Skip to content
Home » டார்வின் #13 – காட்டுமிராண்டிகள்

டார்வின் #13 – காட்டுமிராண்டிகள்

பீகல் பயணத்தின் நேரடி நோக்கம் தென் அமெரிக்கக் கடற்பகுதிகளை ஆராய்வது. ஆனால் அதற்கு மறைமுக நோக்கங்களும் உண்டு. அதில் ஒன்று, தென் அமெரிக்கத் தீவுகளில் காணப்படும் ‘காட்டுமிராண்டிகளை’ கண்டறிந்து நாகரிகப்படுத்துவது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், பழங்குடி மக்களை மதமாற்றம் செய்து, கல்வி கொடுத்து, பிரிட்டனின் நாடு பிடிக்கும் வேலையை எளிதாக்கிக்கொள்வது.

டார்வினிடம் ஆரம்பதிலேயே நாம் காட்டுமிராண்டிகளைப் பார்க்கப்போகிறோம் என ஃபிட்ஜ்ராய் சொல்லி வைத்திருந்தார். அவர்களுடைய கப்பல் டியெரா டெல் ஃபியூகோ பகுதியை அடைந்தபோது அங்கே ஃபியூஜியன்கள் என அறியப்பட்ட பழங்குடிகளை டார்வின் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஆடை அடையவில்லை. இடுப்பில் விலங்குகளின் தோல்களை அணிந்திருந்தனர். எப்போது பார்த்தாலும் கத்திக்கொண்டும், கூச்சலிட்டபடியும் இருந்தனர்.

டார்வினால் அப்படியான மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதையே நம்ப முடியவில்லை. உலகம் இத்தனை வேகமாக நாகரிகம் அடைந்து வருகிறது. இப்போதும் கற்காலத்தில் வாழ்வதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்களா? ஆச்சரியமாக இருந்தது டார்வினுக்கு.

சொல்லப்போனால், டார்வின் பயணித்த கப்பலிலேயே மூன்று ஃபியூஜியன்கள் உடன் வந்தனர். அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபிட்ஜ்ராயால் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். நுனி நாக்கு ஆங்கிலத்துக்கும் நாகரிக உடைகளுக்கும் சொந்தக்காரர்கள். ஆனால் அவர்களுடைய இன மக்கள் இப்படி இருப்பார்கள் என்று டார்வின் நினைக்கவில்லை. உண்மையில் அப்பழங்குடிகள் முழு வளர்ச்சி அடைந்த மனிதர்கள்தானா என்ற சந்தேகமே டார்வினுக்கு எழுந்தது. அவர்கள் விலங்குகளைப்போல இருந்ததாகவே டார்வின் குறிப்பிடுகிறார்.

0

ஃபியூஜியன்கள் வாழ்ந்த பகுதிகளுக்குச் சென்று தாவரங்களையும் பூச்சிகளையும் சேகரித்தார் டார்வின். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பழங்குடி மக்களும் ரகசியமாகப் பின் தொடர்ந்தனர். இந்தச் செயலே டார்வினுக்குள் அச்சத்தை உண்டு பண்ணியது. எப்படியாவது அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று நினைத்தார். ஆனால் சூழல் அனுமதிக்கவில்லை. திடிரென்று கடும் புயல் தாக்கியதில் பீகில் நிலைகுலைந்துபோனது. பிட்ஜ்ராய் இந்தச் சூழலில் பயணிப்பது கடினம் எனச் சொல்லி, ஃபால்ஸ் கேப் ஹார்ன் எனும் பகுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கே அவர்கள் தங்க நேர்ந்தது ஃபியூஜியன்களின் வீடுகளில்.

குடிசைகளில்தான் டார்வினும் பீகல் குழுவினரும் தங்கினர். அவர்களுக்குத் துணையாக வீரர்களும் இருந்தனர். இருப்பினும் டார்வினின் மனம் முழுவதுமே அச்சத்தால் நிரம்பியிருந்தது. குறிப்பாக இந்தப் பழங்குடி மக்கள் மனித மாமிசம் தின்பவர்கள் என்று பலரும் சொல்லக் கேட்டிருந்தார். அதுதான் டார்வினைக் கலவரமூட்டியது. இரவில் ஃபியூஜியன்களின் முணுமுணுப்பும், பறவைகளின் அலறலும், நாய்கள் குரலொலியும் டார்வினைத் தூங்கவிடவில்லை. விடிந்தவுடன்தான் கண்ணயர்ந்தார். ஆனால் ஃபியூஜியன்களின் பழக்கவழக்கங்கள் டார்வினுக்குள் பலவிதமான கேள்விகளை விட்டுச் சென்றன.

ஒருநாள் பீகல் குழுவினர் காட்டில் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது திடீரென  ஃபியூஜியன்கள் சூழ்ந்துவிட்டனர். அவர்கள் தாக்குதல் நடத்தப்போவதாக எண்ணி, வீரர்கள் தயாராகினர். ஆனால் ஃபியூஜியன்கள் தாக்கவில்லை. பொருட்களை மட்டும் கொள்ளையடித்துவிட்டு நகர்ந்தனர். டார்வினும் சில வீரர்களும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, அவர்கள் திருடிச் சென்ற பொருட்களைச் சரிசமமாகப் பிரித்து பங்கிட்டுவது தெரிந்தது. இது டார்வினுக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது.

ஒருவேளை இந்தச் சமத்துவம்தான் ஃபியூஜியன்களை இன்னும் காட்டுமிராண்டிகளாக வைத்திருக்கிறதோ? மனிதர்களுக்கு செல்வமும், அதிகாரமும் வேண்டும் என்கிற ஆசை பிறந்தால்தான் வளர்ச்சி ஏற்படும். நாகரிகம் தோன்றும். இங்கே மக்கள் பொதுவுடமையைக் கடைபிடிக்கும்போது அவர்களுக்குள் பேராசையோ அதிகார வெறியோ எழுவதில்லை. இதுதான் பழங்குடி சமூகம் இன்னமும் வளர்ச்சியை எட்டாததற்குக் காரணமாக இருக்கிறதோ? டார்வின் தனக்குத் தானே கேட்டுக்கொண்டார்.

0

அடுத்ததாக டார்வினின் கப்பல் ஃபால்கிலாண்ட் தீவுகள் நோக்கி புறப்பட்டது.

ஃபால்கிலாண்ட் தீவுகள் முழுவதுமே டார்வினுக்கு உகந்த இடமாக இருந்தது. பழங்காலப் பாறைகள், புதைபடிமங்கள் என உலகில் வேறு எங்கும் கிடைக்காத உயிர் ஆதாரங்களை அந்த இடம் கொண்டிருந்தது. டார்வின் அங்குள்ள உயிரினங்கள், அவற்றின் எண்ணிக்கைகளைக் கணக்கெடுத்தார்.  அதன்பின் அருகில் இருந்த மால்டோனடோ எனும் இடத்திற்குச் சென்று பல விதமான விலங்குகளையும் பறவைகளையும் சேகரித்தார். அங்கே மட்டும் 80 வகை பறவைகளை அவர் பதப்படுத்தினார்.

அந்தப் பறவைகள் உட்கொள்ளும் உணவு, அவற்றின் மொழி, வாழ்விடம் என அனைத்தையும் பதிவு செய்தார். ஆனால் இத்தகைய காரியங்களை ஒற்றை ஆளாக செய்வது டார்வினுக்குக் கடினமாக இருந்தது. அதே தீவில் 16 வயதான சிம்ஸ் கோவிங்டன் எனும் சிறுவனை நிரந்தர உதவியாளனாக நியமித்தார். அவனுக்குப் பறவைகளை வேட்டையாடுவது பற்றியும், பாடம் செய்வது பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.

0

ஃபிட்ஜ்ராய்க்கு டார்வின் மீது கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை எழுந்தது.  ஃபிட்ஜ்ராய் டார்வினை தத்துவஞானி எனச் செல்லமாக அழைக்க ஆரம்பித்தார். கப்பலில் இருக்கும் மற்றவர்களைவிட டார்வினுக்கு அறிவு ஜாஸ்தி எனப் பாராட்டினார். டார்வினால் எல்லோரிடமும் நட்பு பாராட்ட முடிகிறது எனக் கூறி வியந்தார்.

படகோனியா எனும் பகுதியை அடைந்தவுடன் டார்வின் அந்நிலத்தை ஆராயச் சென்றார். பீகில் அவரைவிட்டுவிட்டு ஆய்வு செய்ய புறப்பட்டது.

டார்வினுக்கு படகோனியா சவாலாக இருந்தது. புவியியல் ரீதியில் ஆச்சரியமூட்டுவதாகவும் அரசியல் ரீதியுல் ஆபத்தானதாகவும் தோன்றியது. டார்வின் அங்கே அர்ஜெண்டினத் தளபதி ஜுவான் மானுவல் டி ரோசாஸ் என்பவரிடன் அனுமதி பெற்றுதான் அந்த இடத்தை ஆராய முடிந்தது. அந்த தளபதி அர்ஜெண்டினா ராணுவம் சார்பில் பழங்குடி மக்களைக் கொல்வதற்கு அனுப்பப்பட்டவர். அங்கே முகாமிட்டிருந்தார்.  அந்த ராணுவத்தில் எல்லோரும் கொள்ளைக்காரர்களைப்போல இருந்தனர்.  டார்வின் அவரிடம் கை குலுக்கியபோது ரோசாஸின் கைகளில் நிஜமாகவே ரத்தக் கறை படிந்திருந்தது.

அந்த நிலத்தில் பிரிட்டனும் அர்ஜெண்டின ராணுவமும் இணைந்து நிகழ்த்திய செவ்விந்தியர்களுக்கு எதிரான போர் டார்வினை நிலைகுலையச் செய்தது. அவர்கள் மிருகங்களைப்போல நடத்தப்பட்டனர். பெண்கள் பலத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகள் கொடூரமாகப் பலிகொடுக்கப்பட்டனர்.  அங்கே நிகழ்வது இன அழிப்பு என டார்வினுக்குப் புரிந்தது. அந்தக் காட்சிகள் அவர் மனதில் பல கேள்விகளை உண்டு பண்ணின. கடவுள் ஒருவேளை மனிதர்களை பண்படுத்த விரும்பினால் இப்படித்தான் கொலைகள் மூலம் செய்ய விரும்புவாரா? இங்கிலாந்து போன்ற நாகரிகம் அடைந்த தேசம் இப்படியான குற்றங்களில் ஈடுபடுவது சரியா? இந்தக் கொலைகள் பிரிட்டனின் பொருளாதார நலனை உயர்த்துவதாக சொல்லப்பட்டாலும் மனித அறத்தை அழிப்பதாக இருக்கின்றனவே?

அதற்கு மேல் டார்வினால் அங்கு இருக்க முடியவில்லை. பியூனஸ் அயர்ஸ் வழியாகப் பயணப்பட்டு, மான்டிவீடியோவை அடைந்தார். அங்கிருந்து தான் சேகரித்த புதைபடிமங்கள், விலங்குகள், பறவைகள் என மொத்தம் 200 வகை மாதிரிகளை இங்கிலாந்துக்கு அனுப்பினார் டார்வின்.

அதன்பின் கப்பல் புறப்பட்டு போர்ட் டிசையர், செயின்ட் ஜூலியன் போர்ட்,  மேக்கெல்லன் ஜலசந்தி, செயின்ட் கிரிகோரிஸ் விரிகுடா எனப் பயணித்து மீண்டும் டியரா டெல் பியூகோவிற்கு வந்தது. அங்கே டார்வின் மீண்டும் ஃபியூஜியன்களைச் சந்திக்க நேர்ந்தது. இந்தமுறை ஃபியூஜியன்களுடனான அவரது அனுபவம் முக்கியமான சில கேள்விகளை உண்டுபண்ணியது.

ஃபியூஜியன்களை எந்த இடத்தில் வைத்துப் புரிந்துகொள்வது? படைக்கப்பட்டதில் இருந்தே இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்களா? அவர்கள் ஏன் ஆடை அணிவதில்லை? ஏன் அழுக்காக இருக்கிறார்கள்? ஏன் அவர்களுக்கு என்று நாகரிகமான மொழி இல்லை? இதற்கும் மனிதர்கள் தோன்றியதற்கும் தொடர்பு இருக்கிறதா?

அறிவியலாளரான லமார்க், மனிதர்கள் குரங்கில் இருந்து வந்தவர்கள் என்ற பார்வையை ஏற்கெனவே முன்வைத்திருந்தார். ஆனால் டார்வின் அப்போது வாசித்து வந்த சார்லஸ் லயல் என்பவரோ அதை மறுத்து, மனிதர்கள் குரங்கின் வழி வந்தவர்கள் எனச் சொல்வது கீழ்த்தரமான கருத்து என வாதிட்டார். மனிதர்கள் கெளரவமாக பிறந்தார்கள், கடவுளின் செல்லப்பிள்ளைகள் என்பதே லயலின் கருத்து.

ஆனால் நாகரிகமற்ற இந்தப் பழங்குடிகளைப் பார்க்கும்போது டார்வினுக்கு அந்தக் கருத்தில் சந்தேகம் வந்தது. எப்படி ஃபியூஜியன்களின் பிறப்பை உயரியதாகச் சொல்ல முடியும்? எந்நேரமும் மிருகங்களைப்போல சண்டையிட்டுக்கொண்டு, உணவுக்காகத் தரையில் கடந்து உருளும் இவர்கள் உன்னதப் படைப்புகளா? குரங்குகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை என்றுதானே தோன்றுகிறது? அப்படியென்றால் இவர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள்? ஒருவேளை உண்மையில் லமார்க் சொல்வதுபோல குரங்குகளிடம் இருந்துதான் இவர்கள் தோன்றி இருப்பார்களா? இவர்கள் குரங்குகளிடம் இருந்து தோன்றியவர்கள் என்றால், நாகரிகம் அடைந்த மனிதர்களை மட்டும் கடவுள் படைத்ததாக எப்படிச் சொல்ல முடியும்? அப்படியென்றால் எல்லா மனிதர்களும் குரங்கின் வழி வந்தவர்கள்தானா?

டார்வினுக்குள் அமைதியாகக் கேள்விகள் வேர்விட்டுக்கொண்டிருந்தன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *