Skip to content
Home » முப்பத்தாறு ரத்தினங்கள் #1 – இசையின் அழைப்பு

முப்பத்தாறு ரத்தினங்கள் #1 – இசையின் அழைப்பு

‘கன்னட மொழியின் ஆஸ்தி’ என்றும் ‘சிறுகதைகளின் ஜனகர்’ என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த வாசகர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், இந்திய அளவில் அனைவரும் அறிந்த மிகமுக்கியமான எழுத்தாளர். இயற்பெயரிலும் ஸ்ரீனிவாச என்கிற புனைபெயரிலும் எண்ணற்ற படைப்புகளை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் முதல்வரிசைப் படைப்பாளிகளில் ஒருவராக இடம்பெறத்தக்க முக்கியமான எழுத்தாளர். ஞானபீட விருது பெற்றவர்.

கவிதை, காவியம், சிறுகதை, நெடுங்கதை, நாவல், நாடகம் என எல்லா வடிவங்களிலும் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் அவர்கள் மிகச்சிறந்த படைப்புகளை எழுதியிருக்கிறார். இராமாயணக்கதையை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்’ என்னும் தலைப்பில் அவர் இயற்றிய நெடுங்காவியம் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது. அவர் எழுதிய சிக்கவீர ராஜேந்திரன், சென்னபசவ நாயக்கன் ஆகிய இரு நாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த நாவல்களைப்போலவே 1928இல் அவர் எழுதி வெளிவந்த ‘சுப்பண்ணா’ என்னும் நெடுங்கதை, இன்றளவும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகிற படைப்பாகும். ஏறத்தாழ நூறாண்டுகள் கடந்த நிலையிலும் அது வாசிக்கத் தகுதியான ஒரு புத்தகமாக நிலைத்திருக்கிறது.

தென்னிந்திய மொழிகளுக்கிடையே இலக்கியப் பரிமாற்றத்துக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட தென்மொழிகளின் புத்தக டிரஸ்ட்டின் ஆதரவில் அருணோதயம் பதிப்பகம் இந்த நெடுங்கதையை ஒரு தனிநூலாக 1958இல் வெளியிட்டது. தமிழில் மொழிபெயர்த்தவர் ஜெயலட்சுமி ஸ்ரீநிவாசன்.

இந்தப் படைப்புக்கு மாஸ்தி அவர்கள் எழுதிய முன்னுரையில் இக்கதையின் கரு உருவான விதத்தைப்பற்றி சுருக்கமான ஒரு குறிப்பை அளித்திருக்கிறார். ஒருநாள் தன் நண்பரான நவரத்தின ராமாராவ் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில், அவர் தமக்கு நன்றாகத் தெரிந்த ஓர் இசைக்கலைஞரின் இறுதி நாட்களைப்பற்றி உருக்கமுடன் சொன்னதாகவும் அதைக் கேட்டு மன எழுச்சி பெற்று அவருடைய அனுமதியோடு அந்த இசைக்கலைஞரின் வாழ்க்கையை ஒரு நெடுங்ககதையாக எழுதியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அக்கலைஞரின் உண்மையான பெயர் சாமண்ணா. மாஸ்தி தன் கதைக்காக அவருடைய பெயரை சுப்பண்ணா என மாற்றிக்கொண்டார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் கதை நிகழ்கிறது. அப்போது மும்முடி கிருஷ்ணராஜ உடையார் மைசூரை ஆட்சி செய்துவந்தார். கிருஷ்ணராஜ உடையார் கலையில் ஆர்வம் கொண்டவர். கலைஞர்கள் மீதும் பெருமதிப்பு கொண்டவர். ஆதலால், அவர் ஆட்சி செய்த காலத்தில் ஒவ்வொரு நாளும் தேசத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கலைஞர்களும் வித்வான்களும் மைசூர் அரண்மனைக்கு வந்து அரசரைச் சந்தித்து தம் திறமையை வெளிப்படுத்தி அன்பளிப்பு பெற்றுச் செல்கிறார்கள். சில கலைஞர்களும் அறிஞர்களும் மட்டும் அந்த அவையிலேயே அரசருக்குத் துணையாகவும் தக்க நேரத்தில் ஆலோசனை வழங்குகிறவர்களாகவும் நிரந்தரமாக இருக்கிறார்கள்.

