நியூயார்க்கில் பிரடெரிக்கின் வீட்டில் தங்கியிருந்த பதினோரு பேரை கனடாவிலிருக்கும் செயிண்ட் காதரீனுக்கு அழைத்துச்சென்றார் ஹாரியட். டிசம்பர் மாதப் பிற்பகுதியில், நடுங்கும் குளிரில் கனடா வந்துசேர்ந்தனர். உணவு, தங்குமிடம், பனிக்குளிருக்கேற்ற உடை எதுவுமில்லை. அந்த முதல் பனிக்காலம் கடுமையானதாக இருந்தது. கனடாவின் காட்டுப் பகுதியில் மரம்வெட்டிப் பிழைப்பு நடத்தினர். சரியான ஆடையின்றித் குளிர் தாக்கியதால் கைகால்கள் உறைந்துபோயின, உணவின்றிப் பசியில் தவித்தனர்.
ஹாரியட் தன்னாலான வழிகளில் வேலைசெய்தும் உணவு சமைத்தும் சகோதரனுக்கும் மற்றவர்களுக்கும் உதவினார். அவர்களைப் பாதுகாக்குமாறு எந்நேரமும் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டார். அந்தப் பகுதியிலிருந்த கூட்டமைப்புகள், நண்பர்கள், நல்ல உள்ளங்களின் உதவியுடன் பனிக்காலத்தைக் கடந்தனர் தப்பிவந்தவர்கள். வேனிற்காலம் தொடங்கியதும் நிலைமை சீரடைந்தது.
இதற்கிடையே 1849 முதல் 1852 வரையில் பேட்டிசன் குடும்பத்துக்கும் எலிசா ப்ராடஸுக்கும் இடையே ரிட்டுக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் சட்டப்படி உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்த வழக்கு ஒரு பக்கம் நடந்தது. தான் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்படும் வயதை எட்டிவிட்டதாக ரிட் நம்பினார். ஆனால் வெள்ளை உரிமையாளர்களிடையே நடந்த தன்முனைப்புச் சண்டையில் சிக்கித் தவித்தார்.
1852இல் ஹாரியட் பிலடெல்ஃபியாவுக்குத் திரும்பினார். தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் மேரிலாண்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உறுதிகொண்டார். அந்த வேனிற்காலம் முழுவதும் நியூஜெர்சி மாகாணத்தின் கேப் மே என்ற பகுதியில் சமையல் வேலை செய்து பொருளீட்டினார். அதே ஆண்டில் இன்னும் ஒன்பது அடிமைகள் தப்பிக்க உதவினார். 1849இல் தப்பிச் செல்ல மனமில்லாமல் வீடு திரும்பிய ஹாரியட்டின் சகோதரர்கள் பென், ஹென்றி இருவரும் மீண்டும் மீண்டும் தப்பிக்க முயன்றாலும் அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் அடிமைத்தளைக்கு ஏற்பட்ட எதிர்ப்பினால் கிழக்குக் கடற்கரையில் பதற்றம் அதிகரித்தது. மேரிலாண்டின் அரசியல் பொருளாதார முடிவுகளைக் கேள்விகேட்ட அந்தப் பகுதியில் வசித்த சுதந்திரமான ஆப்பிரிக்கர்களை மேற்கு ஆப்பிரிக்காவில் நிறுவப்பட்ட லைபீரியா என்ற நாட்டுக்கு அனுப்பிவைக்க முயன்றனர். ஆனால் மக்கள் வெளியேற மறுத்து மேரிலாண்டின் அரசியல் பொருளாதார அதிகாரத்தில் தாங்கள் பங்கேற்க அனுமதிக்கவேண்டும் என்று போராடினார்கள். இன்னொரு புறம் தப்பியோடும் அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அடிமைத்தளை ஒழிப்பை வலியுறுத்தும் வடக்கு மாகாணங்களின்மீது எரிச்சலும் கோபமும் கொண்டன தெற்கு மாகாணங்கள். கண்காணிப்பும் தண்டனையும் அதிகமானது.
0
அடிமைகளை லைபீரியாவுக்கு அனுப்பவேண்டுமென்ற ஆலோசனையின் பின்னணிக் காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள லைபீரியாவின் வரலாறு சுவாரசியமானது. அமெரிக்கக் குடியேற்றச் சங்கம் 1816இல் ராபர்ட் ஃபின்லே என்ற வெள்ளையரால் தொடங்கப்பட்டது. குவேக்கர்களும் அடிமை உரிமையாளர்களும் இதன் உறுப்பினர்களாக இருந்தனர். அடிமை ஆப்பிரிக்கர்கள் தங்கள் விடுதலையையும் உரிமைகளையும் பெறுவதற்கான சாத்தியம் அமெரிக்காவைவிட ஆப்பிரிக்காவில்தான் அதிகம் என்ற நம்பிக்கையில் துளிர்த்த அமைப்பு.
தாய் நிலமான ஆப்பிரிக்காவில் அவர்களை மீள்குடியேற்றம் செய்யும் திட்டம் 1822 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கிய 1861ஆம் ஆண்டு வரையில் அமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் வசித்த ஆப்பிரிக்க மூதாதையர்களைக்கொண்ட 18,000க்கும் மேற்பட்டவர்கள் லைபீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சுதந்திரமான ஆப்பிரிக்கர்கள், அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், கரீபியத் தீவுகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இதில் அடங்குவர். இவர்களை அமெரிக்கோ லைபீரியர்கள் என அழைத்தனர்.
அமெரிக்கோ லைபீரியர்களின் வருகையினால் ஏற்பட்ட நன்மைகளுள் முதன்மையானது லைபீரியாவின் விடுதலை. 1847இல் ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு விடுதலையை அறிவித்த முதல் ஆப்பிரிக்கக் குடியரசு என்ற பெருமையைப் பெற்றது லைபீரியா.
0
எந்தத் தடையும் ஹாரியட்டின் உறுதியை அசைக்கமுடியவில்லை. தான் மட்டும் விடுதலை பெற்றால் போதாது, தன்னுடைய குடும்பத்தினரும் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்கவேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் டார்செஸ்டர் கோட்டத்துக்கு வந்தார். நிலத்தடி இருப்புப்பாதையின் உதவியுடனோ வேறு வழியிலோ தப்பிச் சென்றவர்கள் யாரும் தாங்கள் வாழ்ந்த பகுதிக்குத் திரும்பிவரவில்லை. சிறைப்பிடிக்கப்பட்டால் அடிமைத்தளைக்குத் திரும்பவேண்டும் என்பது ஒரு பக்கம். கடுமையான தண்டனையைப் பெறுவோம் அல்லது அடித்துக் கொல்லப்படுவோம் என்ற அச்சம் இன்னொரு பக்கம். ஆனால் ஹாரியட் இதற்கெல்லாம் பயப்படாத அஞ்சாநெஞ்சினராக இருந்தார். சொல்லப்போனால் விடுவிப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார். ஆண்டவர் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் காப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஹாரியட் நேரடியாக வழிநடத்திய விடுதலைப் பயணங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக ஆட்களைச் சேர்க்கமாட்டார். தன்னால் எத்தனை பேருக்கு உதவமுடியும் என்பதைத் துல்லியமாக ஆலோசித்து முடிவுசெய்வார். தன்னுடன் அழைத்துச்செல்ல முடியாதவர்களுக்கு வழிசொல்வார். இப்படி மொத்தம் 13 முறை வந்து கிட்டத்தட்ட 70 முதல் 80 பேர் வரையிலும் வடக்கு மாகாணங்களுக்கும் கனடாவுக்கும் செல்ல உதவினார். இதுதவிர டார்செஸ்டர் கோட்டத்தைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு எப்படித் தப்பிக்கலாம் என்ற விரிவான ஆலோசனை வழங்கினார்.
