பிராஹ்மிபுத்திரன் ஜேம்ஸ் பிரின்ஸெப்
கம்பெனி படையில் சேர ஆசைப்பட்டு கொல்கொத்தாவிற்கு வந்த ஜான் பிரின்ஸெப் (John Prinsep), வணிக வாய்ப்புகளில் ஈர்க்கப்பட்டு, நீலம் (இண்டிகோ indigo) விவசாயம், இங்கிலாந்துக்கு ஆடைகள் ஏற்றுமதி என்று பல முயற்சிகளில் இறங்கி மாபெரும் வெற்றிபெற்றார். 40,000 பவுண்டு சம்பாதித்து லண்டன் திரும்பினார். அங்கே கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு முக்கியp பங்காளியாகி, கம்பெனி அதிபராகத் திட்டமிட்டார். ஆனால் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து, ஏழ்மையின் கதவைத் தட்டினார். பெரிய மாளிகையில் வாழ்ந்தவருக்கு, ஒரு காலகட்டத்தில் ஒரு சின்ன அறை மட்டுமே மிஞ்சியதாம். அவரது நான்கு மகன்களுக்கு ஒரு டவுசர்தான் இருந்தது என்றும், அதில் ஒருவர் அதை அணிந்து வெளியே சென்று சம்பாத்தித்தால்தான், மற்றவருக்கு சோறு என்று அவரது மனைவி சொன்ன குறிப்புகள் உள்ளன. நான்கு மகன்களும் கம்பெனி தொழிலார்களாக கல்கத்தாவிற்கு வந்தனர்.
மிக இளையவன் ஜேம்ஸ் பிரின்ஸெப் (James Prinsep). 1919இல் வில்சனுக்கு உதவியாளராக நாணயப்பட்டறையில் பதவியேற்றார் ஜேம்ஸ்.
மிகச்சிறப்பாக பணி செய்ததால், சில மாதங்களிலேயே வாரணாசியில் கம்பெனி நாணயப் பட்டறையை நடத்த நியமிக்கப்பட்டார். ஜோன்ஸ் போல் விடிகாலையில் தன் அலுவல் பணிகளை முடித்துவிடுவதால், சுதந்திரமாக ஆராய்ச்சி செய்யவும் படிக்கவும் பிரின்ஸெப்புக்கு நேரம் கிடைத்தது. வாரணாசியின் மாசுபட்ட குளங்களும் சகதிகளும் சாக்கடையாய் தேங்கியிருந்தது. இதனால் நோயும் நாற்றமும் மக்களை வாட்டின. பல சாக்கடைகளை இணைத்து சுரங்கக்குழாய்கள் அமைத்து, மாசுகளை கங்கை நதியில் சேர்த்து, சாக்கடைகளை வடியவைத்து, ஊர் மக்களின் நன்றியைப் பெற்றார் பிரின்ஸெப். நன்றிக்கு மக்களே முன் வந்த பணம் சேகரித்து அவருக்கு ஒரு மாளிகை கட்டுமளவு வாரணாசியில் நிலத்தை வாங்கிக்கொடுத்தனர். பரிசாக கிடைத்த நிலத்தை, ஒரு சந்தையாக மாற்றி ஊர்மக்களுக்கே மீண்டும் தானம் செய்துவிட்டார் பிரின்ஸெப். பணம் சம்பாதிப்பத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் விளங்கிய கம்பெனி பெருந்தகைகளில், இப்படி ஒரு சுயநலமற்ற வள்ளலை எதிர்பார்க்கவில்லை மக்கள். பிரின்ஸெப்பின் ரசிகர்களாயினர்.
வாரணாசியில் ஒரு இலக்கிய சங்கத்தைத் தொடங்கினார் ஜேம்ஸ் பிரின்ஸெப். இலக்கிய ஆய்வைத் தாண்டி பல அறிவியல் தொழில்நுட்ப சோதனைகளும் உரைகளும் இதில் இயங்கின. இந்துஸ்தானி இசையில் ஆர்வம் வளர்த்து அடிக்கடி பாட்டுக் கச்சேரிகளை நடத்தி மகிழ்ந்தனர். வெப்பத்திற்கு ஒரு கருவி, மிக நுண்ணியமான ஒரு தராசு என்று தன் விரல்நுனி வித்தையைக் காட்டிய பிரின்ஸெப்பை, லண்டன் ராஜ்ஜிய சங்கம் உருப்பினராக்கி கௌரவித்தது.
கல்கத்தாவிற்கு ஜோன்ஸ், சென்னைக்கு எல்லிஸ், வாரணாசிக்கு பிரின்ஸெப்.
வாரணாசிக்குச் சுமார் அறுபது மைல் கிழக்கே கர்மநாசம் எனும் நதி ஓடியது. இதைப் பாலமோ படகோ வைத்து தாண்டக்கூடாது, தாண்டினால் பல சாபங்களுக்கு உள்ளாவோம், ஓரு பிராமணின் முதுகில் ஏறி கடக்கவேண்டும் என்ற நிலமை. உள்நாட்டினர் சாபத்திற்குப் பயந்து பாலம் கட்டவும் தயங்கினர். ஆங்கிலேய பொறியாளரும் நதியடி மண்ணும் நதியின் வேகமும் பாலம் கட்ட இயலாத தடை என்று கைவிரித்தனர். தான் அதைக் கடக்க ஒரு பாலம் கட்ட முன்வந்தார் பிரின்ஸெப்; அதற்கு ஒரு வணிகர் பணம் கொடுத்தார்.
இப்படிப் பத்து வருடம் வாரணாசியில் வாழ்ந்த பிரின்ஸெப்பை, கல்கத்தாவிற்கு கம்பெனி வரவழைத்தது.
லண்டனில், பொறாமையால் கொஞ்சம், கம்பெனியின் பேராசையைக் கட்டுபடுத்த கொஞ்சம், கம்பெனியின் ஏகபோக (monopoly) உரிமைகள் குறைக்கப்பட்டு வந்தன. இந்தியாவில் 1820களில், பல கம்பெனிகள் துணி, நீலம், கட்டுமானம், என்று பல பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபட்டன. சீன தேயிலை மட்டுமே கம்பெனியின் ஏகபோகம்.
கல்கத்தாவில் பால்மர் அண்டு கம்பெனியின் (Palmer & Co) முக்கிய பங்காளராக இருந்தார் ஜேம்ஸ் பிரின்ஸெப்பின் அண்ணன் வில்லியம். 1830இல் பெரும் நஷ்டமாகி, ஸ்டிராண்ட் சாலையிலிருந்த பெரும் கட்டிடத்தைக் காலி செய்து சொத்துக்களை எல்லாம் கடனடைக்கக் கட்டாயமாக விற்று, ஒரு சில புத்தகங்கள் மட்டுமே மிஞ்சிய வருமை நிலை அடைந்தது பால்மர் கம்பெனி. அவர் தம்பி தாமஸ் பிரின்ஸெப் குதிரையிலிருந்து விழுந்து அகாலமாக இறந்தது, குடும்பத்தையே சோகத்தில் மூழ்க்கியது. ஜேம்ஸ் கல்கத்தா வந்தது அவர்களுக்கு சற்று ஆறுதல்.
ஹோரேஸ் வில்சன் லண்டன் சென்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத பேராசிரியர் பதவியேற்றார். அவர் வகுத்த நாணய அதிகாரி பதவி ஜேம்ஸ் பிரின்ஸெப்புக்கு கிடைத்தது. இதனால், பிரின்ஸெப்பின் ஆர்வம் நாணயங்கள் பால் திரும்பியது. ராஜஸ்தானில் கர்ணல் ஜேம்ஸ் டாட் (Colonel James Tod), ஆஃப்கானிஸ்தானில் சார்லஸ் மாஸன் (Charles Masson) முதலியோர் பல செம்பு வெள்ளி தங்க நாணயங்களைக் கண்டுபிடித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதினர். நெப்போலியனின் ராணுவத்தில் பணி செய்த ஜான்-பாப்திஸ்த் வெஞ்சுரா (Jean Baptiste Ventura), பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்கின் படையில் சேனாபதி ஆனார். தன் சீக்கியர் படையை ஆங்கிலேயர் படைக்கு நிகராக்க, நவீன விசை விஞ்ஞான போர்க் கருவிகளை அறிந்த பல அனுபவசாலி பிரெஞ்சு ராணுவ வீரர்களை வரவழைத்தார் ரஞ்சித் சிங். சீக்கிய ராஜ்ஜியத்தின் தலைநகரம் இன்று பாகிஸ்தானிலுள்ள லாகூர் (Lahore). லாகூரிலிருந்து ராவல்பிண்டி (Rawalpindi) செல்லும் வழியில் மாணிக்யாலா (Manikyala) எனும் இடத்தில் மாண்ட்ஸ்டுவார்ட் எல்ஃபின்ஸ்டோன் (Monstuart Elphinstone) 1809ல் ஒரு ஸ்தூபாவை கண்டுபிடித்தார். இதை 1830ல் பரிசோதித்த வெஞ்சுரா, அதனுள் சார்நாத் ஸ்தூபாவில் கிடைத்தது போல், ஒரு பெட்டியும், அதில் பல பழைய நாணயங்களையும் கண்டுபிடித்தார்.