சுப்பண்ணாவின் அப்பாவான புராண நாராயண சாஸ்திரி மன்னருடைய அவையில் புராணக்கதைகளைக் கூறுபவராகவும் மன்னருக்கு ஆலோசனை வழங்குபவராகவும் விளங்குகிறார். அவருடைய முன்னோர்கள் சாமராஜநகரைச் சேர்ந்தவர் என்றபோதும் நாலைந்து தலைமுறையாக மைசூரிலேயே வாழ்ந்ததால் அவர்களும் மைசூர்க்காரர்களாகவே ஆகிவிட்டனர். அரண்மனையின் நெருக்கத்தால் அவருடைய வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கிடைத்துவிடுகிறது. தன் மகன் சுப்பண்ணா தன்னைப்போலவே சமஸ்கிருதம் கற்று பல புராணங்களில் தேர்ச்சி பெற்று அரண்மனையில் அமர்ந்து மாத வருமானம் பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார். இவ்வுலகில் எல்லா அப்பாமார்களும் தம் நெஞ்சில் நிரப்பிவைத்திருக்கும் கனவைத்தான் அவரும் நிறைத்துவைத்திருக்கிறார்.

ஆனால் சிறுவனான சுப்பண்ணாவுக்கு சமஸ்கிருதத்திலும் புராணங்களிலும் கொஞ்சம் கூட ஈடுபாடு உருவாகவில்லை. படி, படி என தொடர்ச்சியாக வற்புறுத்தும் அப்பாவிடம் ஒருநாள் தயக்கத்துடன் தன் ஆர்வமின்மையைத் தெரிவிக்கிறான் அவன். அப்போதுகூட அவன் ஏதோ விளையாட்டுத்தனமாகப் பேசுகிறான் என்றும் புராணத்தின் ருசியை உணரத் தொடங்கியதும் தானாகவே அவன் மனம் சமஸ்கிருதத்தில் நாட்டம் கொள்ளும் என்றும் நம்புகிறார் சாஸ்திரி. ஆனால் அவருடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்துபோகிறது.

அந்த நிராசையால் சாஸ்திரியின் மனம் துயருறுகிறது. எந்த நிலையிலும் சுப்பண்ணா சமஸ்கிருதத்தின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறான். அவனுடைய உறுதியைக் கண்டு சாஸ்திரி ஏமாற்றத்தில் மூழ்கிவிடுகிறார். ஏதோ ஒரு கணத்தில் சுப்பண்ணாவின் மனம் பிடிலிலிருந்து எழும் இனிய இசையின் பக்கம் திரும்பிவிடுகிறது. அந்த நாட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பித்தாக மாறிவிடுகிறது. அன்றுமுதல் சுப்பண்ணா சமஸ்கிருதத்தை நிராகரித்து பிடில் இசைக்கப் பழகுகிறான். இசை அவனை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. இசையின் அழைப்புக்கு அவன் உளமார இணங்குகிறான். அந்த உலகம் அவனுக்குத் தேனாக இனிக்கிறது.

இசையின் பாதையில் திரும்பி வரமுடியாத அளவுக்கு வெகுதொலைவு சென்றுவிட்டதை அறிந்து சாஸ்திரி துயருறுகிறார். மகனை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் தடுமாறுகிறார். எதிர்கால வாழ்க்கைக்கு இசையைவிட சமஸ்கிருதம் உறுதியான உறுதுணையாக இருக்கும் என்பதை அவனுக்குப் புரியவைக்க முடியாத தன் இயலாமையை நினைத்துத் துயரத்தில் மூழ்குகிறார். ஆயினும் என்றாவது ஒருநாள் அவன் மனம் மாறி சமஸ்கிருதப் பாடத்தைப் படிக்கத் தொடங்கிவிடுவான் என்னும் நம்பிக்கை மட்டும் அவருடைய நெஞ்சில் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

காலம் நகர, நகர சாஸ்திரி கொண்டிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்துகொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சுப்பண்ணா இனி ஒருபோதும் சமஸ்கிருதத்தின் பக்கம் திரும்பப்போவதில்லை என்பதைத் தெளிவாகவே அவர் புரிந்துகொள்கிறார். சாஸ்திரியுடைய ஏமாற்றம் பல மடங்காகிவிடுகிறது.

இளமையின் வேகம் காரணமாக சுப்பண்ணா இசையின் பாதையையே தனக்குரிய பாதையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். விழித்திருக்கும் நேரமெல்லாம் இசைப்பயிற்சியிலேயே திளைத்திருக்கிறான். இசையைத் தவிர அவன் மனத்தில் வேறு எதற்கும் இடமில்லை. இசை அழைத்துச்செல்லும் இடங்களுக்கெல்லாம் அவனும் செல்கிறான். இசையின் அழைப்பை மட்டுமே அவன் செவி கேட்கிறது. இசையின் திசையில் மட்டுமே அவன் மனம் திரும்பி நடக்கிறது.

ஒருவேளை, திருமண வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினால் சுப்பண்ணாவின் மனத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என நினைக்கிறார் சாஸ்திரி. அதனால் பல இடங்களில் விசாரித்து அடுத்த நகரத்திலிருந்து லலிதா என்னும் பெண்ணைத் தேடிக் கண்டடைந்து சுப்பண்ணாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். இனிய இல்லறத்தின் விளைவாக சுப்பண்ணாவுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒரு தந்தையான பிறகும் சுப்பண்ணாவின் மனத்தில் சாஸ்திரி விரும்பிய மாற்றம் நிகழவில்லை. சுப்பண்ணா நாள்முழுக்க இசைப்பயிற்சியிலேயே மூழ்கியிருக்கிறார்.

பெற்றோரின் ஆழ்மனத்தில் தேங்கியிருக்கும் கசப்பையும் சலிப்பையும் சுப்பண்ணா உணர்ந்துகொள்கிறார். அவர்கள் நினைப்பதைப்போன்ற லெளகிக வாழ்க்கையை வாழ அவர் மனம் ஏற்க மறுக்கிறது. அவரால் மனநிறைவோடு தன் இசைப்பயிற்சியைத் தொடரமுடியவில்லை. அதனால் மைசூரிலேயே வேறொரு பகுதியில் வசிக்கும் நீலாசினி என்கிற தேவதாசிப் பெண்ணின் வீட்டுக்கு ஒவ்வொரு நாளும் சென்று இசைப்பயிற்சியை மேற்கொள்கிறார். சுப்பண்ணாவுடைய இசையால் ஈர்க்கப்பட்ட நீலாசினி அவரை மாபெரும் கலைஞனாகவே மதித்து வழிபடுகிறாள். அவருடைய இசையைக் கேட்கும் ஒவ்வொருவருமே மனம்திறந்து பாராட்டுகின்றனர்.

ஊரார் அனைவரும் பாராட்டினாலும் சுப்பண்ணாவுக்குத் தன் வீட்டில் பாராட்டு கிடைப்பதில்லை. அவரை ஒரு கலைஞனென இந்தச் சமூகத்தின் முன்னிலையில் நிறுத்தி கவனத்துக்கு உட்படுத்தும் வகையில் அவருக்கு நல்ல நட்புவட்டமும் அமையவில்லை. இசையில் அவருக்கு வசப்பட்டிருக்கும் மேதைமை, தன்னை முன்வைத்துக்கொள்வதில் அவருக்கு வசப்படவில்லை. அரண்மனையில் அரசரின் முன்னிலையில் இசைப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் தன் இசைத்திறமையை அவருக்கு உணர்த்திவிடலாம் என அவர் நினைக்கிறார். ஆனால் அரசரைச் சுற்றி முதல் வட்டத்திலும் இரண்டாவது வட்டத்திலும் நிறைந்திருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் சுப்பண்ணாவைத் தவிர்க்கிறார்கள். சுப்பண்ணாவின் இசைத்திறமையை அறிந்த அவர்கள் பொறாமை காரணமாக, அவனை அரசரை அணுகவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அவர்களுடைய வளையத்தைக் கடந்து அரசரைக் காண சுப்பண்ணாவால் முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. தான் ஒரு இசைக்கலைஞன் என இந்த உலகத்தின் பார்வையில் நிலைநிறுத்திக்கொள்ள இயலாத வேதனை அவரைத் தினந்தோறும் அரித்தெடுக்கிறது.

சொந்தமாக பொருளீட்ட வழி தெரியாமல் அப்பாவின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறவர் என்று பெற்றெடுத்த தாயே ஒருநாள் அவரைப் பழித்துரைக்கும் நிலை வருகிறது. அந்தப் பழிச்சொல் அவரை மேன்மேலும் நிலைகுலைய வைக்கிறது. அரசரின் முன்னால் அவையில் பாடமுடியாமல் போனாலும், பொதுமக்கள் முன்னிலையில் பாடுவதற்கு ஒருசில கச்சேரிகள் அமைந்தால்கூட ஓரளவு வருமானத்துக்கு வழிசெய்து கொள்ளலாம் என அவர் மனம் திட்டமிடுகிறது. ஆனால் அந்த வழியையும் அவர் மீது பொறாமை கொண்ட பிற கலைஞர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். நேரமறிந்து அவருக்கு உதவி செய்ய ஒருவரும் அமையவில்லை.

தான் ஒரு மாபெரும் கலைஞன் என்கிற எண்ணமும் நம்பிக்கையும் அவருக்கு அழுத்தமாக இருந்தபோதும், அவரை வெளிப்படுத்திக்கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்பு கூட அமையாமல் போய்விடுகிறது. அத்தருணத்தில் எதிர்பாராத விதமாக, கலைகளையும் கலைஞர்களையும் மதிக்கத் தெரிந்த அரசர் மறைந்துவிடுகிறார். அரசரின் முன்னிலையில் இசைத்து பாராட்டும் பரிசும் பெறவேண்டும் என்கிற அவருடைய கனவு மண்ணோடு மண்ணாகிவிடுகிறது. துரதிருஷ்டவசமாக, அடுத்த அரசராகப் பதவியேற்றுக்கொண்டவர் இசை, கலை போன்ற செய்திகளில் ஆர்வமே இல்லாதவராக இருக்கிறார். அரண்மனை இசைக்கலைஞனாக வலம்வரலாம் என்கிற சுப்பண்ணாவின் கனவு கலைந்துபோகிறது. இசையின் அழைப்பு அவரை மிகச்சிறந்த ஒரு மேதையாக மாற்றுகிறது. அதே சமயத்தில் இந்த உலகியல் வாழ்வில் வாழத் தெரியாத ஒரு பேதையாக்கிவிடுகிறது.

எந்தக் கட்டத்திலும் மனம் சோர்வுறாமல் அவர் இசையை மட்டும் உறுதியாகப் பற்றிக்கொள்கிறார். அவரை எப்போதும் ஆதரிக்கும் நீலாசினியின் வீட்டில் அவருடைய இசைப்பயிற்சி தினமும் தொடர்கிறது. அந்த இசைவெள்ளத்தில் மூழ்கி தன் துயரத்தை மெல்ல மெல்ல கடந்துவர முயற்சி செய்கிறார் சுப்பண்ணா. அந்நிலையில் கூட இசையைத் துறந்துவிடலாம் என்கிற எண்ணம் ஒருநாளும் அவர் மனத்தில் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில், இசையில் ஆர்வம் கொண்ட சிறார்களுக்கு பயிற்சி கொடுத்து மனநிறைவடையலாம் என்றும் அதன் வழியாகக் கிடைக்கும் சிறுவருமானத்தைக் கொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்திவிடலாம் என்றும் அவர் திட்டமிடுகிறார்.

ஒருநாள் வழக்கம்போல மதிய வேளையில் உணவுண்ண வீட்டுக்குத் திரும்பிவந்த நேரத்தில் தன் தாயே மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தன் மனைவியை நடத்துவதையும் வசைபாடுவதையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் சுப்பண்ணா. அவருடைய மெளனத்தை உடைக்க அந்தத் தாய் பல விதங்களில் முயற்சி செய்தாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. புண்பட்ட மகனுடைய மனத்தை அவரால் ஆற்றமுடியவில்லை.

