1757இல் ராபர்ட் கிளைவ் (Robert Clive) வங்காள நவாபைத் தோற்கடித்து, அதுவரை கம்பெனியாக விளங்கிய நிறுவனத்தை நாடாளும் நிறுவனமாக மாற்றி, அதுவரை யாரும் உலுக்காத விதம் வரலாற்றை உலுக்கினார். விசித்திரமாக இந்தியாவைவிட இங்கிலாந்தையே இந்நிகழ்வு அதிகம் சித்தமயக்கமும் சித்தாந்த மயக்கமும் கொள்ளவைத்தது. 1530இல் எட்டாம் ஹென்றி கத்தோலிக்க மதத்தைத் துறந்து, தான் தொடங்கிய ஆங்கிளிகன் மதத்தைத் தேசிய மதமாக அறிவித்தான். 1640இல் முதலாம் சார்லஸ் மன்னன் தேசத் துரோகி என்று பட்டம் பெற்றுத் தலை வெட்டப்பட்டான். ஒரு சில ஆண்டுகள் ஆலிவர் குராம்வெல் (Oliver Cromwell) எனும் பாமரன் இங்கிலாந்தை ஆண்டான். ஆனால் அவன் இறந்த பின் மீண்டும் மன்னர் ஆட்சி தோன்றி இரண்டாம் சார்ல்ஸ் மன்னன் ஆனான். 1757இல் கிளைவ்வின் வெற்றியால், ஒரு கம்பெனி வேறு ஒரு நாட்டை ஆளும் நிலமை வந்தது. இங்கிலாந்தில், மன்னனின் ஆட்சிக்கும், பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்கும் உட்பட்டிருந்த கம்பெனி, திடீரென இங்கிலாந்தைவிட நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும், செல்வத்திலும், தொன்மையிலும், பெரிய நாட்டின் அதிபதி ஆனது.
கம்பெனியின் சம்பளம் வாங்கும் தொழிலாளியாகவும், பங்கு இருந்ததால் பல நூறு முதலாளிகளில் ஒருவனாகவும் இருந்த கிளைவ், படை பலத்தினால் இங்கிலாந்து மன்னன் மட்டுமல்ல, ஐரோப்பாவில் எல்லா மன்னர்களை விடவும் சக்திவாய்ந்த பதவியைச் சம்பாதித்துவிட்டான். அவனது படை ஆங்கிலேயப் பொருநர் மட்டும் கொண்ட படையல்ல. பெரும்பாலும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடித்தள வீரர்கள், உயர் பதவி அதிகாரிகள் மட்டுமே ஆங்கிலேயரைக் கொண்ட படை.
இங்கிலாந்தின் நிலையோ, இடமோ, வரலாறோ, சமூகமோ, மதமோ, மன்னனோ, மக்களோ, உணவோ ஒன்றும் தெரியாத, தெரிய விரும்பாத படை. பாரசீகர், ஆப்கானியர், துளுக்கர், மங்கோலியர், உஸ்பெக்கியர், முகலாயர் என்று எத்தனையோ அந்நியர்களிடம் சம்பளமும் ஆயுதப் பயிற்சியும் ஆயிரமாண்டுகளாய் செய்த மரபில், ஆங்கிலேயனும் வேறொரு அந்நியன்தான். போரில் யார் வென்றானோ அவனுக்கே ஆட்சி, அலுவல், அதிகாரம், வரி, சட்டம், தண்டனை, நிர்வாகம் எல்லாவற்றையும் செய்யும் தகுதி இருப்பதாக இங்கே மக்கள் நினைத்தனர்.
இங்கிலாந்திலோ எரிமலைபோல் சமூகம் முழுக்க ஒரு வயிற்றெரிச்சலை ஆதிக்கவர்கத்திற்கு இது கொடுத்தது. குமாஸ்தா வேலைக்குக் கப்பலேறி மதறாஸ் சென்ற கிளைவ், அலெக்ஸாண்டர் கூட செய்யாத காரியத்தைச் சாதித்துவிட்டானே என்று ஆச்சரியம். கம்பெனியின் வணிகத்து வருமானத்தில் கனமழையாய் இதுவரை பொழிந்த பணமழை, ஆகாய கங்கை போல் அரசு வருமானம் எனும் தேவலோக வெள்ளமாகப் பெருகும் என்ற தகவல், அந்த எரிமலை வயிற்றெரிச்சலில் பாலாய் பாற்கடலாய் வார்த்தது. ஆனாலும், அந்தச் சம்பந்திக்கு ஒன்பதாயிரம் ரூபாய் போச்சே என்ற உணர்ச்சி லண்டன்வாசிகளை, குறிப்பாக கம்பெனி பங்கில்லாத லண்டன்வாசிகளை விடவில்லை.
ராபர்ட் கிளைவை லண்டனுக்கு அழைத்து விசாரணை நடத்தியது பாராளுமன்றம். அளவுக்கு மீறி பேராசைபட்டு, பல ஊழல்களில் ஈடுபட்டு, இயேசுநாதரே மிரளும் வகையில் ஈராயிரம் ஆண்டுகள் நேர்மையின் இலக்கணமாக விளங்கிய ஐரோப்பிய கிறிஸ்தவ மன்னர்களை போலன்று, சாத்தானே மிரளும் வகையில் ஊழலும் பேராசையும் கொடுமையும் இரக்கமின்மையும் கொண்டு, அதர்மத்திற்கே இலக்கணமாக விளங்கிய ஆசிய அரசர்குலத்தைபோல் நடந்துகொண்டான் ராபர்ட் கிளைவ் என்பது எட்மண்ட் பர்க் போன்றவர்களின் குற்றச்சாட்டு.
ஆட்சியைப் பிடித்தவுடன் யானை யானையாகப் பொருட்களைத் தருவதற்கு இந்தியச் செல்வந்தரும், குறுநில வேந்தரும் முன்வந்தபோது, குதிரைக் குதிரையாகக் கொடுத்தால்போதும் என்று கிளைவ் எதிர்வாதம் செய்து, தன் கட்டுப்பாட்டை நினைத்து தானே வியந்தார். அந்த வியப்பில் திளைத்து, கம்பெனிக்கும், வருமானத்திற்கும் எந்த ஆதங்கமும் அவதூறும் வராத முறையாக கிளைவ் நிரபராதி என்று தீர்ப்பளித்து, அவரைப் பிரபுவாக்கி, கடமை கண்ணியம் கட்டுப்பாட்டைப் பேணும் நாடு என்று இங்கிலாந்து பறைசாற்றியது. பின்னர் ஜேம்ஸ் வாட் நீராவி எஞ்ஜினைப் படைத்த அதே வருடம், கிளைவ் துப்பாக்கியால் தற்கொலை செய்துகண்டது தனிக் கதை.
1680களில் சென்னை ஜார்ஜ் கோட்டையின் அகழியில் ஒரு பெண்ணின் பிணம் மிதந்தது. கம்பெனியார் அதை மீட்டெடுத்து விசாரணை செய்து, அந்தப் பெண்ணைக் கொலை செய்தவனையும் கண்டுபிடித்தனர். கம்பெனி நடத்த அனுமதி கொடுத்த குறுநில மன்னனிடம் இந்த வழக்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதற்கு, உங்கள் சட்டப்படியே பஞ்சாயத்து செய்து, தகுந்த முறையில் குற்றவாளியைத் தண்டிக்கலாம் என்று மன்னன் சொல்ல, கம்பெனி அப்படியே செய்து கொலைகாரனைத் தூக்கிலிட்டது. தங்களுக்குக் கோட்டையில் நீதிப் பரிபாலனை செய்யும் அதிகாரமும் கடமையும் உள்ளது என்று புரிந்துகொண்டு ஒரு நீதிமன்றம் அமைத்தது. இந்தியச் சட்ட நீதிமுறைப்படி, ஊர் பஞ்சாயத்து, சாதி பஞ்சாயத்து எனத் தீர்க்க முடியாத வழக்குகளே ராஜசபை வரை எடுத்துச்செல்லப்பட்டன.
மதறாஸ் மாகாணம் (Madras Presidency), வங்காளம், பிகார் போன்ற பகுதிகளில் ஆட்சியைப் பிடித்த கம்பெனி, சென்னை ஜார்ஜ் கோட்டையிலும் (Fort St George) கல்கத்தா வில்லியம் கோட்டையிலும் (Fort St William) தலா ஒரு உச்ச நீதிமன்றத்தை உருவாக்கியது. இதற்கான நீதிபதிகளாக வெள்ளையர்களை மட்டும் நியமித்தது. அப்படிக் கல்கத்தாவில் நீதிபதியாகப் பதவி ஏற்ற ஒருவர் வில்லியம் ஜோன்ஸ் (William Jones).
சீர்காழியில் சம்பந்தருக்குப் பார்வதிதேவி ஊட்டிய பாலில் சில சொட்டுகள் மட்டும் லண்டனில் வில்லியம் ஜோன்ஸின் நாவிலும் கடல் தாண்டி சிந்தியதோ என்னவோ? நான்கு வயதிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்தான் ஜோன்ஸ் சிறுவன். பன்னிரு வயதில் ஓவித் மற்றும் (Ovid) விர்ஜில் (Virgil) எனும் பண்டைய லத்தீன் புலவர்களின் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தான். இருபது வயதில் பிரெஞ்சு, இத்தாலியம், இஸ்பானியம், போர்த்துகீசு, கிரேக்க, லத்தீன மொழிகளில் புலமை கொண்டான். கல்லூரியில் அரபு, பாரசீக மொழிகளைக் கற்றான். அந்துவான் லவோய்சியே போலவே கௌரவத்துக்குச் சட்டப்படிப்பு படித்த ஜோன்ஸின் புலமையில் வியந்த டென்மார்க் மன்னன் நான்காம் கிறிஸ்தியன் (Christian IV), 1770இல் தரீக்-ஈ-நதீரி (Tahrik-e-Nadiri) எனும் பாரசீக மன்னனின் (Nadri Shah) சுயசரிதையை பிரெஞ்சில் மொழிபெயர்க்கும்படி ஜோன்ஸைக் கேட்டுக்கொண்டான்.
டென்மார்க் மன்னன் பாரசீகப் புத்தகத்தை பிரெஞ்சு மொழிக்கு மாற்ற ஒரு ஆங்கிலேயனை கேட்பது எவ்வளவு விசித்திரம்? பிரெஞ்சு மன்னன் பதினாங்காம் லூயி (Louis XIV) ஜோன்ஸை சந்தித்தபின் ‘எங்கள் மொழியை என்னைவிட இவன் நன்காகப் புரிந்துகொண்டவன்,’ என்று சிலாகித்தான். அவ்வாண்டு சட்டத் தேர்வில் கோலோச்சிய ஜோன்ஸுக்கு வாதாட வழக்குகளோ கட்சிக்காரர்களோ மட்டும் கிடைக்கவில்லை. 1781இல் ஜோன்ஸ் இயற்றிய பெயில் (ஜாமீன்) பற்றிய ஒரு சட்ட நூல் இன்றும் கையாளப்படுகிறது.
ஜோசப் பிரீஸ்ட்லீ, ஆடம் ஸ்மித், ஜேம்ஸ் வாட், மேத்தியூ பௌல்டன், பெஞ்சமின் பிராங்களின், ஆகியோர் இங்கிலாந்தில் அறிவியல் புரட்சிகளை நடத்திக்கொண்டிருந்த காலம் இது. 1783இல் கொல்கத்தாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்கஸ் (Warren Hastings), நீதிபதியாக வில்லியம் ஜோன்ஸை அனுப்பும்படி கம்பெனியருக்கு வேண்டுகோள் விடுத்தார். மார்ச் முதல் நாள் ஜோன்ஸைக் கல்கத்தா அனுப்பினால் தனக்குக் கௌரவமாகக் கருதுவேன் என்று சட்ட அமைச்சர் தர்லோ துரைக்கு (Lord Thurlow) கடிதம் எழுதினார் மன்னர் ஜார்ஜ் (George the Third). மூன்றே நாட்களில் அப்படியே நடந்தது. ஆண்டுக்கு முப்பதாயிரம் பவுண்ட் சம்பளத்தில் ஜோன்ஸ் கல்கத்தா நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மார்ச் 20ஆம் தேதி அரசு அவருக்குச் சர் பட்டம் தந்தது. ஏப்ரல் 8ஆம் தேதி அன்ன மரியாவைத் திருமணம் செய்தார். ஏப்ரல் 20ஆம் தேதி கப்பல் ஏறி செப்டம்பர் மாதம் கல்கத்தா அடைந்தார். அரபுக்கடலைத் தாண்டி வரும்போது, தான் இந்தியாவில் சாதிக்க நினைத்த ஒரு பட்டியலைத் தயாரித்தார் ஜோன்ஸ்.
1. ஹிந்து முஸ்லிம் மக்களின் சட்டங்கள்
2. பண்டைய உலகின் (இந்தியா சீனா பாரசீகம்) வரலாறு
3. பைபிள் கதைகளின் சான்றும் படங்களும்
4. நோவா வெள்ளத்தைத் சூழ்ந்த வரலாறு
5. ஹிந்துஸ்தானின் சமகால வரலாறு
6. வங்காளத்தை எப்படிச் சிறப்பாக நிர்வகிக்கலாம்
7. ஆசியர்களின் கணிதமும் அறிவியலும்
8. இந்தியர்களின் மருத்துவம், வேதியியல், அறுவைச் கிகிச்சை
9. இந்தியாவின் இயற்கை வளமும் (தாவர விலங்கு) செல்வங்களும்
10. ஆசியாவின் கவிதை, காப்பியம், தர்மம்
11. ஆசிய நாடுகளின் இசை
12. முந்நூறு சீனப் பாடல்கள்
13. திபெத் கஷ்மீர் பற்றிய தகவல்கள்
14. இந்தியாவின் வணிகம், விவசாயம், உற்பத்தி திறன்
15. முகலாய நிர்வாகம்
16. மராட்டிய நிர்வாகம் அரசியலமைப்பு
இவை அனைத்தையும் ஆராய்ந்து, பல புத்தகங்களை இயற்ற விரும்பினார். இதில் ஏதாவது ஒன்றைச் செய்யவே ஒரு வாழ்நாள் வேண்டும். ஆனால் இவற்றில் பல குறிக்கோள்களை நினைத்தபடி முடித்தார். கல்கத்தா வந்த சில மாதங்களில் வங்காள ஆசியாட்டிக் கழகம் (Asiatic Society of Bengal) என்ற ஒரு ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினார். லண்டன் பாரிஸ் ராஜ்ஜிய அறிவியல் சங்கங்களுக்கு (Royal Society) அந்நாட்டு மன்னர்கள் தலைமை தாங்கியது போலவே, வங்காள ஆசியாடிக் கழகத்திற்கு கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் தலைவரானார்.
கொல்கத்தாவிலிருந்து வாரணாசி வரை படகில் சென்று வந்தபோது, அதுவரை கற்ற 27 மொழி போதாது, 28வது மொழியாகச் சமஸ்கிருதத்தை கற்க வேண்டும் எனும் ஆசை வெடித்தது. பண்டிதர்கள் அவருக்குச் சமஸ்கிருத சொல்லி தர மறுத்தனர். ஆனால் ராமலோசன் (Ramlochan) எனும் வைசியரிடம் கற்றுக்கொண்டு சில கவிதைகளை இயற்றினார். அதை கேட்டு இவன் ஒரு மேதாவி என்று உணர்ந்த பண்டிதர்கள், பின்னர் ஜோன்ஸுக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
நீதிபதியாக வழக்குகளைக் கேட்டு தீர்ப்பு சொன்ன ஜோன்ஸுக்கு, சம்ஸ்கிருத சட்டத்தையும் அரபுச் சட்டத்தையும் ஒழுங்காக அம்மொழி பண்டிதர்கள் மொழிபெயர்க்கவில்லை என்று தோன்றியது. இதனால் ஹிந்துக்களின் பிரதான நீதிநூல் மநு ஸ்மிரிதியையும் (Manu Smriti), இஸ்லாமியர்களின் சட்ட தொகுப்பு ஷரியாவையும் (Sharia) தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதை மற்ற ஆங்கிலேய நீதிபதிகளும் கம்பெனி நிர்வாகமும் பயன்படுத்திக்கொண்டனர்.
மொழியதிகாரம்
ஆசியாடிக் கழகத்தின் முதல் கட்டுரை மகாபலிபுரத்தைப் பற்றி வில்லியம் சேம்பர்ஸ் (William Chambers) எழுதியது. ஆண்டு உரை ஒன்றை வருடா வருடம் நடத்தினர். சமஸ்கிருதத்தையும், அதன் இலக்கணத்தையும், சொல்லமைப்பையும், கற்று வந்த ஜோன்ஸ், சம்ஸ்கிருத மொழிக்கும் லத்தீன கிரேக்க காத்திக் மொழிகளுக்கும் வினைச்சொற்களின் வேர்களிலும், வேற்றுமை உருபுகளிலும், விகுதி சந்தி போன்ற விதிகளிலும் கண்ட ஒற்றுமையும் சாயலும் வியப்பைத் தந்தது. ஒரு புரட்சிகரமான முடிவுக்கு வந்து, கழகத்தின் மூன்றாம் ஆண்டு உரையில் அதை முன் வைத்தார்.
‘சம்ஸ்கிருத மொழியின் பழமை எவ்வளவாயினும், வடிவத்தில் செழுமை பொங்கி, அமைப்பில் கிரேக்கத்தை மிஞ்சி, நூல் வளத்தில் லத்தீனத்தை மிஞ்சி, இரண்டையும் செழுமையில் மிஞ்சி, ஆயினும்… தற்செயல் என்ற சந்தேகத்திற்கு அப்பால், வினைச்சொல் வேரிலும் (roots of verbs) இலக்கண வடிவிலும் (forms of grammar), இரண்டு மொழிகளோடும் ஒன்றி, பண்டொரு காலம் இந்த மொழிகள் அனைத்தும் பிறந்தது ஒரே இடம் எனும் எண்ணம் தவிற்கமுடியாதது!’.
இருபத்தியெட்டு மொழிகளில் புலமை பெற்று, மகாமேதை என்று மேற்கத்திய உலகமே வியந்த வில்லியம் ஜோன்ஸைத் தவிற வேறு ஒருவர் இந்தக் கருத்தை முன்மொழிந்திருந்தால், அது ஏற்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் ஜோன்ஸின் திறமையும், அவர் வாதத்தின் பலமும், பலரால் மறுக்கமுடியவில்லை. மொழியியல் பிறந்த தருணம் இந்த உரை என்றால் மிகையாகாது. கிரேக்கத்துக்கும் லத்தீனத்துக்கும் சமமானது என்று மட்டுமல்ல, அவ்விரண்டையும் வளத்திலும் பக்குவத்திலும் மிஞ்சியவை என்றும் ஏற்றிருக்காது. ஜேம்ஸ் வாட் எஞ்ஜினுக்கும், லவோய்சியேவின் வேதியியலுக்கும், பிரீஸ்ட்லீயின் காற்றுக் கருத்துக்கும், பெஞ்சமின் பிராங்க்ளினின் மின்னலே மின்சாரம் என்ற கருத்துக்கும் நிகராக ஒரு பெரும் புரட்சி கருத்தாகியது ஜோன்ஸ் சொன்ன இந்த யூகம். இந்தப் பட்டியலில் பின்னர் பாரசீக மொழியின் தாய் மொழியான அவெஸ்தன் (Avestan) மொழியையும் ஜோன்ஸ் சேர்த்தார். இவை இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் அல்லது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம் (Indo European Language family) என்று புகழ் பெற்றன.
ஒரு வெற்றிடத்தில் ஜோன்ஸின் இந்தக் கருத்து தோன்றவில்லை என்று வாதாடுகிறார் தாமஸ் டிரௌட்மன் (Thomas Trautmann). பைபிளின் கதைகளுக்குச் சான்றைத் தேடிய ஜோன்ஸ், நோவா பெருவெள்ளத்திலிருந்து (Noah’s flood) எல்லா விலங்குகளையும் காப்பாற்றியபோது, மனிதக்குலமே அழிந்துவிட்டது என்றும், அதற்குப் பின்னர் அவருக்குப் பிறந்த மூன்று மகன்கள் ஹாம்(Ham), ஷெம்(Shem), யாஃபேத்தின் (Japhet) வழித்தோன்றல்களே உலகின் அனைத்து மக்கள் என்றும் பலரும் நம்பினார். இதில் கருப்பு ஆப்பிரிக்க மக்கள் யாஃபெத்தின் வழித்தோன்றல் என்றும், அரபு, யூத மக்கள் ஷெம்மின் வழித்தோன்றல் என்றும், ஐரோப்பிய வெள்ளையர் ஹாமின் வழித்தோன்றல் என்றும் சிலர் கருதினர். இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பக் கட்டமைப்பு இந்தியர்களையும் மொழி ரீதியாக ஹாமின் வழித்தோன்றல் என்று கருதியது.
வங்காளத்தின் வரலாற்றை, இந்தியர்களின் வரலாற்றைப் பண்டிதர்களிடம் கேட்டு அறிந்துகொண்ட ஜோன்ஸுக்குப் பெரிதும் ஏமாற்றமே கிடைத்தது. முஸ்லிம்களின் படையெடுப்பு, ஆட்சி, வீழ்ச்சி, நிர்வாகம், இலக்கியம் என்பவை அரபு மொழியிலும் பாரசீக மொழியிலும் பரவலாகக் கிடைத்தது. ஆனால் இஸ்லாமியப் படைகளின் தாக்கத்தில் பழைய ஹிந்து மன்னர்களின் தலைநகரங்களும் நூலகங்களும் பெரிதும் சீரழிந்ததால் புத்தகங்கள் கிடைப்பதே அரிது. அந்நியரிடம் அதைப் பற்றி பேசவே பண்டிதர்கள் தயங்கினர். அப்படிப் பேசியவர்கள் எல்லாம் மகிபாலன் (Mahipala) தேவபாலன் (Devapala) என்று சில வங்காள மன்னர்களைப் பற்றி பேசிவிட்டு, அதற்கு மேல் கேட்டால் அபிமன்யு, அர்ஜுனன், யுதிஷ்டிரன் என்று மகாபாரதத்தைச் சுட்டிக்காட்டினார்கள். இந்தியர்களின் கணக்குப்படி மகாபாரதப் போர் கி.மு. 3101இல் (3101 BC) முடிந்து, கலியுகம் தொடங்கியது. இந்தக் கணக்கு சரி என்று எடுத்துக்கொண்டாலும், அதன்பின் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு கணக்கில் ஆட்சி செய்த பால(Pala) வம்சத்து மன்னர்களுக்கு இடையே என்ன நடந்தது என்று கேட்டால் சரியான பதில்கள் கிடைக்கவில்லை.
அலெக்ஸாண்டர் படையெடுத்தான், பின்னர் மெகஸ்தனீஸ் (Megasthenes) இந்திகா எனும் புத்தகம் எழுதினான். இதுவே ஐரோப்பியர் அறிந்த பண்டைய இந்தியாவைப் பற்றி கிடைத்த ஒரே நூல். அதில் சாண்ட்ரோகாட்டஸ் (Sandrocottus) எனும் மன்னன் ஆட்சி செய்தான், கங்கை நதியும் எர்ரணபோவஸ் (Erranaboas) நதியும் சந்திக்கும் இடத்தில் அவன் பெரும் தலைநகர் பாலிபோத்ரா (Palibothra) இருந்தது என்ற செய்திகள் நிறைந்திருந்தன. யார் சாண்ட்ரோகாட்டஸ் என்றால் யாருக்கும் தெரியவில்லை. கங்கை பயணத்தில், யமுனை, சம்பல், சோன், கந்தக் என்று பல நதிகள் கங்கையோடு கலக்கின்றன. இவ்வாறு மற்ற நதிகள் கங்கையோடு கலக்கும் இடங்களில் உள்ள நகரங்கள் கன்னோசி(Kannauj), அலகாபாத் (பிரயாக் Prayag), பட்னா(Patna) என அறியப்படுகின்றன. இதில் எது பாலிபோத்ரா என்று பண்டிதர்களைக் கேட்டால் பதில் தெரியவில்லை. பழைய பிராக்ருத சம்ஸ்கிருத நூல்களைப் படித்தபோது, சந்திரகுப்தன் (Chandragupta) என்ற மன்னன் பாடாலிபுத்திரம் (Pataliputra) எனும் தலைநகரில் ஆண்டான். அது ஹிரண்யபாகு (Hiranyabahu) எனும் நதி கங்கையில் சங்கமிக்கும் இடம் என்றும் தெரியவந்தது. சந்திரகுப்தனை சாண்ட்ரோக்காட்டஸ் என்றும், பாடாலிபுத்திரம் எனும் பெயரைப் பாலிபோத்ரா என்றும், ஹிரண்யபாஹுவை எர்ரணபோவஸ் என்றும் மெகஸ்தனீசு மாற்றிவிட்டார் என்று ஜோன்ஸ் அறிவித்தார். (தூத்துக்குடியை டூடிக்கோரின் என்றும் திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றும் ஆங்கிலேயர் மாற்றியது போல). ஆனால் ஹிரண்யபாஹு என்ற ஒரு நதியே யாரும் கேள்விப்பட்டதில்லை. சம்ஸ்கிருத மொழியில் தங்கத்தைக் குறிக்கும் வார்த்தைகள் சில ஹிரண்ய, கனக, சுவர்ண. இதில் சுவர்ண என்பது ஹிந்தியில் சொர்ண, சோனா, சோன் (Sone) என்று காலமாற்றத்தில் மருவியுள்ளது என்றும் ஒரு பண்டிதர் சொல்ல, சோன் எனும் நதியே, பழைய ஹிரண்யபாஹு என்றும் ஜோன்ஸ் முடிவுக்கு வந்தார்.
வந்த புதிதில் ஒரு சில வங்காள நாடகங்களைக் கண்ட ஜோன்ஸுக்கு அவை சாதாரணமாகத் தெரிந்தன. பல கதைகளும் சுவையாக இருக்கவில்லை. ஒரு பண்டிதர் காளிதாசன் எழுதிய அபிஞான சாகுந்தலம் (Abijnana Shakuntalam) எனும் பழைய காப்பியத்தைப் பறைசாற்ற, அதைப் படித்து காளிதாசன் கவிதையிலும் சாகுந்தலத்தின் கவிச்சுவையிலும் ஜோன்ஸ் உருகிவிட்டார். ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்தார். காளிதாசனை இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று பாராட்டினார். சாகுந்தலத்தின் மொழிபெயர்ப்பு ஐரோப்பாவை அடைந்த பின், ஐரோப்பிய பண்டிதர் சமூகத்தில் ஒரு பெரும் சலனத்தை உருவாக்கியது.
ஜெர்மானிய இலக்கிய மேதை காஃட்ட(Goethe) சாகுந்தலத்தை மெச்சி பாராட்டி எழுதினார். ஜெர்மானிய நாடக ஆசிரியர் ஷில்லர் (Schiller), தத்துவமேதை ஷோப்பன்ஹாவர் (Schopenhauer), ஆங்கிலேய வரலாற்றாளர் எட்வர்ட் கிப்பன் (Edward Gibbon) ஆகியோரும் சாகுந்தலத்தை மெச்சியும் சம்ஸ்கிருத மொழியின் பரவலை வியந்தும், இந்தியப் பண்பாடு, வரலாறு, மொழி, கலை போன்ற தகவல்களின் புதுமையில் லயித்தும் எழுதினர். சாகுந்தலம் பல ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நாடகமாக லண்டன், வியன்னா போன்ற நகரங்களில் அரங்கேறியது.
இலக்கியத்தில் ஜோன்ஸ் அதிகம் ஆர்வம் காட்டினாலும், அவரது தந்தை வில்லியம் ஜோன்ஸ் ஒரு கணித நிபுணர். இவர்தான் முதலில் வட்டத்தின் பரிதியை விட்டதால் வகுத்தால் கிடைக்கும் அளவை பை(pi) எனும் கிரேக்க எழுத்தால் முதலில் குறிப்பிட்டவர். (பைத்தகோரஸ், ஆர்கிமிடீஸ், போன்ற பண்டைய கிரேக்கக் கணிதர்கள் அந்த எழுத்தை அப்படிப் பயன்படுத்தவில்லை). தந்தையின் கணித ஆர்வத்தில் ஒரு துளியும் மகனுக்கு ஒட்டிக்கொண்டு, இந்தியாவின் கணிதத்தின் மேல் ஆர்வத்தை ஊட்டியிருக்கலாம். ஆரியபடன், பாஸ்கரன் போன்ற பழைய இந்திய ஜோதிடர்கள் இயற்றிய புத்தகங்களை ஆராய்ந்துவிட்டு, இந்தியாவே அல்ஜீப்ராவின் (Algebra) பிறப்பிடம் என்று ஜோன்ஸ் அறிவித்தார். (ஆரியபடன் காலத்தில் அவ்யக்த கணிதம் என்றும், பின்னர் பாஸ்கரன் காலத்தின் பீஜ கணிதம் என்றும் விளங்கியது, பாக்தாதில் முகமது அல் குவாரிஸ்மியின் அரபு புத்தகத்தாலும், லியோனார்டோ ஃபிபோனாச்சியின் லத்தீன மொழிப்பெயர்ப்பாலும் அல்ஜீப்ரா என்று புகழ்பெற்றது. இந்திய எண்களே அரபு எண்கள் என்று பெயர் பெற்று நிலவுகின்றன).
கிறிஸ்தவ மதத்தைத் தழுவாமல், சிலைகளை வணங்குபவர் யாவரும் கீழ்த்தர மக்களே என்று கிறிஸ்தவர்கள் கருதிய காலம் அது. லத்தீனத்தைவிட இலக்கியத்தில் தொன்மை, நாகரீகத்தில் தொன்மை, கலைகளில் சிறப்பான வளம், அல்ஜீப்ராவின் பிறப்பிடம் என்பதெல்லாம் மத வெறியர்களுக்கு இனப்பெருமை கொண்ட ஆங்கிலேயருக்கும் நாராசமாய் திகழ்ந்தது. சாகுந்தலம் நாடகமாகி அதை மக்கள் விரும்பி பார்த்தது அருவெறுப்பை உண்டாக்கியது. ஜோன்ஸ் கிறிஸ்தவ மதத்தைத் துறந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டார் என்று குற்றம்சாட்டினர். (தங்களுக்குப் பங்கில்லாமல் ராபர்ட் கிளைவ் செல்வம் சுருட்டியதைவிட இந்தியாவைப் போற்றுவதும், ஹிந்து மதத்திலும் மொழிகளிலும் அழகும் செல்வமும் செம்மையும் பண்பும் இருப்பது பெரும் குற்றமாகத் தெரிந்தது). ஜோன்ஸ் இதைப் பலமாக மறுத்து கம்பெனி தலைவர்களுக்குத் தன் கிறிஸ்தவ பக்தியைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் எழுதினார். கிழக்கிந்தியா கம்பெனியின் அதிபர் ஜான் ஷோர் பின்னர் துரை ஆக்கப்பட்டு டெய்ன்மத் துரை என்று பட்டம் பெற்றார். தன் கம்பெனி தொழிலாளி ஜோன்ஸின் ரசிகரான டெய்னம்த், ஜோன்ஸின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக இயற்றினார். ஜோன்ஸோடு பரிமாற்றிக்கொண்ட கடிதங்களைப் புத்தமாகப் பதித்தார். ஜோன்ஸின் ஆராய்ச்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்தார்.
ஜோன்ஸ் வரும் முன்னர் இந்திய மொழிகளைக் கற்று ஐரோப்பிய, இலக்கிய இலக்கண காப்பியங்களை மொழிபெயர்த்தவருள் நதானியல் ஹால்ஹெட்(Nathaniel Halhed) குறிப்பிடத்தக்கவர். வாரன் ஹேஸ்டிங்ஸின் ஆலோசனையில் 1776இல் ஹால்ஹெட் ‘ஹிந்து மதச் சட்டங்கள்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். இவர் இங்கிலாந்தில் ஜோன்ஸிடம் மாணவராய் இருந்தவர். 1782இல் வங்காள மொழியின் இலக்கணத்தை விளக்கி ஒரு ஆங்கிலப் புத்தகம் இயற்றினார். கிரேக்க லத்தீன பாரசீக மொழிகளுக்குச் சமஸ்கிருதத்தோடு இருந்த ஒற்றுமையைக் கவனித்துக் கட்டுரை எழுதினார். ஆனால் ஜோன்ஸின் புகழ் இவருக்குக் கிடைக்கவில்லை.
பரமார்த்த பாதிரி
பதினேழாம் நூற்றாண்டிலேயே ராபர்தோ தி நோபிலி (Roberto de Nobili) எனும் இத்தாலியர் கத்தோலிக (Catholic) மதத்தையும், பார்தலோமியூ சீகன்பால்கு (Bartholomew Ziegenbalg) எனும் ஜெர்மானியர் பிராடஸ்டண்டு (Protestant) மதத்தையும் தமிழகத்தில் பரப்ப முயன்றார்கள். சீகன்பால்கு தமிழில் ஒரு அச்சு எழுத்துவகையைத் தயாரித்து, அச்சு இயந்திரத்தில் (printing press) முதல் தமிழ் புத்தகம் வெளியிட்டார்.
வீரமாமுனிவர் என்று தன்னை அழைத்துக்கொண்ட கான்ஸ்டன்டைன் பெஸ்சி(Constantine Beschi), அவருக்கு முன்னோடியான திநோபிலி, இருவருக்கும் இந்திய மொழி, கலை, வரலாறு எதன் மேலும் எந்த ஆர்வமோ அக்கறையோ எள்ளளவும் இல்லை. ஹிந்துக்கள்ளைக் கிறிஸ்தவ மதத்திற்கு, குறிப்பாகக் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவதே அவர்கள் பணி. இயேசு நாதர் கதையையும், பைபிள் கதைகளையும், இயேசுவை அடைவதே விமோசனம் என்று என்ன சொல்லிப்பார்த்தாலும் ஒரு பலனும் கிடைக்கவில்லை. பிராமணர்கள் சொல்வதை மட்டுமே தமிழ் மக்கள் மதரீதியாக நம்புவதாகவும், சம்ஸ்கிருதத்தையும் தமிழையும் மட்டுமே மொழியாக ஏற்பதாகவும் வாட்டிகனுக்கு தகவல் தெரிவித்து, ஹிந்துக்களை மதம் மாற்றத் தானும் பிராமண வேடம் தரித்து, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கதை எழுதினால்தான் கத்தோலிகம் பரவும் என்றும், இதைச் செய்ய அனுமதி கேட்டார். போப்பும் அனுமதி கொடுத்தார்.
ஏழூர் வேதம் என்ற நூலை எழுதி, நான்கு வேதங்கள் அறிந்த ஹிந்துக்கள் அறியாத ஐந்தாவது வேதம் இதுவென்றும், இதற்குத் தமிழில் தான் சொல்வதே மொழிமாற்றம் என்றும், திநோபிலி பிரச்சாரம் செய்தார். தலைமுடி மழித்து, குடுமி வைத்துக்கொண்டு, பூணூல் தறித்து, பஞ்சகச்ச வேட்டி அணிந்து தன்னை ஒரு பிரமாணராகவே காட்டிக்கொண்டு கிறிஸ்தவத்தைப் பரப்பினார் திநோபிலி. வீரமாமுனிவர் எனும் பெஸ்சி இதற்கு ஒரு படிமேல் சென்று, தமிழை நன்கு பயின்று, இயேசு கிறிஸ்து கதையைத் தேம்பாவணி என்று ஒரு காப்பியமாகவே இயற்றினார். ஹிந்து மதத்தை மக்கள் இகழ, பரமார்த்த குருவும் அவரது சீடர்களும் எனும் ஒரு கதை புனைந்து ஆயிரமாயிரமாண்டு குரு சிஷ்ய பரம்பரையை நையாண்டி செய்தார்.
ஓரளவுக்கு இவர்கள் முயற்சிகளால் சில சமூகங்கள் மதம் மாறி கிறிஸ்தவர்கள் ஆயினர். கிழக்கு இந்தியா கம்பெனிக்குப் பணம் சம்பாதிப்பதே முதல் நோக்கம் என்பதால், மதமாற்ற முயற்சிகளை ஆதரித்தாலும், வியாபாரத்துக்கு ஆபத்து என்று நினைத்தபோது, இந்து மத வழக்கங்களை அளவோடு சீண்ட மட்டும் ஆதரவு கொடுத்தனர். ஆசியாட்டிக் கழகத்தின் நடவடிக்கைகள் ஒரு நாற்பது ஆண்டுகாலத்திற்கு இந்தியாவைப் பற்றி தகவல் சேர்ப்பதிலும், வரலாற்றை அறிவதிலும், வளத்தையும் வழக்கங்களையும் அளந்து புரிந்துகொள்வதிலும்தான் இருந்தன.
திநோபிலி, பெஸ்சிக்கு நேரெதிராக சார்லஸ் ஸ்டுவர்ட் Charles Stuart) என்பவர் ஹிந்து மதத்தின் மேல் பற்றுக்கொண்டு அதன் எண்ணங்கள் கிறிஸ்தவத்தைவிட சிறந்தவை என்று கருதி ஹிந்துவாகவே வாழ்ந்தார். ஹிந்து ஸ்டுவர்ட் என்று ஆங்கிலேயர் பலரால் அழைக்கப்பட்டார். ஜோன்ஸும் இப்படி ஹிந்துவாக மாறிவிட்டார் என்று சிலர் குற்றம்சாட்டினர்.
பூத்
ஜோன்ஸ் பிகாரில் உள்ள கயா (Gaya) நகரம் சென்றபோது அங்கே ஒரு பாழடைந்த கோவிலில் பல விபூதி பூசிய சடாமுடி தரித்த சன்னியாசிகள் குடியிருந்தனர். அங்கே பர்மாவிலிருந்து சில காவியுடை அணிந்த தலைமுடிமழித்த துறவிகளும் எதையோ தேடிக்கொண்டிருதனர். யார் அவர்கள், எதைத் தேடுகிறார்கள் என்று விசாரித்தார். பூத் (Pout) எனும் தெய்வத்தின் கோவிலைத் தேடுவதாகச் சொன்னார்கள். இந்தியாவில் அவதரித்த இந்தத் தெய்வம், கயாவில் தவமிருந்து ஞானம் பெற்றார் என்றும், அந்த இடத்திலுள்ள கோவிலைத் தேடிவந்ததாகவும், பூத் ஒரு ராஜக் குடும்பத்தை சேர்ந்த்தவர் என்றும், அப்பொழுது அவர் பெயர் கோடோம்(Codom) என்றும், கதைகள் சொன்னார்கள். பூத் என்ற கடவுளோ அவர் பரப்பிய மதமோ என்னவென்று அக்கோயிலிலுள்ள சிவனடியார்களுக்கோ, பல பண்டிதர்களுக்கோ தெரியவில்லை. ஆனால் ஒரே ஒருவர் மட்டும், அப்படி ஒரு மதம் பழைய இந்தியாவில் இருந்ததாகவும், அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் முன்பு நிறைய இருந்தனர், ஆனால் அந்த மதம் அற்றுப்போய்விட்டது என்றும் கூறினர். பூத் அல்ல புத்தன், கோடோம் அல்ல கௌதம் என்றும் தெளிவுற்றார் ஜோன்ஸ். பல இடங்களில் சுருட்ட முடியோடு பத்மாசனத்தில் அமர்ந்த புத்தர் சிலைகள் சிதறி இருந்தன.
ஜோன்ஸின் ஆச்சரியமும் உற்சாகமும் ஆகாயத்தை எட்டிவிட்டன. இந்தியாவில் ஹிந்து மதத்தைவிட பழைய ஒரு மதம் இருந்தது, அதை உருவாக்கியவர் புத்தர் எனும் அரசை துறந்த முனி, அந்த மதம் மற்ற தேசங்களில் பரவினாலும், ஹிந்து மதம் அதை அழித்துவிட்டது என்றும் அறிவித்தார். பர்மாவிற்குச் சென்று வந்த ஓரிரு ஆங்கிலேயர் இந்தியாவில் அழிந்த புத்த மதம், அந்நாட்டில் பரவலாக உள்ளது என்றும் அறிவித்தனர்.
இந்தியா மறந்து போன புத்தர், திடீரென்று, ஐரோப்பாவில் புகழ் பெறத் தொடங்கினார்.
சுருட்ட முடியும், நீளக் காதுகளும், கம்பீர வடிவமும் கொண்ட புத்தர் சிலைகளைக் கண்ட ஜோன்ஸ், அவர் இந்தியரே இல்லை, ஆஃப்ரிகாவின் எத்தியோப்பிய (Ethiopia) நாட்டிலிருந்து வந்த வம்சாவளி என்றும் யூகித்தார். ஜோன்ஸ் கூறியதால் சிறிது காலம் இது நம்பப்பட்டது.
சில இடங்களில் தனித்தனி பெரும் தூண்கள் இருந்தன. குறிப்பாக அலாகாபாதில் (பிரயாகராஜ்) கிடைத்த ஒரு தூணில் பாரசீக மொழியில் முகலாய மன்னர் ஜஹாங்கீரின் (Jahangir) ஒரு கல்வெட்டும், பழைய தேவநாகரி லிபியில் சம்ஸ்கிருத மொழியில் சந்திரகுபதன் என்ற மன்னரின் கல்வெட்டும், எந்தப் பண்டிதருக்கு என்ன மொழி என்று கூட தெரியாத ஒரு லிபியில் ஒரு கல்வெட்டும் இருந்தன. குச்சிக்குச்சியாக வடிவத்தில் இருந்த இந்த லிபியை ஜோன்ஸ் குச்சி-ஆட்கள் லிபி (pinmen script) என்று பெயரிட்டார். இந்த லிபியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த கல்வெட்டுகளின் பிரதிகள் ஆசியாடிக் கழகத்திற்கு பல ஆங்கிலேய ஆர்வலர்களால் அனுப்பப்பட்டது. எந்தக் காலத்து லிபி, யாரால் நடப்பட்ட தூண், என்ன மொழி என்று கூட இந்தியர்களே அறியாதவை எல்லாம் தோண்ட தோண்ட வெளிவரும் வரலாற்று மர்மங்களாக வியப்பூட்டின.
பிரான்சிஸ் வில்ஃபோர்ட் (Francis Wilford) என்பவர் இதைப் படிக்க ஒரு பண்டிதரைக் கண்டுபிடித்தாகவும், அவருடைய உதவியில் ஒரு கல்வெட்டைப் படித்துவிட்டதாகவும், மகாபாரதக் காலத்து எழுத்து என்றும் ஆசியாட்டிக் கழகத்திற்கு எழுதார். இதன் பின், பலரின் ஆர்வம் பெரிதும் கிளர்ந்தது. ஆனால் சில மாதங்களில் அந்தப் பண்டிதர் தன்னைச் சொற்ப காசுக்குக் கட்டுக்கதை அளந்தார், அவருக்கு அந்த லிபி படிக்கத் தெரியாது என்றும் ஏமாற்றுத்துடன் தகவல் சொன்னார். இந்தியாவிலிருந்து சென்ற பிராமணர்கள் எகிப்தை நிறுவினர், இந்தியாவிலிருந்து உலகத்தில் எல்லா நாகரீகங்களும் விதைக்கப்பட்டன என்றெல்லாம் வில்ஃபோர்ட் எழுதினார். எகிப்தியக் கதைகளோடு இந்தியப் புராணங்களப் புனைந்தும் பல கட்டுரைகள் எழுதினார்.
அம்பாலா (Ambala) எனும் பஞ்சாப் மாநில நகரில் இருந்து இப்படிப்பட்ட பழைய ஒரு தூணை, பதினான்காம் நூற்றாண்டில், துக்ளக் வம்சத்து மன்னன் ஃபெரோஸ் ஷா துக்ளக் (Feroz Shah Thuqluq), அடியில் வெட்டி, சாய்த்து, படகில் ஏற்றி, யமுனை நதி வழியாக தில்லிக்கு கொண்டு வந்தான். பிறகு அந்தத் தூணை ஃபெரோஸ் ஷா கோட்டையில் நட்டான் என்றும் ஒரு பழைய பாரசீகக் குறிப்பு கிடைத்தது. அந்த துக்ளக் காலத்திலேயே இதேபோல் பிரமாணப் பண்டிதர்களை லிபியைப் படிக்க ஆணையிட்டதாகவும், தங்களுக்கு அந்த லிபி தெரியவில்லை என்று அவர்கள் கூறியதாகவும் மேலும் தகவல் கிடைத்தது. இந்த குச்சி-ஆட்கள் லிபியை எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று விரும்பிய ஜோன்ஸ், அதில் தோல்விதான் அடைந்தார்.
ஓயாத உழைப்பாலும், ஒத்துக்கொள்ளாத தட்பவெட்ப நிலையாலும் அன்று மருந்தறியா ஏதோ நோயால் நாற்பத்தி ஏழு வயதில் பாதிக்கப்பட்டார் ஜோன்ஸ். திடீரென ஓரிரு மாதங்களில் மிக மோசமாகி கல்கத்தாவில் இறந்துவிட்டார். அவர் உடல் அங்கேயே ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
வில்லியம் ஜோன்ஸுக்கும் முன்பே ஒரு சில இத்தாலிய பிரெஞ்சு பண்டிதர்கள் சில புத்தகங்களை ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்த்தாலும், ஒரு கழகத்தை உருவாக்கி, அரசு அங்கீகாரம் பெற்று, உலகமே வியக்கும் பல விஷயங்களைத் தொகுத்து, இவற்றைப் பெரும்பாலும் ஏற்கவைத்தவை ஜோன்ஸின் மேதைமைக்கும் பன்மொழிப்புலமைக்கும் அடையாளம். அவரது சேவைக்கு பாண்டித்திய சமூகம் வைத்த மரியாதை மிக முக்கியக் காரணம்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
மொழியியலை (Linguistics) ஒரு மதிக்கத்தக்க கலையாக மாற்றிய பெருமை வில்லியம் ஜோன்ஸை சேரும். பாரத நாட்டில் தொல்லியலைத் தூண்டிய ஆரம்பகாலப் பணிகளுக்கும் ஜொன்ஸ்தான் மூலக்காரணம். ஆராய்ச்சியாலும், கல்வெட்டு, பன்மொழி இலக்கிய தொகுப்பின் ஓப்பீட்டாலும் மறைந்திருந்த வரலாற்றை மீட்டெடுக்க முடியும் என்று காட்டியவரும் ஜோன்ஸ்தான். ஃபாஹியன், ஹியுன் சாங், அல் பெரூணி, இபன் பதூதா போன்ற யாத்திரிகர்கள் புகழ் பெற்று, இன்றைய இந்தியப் பாடபுத்தகங்களில் இடம் பெற்றும், நூறு கோடி இந்தியர்களால் அறியப்படும்போது, இவர்களை எல்லாம் மிஞ்சிய வில்லியம் ஜோன்ஸ் பாடப்புத்தகங்களில் இல்லாதது வரலாற்றுப் பெரும்பிழை.
ஜோன்ஸின் மறைவுக்குப் பின்னும் ஆசியாட்டிக் கழகம் பல சாதனைகளைப் புரிந்து, இந்திய வரலாற்றின் மறந்த பல தகவல்களையும் மறைந்திருந்த பல தகவல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. அதை அடுத்துப் பார்ப்போம்.
0
________
உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்
– Buddha and the Sahebs, Charles Allen
– The Asiatic Society of India, O.P. Kejariwal
– Languages and Nations, Thomas Trautmann
– Memoirs of the Life, Writings and Correspondence of Sir William Jones, Lord Teignmouth