சத்யவிரதன் சாகேத ராமன்
இந்துக்களின் குண நலன்கள் குறித்த என்னுடைய நேரடி அனுபவம் உண்மையிலேயே மிகவும் குறைவுதான். ஐரோப்பாவில் எனக்கு நேரடிப் பரிச்சயம் உள்ள இந்துக்கள் எல்லாம் இந்தியா உருவாக்கிய மக்களின் மிகச் சிறந்த வகைமாதிரியினர்; எனவே நிச்சயம் விதி விலக்கானவர்கள் என்றே சொல்லலாம். அதோடு அவர்களுடனான என்னுடைய பரிமாற்றங்கள் எல்லாம் மனித மனங்களின் இருண்ட பகுதிகளை வெளிக்கொண்டுவரக்கூடியவையாக நிச்சயம் இருந்திருக்கவும் இல்லை.
கடந்த 20 ஆண்டுகளாக எத்தனையோ இந்தியர்களுடன் நெருங்கிப் பழகும் அருமையான வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு மனிதரின் உள்ளார்ந்த தன்மையைக் கண்டுகொள்வது அப்படியொன்றும் சிரமமான காரியம் இல்லை. இலக்கியங்கள் மற்றும் இலக்கிய உரையாடல்கள் பற்றியே இங்கு குறிப்பிடுகிறேன். உண்மைத்தன்மைக்கும் சத்தியத்துக்கும் அவர்கள் மிகப் பெரிய மரியாதை கொடுத்திருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். அவர்கள் தமது வாதத் திறமையை வலிமையை வெளிப்படுத்தியிருக்கிறார்களே தவிர முரட்டுத்தனமான நடந்துகொண்டதேயில்லை.
சம்ஸ்கிருத பண்டிதர்கள்மீது வைக்கப்பட்ட முரட்டுத்தனமான, அவதூறு விமர்சனங்களைப்போல் அவர்களை வேறு எதுவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்காது. ஏனென்றால், அவர்களுடைய பார்வையில் முரட்டுத்தனமான பேச்சு என்பது வளர்ப்பு சரியில்லை என்பதையும் போதிய அறிவு இல்லை என்பதையும் எடுத்துக்காட்டும் அம்சம். பண்டிதர்கள் ஏதேனும் தவறாகச் சொல்லிவிட்டால் எதிர்தரப்பினர் அதை விளக்கிச் சொன்னதும் உடனே ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் சொல்லது சரியாக இருந்தால் ஐரோப்பிய எதிர்தரப்பினரை அவர்கள் ஒருபோதும் இழிவுபடுத்தியதில்லை.
ஒரு சில விதிவிலக்குகள் அரிதாக இருந்திருக்கலாம். ஆனால் பொதுவாக எந்தவொரு வறட்டுத்தனமான விதண்டாவாதமும் இருக்காது. எந்தவொரு அதீத உரிமைகோரலும் இருக்காது. எந்தவித உண்மைத்தன்மைக்கு மாறான நடத்தையும் இருக்காது. தான் எழுதுவது தவறு என்பது நன்கு புரிந்த பின்னரும் அதையே இட்டுக்கட்டி எழுதுவது, கைதட்டலையும் வாத வெற்றிகளையும்விட சுய கெளரவத்தையும் உண்மை, நேர்மையையும் உயர்வாக மதிப்பவர்களை வேண்டுமென்றே பழித்துப் பேசுவது போன்ற கீழ்த்தரமான வன்மத்துடனெல்லாம் அவர்கள் ஒருபோதும் நடந்துகொண்டதே இல்லை. இந்த விஷயத்தையும் இந்தியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டு பயன்பெறமுடியும்.
வணிக ஒப்பந்தங்கள் சார்ந்த நாணயத்தன்மை பிற எந்த நாட்டைவிடவும் இந்தியாவில் மிக மிக அதிகம் என்று ஆங்கிலேய வணிகர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தியர் தாம் செய்த வணிக ஒப்பந்தங்களில் ஒன்றில்கூட ஏமாற்றவோ ஏய்க்கவோ செய்யவில்லை.
