Skip to content
Home » டார்வின் #11 – கேப்டன் ஃபிட்ஜ்ராய்

டார்வின் #11 – கேப்டன் ஃபிட்ஜ்ராய்

அப்போது இங்கிலாந்தின் மன்னராக நான்காம் வில்லியம்ஸ் முடிசூட இருந்தார். அந்த விழாவுக்கான கொண்டாட்டத்தில் லண்டன் நகரமே மூழ்கியிருந்தது. ஆனால் டார்வினோ பயண வாய்ப்பு பறிபோன சோகத்தில் அறையைப் பூட்டிக்கொண்டு கவலையில் தொய்ந்திருந்தார். ஹென்ஸ்லோவுக்கும் இதற்கு மேல் டார்வினை அழைப்பார்கள் என்று தோன்றவில்லை. அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் டார்வினால் விடமுடியவில்லை. ஒருவேளை ஃபிட்ஜ்ராயின் நண்பர் கடைசி நேரத்தில் பயணத்திற்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டால்? ஃபிட்ஜ்ராய் திடீரென மனதை மாற்றிக்கொண்டு தன்னை அழைத்தால்? ஏதேதோ எண்ணங்கள் ஓடின. கிளம்பிச் சென்று ஃபிட்ஜ்ராயை நேரில் பார்த்துவிடுவோம் என்று புறப்பட்டார்.

ஃபிட்ஜ்ராய் அப்போது லண்டனில்தான் இருந்தார். அவருக்கு 26 வயதுதான் நிரம்பியிருந்தது. ஆனால் அவரது பேச்சும் தோரணையும் அனுபவசாலிகளையே அச்சுறுத்திவிடும் விதம் இருந்தது. டார்வின் கொஞ்சம் அச்சம் கலந்த மரியாதையுடன்தான் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

‘வணக்கம். நான்தான் டார்வின். கப்பலில் ஓர் இயற்கையாளர் வேண்டும் எனக் கேட்டிருந்தீர்கள் அல்லவா?’

பிட்ஜ்ராய் டார்வினை உற்றுப் பார்த்தார். சட்டென்று கைகளை நீட்டினார்.

‘டார்வின். நல்லவேளை நீ நேரில் வந்தாய். ஐந்து நிமிடத்துக்கு முன்தான் என் நண்பரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரால் பயணத்துக்கு வர முடியாதாம். உனக்கு இன்னும் பயணிக்க விருப்பம் இருக்கிறதா?’

0

ஃபிட்ஜ்ராய் பேசிக்கொண்டே நடக்க, டார்வின் நிழல்போல் பின் தொடர்ந்தார்.

‘நன்றாகக் கேட்டுக்கொள். பயணம் இரண்டு ஆண்டுகள் திட்டமிடப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகள்கூட ஆகலாம். அதனால் உனக்கான எல்லாச் செலவுகளையும் அரசால் ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டது. உன் தரப்பில் இருந்தும் 500 பவுண்ட்கள் கொண்டு வர வேண்டும். இதைவிட முக்கியமான விஷயம். எனக்கு ஒத்துவராத ஆட்களுடன் நான் பயணிக்க மாட்டேன். அதனால் நீ எனக்கு ஏற்றவன்தானா என முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவார காலம் என்னை தினமும் வந்து பார். நாம் பேசுவோம். எனக்குப் பிடித்திருந்தால் உன்னை அழைத்துச் செல்கிறேன். இல்லை என்றால் மாட்டேன். சம்மதமா?’ எனக் கேட்டார்.

டார்வினும் சம்மதம் தெரிவித்தார்.

முதல் வேலையாக ஃபிட்ஜ்ராய் தங்கியிருந்த பகுதியிலேயே சிறிய அறை ஒன்றை எடுத்துக்கொண்டார் டார்வின். தினமும் ஃபிட்ஜ்ராயைச் சென்று சந்தித்தார். இருவரும் ஒன்றாக லண்டன் வீதிகளை வலம் வந்தனர். ஃபிட்ஜ்ராய் பயணத்துக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கினர். பணத்தைத் தண்ணீர்போலச் செலவழித்தார். ஆனால் புத்தகங்களைத்தான் அதிகம் வாங்கினார். ஃபிட்ஜ்ராய்க்கு இருந்த அறிவியல் ஞானம் டார்வினை ஆச்சரியம்கொள்ள செய்தது. அவரிடம் பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார் டார்வின்.