அன்று இரவு, தீவிர ஆலோசனைக்குப் பிறகு சுப்பண்ணா ஒரு முக்கியமான முடிவை எடுக்கிறார். இசைப்பயிற்சிக்காக அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் தேவதாசிப் பெண்ணைச் சந்தித்து நூற்றைம்பது ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டு கருவுற்றிருந்த மனைவி லலிதாவையும் மகனையும் அழைத்துக்கொண்டு நள்ளிரவு வேளையில் ஒருவருக்கும் தெரியாமல் மைசூரைவிட்டுப் புறப்பட்டுவிடுகிறார். இசை சார்ந்து அவர் கொண்டிருந்த எந்தக் கனவும் அந்த ஊரில் நிறைவேறவில்லை. ஆயினும் எங்காவது ஓர் இடத்தில் இசை தனக்கு வாழ்வளிக்கும் என்கிற கனவோடு மனம்போன போக்கில் செல்கிறார்.

விடிந்து நீண்ட நேரத்துக்குப் பிறகே சுப்பண்ணாவின் பெற்றோர், மகனும் மருமகளும் பேரக்குழந்தையும் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டனர் என்கிற உண்மையை உணர்ந்துகொள்கின்றனர். முதலில் அந்த வெறுமை அவர்களுக்குத் திகைப்பை ஏற்படுத்தினாலும், ஏதோ மனத்தாங்கலால் லலிதா தன் தாய்வீட்டுக்குத்தான் சென்றிருக்கக்கூடும் என்றும் ஒருசில நாட்களில் திரும்பி வந்துவிடக்கூடும் என்றும் நினைத்து ஆறுதல் கொள்கின்றனர். நாட்கள் கடந்தனவே தவிர, அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. அதனால் நேரில் சென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு வருவதற்காக சம்பந்தி வீட்டுக்கு ஆளை அனுப்பிவைக்கிறார் சாஸ்திரி. அங்கும் செல்லவில்லை என்கிற செய்தி கிடைத்த பிறகுதான் அவர்கள் ஊரைவிட்டுச் சென்றுவிட்ட செய்தியை அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. சாஸ்திரியும் அவர் மனைவியும் தீராத குற்ற உணர்விலும் துயரத்திலும் மூழ்குகிறார்கள்.

நான்கு மாத பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைகிறார்கள். தொடர்ச்சியான பயணத்தின் விளைவாக லலிதாவின் கரு கலைந்துவிடுகிறது. சில மாதங்கள் அங்கேயே தங்கி ஓய்வெடுத்துக்கொண்ட பிறகு அங்கிருந்து கல்கத்தாவுக்குச் செல்கிறார்கள். அந்த நகரில் ஒரு சிறுவீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்துகொண்டு, அங்கு வசிக்கத் தொடங்குகிறார்கள். அவருடைய இசைத்திறமையை அறிந்த ஒருசிலர் அவருக்கு சின்னச்சின்ன கச்சேரிகளில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கிறார்கள். அந்த வருமானத்தில் அவர் வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார். அக்கம்பக்கத்தில் வசிக்கும் சிறார்களுக்கு இசைப்பயிற்சி அளித்து பொழுதுபோக்குகிறார்.

காலமெல்லாம் அவர் தொழுது வணங்கிக் கற்ற இசை அவரை எந்த உயரத்துக்கும் அழைத்துச் செல்லவில்லை. அதே சமயத்திலும், நெருக்கடியான சூழலின் விளைவாக எந்தப் பள்ளத்திலும் விழவைக்கவும் இல்லை. ஒவ்வொரு மாதமும் குடும்பச்செலவுக்குப் போக எஞ்சிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்துவைத்து, மொத்தமாக நூற்றைம்பது ரூபாய் சேர்ந்ததும் நீலாசினியிடமிருந்து பெற்றுவந்த பணத்தைத் திருப்பி அனுப்பிவைக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டாக காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருமுறையாவது ஊர்ப்பக்கம் சென்றுவரலாம் என்னும் கோரிக்கையை ஒவ்வொரு நாளும் முன்வைத்தபடி இருக்கிறாள் சுப்பண்ணாவின் மனைவி லலிதா. ஆனால் சுப்பண்ணா அத்திட்டத்துக்கு உடன்படவில்லை.

சில ஆண்டுகள் கழித்து ஹரித்துவாரில் ஒரு மேளா நடைபெறவிருப்பதாக எங்கெங்கும் செய்தி பரவுகிறது. நாட்டிலிருப்பவர்கள் அனைவருமே அந்த நகரத்தை நோக்கிச் செல்கிறார்கள். லலிதாவுக்கும் அங்கு செல்ல விரும்புகிறாள். அங்கு சென்றால், ஒருவேளை தம் ஊர்க்காரர்கள் யாரையாவது பார்க்கலாம் என அவள் நினைக்கிறாள்.

லலிதா மீது இரக்கம்கொண்ட சுப்பண்ணா மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் ஹரித்துவாருக்கு அழைத்துச் செல்கிறான். கங்கைக்குச் சென்று மூழ்கி வழிபாடுகளை முடித்துக்கொண்டு திரும்பும் சமயத்தில் யாரோ ஒரு மைசூர்க்காரன் தொலைவிலிருந்து அவனை அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறான். அந்த முகத்தைப் பார்த்ததுமே அவன் யார் என்கிற விவரம் சுப்பண்ணாவுக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால் அவனைச் சந்திக்க அவருக்கு விருப்பமில்லை. அதனால் வேகவேகமாக நடந்து அவ்விடத்தைக் கடந்து செல்கிறார். சுப்பண்ணாவின் பெற்றோர் மேளாவுக்கு வந்திருப்பதாக சத்தம் போட்டுக் கூவி தெரிவிக்க முயற்சி செய்கிறான் அவன். ஆயினும் அச்சொற்களைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறார் சுப்பண்ணா.

கல்கத்தா வாழ்வில் லலிதா இருமுறை கருத்தரிக்கிறாள். முதல் பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறக்கிறது. அடுத்து பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த சமயத்தில் அவர்களுடைய மகன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறான். பெண்ணுக்கு ஒன்பது வயதான சமயத்தில் முதன்முறையாக மைசூருக்குத் திரும்பிச் செல்லும் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள் லலிதா. அப்போதுதான் பெண்ணுக்குப் பொருத்தமான வரனைத் தேடித் திருமணம் செய்துவைக்கமுடியும் என்பது அவள் எண்ணம். செல்வதா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் சுப்பண்ணாவின் மனம் ஊசலாடுகிறது. அச்சமயத்தில் கங்கையில் நீராடுவதற்குச் சென்ற மகள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துவிடுகிறாள். அம்மரணம் சுப்பண்ணாவின் குடும்பத்தைத் துயரத்தில் மூழ்கவைக்கிறது. அதைத் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த லலிதா மூன்றாண்டு காலத் துன்பத்துக்குப் பிறகு மறைந்துவிடுகிறாள். முப்பத்தைந்து ஆண்டுகால கல்கத்தா வாழ்க்கையில் சுப்பண்ணா இழந்தவையே ஏராளம். இருப்பினும் எக்கணத்திலும் அவர் தன் இசைமீது கொண்டிருந்த நம்பிக்கையும் பற்றும் மாறவே இல்லை.

அதைத் தொடர்ந்து அந்த நகரத்தில் வாழப் பிடிக்காமல் தான் அதுவரை வாழ்ந்த வீட்டை அதே தெருவில் இருந்த பஜனை மடத்திடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டுப் பொருட்களையெல்லாம் அக்கம்பக்கத்தவர்களிடம் கொடுத்துவிடுகிறார். கையிலிருக்கும் பணத்தில் ஒரு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பம்பாய் செல்லும் ரயிலில் அமர்ந்துகொள்கிறார். பம்பாயில் ஒரு கோயிலுக்கு அருகில் தங்குகிறார். அவருடைய இசை அனைவரையும் கவர்கிறது. முதலில் அவரை தெருவோரத்தில் உணவுக்கடை நடத்தும் ஒரு கிழவி உணவு கொடுத்து ஆதரிக்கிறாள். பிறகு ஒரு பணக்காரர் அவரை அழைத்துச் சென்று ஆதரிக்கிறார். அவருடைய இசையைக் கேட்ட அனைவரும் மெய்மறந்து அந்த இசையில் திளைக்கின்றனர். அவரைத் தம்மோடு வைத்துக்கொள்ளவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். ஆனால், சுப்பண்ணா எங்கும் நிலைத்திருக்க விரும்பாமல் எல்லா இடங்களிலிருந்தும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார். ஒருநாள் இரவில் உறக்கத்தில் மூழ்கியிருக்கும்போது தம் பெற்றோரைக் கனவில் கண்டு விழித்தெழுகிறார். மறுநாளே அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மைசூருக்குப் புறப்படுகிறார்.

முப்பத்தைந்து ஆண்டுகளில் மைசூரின் முகம் பல மடங்கு மாறியிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தம் பெற்றோர் இறந்துவிட்டதையும் சகோதரிமார்களும் இடம்மாறிச் சென்றுவிட்டதையும் வீடு கைமாறிவிட்டதையும் அறிந்துகொள்கிறார். மைசூரில் நிலைத்திருக்க விருப்பமில்லாமல் மைசூருக்கு அருகிலிருந்த தொரயபுரத்துக்குச் செல்கிறார். அங்கும் அந்த ஊர் ஆற்றங்கரையோரமாக இருக்கும் கோவில் வாசலையே அவர் தன் இருப்பிடமாகக் கொள்கிறார்.

தொரயபுரத்தில் அவருக்கு வெங்கடரமணன் என்னும் சிறுவனின் அறிமுகம் கிடைக்கிறது. சுப்பண்ணாவின் கையிலிருந்த பிடில்தான் அவனை அவர்பால் கவர்ந்திழுத்து நிறுத்துகிறது. பேசத் தூண்டுகிறது. தனக்காக இசைத்துக்காட்ட முடியுமா என்றும் கேட்கத் தூண்டுகிறது. அவர் கோபம்கொண்டு ஆற்றில் வீசிய பிடிலை ஆற்றில் மூழ்கித் தேடிக் கண்டுபிடித்து திருப்பிக் கொடுக்கவும் செய்கிறது. அவர் விரட்டவிரட்ட, அவன் அவரையே சுற்றிச்சுற்றி வந்து அவருடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறான். அவரையே குருவாக ஏற்றுக்கொண்டு இசையைக் கற்றுக்கொள்ளவும் செய்கிறான். பத்தாண்டு காலம் குருவுக்கு அருகிலேயே இருந்து அந்த இசையில் அவன் தேர்ச்சிபெறுகிறான். கோவில் வாசலில் அமர்ந்து கண்மூடி இறைவனைத் தியானித்தபடி இசைக்கும் ஆனந்தமே அவனுக்கு மனநிறைவை அளிக்கிறது.

ஏதோ ஓர் அதிசயமான கணத்தில் எழுந்த இசையின் அழைப்புக்கு இணங்கி இசைக்கு வசப்பட்டவர் சுப்பண்ணா. அவர் நினைத்த வாழ்க்கையை அவரால் வாழமுடியவில்லை என்றபோதும் அவர் ஒருபோதும் அதற்காக இசையைக் குறைத்து மதிப்பிட்டதே இல்லை. இசையே அவர் நெஞ்சை நிரப்பி வலிவூட்டும் மாமருந்தாக இருக்கிறது. எல்லாத் துயரங்களையும் அவர் அந்த இசை வழியாகவே கடந்துவருகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதேபோன்ற நிகழ்ச்சி இம்மண்ணில் நடைபெறுகிறது. இசையால் செலுத்தப்பட்டு சுப்பண்ணாவை வந்தடைகிறான் வெங்கடரமணன். அவர் வழியாக அறிந்த இசையால் தன் மனத்தை நிறைத்துக்கொள்கிறான். இசை இத்தகையோரைத் தேடித்தேடிச் செல்கிறதா, அல்லது இவர்கள்தாம் இசையைத் தேடிச் செல்கிறார்களா என்பது மாபெரும் புதிர். உயர்ந்த கலைஞர்களாகத் திகழ்பவர்கள் அனைவரும் இப்படி இசையின் அழைப்புக்கு இணங்கியவர்களே என்று நினைக்கத் தோன்றுகிறது. மாஸ்தியின் கைவண்ணத்தில் சுப்பண்ணா நெடுங்கதையைப் படித்துமுடித்த சமயத்தில் அந்த எண்ணமே உண்மை என்பதைப் புரிந்துகொண்டேன்.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *