அமெரிக்கோ வெஸ்பூச்சி (Amerigo Vespucci), கொலம்பஸ் சென்ற கடல்வழியில் இரண்டு புதிய கண்டங்களை 1497இல் கண்டுபிடித்தார். இவ்விரண்டு கண்டங்களுக்கு வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அவர் பெயரையே சூட்டினர் என்றும் பார்த்தோம். சில ஆண்டுகளில் தென் அமெரிக்காவைக் கப்பலில் சுற்றி வந்து பசிபிக் பெருங்கடலைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார் பல்போவா (Balboa) என்றும் பார்த்தோம்.
சாவக சுமத்திரை தீவுகளில் கம்பெனி நிறுவி ஆட்சி பிடித்த ஹாலந்து நாட்டினர், 1720இல் அதற்கும் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் சென்று ஆஸ்திரேலியக் கண்டத்தின் மேற்குக் கடற்கரையை எதேச்சையாக அடைந்தனர். புது ஹாலந்து (New Holland) என்று அந்த இடத்திற்குப் பெயர் வைத்தனர். அங்கு ஏற்கெனவே பூர்வக் குடிகள் (Aborigine) ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இருந்தனர். அந்தப் பூர்வக்குடிகள் விவசாயமோ நெசவோ செய்யவில்லை. நகரம் ஏதும் அமைக்கவில்லை. பல்வேறு மொழிகள் பேசும் தனித்தனிக் குழுக்களாகவே இருந்தனர். இதற்கு முன்பே ஹாலந்து நாட்டின் ஏபல் டாஸ்மான், இன்றைய நியூசிலாந்து தீவுகளை அடைந்து ஹாலந்தின் ஒரு பிரதேசமான சீலந்து பெயரைச் சூட்டினார்.
திரைகடலோடி திரவியம் தேடிய ஐரோப்பியர்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் அறிவியல் மீது நாட்டம் கொண்டு கடற்பயணங்களை மேற்கொண்டனர். அந்துவான் லவோசியேவின் குருநாதர்களில் ஒருவரான நிக்காலாஸ் த லகேய்ல் (Nicolas de la Caille), தென் ஆப்பிரிக்காவிற்குக் கடல்பயணம் சென்று பூமியின் வடகோளத்தில் காணவியலா பல நட்சத்திர ராசிகளை (constellations) அடையாளம் கண்டு, பெயர் சூட்டி, வானியல் வரைபடத்தில் சேர்த்தார் என்றும் பார்த்தோம்.
வானியல் ஆர்வம் மட்டுமே இந்தப் பயணத்தையும் பணியையும் தூண்டவில்லை.1721இல் லண்டன் அருகே கிரீன்விச் எனும் சிற்றூரில் ஆங்கிலேயர் ஒரு பெரும் வானியல் கோளரங்கத்தை உருவாக்கினார். அங்கே ஒரு நீளக் கோடு வரைந்து, வட துருவம் முதல் தென் துருவம் வரை கிரீன்விச் வழியே செல்லும் கோட்டைப் பிரதான தீர்கரேகை (Prime meridien) என்று அறிவிக்கத் திட்டமிட்டனர். இதுவே 1884க்குப் பின்னர் கிரீன்விச் மெரிடியன் (Greenwich meridien) என்று புகழ்பெற்றது.
கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் எகிப்தில் நிறுவிய அலெக்ஸாண்ட்ரியா நகரே பண்டைய யவனர்களுக்குப் பிரதான தீர்கரேகை. உஜ்ஜையினி நகரம் வழியே இரு துருவங்களை இணைக்கும் தீர்கரேகையே ஆரியபடன், பாஸ்கரன், மாதவன் ஆகிய பாரத ஜோதிடர்களுக்கு இந்தியப் பிரதான தீர்கரேகை.
உலகெங்கும் ஆங்கிலேயரோடு போரும் போட்டியும் நடத்திய பிரெஞ்சு மக்கள் கிரீன்விச் தீர்கரேகையை ஏற்கவில்லை. லகெய்ல், பாரிஸ் நகரம் வழியாக ஒரு தீர்கரேகையை (Paris Meridien) தீர்மானிக்கத் திட்டம் வகுத்தார். இரண்டாண்டு ஆய்வு செய்து 1739இல் பிரான்ஸில் அளவைகள் எடுத்தார். இந்தத் தீர்கரேகையை மற்ற பாகங்களை அளவிட வடக்கே ஒரு குழுவும், தென்னாப்பிரிக்காவிற்கு லகெய்ல் குழுவும் பயணம் செய்தன.
கேப்டவுன் (CapeTown) நகரில் கிரிக்கெட் போட்டி நடந்தால் அரங்கத்தின் பின்னே தெரியும் வட்டமேசை வடிவ டேபிள்டாப் (Tabletop mountain) மலை மேல் ஏறி, 1750இல் வானியல் புவியியல் அளவைகளை எடுத்தார் லகெய்ல். மலைக்கு நன்றியாகத் தான் அடையாளம் கண்ட ஒரு நட்சத்திர ராசிக்கு, டேபிள்டாப் மலையின் லத்தீன பெயரை ‘Mons Mensa (மான்ஸ் மென்ஸா)’ சூட்டினார். பூமி சுழலும் வேகத்தால் பூமத்தியரேகை அருகே பூகோளம் பருமனாக இருக்கவேண்டும்; துருவப் பிரதேசங்களில் தட்டையாக இருக்கவேண்டும் என்று ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசை அடிப்படையில் கணித்தார். வட துருவப் பிரேதத்தைவிடத் தென் துருவத்தில் பூகோளம் தட்டை என்று தன் அளவைகளின் அடிப்படையில் லகெய்ல் அறிவித்தார். எழுபது ஆண்டுகளுக்குப் பின் இமயமலை சிகரங்களின் உயரத்தை அளந்த ஜார்ஜ் எவரெஸ்ட் (George Everest), இது தவறு என்றும், டேபிள்டாப் மலையின் ஈர்ப்புவிசையைக் கணக்கில் சேர்க்காததால் லகெய்ல் தப்புக்கணக்கு போட்டார் என்றும் வாதாடினார்.
கண்டோம் கண்டங்கள் புதிது
1770களில் பசிபிக் பெருங்கடலைக் கடந்து தீவுகளை அடையாளம் கண்டு, வெள்ளிக் கிரகத்தின் சூரியாயணத்தை (Transit of Venus) பதிவு செய்ய கேப்டன் ஜேம்ஸ் குக் (James Cook) கப்பல் பயணம் மேற்கொண்டார். தஹிதி (Tahiti) போன்ற பல தீவுகளைப் பசிபிக் கடலில் கண்டு வரைபடத்தில் பதிந்த ஜேம்ஸ் குக், தென்னிலம் (Australis) எனும் கண்டத்தைத் தேடி கப்பலை மேலும் தென்மேற்கே செலுத்தினார். தஹிதி தீவில் வாழ்ந்துவந்த துப்பையா (Tupaia) எனும் பூர்வகுடி பூசாரியும் அவருடன் கப்பலில் வந்து பசிபிக் கடலில் வழிகாட்ட ஒப்புக்கொண்டார். ஜான் ஹாரிசன் (John Harrison) எனும் ஆங்கிலேயர் ஒரு குரோனோமீட்டரை (chronometer – இயந்திரக் கடிகாரம்) உருவாக்கியிருந்தார். மற்ற சாதாரண இயந்திரக் கடிகாரங்கள் கடலில் சரியாக இயங்காது. இந்த ஹாரிசன் கருவி சரியாக இயங்கியது. அதை குக் எடுத்துச்சென்றார். லண்டன் கிரீன்விச் மெரிடியனில் நேரத்தைப் பிரதானமாக வைத்துக்கொண்டு, எந்தத் தீர்கரேகையில் இருந்தாலும் நேர வித்தியாசத்தையும், வானியல் அளவைகளையும் எடுத்துக்கொண்டு, அந்தத் தீர்கரேகையைக் கணிக்க இந்த குரோனோமீட்டர் உதவியது.
பாய்மரக் கப்பலில் திசை தவறித் தொலைந்து போகாமல், கடலெங்கும் பயணிக்க ஹாரிசன் கருவி இன்றியமையாதது. இங்கிலாந்தின் கடல் ஆதிக்கத்திற்கும் கடற்படை ஓங்கியதற்கும் ஒரு முக்கியக் காரணம்.
நியூசிலாந்து (New Zealand) தீவுகளை குக் அடைந்தார். அங்குள்ள மவோரி (Maori) பழங்குடி மக்களைச் சந்தித்தார். குக் சென்ற கப்பலில் மாலுமிகளும் பொருநரும் மட்டுமில்லை. ஜோசஃப் பாங்கஸ் (Joseph Banks) என்னும் உயிரியல் விஞ்ஞானியும் சென்றிருந்தார். பிரேசில், தஹிதி, நியூசிலாந்து என்று கப்பல் சென்ற இடமெல்லாம் ஐரோப்பியர் காணாத தாவரங்களையும் விலங்குகளையும் அடையாளம் கண்டு, விஞ்ஞானக் குறிப்புகள் எடுத்துக்கொண்டு, சில தாவரங்களை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றார்.
இன்னும் மேற்கே சென்று புது ஹாலந்தின் கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்தார். இதுவே, தான் தேடிய ஆஸ்திரேலியஸ் என்று நினைத்து அந்த நிலத்திற்கு அதே பெயரை வைத்தார். இதன் தெற்கே கடல்வழியாக சாவகத்தீவிற்கு வந்து, ஆப்பிரிக்காவைச் சுற்றி இங்கிலாந்து சேர்ந்தார். குக், பாங்க்ஸ் இருவரும் லண்டனிலும் ஐரோப்பாவிலும் பெரும்புகழ் பெற்றனர். தன் ஆராய்ச்சியின் மகிமையில் லண்டனில் உள்ள கியூ தாவரவியல் தோட்டத்தின் (Kew Botanical Garden) அதிபரானார் பாங்க்ஸ். ராஜ்ஜிய சங்கத்திற்கும் தலைவரானார்.
1772இல் குக் மீண்டும் இரண்டாவது பயணமாக ஆஸ்திரேலியா சென்று, அது ஒரு மிகப் பெரிய தீவு என்றும், புதியதொரு கண்டம் (continent) என்றும் அறிவித்தார். அதன் தெற்கேதான் முதலில் தேடிய பெரும் கண்டம் ஒன்று இருக்கும் என்று கருதி, அண்டார்டிக் வட்டம் (Antarctic Circle) எனும் 66வது தெற்கு அட்சக்கோட்டை (66 S Latitude) கடந்தார். பனிப்பாறைகள் (icebergs) மிதக்கும் பகுதியைக் கண்டு திரும்பிவிட்டார். மேலும் சென்றிருந்தால் அண்டார்டிகா எனும் பனிக் கண்டத்தைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் 1820இல் அமெரிக்கக் கடல்நாய் வேட்டை கப்பலின் கலபதி ஜோசஃப் ஹெரிங் (Joseph Herring) முதன் முதலில் அண்டார்க்டிக் கரைகளைத் தொட்டார். அடுத்த நூறு ஆண்டுகள் அது ஒரு கண்டமா, ஐஸ்பாறைகள் போர்த்திய தீவுகளா என்று சந்தேகம் நிலவியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்துருவத்தை அடைந்த நார்வே நாட்டு அமண்டஸன் குழு, அண்டார்டிகா ஒரு கண்டம் என்று உறுதி செய்தது.
இங்கிலாந்தின் சிறைகளில் நிரம்பி வழிந்த பல குற்றவாளிகளை விடுதலை செய்தால் சட்ட ஒழுங்கு சீர்கெடும் என்று கருதிய இங்கிலாந்து அரசு, கப்பல் கப்பலாகக் கைதிகளை ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்த்தது.
ஆஸ்திரேலியா, நியூசீலந்து, பசிபிக் தீவுகளை ‘கண்டுபிடித்த புகழ்’ ஒரு ஐரோப்பிய ஆதிக்கத் தரிசனம் என்றே கருதலாம். கற்காலத்திலேயே, அதாவது தற்காலத்திற்கு நாற்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவை, சாவக மற்றும் பப்புவா புது கினீ திவுகளிலிருந்த அபாரிஜின் ஆதிகுடிகள் அடைந்துவிட்டன. இதேபோல் நியூசீலந்து, தஹிதி, ஹவாய் போன்ற பசிபிக் தீவுகளில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மனிதக்குழுக்கள் இடம்பெயர்ந்து குடி அமைத்தனர். ஆனால் அதெல்லாம் இருபதாம் நூற்றாண்டில்தான் ஆராய்ச்சி பொருளானது.
வாஸ்கோடகாமா தொடங்கிய பல மாதக் கடல் பயணங்களில், பல ஐரோப்பிய மாலுமிகள் ஸ்கர்வி (scurvy) எனும் நோயால் தாக்கப்பட்டு, அவதிப்பட்டு உயிரிழந்தனர். வைட்டமின் சி (Vitamin C) பற்றாக்குறை இதன் காரணம் என்று 1930களில் தான் அறிந்தோம். ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே ஏதோ தீவிலோ துறைமுகத்திலோ இறங்கிவிட்டு எலுமிச்சைப் பழத்தையோ, பச்சைக் காய்கறிகளையோ உண்டால் ஸ்கர்வியிலிருந்து சிலர் குணமடைவதைப் பல கலபதிகள் பதிவு செய்தனர்.
ஆனால் சிகரட், சாராயப் பழக்கத்தினால் வரும் நோய்களை இன்றும் பலகோடி மக்கள் அலட்சியமாய் கருதி நோய்வாய்ப்படுவதைபோல் அன்றும் அலட்சியப்படுத்தினர். பதினெட்டாம் நூற்றாண்டில் போர்களில் மாண்டவரைவிட ஸ்கர்வி நோயால் மாண்டவர் அதிகமாம். வாஸ்கோடகமாவின் கப்பலில் 170 மாலுமிகளில் 116 பேர் ஸ்கர்வியால் மாண்டனர் என்றும், மெகல்லன் கப்பலில் 230 மாலுமிகளில் 208 பேர் ஸ்கர்வியால் மாண்டனர் என்றும், விக்கீபீடியா தகவல். 1500 முதல் 1800 வரை இருபது லட்சம் கடல் பயணிகள் இந்த நோயால் மாண்டனர்.
ஜேம்ஸ் குக் கலபதியான கப்பல்களில் ஸ்கர்வியால் ஒருவரும் இறக்கவில்லை. ஸ்டீவன் ஹேல்ஸ் அறிவுரையில் கப்பல்களில் வெண்டிலேட்டர் எனும் விசிறிகள் பொருத்தி, காற்றோட்டமும் மண் தொட்டிகளில் பச்சைக் காய்கறிகள் ஏற்றிச்சென்று நல்ல ஊட்டச்சத்தும் கிடைக்க வைத்தார். ஜோசஃப் பிரீஸ்ட்லீ (Joseph Priestley) இவருக்கு கார்பண்டையாக்ஸைட் கலந்த நீரை (carbonated water) உபதேசித்தர் என்பது நினைவில் கொள்க. குளிக்கத் தயங்கிய, தூய்மையைத் தவிர்த்த ஆங்கிலேயர்களிடம் தூய்மையைத் திணித்தார். இந்தச் சுகாதார வெற்றிக்குப்பின் பல ஆங்கிலேயக் கப்பலகளில், குறிப்பாகக் கப்பற்படை கலங்களில் தூய்மை கட்டாயமானது. எலுமிச்சைப் பழமும் (Lime) கட்டாயமானது. மற்ற ஐரோப்பியர்களும் அமெரிக்கரும் ஆங்கிலேயரை இதனால் லைமி (Limey) என்று ஏளனம் செய்தனர்.
மூன்றாம் பயணத்தில் ஹவாய் தீவுகளைக் கண்டுபிடித்த குக், அங்கே ஒரு கலவரத்தில் கொல்லப்பட்டார். அண்டார்டிகாவில் இறங்கி, நடைப்பயணமாய் தென் துருவத்தைக் கண்டுபிடிக்க முயன்ற பற்பல ஆர்வலர்கள், பெருங்குளிரின் கடுமையான தாக்கத்தால் மாண்டனர். நார்வே நாட்டின் அமண்ட்சன் (Amundson) குழுவினரே முதல் முதலில் வெற்றிகரமாகத் தென்துருவம் அடைந்து மீண்டும் உயிருடன் திரும்பினர்.
இரு புதிய கண்டங்களைக் கண்டுபிடித்த திளைப்பில், பிளேட்டோ போன்ற பண்டைய யவனர்கள் குறிப்பிட்ட அட்லாண்டிஸ் (Atlantis) தீவு கடலில் மூழ்கிய கண்டமோ என்றெண்ணி சிலர் அட்லாண்டிக் கடலைத் தேடத் தொடங்கினர். இந்தியாவிலும் ஆப்பிரிக்காவின் அருகிலுள்ள மடகாஸ்கர் தீவிலும் உள்ள லெமுரிய குரங்கின ஃபாசில்கள் அடிப்படையில், ஃபிலிப் ஸ்க்லேடர் என்பவர் லெமூரியா (Lemuria) என்ற பண்டைய கண்டம் இந்தியாவையும் மடகாஸ்கரையும் இணைத்திருக்கலாம் என்று 1864iல் முன்மொழிந்தார். தமிழ் இலக்கியத்திலுள்ள குமரி கண்டம் இதுவே என்று தேவநேய பாவாணரும், வேறு சிலரும் வாதாடினார். 1912இல் ஆல்ஃபிரட் வெகனரின் பிளேட் டெக்டானிக்ஸ் கோட்பாட்டைப் புவியியலாளர்கள் ஏற்றுக்கொண்டபின் லெமுரியாவைப் புவியியலாளர் கைவிட்டனர்.
அழிவது இனம்
கெத்தார்தின் (Guettard) மாணவர் யான் பாப்தீஸ்த் லமார்க் (Jean Baptiste Lamarck). ஸ்வீடனின் கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) உயிரினங்களை வகுத்த முறை சரியில்லை என்றும், அதைவிடச் சிறந்த திட்டத்தைத் தன்னால் வகுக்க முடியும் என்றும் அறிவித்தார். பிரஞ்சு மன்னரின் பூங்காவன (Jardin du Roi) தலைமை அதிகாரி காம்தே புஃபான் (Comte Buffon) இதைக் கேட்டு லமார்க்கின் ஆராய்ச்சிகளை ஆதரித்தார். ராஜ்ஜிய பூங்காவனம் 1793இல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Musuem of Natural History) என்று பெயர் மாறியது. ஆல்கெமியை வேதியியலாக லவோய்சியே மாற்றி புதிய துறையை உண்டாக்கியதுபோல, லமார்க், உயிரியல் (Biology) எனும் புதிய துறையை அறிமுகம் செய்தார். பூச்சி புழுக்களை ஆர்வமாக ஆராய்ந்த லமார்க், விலங்குகளை, முதுகெலும்புள்ளவை (invertebrate), முதுகெலும்பு இல்லாதவை (vertebrate) என்று இரு சாதிகளாகப் பிரிக்கலாம் என்றும் முன்வைத்தார்.
பல உயிரினங்கள் தானாக உண்டாகின்றன (spontaneous generation) என்று ஒரு கருத்தையும், காலப்போக்கில் சில உயிரினங்கள் உருவம் மாறி வேறு புது இனமாக மருவுகிறன என்று ஒரு கருத்தையும் 1809இல் லமார்க் முன்வைத்தார். இதற்குப் பரிணாம வளர்ச்சி (evolution) என்று பெயர்சூட்டினார்.
ஜார்ஜே குவியே (Geroges Cuvier) உர்ட்டம்பெர்க் சமஸ்தானத்தின் மாந்த்பெலியார்த் (Montpeliard) நகரில் 1769இல் பிறந்தவர். கால்வானி, ஆல்தீனி ஆகியோர் இத்தாலியில் நடத்திய உயிரியல் ஆராய்ச்சிபோல் குவியே உயிரினங்களின் உருப்புக்களை ஒப்பிடும் (comparative anatomy) ஆய்வாளர். உர்ட்டம்பெர்க் சமஸ்தானம் 1790இல் பிரான்சில் ஐக்கியமானது. லமார்க்கின் பரிணாம வளர்ச்சியை முற்றிலும் எதிர்த்தார் குவியே. ஒரு விலங்கின் எல்லா அங்கங்களும் ஒன்றோடு ஒன்று பக்குவமாகப் பிணைந்து வேலை செய்கிறது என்றும், எந்த உறுப்பில் சின்ன மாற்றம் இருந்தாலும் அது உயிருக்கு ஆபத்து என்றும், இதனால் உறுப்பு மாற்றமே சாத்தியமில்லை என்றும் வாதாடினார்.
அதேசமயம் பலவித ஃபாசில்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, நிகழ்காலத்து விலங்குகள் போலிருந்தும் வேறுபட்ட மாமத் போன்ற சில விலங்கு எச்சங்களை ஆராய்ந்தார். மாமத் (Mammoth) யானை போன்ற ஒரு விலங்கு – ஐஸ் ஏஜ் (Ice Age) எனும் சமீபகால ஆங்கிலத் திரைப்படத்தில் வரும். எலும்புக்கூட்டில் பல விதங்களில் யானைகளை ஒத்திருந்தாலும், மாமத் அற்றுப்போன வேறு இனம் என்று தெளிவானது. வட அமெரிக்காவில் கிடைத்த யானை போன்ற வேறு சில எலும்புகள் மாஸ்டடான் (mastodon) எனும் வேறு ஒரு அற்றுப்போன இனம் என்றும் குவியே நிறுவினார்.
இதைத் தவிர பாவேரியாவிலிருந்து வந்த ஒரு ஃபாசில் ஓவியத்தைக் கண்டு, பறக்கும் உடும்புபோல் இருந்ததால் டெரோடாக்டைல் (Pterodactyl) என்ற ஒரு இனத்திற்குப் பெயர்சூட்டினார். பாலுண்ணிகள் (mammals) புவியெங்கும் பரவுமுன் ஊர்வன (reptiles) புவியெங்கும் பரவி இருந்தன என்று யூகித்தார். கற்பனை செய்யமுடியாப் பல உயிரினங்களின் வடிவையும் யூகித்து, அவற்றின் எலும்புக்கூடுகளை மீட்டுருவாக்கினார். சமகாலத்தில் எங்கும் காணாத விலங்குகள் இவை என்று யாரும் மறுக்கமுடியவில்லை. ஆதலால் பல்வேறு விலங்கினங்கள் (species) முழு இனமாக அற்றுப்போய்விட்டன (extinction) என்ற முடிவிற்கு வந்தார் குவியே.
ஆழமாகத் தோண்டத் தோண்ட ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் உயிரினங்களின் எச்சங்கள் (fossils) அடுத்த தளத்தில் இல்லை. ஒரு தளத்தில் கிடைக்கும் எச்சத்திற்கும் அடுத்த தளத்தில் கிடைக்கும் எச்சத்திற்கும் வேற்றுமைகள் ஒன்றல்ல இரண்டல்ல – வர்ணிக்கவே திண்டாடித் திகைக்கும் அளவில் வேறுபட்டன.
குவியே பிறந்த 1769இல் இங்கிலாந்தில் பிறந்த வில்லியம் ஸ்மித் (William Smith), கொல்லுப்பட்டறையில் வேலை செய்து தன்னார்வத்தால் புத்தகங்கள் வாங்கி கல்வி கற்றார். 1793இல் சோமர்சட் கால்வாய் (Somerset canal) வெட்டும் பணியில் நிலம் அளந்தார். 1775இல் ஜேம்ஸ் வாட் உருவாக்கிய நீராவி எஞ்ஜினும், ஆர்க்ரைட் கார்ட்ரைட் ஆகியோர் அமைத்த நெசவாலைகளும் நிலக்கரி விற்பனையை அபரிமிதமாகத் தூண்டிவிட்டிருந்தன. இன்னும் டிரெவிதிக்கும் ஸ்டீவன்சனும் ரயில் வண்டியை உருவாக்கவில்லை. அதனால் திசையெட்டும் நீண்ட புதிய கால்வாய்களில் படகுகள் நிலக்கரியைச் சுமந்து சென்றன. புதுப்புது சுரங்கமும் அங்குமிங்கும் தோண்டப்பட்டது. கால்வாய் வெட்டி கரிச்சுரங்கம் தோண்டியவர்களின் மேற்பார்வையாளரான ஸ்மித், அவ்வப்பொழுது கிடைத்த ஃபாசில்களை சேகரித்தார். புவியியலைக் கற்றுக்கொண்டார்.
குதிரைவண்டியில் இங்கிலாந்தெங்கும் பயணம் செய்த ஸ்மித், பிரான்சில் கெத்தார்த்போலவே இங்கிலாந்தின் புவியியல் வரைபடம் (Geological map) தயாரிக்க ஆவலுற்றார். ஜேம்ஸ் ஹட்டன், ஆப்ரகாம் வெர்ணர் ஆகியோரைவிட அதிகமான இடங்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்தார் ஸ்மித். சுரங்கம் சுரங்கமாகப் பார்க்கும்போது ஒரு மாவட்டத்தில் நீண்ட ஒருவகை தளம் (strata), அடுத்த மாவட்டத்தில் அதே திசையில் தொடர்வதைக் கவனித்தார். தெற்கிலிருந்து வடக்கே இப்படிப் பல நூறு கிலோமீட்டர் நீண்ட தளம், ஓரிடத்தில் கிழக்கே திரும்புவதைக் கவனித்தார். பெரிதாகப் பணம் சம்பாதிக்கவில்லை. அரசு ஆதரவும் இல்லை. ஆனாலும் புவியியல் ஆர்வத்தால் தேசப் புவியியல் வரைபடம் தயாரிக்கத் தானாக நேரமும் உழைப்பும் செலவிட்டார். ஒருகாலத்தில் கடன்பட்டு ஜேம்ஸ் வாட் அஞ்சிய அபாயம் ஸ்மித்தை 1819இல் தீண்டியது. கடன்காரன் சிறைக்கு (Debtor’s prison) சென்றார். இலங்கை வேந்தனைப்போல் மனம் கலங்காமல், பல்லாண்டு சேகரித்த ஃபாசில் பண்டாரத்தை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு விற்றுக் கடன் தொல்லையிலிருந்து மீண்டார்.
வில்லியம் ஸ்மித் ஆய்வுகள், குவியேவின் ஆய்வுக்கும் கருத்துக்கும் ஆதரவு தந்தன. ஒரு புவி தளத்தின் உயிரினங்கள் அதேதளத்தின் தொடர்ச்சியில் வேறு ஓர் இடத்திலும் கிட்டியது. ஆனால் தளத்திற்குத் தளம் கிடைத்த விலங்கு ஃபாசில்கள் பெரிதும் மாறுபட்டன.
வெவ்வேறு காலங்களில் எப்படிப் பலவகை உயிரினங்கள் அற்றுப்போகும்? ஒருகண்டம் முழுதும் பரவி நாசம் செய்யும் பேரழிவுகள் நடந்திருக்கவேண்டும். நெப்டியூனிச வாதம் வலிமை பெற்றது.
பல இனங்கள் அழிந்ததாலும், புவிநிலையும் வானிலையும் சுற்றுச்சூழலும் வெகுவாக மாறியதாலும் புது இனங்கள், இல்லை இல்லை, புது வகை இனங்கள் உருவாகியிருக்க வேண்டும். உயிரியல் எச்சங்கள் இனப்பேரழிவுகளை மட்டும் காட்டவில்லை, பெருநாச புவியியல் மாற்றங்களையும் காட்டுகின்றன. ஹட்டன் போன்றோர் கண்ட ஒவ்வா அமைப்புகள் இதற்கு ஒரு சாட்சி. ஹிரண்யாசுரனை அழிக்க தூணை பிளந்து வந்த நரசிம்மனைப்போல் புவித்தளங்களைப் பிளந்து பொங்கியெழுந்த எரிமலைகளும் பாறைகளும் அன்றைய மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத பேரழிவுகளை அரங்கேற்றியுள்ளன. ஓரிரு முறையல்ல பல முறை.
சில ஆயிர ஆண்டுகள் என்று உலகின் வயதைக் கணக்கிட்ட அஷர் (Ussher), பாதிரி மட்டுமல்ல. எழுபத்து ஐந்தாயிரம் ஆண்டு என்று கணித்த புஃபானும் காலக் கணக்கின் கால் நகத்தைக்கூடச் சீண்டவில்லை. பல லட்சமல்ல பல கோடி ஆண்டுகள் பல உயிரினங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். பூமியின் வயதை ஆண்டுகளால் அளப்பது, மலையை முழத்தால் அளப்பதுபோல் போதாத அளவுகோல் என்று உணர்ந்தனர். குவியே ஸ்மித் இவர்களெல்லாம் பிறக்கும் முன் ராபர்ட் கிளைவ் மதறாச வங்காள மாகாணத்தைக் கைப்பற்றி, ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்துபோவது சகஜமாகி இருந்தது. குவியே ஸ்மித் ஆய்வுகள் நடக்கும்போது இந்தியப் புராணங்களிலும் வானியல் (ஜோதிடம்) நூல்களிலும் உள்ள சில தகவல் ஐரோப்பாவின் சில பண்டிதர்களை எட்டியிருந்தது.
ஒரு யுகம் நாற்பத்துமூன்று லட்சம் ஆண்டுகள். எழுபத்து இரண்டு யுகம் ஒரு மனவந்தரம். பதினாலு மனவந்தரம் ஒரு கல்பம். ஒரு கல்பம் பிரம்மாவிற்கு ஒரு நாள் என்ற யுகக் கணக்கை முதலில் திகைத்தும் நகைத்தும் மிகை என முடிவு செய்து இகழ்ந்தனர். புவியியல் சாட்சியங்களால், உயிரினங்களின் பேரழிவுகளால் யுகம், மனவந்தரம், கல்பம் என்ற கால அளவைகள் தேவை என்று உணர்ந்தனர். இயான் (eon), எரா(era), எபாக்(epoch) என்று சில சொற்களை உருவாக்கி, எம்மாம் பெரிய நெற்றி, எப்பேர் பெரிய பொட்டு என்று தேவைக்கேற்ப பெயர் சூட்டத் தொடங்கினர்.
வெள்ளிப்பனி மலைப்படுகடாம்
குக் பயணங்களின் வெற்றியைக் கண்டு ஜெர்மானியரான அலெக்ஸண்டர் ஹம்போல்டு (Alexander Humboldt), தென் அமெரிக்காவிற்கு ஐந்தாண்டு பயணம் சென்று நிலவியல் புவியியல் புதுமைகளைச் செய்தார். ஆப்ரகாம் வெர்னரின் மாணவர் ஹம்போல்ட், ஃப்ரைபர்க் சுரங்கக் கல்லூரியில் கல்வி கற்றவர். இத்தாலிய கொலம்பசை இருநூறு ஆண்டு முன்பு ஆதரித்த இஸ்பானிய அரசு, ஜெர்மானியர் ஹம்போல்டை இப்போது நிதி கொடுத்து ஆதரித்தது. பிரீஸ்ட்லீ, பிராங்க்ளின்போல ஹம்போல்ட் ஒரு பல்துறை வித்தகர். சகலகலா வல்லவர். வெனிசுலாவில் இறங்கிய ஹம்போல்ட், காடுகளை அழித்துப் புதிதாக தொடங்கப்பட்ட பெரும் காபி, சர்க்கரை, கொக்கோ, பருத்தித் தோட்டங்கள், சுற்றுச்சூழலை எப்படி மாற்றிவிட்டன என்று உணர்ந்தார். புதிய விவசாயத்தால் பழைய வானிலை எவ்வாறு மாறியது என்று விளக்கினார். அமேசான் நதியையும் ஆண்டிஸ் (Andes) மலைத்தொடரையும் ஆராய்ந்தார்.
1735இல் உலகின் மிக உயரமான மலைத்தொடர்சி ஆண்டிஸ்தான் என்று ஒரு பிரெஞ்சு குழு அறிவித்திருந்தது. அந்த ஆண்டிஸ் பல்வேறு உயரங்களில் உள்ள மலை இடங்களுக்குப் பயணம் செய்கையில், தட்பவெட்பம், வானிலை என்று பல தகவல்களைச் சேகரித்தார். ஐரோப்பாவில் மட்டும் அதுவரை விஞ்ஞான ஆய்வுகள் பரவலாக நடந்திருந்தன. தன் நாட்டைத் தாண்டி அதிகம் பயணிக்காத வெர்னரை, ஹட்டன், லயல் போன்றவர்கள் கிணற்றுத் தவளையாகக் கருதினார்கள்.
ஆனால், ஹம்போல்ட் கடல் தாண்டிச் சென்று ஐம்புலன்களாலும் கருவிகளாலும் தானே சேகரித்துத் தொகுத்தமையால் அவருடைய கருத்துக்கள் உலக மதிப்பு பெற்றவை. நெப்டியூனிசப் பேரழிவுச் சக்தியைப் போன்று கிழக்கே படையெடுத்து நாடு நாடாய் சென்று நாசம் செய்தாலும், மாவீரன் என்று பெயர் பெற்ற கிரேக்க அலெக்ஸாண்டரின் பெயரைப் பூண்ட அலெக்ஸாண்டர் ஹம்போல்ட், கத்தியின்றி ரத்தமின்றிக் கருவியோடும் கூரறிவோடும் மேற்கே சென்று காஃட போன்ற கற்றோரிடம் பெரும் பண்டிதர் என்று புகழெய்தினார்.
யோகான் உல்ஃப்காங் காஃட (Johann Wolfgang Goethe, ‘கத்தே’ என்றும் உச்சரிப்போர் உண்டு) ஜெர்மன் மொழியின் மகாகவி. அவர் இயற்றிய ஃபாஸ்டஸ் (Faustus) காப்பியம் உலகப்புகழ் பெற்றது. வங்காள மொழியில் ரவீந்திரநாத தாகூருக்குக் கிடைத்த பெருமதிப்பு ஐரோப்பா முழுவதும் அன்று காஃடவிற்குக் கிட்டியது. அவருடைய நட்புவட்டத்தில் ஹம்போல்ட் சேர்ந்து பெரும் புகழ்பெற்றார். இருநூறு ஆண்டுகளாக ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்து வந்த விஞ்ஞான வளர்ச்சியையும், புதுப்புது விசைகளின் விளைவுகளும், ஐரோப்பியரிடம் படிப்படியாக எகிப்தியருக்கும் பண்டைய கிரேக்கருக்கும் தாங்கள் நிகரான அறிவுஜீவி சமூகம் என்ற உணர்ச்சியைக் கிளறியது. இந்த விஞ்ஞானப் பெருக்கத்திற்கு அறிவொளி (Enlightenment) என்று பெயர் சூட்டினார். தாவரவியலிலும் வானிலை ஆய்வுகளையும் காஃட மேற்கொண்டதால், ஹம்போல்டின் நட்பில் அதிசயமில்லை.
ஃப்ரைபர்க் சுரங்கக் கல்லூரியில் வெர்னரிடம் பயின்ற ஹம்போல்ட், வெள்ளிச்சுரங்களையும் பார்த்துக் குறிப்பெடுத்தார். ஓரிடத்தில் சில மாமத் பற்களைக் கண்டார். ஆண்டிஸ் மலையின் மறுபுறம் பெரு (Peru) நாட்டைச் சேர்ந்து மிக வித்தியாசமான குவானோ மலைகளைக் கண்டார் ஹம்போல்ட். குவானோ (guano) என்பது வௌவால் சாணி, சில பறவைகள் சாணி இரண்டும் கலந்த கலவை. அதைத் தூவிய மண்ணெல்லாம் நம்ப முடியாத பசுமையும் செழிப்பும் கண்டன. காலங்களில் வசந்தம், நதிகளிலே அமேசான், எருக்களிலே குவானோ.
குவானோவை வேதியியல் பரிசோதனை செய்த ஹம்போல்ட், அதிலுள்ளது நைட்ரஜன் என்று உணர்ந்தார். ‘குவானோ புனிதரல்ல, ஆனால் பல அதிசயங்களை அரங்கேற்றுகிறது,’ என்று அருள்வாக்கு மொழிந்தார். வெள்ளிப்பனி மலைகள் மீதுலாவி குவானோ தேசம் என்று தோள் கொட்டினார்.
ஆண்டிஸ் மலைதோன்றி அமேசன் நதிகண்ட ஹம்போல்ட், மெக்சிகோ நகர் பொலிவைக் கண்டார். அன்றைய நியூயார்க், பிலடெல்ஃபியாவைவிட பெரும் நகரம் மெக்சிகோ. இஸ்பானிய சாம்ராஜ்ஜியத்தின் அமெரிக்கப் பெருநகர். அறிவியலில் அதை மிஞ்சிய நகரில்லை என்று புகழ்ந்தார். கொலம்பஸ் வரும்முன் அங்கு வாழ்ந்த அஸ்டெக் மக்களின் வரலாற்றையும் அறிவியலையும், கலையையும் ஆராய்ந்தார். (ஆண்டிஸ் மலைகளில் கண்ட பண்டைய இன்கா நாகரீகத்தின் தொல்லியலில் குறிப்புகளும் எடுத்துவைத்திருந்தார்).
காடு, மேடு, பாலை, மலை என்று மெக்சிகோவைச் சுற்றிவந்தார். கழுதைகளில்தான் பல நாட்கள் பயணம். ஆனால் வில்லியம் ஸ்மித் போன்று போகுமிடமெல்லாம் நிலவியல், புவியியல், வானிலை, தாவரம், விலங்கு, மண்வளம் என்று குறிப்பு சேகரித்துக்கொண்டே சென்றார்.
ஜோசஃப் ப்ரீஸ்ட்லியை இங்கிலாந்திலிருந்து வரவழைத்த அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்சன், ஹம்போல்டையும் அமெரிக்காவுக்கு வரவழைத்தார். மிஸ்ஸிஸிப்பி நதி பாயும் லுயிசியான (Louisiana) நிலங்களைத் தாண்டிப் பருத்திப் புரட்சியிலும், அடிமை வணிகத்திலும் திகழ்ந்த நிலங்களைப் பார்த்து வடக்கே புது தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் விருந்தாளியாய் வரவேற்கப்பட்டார். சமீபத்தில் தான் நெப்போலியனிடமிருந்து அதுவரை பிரான்சுக்குச் சொந்தமான லூயிசியான நிலங்களை வாங்கியிருந்தார் ஜெஃபர்சன். நாம் என்ன வாங்கி இருக்கிறோம் என்று ஹம்போல்டின் வரைபடங்களும் குறிப்புகளையும் படித்துப் புரிந்துகொண்டார் ஜெஃபர்சன். இதுவல்லவோ திருப்பதிக்கே லட்டு தருவது?
ஹம்போல்டின் பயணமும் அவருடைய கட்டுரைகளும் ஒரு தலைமுறைக்குப் பின் வந்த சார்லஸ் டார்வினின் பயணத்தை ஊக்குவித்தது. கிட்டத்தட்ட ஹம்போல்ட்போலவே புல், பூண்டு எல்லாம் ஒன்றுவிடாமல் அவரும் குறிப்பெடுத்தார். ஆண்டிஸ் மலையில் மூவாயிரம் நான்காயிரம் மீட்டர் உயரத்தில் பல வித சங்கு(shell), சிப்பி(clam/oyster), கடல் வாழ் உயிரினங்களின் ஃபாசில்களை கண்டார். கடலுக்கு அடியில் இருந்த நிலங்கள் காலப்போக்கில் மலைத்தொடர்களின் பகுதியாகி இந்த உயரத்தை எட்ட எத்தனை கோடி ஆண்டுகள் ஆயிருக்கும் என்று வியந்தார். ஆனால் சார்லஸ் லயலின் மாணவராகிய டார்வின், லயலைப்போலவே நெப்டியூனிசத்தை மறுத்து, பையப் பைய ஒரு நூற்றாண்டுக்கு ஒரு அங்குலம் அளவே புவியியல் மாறியது எனும் பையமாற்றக் கொள்கையை ஆதரித்தார்.
காலம் செப்ப கண்டது மொழிமோ
இங்கிலாந்தின் தென் கிழக்கே டோவர் (Dover), சாக் (chalk) சுண்ணாம்பு (limestone) பரவிய நிலம். இங்கே வாழ்ந்த மேரி ஆன்னிங் (Mary Anning) சிறு வயதுமுதல் அந்த சாக் நிலங்கள் முழுவதும் நடந்து அங்குமிங்கும் கிடைத்த ஃபாசில்களை, கடை வைத்து விற்றுவந்தார். இக்தியோசார் (Icthyosaur) எனும் மீன் இனம், பிளையோசார் (pleiosaur) எனும் பல்லி இனம், என்று பல அரிய அற்றுப்போன இனங்களின் ஃபாசில்களை கண்டுபிடித்தார். இதேபோன்ற சாக் புவிதளத்தை ஐரோப்பாவில் கண்ட பெல்ஜிய நாட்டு யான் தொமாலியஸ் தல்லோய் (Jean d’Omalius d’Halloy), இந்தப் புவிதளம் உண்டான காலத்தை 1822இல் கிரெட்டேசியஸ் (Cretaceous) என்று பெயரிட்டார். லத்தீன மொழியில் சாக்கின் பெயர் கிரெட்டா (Creta). சங்கு, சிப்பி, கிளிஞ்சல் என்று நாம் சொல்வதெல்லாம் மெல்லுடலிகள் (molluscs) எனும் இனத்தின் வெளிக்கூடு. விலங்குகள் உள்ளே எலும்புக்கூடும், வெளியே சதையும் தோலுமாக வளர்கின்றன. மெல்லுடலிகளோ, உள்ளே சதையும் வெளியே சங்கு கிளிஞ்சல் போன்ற கூடோடு வளர்கின்றன. இக்கூடுகள் (Exoskeletons) கேல்சியம் கார்பனேட்டால் (Calcium Carbonate) ஆனவை. இதுவே சுண்ணாம்பாகவும் பளிங்குக்கல்லாகவும் (marble) மெல்லுடலிகள் இறந்தபின், கோடிக்கணக்கான ஆண்டுகள் அழியாமல் சாக்-சுண்ணாம்பு புவிதளமாக மருவின.
அதே ஆண்டு வில்லியம் கோனிபேர் (William Conybeare), வில்லியம் ஃபிலிப்ஸ் (William Phillips) எனும் ஆங்கிலேயர்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் நிறைந்த புவிதளத்தை கார்பன் நிறைந்த காலம் (Carboniferous) என்று பெயர்சூட்டினர்.
குவியேவின் மாணவர் அலெக்ஸாந்தரே பிரோங்னியார்த் (Alexandre Brongniart), கிரேட்டேசியஸ் காலத்திற்குப் பின் மூன்றாம் காலம் (Tertiary டெர்ஷியரி) என்று நிகழ் காலம் வரை தொடரும் காலத்திற்குப் பெயர் வைத்தார். இவரே ஜுரா (Jura) மலைகளில் அடையாளம் கண்ட புவிதளங்களில், ஜுராசிக் (Jurassic) காலம் எனும் ஒன்றை அறிவித்தார். இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜுராசிக் காலத் தளத்தில் பல டைனோசார் ஃபாசில்கள் கிடைக்கப்பெற்றன. மணற்கல், சுண்ணாம்புக்கல், களிமண் என்று மூன்று தளம் உண்டான காலத்தை டிரையாசிக் (Triassic) காலம் என்று ஃப்ரைட்ரிக் ஆகஸ்ட் வான் ஆல்பர்டி (Friedrich August von Alberti) அறிவித்தார்.
புவியியலின் யுகப்பிரிவு
நிமுஆ = நிகழ்காலத்திற்கு முந்தைய ஆண்டுகள் (Years Before Present)
வில்லியம் ஸ்மித், மேரி ஆன்னிங் போன்று அடித்தளச் சமூகத்திலிருந்து வந்தவர் பாதிரியார் ஆடம் செட்ஜ்விக் (Adam Sedgwick). ராணுவ அதிகாரி ராடரிக் இம்பீ மர்சீசன் (Roderick Impey Murchison) இங்கிலாந்தின் மேல்வர்கத்தில் பிறந்தவர்.
இவர், இங்கிலாந்தின் டெவன் (Devon) மாவட்டத்தின் பெயரில் டெவோனியன் காலம், வேல்ஸ் (Wales) நாட்டின் பெயரில் கேம்ப்ரியன் காலம் (வேல்ஸ் நாட்டின் பண்டைய பெயர் Cymru கிம்ப்ரூ), ருசியாவிற்கு பயணம் சென்று பெர்ம் (Perm) எனும் சிற்றூர் அருகே புவியாய்வு செய்து பெர்மியன் காலம் ஆகியவற்றை அறிவித்தார். இவையெல்லாம் தொகையாக தொல்லுயிர் யுகம் (Paleozoic) என்று ஆடம் செட்ஜ்விக் கணித்தார். இதற்குப் பிந்தைய யுகம் இடைஉயிர் யுகம் (Mesozoic) ஆயிற்று.
உயிரினங்களின் ஃபாசில்களை வைத்தும், அவை திகழ்ந்த புவிதளத்தின் தாது பொருட்களை ஆராய்ந்தும், இப்படிப் பூமியின் வெவ்வேறு யுகங்களையும் யுகப்பிரிவுகளையும் வழங்க கருவிகளும் அறிவியலும் உதவின. இத்தனை கோடி ஆண்டு முதல் அத்தனை கோடி ஆண்டு வரை என்று தெளிவாகச் சொல்லும் அளவுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் வளரவில்லை. இருபதாம் நூற்றாண்டில் ரேடியம், ரேடியோகதிர், அணு இயற்பியல் தோன்றிய பின்னரே இம்மாதிரி கணிக்கவியன்றது.
இதற்கிடையே சைலூரியன் என்றும் 1890இல் ஓர்டோவிசியன் என்றும் காலங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
புவியியல் கிறிஸ்தவ மதத்தைத் தாக்கி, பைபிளின் கொள்கைகளை மறுத்து, சமூகத்தைத் தவறான வழியில் நடத்தி, பண்டிதருக்கும் ஆராய்ச்சிக்கும் தீய பெயர் சம்பாதிக்கிறது என்று வில்லியம் காக்பர்ண் பாதிரியின் தலைமையில் ஒரு அவை 1844இல் சேர்ந்து கண்டித்தது. இதைத் தனி ஒருவராக செட்ஜ்விக் எதிர்த்து, ஒட்டுமொத்த அவையால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் அவருக்கு புகழ்தான் கிட்டியது. விசித்திரம் என்னவென்றால் அடுத்த பத்திருபது ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முன்மொழிந்த சார்ல்ஸ் டார்வின் மேல் இதே குற்றச்சாட்டை செட்ஜ்விக் நீட்டினார்.
கண்கண்ட வரலாறா? கணித்த வரலாறா?
கண்ணால் பார்த்ததையும் காதால் கேட்டதையும் எழுதி தொகுத்தது வரலாறு என்று ஒரு காலம் வரை நிலவியது. முன்னவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்துப் புரிந்து அதில் விரும்பியவற்றைத் தேர்ந்து தொகுத்தளிப்பது என்பதும் வரலாறு என்று சில நூற்றாண்டுகள் ஏற்கப்பட்டது. மனிதர்களின் சாதனைகளும், தெய்வங்களின் சாகசங்களும், இயற்கையின் லீலைகளும் கலந்து சொல்லும் கலையாக வரலாறு மருவியது.
புவியியல் எனும் துறை தோன்றியதால் பார்க்காததும் கேட்காததும், கருவிகளால் புலப்பட்டதும், யூகித்தவையும், அனுமானங்களும் மட்டுமே ஆதாரபூர்வ வரலாறு என்று திரிந்தது. அதாவது சமகாலப் பதிவுகள் மட்டுமல்ல, கணிக்கப்பட்ட நிகழ்வுகளும் வரலாறு என்று ஏற்கப்பட்டது. எதிர்காலத்தைக் கணித்து ஜோதிடர்கள் கூறும் குறிகள் பெரும்பான்மையாகக் கற்பனை என்றும், அறிவியல் இல்லை என்றும் கொள்கைகள் ஓங்கிய அதேகாலத்தில், விஞ்ஞானிகளின் செய்த கணக்கில் அசாத்திய விஞ்ஞானிகளுக்கு அமானுஷ்ய நம்பிக்கை வளர்ந்துள்ளது. பிறகு வரலாற்று ஆசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். இன்று சமகாலத்து ஆவணங்கள் உண்மையா பொய்யா என்று முடிவெடுக்கும் உரிமையை விஞ்ஞானம் தனக்கே அளித்துக்கொண்டது.
0
________
உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்
– Darwin’s Armada – Iain McCalman
– The Voyage of the Beagle – Charles Darwin
– Personal Narrative of Travels – Alexander von Humboldt
– Eight Little Piggies – Stephen Jay Gould
– Wikipedia, Encyclopedia Britannica and other websites
– Microsoft Copilot