ஆஃப்கானிஸ்தான் சென்ற லெஃப்டினண்ட் அலெக்ஸாண்டர் பர்ண்ஸ் (Lieutenant Alexander Burnes), அந்நாட்டில் நூற்றுக்கணக்கான ஸ்தூபாக்கள் இருப்பதாக கூறினார். பாமியான் (Bamina) எனும் இடத்தில் பிரம்மாண்ட புத்தர் சிலைகளைப் படம் வரைந்து அனுப்பினார். (இந்தச் சிலைகளை 2001இல் தாலிபான் அழித்தனர்).
பஞ்சாபிலும், பாக்ட்ரியா (Bactria) எனும் ஆஃப்கானிஸ்தானிலும் ஒரு பக்கம் கிரேக்க லிபியும், மறுபக்கம் எவரும் அறியா லிபியும் உள்ள நாணயங்கள் கிடைத்தன. இந்த லிபி பின்னாளில் கரோஷ்டி (kharoshTi) என்று ஜார்ஜ் பியூலர் (Georg Buhler) 1885இல் அடையாளம் காட்டும் வரை, பாக்ட்ரியன் லிபி என்றே அழைத்தனர். குஷானர், வலபி, பரமாரர், சேனர், கதம்பர், ராஷ்டிரகூடர் என்று பல வம்சங்களின் நாணயங்கள் கண்டுபிடித்து வாசிக்கப்பெற்று அவ்வம்சங்களின் மன்னர்கள் பெயர்கள் தெரியவந்தன. சில நாணயங்களில் ஒரு பக்கம் கிரேக்க லிபியும் மறுபக்கம் குச்சிஆட்கள் லிபியும் (pinmen script) இருந்தது.
வில்சன் 1832இல் லண்டன் திரும்ப, ஆசியாடிக் சங்கத்தின் செயலாளராக பிரின்ஸெப் பதவியேற்றார். சாஞ்சி வாரணாசி பஞ்சாப் போத்கயா என்று எங்கெல்லாம் தகவல்கள் கிடைக்கிறதோ, அனுப்பக்கேட்டார். போத்கயாவில் பர்ணீ (Burney) என்பவர் பழைய பாலி மொழியில் ஒரு கல்வெட்டு கிடைத்தாகவும், சந்தகுத்த எனும் மன்னனின் பேரன் தம்மதௌகா அங்கே கோயில் எழுப்பியதாக அதில் தகவல் உள்ளதாகவும் தகவல் அனுப்பினார்.
1834இல் கண்டியில் ஜார்ஜ் டர்ணௌர் (George Turnour), தான் கைவிட்ட மகாவம்சத்தை மீண்டும் படித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புத்தரின் மகாபரிநிர்வாணம் முதல் 1798இல் விக்கிரம்சிங்க கண்டியில் அரியணை ஏறிய வரை இலங்கை மன்னர்களின் வரலாறு மகாவம்சம் என்றும், தேவேன்மபியே திஸ்ஸ (Devenempiye Tissa) எனும் இலங்கை மன்னன், தம்பத்தீவில் (ஜாம்புதுவீபம்) பட்டலிபத்த நகரில் ஆண்ட தம்ம அசோக மன்னனிடம் அவன் மகன் மெகிந்தோவையும் மகள் சங்கமித்தாவையும் இலங்கைக்கு அனுப்பி புத்தமத கொள்கைகளைத் தங்களுக்கு விளக்கும்படி கேட்டுக்கொண்டான் என்றும் டர்ணௌர் தெரிவித்தார்.
அலெக்ஸாண்டர் ஜாண்ஸ்டனும் எடுவர்ட் அப்ஹாமும் எழுதிய புத்தர் கதை பல்வேறு பெரும்பிழைகளைக் கொண்டதென்றும், புத்தர் வாழ்ந்தது அசோகன் ஆண்ட மகத நாட்டில்தான், அங்கேதான் புத்த மதம் தோன்றியது, இலங்கையில் அல்ல என்றும் விளக்கினார். புத்தர் பிறக்கும் முன் பலநூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக இந்து மதமும் சம்ஸ்கிருதமும் வேதங்களும் நாகரீகமும் மொழியும் பாரத தேசத்தில் செழித்தது என்றும், இதைப் புத்தரோ, புத்த மத நூல்கலோ மறுக்கவில்லை; வேத நெறிகளையும் வேள்விகளையும் மறுத்து எதிர்க்கவே புத்த மதம் தோன்றியது என்றும் அவர் நவின்றார். இது எதையும் ஜான்ஸ்டனும் அப்ஹாமும் மறுக்காமல் மௌனம் காத்தனர். முன்னர் வில்ஃபோர்டு ஏமாந்தது போல் தாங்களும் ஏமாந்து போனதை உணர்ந்தனர் போலும். ஆப்பிரிக்காவில் புத்தர் தோன்றினார் என்ற ஜோன்ஸ் யூகம் தவறானது போல் தங்கள் யூகமும் ஆழமும் அகலமுமில்லா கருத்துகளால் அமைந்தது என்று உணர்ந்தனர்.
அசோகன் வரலாற்றில் மிக முக்கிய மன்னன் என்று அப்போது தான் அனைவரும் உணர்ந்தனர்.
சம்ஸ்கிருதத்தை ஒழி ஆங்கிலத்தை திணி
1835இல் தாமஸ் பாபிங்க்டன் மக்காலே (Thomas Babington Macaulay) இந்தியாவிற்கு வந்தார். 1828இல் தலைமை ஆளுனராகிய வில்லியம் பெண்டிங்க (William Bentinck) அவரை வரவழைத்தார். இந்திய மரபின் புகழை ஜோன்ஸ் கோல்புரூக் வில்கின்ஸ் போன்றவர்கள் ஐரோப்பாவில் பரப்ப, கோஃட்ட (Goethe) முதலிய ஜெர்மானியர்கள் இதை லயிக்க, பல ஆங்கிலேயரிடம் பலமான எதிர்ப்பு எழுந்தது. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதவர்கள், அதுவும் சிலைகளை வழிபடுபவர்க்ள் சாத்தானை பின்பற்றுவர்கள் என்பது ஜேம்ஸ் மில் (James Mill) போன்ற கிறிஸ்தவ மத வெறியர்களின் கருத்து. இதிலும் ஐரோப்பிய நாகரீகத்தை ஒப்பிடும்போது மற்ற நிறத்தவரும் நாட்டினரும், அவர்களது மரபும் பண்பும் நாகரீகமும் தாழ்மையானது என்பது, அவர்களின் ஆழமான நம்பிக்கை.
ஆசியர்கள், ஆப்ரிக்கர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினாலும், தாழ்ந்தவர்கள் என்பதிலும் அவர்கள் உறுதி. 1819இல் இந்தியாவில் காலடி வைக்காத ஜேம்ஸ் மில், ‘இந்தியாவின் வரலாறு’ என்று ஐரோப்பிய கிறிஸ்தவ மேலாதிக்க ஆணவக்கோணத்தில் புத்தகம் எழுதினார். இதோடு ஒத்துபோன கம்பெனி நிர்வாகிகள், பெண்டிங்கை அனுப்ப, அவர் ஜேம்ஸ் மில்லை சந்தித்து ‘நானில்லை நீங்கள்தான் இந்தியாவின் தலைமை ஆளுனர்’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இந்தியா வந்தார். ஆசியாடிக் சங்கத்தை இழுத்து மூடவும், இந்தியச் சட்ட நூல்களை, வழக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, ஈடிணையில்லா ஆங்கிலேயர் சட்டங்கள் வழியாக இந்தியாவை ஆளவேண்டும் என்று கருதினார். (இவையெல்லாம் முக்கால்வாசி இயேசு பிறக்குமுன் சிலை வழிப்பட்ட கிரேக்கரும் ரோமாபுரி யவனரும் வகுத்தனர் என்பது பொதுவாக இந்த விவாதங்களில் முன்வராத கருத்து).
மக்காலே ஒரு நீண்ட அறிக்கை (Minute on Education) எழுதி இயற்றினார். இந்தியாவின், ஏன் ஆசியாவின் அனைத்து நூலகங்களின் புத்தங்களும் ஒரு இங்கிலாந்து நூலகத்தின் ஒரு அலமாரி வரிசைக்குகூட சமமாகாது என்று முழங்கினார். சம்ஸ்கிருதம் மூட நம்பிக்கைகளின் மொழி, அதில் எந்த ஞானமும் அறிவியலும் இல்லை. இந்திய ஹிந்துக்கள் அனைவரும் நிறத்தால் இந்தியரானாலும் மனதால் கல்வியால் பண்பால் ஆங்கிலேயர்களாக மாறவேண்டும்; அதற்கு இந்திய மொழி கல்வி யாவையும் ஒழிக்கப்பட்டு ஆங்கிலக் கல்வியே புகட்டவேண்டும் என்றார். இதை பெண்டிங்க் பலமாக ஆதரித்தார்.
கல்கத்தாவில் பிரின்ஸெப், லண்டனில் ஹேரேஸ் வில்சன், கோல்புரூக், என்று பல அங்கிலேயர்களும் இதைக் காட்டமாக எதிர்த்தனர். கல்கத்தாவில் எட்டாயிரம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இதைக் கண்டித்து மனு எழுதி அரசிடம் சமர்ப்பித்தனர். அரசாங்கதின் தலைமை செயலாளர் ஜேம்ஸ் பிரின்ஸெப்பின் மற்றுமொரு அண்ணன் ஹென்றி தோபி பிரின்ஸெப் (Henry Thoby Prinsep). அவரும் மக்காலெ-பெண்டிங்க் திட்டத்தை அழுத்தமாகக் கண்டித்தார். இதனால் அவரை பதவியிலிருந்தும், அரசு பணியிலிருந்தும் பெண்டிங்க் நீக்கினார். இதற்கு முன் ஆங்கிலக் கல்வியையும் புதிய அறிவியலையும் இந்தியர்களுக்குப் புகட்ட தொடங்கபட்ட ஹிண்டு கல்லூரி, கல்கத்தா புத்தக சங்கம் போன்றவை முழுவதும் ஆங்கிலேய கிறிஸ்தவ பிரச்சார கூடங்களாய் மாறின. ஆள்பவருக்கும் மக்களுக்கும் இடையே இது பெரிய பிளவை உருவாக்கி, பெரும் சங்கடத்தில் முடியும் என்று எச்சரித்த ஆங்கிலேயரையும் ஐரோப்பியரையும் கம்பெனி அதிகாரிகளும் அவர்களுடைய லண்டன் ஆதரவாளர்களும் துச்சமாய் இகழ்ந்தனர். 1857இல் அவர்களது எச்சரிக்கை மெய்யானது. அது வேறு கதை. நிற்க.
1830களில் துவார்கநாத் தாகூர் (Dwarakanath Tagore), ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் முதலிய ஆங்கிலக் கல்வி பயின்ற இந்தியர்கள், ஆசியாடிக் சங்கத்தில் இணைந்தார்கள். ராம் மோகன் ராய் என்ற அரசரும் இவர்களும், ஐரோப்பிய விசை விஞ்ஞான பொருளாதார நிர்வாகச் சாதனைகளின் மேல் பலத்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்ததால், இந்து மதத்தின் மூடநம்பிக்கைகள் என்று தாங்கள் கருதியதை அகற்றி, இந்தியர்களை, குறிப்பாக ஹிந்து சமுதாயத்தைச் சீர்திருத்தி முன்னேற்றலாம் என்று கருதினர்.
ரவீந்திரநாத் தாகூரின் பாட்டனார், துவாரகநாத் தாகூர். வில்லியம் பிரின்ஸெப் தன் கடன்களிலிருந்து விடுபெற, அவரோடு வில்லியம் காரோடும் தாகூர் ஒரு கம்பெனி (Carr, Tagore & Co) நிறுவினார். ஏற்கெனவே 1829இல் ஒரு வங்கியை (Union Bank) நிறுவிய துவாரகநாத், நிலக்கரி சுரங்கம், தேயிலைத் தோட்டம், சணல் நூல் ஆலை என்று பல துறைகளில் இறங்கினார்.
தேவர்களுக்குப் பிரியமானவன்
ஜேம்ஸ் டாட் குஜரத்திலுள்ள கிர்ணார் (Girnar) மலையில் குச்சிலிபி கல்வெட்டைப் பதிவெடுத்து அனுப்பினார். குஜராத்தில் கிர்ணார், ஒடிஷாவில் தௌலி, டெல்லியில் ஃபிரோஸ் ஷா தூண், மூன்றின் பிரதிகளையும் அருகருகே வைத்து ஒப்பிட்ட பிரின்ஸெப், அதிர்ந்துபோனார். மூன்றிலும் சாசனங்களும் ஒன்றாயிருந்தன. வரிக்கு வரி, சொல்லுக்கு சொல், ஒற்றுமை. இவ்வளவு பரந்த நிலத்தை ஆண்ட மன்னன் யார்? இது இன்ன மொழி? சம்ஸ்கிருதமாகத்தான் இருக்கவேண்டும் என்று யூகித்தார் பிரின்ஸெப்.
காளிதாசனின் சாகுந்தலை நாடகத்தை கோஃட்ட போற்றிய தாக்கத்தில் ஜெர்மனியில் சம்ஸ்கிருதத்தின் மேல் ஆர்வம் பெருகியிருந்தது. பெர்லின், பான்(Bonn), காட்டிங்கன் (Gottingen) என்று பல நகரங்களில் பல்கலைகழகங்களில் சம்ஸ்கிருத மொழியும் இந்திய வரலாறும் ஆராய்ச்சி களங்களாயின. வில்லியம் ஜோன்ஸ் மறைந்த பின் இருபது ஆண்டுகளாக ஆங்கிலேயரின் ஆராய்ச்சிகளும் ஆர்வமும் வேகம் குறைய, பிரான்சின் பண்டிதர்களும் ஜெர்மனியின் பண்டிதர்களும் வேகமாக செயல்பட்டனர். எகிப்திய லிபிகளை பிரான்சின் சம்போல்லியன் ஆராய்ந்து உலகப்புகழ் பெற்றிருந்தார்.
நார்வேயில் பிறந்த கிறிஸ்டியன் லாஸென் (Christian Lassen) ஜெர்மனி பான் பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருதம் பயின்றார். ஹிதோபதேசம், ராமாயணம், மாலதிமாதவம் முதலிய நூல்களை ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். அகாதாக்ளீஸ் (Agathocles) என்ற மன்னன் பெயர்கொண்ட நாணயத்தில் மறுபக்கத்தில் குச்சிஆட்கள் லிபியில் இருந்த சொல்லை ‘அகதகுலஸ்ய’ என்று லாஸென் வாசித்தார். இதை பிரின்ஸெப் ஆசியாடிக் சங்கத்தின் மாதாந்திர பத்திரிகையில் பாராட்டி குறிப்பிட்டார். அதே சமயம் தன்னைப் போன்ற ஆங்கிலேயர், தீவிரமாக முயற்சி செய்து குச்சிஆட்கள் லிபியை வாசிக்கவில்லை என்றால், லாஸன் போன்ற ஜெர்மானியர் வாசித்து புகழைச் சம்பாதிப்பார்கள் என்று அச்சமும் போட்டி உணர்வும் தெரிவித்தார்.

சாஞ்சி ஸ்தூபாவின் பலகைக் கற்களில் இரண்டு மூன்று வார்த்தைகள் மட்டுமே கொண்ட குறுகிய கல்வெட்டுகள் இருந்தன என்று அங்கிருந்து வந்த பிரிதிகள் காட்டின. இவையாவும் அதே இரண்டு எழுத்துகளிலும் ஒரு புள்ளியிலும் முடிந்தன. அவ்விரண்டு எழுத்துகள் ‘தான’ என்ற சொல் என்று பிரின்ஸெப் யூகித்தார். புள்ளி ‘ம்’ எனும் மெய்யெழுத்தை (சம்ஸ்கிருதத்தில் அனுஸ்வரம் என்பர்). பல கல்வெட்டுகளில் இதன் முன்னெழுத்து ஸ. ஸம்ஸ்கிருதத்தில் ‘ஸ்ய’ என்றால் உடைய. புத்தஸ்ய என்றால் புத்தனுடைய. இந்த மூன்று எழுத்துகளோடும் லாசன் வாசித்த அகதாக்ளீஸ் எழுத்துகளோடும் சேர்த்து ஒரு எழுத்துப்பட்டியலை தயாரித்தார். ஒரு மெய்யெழுத்தின் மேல் வலது பக்கம் கோடிட்டால், அது ஆகார உயிர்மெய், இடது பக்கம் கோடிட்டால், ஏகார உயிர்மெய், இரண்டு கோடுமிட்டால், ஓகார உயிர்மெய், வலது பக்கம் கோடிட்டு வளைத்தால் இகர, ஈகார உயிர்மெய், எழுத்தின் அடியில் கோடிட்டால் உகர உயிர்மெய் என்று உணர்ந்து, பட்டியலைத் தயாரித்தார். இதன்படி கல்வெட்டுகளைப் படித்தபின், இவற்றின் மொழி சம்ஸ்கிருதம் அல்ல, பிராகிருதம் என்றும் உணர்ந்தார். வழக்கொழிந்த அந்தப் பண்டைய பிராகிருத சொற்களின் சம்ஸ்கிருத மூலச்சொற்களை யூகித்து முழுக் கல்வெட்டையும் 1937இல் வாசித்து வெளியிட்டார்.
‘தேவானாம்பிய பியதசி லாஜா ஏவம் அஹா’என்று இவை தொடங்கின. இதன் பொருள் ‘தேவர்களுக்கு பிரியமான அழகியதோற்றமுடைய (பியதசி) ராஜா (லாஜா) இப்படி (ஏவம்) செப்பினான் (அஹா).’
இந்திய இலக்கியத்தில் ‘தேவானாம்பிய’ என்று எந்த மன்னன் பெயரும் இல்லாததால், டர்ணௌரின் மகாவம்சத்தில் இலங்கை மன்னன் தேவேனம்பியே திஸ்ஸ என்று பெயரிருந்ததால், அந்த இலங்கை மன்னனே இந்தியா முழுதும் ஆண்டு, இந்தக் கல்வெட்டு சாசனங்களை வடித்தான் என்று அறிவித்தார். ஆனால் டர்ணௌர், மகத மன்னன் அசோகன்தான் பாரதம் எங்கும் புத்த ஸ்தூபிகளை எழுப்பி தன் மகன், மகளை இலங்கைக்கு அனுப்பினான் என்று விளக்கிய பின், சந்திரகுப்த மௌரியனின் பேரன் அசோகன்தான் ‘தேவானாம்பிய பியதசி’ என்று பிரின்ஸெப் திருத்தினார். கல்வெட்டில் மேலும் எகிப்திய மன்னன் துலமேயோ (Ptolemy), மாக (Maga), அந்திகோன (Antigone) என்ற தூர தேச மன்னர்களுக்கு அசோகன் தூது அனுப்பினான் என்றும் வாசித்து, அசோகனின் சமகாலத்தையும் நிர்ணயம் செய்தார். கலிங்கப்போரின் பெரும் உயிரிழப்பால் வருந்திய மன்னன் அசோகன், யுத்தவிஜயத்தைவிட தர்மவிஜயமே மேல் என்றும், முதியோரை மதித்தலும், ஏழைகளையும் நோய்பட்டவரையும் பேணுவதையும், மிருக வதை செய்யாமல் அகிம்சை கடைபிடித்தல் மக்களின் கடமை என்றும், நல்லாட்சிக்கும் மக்களின் நலனுக்கும் தன்னை என்றைக்கும் அதிகாரிகள் மூலம் நாடலாம் என்றும் அவன் கூறிய கல்வெட்டுகளை உலகுக்கு கூறி, சாதனை புரிந்தார்.

வில்லியம் ஜோன்ஸ், வில்சன், கோல்புரூக், வில்கின்ஸ் போன்றவர்கள் ஐரோப்பியர் அறியாத இந்தியர்களின் வரலாற்றையும் இலக்கியத்தையும் கலையையும் அவர்களுக்கு தொகுத்து நவின்றார். பிரின்ஸெப், இந்தியர்களே மறந்து போன வரலாற்றை லிபியை மரபை இந்தியர்களுக்கே தொகுத்து நவின்றார்.
குச்சிஆட்கள் லிபியை அவர் சரியாக வாசித்ததால், இந்தியாவின் அறுநூறு ஆண்டுகள் வரலாறு மீண்டெழுந்து வர உதவியது. குஷானர் சத்ரபர் சாதவாகனர் சுங்கர் என்று இந்தியாவின் பல மறந்து மறைந்து போன அரச வம்சங்களின் கல்வெட்டு நாணயம் ஆகியவை படிக்கப்பட்டு, அவர்கள் வரலாறும் சாதனையும் உலகறிந்தன.
1875இல் பியூலர் இந்த குச்சிஆட்சிகள் லிபியே பல புத்தகங்கள் புகழ்ந்த பிராஹ்மி லிபி என்று யூகித்தார். இது வரலாற்று வல்லுனர்களால் ஏற்கப்பட்டது.
ஆனால் ஜோன்ஸ் போல, நாற்பதாவது வயதில் அளவிலா உழைப்பால் உடல் நலம் குன்றி, மீண்டும் இங்கிலாந்து சென்று, 1840இல் இளம் வயதிலேயே இறந்தார் பிரின்ஸெப். அவருக்கு மரியாதை செலுத்த கல்கத்தா மக்கள் கங்கை ஹூக்லி நதியில் ஒரு படித்துரை அமைத்தனர். இன்றும் பிரின்ஸெப் கட் என்ற பெயருடன் அவருடைய அபாரமான சாதனைகளின் சின்னமாக இயங்குகிறது.
1890இல் மதுரை அருகே மாங்குளத்திலும், பின்னர் தமிழகத்தில் அங்குமிங்கும் கிடைத்த பல பிராஹ்மி கல்வெட்டுகள், பிராகிருதம் என்றே வல்லுனர் கருதினர். 1924இல் கே.வி சுப்பிரமணிய ஐயர், பிராகிருத சம்ஸ்கிருத மொழிகளிலுள்ள வர்க எழுத்துகள் தமிழக பிராஹ்மி கல்வெட்டுகளில் இல்லை. மாறாக வடக்கில் இல்லாத ற,ன,ள,ழ என்ற எழுத்துகள் தமிழக் கல்வெட்டுகளில் உள்ளன. அதனால் இவை பிராகிருத/அசோக பிராமி அல்ல, தமிழ் பிராமி எனும் லிபி என்று முன்மொழிந்தார். காலப்போக்கில் இதுவும் ஏற்கப்பட்டது.
இதன் பின் இந்திய மொழிகள் எதிலும் இல்லாத இந்திய ராஜ்ஜியங்களின் சரித்திரங்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கணிக்கப்பட்டு, கோர்த்து, ஒப்பிட்டு, புதுத்தகவல்களின் வரவால் திருத்தி, வடித்து புத்தகங்களாய் வெளிவரத் தொடங்கின. மறந்து போன அசோகன், ஜவர்லால் நேருவுக்கும் அம்பேத்கருக்கும், பல தலைவருக்கும் உதாரணப் புருஷன் ஆயினான். ‘ஆசிய ஜோதி’ என்று புத்தர் கதையையும், பௌத்த மதம் ஆசியா முழுவதும் பரவியதையும், இங்கிலாந்து பத்திரிகையாளர் எட்வின் அர்ணோல்டு எழுதினர். இந்தப் பட்டமே பின்பு ஜவஹர்லால் நேருவுக்கு அவர் ரசிகர்கள் பொருத்தினர். ஜோன்ஸ், எல்லிஸ், மேக்கன்சீ, கோல்புரூக், பிரின்ஸெப் புகானன், வெஞ்சுரா டர்ணௌர், லாஸென் ஆகிய பண்டிதர்களின் பெயர்களே பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்களில் காணமுடியாது. இந்திய வரலாறு கடந்த இருநூறு ஆண்டுகளில் தோண்டி தேடித் தொகுத்துக் கணிக்கப்பட்டு வந்த கதையைச் சோற்றில் மறைத்த பூசணியாய் வழங்கி, கல்வி புகுட்டப்படுகிறது.
சமகால வரலாறு எதுவாக இருந்தாலும் செல்லாது; அதெல்லாம் பொய், புரட்டு, புராணம், மூடநம்பிக்கை; புவியியலைபோல் நவீன விஞ்ஞான முறைகளால் கணிக்கப்பட்ட யூகிக்கப்பட்ட தகவல்களே முழு உண்மை. இலக்கியம் என்ன சொன்னாலும் பொய், கல்வெட்டு மட்டுமே மெய் என்று சரித்திர துறையே மாறிவிட்டது. அதே சமயம் இந்த விஞ்ஞானம் எப்படி வளர்ந்தது, எங்கே தோன்றியது, எப்படி மருவியது, பொய்களும் தவறான நம்பிக்கைகளும் எப்படி உடைத்து உண்மைகள் வெளிவந்தன, என்பதில் சரித்திர ஆர்வலர்களுக்கு பெரிதும் அக்கறை இல்லை. விஞ்ஞானிகளுக்கு ஆர்வமே இல்லை. எந்தப் போரில் யார் யாரை வீழ்த்தி எந்த நிலத்தைப் பிடித்தான், அவன் வாரிசுகளை யார், எப்படித் தாக்கிக் கொள்ளையடித்தார் என்பதே சலிப்பூட்டும் சரித்திரமாகிவிட்டது.
(தொடரும்)
________
உதவிய புத்தகங்கள், வலைதளங்கள்
– Buddha and the Sahibs, by Charles Allen
– The Asiatic Society of India – O.P. Kejariwal
– Journal of the Asiatic Society of Bengal, 1837
– Story of Scripts – Powerpoint by S Swaminathan
– அசோகன் கல்வெட்டு – முதல் பத்து தம்மலிபிகள்
– அசோகன் கல்வெட்டு – கடை நான்கும் தௌலி தம்மலிபியும்