Skip to content
Home » பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

பௌத்த இந்தியா

நாம் கண்டறிந்த ஜாதகக் கதைகளின் ஆரம்ப வடிவங்கள் குறித்துப் பார்த்தோம். காலகட்டம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடுத்த சான்றுகளாக பர்ஹுத் பௌத்த நினைவிடங்களும் சாஞ்சி ஸ்தூபியும் இருக்கின்றன. இவற்றில் காணமுடிகிற பழங்கால இந்தியாவின் தொல்லியல் குறித்த விலைமதிக்க முடியாத பதிவுகள், இந்தத் தொகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்தூபியைச் சுற்றியிருக்கும் கைப்பிடியாக அமைந்திருக்கும் அமைப்புகளில் காணப்படும் செதுக்கு வேலைப்பாடுகளில் பல காட்சிகளைக் காணமுடிகிறது.

இவை ஒவ்வொன்றும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாதகக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றைத் தலைப்பாகக் கொண்டுள்ளன. தலைப்பு இன்றி வேறு காட்சிகளும் காணப்படுகின்றன. ஆனால், அனைத்தும் ஒரே மாதிரியான தன்மை கொண்டதாக இருக்கின்றன. தற்போது இருக்கும் முதலாம் ஜாதகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளாக இருபத்தி ஏழு காட்சிகள் அதில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னமும் அடையாளம் காணப்படாதவையாக மேலும் இருபத்து மூன்று இருக்கின்றன. அத்துடன் பிற்காலத்தைச் சேர்ந்த இவற்றில் சில, சமூகத்தில் புழக்கத்திலிருந்த ஜாதகக் கதைகளைச் சந்தேகத்துக்கு இடமின்றி விளக்குகின்றன. ஆனால் நியதி நூலில் அவை சேர்க்கப்படவில்லை.

வாசகர்கள் செதுக்குச் சிற்பத்தையும் கொடுக்கப்பட்டிருக்கும் ஜாதகக் கதையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு காட்சியில் பின்னணியில் மூன்று மான்கள் வீழ்த்தப்பட்டுக் கிடக்கின்றன; இரண்டு மான்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன; ஒரு மான் பயத்துடன் திரும்பிப் பார்க்கிறது; ஒன்று விழுந்துவிட்டது; முன்னணியில், இடதுபுறத்தில், மான் ஒன்று வெட்டுப் பாறையில் தலைவைத்துப் படுத்திருக்கிறது. மையத்தில், அதன் கொம்புகளால் தனித்து அடையாளம் காணமுடிகிற மான்களின் அரசன், அந்த வெட்டுப் பாறையை ஒட்டிக் குனிந்தபடி நிற்கிறது. அதற்கு அருகில் ஒரு மனிதன், அநேகமாக அந்தச் சமையல்காரர், நிற்கிறார். மையத்தில் மான்களின் அரசன், மனிதர்களின் ராஜாவுக்கு உபதேசம் செய்கிறது.

இந்தப் பக்கத்தைக் கடந்து செல்லும்போது ஒரே கதையின் பல காட்சிகளை ஒரே (கற்)பலகையில் தீட்டும் இந்த விநோதமான உத்தி இந்தியக் கலைக்கு மட்டுமே உரித்தானதல்ல என்பதைக் கவனிக்க முடியும். கிரேக்கர்களும் இவ்வாறு செய்திருக்கிறார்கள். இருண்ட காலத்துக்குப் பின்னரான கலைகளின் மறுமலர்ச்சி காலத்தின்போது ஐரோப்பாவில் இந்தக் கலைப் படைப்பு உத்தி பரவலாக இருந்தது.

கதையின் பல விஷயங்களை ஒரே பலகையில் செதுக்குவதில் இந்தியக் கலைஞர் தயக்கம் காட்டவில்லை. ஆனால், கதையின் பாடல் சார்ந்த அனைத்துக் குறிப்புகளையும் அல்லது அந்த வசனப் பாடல் வரும் அத்தியாயத்தையும் தவிர்த்து விடுகிறார். ஆனால், இந்தச் செதுக்குச் சிற்பம் ஒரு முக்கியமான அம்சத்தில் அந்தப் பாடலுடன் ஒத்துப்போகிறது. உரைநடையாக எழுதப்பட்டிருக்கும் அந்தக் கதையுடன் ஒருவருக்குப் பரிச்சயம் இருந்தாலொழிய எவருக்கும் முற்றிலும் இது புரியாது. செதுக்குச் சிற்பங்கள் அனைத்துமே இதுபோலத்தான் இருக்கின்றன. கீழே விளக்கப்பட்டுள்ளது தவிர்த்து எந்தச் சிற்பமும் வசனப் பாடலையோ கதையின் வெளிவடிவத்தையோ விளக்கவில்லை. உரைநடை, அதாவது கதை நமக்குத் தெரியவில்லை என்றால், ஒன்றும் விளங்காது.

இங்கு விதிவிலக்காகக் குறிப்பிடப்படுவது பர்ஹுத் ஸ்தூபியில் காணப்படும் உருவம்; ஆனால், கெடுவாய்ப்பாக அது உடைந்து போயிருக்கிறது; ஆனால், அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ’யம் பாமனோ அவயேசி ஜாதகா’ என்ற எழுத்துகள் தெளிவாகக் காணப்படுகின்றன. அச்சிடப்பட்ட ஜாதகத் தொகுதியில் இருக்கும் அந்தபூத ஜாதகம் என்று சொல்லப்படும் கதையில் உள்ள வசனப் பாடலின் தொடக்கச் சொற்கள் அவை. மிகச் சரியாக, நாம் முன்னர் பார்த்த மான் கதையான ’ஆலமர மானைப் பின்தொடருங்கள்’ என்று சொல்லப்பட்ட ஜாதகக் கதை போன்றதே இது.

உண்மை என்னவென்றால், நான் ஏற்கனவே 1880-ல் சுட்டிக்காட்டியபடி, இந்தக் கதைகளின் தலைப்புகளில் மிகப் பெரிய நிரந்தமற்ற தன்மை ஒன்று நிலவுகிறது. அதே கதைகள் தற்போது இருக்கும் தொகுப்பில் பெரும்பாலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. மிகவும் பழமையான இந்தச் செதுக்குச் சிற்பங்கள் ஒன்றில், இரண்டு தனித்துவமான பெயர்கள் முழுமையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

அந்தச் சிற்பம் ஒரு பூனை மற்றும் சேவல் பற்றிய கதையை விளக்குகிறது. அத்துடன் பாலி மொழியில் ’பூனை ஜாதகம்’ என்றும் ’சேவல் ஜாதகம்’ என்று இரண்டு பெயர்களாலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் முன்னரே கூறியதுபோல், ’இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. எடுத்துக்காட்டாகச் சிங்கமும் குள்ளநரியும் பற்றிய கதை (எண்.157) ஒன்று சொல்லப்படுகிறது. நல்ல பண்பினால் கிடைக்கும் நன்மை கதையில் கூறப்படுகிறது. அப்போது சிறிய தலைப்பு ஒன்றை அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஆகவே அக்கதை ‘சிங்க ஜாதகம்’ அல்லது ’குள்ளநரி ஜாதகம்’ அல்லது ‘நல்ல பண்பைக் குறிப்பிடும் ஜாதகம்’ என்றும் அழைக்கப்பட்டது.

மற்றொன்று, ஆமையைப் பற்றிய ஒரு கதை சொல்லப்படுகிறது. அக்கதையில் வரும் ஆமை, இடைவிடாமல் பேசுவதால், தொடர்ந்து ஏற்படும் தீய விளைவுகளைச் சுட்டிக்காட்ட (எண். 215) அந்தக் கதையை ’ஆமை ஜாதகம்’ என்றோ ‘வாயாடி ஜாதகம்’ என்றோ அழைக்கலாம்; ஆகவே, இந்த அடிப்படையில் அக்கதை இரண்டு பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

சாத்தியமானதுதான் என்றாலும், ஒரு குறுகிய தலைப்பை அளித்து, அந்தக் கதை கூறவேண்டிய பாடத்தை வகைப்படுத்த முயல்வதும், கதையில் வரும் ஆளுமைகளில் யாரோ ஒருவருடைய செயல்கள் மூலமாக அதைச் சொல்லவேண்டும் என்பதும் எப்போதுமே சிரமமானதுதான். இவ்வாறுதான் வேறுபட்ட பெயர்கள் உருவாகின்றன; அத்துடன் ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளக்கூடியதாகவும் அமைகின்றன.

ஆகவே, ஒரு சந்தர்ப்பத்தில் வசனப் பாடலில் இருக்கும் முக்கியச் சொற்கள் ஒரு தலைப்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக்கண்டு நாம் வியப்படைய வேண்டியதில்லை. அத்துடன் இந்தத் தனித்த ஒற்றை நிகழ்வில் பார்க்க முடிகிற சொற்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் காணப்படும் சொற்களாகவும் இருப்பதும் மிகவும் நல்வாய்ப்பான விஷயம்தான்.

அடுத்ததாக நாம் பரிசீலிக்கவேண்டிய ஆதாரம் அந்த ஜாதகப் புத்தகமாக இருக்கிறது. வசனப் பாடல்கள் மட்டுமே கொண்ட (எனவே, அதை விளக்கவுரை இல்லாமல் புரிந்துகொள்வது முற்றிலும் இயலாதது) ஒரு நியதி புத்தகப் படைப்பு கையெழுத்துப் பிரதிகளில் மிகவும் அரிதானது; அத்துடன் அது இன்னமும் முறையாக விளக்கி எழுதப்படவில்லை. தலைப்புகள் குறித்து, அவை என்ன சொல்கின்றன என்பதை ஆராய்வதும், வசனப்பாடல்கள் குறித்து அவை பல்வேறு வாசிப்புகளைத் தருகின்றனவா என்பதும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

பேராசிரியர் ஃபாஸ்போல் வெளியிட்டிருக்கும் பிரபலமான பதிப்பின் வழியாக நமக்கு விளக்கவுரை ஒன்று கிடைத்துள்ளது. ஆனால், அதன் காலகட்டம் நமக்குத் தெரியாது. ஆனால், இதைப்போன்ற விளக்கவுரைகள் எதுவும் கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்படவில்லை என்பதை நாம் அறிவோம். அந்தக் காலகட்டம் வரையிலும் அந்த உரைகள் வாய்மொழியாகவே அளிக்கப்பட்டன; ஆகவே, இதுவும் ஏறக்குறைய இதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.

கதையின் ஆரம்பத்தில் வரும் வசனப் பாடல்களில் தன்னைப் பற்றிய சிறிய விவரம் ஒன்றை அதன் ஆசிரியர் தருகிறார்; ஆனால், தனது பெயரை அவர் தரவில்லை. இந்தப் பணியை மேற்கொள்ளத் தன்னைத் தூண்டிய மூன்று அறிஞர்களின் பெயரைக் குறிப்பிடுகிறார். அத்துடன் சிலோனில் இருக்கும் அனுராதபுரத்தில் உள்ள பெரும் மடாலயத்துக்கு அக்காலத்தில் அளிக்கப்பட்ட பாரம்பரியம் ஒன்றை அடிப்படையாகக்கொண்டு இவை எழுதப்பட்டவை என்கிறார்.

ஏழு தொகுதிகளாக அமைந்திருக்கும் இந்தப் பெரிய படைப்பில் இரண்டு இடங்களில் இரண்டாம் நூற்றாண்டின் சிலோன் அறிஞர்களைப் பற்றி அவர் குறிப்பாகத் தெரிவிக்கிறார். அடிக்குறிப்புகளில் தான் அவர் அவ்வாறு சொல்கிறார் என்றாலும், அந்த நூலை அவர் சிலோனில் எழுதியிருக்கக்கூடும் என்று நாம் ஒரு நியாயமான முடிவுக்கு வரலாம்.
பிரபலமாக இருந்த புத்தகோசருடன் இவரை அடையாளம் காண முடிகிறது என்று பேராசிரியர் சில்டர்ஸ் கருதுகிறார். வேறு சில சிறந்த விளக்கவுரைகளின் ஆசிரியர் என்று புத்தகோசர் புகழ்பெற்றவர். ஆனால், புத்தகத்தின் வேறொரு இடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் காரணங்களால் இது சாத்தியமற்றது என்று நினைக்கிறேன்.

சரி, அப்படியானால், அறியப்படாத நமது எழுத்தாளர் அவரிடம் அளிக்கப்பட்ட பாரம்பரியத்திலிருந்து எவ்வளவு தூரம் வேறுபட்டு நின்றார்? அந்தப் பாரம்பரியம், அது பரிந்துரைத்த வரலாற்று அனுமானங்களைப் பொறுத்து, அந்த வசனப் பாடல்கள் தமக்கு தாமே ஒதுக்கிக் கொண்டிருக்கக்கூடிய மிகப் பழமையான அந்தக் காலகட்டத்தின் தொனியையும் பண்பையும் குறைந்தபட்சம் எவ்வளவு அளவுக்குப் பாதுகாத்தது?

இது ஒரு கடினமான கேள்வி. அத்துடன் இந்தத் தொகுதிகள் முழுவதையும் கவனமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்ய வேண்டும்; இறுதியாக ஒரு தீர்வை எட்ட முடியும்; ஒவ்வொரு நேர்வின் மூலமும், சாத்தியமான காலகட்டத்தையும் கணிக்க முடியும்; ஒவ்வொரு நிகழ்வையும் கண்டறிந்து, அவற்றிலிருந்து கிடைக்கும் பொதுவான முடிவின் அடிப்படையில் அவற்றை மதிப்பிட முடியும்.

முனைவர் லூடர்ஸ், இசிசிங்கா லெஜண்ட் (Isisinga Legend) பற்றிய பாராட்டுத்தக்க கட்டுரைகள் இரண்டை எழுதியுள்ளார்; அவற்றில் இரண்டு அல்லது மூன்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார். விளக்கவுரையில் காணமுடிகிற உரைநடை, கதையின் வடிவம் ஒன்றை நமக்கு எவ்வாறு அளிக்கிறது என்பதையும், அதன் பின்னர், வேறு சில அம்சங்களில் பாடல்கள் மூலமாக நாம் ஊகிக்க முடிகிற ஒன்றைக் காட்டிலும் வேறு ஒரு கதையை அளிப்பதையும் வெளிப்படுத்துகிறார். நாம் பரிசீலித்துக் கொண்டிருக்கும் கருத்து மிகச் சரியாக இது இல்லை. ஆனால் இது அக்கருத்துடன் நெருக்கமான தொடர்புடையது.

(தொடரும்)

___________
T.W. Rhys Davids  எழுதிய “Buddhist Indiaநூலின்  தமிழாக்கம்.

பகிர: