கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது செவிவழி வழக்கு. வக்கீல் கோட்டு சூட்டைக் கழற்றி எறிந்துவிட்டு, காதி வேட்டி அணிந்த காந்தி கதை நம் பாரதத் தேசத்தின் சமீப வரலாறு. விவசாயமும் நெசவும் மிகத் தொன்மையான நெடு நீளச் சரித்திரம் கொண்ட புனிதத் தொழில்கள். நாராயணனாம் வரதராஜ பெருமாளுக்குப் பட்டுப் பீதாம்பரத் துணியும், பரமசிவனாம் ஏகாம்பரநாதனுக்குப் பஞ்சுத் துணியும் நெய்வது எங்கள் பரம்பரை என்று காஞ்சிபுரத்து நெசவாளர்கள் இன்றளவும் தங்கள் பரம்பரைத் தொழிலைப் பெருமிதம் பேசுவர்.
பஞ்சுப் பட்டு
சீனத்தின் பெருமை பட்டு. பாரதத்தின் பெருமை பஞ்சு. சீன தேசத்தில் கி.மு. 3600இல் பட்டாடையில் புதைக்கப்பட்ட ஒரு குழந்தையின் சடலம் கிடைத்ததாம். கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பட்டுத் துணிகளைப் பற்றிச் சீனப் புத்தகங்கள் கூறுகின்றன. பட்டு, பணக்காரர்களின் ஆடை. ஒரு காலத்தில் சீனாவின் ராஜக் குடும்பங்கள் மட்டுமே பட்டுத்துணி அணியலாம் என்று சட்டம் இருந்தது. பட்டுத் தயாரிப்பு அதிகரிக்க, பல செல்வந்தர்கள் பட்டாடை அணியத் தொடங்கினர். பல்வேறு நாடுகளுக்குப் பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. பட்டுத் தயாரிப்பும் நெசவும் சில நூற்றாண்டுகள் ரகசியமாக விளங்கின.
ஒருசில பட்டாம்பூச்சி இனங்களின் புழுக்கள் ஒரு பருவத்தில் (larva) தங்கள் உடலைச் சுற்றிக் கூடு (cocoon) கட்டும். குறிப்பாக மல்பரி (mulberry) இலைகளை உண்ணும் பூச்சிகளே பட்டுநூலின் மூலம். சிலந்தி வலை பின்னுவதுபோல், தேனீ கூடு கட்டுவதுபோல் இதற்காகப் பட்டுப் புழுவின் உடலில் கூடு கட்டும் நூலை உருவாக்கத் தனி அங்கமே உள்ளது. முழுக் கூடு கட்டியபின், அந்தக் கூட்டோடு இந்தப் புழுக்களை வெந்நீரில் போட்டு, கூட்டில் உள்ள நூலை மட்டும் பிரித்து எடுப்பர். அதைப் பதனிட்டு, பட்டுத் தறிகளில் பட்டாடைகள் நெய்தனர். இந்த ரகசியம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கும் பரவியது. ஆனால் சீன தேசத்தில் வளர்ந்து, சீன மல்பெரி இலைகளைத் தின்று கொழுத்துப் பூச்சிகள் செய்யும் பட்டுக்கு இணையாக மென்மையும் மினுமினுப்பும் மற்ற நாட்டுப் பட்டுகளுக்கு இல்லை.
1924இல் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய மிகத்தொன்மையான புதைந்த நகரங்களைச் சிந்து நதிக் கரையில் ஜான் மார்ஷல் (John Marshall), ராக்கல்தாஸ் பானர்ஜி (Rakhal Das Banerji) ஆகிய தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். கி.மு. 2000இல் செய்யப்பட்ட களிமண் சிலைகளில் ஒன்று, கண்மூடி தியானம் செய்பவர்போல் இருக்கும் சிலை. அவர் மேலாடை தரித்துள்ளார். இது பருத்தி ஆடை என்பது ஆய்வாளர் கருத்து. பஞ்சுத்துணிகள் அத்தனை வருடம் அழுகாமல் நிலைப்பதில்லை. பழக்கவழக்கத்தில் சில ஆண்டுகளிலேயே நைந்துவிடும். ஆனால் சிந்துவெளி நகரங்களில் சில மணிமாலைகளைக் கோர்த்த பஞ்சு நூல்கள் கிடைத்துள்ளன.
சிந்து சமவெளி நகரங்களிலிருந்து சுமேரியாவிற்கும் (Sumeria), எகிப்திற்கும் (Egypt) பருத்தி ஆடைகள் கப்பல் வழியாகச் சென்றிருக்கலாம்.
பனிப் பிரதேசங்களில் பலவகை மிருகத் தோல்களாலான ஆடைகள் புழக்கத்தில் இருந்தன. மர உரியும், இலையில் செய்த ஆடைகளும் வரலாற்றுக் காலத்திலும் புழக்கமாயிருந்தன. அரண்மனையில் பட்டாடை பூண்டிருந்தாலும், வனவாசம் சென்ற இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் மரவுரி அணிந்தனர். அக்காலத்திலும் பிற்காலத்திலும் காட்டில் வாழ்ந்த பல முனிவரும் மரவுரி தரித்தனர்.
கிருஷ்ணஜீனம் எனும் கருப்பு மான் இந்தியாவெங்கும் பரவியுள்ளது. கிருஷ்ணஜீன மான் தோலால் செய்யப்பட்ட ஒரு வித ஆடை நான்கு வேதங்களின் தகவல். பின்னர் மானின் தோல் யஞ்னோபவிதம் எனும் முப்புரி நூல் செய்யப் பிரதானமாகப் பயன்பட்டது. தோலாடை உடுத்தியவர்கள் பஞ்சாடைக்கும், பட்டாடைக்கும் மாறிய வரலாறு எந்தப் புத்தகத்திலும் இல்லை. எனினும், அது ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்ததல்ல.
வரலாற்றுக் காலத்திற்கு முன்பு கற்காலத்திலேயே ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எலும்பாலும் கல்லாலும் செய்யப்பட்ட ஊசிகள் குகைகளில் கிடைக்கின்றன. தோலைத் தைத்து ஆடையாகத் தரித்து வாழ்ந்தமைக்கு இதுவே சாட்சி.
பதினோராயிரம் ஆண்டுகளுக்குமுன் ருசியாவின் (Russia) கிழக்குப் பனிப்பாலை பகுதியிலிருந்து, கடலே பனிக்கட்டியாய் உறைந்து, வட அமெரிக்கக் கண்டத்தின் அலாஸ்காவிற்கு (Alaska) ஒரு பனிப்பாலம் அமைந்திருந்தது. அதன் வழியாக அங்கே குடிபுகுந்து ஓராயிரம் ஆண்டுகளில் அர்ஜெண்டினாவின் தென் முனை வரை பரவியவரே செவ்விந்தியர் (Red Indians) என்மனார் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.
கம்பளி லினென்
செம்மறி ஆடுகளின் மயிரிலிருந்து கம்பளித் (wool) துணிகளைச் செய்தனர். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் கம்பளித் துணிகள் முதன் முதலில் கிடைப்பதாகத் தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் பலவித ஆடுகளின் ரோமத்திலிருந்தும், ஒட்டக ரோமத்திலும், முயலின் ரோமத்திலும்கூடக் கம்பளித் துணிகள் தயாரிக்கப்பட்டன.
கி.மு. 6000 முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் செம்மறி ஆடுகள் வளர்த்து, ஆட்டு ரோமம் எடுத்து, பதனிட்டு, நூலாக்கி, ஆடைகள் செய்யப்பட்டன. தோலைவிடக் கம்பளித் துணிகள் அணிவதும் தயாரிப்பதும் மிக வசதியாக இருந்ததால் மிகப் பரவலாகக் கம்பளித் துணிகள் பரவின.
இயேசு கிறிஸ்து ஓர் ஆட்டைக் கையில் ஏந்தி ‘நான் நல்ல மேய்ப்பாளன்’ (Good Shepherd) என்ற வாக்கியத்தோடு காட்சியளிக்கும் ஓவியங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் மேலவைத் தலைவர் நாற்காலியில், கம்பளி நிரம்பிய பை மேல் இன்றும் அமர்கிறார். காந்தியின் இராட்டினப் படத்துக்குச் சமம் இது.
பண்டைய எகிப்து, சுமேரியா, சீனம், பாரசீகத் தேசங்களில் இயற்கையாகப் பருத்தி விளைந்ததில்லை. அந்நாடுகளில் லினென் (Linen) எனும் ஒருவகை சணல் நூலால் நெய்த ஆடைகளே பரவல். ஃப்ளாக்ஸ் (Flax) எனும் செடியின் நாரை எடுத்து, நீளமான நாரைச் சின்ன நார்களிலிருந்து பிரித்துத் தேர்ந்தெடுத்து, சில நார்களைப் பின்னி யார்ன் (yarn) எனும் நூலாக்கி, பின்னர் தரிகளில் நூலை நெசவு செய்து ஆடை செய்வது வழக்கம். லினன் ஆடைகளால் போர்த்தப்பட்டு எகிப்திய ஃபாரோ (Pharaoh) மன்னர்கள் கி.மு.3400இல் புதைக்கப்பட்டனர். சுமேரிய, பாரசீக, ஐரோப்பிய நாடுகளிலும் லினென் துணிகளே கோடைக் காலத்திலும், வசந்த காலத்திலும் பரவலான தினசரி ஆடையாக இருந்தன.
கி.மு 5ஆம் நூற்றாண்டில் பாரசீக (இன்றைய ஈரான்) மன்னன் தாரியூஷ் (Darius) மேற்கே உள்ள பாபிலோனிய (Babylon இன்றைய ஈராக்), சிரிய (Syria) நாடுகளையும் இந்தியாவின் வடமேற்குப் பிரதேசங்களையும் கைபற்றி ஒரு பேரரசை உண்டாக்கினான். அதுவரை கடல் வழியாக பாபிலோனியாவிற்கும் எகிப்திற்கும் சென்ற பஞ்சுத்துணிகள் தரை வழியாகவும் செல்லத் தொடங்கின. பட்டுப்பெருவழி (Silk Road) என்று அழைக்கப்படும் பலதரை வழிச் சாலைகளில் பஞ்சுத்துணிகளும் பரவலாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின.
லினென் துணி பஞ்சைவிடச் சொரசொரப்பானது. அல்லது பஞ்சு லினெனைவிட மென்மையானது. டர்கிஷ் டவல் என்று புகழ்பெற்ற குளியல் துண்டு, சாக்ஸ் (socks) எனும் காலுறை, போர்வை (bedsheet) இவையெலாம் லினென் என்று பொதுச் சொல்லால் இன்றுவரை ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. மென்மையான பஞ்சால் நெய்த சட்டையும் பேன்ட்டும் வேட்டியும் சேலையும் வருடம் முழுதும் அணிந்து பழகிய இந்தியக் குடிமக்களுக்கு, ஆறு மாதம் லினென் துணிகளும், ஆறு மாதம் கம்பளி ஸ்வெட்டரும் அணிந்து வாழும் வாழ்க்கையின் கொடூரத்தை எழுத்தால் உணர்த்தவே முடியாது.
பருத்திச் செடியைக் கண்டிராத பாரசீகத்திலும் பின்னர் கிரேக்கத்திலும், பருத்திச் செடியை விளக்க வார்த்தைகள் இல்லை. மரத்தில் விளையும் விசித்திரக் கம்பளி என்று கி.மு. 5ஆம் நூற்றாண்டில் ஹெரோடாட்டஸ் (Herodotus) எனும் கிரேக்கர் வர்ணித்தார்.
லினெனையும் கம்பளியையும் கலப்படம் செய்து ஆடை செய்வது பாவச்செயல் என்று யூதர்களின் பழைய ஏற்பாடு (Old Testament – Deutoronomy) கூறுகிறது.
கடல் வழி வணிகம்
கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் படை சிந்து நதி வரை வந்தது. வரும் வழியில் டயர் (Tyre) எனும் அற்புத நகரைச் சீரழித்தான் அலெக்சாண்டர். வணிகப் பேரரசாம் ஃபீனிசியரின் (Phoenicia) முக்கியத் துறைமுக நகரம் டயர். இதனால் கப்பல் வணிகம் பல ஆண்டுகள் குன்றியது. அலெக்சாண்டர் திரும்பிச் செல்லும்போது பாபிலானில் மாண்டான். அவன் வென்ற நாடுகள் நான்காகச் சிதறின.
இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு ரோமாபுரி எகிப்தை வென்றது. கிரேக்க நாட்டையும் வீழ்த்தியது. இக்காலத்தில் அதாவது கி.மு. முதலாம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த ஹிப்பலாஸ் (Hippalus) என்ற கலபதி (கேப்டன்), அரபிக்கடலின் கரையோரம் மட்டுமே கப்பலைச் செலுத்தாமல், கார்காலக் காற்றில் பாய்மரம் கட்டினால் செங்கடலின் (Red Sea) முனையிலிருந்து கேரளத்திற்கும் குஜராத்திற்கும் வெகு சீக்கிரம் வரமுடியும் என்றும், இரண்டு மாதங்களில் இதே காற்றுத் திசை திரும்பியதும் கப்பலில் ஏற்றிய பொருட்களோடு மீண்டும் செங்கடலின் வாயில் அருகே உள்ள சொக்கோத்ரா (Socotra) தீவுக்குச் செல்லலாம் என்றும் கண்டுபிடித்தான். இதன் பின்னர் இந்தியாவிலிருந்து எகிப்திற்கும் அரபு நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் வணிகம் பெரிதாக வளர்ந்தது.
ரோமாபுரியில் இருந்து மிளகு, இஞ்சி, லவங்கம், பவளம், வைடூரியம், முத்து, அகில் என்று பல்வேறு பொருட்களோடு பஞ்சுத்துணி வாங்க நூற்றுக்கணக்கான கப்பல்கள் கிளம்பின. பஞ்சு ஆடைகளை எகிப்தியரும் பாரசீகரும் விரும்பி வாங்குகின்றனர் என்று ஸ்ட்ராபோ (Strabo), அர்ரியான் (Arrian) ஆகிய யவனர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியப் பஞ்சு ஆடைகளின் பற்பல வண்ணங்களும், சித்திரங்களாய் துணிகளில் அச்சிட்ட மலர்களும் பறவைகளும் குதிரைகளும் யானைகளும் அவர்கள் கண்களைக் கவர்ந்தன. அக்காலத்தில் தீட்டப்பட்ட அஜந்தா ஓவியங்களில் இதுபோன்ற ஆடைகளை இன்றும் காணலாம். ஒரு யவன வணிகர் செங்கடல் வழிகாட்டி (Periplus of the Erythrean Sea) எனும் கிரேக்க மொழி புத்தகம் எழுதினார். இதில் குஜராத்தின் பரூச் (Baruch) துறைமுகம் வழியாக எகிப்திற்கும் ஐரோப்பாவிற்கும் பஞ்சுத்துணியும் பட்டுத்துணியும் ஏற்றுமதி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
வண்ணமும் அழகியலும்
ஆடை பாதி, அதன் வண்ணம் பாதி. பஞ்சுத் துணியை வெளுக்க வேண்டும். மாட்டுச் சாணம், கழுதைச் சாணம் ஆகியவற்றை நீரில் கலந்து, அதில் அலசியே பஞ்சாடைகளைச் சமீப காலம் வரை நெசவாளரும் வண்ணார்களும் வெளுத்தனர். பச்சை, நீலம், காவி, சிவப்பு, மஞ்சள் என்று சில நிறங்கள் சேர்க்க வேண்டும். இதில் நீல நிறம் இயற்கையில், அதுவும் செடிகளில் அபூர்வம். கலிங்கம் என்று இன்னொரு பெயர்கொண்ட ஒடிசா மாநிலத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்த நீலச்செடியிலிருந்து சாயம் செய்து, ஆடைகள் நீல வண்ணம் பெற்றன. கலிங்கத்திலிருந்து இந்தியா முழுதும் சென்ற ஆடைக்குக் கலிங்கம் என்றே பெயர். வெளிநாடுகளில் அதற்கு இந்தியாவிலிருந்து வந்ததால் இண்டிகா, இண்டிகோ (indigo) என்று பெயர். மயில், அன்னம், வாத்து, தாமரை, அல்லி போன்ற வடிவங்களில் மரத்தில் அச்சு செய்து, அதில் சாயம் பூசி, ஆடைகளில் பதித்தால் அழகான துணிகளைச் செய்யலாம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.
நூலில் சாயம் கலந்து, பல வண்ண நூல்களை நெய்தால் அழகான ஆடைகளைப் பெறலாம். தறிகளில் நீளவரிசையில் (warp) ஒரு நிற நூலும் அகலவரிசையில் (weft) வேறு நிற நூலும் சேர்த்து நெய்தால்? அகலவரிசையில் பலவித நிறங்களைக் கோடு கோடாக நெய்தால். இதற்கு இக்கத் (ikkat) என்று ஒரு பெயர். இவை எல்லாம் அஜந்தா ஓவியங்களில் காண்பதால், கி.பி. 5ஆம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ இவை பாரதத்தில் சகஜம் என்று தெரிகிறது.
கைத்தறிகளில் இதுபோன்று பல்வேறு துணிகளை நெசவு செய்யும் குடும்பங்கள் இன்றளவும் நாடுமுழுவதும் இருக்கின்றன. நெய்த பின் துணியில் ஓவியங்களைத் தீட்டுவதும் ஒரு வழக்கம். இதில் கலம்காரி எனும் முறை இன்றும் வழக்கில் உள்ளது. ஆரம்பக்காலப் பல்லவர் குடைவரைக் கோயில்களில் மூலவரைக் கல்லில் செதுக்காமல், துணியில் ஓவியமாய் எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது.
இந்தக் காலகட்டத்தில் பர்மா, மலாயா போன்ற தென்கிழக்கு நாடுகளிலும், சீன தேசத்தில் தென் யூனான் (Yunnan) மாகாணத்திலும், பருத்தி விவசாயம் தொடங்கி, பஞ்சுத்துணி நெசவுத் தொழில் தொடங்கியது. பாரசீகத்திலும் பஞ்சும் பட்டும் நெசவுக்கு வந்தன.
பருத்திச் செடியிலிருந்து முதன் முதலில் நூல் எடுத்தது யார்? நாம் அறியோம். பஞ்சிலிருந்து நூலெடுக்க ராட்டினம் செய்தது யார்? நாம் அறியோம். நூலை நெய்து முதலில் துணி செய்தது யார்? நாம் அறியோம். தறியைச் செய்த முதல் தச்சன் யார்? நாம் அறியோம்.
சாயங்களைக் கண்டுபிடித்தது யார்? வண்ணங்களை ஆடையில் முதலில் சேர்த்தது யார்? முதலில் தையல் போட்டது யார்? இவை எதையும் நாம் அறியோம். அறியவும் விருப்பமில்லை. எந்த நாட்டிலும் வரலாற்றுச் சுவடுகளில் அவர்கள் பெயர் எழுதப்படவில்லை. படை எடுத்துக் கோடிக்கணக்கில் பிணங்களைக் குவித்து அண்டை நாடுகளைக் கொள்ளையடித்த மன்னர்களுக்கே சிலை வைப்பதும், காவியம் படைப்பதும், புலவர்கள் பரிசு பெறுவதும், அனைத்து நாகரீகங்களிலும் வழக்கம்.
திரைகடலோடி
அப்படிப்பட்ட மன்னர்களின் ஒருவன் மங்கோலியாவில் தோன்றிய செங்கிஸ் கான் (Genghis Khan). கிழக்கே சீனா முதல் மேற்கே எகிப்து, மத்திய ஐரோப்பா (Bulgaria) வரையும் உலக வரலாற்றின் மிகப் பிரம்மாண்டச் சாம்ராஜ்ஜியத்தைப் படைத்த செங்கிஸ் கான், அந்தச் சாம்ராஜ்ஜியத்தில் சிறப்பான சாலைகளும், பாதுகாப்பான வணிகமும், அளவான வரிவசூலும் அமைத்தான். மிக மலிவாகச் சீனப் பட்டும், பீங்கானும், இந்தியப் பஞ்சும், மிளகும் சந்தனமும், ஆயிரக்கணக்கான பொருட்களும் பரவின. மலிவான விலையில் ஆசியக் கண்டத்தின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்கு ஆயிரக்கணக்கான பொருட்கள் பரவின. உலகின் முதல் சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம் (free market economy) செங்கிஸ் கானின் மங்கோலியா என்கிறார் ஜேக் வெதர்ஃபோர்ட் (Jack Weatherford). நூறாண்டுகளுக்குப் பின் மங்கோலிய அரசு நான்காக உடைந்த பின்னர், மலிவாகக் கிடைத்த பொருட்களெல்லாம் மிக விலை உயர்ந்துவிட்டன.
1453இல் கீழை ரோமாபுரி என்ற கான்ஸ்டாடினோபிள் (Constantinople) நகரையும், அனதோலியா (Anatolia) நாட்டையும் துருஷ்கர் (Turk) அல்லது துளுக்கர் வீழ்த்தினர். மங்கோலியர் படையின்போது மத்திய ஆசியாவிலிருந்து (இன்றைய துர்க்மேனிஸ்தான்) தப்பித்து ஓடி, அனதோலியாவில் குடிபுகுந்தவர் இந்தத் துருஷ்கர். கான்ஸ்டன்டைன் மன்னன் ஆணையால் கிறிஸ்தவ மதத்திற்குக் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் மாறிய அனதோலிய (கீழை ரோமாபுரி) ராஜ்ஜியம், மெஹ்மெத் (Mehmed) என்ற துருஷ்க மன்னன் ஆட்சிக்கு வந்தபின் இஸ்லாமிய நாடாக மாறியது. கான்ஸ்டாடினோபிள் இஸ்தான்புல் (Istanbul) என்றும், அனதோலியா துருக்கி (Turkey) என்றும் பெயர் மாற்றப்பட்டன. தங்களை மெஹ்மெத்தின் முன்னோராகிய உஸ்மானின் (Usman) பெயர் சூட்டி, உஸ்மானிய ராஜ்ஜியம் என்றும், உத்மான் (Uthman), ஒட்டமான், ஓட்டோமான் (Ottoman) என்றெல்லாம் பெயர் மறுவியது.
தரைவழியாக வர்த்தகம் நடந்து, பல நாடுகளைக் கடந்து இந்தியாவிலிருந்தும் சீனத்திலிருந்தும் பொருட்கள் வந்தால் அதன் விலை மிக அதிகமாகவே இருக்கும். ஆளும் வர்க்கத்திற்கும் செல்வந்தருக்கும்கூடக் கட்டுப்படி ஆகாது. அதனால், இந்தியாவுக்குக் கடல்வழியாகப் பாதை அமைந்தால் தங்கள் பொருளாதாரம் செழிக்கும் என்று ஐரோப்பிய வணிகர்களும் மன்னர்களும் நினைத்தனர். மேலும் ஆயிரம் வருடக் கிறிஸ்தவ ராஜ்ஜியத்தைக் குலைத்த இஸ்லாமிய உத்மான் ராஜ்ஜியம் தரைவழி வணிகத்தால் செழிக்கக் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை.
1492இல் கொலம்பஸ், 1497இல் அமெரிகோ வெச்பூச்சி (Amerigo Vespucci), 1498இல் வாஸ்கோடகாமா (Vasco da Gama), 1513இல் பல்போவா (Balboa), 1521இல் மெகல்லன் (Magellan) என்று கலபதிகள் அட்லான்டிக் கடல் (Atlantic ocean) வழியாக இந்தியாவைத் தேடி வர மங்கோலிய அரசின் வீழ்ச்சியும், கீழை ரோமாபுரியின் வீழ்ச்சியும், பஞ்சுத்துணியின் கவர்ச்சியும் மிக முக்கியக் காரணங்கள். இவர்களில் வாஸ்கோடகாமா மட்டுமே கேரளத்தில் கோழிக்கோடு நகருக்கு வந்து சேர்ந்தார். அட்லான்டிக் கடல் வழியாக ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி, தென் முனையைக் கடந்து மீண்டும் அரபிக்கடலில் வடக்கிழக்கே கப்பல் செலுத்தி, கேரளம் அடைந்தார்.
ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையோடு இந்தியர்களும் அரேபியர்களும் பல நூற்றாண்டுகளாக வணிகம் செய்து வந்தாலும், தூரத்து ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப் பாதை கண்டுபிடித்ததால், முதலாம் நூற்றாண்டில் ஹிப்பாலாஸ் செய்த சாதனைபோல் வாஸ்கோடகாமாவின் சாதனை பெரிதாகக் கருதப்பட்டது. கோழிக்கோட்டில் இருந்து ஆப்பிரிக்காவைச் சுற்றி ஆறு மாதப் பயணம் சென்று ஐரோப்பா சென்ற பஞ்சு ஆடைகள், கேலிக்கோ (Calico) என்று ஐரோப்பாவில் புகழ்ப்பெற்றன. போர்த்துகியர் சீக்கிரமே கோவாவையும் மும்பையையும் (பம்பாய்) கைப்பிடித்தனர். இன்றைய சென்னையின் மயிலாப்பூரை அடைந்து தோமா பெயரில் சாந்தோமே (San Thome) என்ற கோட்டையை நிறுவினர்.
கொலம்பஸ், தான் இந்தியாவை அட்லாண்டிக் கடல் வழியாக அடைந்துவிட்டதாகத் தவறாக நினைத்தார். அவர் அடைந்தது புதியதொரு கண்டம் என்று 1497இல் இத்தாலியக் கலபதி (Captain) அமெரிகோ வெஸ்பூச்சி கண்டுபிடித்தார். ஒரு கண்டம் அல்ல, இரண்டு கண்டம் என்றும் விரைவில் தெரிந்தது. இரு கண்டங்களுக்கும் அவர் பெயரைச் சூட்டி வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அழைத்தனர். 1513இல் பல்போவா தென் அமெரிக்காவைச் சுற்றிப் பயணித்துப் பசிபிக் பெருங்கடலை (Pacific Ocean) முதலில் கண்ட ஐரோப்பியர் ஆனார். இஸ்பானியத்திலிருந்து கப்பல் செலுத்தி மெகல்லான் 1521இல் பசிபிக் பெருங்கடலைத் தாண்டிச் சீனா அருகே சில தீவுகளை அடைந்தார். வெவ்வேறு தீவுகளில் வெவ்வேறு பௌத்த, ஹிந்து மன்னர்கள் இருந்தனர். ஓரிரு தீவுகளில் சமீபத்தில் இஸ்லாம் புகுந்து சுல்தான் ஆட்சி நடந்தது. மெகல்லன் வந்த சில பத்தாண்டுகளில் அனைத்தும் இஸ்பானியர் ஆட்சிக்கு உட்பட்டு, இஸ்பானிய மன்னன் ஃபிலிப் பெயரில் பிலிப்பைன்ஸ் (Phillipines) என்று பெயர் பெற்றது.
சாவகம் (Java), சுமத்ரா (Sumatra) தீவுகளில் தென் ஆப்பிரிக்கா வழியாக வந்த நெதர்லாண்டின் டச்சு (Dutch) கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சியைப் பிடித்தனர். இந்தத் தீவுகள் கிழக்கிந்தியத் தீவுகள் (East Indies) என்று பெயர் பெற்றன. அப்போது கொலம்பஸ் அடைந்த தீவுகள் மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) என்று பெயர்பெற்றன. இந்தியாவை வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் போரிட்டு ஆட்சிக்கு வந்ததுபோல் இத்தீவுகளில் டச்சு கம்பெனி ஆட்சியைப் பிடித்தது.
புதிய அமெரிக்கக் கண்டங்களில் தங்கமும் வெள்ளியும் கிடைத்ததால் போர்த்துகீயரைத் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளின் வணிகர்கள் நூறாண்டுகளுக்கு இந்தியாவைவிட அமெரிக்கக் கண்டங்களைத் தேடியே கடற்பயணங்கள் மேற்கொண்டனர். தென் அமெரிக்காவில் மலைகளை வெட்ட வெட்ட அள்ள அள்ள வெள்ளி வற்றாமல் கிடைத்துக்கொண்டே இருந்தது. லத்தீன மொழியில் வெள்ளியின் பெயர் ஆர்ஜெண்டம் (Argentum). ஆர்ஜெண்டைனா என்ற நாடே இந்த உலோகத்தின் பெயர் பெற்றது. அதுவரை அபூர்வமாகக் கிடைத்த வெள்ளி, அதிகமாகக் கிடைக்கக் கிடைக்க அதன் மதிப்பு குறையத் தொடங்கியது. தங்கத்துக்குச் சமமாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் விலைமதிக்கப்பட்ட வெள்ளி, பத்துப் பதினைந்து மடங்கு கிடைத்ததால் விலைமதிப்பில் பிரமாண்டச் சரிவு கண்டது. வெள்ளியை அள்ளி அள்ளி பெற்ற இஸ்பானியப் போர்த்துகீய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியே விளைந்தது. இதனால் நூறாண்டு மூன்று கடல்களைக் கோலோச்சிய இவ்விரு நாடுகளும் சரிய, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வாய்ப்பு கிடைத்தது.
தங்கம் அங்குமிங்கம்தான் கிடைத்தது. ஆனால் தங்கத்தைப் பற்றி வதந்திகளும் புரளிகளும் கடலலைப்போல் ஓயாமல் பாய, தங்க வேட்டை வெறியைத் தூண்டியது. திரைகடலோடி திரவியம் தேடினர்.
முதலில் இஸ்பானியர்களும் போர்த்துகீயரும் பின்னர் ஆங்கிலேயர், பிரெஞ்சு நாட்டார், ஜெர்மானியர், டச்சு நாட்டார், இத்தாலியர் என்று அனைத்து நாடுகளிலிருந்தும் லட்சக் கணக்கில் பஞ்சம் பிழைக்க ஏழைகளும், பணம் சம்பாதிக்கப் பெரும் செல்வந்தர்களும் அட்லாண்டிக் கடலைத் தாண்டி அவ்விரு கண்டங்களில் குடிபெயர்ந்து, பூர்வீகச் செவ்விந்தியரைக் கொன்றும் விரட்டியும், கிராமங்களையும் நகரங்களையும் நிறுவினர். பல்வேறு பயிர்களோடு சேர்த்துப் பருத்தியும் மெக்சிகோ, மிஸ்ஸிசிப்பி நதிக்கரைகளில் பயிரிடப்பட்டது. ஔவையார் சொல்லாமலே அங்குமிங்கும் வரப்புயர்ந்தது.
கிழக்கிந்திய கம்பெனிகள்
1600இல் இங்கிலாந்திலும் 1602இல் நெதர்லாண்டிலும், 1616இல் டென்மார்க்கிலும் சற்றே தாமதமாக 1664இல் பிரான்சிலும் கிழக்கிந்திய கம்பெனிகள் தொடங்கப்பட்டன. இத்தாலியில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் உருவாகிய வணிக நகரங்களின் மறுமலர்ச்சியாலும், மங்கோலியர் வழியாகச் சீனக் காகிதம் ஐரோப்பாவை அடைந்ததாலும், லியோனார்டோ ஃபிபோநாச்சி (Leonardo Fibonacci) வழியாக வந்த இந்தியக் கணிதத்தினாலும் வர்த்தகத்திலும் வணிகத்திலும் பெரும் புரட்சி உருவாகின. பங்குச் சந்தைகள் இயங்கத் தொடங்கின. பாய்மரக் கப்பல்களைக் காற்றும் துடுப்பும் இயக்கியதுபோல் அதன் முதலாளிகளை எண்ணும் எழுத்தும் இயக்கின.
ஐய்யாவோளே ஐநூற்றுவர், நாநாதேச திசையாயிரத்து ஐநூற்றுவர், மணி-கிராமத்தார் என்று பல்வேறு வணிகக்குழுக்கள் ஆயிரமாண்டுகளாய் பாரதத்தில் தோன்றியதுபோல், கம்பெனிகள் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் இறங்கின. ஒரு மன்னனின் செல்வமோ, மெதிசீ (Medici) போன்ற ஒரு குடும்பத்தின் செல்வமோ மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கானவர்களின் சேமிப்பிலும் நம்பிக்கையிலும் இந்தியாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் வர்த்தகம் செய்ய கம்பெனிகள் முளைத்தன.
1577இல் தென் அமெரிக்காவிலிருந்து செல்வம் சுரண்டச் சென்ற இஸ்பானியப் போர்த்துகீயக் கப்பல்களை பிரான்சிஸ் டிரேக் (Francis Drake) எனும் ஆங்கிலேயக் கலபதி வென்று, பசிபிக் பெருங்கடலைக் கடந்துசென்று, போர்னியோ (Borneo) அருகே உள்ள கிராம்புத் தீவுகளை (Spice Islands) அடைந்தான். கொள்ளையடித்த தங்கம், வெள்ளி, இங்கிலாந்திலிருந்து தான் கொண்டுவந்த லினென் துணிகள் ஆகியவற்றை அந்தத் தீவில் விற்று இலவங்கம், கிராம்பு, சாதிக்காய் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் சுற்றி மீண்டும் இங்கிலாந்தை அடைந்தான். அவனுக்குப் பெரும் கௌரவமும் லாபமும், முதலீட்டாளர்களுக்கு ஐம்பது மடங்கு லாபமும், அரசாங்கத்திற்கும் பெரும் வரியும் பங்கும் கிடைத்தது. முட்டாள்தனமாகப் பழிநோக்கத்தில், வறட்டுக் கர்வத்தில், இங்கிலாந்துடன் ஒரு கடல்போரை 1588இல் நிகழ்த்திய இஸ்பானியக் கடற்படை (Spanish Armada) அதிர்ச்சியாகப் பெருந்தோல்வி அடைந்தது. பல கப்பல்கள் ஆங்கிலேயர் கைவசம் மாறின.
இந்தச் சூழ்நிலையில் 1600இல் ஆரம்பித்த ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி, பெருத்த முயற்சி எடுத்து, டெல்லி முகல் சுல்தான் ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்று, குஜராத்தின் சூரத்தில் வணிகம் செய்து பஞ்சுத்துணிகளை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தது. மற்ற இடங்களில் வணிகத் தடங்களைத் தேடி ஆந்திராவில் குண்டூர் அருகே மசூலிப்பட்டினத்தில் (Machilipatnam) ஒரு குடி அமைத்துப் பஞ்சுத்துணி வாங்கி இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தது. பட்டுத்துணிப்போல் மென்மையாக, உடுத்தியவர் உள்ளங்கம் தெரியும் வகையில் மெலிதாகத் துணி செய்து, அதற்கு மசிலிப்பட்டினத்தின் ஊர் பெயரைச் சூட்டி, மஸ்லின் (Muslin) என்று அழைத்தது. சமீபத்தில் இது ஈராக்கில் உள்ள மோசுல் (Mosul) நகரில் தயாரிக்கப்படுவதால் மஸ்லின் என்று பெயர் பெற்றது என்று படிக்க நேர்ந்தது. உண்மை தெளிவாக இல்லை. மாமல்லபுரத்தில் ஆதிவராக குகையில் உள்ள மகேந்திரப் பல்லவனின் ராணிகளின் சேலைகள், அஜந்தாவிலுள்ள பல பெண்களின் சேலைகள் இதுபோல் உடுத்தியும் மறைக்காத வகையாகத் தெரிகிறது. இது மஸ்லினாக இருக்கவேண்டும்.
விழிஞ்சம் முதல் குஜராத் வரை பாரதத்தின் மேற்குக் கடற்கரையில் நூற்றுக்கணக்கான இயற்கைத் துறைமுகங்கள் உள்ளன. ஆனால் கன்னியாகுமரி முதல் வங்கதேசம் வரை கிழக்குக் கடற்கரையில் ஓர் இயற்கைத் துறைமுகமும் இல்லை. நதிகள் கடல்புகும் இடங்களே துறைமுகங்களாக உள்ளன. காவிரி புகும் பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர் மறுவி சங்ககாலத் துறைமுகமாக விளங்கியது. நாகப்பட்டினம், விசாகப்பட்டினம், மசிலிப்பட்டினம், காயல்பட்டினம், சதுரங்கப்பட்டினம் எல்லாம் இந்த வகையறா.
இதேபோல் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் உதித்த புது நகரம்: மதறாஸபட்டினம்.
0
________
உதவிய நூல்கள்
– Guns Germs and Steel by Jared Diamond
– Ajanta source book by S Swaminathan
– Textiles in Ajanta, THT Lecture by S Swaminathan and Bhushavali Natarajan
– Genghis Khan and the Making of the modern world by Jack Weatherford
– Wikipedia