மேரிலாண்ட் மாகாணத்திலிருந்து தப்பிச் செல்பவர்களுக்குப் பல விஷயங்கள் சாதகமாக இருந்தன. அண்டை மாகாணமான பென்சில்வேனியா அடிமைத்தளை எதிர்ப்பு மாகாணம் என்பதால் அங்கே எல்லோரும் சுதந்திரமானவர்கள். வடக்கு தெற்காக அமைந்த சாலை வழியே வாணிகம் நடந்ததால் வழிநெடுக சுதந்திரமான ஆப்பிரிக்கர்களின் குடும்பங்கள் வசித்தன. இரண்டு மாகாணங்களுக்குமிடையே இருந்த நீர்வழிப் போக்குவரத்தை அடிமைகள், சுதந்திரமான ஆப்பிரிக்கர்கள் என இரு பிரிவினரும் நடத்தினர். கூடவே அடிமைகள் சில வாரங்கள் வரையில் உறவினர்களைச் சந்திக்கப் போவதோ அல்லது வேலைசெய்யாமல் ஏய்ப்பதோ வழக்கம். அப்படித் தலைமறைவாகச் சுற்றும் காலத்தில் சிலர் சட்டத்துக்குப் புறம்பாக மரம் வெட்டுவதும் வேட்டையாடுவதும் மீன்பிடிப்பதும் உண்டு. இதனால் உரிமையாளர்கள் அவர்கள் இருப்பைத் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. திரும்பிவந்ததும் கடுமையான தண்டனை கிடைக்குமென்பதும் வழக்கமான விஷயம் என்பதால் அடிமைகள் காணாமல் போனால் உரிமையாளர்கள் பதற்றமாகமாட்டார்கள்.
ஹாரியட் தப்பிச்செல்வதற்கு சனிக்கிழமைகளைத் தேர்ந்தெடுப்பார். ஞாயிறன்று நாளிதழ்கள் வராது என்பதால் ஓடிப்போனவர்கள் பற்றிய அறிவிப்பு திங்கள் பதிப்பில்தான் வெளிவரும். ஹாரியட் யாரையும் நேரில் சந்திக்கமாட்டார். குறிப்பிட்ட இடத்தில் இந்த நாளில் இத்தனை மணிக்கு வரவேண்டும் என்று தகவல் அனுப்புவார். அதுதான் எல்லோருக்கும் பாதுகாப்பானது என நம்பினார். தப்பிக்க விரும்பும் அடிமைகளின் பண்ணையிலிருந்து சுமார் 10 மைல் தூரத்தில் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுப்பார். ஒருவேளை தப்பியோடும்போது அடிமைகள் பிடிபட்டால் தான் பிடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஒரு முறை ஹாரியட்டை இடுகாட்டில் சந்தித்ததாக அடிமைத்தளையிலிருந்து தப்பித்தவர் ஒருவர் கூறினார். அடிமைகள் பண்ணையிலோ வீட்டிலோ காட்டிலோ ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இடுகாட்டில் சந்தித்தால் பார்ப்பவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாது.
இளவேனில், இலையுதிர்காலத்திலும் மக்களைக் கூட்டிப்போயிருக்கிறார் என்றாலும் இரவு நீண்டிருக்கும் பனிக்காலத்தில்தான் தப்பிக்கும் திட்டத்தைத் தீட்டுவார். இரவு நேரத்தில் பயணம்செய்து பகலில் ஓய்வெடுப்பார். மரங்களடர்ந்த காடுகளையும் சதுப்புநிலங்களையும் எண்ணற்ற கழிமுகங்களையும் சிற்றாறுகளையும் ஓடைகளையும் கொண்டது கிழக்குக் கடற்கரைப் பகுதி. அதனால் ஒளிந்துகொள்வதற்கு நிறைய இடங்கள் இருந்தன. உடன் அழைத்து வந்தவர்களை ஒளிந்துகொள்ளச் சொல்லிவிட்டு உணவும் தகவலும் சேகரிக்கச் செல்வார். ஹாரியட்டுக்கு உதவிபுரிய வழிநெடுக நம்பிக்கைக்குரிய நல்ல நண்பர்கள் இருந்தார்கள்.
குழுவை வழிநடத்துகையில் குறியீடுகள் பொதிந்த பக்திப்பாடல்களையும் வேறு பாடல்களையும் பாடுவார். அருகில் ஏதாவது ஆபத்து இருந்தால் அதைச் சுட்டிக்காட்டும் பாடல்களைப் பாடி எச்சரிப்பார். ஆபத்து விலகியதும் அதைக் குறிப்பதற்கு பாடலின் சொற்களையும் தாளத்தையும் மாற்றிப் பாடி அடுத்த இடத்துக்குப் போக வழிகாட்டுவார். உரிமையாளர்களும் அடிமைகளை தேடிப் பிடிப்பவர்களும் ஏதாவது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்களா என்பதைக் கண்காணித்துச் சொல்வதற்கும் அப்படி ஆங்காங்கே ஒட்டப்பட்ட அறிவிப்புகளைக் கிழித்தெறியவும் சுதந்திரமான ஆப்பிரிக்கர்களுக்குப் பணம் கொடுப்பார். குழுவிலுள்ள ஒவ்வொருவரும் ஈடுபாட்டோடு இருக்கவேண்டும். ஒரு தனிமனிதனின் பலவீனம் குழு முழுமைக்கும் ஆபத்தில் முடியும். எல்லோரும் உறுதியோடும் தைரியத்தோடும் செயல்படுவார்கள் என்ற திருப்தி ஏற்பட்ட பிறகு தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்குவார்.
ஒரு முறை இனி ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாது சிறிது நேரம் ஓய்வெடுக்கவேண்டும் என்றபோது துப்பாக்கியைக் காட்டி ஹாரியட் எச்சரித்ததாகப் பின்னொரு நாளில் அந்தக் குழுவிலிருந்தவர் சொன்னார். ஹாரியட் துப்பாக்கி வைத்திருந்தாரோ இல்லையோ ஒரே ஒருவர் சிக்கினாலும் குழு முழுவதும் சிறைப்பிடிக்கப்படும் அபாயம் இருந்தது. சில நேரங்களில் வயதானவரைப்போல வேடமணிந்துகொள்வார் ஹாரியட். ஒரு முறை ஹாரியட்டின் குழு வெள்ளைத் தொழிலாளர்கள் சிலரைத் தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது. பயந்து ஓடினால் சந்தேகம் ஏற்படுமென்பதால் அவர்களிடம் பேச்சுக்கொடுத்து கவனத்தைத் திசைதிருப்பி சாமர்த்தியமாகக் கடந்துபோனார்.
வேடர்களை, மாலுமிகளைப்போல வானத்தில் இருக்கும் விண்மீன்களையும் மற்ற இயற்கைக் குறியீடுகளையும் பார்த்து வழிசொல்லும் திறமையைப் பெற்றிருந்தார் ஹாரியட். இரவில் காட்டு வழியில் தனியே நடக்கும்போது கண்ணுக்குத் தெரியாத வழிகாட்டி உடன்வருவதைப்போல உணர்ந்ததாகச் சொல்வார். இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து வலிப்புநோயால் அவதிப்பட்டார். அதனால் அவருக்குத் தோன்றிய தெய்வீகக் காட்சிகள் சந்தேகத்தையும் பயத்தையும் அகற்றி ஆறுதலை அளித்தன. ஆனால் உடன் பயணம்செய்தவர்களுக்கு அவருடைய உடல்நிலை கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஹாரியட் ஆண்டவரின்மீது வைத்திருந்த அளவற்ற நம்பிக்கை அவர்களையும் தொற்றிக்கொண்டதால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்கள்.
ஹாரியட்டின் விடுதலைப் பயணங்கள் வெற்றிகரமாக முடிந்தாலும் வழியில் அவரும் குழுவினரும் எதிர்கொண்ட தடைகள் எண்ணற்றவை. துப்பாக்கி, கத்தி, சாட்டை, வேட்டைநாய்களோடு தேடிவருபவர்கள் குறித்த அச்சம் ஒரு நொடிகூட விலகவில்லை. காட்டு வழியாகவும் பனிக்காலத்திலும் நடந்துசெல்வதற்கான சரியான காலணிகளும் ஆடைகளும் இல்லாமல் அவதியுற்றார்கள். ஆற்றைக் கடக்கையில் நீச்சல் தெரியாதவர்கள் எதிர்கொண்ட சிரமங்களும் சேர்ந்துகொண்டது. நனைந்துபோன ஆடை வேகத்தை மட்டுப்படுத்தியது. அடிமைகளின் சொரசொரப்பான ஆடை உடலோடு உராய்ந்து தோலில் காயம் ஏற்படுத்தியது.
நிலத்தடி இருப்புப்பாதையின் பிலடெல்ஃபியா, வில்மிங்க்டன் நிலையங்களுக்கு வந்துசேர்ந்த அடிமைகளைப்பற்றிய குறிப்புகளின்மூலம் அவர்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. அடிமைகளின் ஆடைகள் அவர்களை எளிதில் அடையாளம் காட்டிவிடும் என்பதால் முதலில் மாற்று உடைகளையும் காலணிகளையும் தருவார்கள் புரவலர்கள். பலவீனமாக இருப்பவர்களுக்கு உணவும் நீரும் மருத்துவ உதவியும் அளிப்பார்கள். சில நேரம் மருத்துவ உதவி பலனளிக்காமல் அடிமைகள் இறந்துபோவதுமுண்டு. உள்ளூர் சங்கங்கள் பொதுமக்களிடமிருந்து நிதி வசூலித்து அவர்களின் இறுதிச்சடங்குகளை நடத்திவைக்கும்.
படகுகளிலும் கப்பல்களிலும் ஒளிந்துகொண்டு தப்பிக்கும் அடிமைகளுக்கு வேறுவிதமான பிரச்சனைகள் நேர்ந்தன. எலித் தொல்லையோடு காற்றில்லாத இடத்தில் அடைபடுவதால் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. தெற்கு மாகாணத் துறைமுகங்களில் நிற்கும் கப்பல்களின் அடித்தளத்துக்கு அதிகாரிகள் புகை போடுவார்கள். அப்போது எலிகளோடு உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் அடிமைகளும் சேர்ந்து வெளியே ஓடி வருவது நடக்கும். இரயிலில் ஏறித் தப்பிக்கலாம் என்றால் சுதந்திரமானவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை வைத்திருக்கவேண்டும். போதாக்குறைக்கு தப்பிச்செல்லும் அடிமைகளை முதலில் இரயிலில்தான் தேடுவார்கள். ஒரு முறை தப்பிப்போக முயன்ற அடிமை ஒருவர் நிலைதடுமாறி இரயில்மேடையிலிருந்து இருப்புப்பாதையில் விழுந்தபோது அவர் கால்களின்மீது இரயில் ஏறிய கொடுமை நடந்தது. இத்தனை இடையூறுகளோடு தப்பியோடும் அடிமை சட்டமும் நடைமுறையில் இருந்தாலும் பல அடிமைகள் அமெரிக்காவின் வட பகுதிக்கோ கனடாவுக்கோ சென்றுசேர்ந்தார்கள்.
1850இல் தன்னுடைய சகோதரர் மோசஸை விடுவித்து அழைத்துவந்தார் ஹாரியட். ஆனால் 1852, 1854ஆம் ஆண்டுகளில் அவர் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஆனால் ஹாரியட்டின் தொடர் முயற்சிகள் அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் எடுத்துக்காட்டாகவும் ஊக்குவிப்பாகவும் அமைந்தன.
(தொடரும்)