ஃபிட்ஜ்ராய் பயணத்தின் நோக்கம் குறித்து கூறினார். தென் அமெரிக்காவில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கின்றன. பிரிட்டனில் உற்பத்தியாகும் சரக்குகளை விற்பதற்கான சந்தையாகவும் தென் அமெரிக்கா இருக்கிறது. இதனால் பிரிட்டன் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி வருகின்றனர். ஆனால் இதற்குத் தடையாக பிற தேசங்களின் போட்டியும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பும் இருக்கிறது. இதைச் சரி செய்வதற்குத்தான் நாம் செல்ல இருக்கிறோம். அத்துடன் பிரிட்டனின் எதிர்கால நலனுக்காகத் தென் அமெரிக்கக் கடற்கரையோர பகுதிகளை ஆய்வு செய்யவும் போகிறோம். அங்குள்ள துறைமுகங்கள், கடல் தடங்கள், ஓதங்கள், பருவநிலை ஆகியவற்றை அறியப்போகிறோம் என்றார்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் தம்முடன் பேசிக்கொண்டு வருவதற்குத்தான் ஒரு நபரைத் தேடுவதாகக் கூறினார் ஃபிட்ஜ்ராய்.

ஃபிட்ஜ்ராய்க்கு நீண்ட தொலைவு பயணிப்பது பிரச்னை இல்லை. ஆனால் உரையாடுவதற்குத் துணை தேவைப்பட்டது. அவர் கப்பலின் கேப்டன் என்பதால் எல்லோரிடமும் சகஜமாகச் சிரித்துப் பேச முடியாது. அதிகாரத்துடன்தான் நடந்துகொள்ள வேண்டும். அதேசமயம் யாருடனும் பேசாமலும் வர முடியாது. பைத்தியம் பிடித்துவிடும். ஏற்கெனவே அந்தக் கப்பலின் முந்தைய கேப்டன் பிரிங்கில் ஸ்டோக்ஸ் தற்கொலை செய்துகொண்டார். ஃபிட்ஜ்ராயின் குடும்பத்திலுமே சில தற்கொலைகள் நிகழ்ந்திருந்தன. இதனால் தனியாகப் பயணிப்பது தமது மனநிலையைப் பாதிக்கலாம் என்று ஃபிட்ஜ்ராய் கருதினார். அதனாலேயே துணைக்கு ஓர் ஆளை அழைத்துச் செல்ல விரும்பினார்.

ஃபிட்ஜ்ராயின் கம்பீரம், துணிச்சல், அதேசமயம் அவர் வெளிப்படுத்தும் பரிவு எல்லாமே டார்வினை ஈர்த்தன. கேப்டன் என்றால் அது ஃபிட்ஜ்ராய்போல இருக்க வேண்டும் என்ற நினைத்துக்கொண்டார். ஒருவார காலத்தில் ஃபிட்ஜ்ராய்க்கும் டார்வினைப் பிடித்துப்போனது. டார்வினின் நன்னடத்தையும் அறிவியல் ஆர்வமும் அவருக்கு நம்பிக்கை கொடுத்தன. அவர் சொன்ன அவகாசம் முடியும் நன்நாளில் டார்வினை அழைத்த ஃபிட்ஜ்ராய், அவருக்காக கப்பலில் ஓர் அறை ஒதுக்கியிருப்பதாகக் கூறினார்.

0

செப்டம்பர் 11, 1831. கப்பலைப் பார்ப்பதற்காக டார்வினை அழைத்துச் சென்றார் ஃபிட்ஜ்ராய். தேவோன்போர்ட் எனும் இடத்தில் அவர்களுடைய கப்பல் நின்றுகொண்டிருந்தது. ஃபிட்ஜ்ராயும் டார்வினும் மூன்று நாட்கள் படகில் பயணித்து கப்பலை அடைய வேண்டியிருந்தது. உன்னால் கடல் பயணத்தைத் தாக்குப் பிடிக்க முடியுமா எனத் தெரிந்திகொள்ளவே இப்படி அழைத்து வந்தேன் எனக் கூறினார் ஃபிட்ஜ்ராய்.

அதேசமயம் டார்வினை ரொம்பவும் வதைக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். ‘பயணம் உனக்குக் கடுமையாகத் தோன்றினால், எங்கே, எப்போது வேண்டுமானாலும் நீ கிளம்பிச் செல்லலாம். அதேபோல பயணம் முடிந்து திரும்பும்போது நீ எப்படி விரும்புகிறாயோ அந்த வழியிலேயே நான் உன்னை அழைத்து வருகிறேன். எனக்கு அதிகாரத்தில் இருக்கும் எல்லோரையும் தெரியும். உன் விருப்பப்படி இந்தப் பயணத்தை நான் அமைத்துத் தருகிறேன்’ என்று வாக்களித்தார் ஃபிட்ஜ்ராய்.

டார்வினுக்குச் சந்தோஷமாக இருந்தது. ஃபிட்ஜ்ராய்க்குத் தன்னைப் பிடித்துப்போனதும், தனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாக அவர் வாக்களித்ததும் நம்பிக்கை அளித்தது. பெரிய எதிர்பார்ப்புடன் கப்பலை நோக்கிச் சென்றார் டார்வின். ராட்சத கப்பல் ஒன்று பல நூறு ஆட்களையும், ஆயுதங்களையும், ஆய்வு கருவிகளையும் சுமந்து செல்வதுபோலவும், அதில் தாம் பயணிப்பது போலவும் கற்பனை செய்துகொண்டார். ஆனால் நேரில் சென்று பார்த்தபோது அத்தனையும் தலைகீழாக இருந்தது.

தேவோன்போர்ட் துறைமுகத்தில் டார்வின் நினைத்ததற்கு மாறாக 90 அடி நீளமும், 24 அடி அகலமும் மட்டுமே கொண்ட சிறிய கப்பல் நின்றிருந்தது. அதுதான் அவர்கள் பயணிக்கப்போகும் கப்பல். கப்பலில் இரண்டு கேபின்கள் மட்டுமே இருந்தன. இதிலும் டார்வினுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது பத்துக்கு பத்து அறை. அந்த அறையையும் துணை ஆய்வாளர் ஜான் ஸ்டோக்ஸுடனும், உதவி அதிகாரி பிலிப் கிங்குடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்த அறையிலேயே பெரிய மேஜையும், பயண வரைபடங்களும் இருந்தன. சுருக்கமாகச் சொன்னால் ஒடுங்கிக்கொண்டு வருவதற்கு மட்டுமே அந்த அறை.

எல்லாவற்றையும் பார்த்த டார்வினுக்கு எதிர்பார்ப்புகள் மங்கிக்கொண்டே வந்தன. இத்தனை குறுகிய அறையில் பயணிக்க முடியுமா? அதுவும் கூடவே ஆட்கள் வேறு. அவர்கள் எப்படி இருப்பார்கள்? எப்படி நடந்துகொள்வார்கள்? யோசித்துக்கொண்டே கப்பலின் நடுப்பகுதிக்கு வந்தார் டார்வின். அங்கே பெரிய எழுத்தில் ‘ஹெச்.எம்.எஸ் பீகல்’ என எழுதப்பட்டிருந்தது. கப்பலைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்து மெதுவாக நகர்ந்து கப்பலின் முன்பக்கம் சென்றார். அங்கேதான் கடலின் முழு பிரமாண்டமும் அவர் கண் முன்னால் விரிந்தது.

பார்வை செல்ல முடிந்த தூரம் வரை கடல் அகன்றிருந்தது. கடல் அடிவானத்தைத் தொடும் இடத்தில் சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. சூரியன் மறைந்து இருள் தொடங்கிய நேரத்தில் சில கேள்விகளும் முளைத்தன. அந்தத் தொடுவானத்திற்குப் பின்னால் என்ன இருக்கும்? அங்கேதான் நான் செல்லப்போகிறேனா?

அவ்வளவுதான். அத்துடன் கப்பலைப் பற்றி மனதில் தோன்றியிருந்த அத்தனை எதிர்மறை எண்ணங்களும் விலகின. பீகல் கப்பலை அணைத்துக்கொண்டார் டார்வின். புதிய யுகத்திற்கான தொடக்கம் அங்கிருந்து ஆரம்பமானது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *