Skip to content
Home » மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #25 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 4

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #25 – வேத காலம் : ஐரோப்பிய மறுப்புகளும் மேக்ஸ் முல்லரின் பதிலுரையும் – 4

வேதங்கள் கற்றுத் தரும் பாடங்கள்

 

பழங்கால இந்திய இலக்கியங்களில் இருந்து நமக்குத் தெரியவராத துறை என்று எதுவுமே இல்லை. அவற்றில் மதம் மற்றும் புராணவியல் சார்ந்து கிடைத்திருப்பவையே புதுமையானதாகவும் செழுமையாகவும் மிக முக்கியமாகவும் இருக்கின்றன. வரும் அத்தியாயங்களில் இவற்றைப் பற்றியே விரிவாகப் பேசப்போகிறேன். ஏனென்றால் பழங்கால வேத இலக்கியத்தை நான் அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்கிறேன். அதில்தான் ஆரிய மதத்தின் விதைகள் இருக்கின்றன. நவீன இந்துக்களின் ஆழமான நம்பிக்கைகள் அல்லது வலுவான முன் அனுமானங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேதங்கள் பற்றிய அறிவு மிகவும் அவசியம்.

இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எந்த மாற்றமுமே நடக்கவில்லையென்று நாம் நம்புவோமென்றால், வேத இலக்கியங்களில் இருந்து நமக்குக் கிடைப்பவை உண்மையான பிராமண மதம் பற்றியதாக இருக்காது என்று சொல்லலாம். இன்று பேசப்படும் வங்காள மொழிக்கும் வேத சமஸ்கிருதத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்வதுபோன்ற முட்டாள்த்தனமாகவே அது ஆகிவிடும். ஆனால் சமஸ்கிருத இலக்கணம் பற்றித் தெரியவில்லையென்றால் ஒருவரால் வங்காள மொழியின் வேர்கள் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளவும் முடியாது. இந்துக்களின் இன்றைய மத, தத்துவார்த்த, சட்டம் சார்ந்த அம்சங்கள், சமூகப் பார்வைகளை உண்மையான வேத மூலங்களுடன் இணைத்துப் பார்க்காவிட்டால் எதையும் புரிந்துகொள்ளமுடியாது.  

ரிக்வேதச் செய்யுள்கள் மற்றும் அவற்றின் உரை பற்றி நான் சில வருடங்களுக்கு முன் முதல் முறையாக நூல் வெளியிட்டபோது வேதங்கள் எல்லாம் துளியும் பயனற்றவை என்று நடுநிலையான சிலர்கூடச் சொன்னார்கள். இந்தியாவில் இருப்பவர்கள் எவ்வளவு கல்வி அறிவு பெற்றவரென்றாலும் வேதங்களை வாசிக்க முடியாமல்தான் இருக்கிறார்கள். மிஷனரிகளுக்கு அல்லது இந்திய பூர்விகக் குடிகள் மீது செல்வாக்கு செலுத்த விரும்புபவர்களுக்கு வேண்டுமானால் வேதங்களைப் படிப்பது பயன் தரலாம் என்று சொன்னார்கள். பிந்தைய கால சமஸ்கிருதப் படைப்புகள், மனுவின் சட்ட திட்டங்கள், காவியங்கள் மிக முக்கியமாகப் புராணங்கள் இவற்றைத்தான் நாம் அதிகம் படிக்கவேண்டும் என்றும் சொன்னார்கள். வேதங்கள் எல்லாம் ஜெர்மானிய ஆய்வாளர்களுக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கலாம். ஆங்கிலேயர்களுக்கு அல்ல என்றும் சொன்னார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் பற்றி எதுவும் தெரிந்திருக்காதபோது அறியாமையால் சொல்லப்பட்ட விமர்சனங்கள் என்றுகூட இவற்றைச் சொன்னவர்களை மன்னித்து ஏற்கமுடியாது. ஏனென்றால் பிந்தைய காலத்தைச் சேர்ந்த மனுவின் சட்ட நூல், மஹாபாரதம், புராணங்கள் என அனைத்திலுமே மதம் சார்ந்த விஷயங்களில் வேதங்கள் மிக மிக உயர்வாகவே போற்றப்பட்டிருக்கின்றன. ‘தீயில் இடப்படும் காய்ந்த புல் போல் வேத ஞானம் இல்லாத பிராமணன் நொடியில் அழிந்து போவான்’ என்று மனு சொல்கிறார்.  ‘பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களாகிய துவிஜர்கள் (இரு பிறப்பாளர்கள்) வேதங்களைப் படிக்காவிட்டால் விரைவில் சூத்ர நிலைக்கு வீழ்ச்சியுறுவார்கள். அவர்களுடைய வம்சாவளியினரும் அப்படியே ஆகிவிடுவார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்தியச் சிந்தனைகள் பற்றிய ஆய்வில் வேதங்களின் முக்கியத்துவம் குறித்து அறியாமையில் பேசிய ஐரோப்பிய ஆய்வாளர்கள், புனித வேதங்களைப் பிராமணர்கள் தமது ஜாதிக்குள்ளாக மட்டுமே பூட்டிவைத்துக்கொண்டுவிட்டார்கள் என்று வெளிப்படையாகத் துணிந்து குற்றம்சாட்டும் எல்லைக்கு வரை சென்றுவிடுகிறார்கள். உண்மையில் பிராமணர்கள் அதை அப்படித் தமக்குள் முடக்கிக் கொண்டிருக்கவில்லை. சூத்ரர்கள் நீங்கலாகப் பிறருக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மிகக் கடுமையான முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள். அதில்  அவர்களுக்குப் போதிய பலனும் கிடைக்கவில்லை. பிராமணர்களின் புனிதமான வேதங்களை க்ஷத்ரிய, வைஸ்ய குலத்தினர் தமது குழந்தைகளுக்குக் கற்றுத் தராவிட்டால் என்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதை இப்போது மேற்கோள் காட்டிய மனுவின் செய்யுள் தெளிவாக எடுத்துக்காட்டவும் செய்கிறது.

என்னுடைய ரிக் வேதப் பதிப்புக்கு இதுவரை பிராமணர்களே நல்ல வரவேற்பு தந்திருக்கிறார்கள். அவர்களே அதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். வேத இலக்கியங்களை மிகுந்த ஆவலுடன் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். பழங்கால இலக்கியங்கள் குறித்து முறையான ஆய்வுகள் நடக்கவேண்டும் என்று பல்வேறு பிராமண குலத்தினர் ஆர்வத்துடன் சொல்கிறார்கள். எனவே வேதங்கள் பற்றித் தெரியாத அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத சமஸ்கிருத மாணவர் (ஆய்வாளர்) பழைய ஏற்பாடு பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் ஹீப்ரு ஆய்வாளர் போலவே இருப்பார்.

எனது ரிக்வேதம் பற்றிய நூலுக்கு இந்தியாவில் இருந்து எந்தவொரு கருத்தும் வெளியாகவில்லை என்றும் இந்தியர்களின் மதம் சார்ந்த வாழ்க்கையில் அது எந்த மறு மலர்ச்சியையும் உருவாக்கவில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். எனவே அது தொடர்பாக வெளியாகியிருப்பவற்றில் எனக்குக் கிடத்த ஒரு வாக்குமூல உரையை இங்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ராம் மோகன் ராய் நிறுவிய ஆதி பிரம்ம சமாஜத்திலிருந்து அந்தக் கடிதம் வந்திருக்கிறது. இப்போது அது ஆதி பிரம்ம சமாஜம், இந்திய பிரம்ம சமாஜம், சதாரனோ பிரம்ம சமாஜம் என்ற மூன்று கிளைகளைக்கொண்டதாக இருக்கிறது.

‘சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் முன்னெடுத்த பிரமாண்டப் பணி நல்லவிதமாக முடிந்திருப்பது குறித்து ஆதி பிரம்ம சமாஜம் தன் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. எந்த பூமியில் தோன்றியதோ அங்கே வேதக் கல்வி என்பது கிட்டத்தட்ட இல்லாமல் போய்வரும் நிலையில் ரிக்வேதம் குறித்த உங்களுடைய நூலை வெளியிட்டிருப்பதன் மூலம் இந்துக்களுக்கு நீங்கள் ஒரு சாகா வரம் தந்திருக்கிறீர்கள். இதற்கு நாங்கள் என்றென்றைக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்’ என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

ரிக்வேதச் செய்யுள்களில் வெளிப்படும் மத மற்றும் கவிதை அம்சங்கள் பற்றிச் சில விஷயங்கள் முதலில் சொல்கிறேன். ரிக்வேத சம்ஹிதை என்று நாம் அழைப்பதில் சுமார் 1017 செய்யுள்கள் இருக்கின்றன. அவற்றுக்கிடையே ஏதேனும் கட்டமைப்பு அல்லது தெளிவான தொகுப்பு அம்சம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வேத முன்னோர்கள் இந்த பூமியில் எப்படியான அறிவார்ந்த சிந்தனை உலகில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தொடர்பான பரந்துபட்ட பார்வையை அது நிச்சயம் தரும் என்றும் என்னால் சொல்ல முடியாது.

வேத காலத்தினரின் மதம் பல தெய்வங்களைக் கொண்டதாக இருந்ததா… ஓரிறைக் கொள்கையைக் கொண்டிருந்ததா என்று கேள்வி கேட்டால்கூட என்னால் நிச்சயம் பதில் சொல்ல முடியாது. பழைய ஏற்பாட்டில் அல்லது புதிய ஏற்பாட்டில் அல்லது குர்ரானில் இருப்பதுபோல் ஓரிறை தெய்விகத் தன்மை பற்றித் துணிந்து (வெளிப்படையாகச்) சொல்லும் செய்யுள்கள் வேதங்களில் இருக்கின்றன. இருந்தும் வேத காலமானது ஓரிறைக் கொள்கையைக் கொண்டது என்று அதன் இன்றைய அர்த்தத்தில் சொல்லிவிடமுடியாது.

இருப்பது ஒன்றே; அதை ஞானிகள் பல பெயர்களில் அழைக்கிறார்கள். அக்னி, யமா, மாதரிஸ்வான் என்றெல்லாம் அழைக்கிறார்கள் (ரிக்வேதம் 1:164:46).

இன்னொரு கவி, ‘ஞானிகள் அழகிய சிறகுகளைக்கொண்ட அந்த ஒருவரை (தெய்வத்தை) பல வழிகளில் புகழ்ந்துரைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஹிரண்யகர்ப்பம் என்பதைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  ‘ஆதியிலே ஹிரண்யகர்ப்பம் எழுந்தது. அனைத்து உயிர்களுக்குமான இறைவன் பிறந்தார். அவரே பூமியையும் வானத்தையும் படைத்தார். நாம் நமது யாகங்களின் ஆகுதிகளை அவருக்கே அர்ப்பணிக்கிறோம். அந்த ஹிரண்யகர்ப்பரே தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம். யா தேவேஷு ஆதி தேவாஹ ஏக ஆசித். பழைய ஏற்பாட்டில்கூட ஓரிறை பற்றி இவ்வளவு அழுத்தமான விவரணையை நாம் பார்க்கவே முடியாது.

இதுபோன்ற வரிகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான செய்யுள்களில் ஏராளமான தெய்வங்கள் பற்றிப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளன. அவர்களின் எண்ணிக்கைகூட 33 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. விண்ணில் 11 கடவுள்கள், மண்ணில் 11 கடவுள்கள், நீரில் 11 கடவுள்கள் இருப்பதாக ஒரு வேதக் கவிஞர் (ரிஷி) குறிப்பிட்டிருக்கிறார். நீர் என்று இங்கு குறிப்பிட்டிருப்பது வளிமண்டலம் மற்றும் மேகங்களைக் குறிக்கிறது. 33 கடவுள்களுக்கு மனைவியரும் உண்டு. அக்னியின் மனைவி ப்ருத்வி, வாதாவின் மனைவி வாக், இந்திரனின் மனைவி சேனா, பிரஹஸ்பதியின் மனைவி தேனா, பூஷணின் மனைவி பத்யா, வசுவின் மனைவி காயத்ரி, ருத்ரனின் மனைவி திரிஸ்துபா, ஆதித்யரின் மனைவி ககதி, மித்ரனின் மனைவி அனுஸ்துபா, வருணனின் மனைவி விராக, விஷ்ணுவின் மனைவி பங்கிதி, சோமனின் மனைவி தீக்ஷா எனப் பல தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வேதக் கடவுள்கள் மொத்தம் இந்த 33 மட்டுமே அல்ல. நெருப்புக் கடவுளான அக்னி, மழைக்கடவுள் சோமன், புயல் கடவுள்களான அஸ்வினிகள் (மருத்கள்), அதிகாலைக்கான உஷை, சூரியன் எனப் பல கடவுள்கள் தனியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். சில நேரங்களில் கடவுள்கள் வெறும் 33 அல்ல. மூவாயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பது என்று கூட உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பிட்டிருக்கிறர்கள்

வேத காலத்தினரின் மதம் நிச்சயம் பல தெய்வக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றுதான் எடுத்த எடுப்பில் தோன்றும். ஆனால், நாம் பல தெய்வ மதம் என்று இன்று சொல்வது வேத கால மதத்துக்கு நிச்சயம் பொருந்தாது.

கிரேக்கம், ரோமாபுரி ஆகியவற்றிடமிருந்து பல தெய்வக் கோட்பாட்டை நாம் பெற்றிருக்கிறோம். அதில் ஒருவகையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கடவுள் தொகுப்பு இருக்கிறது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு அதிகாரம், படிநிலை என்றிருக்கிறது. அனைத்துக் கடவுள்களும் ஓர் உயர்நிலை கடவுளான ஜீயஸ் அல்லது ஜூபிடருக்கு அடிபணிந்து நடப்பார்கள். ஆனால், வேத காலத்தில் இருந்த பல தெய்வங்கள் கிரேக்க, ரோமாபுரியின் பல தெய்வ அமைப்பிலிருந்து மாறுபட்டவர்கள். ஊரல்-ஆல்டிக், பாலினோசியர்கள், அமெரிக்கர்கள், ஆஃப்ரிக்கக் குலங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் பல தெய்வக் கோட்பாடுகளிலிருந்தும் மன்னராட்சியில் இருந்து கிராம குடியரசுகள் (சமூகங்கள்) வேறுபட்டிருப்பதுபோல் வேத காலப் பல தெய்வக் கட்டமைப்பு வேறுபடுகிறது.

பிந்தைய குடியரசு மற்றும் மன்னராட்சி அமைப்புகளில் ஆரம்ப காலக் கிராம சமுதாயங்களின் தடயங்கள் காணமுடிகிறது. அதுபோலவே கிரேக்கத்திலும் கிரேக்கக் கடவுள்கள் சிலரின் செப்டார்க்கி குழுமம் (ஹெப்டார்க்கி- சப்த ராஜ்ஜியங்கள்) ஜீயஸின் சாம்ராஜ்ஜியத்துக்கு முன்பாக இருந்ததாகவும் தெரிகிறது. ட்யூடானிய தேசங்களுக்கும் இந்த புராண தெய்வ கதைகள் பொருந்தும். ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு தெய்வமும் அதி உயர்ந்த தெய்வமாக, அருகருகே வைத்துப் போற்றப்பட்டிருக்கிறார்கள். எந்தவொரு தெய்வமும் பிற எல்லா தெய்வங்களுக்கும் எல்லா நேரங்களிலும் மேலாக இருக்கவில்லை. எந்த தெய்வமும் கடைசி இடத்தில் இல்லை.

படிநிலையில் கீழடுக்கில் குறைவான சக்தியுடன் இருப்பதாக நன்கு தெரியும் கடவுள் கூட ஏதேனும் ஒரு பக்திப் பரவசமான கவியின் பாடலில் அனைத்து தெய்வங்களையும்விட மேலான இடத்தைப் பெறுபவராக இருக்கிறார். எனவே பல தெய்வக் கோட்பாடு என்று நாம் கருதுவதிலிருந்து மாறுபட்ட ஒரு வழிபாட்டுமுறையை அடையாளப்படுத்த வேறொரு துல்லியமான பெயரை நாம் கண்டு சொல்லியாகவேண்டும். இங்கு ஒவ்வொரு கடவுளும் தனியாக உயரிய நிலையை அடைந்தவர்களாகப் போற்றப்படுகிறார்கள். இதனால்தான் ஓரிறைகளின் வரிசைக் கோட்பாடு (ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு உச்ச தெய்வ வழிபாடு கதேஹீனோதேயிஸம்) அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஓரிறைகள் (ஹீனோதிஸம்) என்ற பெயரை உருவாக்கியிருக்கிறேன்.

ஓரிறைக் கோட்பாட்டுக்கு எதிர்நிலையாகப் பல ஓரிறைக் கோட்பாடு என்பது சுருக்கமாகப் புரியும்படியாக இருக்கிறது. ஆனால் அதை முறையாக விவரித்தால்தான் அது பொருத்தமான விளக்கமாக அமையும். இதுபோன்ற நுட்பமான ஆய்வுகளில் புதிய கலைச் சொற்கள் தொடர்பாக மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படுவது கடினம். அவை தவிர்க்கமுடியாதவை என்பது எனக்குத் தெரியும். ஆனால் சில நேரங்களில் அவை தவறான புரிதலுக்கு இட்டுச் சென்றுவிடவும் கூடும்.

உதாரணமாக, சிந்து நதி பற்றியும் அதில் கலக்கும் நதிகள் பற்றியும் ஒரு வேதப் பாடல் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பை உங்களுக்குச் சொல்கிறேன். அது வேத காலத்தினர் எப்படியான பூகோளப் பரப்பில் வாழ்ந்தார்கள் என்பதை மிகத் துல்லியமாக நமக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இன்றைய இந்திய பூர்விக ஆய்வாளர்கள் இந்த நதிகளை தேவதைகளாக, தெய்வங்களாகச் சொல்கிறார்கள். ஐரோப்பிய ஆய்வாளர்களும் அவற்றை தெய்வங்களாகவே சொல்கிறார்கள். ஆனால் வேத காலக் கவி சிந்து நதியையும் பிற நதிகளையும் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தியிருக்கும் பதங்களைப் பார்த்தால் அவற்றை தெய்வங்களாகக் குறிப்பிட்டிருப்பதாகத் தோன்றவில்லை. கிரேக்கர்கள் நிம்பஸ், நஜாதேஸ், மூஸஸ் எனக் குறிப்பிட்டிருக்கும் கிரேக்க நதிக் கடவுள்கள்களிலிருந்து வேறுவகையான கடவுள்களையே வேத காலத்தினர் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நதிகளுக்குப் பொருந்தும் இந்த விஷயம் வேத கால வழிபாட்டுக்கும் ஏகதேசம் அப்படியே பொருந்தும். அவையெலாம் புலன்களால் உணரப்பட்டவை, கற்பனைச் சிறகடித்துப் பறந்தவை, நன்கு தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டவை எனப் பல நிலைகளுக்கு இடையே இங்குமங்கும் ஊசலாடுபவையாகவே இருக்கின்றன. அவை பொருட்கள், மனிதர்கள், இயற்கை காரணங்கள் (நிகழ்வுகள்) என வேத கவியின் அந்தந்த நேர பக்தி மனநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. அவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று நாம் எடுத்துக் கொள்ளும்முன் பழங்கால இறையியல் பற்றிய நிபுணர் ஒருவர் சொன்னதை நினைவில் கொண்டாகவேண்டும். அவர் சொல்கிறார்: வேத கால தெய்வம் அல்லது தேவர் என்பது ஒரு செய்யுளில் புகழ்ந்து பாட எடுத்துக்கொண்டிருக்கும் கருப்பொருளுக்கு மேல் எதுவும் இல்லை. வேத கால ரிஷி அல்லது முனிவர் என்றால் ஒரு செய்யுளை எழுதியவர் என்பதற்கு மேல் எதுவும் இல்லை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *