Skip to content
Home » விசை-விஞ்ஞானம்-வரலாறு #11 – பருத்திப் புரட்சி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #11 – பருத்திப் புரட்சி

cotton revolution

மசிலிப்பட்டினத்தில் புயல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் கூவம் நதி கடல் புகுந்த மதறாசபட்டினத்தில், 1639இல் பூந்தமல்லியில் இறங்கியிருந்த ஆங்கிலேய கம்பெனியின் பிரான்சிஸ் டேவும் (Francis Day) ஆண்டுரூ கோகனும் (Andrew Cogan) தாமல் வேங்கடாதிரி நாயக்கரிடம் ஒப்பந்தமிட்டு புனித ஜார்ஜ் கோட்டையை (Fort St George) அமைத்தனர்.

இது ராணுவ கோட்டை அல்ல. வணிகத்தில் பெரும் பாரம்பரியம் கொண்ட செட்டியார்கள் அமைத்ததுபோல் வர்த்தகப் பண்டாரமெனும் நாட்டுக்கோட்டை. மதறாசில் துறைமுகம் இல்லை. கரைக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கப்பலை நிறுத்தி, நங்கூரம் இறக்கி, கட்டுமரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களிடம் பேரம் பேசி, ஆங்கிலேய மாலுமிகளும், அவர்கள் கொண்டுவந்த சரக்கும் கரை அடைந்தனர். மீண்டும் இதே மீனவர்களின் தயவில் படகுகளில் துணிகளையும் மிளகு-மஞ்சள்-கடுகு-இத்யாதிகளைக் கப்பலில் ஏற்றிச் சென்றனர். 1915இல்தான் சென்னையில் நவீனத் துறைமுகம் அமைக்கப்பட்டது.

ஐரோப்பிய மொழிகளும், இந்திய மொழிகளும் அறிந்தவர் வெகு சிலரே. இரண்டு மூன்று மொழியறிந்து வணிகம் செய்ய வல்லமை பெற்றவர் அதனினும் சிலரே. இரண்டு மொழி பேசியவர் துவிபாஷி அல்லது துபாஷ் என்று அழைக்கப்பட்டனர். லிங்கிச் செட்டி, தம்புச் செட்டி, அவதானம் பாப்பையா, காசி வீரண்ண, மணலி முத்துகிருஷ்ண முதலி, பச்சையப்ப முதலி யாவரும் துபாஷிகளாகப் பணி செய்து, கம்பெனியாருக்கும் நெசவாளருக்கும், தானிய வணிகர்களுக்கும் இடைத்தரகராய் தொழில் செய்து பெரும் செல்வந்தராயினர்.

இங்கிலாந்திலிருந்து ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா வர ஆறு மாதக் கடல் பயணம் எடுக்கும். நோய், புயல், கடற்கொள்ளையர் என்று பல்வேறு ஆபத்துகள். மீண்டும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்ல ஆபத்தான ஆறு மாதப் பயணம். இத்தனை ஆபத்துகளையும் தூரத்தையும் காலத்தையும் கடந்து சென்றாலும் இங்கிலாந்திலேயே நெசவிடப்பட்ட கம்பளித் துணிகளையும், லினென் துணிகளையும்விட பாதி உலகைக் கடந்து வந்த இந்தியப் பஞ்சுத்துணிகள் மலிவாக இருந்தன. மிளகு, கடுகு, இலவங்கம், கிராம்பு போன்றவற்றை ஒரு சில அண்டாவிலும் பீப்பாவிலும்தான் வாங்கி ஏற்றிச்செல்ல முடியும். தரைவழியில் பாரசீகம், ஈராக், அனதோலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று, பின்னர் கடல்வழி அந்தந்த நாடுகளை இவை அடைந்தபோது கேரளத்தில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய மிளகு, லண்டனிலும் பாரிசிலும் அறுபத்து நான்கு ரூபாய்க்கு விற்கப்பட்டது. கலபதிகள் தங்கள் பங்குக்கு மிளகு, மஞ்சள், இஞ்சி போன்றவற்றை வாங்கத் தங்கப் பெட்டிகளை எடுத்துச் சென்றனர். ஏன்? ஆறு மாதம், பத்தாயிரம் கிலோமீட்டர் பயணத்தில் தங்கத்தின் விலை மாறவில்லை. ஆனால் மிளகின் விலைமதிப்பு தங்கத்தை மிஞ்சிவிடும்.

பஞ்சுத் துணிகள் இப்படி அபாரமாக விலை ஏறவில்லை. ஆனால் கம்பளி, லினென் துணிகளைவிட அணிய மிகச் சுகமாகவும் சிறப்பாகவும் இருந்தன. ஒரு கம்பளி ஆடையின் விலையில் ஆறு கேலிக்கோ (calico) ஆடைகள் வாங்கலாம். இதனால் உள்நாட்டுக் கம்பளி ஆடைகள் விற்பனை மளமளவெனச் சரிந்தது. இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்ற பட்டாடைகளும் இங்கிலாந்திலேயே தயாரிக்கப்பட்ட பட்டாடைகளைவிட மலிவாகக் கிடைத்தது. இதனால் இங்கிலாந்தின் கம்பளி நெசவாளர்களும், பட்டு நெசவாளர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

நெசவாளர்கள் ஏழைகள். ஆனால் அவர்களுக்குக் கம்பளி விற்ற செம்மறி ஆடு எஜமானர்கள் பெரிய ஜமீன்தார்கள். பலர் பாராளுமன்ற உறுப்பினர்கள். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்குக் கடும் விவாதமும், அங்குமிங்கும் கலவரமும், அரசியல் பேரமும் நடந்தன. கிழக்கிந்திய கம்பெனி அதிபர் ஜோசையா சைல்டு (Josiah Child) கம்பளி உடுத்தக் கட்டுப்படியாகாத ஏழைகளுக்கு, கம்பெனி விற்கும் கேலிக்கோ துணி நிச்சயம் தேவை என்று வாதாடினார். வாதத்தோடு நிற்காமல் பல அரசியல்வாதிகளுக்கு ரொக்கப்பணமும் சென்றது.

காந்தியின் தலைமையில், காங்கிரஸின் தலைமையில் இருபதாம் நூற்றாண்டில் அங்கிலேய மில் துணியை எதிர்த்து இந்தியா முழுக்க நடந்த சுதேசி துணிப் போராட்டங்களை அறிந்த நமக்கு, பதினேழாம் நூற்றாண்டில் இந்தியத் துணிகளை எதிர்த்து இங்கிலாந்தில் நடந்த சுதேசி துணிப் போராட்டம் பற்றிப் பொதுவாக ஒன்றும் தெரியாது.

1688இல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் கத்தியின்றி, ரத்தமின்றிப் பதவியிழந்தார். நெதர்லண்டிலிருந்து அவரது மாப்பிள்ளை வில்லியம் எதிர்ப்பின்றி லண்டன் வந்து முடிசூட்டிக்கொண்டார். இது மகத்தான போராட்டம் (Glorious Revolution) என்று ஆங்கிலேய வரலாற்றில் புகழ்பெற்றது. பிரெஞ்சுப் புரட்சியைப் படிப்பதுபோல் நாம் இந்தப் புரட்சியைப் பற்றிப் படிப்பதில்லை. நம் கல்வியாளர்களுக்கு வசதியில்லாத வரலாறு இது.

பதவியிழந்த மன்னர் ஜேம்ஸ், கம்பெனி ஆதரவாளர் என்பது ஒரு சிறு குறிப்பு. 1691இல் நெசவாளர் ஒரு சிறிய வெற்றி பெற்றனர். பனிக்காலத்தில் (நவம்பர் முதல் ஏப்ரல் வரை) இங்கிலாந்தின் குடிமக்கள் கம்பளி மட்டுமே அணியவேண்டும் என்று வில்லியம் ஆட்சியில் ஒரு சட்டம் வந்தது. 1696இல் கேலிக்கோ, பெங்கால், அச்சிட்ட துணி, சாயமிட்ட துணி, இந்தியாவிலிருந்தோ பாரசீகத்திலிருந்தோ கம்பெனியால் இறக்குமதி செய்யப்பட்ட துணி ஆகிய எதுவுமே இங்கிலாந்தில் விற்பனைக்கு வரக்கூடாது என்ற தடை மசோதா மக்களவையில் வென்றது. ஆனால் கம்பெனி பங்காளிகள் நிறைந்த மேலவையில் அம்மசோதா தோற்றது. கம்பெனியின் லண்டன் தலைமை அலுவலகத்தைக் கம்பளி நெசவாளர் தாக்கினர். ஜோசையா சைல்டு இல்லத்தையும் முற்றுகையிட்டனர்.

கம்பெனி கப்பல்கள் இந்தியாவிலிருந்து துணிகளோடு பஞ்சையும் இறக்குமதி செய்யத் தொடங்கின. சில கம்பளி லினென் நெசவாளர்கள் தங்கள் தறிகளைப் பஞ்சு நெசவுக்கு மாற்றிக்கொண்டனர். பஞ்சுத்துணிகள் மேல் பல வரிகளை விதிக்கக் கம்பளி நெசவாளர்கள் கோஷமிட, அது நிறைவேறியது. விலை ஏறினாலும் மக்கள் வசதியான பஞ்சாடைகளைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை. 1719இல் தெருவில் செல்லும் பெண்கள் பஞ்சாடை அணிந்தால் அவர்களைத் தாக்கி, தெருவிலே துணி உருவியும் கிழித்தும் இங்கிலாந்தின் நெசவாளர்கள் போராடினர்.

இதற்கிடையே லினென் நெசவாளர்கள் சிலர் லினென் பஞ்சு நூல்களைக் கலந்து நெசவில் இயக்கினர்.

பாராளுமன்றத்திற்கு இந்தியத் துணிகளின் இறக்குமதியை எதிர்த்து ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்து குவிந்தன. நெசவாளர்களே இல்லாத பல ஊர்களிலிருந்தும் கடிதங்கள் பாய்ந்தன. இந்தியாவிற்கு ஜனநாயகம் மட்டுமல்ல, போராட்ட முறைகளையும் கற்றுத் தந்தது இங்கிலாந்துதான் என்று நாம் புரிந்துகொள்ளலாம். 1721இல் கேலிக்கோ சட்டம் வந்தது. மந்தமான ஒரு சாம்பல் வண்ணம் தவிர எந்த வகை இந்தியத் துணியும் இங்கிலாந்தில் விற்கக்கூடாது என்றது இந்தச் சட்டம். பிரான்சு நாட்டிலும் இது மாதிரி போராட்டங்களும் சட்டங்களும் வெடித்தன. ஆங்கிலேயரை மிஞ்சி இந்தியத் துணிகளைக் கடத்தி விற்பவர்களுக்கு மரண தண்டனை விதித்தது பிரெஞ்சு சட்டம்.

 

எழுத்தாளர் குறிப்பு: ஆங்கிலப் புத்தகங்களையும் மூலங்களையும் மட்டுமே நான் படித்து, குறிப்பெடுத்து எழுதுவதால், மற்ற நாடுகளில் நடந்தவற்றை யான் அறியேன்.

இங்கிலாந்தின் பருத்திப் புரட்சி

ஆனால் 1733இல் தொடங்கி வரலாறு விசித்திரமாய் திரும்பியது. ஜான் கே (John Kay) என்னும் நெசவாளர், பறக்கும் சகடம் (flying shuttle) எனும் கருவியை உருவாக்கினார். தறியில் இடதுவலமாக மிக வேகமாக நூலைச் செலுத்தி, மீண்டும் வலதுஇடமாக கொண்டுவந்தது இந்தக் கருவி. இதற்குமுன் ஒருவர் தறியில் நூலை நீள்வரிசையில் படிப்படியாய் இழுக்க, மற்றொருவர் இடதுவலமாக நூலைச் செலுத்தி வந்தனர். இந்த இரண்டாம் தொழிலாளியின் வேலையைப் பறக்கும் சகடம் செய்தது. பலருக்கு இதை விற்றார் ஜான் கே. ஆனால் வேலை இழந்தவர்கள் இவர்மேல் கோபமுற்றார். அங்கும் இங்கும் ஷட்டில் தறிகளைச் சிலர் உடைத்தனர்.

ஜான் கேயின் ’பறக்கும் சகடம்’

ஷட்டில் தறி வாங்கியவர்களிடம் ஜான் கே காப்புரிமைப் பங்கு எதிர்பார்த்தார். ஆனால் அவருக்குச் சரியாகப் பலர் பணம் கட்டவில்லை. பல வருட முயற்சிகளுக்குப் பின்பு, பிரான்சில் நல்ல வரவேற்பை எதிர்பார்த்து அங்கு சென்றார். அங்கும் ஜான் கே செய்த பறக்கும் சகடம் பரவலானாலும், சரியாக எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. இங்கிலாந்திலும் பிரான்சிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வாழ்வில் பல நாட்களும் மாதங்களும் அவருக்கு வீணாகின.

குஜராத், தமிழக நெசவாளர்கள் பலர் இதை ஆங்கிலத்தில் ஷட்டில் என்றும், சிலர் தமிழ்/இந்தியில் சகடம் என்றும் அழைக்கின்றனர். இந்தியாவில் எல்லாக் கைத்தறிகளிலும் நம் காலத்தில் பறக்கும் சகடம் உள்ளது. இது ஜான் கே செய்து இங்கிலாந்திலிருந்து வந்ததா, இல்லை ஏற்கெனவே இந்தியர்களே செய்ததா எனத் தெரியவில்லை. சில தறிகளில் படகு சகடம் (boat shuttle) என்று ஒரு வகை ஷட்டில் உள்ளது. இது ஜான் கே செய்த பறக்கும் சகடம்போல் அதிவேகமாக இயங்குவதில்லை. இது இந்தியாவின் பாரம்பரியக் கருவியாக இருக்கலாம்.

படகு சகடம், பூஜ்-குஜராத்

ஜான் கே உருவாக்கிய பறக்கும் சகடத்தால் அடுத்த சில வருடங்களுக்குப் பருத்திக்கு மவுசு கூடியது. இந்தியாவுக்கு வந்து பஞ்சுத்துணிகளை வாங்கிச் சென்ற கம்பெனி கப்பல்கள், பருத்தியை வாங்கி கப்பலேற்றிச் சென்றன.

1748இல் லூயிஸ் பால் (Lewis Paul) என்பவர் பஞ்சுப்பொதிகளைப் பதம் படுத்தும் கார்டிங்க் இயந்திரத்தை (Carding machine) கண்டுபிடித்தார். இரண்டு அட்டை (card) இடையே பஞ்சைத் தேய்த்து, கைவழியாக அதுவரை பதமிட்டு வந்தனர். இதை இயந்திரமாக்கினார் லூயிஸ் பால்.

இந்தியாவில் பஞ்சுக்குவியல்களைப் பதம்செய்ய ஒரு வில் போன்ற இயந்திரம் இருந்ததாக ஜோசப் நீதாம் (Joseph Needham) குறிப்பிடுகிறார். இன்று எங்காவது அந்தக் கருவி இருக்கிறதா என்று தெரியவில்லை.

1764இல் ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ் (James Hargreaves) நூற்கும் (spinning jenny) விசையை உருவாக்கினார். பஞ்சிலிருந்து நூலெடுக்கும் ராட்டினத்தை அறிவோம். காந்தியின் சக்கரம் இதுவே. ராட்டினத்திலிருந்து வரும் நூலை ஓர் உருட்டுக்கட்டையில் (spindle) சுருட்டிவிடுவார்கள். இதைச் சரியாக இயக்கி, உடையாத, பதமான நூல் எடுக்கப் பல மாதம் அல்லது பல்லாண்டு பயிற்சி வேண்டும். தறிகளை ஆண்கள் இயக்க, ராட்டினத்தைப் பெண்களே இயக்கிவந்தனர். கல்யாணமாகாமல் வாழ்நாள் முழுதும் நூலைச் சுழற்றியே காலம் போக்கிய பெண்களுக்கு இதனால் ‘நூற்கும் பெண்’’ (spinster) என்று ஆங்கிலத்தில் பெயர் அமைந்தது.

ஒரு குவியல் பஞ்சிலிருந்து ஒரு நூல் மட்டும் எடுக்கலாம். ஆனால் ஹார்கிரீவ்ஸ் செய்த ஜென்னி விசையில் பல நூல்களை ஒரே சமயம் எடுக்கலாம். எட்டு நபர்கள் செய்யும் வேலையை ஒருவர் செய்யும் விசை இது. ஒரு பஞ்சுக்குவியலில் இருந்து எட்டு உருட்டுக்கட்டைகளில் நூலைச் சேர்க்கலாம். அதனால் இந்த விசைக்குச் சிலரிடம் பலத்த எதிர்ப்பும், சிலரிடம் மௌனமான ஆதரவும் கிடைத்தது. ஜான் கே போல் ஹார்க்ரீவ்ஸ் பிரான்சுக்கு ஓடவில்லை. ஆயினும் வேலை இழந்த நெசவாளர்கள், அவர் வீட்டுக்கு வந்து அவர் உருவாக்கிய விசைகளை உடைத்ததால் இரண்டு மூன்று ஊர்களுக்கு இடம் மாறினார்.

1768இல் ரிச்சர்ட் ஆர்க்ரைட் (Richard Arkwright) ‘நூற்கும் நீர்விசையை’ (water frame) உருவாக்கினார். ஒருவர் இயக்கும் ராட்டினம்போல் இல்லாமல், தறி அளவுக்குப் பெரிய இயந்திரம். பஞ்சுக்குவியல்களிலிருந்து நாற்பது முதல் எண்பது உருட்டுக்கட்டைகளில் நூலைச் சேர்க்கும் இயந்திரம். இதை மனிதர்களால் இயக்க முடியாது. அதனால் முதலில் குதிரைகளை வைத்து ராட்டினம் சுற்ற இயக்கினார். நீரோடையில் பாதி முழுகிய பல்லுடைய மரச்சக்கரம் (water wheel), நீரின் வேகத்தால் சுழலும். இதிலிருந்து அச்சுக்கோல் (axle) நீட்டி, நூற்கும் விசையை இயக்கும். இதுவே ஆர்க்ரைட்டின் நீர்விசை.

பல பஞ்சுக்குவியல்களை இணைத்து பஞ்சுப் பொதியாக்கி, இந்தப் பெரிய நீர்விசைக்கு ஊட்டிவிட வேண்டும். பொதியிலிருந்து எண்பது நூல் எடுக்கலாம்.

ரிச்சர்ட் ஆர்க்ரைட்டின் ‘நூற்கும் நீர்விசை’

1775இல் லூயில் பாலின் கார்டிங் இயந்திரத்தில் சில மாற்றங்கள் செய்து பஞ்சுப்பொதியோடு இணைத்தார் ஆர்க்ரைட். அதுவரை குடிசைத் தொழிலாகவும், குடும்பத் தொழிலாகவும் நிலவிய நெசவை ஆலைத்தொழிலாக (factory) மாற்றினார் ஆர்க்ரைட். குராம்ஃபோர்ட் (Cromford) எனும் சிற்றூரில் நெசவாலை அமைத்து, பல ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை வரவைத்து, பலருக்குக் குடிசைகளும் கட்டிக்கொடுத்து, 1150 தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ந்தனர். அதில் மூன்றில் ஒன்று பங்கு சிறுவர்கள். ஏழுவயது குழந்தைகளைக்கூட முதலில் வேலைக்குச் சேர்த்தவர், பின்னர் வயது வரம்பு பத்து என்று மாற்றினார். காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை. தாமதமாக வந்தால் அனுமதி இல்லை. ஒருநாள் சம்பளம் ரத்து.

1775இல் ஜேம்ஸ் வாட் நீராவி எஞ்ஜினை (steam engine) உருவாக்கினார் என்பது நினைவில் இருக்கலாம். 1779இல் ஆர்க்ரைட்டின் ஓர் ஆலையில் நீரோடையால் சுழலும் மரச்சக்கரத்துக்குப் பதிலாக நீராவி எஞ்ஜினால் நூற்கும் விசை இயங்கியது.

1779இல் பல இடங்களில் விசைத்தறிகள் தாக்கி உடைக்கப்பட்டன. பல ஊர்களில் கலவரங்கள் நடந்தன. மரபுத் தொழில் மறைந்துவிடும் என்று அஞ்சிய பல நெசவாளர் குடும்பங்களே விசை உடைப்பு, கலவரம் என்று கலந்துகொண்டனர்.

1785இல் இவை எல்லாவற்றையும் சேர்த்து புதிய அமைப்பில் முழு விசைத்தறியை (power loom) எட்மண்ட் கார்ட்ரைட் (Edmund Cartwright) அறிமுகம் செய்தார். இதற்குப்பின் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு இங்கிலாந்து முழுவதும் கைத்தறிகள் மறைந்து விசைத்தறிகள் பரவலாகின. இந்தியாவிலிருந்து கப்பல்வழியாகச் சென்ற பஞ்சுத்துணிகள், இந்த விசைத்தறிகளால் இங்கிலாந்தில் நெய்த பஞ்சுத்துணிகளுக்கு வழிவிட்டன.

எட்மண்ட் கார்ட்ரைட்டின் ‘விசைத்தறி’

1733இல் ஜான் கே படைத்த பறக்கும் சகடத்தில் தொடங்கி 1785இல் கார்ட்ரைட் படைத்த விசைத்தறி வரை ஐம்பது ஆண்டுகளில் ஒரு பருத்தி புரட்சி உருவாகியது. நிலக்கரியை வைத்து நீராவி விசைப் புரட்சியை இங்கிலாந்து உருவாக்கியது அதிசயமல்ல. தன் மண்ணில் வளராத பருத்தியை மையமாக்கி, மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகளாகப் பருத்திப் பேரரசாய் விளங்கிய இந்தியா செய்யாத புரட்சியை, ஐம்பது ஆண்டுகளில் இங்கிலாந்து நிகழ்த்தியதுதான் சாதனை.

இதில் அரசாங்க நடவடிக்கையும், கடுமையான சட்டமும், உள்ளூர் கலவரங்களையும் எல்லாம் சமாளித்து அசுர வேகத்தில் நிகழ்ந்தது ஆச்சரியம். அடுத்த ஐம்பதாண்டுகளில் விசைத்தறிகளைக் கப்பல் வழியாக இந்தியாவிற்கு அனுப்பி, நெடும் பாரம்பரியம் கொண்ட இந்திய நெசவுத் தொழிலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது மேலும் ஒரு காரணம்.

இதேகாலத்தில் வணிகம் செய்து வந்த கிழக்கிந்திய கம்பெனி, பாரதத்தில் போர்கள் மூலம் ஆட்சியைப் பிடித்து அரசமைப்பானது வரலாற்று விசித்திரம்.

அரசியலும் தொழில்நுட்பமும்

1743இல் சென்னை ஜார்ஜ் கோட்டையைப் பாண்டிச்சேரியிலிந்து வந்த பிரெஞ்சுப் படை கைப்பற்றியது. ஆங்கிலேய கம்பெனியின் சிறு படை அவர்களை எதிர்க்கவில்லை. கோட்டைக் கதவு தட்டப்பட்டபோது சரணடைந்தது. ஆனால் தங்கள் கூட்டாளியான ஆற்காடு நவாபுக்கு உதவிகேட்டு ஓலை அனுப்பியது. பத்தாயிரம் வீரர்கள் கொண்ட நவாபு படையும், முந்நூறு வீரர் மட்டுமே கொண்ட பிரெஞ்சுப் படையும் சென்னை அடையாறு நதிக்கரையில் போர் செய்தன. போரில் பிரெஞ்சு படை வென்றது. நவாபு படை சிதறி ஓடியது. போர் கைதாகிய ஆங்கிலேயப்படை வீரர்களில் ஒருவன் ராபர்ட் கிளைவ்.

சிறையிலிருந்து தப்பித்து கடலூர் டேவிட் கோட்டைக்குச் சென்ற கிளைவ், இனி வர்த்தகம் மட்டும் செய்யும் கம்பெனியாக இருந்தால் போதாது, ராணுவமாக மாறி மதறாஸ் பகுதியை ஆளவேண்டும் என்று வெறிகொண்டான். மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் கடலூர் கோட்டையில் (Fort St David) மதராஸ் ரெஜிமெண்ட் என்னும் படையை அமைத்து, அவற்றுக்கு நவீன பயிற்சி அளித்தார். சிப்பாயாய் இதில் சேர்ந்த ராபர்ட் கிளைவ் சீக்கிரம் கேப்டனாகப் பதவி உயர்ந்தான். அடுத்த பத்தாண்டுகள் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்கும் தமிழகம் எங்கும் போர் மூண்டது (உண்மையில் உலகெங்கும் போர் செய்தனர்). போர் முடிவில் ஜார்ஜ் கோட்டை மீண்டும் ஆங்கிலேயருக்குக் கிடைத்தது. 1757இல் பெரும்பாலும் ஆங்கிலேயர்களை ஆபிசர்களாகவும், தமிழரையும் தெலுங்கரையும் சிப்பாய்களாகவும் கொண்டு இருந்தது மதறாஸ் ரெஜிமண்ட். இந்தப் படை ராஜேந்திரச் சோழனைப்போல் கங்கை கரை வரை சென்று, அங்குள்ள நவாபை வீழ்த்தி வங்காளத்தைத் தன் வசம் கொண்டது. கம்பெனி குமாஸ்தாவாகப் பதினெட்டு வயதில் வேலைக்குச் சேர்ந்த கிளைவ், ராணுவ ஜெனரல் கிளைவாகி, இங்கிலாந்து தேசத்தைவிட ஐந்து மடங்கு பெரிய நிலங்களுக்கு அதிபதி ஆனான்.

இந்தக் காலகட்டத்தில்தான் மேற்சொன்ன பருத்திப் புரட்சி நடந்தது. தூர தேசமாம் இங்கிலாந்தில் இதுபோன்ற பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதைப் பாரத நாட்டின் பண்டிதர்களோ, வணிகர்களோ, மன்னர்களோ அறிந்திருக்கவில்லை. நெசவாளர்கள் கற்பனைகூடப் பண்ணியிருக்க மாட்டார்கள்.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். ஐசக் நியூட்டன், ஆரியபட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் போன்ற மாபெரும் மேதைகளால் இங்கிலாந்தில் பருத்திப் புரட்சி உருவாகவில்லை. தச்சர்களாலும், தறி நெசவாளர்களாலும் நிகழ்ந்தது. மரம், சுத்தியல், ஆணி, கத்தி போன்ற பழைய எளிமையான கருவிகளை வைத்தே பறக்கும் சகடமும், நூற்கும் ஜென்னியும், நீர்விசையும் செய்யப்பட்டன. ஜேம்ஸ் வாட்டின் நீராவி எஞ்ஜினும், கார்ட்ரைட்டின் விசைத்தறியும்தான் இதற்கு விதிவிலக்கு. இதை ஏன் இந்தியத் தச்சர்களும் நெசவாளர்களும் செய்யவில்லை? மஸ்லின் (muslin) போன்ற வியத்தகு துணியை உருவாக்கும் தறியைச் செய்தவர்களுக்கு இந்தச் சின்னச் சின்ன முன்னேற்றங்கள் செய்ய ஏன் தோன்றவில்லை? ஒருவேளை தோன்றிய வேகத்தில் வேலை வாய்ப்பு இழப்பு என்ற பயத்தில் நெசவாளர்களாலேயே அனுமதிக்கப்படவில்லையா?

இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்த விசைகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய முனைந்த ஆங்கிலேயத் தொழிலதிபர்களின் அனுபவமே சாட்சி. இங்கிலாந்தைவிட இந்தியாவில் நெசவுக் கூலி மிகக்குறைவு என்பதாலும், எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும் நூற்கும் ஜென்னி, விசைத்தறி போன்றவற்றை மதுரை, சூரத் போன்ற ஊர்களில் அறிமுகம் செய்ய முயன்றனர். ஆயிரமாயிரம் ஆண்டு நெசவு மரபுள்ள இந்த ஊர்களில் பலத்த மறுப்பு கிடைத்தது. பம்பாய், கல்கத்தா போன்ற பெருநகரங்களில் பல ஆண்டுகள் கழித்தே நவீன விசைகளோடு ஆலைகளை நிறுவ முடிந்தது. இதற்கு ராணுவ பலம், ஆட்சிப் பலம் போன்றவை உதவின. ஐரோப்பியச் செல்வந்தர்கள் இங்கிலாந்தின் மில் துணிகளை வாங்கத் தொடங்கினர்.

1789இல் ஒருபுறம் பிரான்சில் புரட்சி வெடித்து, மன்னராட்சியை ஒதுக்கி, குடியரசு ஆகியது. மறுபுறம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் (U.S.A) இங்கிலாந்திலிருந்து விடுதலை பெற்றுp புதிய நாடாகியது. ஆளும் வர்க்கத்தின் தலைகளை வெட்டியபின், அறிவியல் வர்க்கம், ஆன்மீக வர்க்கம் என நூற்றுக்கணக்கில் தலைவெட்டிய பிரெஞ்சுப் புரட்சி, பின்னர் புரட்சியாளர்கள் மீதே பாய்ந்தது. மன்னராட்சியோ மக்களாட்சியோ, நாம் நம் வேலையைக் கவனிப்போம் என்று பிரெஞ்சு ராணுவம் இத்தாலியைக் கைப்பற்றியது.

மின்சாரத்தின் கதையில் லுயிகி கால்வானி இந்த பிரெஞ்சு ஆட்சிக்குத் தலைகுனிய மறுத்தார் என்று பார்த்தோம். ரோபஸ்பியரி, பராஸ், தாலிராண்டு என்று பிரெஞ்சுக் குடியரசின் தலைவர்கள் மாறிமாறி வந்தனர். ஆஸ்திரியா மீது போர் தொடுத்து நெப்போலியன் வென்றபின் எகிப்தின் மேல் போர்தொடுத்து அலெக்ஸாண்டருக்கும் ஜூலியஸ் சீசருக்கும் போட்டியாக ராணுவப்புகழ் பெற்றார். 1804இல் தன்னை மன்னனாக அறிவித்துக்கொண்டு முடிசூட்டிக்கொண்டார்.

1793இல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வாழ்ந்த ஈலை விட்னி (Eli Whitney) எனும் வழக்கறிஞர், தென் மாநிலம் ஜார்ஜியவுக்குச் சென்றபோது பருத்தி ஜின் (cotton gin) எனும் விசையைக் கண்டுபிடித்தார். எஞ்ஜின் எனும் சொல்லின் சுருக்கமே ஜின். இந்த விசை பருத்தியிலிருந்து விதைகளை நசுக்காமல் பிரித்து, பஞ்சைத் தனியாக எடுத்தது. மிகச் சாதாரணமான இந்தக் கருவியின் தாக்கமும் மிகப் பிரம்மாண்டம்.

ஈலை விட்னியின் ’பருத்தி ஜின்’ விசை

ஒருநாள் முழுவதும் உழைத்தால்கூட ஒரு கிலோ பருத்தியில்தான் விதைகளை விலக்கி பஞ்செடுக்கலாம். ஆனால், விட்னியின் விசை ஒருநாளில் இருபத்தி ஐந்து கிலோ பஞ்சிலிருந்து விதைகளை விலக்கியது. கேரோலைனா முதல் லூயிசியானா வரை பல மாநிலங்களில் பருத்தி விவசாயம் இதனால் மிக லாபகரமாக மாறியது. இங்கிலாந்தின் நிகழ்ந்த பருத்திப்புரட்சியின் பருத்திப்பசியை இந்தியா, எகிப்து தேசங்களின் வயல்களால் தணிக்க முடியவில்லை. அமெரிக்க மாநிலங்கள் இந்தப் பசியைத் தீர்த்தன. 1793இல் இரண்டு லட்சம் கிலோ பருத்தியை ஏற்றுமதி செய்த அமெரிக்கா, 1810இல் நான்கு கோடி கிலோ பருத்தியை ஏற்றுமதி செய்தது. இருபது ஆண்டுகளில் இருநூறு மடங்கு பெருகியது பருத்தி உற்பத்தி.

பௌல்டன் வாட் எஞ்ஜினைபோல், இந்த விசையைப் பஞ்சாலைகளிடம் வாடகைக்குக் கொடுத்து லாபத்தில் நாற்பது சதவிகிதம் கேட்கலாம் என்று விட்னி ஆசைப்பட்டார். ஆனால் பருத்தி ஜின் ஓர் எளிமையான விசை, ஜான் கே உருவாக்கிய பறக்கும் சகடம்போல. அதனால் விரும்பியவர்கள் தாங்களே தச்சர்களை வைத்து இதுபோல் வேறு கருவிகளைச் செய்துகொண்டனர்.

விட்னியைவிடச் சிறப்பான கருவிகளையும் பலர் செய்தனர். காப்புரிமை வாங்கியதால் பல வழக்குகளில் மாறாடினார். ஆனால் அவர் புகழ் நாடெங்கும் பரவியது. சில மாநில அரசுகள் அவருக்கு ரொக்கம் கொடுத்து ஆறுதல் செய்தன. பின்னர் விட்னி துப்பாக்கி செய்வதில் தன் திறமையைக் காட்டினார்.

1803இல் வெளிநாட்டுப் போர்களால் திவாலாகிவந்த பிரான்சின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற, வட அமெரிக்காவில் பிரான்சுக்குச் சொந்தமான பல மாநிலங்களைப் புதிய அமெரிக்க நாட்டுக்கு நெப்போலியன் விற்றுவிட்டான். புரட்சியில் தலையிழந்த பிரெஞ்சு மன்னன் லூயிஸின் பெயரில் லூயிசியானா என்ற மிகச் செல்வம் பொலிந்த மாநிலமும், மிஸ்ஸிஸிப்பி நதிக்கரையோரம் நிலவிய பல மாநிலங்களும் விற்கப்பட்டன. ஆங்கிலேயரிடம் புரட்சி செய்து வென்ற மாநிலங்களோடு சேர்ந்து, இருமடங்கு பெரிதானது அமெரிக்கக் குடியரசு.

பிரான்சு நாட்டில் 1805இல் ஜக்கார்ட் என்பவர் ஒரு மிகச்சிறந்த பட்டுத்தறியை உருவாக்கினார். அவரைப் பாராட்டி நெப்போலியன் தேசிய விருது கொடுத்தான். பஞ்சுப்புரட்சியில் வல்லமை மிக்க இங்கிலாந்திற்குப் போட்டியாக பிரான்சில் பட்டுப்புரட்சி ஓரளவு தொடங்கியது.

பொதுவாகப் புதிய இயந்திரங்கள் உருவாகினால் கடினமான உழைப்பின் தேவை குறைந்து, எளிமையாகப் பல காரியங்கள் செய்யலாம். இதனால் தற்காலிகமாகப் பல லட்சம் மக்கள் வேலை இழந்தாலும், சமூகத்திற்குப் பல நன்மைகள் கிட்டும். தன் விசையால் இப்படி ஒரு மாற்றம் வருமென ஈலை விட்னியும் நினைத்தார். ஆனால் பருத்தி உற்பத்தி பெருகப் பெருகப் விவசாயம் செய்ய ஆட்கள் லட்சக்கணக்கில் தேவைப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த வெள்ளையர்களோ, ஆதிக் குடிகளான செவ்விந்தியர்களோ இதைச் செய்யத் தயாராக இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் அடிமைகள் வாங்கப்பட்டு, அட்லன்டிக் கடலில் அடிமை வணிகம் பருத்திக்குப் போட்டியாகப் பெருகியது. ஏற்கெனவே பல மேற்கிந்தியத் தீவுகளிலும், சில தென் அமெரிக்க நாடுகளிலும் கரும்பு, சோளம் போன்ற பயிர்களை விவசாயம் செய்ய ஐரோப்பிய அடிமைக் கப்பல்கள் இயங்கி வந்தன. ஆயிரம் ஆண்டுகளாக அரேபியரும் பாரசீகரும் எகிப்தியரும் யூதர்களும் செய்துவந்த ஆப்பிரிக்க அடிமை வணிகமும் அமெரிக்கப் பருத்தி உற்பத்திக்காகப் பெருகி வந்தது.

வெள்ளையர்கள் அமெரிக்காவில் மேற்குப் பிரதேசங்களில் பரவத் தொடங்கியவுடன் செவ்விந்தியர்களைத் தாக்கி, அவர்களின் நிலங்களைப் பறித்து, இனப்படுகொலைகளும் பெருகின. காலனியக் கொடிகள் ஓங்கி உலகெங்கும் பறக்கலாயிற்று.

0

________
உதவிய நூல்கள்
– False Economy by Alan Beattie
– Madarasapattinam – K.R.A Narasaiah
– Cotton Revolution – Youtube videos
– Industrial Revelations – BBC Documentary
– Encyclopaedia Brittanica website
– Wikipedia and other websites

பகிர:
கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *