்டது. சாம்பல் மற்றும் நீருடன் கலப்படம் செய்யப்பட்ட புகையிலையின் வளர்ந்து வரும் கறுப்புச் சந்தையின் காரணமாக ஃபார்ம் ஜெனரேலுக்கு வருவாய் குறையத் தொடங்கியருந்த காலம் அது. புகையிலையுடன் சாம்பல் கலக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கும் ஆராய்ச்சியில் இறங்கினார் லாவோசியர். சிறிதளவு நீரும் சாம்பலும் சேர்ப்பது புகையிலையின் சுவையை மேம்படுத்துவதை லாவோசியர் கவனித்தார். அதிக நீரோ சாம்பலோ சேர்த்தால் அதன் தரம் குறைந்து வருமானமும் குறைகிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார்.
லவோய்சியேவிற்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவர் மனைவி மரீ ஆங்கிலம் அறிந்தவள். இங்கிலாந்தில் ஜோசப் பிரீஸ்ட்லீ காற்றை ஆராய்ந்து வெளியிட்ட கட்டுரைகளை மரீ பிரெஞ்சில் மொழிமாற்றினார்.
காற்றுப் பரிசோதனைகள்
நுண்ணியமாக தூரத்தையும் காலத்தையும் அளந்தே வானியலில் கிரகங்களின் பாதைகளையும், கிரகணங்கள் வரும் நேரங்களையும், கடலில் போகும் கப்பல்களின் வேகத்தையும், சேரும் இடத்தையும் கணிக்க முடியும் என்பதைக் கணிதக் குரு லகேயிலிடம் கற்றவர் லவோய்சியே. அந்த அளபெடை நுண்ணியம், காற்றின் கனத்தைக்கூட அளக்கத் தூண்டியது. அரசாங்கப் பரிசோதனை கூடத்தில், மிக நுண்ணிய கனத்தை அளக்கும் தராசுகளை வாங்கி வைத்தார்.
தீவிரமான ரசாயனப் பரிசோதனைகளில் இறங்கினார். சல்ஃபர் (கந்தகம்) தூளைச் சுடவைத்தார். அது அமிலமாக மாறியது. ஹெனிக் பிராண்டால் புகழ்பெற்ற பாஸ்ஃபரஸையும் சுடவைத்தார். அதுவும் அமிலமாக மாறியது.
சுடுவதற்கு முன்னும் பின்னும் கந்தகத்தின் கனத்தையும், பாஸ்ஃபரஸ் கனத்தையும் அளந்தார். சுட்டபின் அமிலம் உண்டானது. அமிலத்தின் கனமோ அதிகமாயிருந்தது. இது என்ன மாயை? ஃப்ளாஜிஸ்டான் தத்துவம் கோலோச்சிய காலம் இது. சுடுவதால் அல்லது எரிவதால் ஃப்லாஜிஸ்டான் தீர்ந்துபோனால் கந்தகத்தின் கனம் குறைய வேண்டுமே? எப்படி அதிகரிக்க முடியும்?
ஒருவேளை ஃப்லாஜிஸ்டான் என்பதே தவறான கருத்தோ என்ற சந்தேகம் பிறந்தது.
கந்தகம், பாஸ்ஃபரஸ் ஆகியவற்றின் கனத்தை மட்டுமல்ல, அந்த ஜாடிகளில் இருந்த காற்றின் கனத்தையும் லவோய்சியே அளந்தார். நிக்கொலாஸ் ல கேயிலின் கணிதத் துல்லியத்தையும், நொல்லேவின் பரிசோதனை அக்கறையின் தாக்கத்தையும் லவோய்சியேவின் இந்த ஆராய்ச்சிகளில் காணலாம். கந்தகமும் பாஸ்ஃபரஸும் எத்தனை கனம் அதிகரித்து அமிலமானதோ, அந்தக் காற்றும் அதே சமமான கனத்தை இழந்தது என்று தெரிந்தது. இந்தக் கனம் ஜாடியில் உள்ள காற்றில் ஐந்தில் ஒரு பங்கு கன அளவு. மிகச்சிறிய கன அதிகம். நுண்ணியமாக அளந்தால் மட்டுமே தெரியும். சைமன் பியெர் லாப்லாஸ் (Simon Pierre Laplace) என்ற கணித மேதை லவோய்சியேவுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரீஸ்ட்லீ பயன்படுத்திய கண்ணாடி ஜாடிகளும், காற்றடைப்புத் தொட்டிகளும், எரிக்கண்ணாடியும் லவோய்சியேவுக்கு உதவின. ஆனால் பிரீஸ்ட்லீயைவிடக் கனத்தை அளப்பதில், அதுவும் எவ்வளவு சின்ன எடையாயினும் சரியாக அளப்பதில் லவோய்சியே அக்கறை காட்டினார்.
ப்ரீஸ்ட்லீ செய்துகாட்டிய பாதரச (Mercury) பரிசோதனையையும் லவோய்சியே செய்தார். பாதரசத்தைச் சுடவைத்தால் அமிலமாக மாறவில்லை. பாதரச உப்பாக (கேல்க்ஸ்) மாறியது. ஆனால் கனம் சற்றே கூடியது. அதிகரித்த கனமும் ஜாடியிலுள்ள காற்றின் கனத்தில் ஐந்தில் ஒரு பாகம்தான்.
மேலும் ஓர் ஆச்சரியம். அந்த உப்பைச் சுடவைத்தால் மீண்டும் பாதரசமும் அந்தக் காற்றும் பிரிந்தன. பிரிந்த காற்றைக் குழாய் மூலம் வேறு ஜாடியில் ஏற்றி இது சாதாரண காற்றைவிட வித்தியாசமானது என்று உணர்ந்தார். ஜாடியில் இருந்த இயற்கைக் காற்றில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் பாதரசத்தோடு இணைந்தது அல்லவா? அந்த ஐந்தில் ஒரு பங்கு மட்டும் கேல்க்ஸைச்சுட வைத்தால் வெளியானது. உலோகம் கேல்க்ஸாவதும், கேல்க்ஸ் மீண்டும் உலோகமாவதும் ரசாயன மாற்றங்கள்.
அவற்றின் குணங்கள் வெவ்வேறு, ஆனால் மொத்த கனம் என்று பார்த்தால் உலோகத்தின் கனமும் இணைந்த காற்றின் கனமும் சேர்ந்து கேல்க்ஸின் கனம் என்று தெரிந்தது. ரசாயன மாற்றங்களால் பொருள்கள் புதிதாக உண்டாவதில்லை, அழிவதும் இல்லை. உருவமும் குணமும் மட்டுமே மாறுகின்றன என்று கருதினார்.
இதற்குக் கனம் மாறா விதி (Law of conservation of Mass) என்று பெயர் சூட்டினார். பின்தொடர்ந்த பல்வேறு ஆய்வாளர்கள் இதைப் பற்பல பரிசோதனைகள் செய்து, இந்த விதியை உறுதிசெய்து ஏற்றுக்கொண்டு இதற்கு லவோய்சியே விதி (Lavoisier’s Law) என்றே பெயர்வைத்தனர். வயிற்றெரிச்சலா, பிற்காலத்தில் நெப்போலியனுடன் மோதிய கோபமா எனத் தெரியாது. ஆங்கிலத்தில் மட்டும் லவோய்சியே பெயரில்லாமல் அநாமதேய பெயரே நிலைக்கிறது.
தகரம், ஈயம் ஆகியவற்றை மூடிய கண்ணாடி ஜாடியில் சுட்டு, அவையும் தலா ஐந்திலொரு பங்கு காற்றைச் சேர்த்து கேல்க்ஸ் ஆக மாறியதைக் கவனித்தார். மேலும் இந்த உலோக கேல்க்ஸை நிலக்கரியோடு எரித்தால் வேறு ஒரு வாயு உண்டானது. அது பதுங்கிய காற்று என்றும் உறுதி செய்தார். ஜோசப் பிளாக்கின் பரிசோதனைகளில் உருவாகிய அதே பதுங்கிய காற்று. இக்காலகட்டத்தில்தான் ஷெல்பர்ன் துரையுடன் பிரீஸ்ட்லீ பாரிஸ் நகரம் வந்து, லவோய்சியேவுடன் கலந்துரையாடி, சில பரிசோதனைகளைச் செய்துபார்த்தார்.
பிரீஸ்ட்லீ மீண்டும் லண்டன் திரும்பிய பின்னர், லவோய்சியே செய்த சோதனைகளில் இந்தக் காற்றை மட்டும் ஒரு ஜாடியில் அடைத்துத் தீபத்தை ஏற்றினாலோ, எலியை அடைத்து வைத்தாலோ தீபச் சுடர் அதிகமானது. எலி சுறுசுறுப்பானது. தானே சுவாசித்துப் பார்த்தபின் தன்னுடலிலும் உற்சாகம் பெருகியதை உணர்ந்தார். அதனால் பதுங்கிய காற்றுபோல் இதுவும் ஒரு புதுவகை காற்று என்று அறிந்து, இதற்கு உயிரூட்டக் காற்று (Vital Air) என்று பெயர் சூட்டினார்.
இவை கட்டுரைகளாக வெளிவர, இதே பரிசோதனைகளை இங்கிலாந்தில் பிரீஸ்ட்லீ செய்துபார்த்து, செடிகள் உருவாக்கும் இந்தக் காற்றும், கேல்க்ஸ் எரிந்தால் வரும் காற்றும் ஒன்றே என்று உறுதிசெய்தார். பிரீஸ்ட்லி இதற்கு ஃப்லாஜிஸ்டானிழந்த காற்று (Dephlogisticated air) என்று பெயர் சூட்டியதை நாம் சென்ற அத்தியாயத்தில் கண்டோம்.
ஆக்ஸிஜன்
ஆனால் இப்பொழுது அந்துவான் லவோய்சியேவின் பழைய சந்தேகம் உறுதியானது. ஃப்லாஜிஸ்டான் கொள்கை தவறு என்று முடிவுக்கு வந்தார்.
கந்தகம் சுடுவதால் அமிலம் பிறப்பதால், இதற்கு ஆக்ஸிஜன் கொள்கை (oxygen principle) என்ற புதிய தத்துவத்தை முன்வைத்தார். அமிலம் (acid) என்பதற்கு ஆக்ஸி (oxy) என்பது கிரேக்க மொழியில் சொல். ஜென் (gen) என்பது பிறப்பு. உயிரூட்டக் காற்று (Vital air) அமிலத்தை உருவாக்குவதால், அதற்கு ஆக்ஸிஜன் (oxygen) என்று பெயர் சூட்டினார்.
நுண்ணியமாகக் கனத்தை அளந்ததாலும் ஃப்ளாஜிஸ்டானைத் துறக்கத் துணிந்ததாலும் லவோசியவால் இயற்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தது. கண்ணால் வேற்றுமை காண இயலாத காற்றை, கனத்தாலும் குணத்தாலும் வேற்றுமை காண இயன்றது. கசடற கற்பது ஓர் அறம். கற்றதே கசடு என அறிந்தால், கசடு அகற்றி, சாலப் புரிந்துகொள்ளலும் ஓர் அறம். ஒளியை நிறத்தால் ஐசக் நியூட்டன் பகுத்து அறிந்ததுபோல், விண்வெளியை கெலீலியோ தொலைநோக்கியால் பகுத்து அறிந்ததுபோல், செய்யுளின் யாப்பை தொல்காப்பியர் பகுத்து அறிந்ததுபோல், பிரபஞ்சப் பூதங்களை லவோய்சியே கனத்தாலும் குணத்தாலும் பகுத்து அறிந்தார்.
இங்கிலாந்தில் இதற்கெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் ஹென்றி கேவண்டிஷ் (Henry Cavendish) என்பவர் பற்றி எரியும் காற்று (inflammable air இன்ஃப்லாமபிள் யேர்) என்ற காற்றைக் கண்டுபிடித்திருந்தார் என்று பார்த்தோம். இந்தப் பற்றி எரியும் காற்று தூய்மையான ஃப்லாஜிஸ்டான் என்று கேவண்டிஷ் கருதினார். லவோய்சியேவின் வழியில் மீண்டும் இதோடு பரிசோதனை செய்தபோது, பற்றி எறியும் காற்றை ஒரு மூடிய கண்ணாடி ஜாடியில் பற்றவைத்தால் ஜாடியின் உள்ளே அதற்கு முன்னில்லாத சில தண்ணீர்த் துளிகளை உண்டாக்கியதைப் பார்த்தார். அவருக்கு இது பேரதிர்ச்சி.
கேவண்டிஷ் பரிசோதனையை லவோய்சியே செய்தார். கேவண்டிஷ் பார்த்ததுபோல் லவோய்சியேவுக்கும் நீர்த்துளிகள் உண்டாயின. ஒரு காற்று எரிந்து எப்படித் தண்ணீராக முடியும்?
ஒரு வேதிப்பொருளைச் சுட்டாலோ, எரித்தாலோ அது வேறு ஒரு வேதிப்பொருளாக மாறுகிறது. எரிதல் என்பதே ஆக்ஸிஜன் கலத்தல். உலோகங்களோடு ஆக்ஸிஜன் கலந்தால் ஒரு வகை கேல்க்ஸ் அல்லது அமிலம் கிடைக்கிறது. ஆனால் பற்றி எரியும் காற்றுடன் ஆக்ஸிஜன் கலந்தால் நீர் கிடைக்கிறது. அப்பொழுது நீரும் அடிப்படை பூதம் இல்லை, நெருப்பும் அடிப்படை பூதம் இல்லை. ஒரு சில வேதிப்பொருட்களோடு ஆக்ஸிஜன் கலப்பதால் நெருப்பு உண்டாகிறது. பற்றி எரியும் காற்றுடன் ஆக்ஸிஜன் கலந்தால் நீர் உண்டாகிறது. அதனால் பற்றி எரியும் காற்றுக்கு ஹைட்ரோஜென் (hydrogen நீரைப் பிறப்பிக்கும் காற்று) என்று பெயர் வைத்தார் லவோய்சியே. நீரின் கிரேக்கச் சொல் ஹைட்ரோ(hydro).
காற்று ஓர் அடிப்படை பூதம், அதாவது அடிப்படை வேதிப்பொருள் அல்ல, பலவிதக் காற்றுகளின் கலவை என்று ஜோசப் பிளாக், ஜோசப் பிரீஸ்ட்லீ, ஹென்றி கேவண்டிஷ் ஆகியோர் லவோய்சியேவிற்கு முன் கண்டுபிடித்தார்கள். நீரும் நெருப்பும் பூதங்கள் அல்ல என்று லவோய்சியே இப்பொழுது முன்மொழிந்தார். ஆக்ஸிஜன், ஹைட்ரோஜென் இவைதான் அடிப்படை பூதங்கள். இவற்றுக்குக் கிரேக்க மொழியிலிருந்து எலிமென்ட் (Element தனிமம்) என்று பெயர் சூட்டி, எலிமென்ட் கலந்து உண்டாகும் பொருட்களுக்கு காம்பௌண்ட் (compound சேர்மம்) என்று பெயரிடவும் லவோய்சியே துணிந்தார்.
மனிதர்களும், மற்ற விலங்குகளும் மூச்சில் வெளியிடும் காற்றில் பதுங்கிய காற்று (fixed air) இருப்பதை உறுதி செய்தார். நிலக்கரி எரித்தால் அதிலிருந்து இதே பதுங்கிய காற்று கிடைக்கிறது என்று நிரூபித்தார். நிலக்கரிக்குப் பிரெஞ்சு சொல் சார்போன்(charbon). ஆங்கிலத்தில் இது கார்பன் (carbon) என்று மறுவியது. ஆக்ஸிஜனுடன் கரி எரிந்து பதுங்கிய காற்று உண்டாகியதால் அதற்கு கார்பன் ஆக்ஸைட் என்றும், பின்னர் கார்பன் டைஆக்ஸைட் (carbon dioxide) என்றும் பெயர் வந்தது. லவோய்சியேவின் பரிசோதனைகளையும் கருவிகளையும் அவர் மனைவி மரீ மிகச்சீரான ஓவியங்களாகப் பதிவு செய்தார். லவோய்சியே பிரெஞ்சு மொழியில் எழுதிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
சம்பவாமி யுகே யுகே
பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிய, ஆல்கெமி (alchemy) என்று அரபு மக்களாலும் ஐரோப்பியர்களாலும் நம்பப்பட்டு வந்த தத்துவம் சுக்குநூறானது. அதனிடத்தில் கெமிஸ்ட்ரி (chemistry) என்ற புது அறிவியல் பிறந்தது. ஆல்கெமி யுகம் அஸ்தமனமாகி, கெமிஸ்ட்ரி யுகம் உதித்தது. மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும், வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும், வேறுவேறு தன்மையாகி நாம் நினைக்க வல்லராய், அன்று ஞானமுள் புகுந்ததென்கொலோ லவோய்சியே.
ஃப்ளாஜிஸ்டானை கைவிட்டு, புது வேதிகளையும், புதிய வேதியியலின் கொள்கைகளையும் விவரிக்க லவோய்சியே ஒரு புத்தகம் இயற்றினார்.
அறிவியல் என்பது:
- இயற்கை விஷயங்கள்
- அதை உணர்த்தும் கருத்துக்கள்
- அக்கருத்துக்களைச் சொல்லும் வார்த்தைகள், வாக்கியங்கள்
– இப்படித் தொடங்குகிறது லவோய்சியே எழுதிய கெமிஸ்ட்ரி புத்தகம்.
லவோய்சியேவின் ஒரு குருவான அப்பே காண்டிலாக் (Abbe Condillac) இயற்றிய தர்க்கப் புத்தகத்தில் (System of Logic), ‘நாம் சொற்களாலே சிந்திக்கிறோம். அதனால் மொழி பகுத்தறிதலின் கருவி. பல சிந்தனைகள், தகவல்கள், கருத்துக்களை இணைத்துச் சித்தாந்தத்தை உருவாக்குகிறோம். சீராகச் சொற்களை அணிவகுத்துச் சித்தாந்தத்தை மொழிகிறோம். இவ்வாறு மொழிதலில் கணித முறையான அல்ஜீப்ரா ஒரு மொழி மட்டுமல்ல, பகுத்தறியும் கருவி’ என்று கூறியுள்ளார்.
இதை எடுத்துக்காட்டி, வேதிப்பொருட்கள் எப்படிக் கலக்கின்றன என்பதை அறியக் கணிதக் குறிப்பு தேவை என்று லவோய்சியே குறிப்பிட்டார். பாதரசமும் ஆக்ஸிஜனும் கலந்தால் பாதரச உப்பு, ஆக்ஸிஜனும் ஹைட்ரோஜோனும் கலந்தால் தண்ணீர் என்பதை
பாதரசம் + ஆக்ஸிஜன் = பாதரச ஆக்ஸைட்
ஹைட்ரோஜன் + ஆக்ஸிஜன் = தண்ணீர்
பாதரச கேல்க்ஸ் + சார்போன் = சார்போன் ஆக்ஸைட் + பாதரசம்
கந்தகம் + காற்று = விட்ரியால்
அதாவது, கந்தகம் + ஆக்ஸிஜன் + ஹைட்ரோஜன் = கந்தக அமிலம் (சல்ஃபுரிக் ஆசிட்)
என்று கணிதச் சமன்பாடுகளை கெமிஸ்ட்ரிக்குள் (chemical equations) புகுத்தினார்.
பல்வேறு பொருட்களைச் சுட்டும், காய்ச்சியும், வடிகட்டியும், அரைத்தும், மின்சாரத்தால் சோதித்தும் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து, இந்தப் புதிய சித்தாந்தத்தின் அடிப்படையில், நன்கு தெரிந்த வேதிப்பொருட்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டும் முயற்சி லவோய்சியேவின் தலைமையில் தொடர்ந்தது. இதோ, இங்கே ஓர் உதாரண பட்டியல்.
பழைய அல்கெமி பெயர் | புதிய கெமிஸ்ட்ரி பெயர் |
சுண்ணாம்பு பால் | கேல்சியம் ஹைட்ராக்ஸைட் |
மெக்னீசிய பால் | மெக்னீசியம் ஹைட்ராக்ஸைட் |
பேகிங் சோடா | சோடியம் பைகார்பனேட் |
வாஷிங் சோடா | சோடியம் கார்பனேட் |
விட்ரியால் | சல்ஃபூரிக் அமிலம் |
வீனஸ் விட்ரியால் | காப்பர் சல்ஃபேட் |
ஆண்டிமனி வெண்ணெய் | ஆண்டிமனி டிரைகுளோரைட் |
1789இல் கெமிஸ்ட்ரியின் எலிமென்ட் சித்தாந்தம் (Elementary Treatise on Chemistry) என்ற புத்தகத்தில் இந்தக் கருத்துக்களைக் கூறி, புதிய சித்தாந்தத்தை முன்வைத்தார்.
இதனால் ‘வேதியியலின் தந்தை’ (Father of Chemistry) என்ற பட்டம் இவருக்குக் கிடைத்தது. மற்ற விஞ்ஞானிகள் எல்லாம் லவோய்சியேவின் தத்துவங்களின் உண்மையை ஒவ்வொருவராக ஏற்றுக்கொண்டனர். கேவண்டிஷ் சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சம் ஏற்றுக்கொண்டார். ஆனால் கடைசிவரை ஜோசஃப் ப்ரீஸ்ட்லி புதிய கெமிஸ்ட்ரியை ஏற்கவே இல்லை. ஃப்ளாஜிஸ்டானை விட்டுக்கொடுக்க அவர் மனம் இடம் தரவில்லை. ஏற்றுக்கொண்டிருந்தால் அவருக்கு வேதியியலின் பெரியப்பா பட்டமாவது கிடைத்திருக்கும்.
இதற்கிடையே 1775இல் தரமான வெடிமருந்து (gunpowder) தயாரிக்கப் பிரஞ்சு அரசு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, லவோய்சியேவைப் பணியமர்த்தியது. ஓரிரு ஆண்டுகளில் தன் வேதியியல் திறமையால் வெடிமருந்து தயாரிக்க மிகச்சிறப்பான தொழில்முறைகளைக் கண்டுபிடித்தார். இதன் தயாரிப்பில் பிரஞ்சு அரசு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் செல்வம் ஈட்டியது. 1776இல் ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள் இங்கிலாந்திலிருந்து விடுதலை பெறச் சுதந்திரப் போரை ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் தொடங்கின. 1750களில் இங்கிலாந்து சார்பாக பிரான்சுக்கு எதிராகப் போரில் பணிந்தவர் வாஷிங்டன். அவரது ஆலோசகரான பெஞ்சமின் பிராங்க்ளின், கடனும் ராணுவ உதவியும் வெடிமருந்தும் கேட்டு பாரிசுக்கு வந்தார்.
மின்னல், மின்சாரப் பரிசோதனைகளால் புகழ்பெற்ற பிராங்க்ளினுக்கு அறிவியல் ரீதியாக நல்ல வரவேற்பும், அதன் தொடர்ச்சியாகக் கேட்ட உதவியும் கிடைத்தன. இங்கிலாந்தைத் தோற்கடிக்கக் கப்பல் கப்பலாக வெடிமருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியானது. லவோய்சியேவின் மாணவர் துபாந்த் (E.I. Dupont) இப்படி ஒரு வெடிமருந்து தொழிற்சாலையின் அதிபதியானார். அவர் பின்னால் அமெரிக்கா சென்று தொடங்கிய துபாந்த் கம்பெனி இன்றும் உலகின் மிகப்பெரிய ரசாயன கம்பெனிகளில் ஒன்று.
1778இல் பிரெஞ்சு நாட்டின் விவசாயத்தை அறிவியல் ஆராய்ச்சிமூலம் முன்னேற்றலாம் என்று லவோய்சியே ஆலோசனை கூற, அதற்கும் ஒரு குழு உண்டாக்கி, லவோய்சியே பத்தாண்டுகாலம் வயலில் இறங்கி பற்பல பரிசோதனைகள் செய்தார். ஆனால், தகாத வரிச்சுமை விவசாயத்தில் பெரு விளைச்சலுக்குப் பெரும் தடை என்றும் பொருளாதார ரீதியாக அரசுக்குப் பரிந்துரைத்தார். வரி முறையை மாற்றும் வரை, தான் எடுத்துக்கூறிய புதிய முறைகளைப் பரிசோதிக்கவே விவசாயிகள் தயங்குவார்கள் என்றும் கூறினார். ஆனால் அரசாங்கம் வரிமுறைகளை மாற்றத் தயாராக இல்லை.
புதிய வேதியியல் சித்தாந்த நூலை லவோய்சியே அச்சிட்ட 1789இல் பிரஞ்சு புரட்சி வெடித்தது. குடியரசு ஆட்சி அமைத்தது. 1791இல் மன்னர் குடும்பம், பெருஞ்செல்வர் குடும்பங்கள், ஜமீந்தார் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் தலை வெட்டப்பட்டு உயிரிழந்தனர்.
ஜோசஃப் ப்ரீஸ்ட்லியின் அரசியல் கருத்துக்களாலும், மத கருத்துக்களாலும் சர்ச்சை உண்டாகி அவருடைய வீடு, ஆராய்ச்சிக்கூடம் ஆகியவை கொளுத்தப்பட்டு இங்கிலாந்தை விட்டே அவர் ஓடினார் என்று பார்த்தோம்.
லவோய்சியே அரசாங்கப் பதவியில் சேர்ந்து நிலவரித் துறையில் பங்காளி ஆகியதால் அவரும் ஏழைகளின் எதிரி என்று பழி சுமத்தப்பட்டுப் புரட்சி அரசின் நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்பட்டார். தான் விவசாயிகளுக்காகச் செய்த அறிவியல் பணியாலும், எந்த ஊழலும் செய்யாததாலும் தன் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தவறாக நினைத்தார்.
புகையிலையில் நீரைக் கலப்படம் செய்து நாட்டிற்குத் துரோகம் செய்து ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சினார் என்றெல்லாம் அவர் மேல் பழி சுமத்தப்பட்டது. நிலவரி கம்பெனியின் மற்ற இருபத்தேழு பங்காளிகளுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு 1794இல் தலை வெட்டப்பட்டார்.
மகத்தான அறிவியல் சாதனைகள் படைத்த விஞ்ஞானி என்பதால் லவோய்சியேவை விடுவிக்க வேண்டும், புதிய குடியரசுக்கு அவர் சிறந்த அறிவியல் பணி செய்வார் என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது. குடியரசுக்குப் பண்டிதர்களோ விஞ்ஞானிகளோ தேவையில்லை என்று தீர்ப்பு சொல்லி அவருக்கு நீதிபதி காபினால் (Justice Coffinal) மரண தண்டனை விதித்தர். அவர் மனைவி மர, உதவியாளர் லாப்லாசு ஆகியோர் உயிர் தப்பியதே அதிசயம்.
மூன்று மாதங்களுக்குப் பின் குடியரசின் கொடுமைகளை எதிர்த்து வெடித்த மற்றொரு புரட்சியில் காபினால் தன் தலையை இழந்தார். அடுத்து பதவியேற்ற குடியரசு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் லவோய்சியே நிரபராதி, அவரைக் கொன்றது பிழை என்று அவர் மனைவியிடம் ஒரு சீட்டுக் கொடுத்தது. மத வெறியால் பிரீஸ்ட்லீ நாடிழந்தார். ஜனநாயக வெறியால் லவோய்சியே உயிரிழந்தார். உயிர் காற்றாம் ஆக்ஸிஜனை உலகு உணர வைத்த இவ்விருவரின் விதியை என்ன சொல்ல.
‘ஆயிரம் ஆண்டு ஆனாலும் இப்படி ஓர் அறிவாளி பிரான்சு நாடு பெற்றெடுக்குமா என்று தெரியாது. ஒரு கணத்தில் அவன் தலை உருண்டது’ என்று அவரது நண்பரும், கணித மேதையுமான ஜோசப் லக்ராஞ்சு (Joseph Lagrange) வருந்தி எழுதினார்.
0
________
உதவிய வலைத்தளங்கள், புத்தகங்கள், காணொளித்தொடர்கள்
– Vital Forces – Graeme Hunter
– Traite elementaire de chimie (Elementary Treatise of Chemistry) – Antoine Lavoisier
– பல்வேறு இணையதளங்கள்
– விக்கிப்பீடியா