வேதங்கள் :
இந்தியாவின் சிறுபான்மையான
பிராமணர்களின் படைப்பு மாத்திரமே
சர்ச்சைகள், மறுப்புகள் எப்போதும் நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்திருப்பது உண்மையே. அது நடைமுறை சாத்தியமானவை என்றவகையில் உள்ளதிலேயே மோசமானதையே பெரிதும் ஆதரிப்பதாக இருக்கும். அதுவும் நேர்மையற்ற முறையில் செய்யும். இதனால் உலகத்தையும் விஷயங்களையும் முன்பைவிட குழப்பமும் கோபமும் நிறைந்ததாகவே ஆக்கிவைக்கிறது. சூரியனே பூமியைச் சுற்றிவருகிறது என்று வாதத் திறமை மிகுந்த ஒரு வழக்கறிஞர் இன்றைய காலகட்டத்தில்கூட கலிலியோவுக்கு எதிரான தீர்ப்பைப் பெற்றுவிட முடியும். நம் ஆங்கிலேய ஜூரிகளைக் குறைத்து மதிப்பிடாமலேயேதான் இதைச் சொல்கிறேன். அதே நேரம் என்ன எதிர்ப்புகள் வந்தாலும் வெல்லும் வலிமையும் உயிர்மையும் உண்மைக்கு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. கலிலியோவின் கூற்றையே எடுத்துக்கொள்ளலாம். அதை ஆதரித்து ஒரு வரிகூடப் பேசமுடியாத நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணவர்கள்கூட அதை ஏற்றுக்கொண்டிருக்கவும் செய்கிறார்கள்.
அறிவின் வளர்ச்சிக்கும் உண்மைகளின் ஏற்புக்கும் முன்னோக்கிய நகர்வுகளுக்கும் யாரெல்லாம் பங்களித்திருக்கிறார்களோ மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் தமது காலத்தையும் உழைப்பையும் வீண் விவாதங்களில், சர்ச்சைகளில் துளியும் வீணாக்கவே இல்லை. பாராட்டுகளையோ எதிர்ப்புகளையோ எதையும் பொருட்படுத்தாமல் தமது இலக்கை நோக்கி, நிமிர்ந்து நேராக நடந்து முன்னேறியிருக்கிறார்கள். இவையெல்லாம் முழு உண்மையே. எனவே நான் எந்தச் சர்ச்சைக்கும் மறுப்புக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. இருந்தும் இந்த முழு உரையையும் (அத்தியாயத்தையும்) வேத இலக்கியங்களின் தன்மை மற்றும் வரலாறு குறித்து நான் சொல்லியிருப்பவற்றுக்கு எழுந்துள்ள சில மறுப்புகளுக்குப் பதில் சொல்ல மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன்.
இது முற்றிலும் புதிய விஷயம் என்பதை நாம் மறக்கவே கூடாது. சிறிய சிறிய பிழைகள் இருக்கும் என்பதுமட்டுமல்ல; தவிர்க்கமுடியாததும்கூட. நிபுணர்கள் செய்யும் பிழைகள் எல்லாம் நல்ல படிப்பினையைத் தரக்கூடியவையும் கூட. உண்மையைக் கண்டுபிடிக்க இவையெல்லாம் சில நேரங்களில் தவிர்க்க முடியாதவை என்றே சொல்லவேண்டியிருக்கும். நல்ல நோக்கங்கள் இல்லாமல், விமர்சிக்கவேண்டும் என்பதற்காகவே முன்வைக்கப்படும் வாதங்களை நாம் ஒதுக்கிவைத்துவிடுவது நல்லதுதான். ஆனால் சில சந்தேகங்கள், முரண்பாடுகள் எல்லாம் உண்மையை வலுப்பெறவைக்க உதவக்கூடும்.
இந்திய இலக்கியங்களைப் பொறுத்தவரையில் இந்தக் கோட்பாடுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவே இல்லை. முதலில் பூர்வபக்ஷ வாதத்திலிருந்து ஆரம்பிக்கலாம். சாத்தியமான எல்லா மறுப்புகளையும் அவை மூடத்தனமாகவும் அற்பமாகவும் இல்லாதபட்சத்தில் வரவேற்று, பொருட்படுத்தியே ஆகவேண்டும். மறுப்புகள் அனைத்துக்கும் பதிலாக, மூலக் கருத்துக்கு சாதகமாக உத்தரபக்ஷ வாதம் வைக்கவேண்டும். இவையெல்லாம் முழுமையாக முடிந்தபின்னரே ஒரு கருத்து சித்தாந்தமாக நிலைநிறுத்தப்படும்.
எனவே வேதங்கள் பற்றிப் பேசுவதற்கும் பழங்கால இந்தியர்களின் கவிதை/செய்யுள், மதம், தத்துவம் ஆகியவை பற்றிப் பேச ஆரம்பிப்பதற்கும் முன்பாக வேதச் செய்யுள்களின் வரலாற்று மதிப்பைச் சரியாகப் புரிந்துகொள்வதற்குத் தேவையான சில முக்கிய விஷயங்களை அழுத்தமாகச் சொல்லவிரும்புகிறேன். அவை இல்லாமல் வேதச் செய்யுள்களை எழுதிய ஆதி கவிகளின் காலத்திலிருந்து வெகு பிந்தைய காலத்தில் வாழும் நமக்கு அதன் முக்கியத்துவம் புரிய வாய்ப்பே இல்லை.
முதலில் அடிப்படையான விஷயத்தைச் சொல்கிறேன். பழங்கால மற்றும் நவீன கால ஹிந்துக்கள் ஒரு தேசமாகவே நம்முடைய ஆர்வம், கரிசனம், புரிதல், நம்பிக்கை அனைத்துக்கும் உரியவர்கள். அவர்கள் நம்பகமானவர்கள் அல்ல; உண்மையை நேசிப்பவர்கள் அல்ல என்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டை அவர்கள் மீது நாம் வைக்கவே கூடாது.
இரண்டாவதாக, இந்தியாவின் பழங்கால இலக்கியங்கள்/படைப்புகள் எல்லாம் வெறும் ஆர்வத்தைத் தூண்டுபவை மட்டுமே; கீழைத்தேய ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கவேண்டியவை மட்டுமே என்பது சரியில்லை. அவர்களுடைய மொழியான சமஸ்கிருதம் மற்றும் அவர்களுடைய அதி பழங்காலப் படைப்புகளான வேதங்கள் ஆகியவற்றின் மூலம் நமக்கு உலகில் வேறு யாருமே கற்றுக் கொடுக்க முடியாத பாடங்களைக் கற்றுத் தரமுடியும். நமது மொழிகளின் மூலாதாரம், நமது கோட்பாடுகளின் தொடக்கம், நாகரிகம் என்ற பெயரில் இன்று சொல்லப்படும் அனைத்தின் ஆரம்ப விதைகள், அல்லது குறைந்தபட்சம் ஆரிய இனத்தின் நாகரிகத்தின் தொடக்கம் ஆகியவை பற்றி வேதங்கள் நமக்குக் கற்றுத் தரமுடியும். ஹிந்துக்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், ஸ்லாவியர்கள், செல்டிக்கள் இறுதியாக ட்யூடன்கள் என நாம் அனைவரும் மற்றும் நம் தேசங்கள் எல்லாமே அந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவையே.
நிலவியல்/புவியியல் நிபுணராக இல்லாமலேயே ஒருவர் நல்ல உழவராக இருக்கமுடியும்.. எந்த நில அடுக்கின் மீது மீது நிற்கிறார்… அவர் வாழவும் வேலைகள் செய்யவும் உதவும் நிலத்துக்குக் கீழே எது ஆதாரமாக இருக்கிறது. எங்கிருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுகின்றன என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கவே வேண்டாம். இருந்தும் அவர் ஒரு சிறந்த உழவராக இருக்கமுடியும். தான் வாழும் உலகம் எப்படி உருவானது; மொழி, மதம், தத்துவம் ஆகியவற்றில் என்னென்ன காலகட்டங்களையெல்லாம் மனித இனம் கடந்து வந்திருக்கிறது? என்னென்ன மாற்றங்களையெல்லாம் கடந்து ஒருவர் வாழவும் வேலைகள் செய்யவும் ஊட்டச்சத்துகள் தரவும் ஆரம்பித்திருக்கிறது என்பது தெரியாமலேயே ஒருவர் நல்ல, பயனுள்ள குடிமகனாக வாழ முடியும்.
ஆனால், இவையெல்லாவற்றையும் தெரிந்துவைத்திருக்கும் மேட்டுக்குடி ஒன்று எப்போதும் இருக்கவே செய்யும். நம்மிடமிருப்பவற்றில் அதி சிறந்தவற்றின் மூலங்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் திறமையுடன் அது இருக்கும். முதல் நார்மன் கவுண்ட் யார்… முதல் ஸ்காண்டிநேவிய வைகிங் யார்… முதல் சாக்ஸன் எர்ள் யார் என்பதைமட்டுமல்ல; நம்முடைய அதி முன்னோர் யார்… நலம் சேர்த்தவர்கள் யார்… ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேர்வை சிந்தி நிலத்தைப் பண்படுத்தியவர்கள் யார்… அவர்கள் இருந்திருக்கவில்லையென்றால் இன்று நாம் யாராக இருக்கிறோமோ அப்படி ஆகியிருக்கவே முடியாது. அந்த ஆரிய முன்னோர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள் சொற்ப எண்ணிக்கையில் இருக்கத்தான் செய்வார்கள். நமது மொழியின் முதல் சொல்லேர் உழவர்கள்…. நம் சிந்தனைகளின் ஆதி கவிகள்… நம் கடவுளர்களின் முதல் இறைத்தூதர்கள்… அனைத்துக் கடவுள்களுக்கும் கடவுளானவர் என அனைத்தின் ஆதி மூலத்தையும் தேடும் நபர்களாக அவர்கள் இருப்பார்கள்.
அந்த அறிவார்ந்தவர்கள் நிறைந்த மேட்டுக்குடி உயர் வர்க்கமானது அல்லது அறிந்துகொள்ள விரும்பும் உயர் குடியானது அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் எட்ட முடிந்த ஒரு மேட்டுக்குடி நிலையே. நம் கடந்த காலம் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம், நம் சிந்தனைகளின் வேர்கள்… நம் அறிவார்ந்த சாதனைகளுக்கு ஆதாரமானவர்களுக்கான மரியாதை இவையெல்லாம் கொண்டிருக்கும் யாராகவேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களே உண்மையான வரலாற்றாசிரியர்கள். அதாவது கைவிட்டுப் போயிராத கடந்த காலத்தை, வரலாற்றை ஆராயும் நபர்கள்.
மூன்றாவதாக, இந்தியாவின் பழங்கால இலக்கியம், உண்மையான பழங்கால இலக்கியம் அதாவது வேத கால இலக்கியம் கீழைத்தேய ஆய்வாளர்களுடைய அக்கறைக்குரியது மட்டுமல்ல; இங்கிலாந்தில் 19-ம் நூற்றாண்டில் இருக்கும் நாம் எப்படியாக இப்படியானவர்களாக ஆகியிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளவிரும்பும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்குமே தெரிந்துகொள்ளவேண்டியதுதான். இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் வசித்த மானுடர்களின் தன்மைகளில் உள்ள முற்றிலும் மாறுபட்ட, தவிர்க்க முடியாத, இயல்பான வேறுபாடுகள் பற்றி விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறேன்.
நாம் பெரிதும் மதிக்கும் உயிர்த்துடிப்பு நிறைந்த குண நலன்கள், நடைமுறை சாதனைகள் ஆகியவற்றில் ஹிந்துக்கள் குறைந்து காணப்படுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரம் இந்துக்கள் அதி சிறப்புடன் விளங்கும் இன்னொரு அறிவார்ந்த விஷயம் இருக்கிறது. அது அக உலகு சார்ந்த ஆழ்ந்த சிந்தனை மற்றும் அனைத்துக்கும் அப்பாலான விஷயங்கள் குறித்த சிந்தனை. நாம் புறக்கணிக்கக்கூடிய அல்லது வெறுக்கக்கூடிய இந்த விஷயங்கள் தொடர்பாக அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளச் சில பாடங்கள் நிச்சயம் இருக்கின்றன.
நான்காவதாக, வேத கால இந்தியர்களின் பழங்கால ஞானம், மதம், தத்துவம் பற்றி நான் மிக அதிக எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டேனோ என்று நினைக்கிறேன். அவை ஒரு கோணத்தில் பார்த்தால் மிகவும் ஆரம்பநிலையில் இருப்பவை என்றாலும் மானுடவியல் கோணத்தில் பழங்குடி நிலை என்று அதைப் புரிந்துகொள்ளக்கூடாது. விசித்திரங்கள் நிறைந்த இந்த உலகுக்குள் முதன் முதலாக வந்து சேர்ந்த தொல் பழங்கால மனிதர்களின் கூற்றுகளாக அவற்றை நினைத்துவிடக்கூடாது. வேதங்கள் அதி பழமையானவையே. ஏனென்றால் இவற்றைவிடப் பழமையான எழுத்துபூர்வ ஆவணங்கள் எதுவுமே இல்லை. மொழி, புராணங்கள், மதம், தத்துவம் என வேதங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் எல்லாமே காட்டும் கடந்த காலத்தின் செழுமையை எவரொருவராலும் அளவிட்டுப் பார்க்கவே முடியாது. எளிய, இயல்பான, குழந்தைத்தனமான சிந்தனைகள் எல்லாம் அவற்றில் இருக்கின்றன. ஆனால் பல விஷயங்கள் நமக்குமே நவீனமானவையாகவும் இரண்டாம்பட்சமானவையாக நமக்குத் தோன்றுபவையாகவும் இருக்கின்றன. எனினும் வேதங்களுக்கு முன்னதாக மனிதச் சிந்தனையின் வரலாறு தொடர்பாகத் தெரிந்துகொள்ளமுடியும்படியான, நம்பகமான இலக்கியப் படைப்புகள் உலகில் எதுவுமே இல்லை. ஒருவேளை பாபிலோனியாவில் கிடைத்திருக்கும் சைரஸ் உருளை எழுத்துகள், எகிப்தின் பாப்பிரி எழுத்துகள் இவற்றை இலக்கிய வகையில் கணக்கிட்டால் மட்டுமே ரிக்வேதங்களுக்கு நாம் குறிப்பிடும் ஆண்டுக் கணக்கைவிடப் பழைய படைப்புகளாக அவை இருக்கக்கூடும்.
இதன் பின்னும் நம் பாதை தெளிவாக இல்லை. வேதங்கள் வரலாற்று ஆவணங்களா என்ற மறுப்புகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் சில முக்கியமான மறுப்புகளே. நானுமே முன்பு அவற்றை முன்வைத்திருக்கிறேன். மற்ற வாதங்களும் ஓரளவுக்குப் பொருட்படுத்தத் தகுந்தவையே. நம்முடைய நம்பிக்கைகள், கருதுகோள்களைப் பரிசோதித்துப் பார்க்கும் ஒரு வாய்ப்பை அவை தருகின்றன.
வேதங்களை வரலாற்று ஆவணமாகக் கருதக்கூடாது என்று மறுத்துச் சொல்லப்படும் முதல் வாதம் என்னவென்றால் அது தேசம் தழுவியது அல்ல. இந்தியாவில் இருக்கும் அத்தனை மக்களின் சிந்தனைகளின் பிரதிநிதித்துவப் படைப்பு அல்ல. பிராமணர்கள் என்று சொல்லப்படும் சிறிய சிறுபான்மையினரின் அதுவுமேகூட ஒட்டு மொத்த பிராமண வகுப்பினருடையது அல்ல. புரோகித வர்க்கம் என்று சொல்லப்படும் மீச்சிறுபான்மை பிராமணர்களின் படைப்புகள் மட்டுமே என்று சொல்கிறார்கள்.
மறுப்புகள் எல்லாம் நியாயமான அடித்தளத்தைக் கொண்டிருக்கவேண்டும். வேதங்கள் ஒட்டுமொத்த இந்தியாவை/இந்தியரைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்பவர்கள் பைபிள் ஒட்டுமொத்த யூதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; ஹோமர் ஒட்டுமொத்த கிரேக்கர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்வார்களா? எனவே வேத இலக்கியம் சிறுபான்மை பிராமணரை மட்டுமே அதுவும் புரோகிதக் குழுவை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும் உண்மையான வரலாற்று ஆசிரியர் பழைய ஏற்பாடு, ஹோமர் இலக்கியம் பற்றியுமே இதைத்தான் சொல்லவேண்டும்.
பழைய ஏற்பாட்டில் உள்ளவையெல்லாம் புனித நூலாகத் தொகுக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான யூதர்களுக்கு அது அறியக் கிடைத்தது என்பது உண்மையே. ஆனால் மெசபடோமியா அல்லது கானான் தேசம் அல்லது எகிப்தில் இருந்த யூதர்களின் பழங்கால ஒழுக்கவியல், அறிவுத்திறமை, மதம் இவையெல்லாம் பற்றிப்பேசும்போது பழைய ஏற்பாட்டின் பல்வேறு புத்தகங்கள் எல்லாம் ஒட்டுமொத்த யூத இனம் பற்றி எதையும் சொல்லவில்லை (வெகு குறைவாகவே சொல்கின்றன). அதில் இடம்பெற்றிருப்பவையெல்லாம் குறுகிய பிராந்திய அம்சங்கள், சமூகப் பாகுபாடுகள் இவையே.
ஹோமரின் இலக்கியமும் அனைத்து கிரேக்க பழங்குடிகள் பற்றியும் வேதங்கள் இந்தியாவில் வாழும் அனைவரையும் பற்றிக் குறிப்பிடும் அளவுக்கே குறிப்பிடுகின்றன. கிரேக்கர்கள் அல்லது ரோமாபுரியினரின் வரலாறு பற்றி அது பேசும்போதும் ஒட்டுமொத்த தேசத்தின் சமூக, அறிவுப்புல, மத வாழ்க்கை குறித்த சித்திரத்தை அங்கு பார்க்கமுடியாது. ஒட்டுமொத்த தேசத்தின் அறிவு நிலை என்னவாக இருந்தது என்று மத்திய காலங்களில் கூட நமக்குச் சொல்லமுடியாது. ஏன் இன்றைய கதையுமேகூட அப்படியானதுதான். ரோமாபுரியின் சில தளபதிகள் பற்றியும் சில படைவீரர்கள் பற்றியும் கொஞ்சம் போல் தெரிந்திருக்கும். மற்ற லட்சக்கணக்கான எளிய மக்கள் பற்றியெல்லாம் நமக்கு மிகவும் சொற்பமாகவே தெரியும். கிட்டத்தட்ட எதுவுமே தெரியாது என்று கூடச் சொல்லிவிடலாம். அந்த மன்னர்கள், தளபதிகள் அல்லது அமைச்சர்கள் விஷயத்திலுமேகூட அவர்களைப் பற்றி லட்சக்கணக்கான எளிய மனிதர்களில் ஒருவராக இருந்த சில கிரேக்கக் கவிஞர்கள், யூத வழிகாட்டிகள் என்ன நினைத்தார்களோ அதைத்தான் அவர்கள் எழுதிய நூல்களில் இருந்து தெரிந்துகொண்டிருக்கிறோம்.
எழுதியவர்கள் குறைவு. வாசித்தவர்கள் அதிக அளவில் இருந்திருப்பார்கள் என்று ஒருவர் சொல்லக்கூடும். உண்மை நிலை அதுவாக இருந்திருக்குமா? மெக்காலே எழுதிய இங்கிலாந்தின் வரலாறு, மகாராணியின் கணவரின் வாழ்க்கை அல்லது டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம் போன்ற நூல்களை அத்தனை பேரும் படித்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் அந்த நூல்களை வெளியிட்ட பதிப்பாளர்களிடம் கேட்டால் மூன்று கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பத்து லட்சம் பேர்கூட அதை வாங்கவில்லை என்று சொல்வார். புதிய ஏற்பாட்டின் திருத்தப்பட்ட பதிப்புதான் மிக மிக அதிக அளவில் விற்பனையான புத்தகம். இருந்தும் எட்டு கோடி ஆங்கிலம் பேசும் மக்களில் நாற்பது லட்சம் பேர் கூட அதை வாங்கியிருக்கவில்லை.
அரசியல், சமூகப் பருவச் சூழ்நிலைக்கு ஏற்பப் பதிப்பிக்கப்பட்டு திடீர் வெற்றியைப் பெறும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால், இங்கிலாந்து பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஒரு பதிப்பு மூன்று அல்லது நான்காயிரம் புத்தகங்கள் விற்றாலே பெரும் வெற்றி என்று நினைக்கும் நிலையே இருக்கிறது. ரஷ்யா போன்ற பிற நாடுகளை எடுத்துக்கொண்டால் ஒட்டு மொத்த தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நூல் என்று எதையுமே சொல்லிவிடமுடியாது. சொற்ப நபர்களுக்கு மேல் தெரியவந்திருக்கும் நூல் என்று எதையும் குறிப்பிட்டுவிடமுடியாது.
இப்படியான நிலையில் கிரேக்கம், இத்தாலி, பாரசீகம் அல்லது பாபிலோனியா எனப் பழங்கால நாடுகளில் ஹோமர் போன்ற விதிவிலக்குகள் அல்லாமல் வேறு எந்தப் படைப்பு சில ஆயிரம் பேருக்கு மேலானவர்களால் படிக்கவோ ஏன் கேள்விப்படவோ பட்டிருக்கும்? கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் கல்வி அறிவு பெற்றவர்கள் என்றே நாம் சொல்கிறோம். அது உண்மையும்தான். ஆனால் நான் என்ன அர்த்தத்தில் சொல்கிறோமோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட யதார்த்தம்தான் நிஜத்தில் இருந்திருக்கும். கிரேக்கர்கள், ரோமானியர்கள் என்று நாம் யாரைச் சொல்கிறோம் தெரியுமா?
ஏதென்ஸ் மற்றும் ரோமாபுரியில் வசித்தவர்களை மட்டுமே. இங்குமே கூட பிளேட்டோவின் நூல்கள், அல்லது ஹொரேஸின் நூல்கள் இவற்றைப் படித்த, இதுபோல் எழுத முடிந்த மிகச் சிறிய அறிவிஜீவி மேட்டுக்குடிகளைமட்டுமே சொல்கிறோம். நாம் வரலாறு அதாவது கடந்த காலம் தொடர்பான நினைவுகள் என்று அழைப்பதெல்லாம் மிகச் சிறுபான்மையினர் எழுதியவை மட்டுமே. மீதி லட்சக்கணக்கானவர்களின் வாழ்வும் குரலும் பதிவு செய்யப்படாமலே போயிருக்கும். பேச்சையும் சிந்தனையையும் அழகிய வடிவில் இலக்கியமாக எழுதிவைக்க முடிந்தவர்கள் மட்டுமே கடந்த காலத்தின் சாட்சிகளாகியிருக்கிறார்கள். அவர்கள் எழுதியவற்றையே நாம் வரலாறு என்று சொல்கிறோம்.
ரிக்வேத காலம் போன்ற மிகப் பழமையான காலம் பற்றிப் பேசுவதென்றால் பலவகையில் சிதறுண்டு கிடக்கும் தேசம் அல்லது இன்றைவிட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் குறைவான ஒருங்கிணைப்பு மட்டுமே பெற்றிருந்த ஒரு தேசத்தைப் பற்றிப் பேசுவதென்றால், வேதச் செய்யுள்களில் இருப்பவையெல்லாம் வெகு தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தென்படும் பனி படர்ந்த சிகரங்கள் போலமட்டுமே வரலாற்றின் எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் தேசமாக நம் கண்களுக்குத் தென்படும். வேதச் செய்யுள்கள் எல்லாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதம், சிந்தனைகள், வாழ்க்கை வழிமுறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை என்று நாம் சொல்லும்போது வேதக் கவிகள் பேசியிருப்பவர்களைவிடக் கொஞ்சம் கூடுதலான மக்களைப் பற்றி மட்டுமேதான் பேசுகிறோம்.
இன்றைய இந்தியா என்று நாம் பேசும்போது ஒட்டுமொத்த மனித இனத்தில் ஆறில் ஒரு பங்காக இருக்கும் 25 கோடி மக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறோம். இமயம் அதன் சிந்து நதி மற்றும் கங்கை நதி என இரு கைகள் போன்ற சமவெளிகள் தொடங்கி, குமரிமுனை, இலங்கை வரையிலான பரந்து விரிந்த நிலப்பகுதியில் வாழும் மக்களையே நாம் குறிப்பிடுகிறோம். கிட்டத்தட்ட ஐரோப்பா கண்டம் அளவுக்குப் பெரிய தேசம். பழங்கால வேதங்களில் குறிப்பிடப்படும் மன்னர்கள், ரிஷிகள், கவிகள் எல்லாம் சிந்து மற்றும் பஞ்சாப் சமவெளியில் வசித்தவர்கள். சப்த சிந்து என்று வேதக்கவிகளால் அழைக்கப்பட்ட சமவெளிப் பகுதி. கங்கை நதி பாய்ந்த சமவெளிகள் பற்றி வேதங்களில் குறிப்பிடப்படவில்லை. தக்காணப் பகுதியும் குறிப்பிடப்படவில்லை.
சொற்ப புரோகிதர்கள் (ரிஷிகள்) எழுதியவை மட்டுமே; ஒட்டு மொத்த தேசத்தின் சிந்தனை, அறிவு வெளிப்பாடு அல்ல என்று சொல்வதன் அர்த்தம் என்ன?
நாம் இந்த வேத கவிகளை புரோகிதர்கள் என்று அழைப்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. ஏனென்றால் அந்த வேதப் படைப்புகள் எல்லாம் மதம், புராணம், தத்துவம் ஆகியவை மட்டுமல்லாமல் பலி, யாகச் சடங்குகள் ஆகியவற்றை மிகுதியாகக் கொண்டவையாகவே இருக்கின்றன. இந்த புரோகிதருமே கூட குல மூப்பர் தான். எனவே அவர்களுடைய குலத்தின் அல்லது கிராமத்தின் அல்லது சமூகத்தின் சார்பில் பேசும் அதிகாரமும் முழு உரிமையும் இந்த வேத புரோகிதர்களுக்கு உண்டு. வசிஷ்டரை ஒரு தலைமைப் புரோகிதர் என்று அழைக்கலாம். ஆனால் அவர் கார்டினல் மேன்னிங் போன்றவர் மட்டுமே என்று நினைத்துவிடவேண்டாம்.
0