சென்னையில் எல்லீசனும் பலரும் மொழியியலும் அறிவியலும் அரங்கேற்றிய காலத்தில் கல்கத்தாவில் வில்லியம் ஜோன்ஸ் நிறுவிய ஆசியாட்டிக் சங்கம் (Asiatic Society) சில புதிய ஆய்வுகளைத் தொடங்கியது. வில்லியம் ஜோன்ஸின் அகால மரணத்தின் பிறகு, ஹென்றி கோல்புரூக் (Henry Colebrooke) ஆசிய சங்கத்தின் தலைவரானார். இந்தச் சங்கத்தை ஜோன்ஸ் தொடங்கியபோது கோல்புரூக்கும் உறுப்பினர் ஆனவர். ஜோன்ஸ் வரும் முன்னரே 1782இல் இங்கிலாந்திலிருந்து கல்கத்தாவிற்கு வந்து, கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தாளராக ஆரம்பித்து, 1786இல் மிதிலை (திர்ஹூத்-Tirhut) நகரின் கலெக்டர் பதவி வகித்தவர் கோல்புரூக்.
வங்காளத்தின் விவசாயம், வியாபாரம் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். கம்பெனியின் தொழிலாளியாக இருந்தாலும், அதன் ஏகபோக (monopoly) வணிகத்தை எதிர்த்து பல கருத்துகளை இந்தப் புத்தகத்தில் முன்வைத்தார். கம்பெனியாருக்கு இது எரிச்சல் மூட்டினாலும், பொறுத்துக்கொண்டு, அவரை அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தது. மனு நீதி (மனு ஸ்மிருதி) போல் யாஞ்யவால்க்கிய ஸ்மிரிதி பாரதத்தில் பண்டைய காலத்தில் இருந்து புழக்கத்தில் இருந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கல்யாணி சாளுக்கிய ராஜ்ஜியத்தில் விஞ்ஞானேஷவரன் என்ற பண்டிதர் யாஞ்யவால்க்கிய ஸ்மிருதிக்கு மீதாக்ஷரம் (Mitakshara) என்ற உரை எழுதினார். இதை ஆங்கிலத்தில் கோல்புரூக் மொழிபெயர்த்தார்.
வாரிசு நிர்ணயம், சொத்து பரிபாலனம் போன்ற சட்டங்களும், அதன் நிர்வாக நிவாரண விதிகளும் மிதாக்ஷரத்தின் முக்கிய அம்சங்கள். இதனால் இந்த நூல் கம்பெனி நிர்வாகத்துக்கு முக்கியமாக இருந்தது.
கணிதம் சட்டம் நிர்வாகம்
அறிவியலிலும் ஆர்வம் கொண்ட கோல்புரூக், சென்னையில் ஜேம்ஸ் ஆண்டர்சனைப் போலவே தான் பணி செய்த இடங்களில் பலவித தாவரங்களைப் பற்றி குறிப்புகள் எடுத்துகொண்டார். பிற்காலத்தில் லண்டன் திரும்பி, லண்டன் ராஜ்ஜிய சங்கத்தில் (Royal Society) இந்தக் குறிப்புகளை கட்டுரைகளாக வெளியிட்டார். சம்ஸ்கிருத மொழியில் பிரம்மகுப்தன் இயற்றிய ‘பிராம்மஸ்புட சித்தாந்தம்‘ (BraahmaSphuta Siddhantam), பாஸ்கரன் இயற்றிய ‘லீலாவதி‘ எனும் வானியல் புத்தகங்களை ஆராய்ந்து, அவ்விரண்டிலும் உள்ள பீஜ கணிதப் புதினங்களை ‘ஸம்ஸ்கிருத அல்ஜீப்ரா‘ (Algebra in the Sanskrit of Brahmagupta and Bhaskara) எனும் நூலாக வெளியிட்டார். இதன் மூலம் அல்ஜீப்ரா இந்தியாவில் பிறந்தது என்று வில்லியம் ஜோன்ஸ் நவின்றதற்கு அகலமாக சான்றுகள் சேர்த்தார்.
அமெரிக்கக் கண்டங்களை கொலம்பஸ் வெஸ்பூச்சி, பாரதம் வர புது கடல்வழியை வாஸ்கோடகாமா, பசிஃபிக் பெருங்கடலை பல்போவா, ஆக்ஸிஜென் எனும் உயிர்வாயுவை ஜோசஃப் பிரீஸ்ட்லீ, புதிய வேதியியலை அந்துவான் லவோசியே, மின்சாரத்தின் கொள்கைகளை மைக்கல் ஃபாரடே, ஆகியோர் கண்டுபிடித்ததைப்போல, சம்ஸ்கிருதம் எனும் பெருங்கடலில் ஜோன்ஸ் தன் அறிவுப் படகைச் செலுத்தி, மொழியியல் எனும் புதுத் துறையைத் தொடங்கி, பல புத்தகங்களை மொழிபெயர்த்தது, கோல்புரூக் போன்ற ஆங்கிலேய, ஐரோப்பிய பண்டிதர்களால் பெரும் சாதனையாகக் கருதப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை கிரேக்க மொழியும் லத்தீன மொழியும் ஐரோப்பாவின் செம்மொழிகளாகக் கருதப்பட்டன. பழைய பலதெய்வ வழிபாட்டு மதத்தைக் கொண்ட ரோம ராஜ்ஜியம் வீழ்ந்த பின், ரோமாபுரியே கிறித்தவ மதத்தின் மையமாகவும், ஐரோப்பியக் கண்டத்துக்கு ஆன்மிக அதிகாரப் பீடமாகவும் மாறி, ரோமாபுரியில் இருந்த வாடிக்கன் சர்ச்சு திகழ்ந்தது. லத்தீன மொழியைச் சட்ட மொழியாகவும், போப்பின் வாக்கு தெய்வ வாக்காகவும் திகழ்ந்தது. மறுமலர்ச்சி இயக்கத்தின் (Renaissance) தாக்கத்தினாலும், பின்னர் அறிவொளி (Enlightenment) இயக்கத்தின் தாக்கத்தினாலும் புரோட்டஸ்டண்ட் (Protestant) புரட்சியின் விளைவாகவும் போப்பின் அதிகாரமும், ரோமாபுரியின் ஏகாதிபத்தியமும் தளர்ந்தன. ஆனாலும், ஈராயிரம் ஆண்டு மரபுடைய லத்தீன மொழியே ஐரோப்பிய கண்டத்தின் சட்ட மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் விளங்கின. அதேல் இந்தியாவெங்கும் ஹிந்துக்கு சம்ஸ்கிருதமும், முஸ்லிம்களுக்கு அரபு, பாரசீக மொழிகளும் சட்ட மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் விளங்கியதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் அவரவர் மதச் சட்டங்கள்படி ஆட்சி செய்து, வழக்கு விசாரித்து, நீதி வழங்கினர். தாங்கள் வெகு தூரத்திலுள்ள நாட்டிலிருந்து வியாபாரம் செய்ய வந்து, எதேச்சையாக ஒரு பெரும் நாட்டை, நாகரீகத்தை, பரதக் கண்டத்தை ஆளுகிறோம் என்பது அவர்கள் ஒரு நொடியும் மறக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சிபோல் தங்கள் நாடுகளிலும் ஏதும் புரட்சி நடந்து ஒட்டுமொத்த மன்னர்குலமும் ஆளும் வர்கமும் தலையிழந்து விடக்கூடாது என்று அச்சம் ஒரு பால்; தங்களை அன்னியர்களாகவே கருதாமல், உதவக்கூடிய சக்திகளாகவும், தண்டெடுத்தவன் தண்டால்காரன் என்று ஆட்சியையும் ஏற்கும் மனோபாவம் கொண்ட இந்தியர்கள் ஒரு பால் – இதனால் போகும் வரை போகட்டும், ஆகும் வரை ஆகட்டும் என்றிருந்தனர் ஆங்கிலேயர். பத்தாயிரம் ஆங்கிலேயர் எப்படி முப்பது கோடி இந்தியரை ஆளமுடிகிறது என்று பிற்காலத்தில் மிரண்டு எழுதினார் கார்ல் மார்க்ஸ்.
கம்பெனியின் வணிகத்தைவிட, ஆட்சிவழி பெற்ற வங்காளத்தின் வரிப் பணம், நிதிக் களஞ்சியத்தை நிரம்பி வழியச் செய்தது. கல்கத்தாவில் தலைமை ஆளுனராக (கவர்னர் ஜெனரல் -Governor General) சர் ஜான் ஷோர் (Sir John Shore) 1793இல் பதவியேற்றார். முன்பே வில்லியம் ஜோன்ஸுக்கு நண்பராகி ரசிகரானார். ராபர்ட் கிளைவ் ஆளும்போது 1770இல் வங்காளத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டு, லட்சகணக்கில் மக்கள் மாண்டனர். நாற்பது லட்சம் பவுண்டு வங்காளத்தின் அரசு வருமானம்; கிளைவ் லண்டனுக்கு எடுத்துச் சென்றது மூன்று லட்சம். கிளைவின் பேராசைதான் பஞ்சத்திற்குக் காரணம் என்று லண்டனில் பல அரசியல்வாதிகளும் வாதிட, இங்கிலாந்து நாடாளுமன்றம் விசாரணை நடத்தி, அவரை நிரபராதி என அறிவித்தது.
ஆனால் இந்தியாவில் நிர்வாகம் செய்ய தெரியாமல் கம்பெனி தடுமாறுகிறது என்று ஆங்கிலேயர்களே உணர்ந்தனர். இதனால் கிளைவிற்கு அடுத்து கார்ன்வாலிஸ் (Lord Cornwallis) தலைமை ஆளுனர் பதவி ஏற்றபோது, நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக – அதாவது ஜமீந்தார்களாக – பல இந்தியர்களை நியமித்து, கம்பெனிக்கு ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்ட வருவாயை மட்டும் செலுத்த வேண்டும் என்று ஒரு திட்டம் உருவானது. வருடா வருடம் கட்டவேண்டிய தொகை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டால், தங்கள் நிலங்களில் விவசாயம் ஓங்கி லாபம் அதிகரிக்க ஜமீந்தார்கள் முனைவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. நிரந்தர தீர்மானம் (Permanent Settlement) என்று இத்திட்டம் இறுதி வடிவம் பெற்றது. இந்தத் திட்டத்தை வகுத்ததில், ஜான் ஷோர் கார்ன்வாலிசுக்கு முக்கிய ஆலோசகர்.
இதைப் போன்றே, மதறாஸ் ராஜதானியிலும் பாளையக்காரர்களை நியமித்து நிரந்தர தீர்மானம் நிறைவேறியதை எல்லீசன் படலத்தில் பார்த்தோம்.
கங்கை கரையில் நியூட்டன்
அயோத்தி நகரத்தைத் தலைநகரமாய் கொண்ட கோசல தேசம், காலப் போக்கில் அயோத்தி தேசம் என்றே அழைக்கப்பட்டது. இஸ்லாமிய சுல்தான்களின் ஆட்சியில் அயோத்தியை அவத்(Awadh) என்றனர். தில்லியில் முகலாயர் ஆட்சி செய்யும்போது, அயோத்தி ஆளுனராக ஒரு நவாப் (Nawab of Awadh) ஆட்சி செய்துவந்தார். நவாபின் பெயர் ஷுஜா உத்தௌலா(Shuja-ud-daula). 1780களில் தஃபசூல் கான் (Tafazzul Khan) இந்த நவாபின் முதலமைச்சர் (திவான்). அவர் லத்தீன மொழியிலும் வானியலிலும் ஆர்வலர். இங்கிலாந்தில் ஐசக் நியூட்டன் இயற்றிய ‘பிரின்சிபிய மேத்தமேட்டிகா நேச்சுராலிஸ்‘ (Principia Mathematica Naturalis) எனும் வானியல் புத்தகத்தை, இவர் அரபு பாரசீக மொழிகளுக்கு மொழிபெயர்த்தார். ‘சித்தாந்த சிரோன்மணி‘ போன்ற சம்ஸ்கிருத வானியல் நூல்களிலும் ஆய்வுசெய்த இவரை, வேற்று மதத்தின் நூல்களைப் படித்து இஸ்லாமுக்கு எதிராக நடந்துகொள்கிறார் என்று புகார் கூறி, திவான் பதவியிலிருந்து விலக்கி தண்டிக்கவேண்டும் என்று அரசியல் எதிரிகள் கூறினர். இந்தியாவுக்கும் சீனதேசத்துக்கும் சென்று அவர்களுக்குத் தெரிந்த கல்வியைக் கற்றுவாருங்கள் என்று முகமது நபியே கூறியதாக தஃபசூல் கான் எதிர்வாதம் செய்ய, எதிர்ப்பு குரல்கள் அடங்கின. நவாப் ஷுஜா உத்தௌலா இறந்து, அவருடை சிறுப்பிராய மகன் அசிஃப் நவாப் ஆகிய பின், திவான் பதவியை விலகி, கொல்கத்தாவில் ஆட்சி செய்த கம்பெனிக்கு நவாபின் தூதுவராகச் சென்றார். வங்காள பீகார் மாநிலங்களை கம்பெனி ஆட்சிக்கு கிளைவ் கொண்டுவந்ததுபோல, அவத் எனும் அயோத்தியா தேசத்தையும் கம்பெனிக்குக் கொடுத்துவிட நவாபை வற்புறுத்துமாறு தஃபசூல் கானை ஜான் ஷோர் வற்புறுத்தினார். இந்த அரசியல் அழுத்தம் தாங்கமுடியாமல் மீண்டும் அவதுக்கே கிளம்பி சென்ற கான், பாதி வழியில் அகாலமாக இறந்துபோனார்.
இலங்கை
இப்பொழுது ஐரோப்பிய காலனிய காலத்தில் சற்று இலங்கை வரலாற்றைக் கவனிப்போம். தென்னிந்தியாவிலும் மேற்கிந்தியாவில் கோவாவிலும் பம்பாயிலும் கடலோரப் பகுதிகளை போர்த்துக்கீசியர் ஆண்டு வந்தனர். இலங்கையிலும் பல கடலோரப் பகுதிகளைப் போர் வழி கைபிடித்தனர். இலங்கையின் சிங்களர்களுக்கிடையே வாரிசு சண்டையால் ஐந்து சிறு அரசுகள் இருந்தன. கடலோர மக்களையும் ஓரிரு மன்னர்களையும் போர்த்துக்கீசியர் கட்டாயமாக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றினர். இலங்கையின் கண்டி (Kandy) பகுதி மட்டும் சிங்கள் பௌத்த அரசாக நிலவியது.
வாரிசு சண்டையில் இலங்கையிலிருந்து தப்பி வந்த ஒரு சிங்கள இளவரசன், கோவாவின் ஆளுனர் தாம் கான்ஸ்தாந்தினோ தே பிரகான்ஸாவை (Dom Constantino de Braganza) சந்தித்து தான் கத்தோலிக்க மதத்துக்கு மாறிவிட்டதாகவும், தன்னுடைய சகோதரன் சிங்கள மன்னன் இலங்கையில் கிறிஸ்தவர்களைத் துன்புருத்தவதாகவும் புகார் செய்தான். 1560இல் பிரகான்ஸா தலைமையில் 1200 வீரர்களோடு ஒரு கப்பல் படை இலங்கையின் வடக்கில் யாழ்பாணத்தில் இறங்கியது. யாழ்பாணத்தில் அன்று திருவிழாக் கோலம். கண்டி (Kandy) புத்தர் கோவிலிருந்து புத்தரின் பல் அன்று யாழ்பாணம் வந்திருந்ததாம். புத்தப் பிக்குகளைத் தாக்கி, புத்தரின் பல்லை கோவாவுக்கு எடுத்துச் சென்றனர் போர்த்துகீசியர். இதைக் கேள்விப்பட்ட புத்த மதம் சார்ந்த பர்மா அரசர், அதை மீட்க ஒரு பெரும் தொகையைத் தருவதாக அறிவித்தார். தாம் பிரகான்ஸா இதற்குச் சம்மதித்தாலும், கோவாவின் தலைமை பாதிரியார் அதை எதிர்த்து, பெரும் செல்வத்தைவிட சிலை வணங்கும் மதங்களையும் அம்மதங்களின் சின்னங்களையும் சிலையும் அழிப்பதே தங்கள் கிறிஸ்தவக் கடமை என்று அறிவித்து, புத்தர் பல்லை ஊர் நடுவே பொடியாக்கி அழித்தார். இதனால் பௌத்தர்களுக்கு, குறிப்பாக இலங்கை மக்களுக்கு, போர்த்துகீசியரின் மேல் பெரும் வெறுப்பு உண்டானது.
சில ஆண்டுகள் சென்ற பின், யாழ்பாணத்துக்கு உலா வந்தது போர்த்துகீசியரால் அழிக்கப்பட்டது, புத்தரின் அசல் பல் அல்ல; அதைப்போல செய்யப்பட்ட ஒரு பிரதி; புத்தரின் பல் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது என்று இலங்கை அதிகாரிகள் அறிவித்தனர். மக்களும் சமாதானம் ஆயினர்.
ஆப்பிரிகா முதல் ஜப்பாn வரை கடலோரம் பல நிலங்களை போர்த்துகீசியர் பதினாறாம் நூற்றாண்டில் வென்றனர். தென் அமெரிக்காவில் மற்ற நிலங்களை யாவும் ஸ்பானியர் (Spain) வென்று ஒரு பெரும் ஸ்பானிய ராஜ்ஜியத்தை (Spanish Empire) நிறுவினர். பிரேசில் மட்டும் போர்த்துகீசியரிடம் சென்றது. ஆனால் 1580இல் போர்துகல் (Portugal) மன்னர் இறந்த பின் நடந்த வாரிசு போட்டியில், இஸ்பானியத்தின் மன்னன் இரண்டாம் ஃபிலிப் (Philip 2) போர்துகலுக்கு மன்னனாக – முதலாம் ஃபிலிப் என்ற பட்டப்பெயரில் – முடிசூட்டிக்கொண்டான். இந்தச் சந்தர்பத்தில் ஸ்பானிய-போர்துகீசிய ஆட்சிக்கடியே இருந்த நெதர்லண்டில், கலவரம் நடந்து, நெதர்லண்ட் (Netherlands) சுதந்திரம் பெற்றது. கண்டி அரசர் போர்த்துகீசியரை எதிர்க்க நெதர்லண்டின் உதவி நாட, இலங்கையில் போர்த்துகீசியர்களை நெதர்லண்டுகாரர்கள் விரட்டியடித்தனர். 1800கள் வரை நெதர்லண்டின் ஆதிக்கம் இலங்கையில் நீடித்தது. சாவகம், சுமத்திரா, மலயா போன்ற கீழை இந்திய (East Indies) நிலங்களிலும் நெதர்லண்டினர் வணிகத்தில் தொடங்கி ஆட்சி பிடித்தனர்.
1739இல் இலங்கையில் கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் நரேந்திரசிம்மனுக்கு இருந்த ஒரே மகனின் தாய் சத்திரியர் அல்ல. அதனால், நரேந்திரசிம்மனின் மற்றொரு ராணியான மதுரை நாயக்கர் வம்சத்து இளவரசியின் சகோதரன் விஜய ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்தான். சைவ மதத்தைச் சார்ந்த விஜய ராஜசிம்மன், போர்த்துகீசிய நெதர்லண்டியப் போர்களால் சரிந்த பௌத்த மதத்தையும், சைவ மதத்தையும் மீண்டும் வளர்ந்தெழ செய்தான். ராஜசிம்மனின் வம்சத்தில் 1815இல் ஆண்ட விக்ரம ராஜசிம்மனை ஏற்க இலங்கைப் பிக்குகளும் சத்திரியர்களும் ஒத்துக்கொள்ளவில்லை. அவனை ஒதுக்குமாறு ஆங்கிலேயர்களின் ஆதரவை சிலர் நாடினர்.
அவனை விரட்டி ஆட்சிக்கு வந்தனர் ஆங்கிலேயர். அவர்களை விரட்ட சிங்களர் ஓயாத தாக்குதல்கள் நடத்தினர். புத்தரின் பல்லை அவர்கள் நாசம் செய்யக்கூடும் என்று நினைத்து அதை ஒளித்து தப்பிக்க நினைத்த ஒரு புத்த பிக்கு மாட்டிக்கொண்டார். அதைச் சேதம் செய்யாமல் திருப்பித் தருவதாக ஆங்கிலேயர் சொன்னபின், சிங்களப் படைகளின் தாக்குதல்கள் நின்றன. மின்சாரப் புதினங்களுக்கு புகழ் பெற்ற ஹம்ஃப்ரீ டேவியின் (Humphrey Davy) தம்பி ஜான் டேவி (John Davy), இலங்கையில் இருந்த ஆங்கிலேயப் படையினரில் ஒருவர். புத்தரின் பல்லை அருகே சென்று கவனித்த டேவி, அது தந்தத்தால் ஆனது போலுள்ளது, காலப்போக்கில் மிகவும் மஞ்சளாகியது என்று பதிவிட்டார். ஒரு படம் வரைந்தார்; கடவாப்பல் படம்.
அந்த பல்லுக்கு இலங்கை வாழ் பௌத்தர்கள் தந்த மரியாதை அளவில்லாதது. வைரம், மாணிக்கம், மரகதம் பதித்த பெட்டிகளில் தங்க இழையில் வைத்து மிகுந்த மரியாதை பெற்ற புனிதமாக பிக்குக்களும் மக்களும் கருதி நடந்துகொண்டனர்.
1815இல் ஆங்கிலேயர் அட்சிக்கு வந்த பின், ஓர் உச்ச நீதிமன்றம் அமைந்து, தலைமை நீதிபதியாக மேக்கன்சீயின் நண்பர் அலெக்ஸாண்டர் ஜான்ஸ்டன் பதவியேற்றது நினைவிருக்கலாம்.
மேக்கன்சீயின் வழியில் ஜான்ஸ்டன் புத்த மதத்தின் மீதும், சிங்கள இலக்கியம் மீதும் இலங்கையின் வரலாற்றின் மீதும் ஆர்வம் கொண்டு, இலங்கை அறிஞர்களிடம் தகவல்களைச் சேகரித்தார். இலங்கை மன்னர்களின் வரலாறு மகாவம்சம் (Mahavamsa) என்ற பாலி மொழி புத்தகமாக ஈராயிரம் ஆண்டுகளாக புத்த பிக்குகள் தொகுத்து வந்தனர். ராஜபக்ஷ என்ற பண்டிதர் இதைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து ஜான்ஸ்டனின் நண்பரானார். இலங்கையின் வரலாறும், இலங்கையில் புத்த மத வரலாறும் ஜான்ஸ்டனாலும், அவருடைய உதவியாளர்களாலும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டன. இலங்கை பணி நிறைவாகி லண்டனுக்கு திரும்பிய ஜான்ஸ்டனை லண்டன் ஆசியடிக் சங்கம் கோல்புரூக் தலைமையில் பெரும் வரவேற்பிலும் பாராட்டிலும் மூழ்கவைத்தனர்.
இலங்கைதான் புத்த மதத்தின் பிறப்பிடம், அங்கிருந்து உலகெங்கும் பௌத்த மதம் பரவியது என்று எழுதி புத்தகங்கள் வெளிவந்தன. எடுவர்ட் அப்ஹம் (Edward Upham) ஜான்ஸ்டனின் கட்டுரைகளை வைத்து இலங்கை வரலாறு மட்டுமல்ல, எகிப்திய சீன வரலாறுகளையும் எழுதி புத்தகம் வெளியிட்டார். இந்தியாவின் மிகப்பழைய மதமாகிய பௌத்தம் ஆசியாவில் நாகரிகத்தை ஸ்தாபித்தது, பின்னர் வந்த இந்துக்கள் குறிப்பாக பிராமணர்கள் அதை இந்தியாவிலிருந்து விரட்டிவிட்டனர் என்றும் எழுதினார். மகாவம்சத்தை கண்டியில் மொழிபெயர்க்க தொடங்கிய ஜார்ஜ் டர்ணௌர் அதைக் கைவிட்டார்.
தோண்டும் இடமெல்லாம் பௌத்தம்
1780களில் மராட்டியரோடு ஒப்பந்தம் செய்துகொண்டு திப்பு சுல்தானை வீழ்த்திய ஆங்கிலேயர், 1802 முதல் 1805 வரை மராட்டியரோடு பல போர்களை நடத்தினர். மராட்டியருக்குப் புனே தலைநகரம். ஆட்சியில் பேஷ்வா (Peshwa). ஆனால் வதோதராவில் கெய்க்வாத், இந்தோரில் ஹோல்கர், குவாலியரில் சிந்தியா, நாக்பூரில் போன்ஸ்லே என மராட்டியருள் பல பிரிவுகள்; இவற்றை ஒற்றுமையாக வைத்திருக்க மராட்டியரால் இயலவில்லை. 1802 ஹோல்கர் தாக்கலில் பாஜி ராவ் பேஷ்வாவின் படையும் அவருக்கு உதவிய சிந்தியா படையும் தோற்றன. பேஷ்வா ஆங்கிலேயர் உதவியை நாடி ஒரு ஒப்பந்தம் (Treaty) செய்தார். மற்ற மராட்டியர் இதைப் பெரும் அவமானமாகக் கருதினர்.
கல்கத்தாவில் தலைமை ஆளுனர் ரிச்சர்ட் வெல்லஸ்லி (Lord Richard Wellesley) பிரபு. இவரது தம்பி மைசூரில் வழித் தெரியாமல் தொலைந்து போன ஆர்தர் வெல்லஸ்லீ (Arthur Wellesley), மராட்டியரை எதிர்த்து மிகக் கடுமையாக 1803இல் அஸ்ஸாயி (Assaye) எனும் களத்தில் பெரும் போர் நடத்தி வென்றார். 1775இல் ஜேம்ஸ் வாட் நீராவி எஞ்ஜின் செய்ய உதவிய ஜான் வில்கின்சன் காலம் முதல் ஆங்கிலேயர் பீரங்கிகள் செய்யும் திறன் முன்னேறி வந்தது. ஆனால் மராட்டிய போர்களில் ஆங்கிலேயரின் வெற்றிக்கு இது காரணமா என்றறியோம்.
1805இல் ரிச்சர்ட் வெல்லஸ்லி இறந்துவிட்டார். போர்களில் ஆர்வமில்லாத கம்பெனி, புதிய ஆளுனரை நியமித்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்தங்கள் மூலமும், மராட்டியரின் பலவீனங்களாலும், மராட்டியர் ஆண்ட பெரும் நிலங்களும் ஆங்கிலேயர் கைக்கு மாறியது. பின்னர் நெப்போலியனை எதிர்த்து போர் நடத்த இங்கிலாந்திற்கு ஆர்தர் வெல்லஸ்லீ அழைக்கப்பட்டார். 1815இல் இறுதியாக நெப்போலியனை வாடர்லூ (Waterloo) எனும் களத்தில் பிரசியர்களின் உதவியுடன் வென்றார். பிரசிய (Prussia -ஜெர்மனி) படைத் தளபதி புளூச்சர் (Blucher) பெயரைத் தன் ரயில் வண்டி எஞ்ஜினுக்கு ஜார்ஜ் ஸ்டீபன்சன் வைத்தார். 1815இல் நெப்போலியன் தோற்ற பின் கீழை இந்திய நாடுகள் மீண்டும் நெதர்லண்டுக்குக் கைமாறியபோது, இலங்கை மட்டும் ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்தது.
சென்னையில் தாவரங்கள் ஆய்வு செய்து, பர்மாவில் சில மாதங்கள் கழித்து, பின்னர் நேப்பாளம் சென்றவர் பிரான்சிஸ் புகானன் (Francis Buchanan). பர்மாவிலும் நேப்பாளத்திலும் பற்பல வகையான தாவரங்களை ஆராய்ந்து, சித்திரம் வரைந்து, ஆய்வுக் கட்டுரை எழுதி லண்டனுக்குப் பல தகவல்களை அனுப்பி லண்டன் ராஜ்ஜிய சங்கத்தின் பாராட்டைப் பெற்றார் புகானன். அவர் பர்மாவில் புழங்கிய புத்த மதத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள், விசித்திரமாகக் கவனம் பெறவில்லை.
1811இல், புகானன் பீகார் அளவைப்பணி செய்ய கம்பெனி கேட்க, போகும் வழியில் கயா (Gaya) நகரம் சென்றார். அங்கே அவா (பர்மா) நாட்டிலிருந்து வந்த புத்தப் பிக்குக்கள் சிலரைச் சந்தித்தார். அவர்களிடம் விசாரித்து பல தகவல்களைத் தெரிந்துகொண்டார். பர்ம தேசத்து கேலண்டரில் புத்தரின் இறந்த ஆண்டு முதல் ஆண்டு (பௌத்தர்கள் இதை மகாபரிநிர்வாணம் என்பர்). இதிலிருந்து புத்தர் பிறந்தது கி.மு.622, இறந்தது கி.மு.542. ராஜ வம்சத்தில் பிறந்து, துறவறம் பூண்டு, பல வருடம் தவமிருந்து கயாவில் ஒரு மரத்தடியில் ஞானம் பெற்று புதிய மதம் தொடங்கினார் என்ற தகவல்களை ஐரோப்பியர்களுக்கு முதன்முதல் நவின்றார் புகானன். சியாமதேசத்திலும் (Siam – இன்று தாய்லாண்டு), காம்போஜத்திலும் (Cambodia) புத்த மதம் செழிப்பதாகவும், இலங்கையிலிருந்து பர்மாவுக்கு புத்த மதம் பரவியது என்றும் தெரிந்துகொண்டார். இந்தியாவில் பல காலம் நிலவிய பௌத்தம், பிராமணர்கள் ஹிந்து மதத்தை நிறுவியதால் இந்தியாவில் வழக்கொழிந்தது என்றும் யூகித்தார்.

1788இல் ஜானதன் டங்கன் (Johanathan Duncan) வாரணாசியில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி. 1784இல் ஜோன்ஸ் ஆசியாடிக் சங்கம் தொடங்கும்போது டங்கனும் ஒரு நிறுவனர். பின்னாளில் பம்பாய் ஆளுனர் ஆனார். 1791இல் வாரணாசியில் ஒரு சம்ஸ்கிருத கல்லூரியை நிறுவினார்; இன்றும் இயங்குகிறது. வாரணாசி மன்னனின் மந்திரி ஜகத் சிங். அருகே சார்நாத் (Sarnath) எனும் இடத்தில் இருந்த செங்கற் குவியல்களிலிருந்து மாளிகைகள் கட்ட பல செங்கல்களை எடுத்து வந்தபோது, 1797இல் ஒரு மரகதப் பெட்டியில் சில தங்க இதழ்களும், வாடிப்போன முத்துகளும், மிகப்பழைய மனித எலும்புகளும் கிடைத்ததென்று டங்கனுக்குக் காட்டினார். பிணத்தை எரித்து காசியில் கங்கையில் சாம்பலைக் கரைக்காமல், யார் பெட்டியில் எலும்பை அடைத்தார்கள் என்று ஜகத் சிங் மிகவும் குழம்பிப்போனார். ஏதோ விசித்திரமான மன்னனின் வினோதமான விருப்பமோ? பெட்டியை மீண்டும் அதே இடத்தில் வைத்தார்கள். எலும்பைக் கங்கையில் செலுத்தினார்கள்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து மீட்டு வந்த புத்தரின் பல்லை கோவாவில் பெரும் படாடோபத்துடன் போர்த்துகிசீயர்கள் நாசம் செய்தனர். சார்நாத் ஸ்தூபியில் அநாமதேயமாக கிடைத்த புத்தனின் எலும்பு, புண்ணியச் செயல் என்று கருதி, கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி கங்கையில் முழுக்கப்பட்டது.
இந்தச் செங்கற் குவியல் இன்று புகழ்பெற்ற சார்நாத் ஸ்தூபா. 1904இல் இதன் அருகே ஒரு உடைபட்ட தூணும் மூன்று சிங்கம் கொண்ட தூணின் தலையும் கிடைத்தன. 1947இல் இந்திய குடியரசின் சின்னமாகக் கௌரவம் பெற்றது. உடைந்த தூணின் துண்டங்களை விவசாயிகள் கரும்பு பிழிய பயன்படுத்தினர்.

புகானன் இது போன்ற ஒரு பெட்டியை கயாவிலும் கண்டார். விஷ்ணு பாதத்திற்கும் பித்ருக்கடன் செலுத்தவும் இந்துக்களுக்கு மிக புண்ணிய தலமாகிய கயா, பௌத்தர்களுக்கும் புண்ணிய தலம் என்று புகானன் அறிந்தார். மகத நாட்டிலுள்ள கயாவில், பௌத்தர்களால் கொண்டாடப்படும் மன்னன் அசோகன், புத்தருக்கு ஒரு கோவிலையும் எழுப்பினான் என்றும் தெரிந்து கொண்டார். ஆனால் இந்தியர்கள் எவரும் அசோகனைக் கேள்விப்பட்டதேயில்லை என்றனர்.
1811இல் கல்கத்தாவில் ஆளுனர் மிண்டோவை (Lord Minto) சந்தித்த ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் (Stamford Raffles) சாவகத்தீவைக் கைப்பற்றினால்தான் கம்பெனியின் சீன வணிகம் வசதியாக தொடரும் என்று போர் செய்ய தூண்டினார். மிகுந்த ராணுவ அனுபவம் மிக்க காலின் மேக்கன்சீ மதறாசிலிருந்து உதவிக்கு அனுப்பப்பட்டர். போரில் வெற்றி கண்ட ராஃபில்ஸ் சாவகத்தின் ஆளுனர் ஆனார். ஓய்வெடுக்க மேக்கன்சீ இந்தியா திரும்பினார். சாவகத்தை நில அளவை செய்ய இங்கிலாந்திலிருந்து ஜார்ஜ் எவரெஸ்ட் (George Everest) நியமிக்கப்பட்டார். 1816இல் சாவகத்தை விட்டு வங்காளம் வந்த எவரெஸ்ட், 1823இல் வில்லியம் லாம்ப்டன் இறந்துவிட்டதால் மகா திரிகோண அளவையின் (Great Trigonometrical Survey) தலைவரானார். சாவகத்தீவில் ஒரு பெரும் குவியலைப் பற்றி ராஃபிள்ஸ் கேள்விப்பட்டு ஹெர்மன் கார்னீலியஸ் (Hermann Cornelius) எனும் நெதர்லாண்டு பொறியாளரை நியமிக்க, உலகின் மிகப்பெரிய புத்த ஸ்தூபாவான போரோபுதூரை (Borobudur) அவர் மீட்டெடுத்தார்.
1813இல் சாவகத்தை விட்டு விலகிய காலின் மேக்கன்சீ, கல்கத்தா வந்த பின், கங்கையில் படகேறி வாரணாசி வழியாக ஹரத்வார் வரை பயணம் சென்றார். டங்கன் கண்ட சார்நாத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட மேக்கன்சீ, பல சிலைகளையும் கல்வெட்டுகளையும் கண்டெடுத்தார்.
பல கற்களில் ஜோன்ஸ் கண்டுபிடித்த குச்சி-ஆட்கள் லிபி (pinmen script) கல்வெட்டுக்கள் அங்கே இருந்தன. தில்லியில் ஃபெரோஸ் ஷா தூணிலும் (Feroz Shah Lat) இதே லிபியிருந்ததை வில்லியம் ஜோன்ஸ் பதிவு செய்திருந்தார். இதனைத் தில்லிக்குச் சென்று கண்ட மேக்கன்சீ பிரதி எடுத்தார்.
ஓரிரு ஆண்டில் புவனேஷ்வரம் அருகே தௌலியில் (Dhauli) ஒரு பாறையில் இதே லிபியில் கல்வெட்டு இருப்பதை காலின் மேக்கன்சீ பதிவு செய்தார். அதற்குப் பின் தௌலி கல்வெட்டையும் அருகே உள்ள உதயகிரி மலை கல்வெட்டையும் ஸ்டெர்லிங் (Stirling) என்பவர் ஆய்வு செய்து, சில எழுத்தக்கள் கிரேக்க எழுத்து போல் இருப்பதாக அறிவித்தார். இந்தத் தகவல்களெல்லாம் கல்கத்தா ஆசியாடிக் சங்கத்திற்குச் சமர்பித்தாலும், அவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்ய யாருமில்லை, சங்கத் தலைவர் ஹோரேஸ் வில்சனுக்கு ஆர்வமெல்லாம் இலக்கியத்தின் மேல்தான் இருந்தது; இந்திய வரலாற்றிலும் கல்வெட்டிலும் இல்லை.

1819இல் ஆங்கிலேயரும் மராட்டியரும் மீண்டும் போர் செய்த காலம், போபால் அருகே பில்சா (Bhilsa – இன்று விதிஷா) எனும் இடத்தில் மேஜர் ஹென்றி டெய்லர் தலைமையில் ஒரு சிறு படை குன்றுபோல் ஒரு மண்குவியலும் அருகில் பற்பல மண்குவியல்களையும் கண்டது. மத்தியக் குன்றைச் சுற்றி பலகைகள், தோரணவாயில்கள் எல்லாம் கண்டனர். தோரணவாயில்களின் சிற்பங்களின் அழகும் புரியாத கதைகளும் கண்டு வியந்தனர். இது ஒரு பெரும் ஸ்தூபி என்று புரிந்தது. இதுதான் சாஞ்சி ஸ்தூபி. அங்குமிங்கும் சுருண்ட முடியுடன் புத்தர். ஜோன்ஸ் போலவே புத்தர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இந்தியாவில் ஒரு பழைய மதத்தை நிறுவினார்; அந்த மதம் வழக்கொழிந்து இந்து மதம் அதன் இடத்தை எடுத்துக்கொண்டது என்று அவசரமாகக் கட்டுரைகள் பறந்தன.
இதேபோல் 1824இல் ஔரங்காபாத் (Aurangabad) அருகே மலைகளில் வேட்டையாடவும் மர்மக் குகைகளைப் பற்றி வதந்திகளை கேட்டு விசாரிக்கவும் சென்ற லெஃப்டிணண்ட் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் (Lieutenant James Alexander), புலிகளும் ஓநாய்களும் நடமாடும் அடர்ந்த காட்டில் மிகப் பழைய குகைகளைக் கண்டுபிடித்தார். சில குகைகளில் புத்தர் சிலைகள், சைத்தியங்கள், சில குகைகளில் சுவரெல்லாம் சித்திரங்கள். மிகத் தொன்மையான ஓவியங்கள் இவை என்று அவர்கள் அடையாளம் கண்டாலும் அதில் உள்ள பாத்திரங்களும் கதைகளும் புதிராகவே இருந்தன. ஓவியங்களின் கோடுகளும் வடிவமும் அமைப்பும் நிறமும் கலை பாவமும் இந்தியாவில் பரவி இருந்த அனைத்து ஓவியக்கலைகளையும் மிஞ்சி ஈடு இணையற்ற கலைப் பண்பை நவின்றன.
ஔரங்காபாதின் எல்லோரா குகைகள் அன்று பிரபலம்; அலெக்ஸாண்டர் கண்டுபிடித்த ஆளில்லா காட்டு அஜந்தா என்று விரைவில் புகழ்பெற்று, அபாயங்களைத் தாண்டி கலை மோகம் பிடித்தவர்களை இழுத்தது. அலெக்ஸாண்டரும் பல ஒவியங்களில் சுருண்ட முடியும் கருநிற ஆடவர் பெண்டிரை கண்டு, இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்று முடிவெடுத்தார். அஜந்தா ஓவியங்களைக் காகிதத்தில் சித்திரம் வரைந்து கட்டுரை எழுதி ஆசியாட்டிக் சங்கத்தில் கட்டுரைகளைப் பிரசுரித்தனர்.
கல்கத்தா நாணயப்பட்டரையின் (Mint) தலைவர் ஹோரேஸ் ஹேமன் வில்சன் (Horace Hayman Wilson) எனும் மருத்துவர். மருத்துவத்தைவிட மொழியியலும் இலக்கியத்திலும் ஆய ஆர்வம் பொங்கிய வில்சன், ஆசியாடிக் சங்கத்தின் தலைவராகி கோல்ப்ரூக்கின் இடத்தை நிரப்பினார்.
வில்சனும் ஆசியாடிக் சங்கமும் சாஞ்சி அஜந்தா சார்நாத் முதலியவற்றின் வரலாற்று முக்கியத்தையும் கலை உன்னதத்தையும் உணரவில்லை. கற்பனையில் வரும் கதைகளிலும் இதைக் கேட்டதில்லை. களப்பணி தந்த காணிக்கை என்று நினைக்கவில்லை.
வங்காளத்தில் இருந்து புதுமைகள் பெரிதும் வராததாலும், இந்தியாவைத் தாண்டி இலங்கை மலயா சாவகம் நேபாளம் திபெத் முதலிய நாடுகளிலிருந்து பல புதுப்புது தகவல் வர, 1823இல் கோல்புரூக், லண்டனில் ராஜ்ஜிய ஆசியாடிக் சங்கம் (Royal Asiatic Society) என்று ஒரு சங்கத்தை நிறுவினார்.
1824இல் பர்மா மன்னன் வங்காளத்தின் மீது போர் தொடுத்து படுதோல்வி அடைந்து, தன் ஆட்சியிலிருந்த அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் பர்மாவின் கடலோரப் பகுதிகளை கம்பெனியாருக்குத் தாரை வார்த்தான். ஆனால் பர்மாவிற்கு மட்டும் இழப்பல்ல, போர் செலவால் கம்பெனியும் பெரும் நஷ்டம் அடைந்தது. பர்மாவிலிருந்து பல புத்த சிலைகள் இங்கிலாந்து சென்றன. பொன் கவர்ந்த சிலைகளும் சுவேத பகோடா என்னும் வெள்ளை பகோடாவும், சித்திரங்களாக பதியப்பட்டு பரபரப்பை உண்டாக்கின. அதுவரை கிறிஸ்தவ, இஸ்லாமிய வருகையால் தேயாத பௌத்த மதம் நிலவிய பர்மா, ஆங்கிலேயருக்கு வேறு ஒரு உலகாய் வியப்பூட்டியது.
(தொடரும்)
________
உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்
– Buddha and the Sahibs, by Charles Allen
– The Asiatic Society of India – O.P. Kejariwal
– Journal of the Asiatic Society of Bengal, 1837
– Story of Scripts – Powerpoint by S Swaminathan