இறுதியாக, கடைசி சாட்சியை அதாவது ஹிந்துக்களையே தம் தரப்பை முன்வைக்க அழைக்கிறேன். அவர்களுடைய ஒட்டு மொத்த இலக்கியங்களிலும் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றின் மீதான பெரு விருப்பமும் மதிப்பு மரியாதையும் நிரம்பி வழிகின்றன. உண்மைத்தன்மை என்ற வார்த்தையை அதன் முழு அர்த்தத்தில் அவர்கள் பின்பற்றிவருகிறார்கள். ‘சத்’ அல்லது சத்தியம் என்பதுதான் அவர்களுடைய அதற்கான வார்த்தை. சத் என்றால் எது இருக்கிறதோ எப்படி இருக்கிறதோ அது என்று அர்த்தம். ஆங்கிலத்தில் sooth இதமான என்று சொல்வதுடன் தொடர்புடையது. கிரேக்கத்திலும் லத்தீனிலும் இது இதற்கு இணையான பதங்களால் குறிக்கப்படுகிறது.
எது பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ எது பெரும்பான்மையினரால் நம்பப்படுகிறதோ அதுவே உண்மை என்று நாம் நம்புகிறோம். அப்படியான உண்மைகளை ஏற்றுக்கொள்வது மிகவும் எளிது. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனித்து தைரியமாக நிற்பது கடினம். அதிகம் கற்க வேண்டியவர்கள் அல்லது அதிகம் தெரிந்தவர்களின் கூக்குரல்களால் ஒடுக்கப்படும்போது – கலிலியோ, டார்வின், கோலன்ஸோ, ஸ்டான்லி யாரைவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் – அவர்களைப் போல் தினசரி செய்தித்தாள்கள், வாரப் பத்திரிகைகள், காலாண்டிதழ்கள், பிஷப்கள், ஆர்ச் பிஷப்கள், அல்லது போப்கள் என யார் என்ன எதிர்த்துச் சொன்னாலும் தன் மனதில் சத்தியம் என்று தான் உணர்வதைத் துணிச்சலாக உறுதியாக வெளிப்படையாகச் சொல்வது மிகவும் கடினம்.
சத்தியம் என்பதற்கு இன்னொரு சம்ஸ்கிருத வார்த்தை ருதம். நேரான, நேரடியான என்று அர்த்தம். அநிருதம் என்றால் பொய்மை.
தெய்வங்களின் குணங்களில் மிகவும் உயர்வானதாக வேதங்களில் புகழ்ந்து சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் தெய்வங்கள் நம்பகமானவர்கள்; சத்யசந்தர்கள் என்பதுதான். இன்றும் பழங்காலத்திலும் மனிதர்கள் தாம் அடையவிரும்பும் அதி உயர்ந்த லட்சிய புருஷராகவே தெய்வங்களைச் சொல்வதுண்டு. தாம் மிக மிக உயர்ந்த குணமாக மதிப்பவற்றையே தமது தெய்வங்களுக்கு இருப்பதாகச் சொல்வார்கள். நேர்மையானவர்கள், துரோகம் செய்யாதவர்கள் என வேறு வார்த்தைகளாலும் குணங்களாலும் தெய்வங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அதுரோக வாக் அதாவது கொடுத்த வாக்கை மீறாதவர் என்று அர்த்தம்.
கிரேக்க ஜூபிடர் கடவுளுக்கு இணையாக வேதங்களில் குறிப்பிடப்படும் இந்திரன் ‘எதிரிகளை வென்று மலை உச்சியில் வாக்குச் சுத்தம் மிகுந்தவராக, சிந்தனையில் வலிமை கொண்டவராக’ நிற்பதாக தெய்வங்கள் அவரைப் புகழ்வதாகக் குறிப்பிடுகிறது.
துரோகவாக் என்றால் ஏமாற்றுப் பேர்வழியைக் குறிக்கும். வேத காலக் கவிஞர்களில் மகத்தானவரான வசிஷ்டர் சொல்கிறார்: நான் பொய்யான கடவுள்களை வணங்கியிருந்தேனா… என் பக்தி பொய்யானதாக இருந்ததா… ஏன் எங்கள் மீது கோபத்துடன் இருக்கிறீர்கள் ஜாதவேதரே… பொய்யர்கள்தானே அழியவேண்டும்.
வேதங்களில் சத்யம் என்பது ஒருவகையில் புதிரான, பூடகமான விஷயமாக முன்வைக்கப்படுகிறது. அதை ஆங்கிலத்தில் Truth உண்மை என்று சொல்லலாம். அதே நேரம் வேதங்களில் சத்தியம் என்றால் எது உண்மையோ எது நிஜமோ அதையும் குறிக்கிறது. ரிக்வேதத்தில் சத்தியம் என்று வரும் இடங்கள் சிலவற்றை நாம் நிஜமான (Real) என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
சத்யேன உத்தபிதா பீமி: பூமி நிஜமான ஒன்றில் நிலைகொண்டிருக்கிறது. பல மொழிபெயர்ப்பாளர்களும் சத்திய என்ற சம்ஸ்கிருத வார்த்தையை நிஜமான என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதாவது இந்த சத்ய என்பது எதைக் குறிக்கிறது என்பதை ஆரம்ப கால வேத கவிகளால் புரிந்துகொள்ளமுடிந்திருக்கவில்லை. அதைப் பார்க்கவும் முடியாதபோதும் நிஜமான ஒன்றில் இந்த பூமி நிலைகொண்டிருக்கிறது என்று அவர்கள் சொன்னதாக மொழிபெயர்த்தவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிஜமான ஒன்றுக்கு ருதம், ப்ரஹ்மன் என்று பல பெயர்களைப் பின்னர் வேத காலத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.
சத்தியமானதும் நிஜமானதும் ஒளி முகத்திலிருந்து தோன்றின. அதிலிருந்து இரவு தோன்றியது. அதிலிருந்து சமுத்திரம் தோன்றியது. சமுத்திரத்திலிருந்து சம்வஸ்த்சரர் தோன்றினார். அசையும் அனைத்தையும் ஆட்டுவிக்கக்கூடியவரான அவர் இரவையும் பகலையும் தோன்றச் செய்தார். தாத்ரி சூரியனையும் சந்திரனையும் உருவாக்கினார். ஆகாயம், பூமி, உயிர்கள், விண்ணுலகம் அனைத்தையும் படைத்தார் என்று வேதங்கள் கூறுகின்றன.
உண்மைக்கு மிகப் பெரிய மதிப்பு இருக்கும் இடத்தில் பொய்மை தொடர்பான வேதனையும் குற்ற உணர்ச்சியும் மிகுதியாகவே இருக்கும் என்பது இயல்புதான். ஒரு வேத கவி புனித நீராடலின்போது நதியிடம், தனது பாவங்களையும் அனைத்துப் பொய்மைகளையும் கழுவித் தன்னைப் பரிசுத்தமாக்கிவிடும்படி வேண்டிக் கொள்கிறார்:
எங்கெல்லாம் ஏமாற்றில் ஈடுபட்டிருக்கிறேனோ யாரையெல்லாம் சபித்திருக்கிறேனோ என்னவெல்லாம் பொய்மை என்னில் இருக்கின்றனவோ… என்னில் இருக்கும் தீமைகள் அனைத்தையும் கழுவிச் சென்றுவிடு… (அதர்வண வேதம் 4:16)
பிராமணர்களின் இறையியல் தொகுப்பான பிரமாணங்களில் இருந்து சிலவற்றை மேற்கோள் காட்டுகிறேன்.
‘சத்தியத்தைப் பேசுபவர் அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்றுவதுபோல் தன் ஆன்மாவில் ஒளியைப் பெருகச் செய்கிறார். உள்ளொளி பிரகாசிக்கப் பிரகாசிக்க அந்த நபர் தேஜஸ் மிகுந்தவராகிறார். ஆனால் பொய் பேசுபவர்கள் தனது ஆன்ம நெருப்பில் தண்ணீரை ஊற்றி அணைக்கிறார். அவரது உள்ளொளி சுருங்கிச் சுருங்கி அவர் தீயவராகி இருள் நிறைந்தவராகிவிடுகிறார். எனவே எப்போதும் ஒருவர் உண்மையையே பேசவேண்டும்’ (சதபத பிரமாணம் II 2:2:19).
‘பொய் சொல்லும் மனிதர் அசுத்தமடைகிறார்’ (சதபத பிரமாணம் III 1:2:10).
‘ஒரு பெரிய பள்ளத்தின் மேல் நிறுத்தப்பட்டிருக்கும் வாளின் முனையில் நிற்கும் நபர் ஐயோ நான் பள்ளத்தில் விழப்போகிறேனே என்று கதறித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் துடிப்பதுபோல் ஒரு மனிதர் பொய்மையிலிருந்து (பாவத்திலிருந்து) தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்’. (தைத்ரேய ஆரண்யகம் X.9)
பின்னாட்களில் சத்தியத்துக்கான மதிப்பும் மரியாதையும் எந்த அளவுக்கு வளர்ந்ததென்றால் அறியாமல் செய்யும் சத்தியத்தைக்கூட ஒருவர் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற அளவுக்கு ஆனது.
கடோபனிஷத்தில் ஒரு தந்தை (விஸ்வஜித் யாகத்தில்) தனக்கு சொந்தமாக இருக்கும் அனைத்தையும் தானம் தருகிறார். அருகிலிருக்கும் மகன் நானும் உங்கள் சொந்தம் தானே. என்னை யாருக்கு தானமாகக் கொடுப்பீர்கள் என்று அடிக்கடிக் கேட்கிறான். தந்தை சற்று கோபப்பட்டு உன்னை எமனுக்கு தானமாகத் தருகிறேன் சொல்லிவிடுகிறார்.
மேலுலகம் செல்லும் மகனிடம் எம தர்மராஜன் மூன்று வரங்கள் உனக்குத் தருகிறேன் கேள் என்கிறார். முதல் வரமாக, தன் உயிரைத் திருப்பித் தரவேண்டும் என்கிறார். வேறு சில ரகசியங்களைக் கற்றுத் தரும்படி இரண்டாவது வரம் கேட்கிறார். மூன்றாவதாக ஒரு மனிதர் இறந்த பின்னர் என்ன நடக்கிறது என்ற சத்தியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்கிறார். மரண தேவனான எமன் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார். ஆனால் அவருமே மூன்று வரங்கள் தருகிறேன் என்று செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியாகும் நிர்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார். அதன் பின்னர் மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது என்பது பற்றி ஓர் உரையாடல் நடக்கிறது. இந்தியப் பழம் பெரும் இலக்கியங்களின் மகத்தான படைப்பாக அது திகழ்கிறது.
இராமாயணம் என்னும் மாபெரும் காவியத்தில் அயோத்தியின் மன்னர் தசரதர் தன் இரண்டாவது மனைவி கைகேயிக்கு இரண்டு வரங்கள் தருவதாக, சத்தியம் செய்துகொடுத்தார் என்பதுதான் அந்தக் காவியத்தின் பிரதான கதை அம்சமாகத் திகழ்கிறது. தன் மகன் பரதனை மன்னராக்குவதற்காக, தசரதனின் இன்னொரு மனைவியின் மகனும் மூத்த மகனுமான ராமன் காட்டுக்குச் சென்று 14 ஆண்டுகள் வசிக்கவேண்டும் என்று கைகேயி வரம் கேட்கிறார். தசரதன், தான் கொடுத்த வரங்களைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தத்தில் பெரிதும் வருந்துகிறார். மூத்த மகனான ராமனோ தன் தந்தையின் வாக்கு பொய்த்துவிடக்கூடாது என்பதற்காக, தனக்குக் கிடைத்த ராஜ்ஜியத்தைத் துறந்து தன் மனைவி சீதையுடனும் சகோதரன் லக்ஷ்மணனுடனும் காட்டில் அலைகிறார்.
இரண்டாம் மனைவி கைகேயியின் மகன் பரதனோ தனக்கு இப்படிக் கிடைத்த அரசாட்சியை வேண்டாம் என்று சொல்லியபடி தன் சகோதரன் ராமனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்கிறான். ஆனால் ராமன் அதையும் ஏற்க மறுத்துவிடுகிறார். தந்தை கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதற்காக 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறார். ஜாபாலி என்ற பிராமணருக்கும் இளவரசர் ராமருக்கும் இடையில் சுவாரசியமான உரையாடல் நடக்கிறது. அதன் சாராம்சத்தைத் தருகிறேன்:
புரோகிதராகவும் அரசவைப் பிரமுகராகவும் இருக்கும் அந்த பிராமணர், ‘ரகுவம்சத்தில் பிறந்தவனே… நற்குணவானே… ஒழுக்கத்தில் சிறந்தவனே…. நீ இப்படி சாதாரண மனிதனைப்போல் வீண் சிந்தனையில் விழலாமா? ஒரு மனிதருக்கு யார் உறவு..? ஒருவருக்கு இன்னொருவருடன் அப்படி என்னதான் உறவு இருக்கிறது? ஒரு மனிதர் தனியாகத்தான் பிறக்கிறார். தனியாகத்தான் இறக்கிறார். தந்தை, தாயுடன் பந்தம் இருப்பதாக நினைப்பவர் அறிவற்றவரே. ஏனென்றால் யாருக்கும் யாரும் பந்தமில்லை. எனவே தந்தையின் ராஜ்ஜியத்தை நீ துறக்கத் தேவையில்லை. சோகமும் நெருக்கடிகளும் நிறைந்த இந்த அரசாட்சியை ஏற்றுக்கொள். ராஜ்ய பரிபாலனத்தை முறைப்படிச் செய்.
தந்தை தசரதர் உனக்கு யாருமில்லை. நீயும் அவருக்கு யாருமில்லை. அவர் ஒரு மன்னர். நீ இன்னொரு மன்னர். எனவே இது தொடர்பானதை (சாஸ்திரங்கள் சொல்லியிருப்பதை) செய். இறந்தவருக்கான ஈமக் கிரியைகளை முறைப்படிச் செய். ஆனால் யோசித்துப் பார். முன்னோருக்குப் படைக்கப்படும் படையல் எல்லாம் வீண்தானே. இறந்த மனிதர் எதை உண்ணப் போகிறார்? இங்கு உயிருடன் பயணம் செய்பவர்களுக்கு உணவு கொடு.
வேதங்கள் யாகம், தானம் செய்யச் சொல்கின்றன. தம்மை அர்ப்பண உணர்வுடன் வாழச் சொல்கின்றன. எளிமையாக, புலனடக்கத்துடன் வாழச் சொல்கின்றன. இந்த உலகையும் உலக இன்பங்களையும் துறக்கச் சொல்கின்றன. இவையெல்லாம் தமக்கு தானம் கொடுக்கவைக்கவென்றே பிராமணர்கள் செய்த வழிமுறைகள். விண்ணில் இருந்து எந்த ஞான மொழியும் வந்துசேரவில்லை. பகுத்தாராய்ந்து எதையும் முடிவெடுங்கள்.
புலன்களால் எதை உணர முடிகிறதோ அதைப் பின்பற்றுங்கள். கண்ணுக்குத் தெரியாதவற்றை விட்டுத் தள்ளுங்கள். இந்த உலகமே மறு உலகம். இன்பங்களைத் துய்த்து மகிழ். ஏனென்றால் ஆசாரசீலனுக்கு மகிழ்ச்சி எதுவும் கிடைக்காது. ஆசாரசீலர்கள் பெரிதும் துன்பத்திலேயே உழல்வார்கள். பேரின்பமோ ஆசாரங்களை மீறுபவர்களுக்கே கிடைக்கும்’.
இந்தக் கேளிக்கைக் கோட்பாடுகள் அதுவும் ஒரு பிராமணரின் வாயில் இருந்து கேட்கப்படும்போது மிகவும் விசித்திரமாகவே தோன்றும். ஆனால் கவி வால்மீகி, அரசவையில் இருக்கும் பண்டிதர் ஒருவர் தன் மன்னரை மகிழ்ச்சிப்படுத்த எதையும் நியாயப்படுத்தும் வாதங்களை முன்வைப்பார் என்று காட்டுவதற்காக இதையெல்லாம் சொல்லவைத்திருக்கிறார்.
ஆனால் ராமர் என்ன பதில் சொல்கிறார்?
‘எனக்கு நற்போதனை வழங்கும் நோக்கில் நீங்கள் சொன்னவை சரியானதை நல்ல நோக்கில் எச்சரிக்கை செய்வதாகத் தோன்றினாலும் நேர்மாறானதையே செய்கின்றன. மரபுகளைத் தன் விருப்பத்தின்படிச் மீறிச் செயல்படுபவருக்கு நியாயவான்களிடையே மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. நல்லொழுக்கமே ஒரு மனிதரை கண்ணியவானா அல்லாதவனா; சாகச வீரனா வீரன் போல் நடிக்கிறானா; தூயவனா அல்லாதவனா என்பதைத் துல்லியமாக எடுத்துக்காட்டும். சத்தியமும் கருணையுமே ஓர் அரசனின் மகத்தான குணங்கள். எனவே ஓர் அரசாட்சி என்பது அடிப்படையில் சத்தியமே.
இந்த உலகுமே சத்தியத்தில்தான் நிலைகொண்டிருக்கிறது. ரிஷிகளும் தேவர்களும் தெய்வங்களும் சத்தியத்தையே போற்றிப் புகழ்கின்றார்கள். இந்த உலகில் சத்தியமே பேசுபவர் அழியாப் புகழையும் மோக்ஷத்தையும் அடைகிறார். பாம்பைக் கண்டு அஞ்சி நடுங்குவதுபோல் பொய்யர்களைக் கண்டு மனிதர்கள் அஞ்சி நடுங்குவார்கள். இந்த உலகில் நல்லொழுக்கங்களில் தலைசிறந்தது சத்தியமே. அனைத்துக்கும் ஆதாரமானது அதுவே.
சத்தியமே அனைத்துக்கும் மேலானது. நல்லொழுக்கங்கள் எல்லாம் சத்தியத்திலேயே வேரூன்றி நிற்கின்றன. அனைத்துமே சத்தியத்திலேயே நிலைகொண்டிருக்கின்றன. அதற்கு மேலானது எதுவும் கிடையாது. அப்படியிருக்கும்போது நான் செய்த சத்தியத்துக்கும் கொடுத்த வாக்குக்கும் உண்மையாக நடந்துகொண்டுதானே ஆகவேண்டும். என் தந்தையின் உத்தரவைப் பணிவுடன் ஏற்றுச் செயல்பட்டுத்தானே ஆகவேண்டும். பேராசையினாலோ மன மயக்கத்தினாலோ அறியாமையினாலோ சத்திய வேலியைத் தாண்டி இருள் வெளிக்குள் நான் செல்ல நேர்ந்தாலும் தீய எண்ணங்கள் என்னைச் சூழ்ந்து நின்றாலும் நான் என் தந்தைக்குச் செய்துகொடுத்த சத்தியத்தை மீறவேமாட்டேன். காட்டுக்குச் செல்வேன் என்று சத்தியம் செய்துகொடுத்திருக்கும் நான், பரதன் சொல்வதைக் கேட்டு தந்தையின் உத்தரவை எப்படி மீறமுடியும்?’
(தொடரும்)