‘இயற்கையில் (பூமியில்) தோன்றும் உயர்திணை அஃறிணைகளின் கால மாற்றங்களை ஆராயும் அறிவியல் துறையே புவியியல்’ என்று சார்ல் லயல் (Charles Lyell) தன் ‘புவியியல் அடிப்படைகள்’ (Principles of Geology) நூலில் இயம்புகிறர். அவர் சொல்லும் புவியியல் ஒரு நூற்றாண்டில் வளர்ந்த விஞ்ஞான ரீதியான துறை. அவர் காலத்திலேயே உயிரினங்களின் வரலாறு ‘தொல்லுயிரியல்’ (paleontology) என்றும், பூமியின் வரலாறு மட்டுமே புவியியல் என்றும் மாறத் தொடங்கியது.
பயிரிடவும் பானை செய்யவும் முதலில் மண்ணைத் தோண்டிய மனிதன், செம்பு, தகரம், இரும்பு, வெள்ளி, தங்கம் எனும் பல உலோகங்கள் பயன் அறிந்து, சுரங்கம் தோண்டத் தொடங்கினான்.
‘அஷ்மா ச மே ம்ருத்திகா ச மே கிரயா ச மே பர்வதாஷ்ச மே ஸிகதாஷ்ச மே வனஸ்பதயஷ்ச மே ஹிரண்யம் ச மே அயஸ் ச மே ஷ்யாமம் ச மே லோஹம் ச மே ஸீஸம் ச மே த்ரபு ச மே யஞ்யேன கால்பந்தாம்’ என்று கிருஷ்ண யஜுர் வேதத்தில் (4.7.5) ஒரு ஸ்லோகம் உள்ளது.
இதன் பொருள் கீழ்வருமாறு:
‘கற்களும் மண்ணும் குன்றுகளும் மலைகளும் மணலும் வனமரங்களும் பொன்னும் இரும்பும் செவ்விரும்பும் செம்பும் காரீயமும் தகரமும் என் யாகத்தால் பெருகட்டும்.’
இது புவியியல் குறிப்பல்ல. வரத்தை வேண்டும் ஸ்லோகம். தாதுக்களை அடையாளம் காட்டி, உலோகங்களை அவற்றிலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் கலை நன்றாக வேத காலத்திலேயே வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு இந்த ஸ்லோகம் சாட்சி.
யஜுர் வேதத்திற்குப் பல்லாயிர ஆண்டுகளுக்குப் பின் கௌடில்யர் இயற்றிய அர்த்தசாத்திரமும், மனு, யாஞ்யவால்கியர், பராசரரர், இத்யாதி முனிவர்கள் இயற்றிய தர்ம சாத்திரங்களும் பலவித சுரங்கம், அதில் கிடைக்கும் தாதுப் பொருட்கள், உலோக நிற வேறுபாடு, நாட்டின் வருமானத்திற்கான முக்கியத்துவம், விலை வரி நிர்ணயம் இத்யாதி விவரங்களை இயம்புகின்றன. இந்தியாவைப்போலவே எகிப்து, சீனம், சுமேரியா போன்ற தொன்மையான நாடுகளில் ஒருவித வேதியியல் வளர்ந்திருந்தது.
ஆனால் பூமியைப் பற்றிய செய்திகள், வேறுவேறு விதமாக இயல்பும் அதி விநோதக் கற்பனையும் கலந்தே இருந்தன.
மத நம்பிக்கைகள் இதற்கு மிகப்பெரிய காரணம்.
பிரம்மதேவன் பூமியையும் அதனுள்ள அனைத்து உயிர்களையும் படைத்தான் என்பது இந்தியப் புராணங்களின் வாக்கு. மேரு எனும் பெரும் பொன்மலை பூமியின் மத்தியிலுள்ளது. அதன் உச்சியில் தேவர்கள் வாழும் தேவலோகம் உள்ளது. மேருவைச் சூழ்ந்து நான்கு திசைகளில் குரு, பாதராஷ்வா, பரதம், கேதுமாலா என்று நான்கு கண்டங்கள் உள்ளன. இவற்றைச் சூழ்ந்து உப்புக் கடல், பாற்கடல் என்று ஏழு கடல்கள் உள்ளன. மேருவைச் சூரியன் சுற்றி வருவதால் பகலும் இரவும் மாறிமாறி வருகின்றன. பூமிக்கு அடியே அதள, விதள, சுதள, பாதாள என்ற வரிசையில் ஏழு லோகங்கள் உள்ளன. இதில் வெவ்வேறு தளங்களில் நாகர்கள், அரக்கர்கள் போன்ற இனங்கள் வாழ்கின்றனர் என்கிறன புராணங்கள். இதை இந்து மத நூல்கள் மட்டுமல்ல பௌத்த, சமண நூல்களும் கூறுகின்றன.
‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்; காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு மேரு வலம் வருதலான்’ என்கிறது சிலப்பதிகாரம். ஆரியபட்டன், வராகமிகிரன் ஆகிய இந்திய வானியல் வல்லுநர்கள் பூமி ஒரு கோளம், வானமும் ஒரு கோளம், அட்சரேகை தீர்கரேகை என்று கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் கூறியதெல்லாம் பொதுவில் புலவர்கள் பண்டிதர்கள் சம்பாஷனைகளில்கூட பதினெட்டாம் நூற்றாண்டு வரை பரவலாகப் பேசப்படவில்லை.
எகிப்தியர் வானத்தை நுட் (Nut) எனும் பெண் தேவதையாகவும், பூமியை அவளது கணவன் ஜெப் (Geb) என்றும் நம்பினர். வானுலகம் மேலும், மற்ற நாடுகள் அடங்கிய பூவுலகம் கீழும் இருக்க, இவ்விரண்டுக்கும் நடுவே சீன நாடு நிலைப்பதாக சீனர் நம்பினர். மத்திய ராஜ்ஜியம் (Zhongguo ஷாங்குவோ) என்பதே சீனத்தின் பழைய பெயர். மௌரிய மன்னன் அசோகனின் காலத்தில் ஆறு நாடுகளை இணைத்த சீன் ஷி ஹுவாங்க்தீ (Qin Shi Huang Di) எனும் ராணுவ வீரன், மன்னனாக முடிசூடிய பின் தன் பெயர் சீன்(Qin) என்பதை நாட்டுக்கும் பெயராகச் சூட்டிவிட்டான். பண்டைய கிரேக்கர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தை லிப்யா (Libya) என்றழைத்தனர். அனதோலியாவின் (Anatolia – இன்றைய துருக்கி) கிழக்கே உள்ள எல்லா நிலங்களையும் ஆசியா என்றனர்.
அலெக்ஸாண்டர் படையெடுத்து வரும்முன் அவர்களுக்கு இந்தியா எவ்வளவு பெரிது என்றோ அதைத் தாண்டி இன்னும் பெரிய சீன தேசம் இருப்பதோ தெரியாது. ஸ்ட்ராபோவின் (Strabo) வரைப்படம் இதைத் பிரதிபலிக்கிறது.
சமீப காலம்வரை ‘மூன்று நிலங்களிலும்’ என்று ஜப்பானியர் பேச்சுவழக்கில் முழு உலகையும் குறிப்பிட்டனர். ஜப்பான், சீனா, இந்தியா மட்டுமே இந்த மூன்று நிலங்கள். கொலம்பஸ் கடல் கடக்கும் வரை பசிபிக் பெருங்கடலும், அமெரிக்கக் கண்டங்களும் ஆசியரும் ஐரோப்பியரும் அறியாதவை. ஆரியபட்டன், வராகமிகிரன் போன்ற இந்திய வானியல் பண்டிதர்கள் பூமியின் அந்தப் பகுதியை சித்தபுரம் என்றனர்; ஆனால் இந்தியாவைத் தாண்டி அவர்களது பூகோள ஞானம் சொற்பமே.
ரோமாபுரியில் வாழ்ந்த மூத்த பிளைனி (Pliny the Elder) இயற்றிய புத்தகம் ‘இயற்கையின் வரலாறு’ (Natural History). கி.பி. பதினாறாம் நூற்றாண்டு வரை அதுவே இத்துறையின் ஆதார காப்பியமாக ஐரோப்பாவில் திகழ்ந்தது.
அலெக்சாண்டருடன் வந்த மெகஸ்தனீசு (Megasthenes) எழுதிய இந்திகா (Indica) என்ற புத்தகம், அவனுக்குப் பின் இந்தியா வந்து மீண்டும் மேற்கே சென்றவர்களின் பல தகவல்களையும், செவிவழிச் செய்திகளையும் நன்றாகத் தொகுத்து வழங்கும் புத்தகம்.
அக்கம்பக்கத்துத் தேசங்களில் தொடங்கி, தூர தேசங்களின் நிலம், நதி, மலை, வனம், மக்கள், மதம், சமூகம், செல்வம், பண்பாடு, விநோதம், விசித்திரம் என்று பல விவரங்களைத் தொகுத்து வழங்கிய புத்தகம். உலகம் ஒரு கோளம், கோள உலகில் பல கடல்கள் உள்ளன. ஆனால் இதைப் பாமர மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் மெகஸ்தனீசு.
இத்தாலி, கிரேக்கம் போன்ற அண்டை நாடுகளையும், சிரியா, பாரசீகம், சீனா, தாப்ரோபணீ (தாமிரபரணி – இலங்கைத்தீவு), கங்கை, இமயமலை, கருங்கடல், கேஸ்பியன் கடல் என்று பல விவரங்களையும், பல்வேறு விசித்திர மிருகங்களையும் மரங்களையும் வர்ணித்துள்ளார். அக்காலத்தில் மற்ற பல கலைகளில் சிறப்பான நூல்களைக் கொண்ட பாரத நாட்டில் இப்படி ஒரு நூல் இல்லாதது நம் நாட்டுக் குறை. ரத்த மழை, பால் மழை, ஒற்றைக்கால் மனிதர்கள் என்ற பல விநோத செவிவழி வரலாறுகளையும் பதித்துள்ளார்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டைன் (Constantine) மன்னன் ஆட்சியில் தொடங்கிய கிறிஸ்தவம், ஐரோப்பாவை ஒரு நூற்றாண்டில் கைபிடித்தது. அம்மதம் பண்டைய மதங்களை நசுக்கியதோடு திருப்தி கொள்ளாமல், அவர்களது முன்னோர்கள் சேர்த்த ஞானத்தை எல்லாம் அழித்தும், புரக்கணித்தும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் இருண்ட காலமாக (Dark Ages) ஐரோப்பாவில் நிலவியதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
திருமகள் போலப் பெருநிலச்செல்வி
பதினைந்தாம் நூற்றாண்டில் ஜார்ஜியஸ் அக்ரிகோலா (Georgius Agricola) சுரங்கங்களையும் உலோகங்களையும் ஆராய்ந்து பெரும் தொகுப்பாய் ஒரிரண்டு புத்தகம் எழுதினார். ஜார்ஜ் பாவர் (Georg Bauer) என்ற தனது ஜெர்மானிய இயற்பெயரை லத்தீனத்தில் ஜார்ஜியஸ் அக்ரிகோலா என்று மாற்றிக்கொண்டார். மதுரை மெஜுரா ஆனதுபோல், இயேசு ஜீசஸ் ஆனதுபோல், இந்தப் பழக்கம் ஐரோப்பா முழுவதும் தொடர்ந்தது.
இயற்கையின் எச்சம் என்பதில் ‘தொல்லெச்சம்’ (fossil) பற்றி முதல் குறிப்புகளைத் தந்தவர். காற்றும் கடலும் எப்படி மண்ணையும் கல்லையும் அதனால் பூமியையும் மாற்றுகின்றன, நிலத்தடி நீரும் நிலத்தடி வெப்பமும் தாதுக்களைச் சேமித்து பூமியைத் தளங்களாய் அமைத்துள்ளன என்று இயம்பிய புத்தகம் இது. பிளைனிக்கு நேரெதிராக, தான் நேரில் கண்டு ஆராய்ந்து புரிந்துகொண்டதை மட்டுமே புத்தகத்தில் பதிவதாக முதலில் அறிவித்தார் அக்ரிகோலா.
1638இல் டென்மார்க்கில் பிறந்த நீல்ஸ் ஸ்டீஸன் (Niels Steesen – லத்தீன மொழியில் இவர் பெயர் நிகோலஸ் ஸ்டெனோ Nikolas Steno என்று திரிந்தது.) மருத்துவம் கற்று, உடற்கூற்றியலில் (anatomy) ஆர்வம் கொண்டார். நடந்த கால்கள் நொந்தாமல், எங்கும் நிலைத்துத் தங்க விரும்பாமல் லெய்டன், பாரிஸ், போர்தோ என்று நாடோடியாய் பல ஆண்டுகள் பயணித்து மருத்துவர்களோடும் ஆராய்ச்சியாளரோடும் பழகி, நெடும் கல்விப் பயணம் மேற்கொண்டார். கடைசியில் இத்தாலியின் ஃபிரன்சே (Florence) நகரில் பெர்டினாண்ட் மெதிசியின் (Ferdinand Medici) மருத்துவராகப் பதவி ஏற்றார்.
ஒரு சுறா மீனைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது சுறாவின் பற்கள் எங்கோ ஒரு பாறையில் பதிந்திருந்த வடிவங்களைப்போல் தோன்றியது. குளோஸோபெட்ரீ (glossopetri) என்று இவை பெயர்பெற்றவை. ஒரு பாறைக்குள்ளே எப்படி ஒருபொருள் புகுந்து பதிந்திருக்க முடியும்? ஃபேபியோ கொலோனா என்பவர் இதுபோன்ற குளோஸொபெட்ரியை எரித்து அது சுண்ணாம்பு என்று நிறுவியிருந்தார். மண்ணிலிருந்து பாறைக்குள் சுண்ணாம்பு ஊரி புகுந்திருக்கும் என்னும் வேறு ஒருவரின் கருத்தை ஸ்டெனோ ஏற்கவில்லை. இவை ஏதோ தொன்மையின் எச்சங்கள் (fossil) என்று பலரும் ஒப்புக்கொண்டனர்.
கல்லும் மலையும் குன்றும் மண்ணும் ஏறி இறங்கிப் பல ஆண்டுகள் பார்த்துப் பழகியதாலும், சுரங்கம் தோண்டும்போது வெவ்வேறு வகை தாதுக்கள் வெவ்வேறு தளங்களில் இருப்பதாலும், இந்தத் தளங்கள் எப்படி உருவாகியிருக்கும் என்று யோசிக்கத் தொடங்கிய காலம் இது. காற்று, மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சக்திகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இவ்வாறு தாதுக்களைப் புரட்டிச் சேர்த்துத் தளங்களை அமைத்திருக்க வேண்டும் என்று ஸ்டெனோ யூகித்தார். இதுபோன்ற பாறைகளை செடிமெண்டரி (sedimentary; தமிழில் ‘அடித்தட்டு பாறைகள்’) என்று பெயர் சூட்டினார். அக்ரிகோலாவின் புத்தகங்களைப் படித்தாரா என்று தெரியவில்லை. தளவியல் (stratigraphy) என்று ஒரு புதியதுறை இவ்வாறு பிறந்தது. இதன் அடிப்படை விதிகளை 1669இல் ஸ்டெனோ வகுத்தார்.
இதுவே புவியியலின் முதல் நூல் என்று சிலரால் கருதப்படுகிறது.
பூமாதேவியே உன் வயதென்ன?
1687இல் ஐசக் நியூட்டனின் இயற்பியல் கருத்துக்களைப் புத்தகமாகத் தொகுத்துப் பதிவிட்ட பெருமையைப் பெற்றவர் இங்கிலாந்தின் எட்மண்ட் ஹேலி (Edmund Halley). நியூடனின் விதிகளையும், தான் எடுத்த குறிப்புகளையும் வைத்துக்கொண்டு 1682இல் கண்ட ஒரு தூமகேது (வால்நட்சத்திரம்) மீண்டும் 1758இல் வரும் என்று கணித்து அறிவித்தார். அதற்குள் அவர் இறந்தாலும் 1758இல் அந்தத் தூமகேது வந்தபோது அதற்கு ஹேலியின் தூமகேது (Halley’s Comet) என்று பெயரிடப்பட்டது.
யூத, கிறிஸ்தவப் புனித நூலான பைபிளில் நோவா கண்ட பெருவெள்ளம் ஒரு மிக முக்கியச் சம்பவம். இறைவன் நோவாவின் கனவில் தோன்றி ஓயாத மழையும், அதனால் உலகமே மூழ்கும் பெருவெள்ளமும் வரப்போவதாக எச்சரித்தார். ஒரு பெரும் கப்பலை (Noah’s Ark) செய்து எல்லா விலங்கினத்திலும் ஒரு ஜோடியை அதில் ஏற்றவேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.
ஒரு தூமகேது கடலில் விழுந்து நோவாவின் பெருவெள்ளத்தை உருவாக்கியிருக்கும் என்று ஒரு கருத்தை ஹேலி முன்வைத்துப் பாதிரியார்களின் பெரும் கோபத்துக்கு ஆளானார். பல்வேறு கடல்களின் உப்பை அளந்து, இதனால் பூமியின் வயதை நிர்ணயிக்க முடியும் என்று வேறு ஒரு கருத்தையும் தெரிவித்தார் ஹேலி. ஜேம்ஸ் அஷர் (Bishop James Ussher) எனும் பாதிரியார் பைபிளை ஆராய்ந்து, கி.மு. 4004இல் இறைவனால் பூமி படைக்கப்பட்டது என்று 1650இல் முன்மொழிந்தார். இக்கணிப்பு ஐரோப்பாவில் பரவலாக ஏற்கப்பட்டது.
மின்னல் வானத்து மின்சாரம் என்ற பெஞ்சமின் பிராங்க்ளினின் (Benjamin Franklin) யூகத்தை முதலில் நிறுவிய தாமஸ் தாலிபார்தைத் தூண்டியவர் ஜார்ஜ் லெகிளர்க் (George leClerc) எனும் காம்தே புஃபான் (Comte Buffon). கணிதத்தில் பல புதுமைகளைக் கண்ட புஃபான், புவியியலில் ஆர்வம் கொண்டு பரவலாகத் தாவரம், விலங்கு, தாது என்று ஆராய்ந்து அக்ரிகோலாவை மிஞ்சி முப்பத்தாறு பாகப் பெரும் புத்தகத்தை இயற்றினார். பிளைனியைப்போல இதற்கு இயற்கையின் வரலாறு என்று பெயரிட்டார். உருகிய இரும்பு இறுகி திண்மமாக மாற எடுக்கும் நேரத்தைக் கணித்து, பூமியின் வயது எழுபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் என்று முன்மொழிந்தார். அஷர் பாதிரியாரின் ஆறாயிரம் ஆண்டு கணிப்பைத் தைரியமாக எதிர்த்த முதல் விஞ்ஞானி புஃபான். வெவ்வேறு பிரதேசங்களில் தளவமைப்பு, சீதோசனம் போன்றவை ஒற்றிருந்தும் வாழும் விலங்கினமும் தாவரமும் வேறுபட்டவை என்பதைச் சுட்டிக்காட்டினார். உயிரியலையும் பூகோளத்தையும் முதலில் ஒப்பிலக்கணம் செய்தவர் இவரே. பிற்காலத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் இத்துறையை (biogeography – உயிர்ப்புவியியல்) விஸ்தாரமாக்கினார்.
கடலில் பாயும் நதிகள்
இங்கிலாந்திலிருந்து மேற்கே அமெரிக்கா வரும் கப்பல்களைவிட, அமெரிக்காவிலிருந்து மேற்கே இங்கிலாந்துக்குச் செல்லும் கப்பல்களுக்கு இரண்டு வாரம் அதிகமாகத் தேவைப்பட்டது. இதை முதலில் கேள்விப்பட்ட பெஞ்சமின் பிராங்க்ளின், பூமியின் சுழற்சியால் கடல் பயண வேகம் மாறுபடுகிறது என்று நினைத்தார். கடலடியில் ஓடும் ‘பெருங்கடல் நீரோட்டம்’ (ocean current) தான் காரணம் என்று பல கடலோடிகள் விளக்கினர். இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே 1513இல் யுவான் போன்ஸ் தெ லியோன் (Juan Ponce de Leon) என்ற இஸ்பானிய கலபதி, இந்த அட்லாண்டிக் கடலடி நீரோட்டத்தை அனுபவித்து கப்பலின் குறிப்பில் எழுதியிருந்தார், ‘கப்பலின் பாய்மரத்தை பலமான காற்று மேற்கே தள்ளியபோதும், முன்னே செல்லாமல் கப்பல் பின்வாங்கியது. கடலடி நீரோட்டமே அவ்வளவு பலமானது.’
பிராங்க்ளின் இதைப் புரிந்துகொள்ளத் தனது கடற்பயணங்களில் நீளமான கயிறுகளில் வெப்பமானிகளை (thermometer) கட்டி, கடலில் வெவ்வேறு ஆழங்களில் தொங்கவிட்டுப் பார்த்தார். அப்போது ஒரு சில ஆழங்களில் கடலடி நீரோட்டத்தின் வெப்பம் அதிகமாக இருப்பதைப் புரிந்துகொண்டார். மெக்சிகோவின் வளைகுடாவில் தோன்றி, வெப்பத்தோடும் வேகத்தோடும் மேற்கே அயர்லாந்து இங்கிலாந்து வரை சென்று, அதன்பின் வடக்கே வளைந்து, வெப்பம் குறைந்து, மீண்டும் அட்லாண்டிக் கடல் வழியாக கனடா தேசம் வரை இந்தக் கடலடி நீரோட்டம் பாய்வதைப் பல பயணங்களுக்குப்பின் புரிந்துகொண்டார். வளைகுடா நீரோட்டம் (Gulf Stream) என்று இதற்குப் பெயர் கிட்டியது.
ஃபிலடல்ஃபியாவில் (Philadelphia) தபால்துறைத் தலைவராக பிராங்க்ளின் பணி புரிந்ததால் கப்பல்களின் பாதையும் வேகமும் புரிந்துகொள்ளத் தொழில்ரீதியாக அவருக்கு அக்கறை இருந்தது. ஆனால் பிராங்க்ளின் வரைந்த ‘வளைகுடா நீரோட்டப் பாதை வரைபடத்தைக் கலபதிகளும், கப்பல் கம்பெனிகளும் உடனே பயன்படுத்தவில்லை. பல தசாப்தங்கள் கழித்தே இவை நேரத்தையும் செலவையும் மிச்சம் செய்யப் பயன்பட்டன.
வட அமெரிக்காவை விட்டுவிட்டு பெரும்பாலும் மெக்சிகோவையும் தென்னமெரிக்காவையும் கடல்வழியாக இஸ்பானிய, போர்த்துகீசிய கப்பல்கள் அடைந்ததற்கு இந்த வளைகுடா நீரோட்டம் ஒரு முக்கியக் காரணம்.
நீராரும் கடலுடுத்த
ஜேம்ஸ் வாட் பிறந்த ஸ்காட்லாண்டில் எடின்பரா நகரில் 1726இல் ஜேம்ஸ் ஹட்டன் (James Hutton) பிறந்தார். அந்துவான் லவோய்சியேபோலவே எடின்பரா (Edinburgh) கல்லூரியில் சட்டமும் செவ்விலக்கியமும் கற்றாலும், ஹட்டனின் ஆர்வம் வேதியியல்பால் பாய்ந்தது. லெய்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று எடின்பரா திரும்பிய ஹட்டன், சால் அம்மோனியக் (sal ammoniac) எனும் சலவைப் பொருளைத் தயாரிக்க ஒரு ரசாயனப் பட்டறை தொடங்கி நன்கு சம்பாதித்தார். பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கி, பல்வேறு விவசாயப் பரிசோதனைகளைச் செய்து, விவசாயத்தின் அடிப்படைகள் (The Elements of Agriculture) என்று ஒரு புத்தகம் இயற்றினார். விவசாய ஆர்வம் புவியியல் ஆர்வமாக மறுவியது.
பிரான்சில் ஹட்டனுக்கு சமகாலத்தில் வாழ்ந்த் யாந்-எதியென் கெத்தார்த் (Jean Etienne Guettard) 1746இல் உலகின் முதல் புவியியல் வரைபடங்களை (geological maps) உருவாக்கினார். ஒரு படம் பிரான்சு-இங்கிலாந்து இருநாடுகளின் புவி தளங்களைக் காட்டியது; மற்றொன்று முழு ஐரோப்பாவின் புவிதளங்களின் படம். (இவருக்கு லவோசியே சீடரானார்). தன் பயணங்களில் 1751இல் வோல்விக் (Volvic) எனும் கிராமத்தை அடைந்தார். அங்கு பல வீடுகள் பசால்ட் (basalt) எனும் கருங்கல்லால் கட்டப்பட்டிருந்தன. எரிமலைகளில் உருவாகும் பிழம்பு காலப்போக்கில் இறுகி பசால்ட் பாறையாக மாறியது என்று காட்டினார்.
லத்தீன அக்னி தேவனின் பெயர் வல்கன் (Vulcan). அக்னி கக்கும் எரிமலை அவன் பெயரைத் தழுவி வால்கனோ (volcano) என்று பெயர் பெற்றது. மலை உருகி மண்ணாகிய காலத்து முன்தோன்றிய காலத்தே சம்ஸ்கிருத அக்னி லத்தீன மொழியில் இக்னி என்றிருந்தது. தீ பற்றவைப்பதற்கு இக்னிஷன் (ignition) என்றும், எரிமலையில் தோன்றிய கற்களை இக்னியஸ் (igneous) கல் என்றும் பெயர்கள் அமைந்தன.
ஜெர்மனியின் முன்னோடி நாடான பிரஷியாவில் ஃப்ரைபர்க் (Freiberg) நகரின் ‘சுரங்கக் கல்லூரி’ (Mining Academy) பேராசிரியர் ஆப்ரகாம் கோட்லோப் வெர்னர் (Abraham Gottlob Werner). நிலமெல்லாம் ஐந்து தளங்களாய் வெவ்வேறு காலகட்டங்களில் உருவாகியது என்று இவர் கருதினார். ஆதியில் எல்லாக் கடல்களும் ஒன்று சேர்ந்து கண்டங்களை மூழ்கவைத்து, அதனால் ஆதித்தளம் உண்டானதென்றும், இத்தளத்தின் மேல் சுண்ணாம்புத்தளம், அதன் மேல் மலைகள் உதித்து அமைந்த தொல்லெச்சத் தளம், அதன் மேல் நதிகளாலும் கடலலைகளாலும் உருவாகிய மணல், மண் தளம், கடைசியில் எரிமலைகள் வெடித்து உண்டாகிய பசால்ட் போன்ற இக்னியஸ் கற்களாலான தளம் என்று வரிசை வகுத்தார் வெர்னர்.
வெர்னர் முன்மொழிந்த ஆதிகடல், முதலில் கெத்தார்த் முன்வைத்த கருத்து. நோவாவின் பெருவெள்ளத்தை இருவரும் தீண்டவில்லை. கடலின் லத்தீனக் கடவுள் ‘நெப்ட்யூன்’ (Neptune). அதனால் இந்தக் கொள்கையை நெப்டியூனிசம் என்றனர். இப்பெயரைத்தான் பின்னர் சூரியக் குடும்பத்தின் எட்டாவது கிரகத்திற்கு விண்ணியல் விஞ்ஞானிகள் சூட்டினர்.
வெர்னர் அறிவியல் கட்டுரைகளை எழுதிப் பதியவில்லை. மிகத் திறமையான பேச்சாளர். புவியியலில் ஒரு மாணவப் பெரும்படையை ஊக்குவித்து உருவாக்கினார். ஆனால் ஸ்டெனோ, கெத்தார்த்போல் இவர் பரவலாகப் பயணிக்கவில்லை. சிறுவயதில் நோய்வாய்பட்டதால் தான் வாழ்ந்த பிரஷிய தேசத்தைத் தாண்டி பெரிதும் இயற்கை ஆய்வு செய்யவில்லை. இருந்தாலும் தான் கண்ட பிரஷிய நிலவமைப்பை வைத்து உலகெங்கும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தவறாக யூகித்தார் என்று சார்ல் லயல் தன் புவியியல் புத்தகத்தில் குற்றம் சாட்டுகிறார்.
இதற்கு நேரெதிராக லயலின் பார்வையில் ஜேம்ஸ் ஹட்டன் ஸ்காட்லாந்தில் சில பகுதிகளைப் பார்க்கும்போது, படிமேல் படியாகக் காணும் புவித்தளங்களின் நடுவே செங்குத்தாக நீட்டி நிற்கும் பாறை அமைப்புகளை கண்டார். இதற்கு ‘ஒவ்வா அமைப்பு’ (Unconformity) என்று பெயர் சூட்டினார். நிக்கொலஸ் ஸ்டெனோவும் வேறு சிலறும் இதுபோன்ற ஒவ்வா அமைப்புகளை ஏற்கெனவே கண்டு பதிவு செய்தனர். அடித்தட்டுப் பாறைகள் (sedimentary rocks) தளமாய் அமைந்த பின்னர் எரிமலைகள் வெடித்து அனற்பிழம்பாகின (lava) என்று ஒரு விளக்கத்தை முன்வைத்தார். எரிமலைகள் இந்தத் தளங்களுக்கெல்லாம் கீழே உள்ள பாதாள தளங்களில் உருகிய பாறைகளை எரிமலைகள் மேலே கொண்டு வருகின்றன என்றார். லத்தீன பாதாள தேவன் புளூடோ (Pluto) என்பதால் இந்தக் கருத்துக்கு புளுடோனிசம் (Plutonism) என்று பெயர் அமைந்தது. புளூடோவின் பெயர் பின்னால் 1930இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பதாம் கிரகத்திற்குச் சூட்டப்பட்டது.
நெப்டியூன்வாதிகள் இதை ஏற்கவில்லை. ஆதி பெருங்கடல் காலத்திற்கு முன்பே எரிமலைகள் எல்லாம் வெடித்து முடித்துவிட்டன. அதற்குப் பின் எரிமலைகள் தீப்பாறைகளை உருவாக்கவே இல்லை என்று ஆதாரமே இல்லாமல் சிலர் வாதாடினர். கருத்து வேறுபாடு கடும் மோதலாக பல தசாப்தங்கள் தொடர்ந்தது. நீராரும் கடலுடுத்தி நிலமடந்தை எழிலொழுகும் என்று நெப்டியூன் கழகக் கண்மணிகளும், இல்லை இல்லை நெடியான வல்வினைகள் நிலத்தடியில் தீமூட்டி படியாய் பதிந்ததுவே புவியியல் காண்மீனோ என புளுடோ சித்தாந்த சிந்தாமணிகளும் கட்டுரை ஏவுகணைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 1830களில் சார்ல்ஸ் லயல் எழுதிய புத்தகம் இந்தச் சண்டையில்தான் ஆரம்பிக்கிறது.
புஃபான் எழுபத்தி ஐந்தாயிரம் ஆண்டுகள் என்று கணித்த பூமியின் வயதைப் பல லட்சம் பல கோடி என்று இரு கட்சிகளும் வாதிட்டு, சில கிறிஸ்தவக் கொள்கையாளர்களோடும் சர்ச்சைகள் தொடர்ந்தன.
அந்துவான் லவோய்சியே வேதியியலையே புரட்டிப்போட்டதும், நீராவி விசைகளால் போக்குவரத்து வேகமானதும், பண்டிதர்களும் நெடுந்தூரக் கப்பல் பயணங்கள் செல்ல வாய்ப்பு உருவானதும், மற்ற துறைகளை ஊக்குவித்து உயர்த்தியதுபோல் அடுத்த சில ஆண்டுகளில் நடந்த விசை விஞ்ஞானப் புரட்சிகள், புவியியலையும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்தின.
0
________
உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்
– Principles of Geology – Charles Lyell
– Natural History – Pliny the Elder
– Arthashastra – Thomas Trautmann
– Eight Little Piggies – Stephen Jay Gould
– Wikipedia and other websites
– Microsoft Copilot