பல பெருந்தெய்வங்கள் (வேத மதம்)
ஒரு பெருந்தெய்வம், பல சிறு தெய்வங்கள் (கிரேக்க ரோமாபுரி மதங்கள்)
ஒற்றைப் பெருந்தெய்வம் (ஆப்ரஹாமிய மதங்கள்)
வேதங்களில் கடவுள்கள் என்று சொல்லும்வகையில் இடம்பெறும் அனைவரையும் ஏதேனும் ஒரு தரிசன, வழிபாட்டுத் தொகுப்புக்குள் கொண்டுவருவது கடினம். ஏனென்றால் இந்தக் கடவுள்கள் தொடர்பான கோட்பாடுகள் மற்றும் அவர்களைப் புகழ்ந்து பாடப்படும் ஸ்லோகங்கள் எல்லாம் எந்தவொரு முன் தீர்மானங்களுக்கும் உட்படாமல் தன்னிச்சையாக எழுந்துள்ளன. கி.மு.400 வாக்கில் வாழ்ந்த பழங்கால பிராமணிய ரிஷி எழுதியிருப்பதை இங்கு கவனத்தில் கொள்வது சரியாக இருக்கும். அவருடைய காலத்துக்கு முன்பாக வேத மரபினர் (வித்யார்த்திகள்) 1. அக்னி, 2. வாயு அல்லது இந்திரன், 3. சூரியன் என மூன்று தெய்வங்களை மட்டுமே வணங்கியிருக்கிறார்கள். அக்னி பூமியில் இருப்பவர். வாயு அல்லது இந்திரன் காற்று மற்றும் புயல் கடவுள். இவர்களின் இருப்பிடம் வளிமண்டலத்தில் இருக்கிறது. மூன்றாவதான சூரியனின் இடம் ஆகாயத்தில் இருக்கிறது.
இந்த தெய்வங்களின் முக்கியத்துவம் அல்லது பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் வெவ்வேறு பிரார்த்தனைகள் இவர்கள் முன் வைக்கப்பட்டன. ஒரு புரோகிதர் பல்வேறு யாகங்களில் பல்வேறு செயல்களைச் செய்யும்போது வெவ்வேறு பெயர்களைப் பெறுவதுபோல் இந்தப் பெயர்களை அந்த தெய்வங்கள் பெறுகிறார்கள்.
வேத காலக் கடவுள்களைப் பற்றிய மிகவும் குறுகிய பார்வை இது. எனினும். இதில் கொஞ்சம் உண்மை இருப்பதை மறுக்கமுடியாது. யாஸ்கர் என்ற அந்த ரிஷி வேதக் கடவுள்களை மண்ணுலக தெய்வங்கள், வானுலக தெய்வங்கள், பிரபஞ்ச தெய்வங்கள் எனப் பிரிக்கிறார். பூமி, வளிமண்டலம், ஆகாயம் என மூன்று மண்டலங்களில் வாழும் தெய்வங்களே இயற்கை நிகழ்வுகளில் இருக்கும் தெய்விக சக்திகளுக்குக் காரணம் என்று அந்த இந்து இறையியலாளர் சொன்னதாக இதை ஒருவர் புரிந்துகொண்டால் அவர் அறிவார்ந்த கூற்றைத் தெரிவித்திருப்பதாக நாம் அவரைப் பெரிதும் மதிக்கலாம்.
ஆனால், யாஸ்கருமே கூட தன்னுடைய வகைப்பாடானது அனைத்துக் கடவுள்களுக்கும் பொருந்தாது என்றும் சொல்கிறார். மேலும் அவர் சொல்கையில் ‘இந்த தெய்வங்கள் எல்லாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள்; எனவே அவர்களுக்கான மந்திரங்களும் அவர்கள் முன் வைக்கப்படும் பிரார்த்தனைகளும் வெவ்வேறாக இருக்கின்றன’ என்றும் சொல்கிறார்.
இது உண்மையே. இயற்கை சக்திகளின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கு வெவ்வேறு தெய்வங்களின் பெயர்களைக் கொடுப்பது என்பதே இதன் அடிப்படையாக இருக்கிறது. இந்த எண்ணற்ற பெயர்கள் எல்லாம் வெறும் சுட்டுப் பெயர்கள் மட்டுமே. ஆனால் அனைத்துக்கும் அடிப்படையானது ஒன்றே (பரம்பொருளே). உலகில் இருப்பது அந்த ஒன்று மட்டுமே என்று ஒருவர் சொல்லலாம். ஆனால் வேத கால ரிஷிகளில் பலர் இதை ஏற்கவில்லை. அவர்களுடைய பாடல்களை விழாக்களிலும் கோவில்களிலும் கேட்பவர்களில் அவர்களையும்விட மிக மிகக் குறைவானவர்களே அதை ஏற்கவும் செய்கிறார்கள்.
தெய்வம் என்பது பல வடிவம் கொண்டதாக உருவகிக்கப்பட்டுப் பல தெய்வங்களாக வழிபடப்பட்ட காலம் இருந்திருக்கிறது என்பது வேதங்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம். பல பொறுப்புகள் பல தெய்வங்களால் பகிர்ந்துகொள்ளவும்பட்டிருக்கின்றன. அனைத்துக் கடவுள்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை மிகவும் தெளிவாகத் தனித்துக் காட்டும் வகையில் எந்தப் பகுப்பும் இந்தக் காலகட்டம்வரை செய்யப்பட்டிருக்கவில்லை. அனைத்துக் கடவுள்களையும் ஒரு சில பிரதான கடவுள்களின் அடுத்த அடுக்கில் இருப்பவர்களாகவோ அனைத்துக் கடவுள்களும் ஒரே கடவுளின் (பரம்பொருளின்) கீழடங்கியவர்கள் என்றோ இந்தக் காலகட்டத்தில் சொல்லியிருக்கவில்லை.
மண்ணுலகம், ஆகாயம், சொர்க்கம் என்ற மூன்று வகைகளில் தெய்வங்களை ஆதிகால இந்திய இறையியலாளர்கள் பகுத்திருப்பதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு மண்ணுலக தெய்வங்கள் யார் என்பதை முதலில் பார்ப்போம்.
அதற்கு முன்பாக பூமி, சொர்க்கம் என இரண்டு உலகங்களை மதித்துப் போற்றிய ஆதி வழிபாட்டு அம்சம்பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் ஆதிவாசி காலம், அரை நாகரிக நிலை அல்லது முழு நாகரிக காலம் என எதை எடுத்துக் கொண்டாலும் அங்கும் இந்தப் பூவுலகம், சொர்க்கம் பற்றிய நம்பிக்கைகள் இருப்பதைப் பார்க்க முடியும். அந்நாளைய புலவர்கள் எல்லாம் அதைப் பாடியிருக்கிறார்கள். ஆரம்ப காலத் தத்துவ ஞானிகளும் அவை பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
பூவுலகம் என்பது தனியானது; சொர்க்கம் என்பது தனியானது. இரு உலகங்களையும் அடக்கி ஆளும் தெய்விக அம்சம் இருக்கிறது என்பது ஒருவகையில் புதிரான, புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயமே. அக்னி, மழை, மின்னல், சூரியன் இவற்றையெல்லாம் தெய்வங்களாகக் கருதும் கோட்பாட்டை விடவும் அது மிகவும் புதிரானது.
இன்றும் அது அப்படித்தான் இருக்கிறது. இருந்தும் அது வேதங்களில் குறிப்பிடப்படும் சொர்க்கம், மண்ணுலகம் பற்றிப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. அதேநேரம் ஆரியர்களின் புராண நம்பிக்கைகளுக்கும் நிஜ ஆதிவாசிகளின் சொர்க்கம் பற்றிய நம்பிக்கைகளுக்கும் இடையிலிருக்கும் அழுத்தமான வேறுபாட்டையும் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த வேறுபாடு மிகவும் அதிகமானது. இருந்தும் இதை விளக்குவது மிகவும் கடினம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
என் நண்பர்களில் ஒருவரான ரெவரண்ட் வில்லியம் வையட் கில் எழுதிய நூலிலிருந்து சில விஷயங்களை மேற்கோள் காட்டவிரும்புகிறேன். அவர் நம் பூமிப் பந்தைச் சுற்றிலும் கால்வாசிப் பகுதியில் வளையம் போல் அமைந்திருக்கும் பாலினீசியத் தீவுகளில் ஒன்றான மங்கயா பகுதியில் பல ஆண்டுகள் துடிப்புடன் வெற்றிகரமான மிஷனரிப் பணியாளராகச் செயல்பட்டவர். இந்தத் தீவுகள் எல்லாமே ஒரே மொழி, ஒரே மதம், ஒரே புராண நம்பிக்கைகள், ஒரே பழக்க வழக்கங்கள் கொண்டவையாகவே இருக்கின்றன. அவர் எழுதிய புத்தகத்தின் பெயர் தென் பசிஃபிக் பகுதிகளிலிருந்து புராணங்களும் பாடல்களும் (மித்ஸ் அண்ட் சாங்கஸ் ஃப்ரம் தி சவுத் பசிஃபிக்). மதம் மற்றும் புராணவியல் பற்றி ஆராயும் நபர்களுக்கு மிகவும் ஆர்வமூட்டக்கூடிய நூல்.
மங்கயா தீவைச் சேர்ந்த ஒருவர் சொன்ன கதை:
‘ஆகாயமானது உறுதியான நீல நிறக் கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் அது பூமியைத் தொட்டுவிடும் அளவுக்கு நெருங்கிவந்துவிட்டது. ஆறு அடி உயரமுள்ள தெவே மரத்தின் கிளைகளின் மீதும் ஆரோ ரூட் (மரவள்ளிக் கிழங்கு) செடியின் மீதும் படும்படியாக நெருங்கி வந்துவிட்டது. வானுக்கும் பூமிக்கும் இடையிலான இந்தக் குறுகிய இடைவெளியில் பூவுலகவாசிகள் கூனிக் குறுகி மாட்டிக்கொண்டார்கள். அவாகி பகுதியில் (பாதாள இருள் உலகம்) வசிக்கும் ரூ நம் உலகுக்கு வந்தார். பூவுலகவாசிகள் கூன் விழுந்து வாழும் இந்த நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு வானத்தைக் கொஞ்சம் மேலே தூக்கி வைக்க முயற்சி செய்தார். பல்வேறு உயரமான மரங்களின் பலமான தடிகளை, தீவின் மையப் பகுதியான ரங்கிமோதியாவில் நட்டு வானத்தை அதன் மேல் தூக்கி நிறுத்தினார். இதனால் பூமியில் இருந்தவர்கள் எல்லாம் நிமிர்ந்து நின்று எந்த இடைஞ்சலும் இன்றி நடந்து திரிய வழி பிறந்தது. இதனா ரூ கடவுளுக்கு ஆகாயந்தூக்கி என்ற பெயர் வந்தது.
மேலே தூக்கு வானத்தை ஓ ரூ கடவுளே
இடைவெளி தெளிவாக விசாலமாகட்டும்
என்று டேகா குலத்தினர் பாடுகிறார்கள்.
ஒரு நாள் முதியவரான ரூ தன்னுடைய வேலையில் ஆழ்ந்திருந்தபோது அவருடைய இங்கிதமற்ற மகன் மாவுய், என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதைப் பார்த்த ரூ கடவுள் கோபத்துடன் சொன்னார்: ‘இளைஞர்களுக்கு இங்கு என்ன பேச்சு? உன் வேலையைப் பார்த்துக் கொண்டுபோ; இல்லையென்றால் உன்னை அழித்துவிடுவேன்.’
எங்கே அழித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்றான் மகன் மாவுய்.
ரூ கடவுள் சொன்னதைச் செய்யக்கூடியவர். உடனே குள்ளமாக இருந்த மாவுயைத் தூக்கி அதி உயரத்தில் இருந்து கீழே வீசினார். கீழே விழும்போது மாவுய் ஒரு பறவையாக மாறி ஒரு காயமும் படாமல் பூமியில் இதமாக வந்து இறங்கினார். பழிவாங்கத் துடித்த மாவுய் தன்னுடைய சுய உருவுக்கு வந்த பின் ராட்சஸ உருவத்துக்கு மாறினார். தன் தந்தையிடம் ஓடிச் சென்று
ஓ ரூ கடவுளே பல உலகங்களைத் தூக்கி நிறுத்திய ஆகாயந் தூக்கியே
அதி உயரத்தில் இருக்கும் மூன்றாம் உலகுக்குப் போய்ச் சேரு
என்று சொல்லியபடியே முதியவரின் கால்களுக்கு இடையே தன் தலையை நுழைத்து முழு வலிமையையும் பயன்படுத்தி அப்பாவி ரூவைத் தூக்கி ஆகாயத்துக்கும் மேலே மேலே நீல வானம் திரும்பி வரமுடியாத அதி உயரத்துக்குத் தூக்கி எறிந்தார். எனினும் ஆகாயந்தூக்கியான ரூ கடவுளின் தலையும் தோள்களும் நட்சத்திரங்களிடையே மாட்டிக்கொண்டன. என்ன முயற்சி செய்தும் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. மாவுய் ஆகாயத்தை இவ்வளவு உயரத்தில் தூக்கி வைத்த மகிழ்ச்சியில் தன் தந்தையின் உடம்பும் கால்களும் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் அவமானகரமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தபின்னும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றார். அப்படியாக ரூ மறைந்தார்.
அவருடைய உடல் அழுகியது. எலும்புகள் அவ்வப்போது பெரும் சப்தத்துடன் பூமியை நோக்கி விழுகின்றன. பூமியில் ஏராளமான வெடிப்புகள் அதனால் ஏற்பட்டிருக்கின்றன. ரூவின் இந்த எலும்புகள் மங்கயா பள்ளத்தாக்கிலும் அத்தனை மலைகளிலும் கடலின் விளிம்புவரையில் சிதறிக் கிடக்கின்றன’.
ரூவின் எலும்புகள் என்று மங்கயா தீவினர் மாக்கல் படிவுகளைச் சொல்கிறார்கள்.
இப்போது இந்தக் கதையை எடுத்துக் கொள்வோம். சிற்சில மாறுபாடுகளுடன் பாலினீசியன் தீவுகள் முழுவதிலும் சொல்லப்படும் இந்தக் கதை முற்றிலும் முட்டாள்த்தனமானது. அல்லது இதில் ஏதேனும் அறிவார்ந்த அம்சம் இருக்கிறதா என்ன? முட்டாளத்தனம் என்று நாம் சொல்லும் இந்தக் குழந்தைத்தனமான சிந்தனை எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. மாவுய் போன்ற இளைஞர்கள் தமது பெற்றோரைவிடப் புத்திசாலிகளாகத் தம்மைத் தாமே நினைத்துக்கொண்டு அவர்களைச் சில நேரங்களில் அழிப்பதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள்.
பழங்காலத்தில் நம்பப்பட்ட இதுபோன்ற புராணக் கதைகள் எல்லாம் உலகில் அன்றாடம் அல்லது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளை எப்போதோ ஒருமுறை மட்டும் நடந்ததாகச் சொல்லுபவையே. இரவுக்கும் பகலுக்கும் நடக்கும் தினசரி மோதலானாலும் சரி… வசந்த காலத்துக்கும் மழைக்காலத்துக்குமான மோதலானாலும் சரி… இவையெல்லாம் ஏதோ சரித்திர சம்பவம் போலவே தொல் பழங்காலத்தினரால் கருதப்பட்டிருக்கின்றன. இயற்கையின் இந்த முடிவற்ற போர்களுக்குரிய சில நிகழ்வுகள், சாயல்கள் டிராய் முற்றுகைப் போர்கள் போல் நிஜத்தில் நடந்தவற்றுக்கும் சில நேரங்களில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சரித்திர நினைவுகள் தோல்வியுறும் நிலையில், உடனே கையெட்டும் தொலைவில் இருக்கும் இரவுக்கும் பகலுக்கும் வசந்தத்துக்கும் மழைக்காலத்துக்கும் இடையிலான போர்கள் தொடர்பான புராணக்கதைகளை மனித மனம் கைப்பற்றிக் கொண்டுவிடுகிறது. நவீன காலங்களில் சிறு வயதிலிருந்தே கேள்விப்பட்டிருக்கும் சில ‘நல்ல கதைகளை’ நாம் மீண்டும் மீண்டும் பிறர் சொல்லக் கேட்டிருப்போம். ‘காரிருள் அரக்கனை வென்று வீழ்த்திய கீழ் வானப் போர் வீர’னான சூரியனுடைய வீர தீர பராக்கிரமங்களையெல்லாம் இந்த வரலாற்றுக் கதைகளின் நாயகர்களுக்கும் அப்படியே கைமாற்றித் தரப்பட்டு அவர்களும் இரண்டாம் ஜூபிடர் அல்லது இரண்டாம் மார்ஸ் என்றோ ஹெர்குலியஸ் போலவோ போற்றப்பட ஆரம்பித்திருப்பார்கள்.
எனவேதான் உலகம் முழுவதுமான நாடுகளில் நம்பப்படும் ஊழிப் பெருவெள்ளம் பற்றிய இந்தக் கதையாடல்கள் எல்லாம் தமது குட்டி உலகில் வாழ்ந்த பழங்கால கிராமத்துக் கவிஞர்கள், ஆண்டுதோறும் பெய்யும் பெரும் புயல் வெள்ளங்களையும் பனி படர்ந்து சாலைகள் மூடப்படுவது ஆகியவற்றையும் பார்த்து எழுதி வைத்தவையாகவே இருக்கும் என்கிறேன். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பழங்காலக் கதைகளில் பூமியையும் வானத்தையும் இரண்டாகக் கிழிப்பதாகச் சொல்லப்பட்டதென்பது தினமும் அதிகாலையில் நாம் பார்க்கும் நிகழ்வைப் பற்றியதாகவே இருக்கும்.
காரிருள் கவிழ்ந்த இரவுகளில் பூமியானது வானத்தால் மூடப்பட்டதுபோலவே இருக்கும். இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டுமே ஒன்றாகிவிட்டதுபோல் பழங்காலத்தினருக்கு அது தோன்றியிருக்கும். அதிகாலையில் பொழுது புலரும்போது சூரியனின் பிரகாசமான கதிர்கள் மெள்ள இரவின் கறுப்புத் திரையை விலக்கும். இறுதியில் சிறிய உருவத்தில் குழந்தைபோல் மாவுய் தோன்றுவார். அது வேறொன்றுமில்லை. அதிகாலை நேர சூரியனே.
முதல் சூரியக் கதிரொளி பூமியைத் திடீரென்று வந்தடைவது என்பது மாவுய் விண்ணில் இருந்து வீசி எறியப்பட்டதுபோல் தோன்றியிருக்கும். அதன் பின் பூமியில் ஒரு பறவையைப் போல் வந்து இறங்கியிருப்பார். அதன் பின் காலை நேர வானில் பேருருவுடன் எழுந்து நின்றிருப்பார். இருள் இப்போது விரட்டப்பட்டிருக்கும். ஆகாயமானது பூமிக்கு வெகு தொலைவில் உச்சியில் தூக்கி வைக்கப்பட்டுவிட்டிருக்கும். மாவுய் அதாவது சூரியன், ஆகாயத்தை அதி உயரத்துக்கு உந்தித் தள்ளிவிட்ட மகிழ்ச்சியில் தன் வழியில் போகத் தொடங்கிவிட்டார்!
மங்காய் மொழி நமக்கு இன்னும் அதிகம் தெரியாதவரையில் மாக்கல் படிகங்கள் ஏன் ரூ வின் எலும்புகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினமே. இது தனியான கதையாக, கற்பனையாக இருந்திருக்கும். பின்னர் ரூ, மாவுய் கதையுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது நீதிபதி மேன்னிங் தொகுத்த மாவோரி குல புராணக் கதையிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டுகிறேன். இது நியூஸிலேண்டர்களின் ஆதியாகமக் கதை:
‘நமக்கு மேலே இருக்கும் ஆகாயம் (சொர்க்கம்), கீழே இருக்கும் பூமி இவையே மனிதர்களையும் சகல உயிர்களையும் ஜனிப்பித்தவை.
முன்பு ஆகாயம் பூமியிலே கலந்திருந்தது. எங்கும் இருளே நிறைந்திருந்தது.
சொர்க்கம் மற்றும் பூமியின் புத்திரர்கள் ஒளியையும் இருளையும் பகலையும் இரவையும் பிரித்தறிய முயற்சிகள் செய்தனர்.
எனவே சொர்க்கத்தின் புத்திரர்களான ரங்கிகளும் பூமியின் புத்திரர்களான பாப்பாக்களும் கலந்தாலோசித்தனர். நாம் சொர்க்கத்தையும் பூமியையும் அழிப்பதற்கு அல்லது பிரிப்பதற்கான வழியைக் கண்டடையவேண்டும் என்று தீர்மானித்தனர்.
போர்க்கடவுளான துமதேங்கா, ‘சரி அப்படியானால் இரண்டையும் அழிப்போம்’ என்று சொன்னார். ஆனால், வனங்களின் கடவுளான தானே மஹூதா, ‘வேண்டாம். அவற்றை நாம் பிரித்துவைப்போம். ஒருவர் மேலே, அதி உயரத்துக்குச் சென்று நமக்கு அந்நியமாகிப் போகட்டும். இன்னொருவர் நம்மை ஈன்றவராக நமக்கு அருகில் இருக்கட்டும்’ என்றார்.
அதன் பின் கடவுளர்களில் நால்வர், பூமியையும் ஆகாயத்தையும் பிரிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஐந்தாவது கடவுளானே ‘தானே’ முயற்சி செய்து வெற்றிகண்டார்.
பூமியும் ஆகாயமும் இப்படியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் மிகப் பெரிய புயல்கள் வீசின. காற்றின் கடவுளான தவ்ஹிரி மாதே, தன் பெற்றோரின் மீது தன் சகோதரர்கள் காட்டிய வன்மத்துக்குப் பழிவாங்கத் தீர்மானித்தார். அதன் பின்னர் மேக மூட்டமான நாட்கள் வந்தன. மழைத்துளிகள் பொழிந்தன. நிலங்கள் மூழ்கும் அளவுக்குப் பெய்தன. கடவுள்களுக்கிடையே போர் மூண்டது. போர்க்கடவுள் ’து’ மற்ற சகோதரக் கடவுள்கள் அனைவரையும் வீழ்த்தினார். புயல் கடவுள் மட்டுமே உயிர் பிழைத்தார். அவர்களுக்கிடையில் மேலும் போர் தொடர்ந்து நடந்தது. பூமி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. எனினும் சிறிதளவு நிலம் நீரில் மூழ்காமல் தப்பியது.
அதன் பின்னர் பூமியில் ஒளி அதிகரிக்கத் தொடங்கியது. ஒளி பெருகப் பெருக ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையில் ஒளிந்து வசித்த மக்களும் பெருகத் தொடங்கினர். தலைமுறை தலைமுறையாக மக்கள் பெருகி மாவுய் போட்டிகியின் காலம் வரை உலகம் வந்தது. அவர் இந்த உலகை அழித்தார்.
பின்னாட்களில் பூமிப் பெண் தன் கணவரான ஆகாய ஆணிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டார். ஆகாயக் கணவன் மீதான பூமிப் பெண்ணின் ஏக்கப் பெருமூச்சுகள் மேகங்களாக, மலை உச்சிகளில் இருந்து உருவாகி மிதக்கின்றன. பிரிவுத் துயர் தாளாத ஆகாயக் கணவனின் கண்ணீர்த் துளிகள் பூமிப் பெண்ணின் மேல் விழுகின்றன. அவையே பனித்துளிகள்’.
மவோரி குலத்தினரின் ஆதியாகமத்தில் உள்ள கதை இது.
இப்போது இந்த ஆதி மற்றும் விசித்திரமான செவி வழி மரபுக் கதைகளை ஆதிகால ஆரியக் கவிஞர்கள் (ரிஷிகள்) சொல்லியிருப்பவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
ஆகாயமும் பூமியும் பிரித்து வைக்கப்பட்டது தொடர்பாக வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. இங்கும் வலிமை வாய்ந்த தெய்வங்களால் அது செய்யப்பட்டதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ரிக்வேதம் 1:67-3-ல் ‘பூமியைத் தாங்குபவர் அக்னி. அவரே ஆகாயத்துக்கும் ஆதாரமாக இருக்கிறார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ரிக்வேதம் 10:89-4-ல் இந்திரனே ஆகாயத்தையும் பூமியையும் பிரித்துவைத்தவராகச் சொல்லப்பட்டிருக்கிறார்.
ரிக்வேதம் 9:101-15-ல் சோமனே இந்தச் சாதனையைச் செய்ததாகப் போற்றப்பட்டிருக்கிறார்.
ரிக்வேதம் 3:31-12-ல் வேறு கடவுள்கள் இதைச் செய்ததாகப் புகழப்பட்டிருக்கிறார்கள்.
ஆத்ரேய பிராமணம் சொல்கிறது: ‘ஆகாயமும் பூமியுமான இரண்டு உலகங்கள் ஒரு காலத்தில் இணைந்திருந்தன. அதன் பின் அவை பிரிந்தன. அதன் பின் மழையும் பெய்யவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. பஞ்ச பூதங்கள் தமக்குள் மோதிக்கொண்டன. பூமியையும் ஆகாயத்தையும் தெய்வங்கள் ஒன்று சேர்த்தனர். இணைந்தவர்கள் தெய்வங்களுக்குத் திருமணம் செய்துவைத்தனர்’.
இந்தச் செய்யுள்களின் அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம்.
முதலாவதாக ஆகாயமும் பூமியும் ஒன்றாக இருந்திருக்கின்றன. அதன் பின் பிரிந்திருக்கின்றன. அவர்கள் அப்படிப் பிரிந்திருந்தபோது இயற்கை சக்திகளுக்கிடையே பெரும் போர் நடந்திருக்கிறது. மழையும் பெய்யவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. இறுதியில் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே சமரசம் செய்துவைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் மாபெரும் திருமணம் நடந்தேறியிருக்கிறது.
கிரேக்கத்திலும் இத்தாலியிலும் இருப்பவர்களுக்கும் கிரேக்க ரோமானிய இலக்கியங்களைப் படித்தவர்களுக்கும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையிலான திருமணம் பற்றி இதேபோல் பேசப்பட்டிருப்பது நன்கு தெரிந்திருக்கும். வசந்த காலங்கள் தோறும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே சமரசம் உருவாகி இந்தக் கலப்பு (திருமணம்) நடப்பது பற்றி அவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதும் தெரிந்திருக்கும். மழைக்காலத்திலும் இந்தத் திருமணம் நடக்கும் என்பதாகச் சொல்லியிருப்பதும் தெரியும்.
ஆகாயமும் பூமியும் பிரிந்து கிடந்ததாகச் சொல்லப்படும் விஷயமானது வெளிச்சம் இல்லாத நேரத்தையும் இரவுகளில் ஆகாயத்தையும் பூமியையும் பிரித்தறிய முடியாத நேரத்தையும் குறிப்பிடுகின்றன. சூரிய உதயத்தையொட்டித் தெரியவரும் காட்சிகள் நீலத் திரை மெள்ள விரிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஹோமரின் பாடல்களில் ‘பூமியானது தெய்வங்களின் தாய்; நட்சத்திரங்கள் மின்னும் ஆகாயத்தின் மனைவி’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகாயம் என்பது உயிர்களின் தந்தை என்று சொல்லப்பட்டிருக்கிறது. யூரிபிடெஸ் ஆகாயம் மற்றும் பூமியின் திருமணம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
வலிமையான ஆகாயம் ஜோவின் தந்தை
அவரே மனிதர்களையும் தெய்வங்களையும் படைத்தவர்
மழை மற்றும் பனித்துளிகளைப் பெற்று பூமியானது
அழியும் உயிர்களைப் பிறப்பிக்கிறது
உணவை உற்பத்தி செய்கிறது; விலங்குகளை உருவாக்குகிறது
எனவே அந்த பூமியை அனைத்துக்கும் தாய் என்று சொல்வதில் தவறே இல்லை.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் யூரிபிடெஸ் தனது ஆசிரியரும் தத்துவமேதையுமான அனசோகோரஸிடம் இருந்து இந்தக் கோட்பாட்டைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அனசோகோரஸின் விரிவுரைகளை யூரிபிடெஸ் பலமுறை கேட்டிருக்கிறார் என்று ஹலிகார்னசஸின் டயோனிசிஸ் குறிப்பிட்டிருக்கிறார். ‘முதலில் எல்லாம் ஒன்றாக இருந்தன. அதன் பின் பிரிந்தன’ என்பது அனசோகோரஸின் கூற்று. பின்னாளில் சாக்ரடீஸுடனும் யூரிபிடெஸ் இருந்திருக்கிறார். அப்போது அவருக்கு இந்தக் கோட்பாட்டின் மீது சந்தேகம் வந்திருக்கிறது. எனவே அவர் மெலானிப்பி சொன்னதாக, பழங்காலக் கதையொன்றைச் சொல்கிறார்.
இந்தக் கற்பிதக் கதை என்னுடையது அல்ல. என் அம்மா சொன்னார். ஆரம்பத்தில் பூமியும் ஆகாயமும் ஒன்றாகவே இருந்தன. அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டதும் உலகில் மரங்கள், பறவைகள், விலங்குகள் மீன்கள், மனிதர்கள் என அனைத்து உயிர்களும் தோன்றின.
ஆகாயமும் பூமியும் ஆதியிலே சேர்ந்திருந்தன; அதன் பின் பிரிக்கப்பட்டன; அதன் பின் பூமியும் ஆகாயமும் இணைக்கப்பட்டன என்ற இந்தக் கதையானது கிரேக்கம், இந்தியா, பாலினீஷியத் தீவுகள் என எல்லா இடங்களிலும் இருப்பதைப் பார்க்கிறோம்.
வேதங்களில் ஆகாயம் பூமி பற்றிச் சொல்லியிருப்பதை மேலும் பார்ப்போம்.
ஒரே அம்சத்தின் இரண்டு வடிவங்கள் என்பதாகவே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பூமி தன்னைப் பற்றித் தானே சொல்வதாகவும் பாடல்கள் உள்ளன. ‘முள் இல்லாமல், அனைத்து உயிர்களும் வாழ முடியும்படியாக மிகுந்த கருணையுடன் தான் இருப்பது’ பற்றி பூமியே (பூமாதாவே) சொல்கிறது. அதேநேரம் ஒரு காலத்தில் தஸ்யுக்கள் அதாவது ஆகாயமே அதி வலிமை வாய்ந்த தெய்வமாக இருந்திருக்கிறது என்றும் சொல்கின்றன. த்யாவாபிருத்வியாயு என்று இருவரும் சேர்ந்தே எழுந்தருளும்படி சில பாடல்கள் பிரார்த்தனை செய்கின்றன. த்யா என்றால் ஆகாயம். பிருத்வி என்றால் பூமி.
இந்த தெய்வங்களின் அடைமொழிகளைப் பார்த்தால் ஆகாயம் மற்றும் பூமியின் பெளதிக அம்சங்களைக் குறிப்பதாக இருப்பதும் தெரியவருகிறது. உரு – விசாலம். உருவ்யாகஸ் – விசாலமாக விரிந்தது. துரந்தே – எட்ட முடியாத எல்லைகள். கபீர – ஆழமான. கிரிதவத் – நெய் சொரிதல்; மதுதுகா – தேன் தருதல். பாயாஸ்வத் – பால் நிறைந்த. பூரிரேதஸ்- விதை நிறைந்த.
வேறு சில அடைமொழிகள் எல்லாம் சில மானுட, அதி மானுட சக்திகளைக் குறிப்பவையாக இருக்கின்றன. அசஸ்கத் – களைப்படையாத; அகாரா- அழிவில்லாத; அத்ருத் – காயப்படுத்தாத; ஏமாற்றாத. ப்ரகேதஸ் – தெய்விகம். பிதா மாதா – அப்பா, அம்மா. தேவபுத்ர – தெய்வங்களைப் புத்திரர்களைக் கொண்டிருத்தல். ரித விருத் மற்றும் ரிதவத் – ரிதங்களைக் காப்பவர். எது சத்யமோ எவை அழிவற்ற விதிகளோ அவற்றைக் காப்பவர்.
வேதங்களில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், லெளகிக உலகியல் விஷயங்களிலிருந்து மெள்ள ஆன்மிகத் தளத்துக்கும் உணர்ச்சிமய நிலையில் இருந்து உணர்வுகளைக் கடந்த நிலைக்கும் மனித நிலையிலிருந்து தேவ நிலைக்கும் அங்கிருந்து தெய்வ நிலைக்குமான முன்னேற்றத்தைப் பார்க்கமுடியும்.
நம்முடைய பார்வையிலென்றால் ஆகாயமும் பூமியும் தெளிவாகப் பார்க்க முடிந்த, நன்கு வரையறுக்கப்பட்ட விஷயங்கள் என்று சொல்லலாம். ஆனால் பழங்காலக் கவிகள் தமது சிந்தனைகளுக்கு உண்மையாக இருந்திருக்கிறார்கள். ஆகாயத்தையும் பூமியையும் அவர்களால் பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால், அவற்றின் முழுமையை அவர்கள் தரிசித்ததில்லை என்று நம்பினார்கள். கண்ணுக்குத் தெரியும் தெளிவான காட்சியையும் தாண்டி இவற்றுக்கு வேறு பரிமாணம் உண்டு என்று நினைத்தார்கள். ஒரு கல், மரம் அல்லது நாய் போன்று வரையறுக்கப்பட்டதாகப் பார்க்காமல் எல்லையற்றதாக முழுவதும் பார்த்துவிட முடியாததாக முழுவதும் அறிந்துவிடமுடியாததாகப் பார்த்தனர். அவை வலிமையானவை; ஆசிகள் வழங்கக்கூடியவை. அதே நேரம் தாக்கி, வேதனைக்கு உள்ளாக்கும் வலிமையும் கொண்டவை என்று நினைத்தார்கள்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருப்பவையெல்லாமே அந்த தெய்வங்களுக்குச் சொந்தமானவை; அவர்களின் ஆளுகைக்குட்பட்டவை; அவர்களுடைய சாம்ராஜ்ஜியம் என்று நினைத்தனர். தெய்வங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர்களாகவும் அனைத்தையும் ஆறத்தழுவியவர்களாகவும் நினைத்தனர். அந்த தெய்வங்களே அனைத்தையும் உருவாக்கியிருக்கின்றன. தேவர்கள் அல்லது ஒளி மிகுந்தவர்கள், சூரியன், உஷஸ், அக்னி, காற்று, மழை எல்லாமே அவர்களுடையவை. எல்லாமே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஜனித்தவை. அப்படியாக பூமி தாயாகவும் ஆகாயம் தந்தையாகவும் ஆனார்கள்.
அப்படியானால் இந்த ஆகாய, பூமிக் கடவுள்கள் எங்கே? இவர்கள் கடவுளென்றால் எந்த அர்த்தத்தில் கடவுள்கள்? நாம் இப்போது கடவுள் என்று யாரைச் சொல்கிறோமே அந்த அர்த்தத்திலா? நம் பார்வையிலான கடவுள் என்பது ஏன் இடம்பெறவில்லை? கிரேக்கர்களின் பார்வையில் பல கடவுள்கள் இருக்கின்றனரே? இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கிரேக்க மரபில் பல கடவுள்கள் என்று சொல்வதும் வேதங்களில் பல கடவுள்கள் என்று சொல்வதும் முற்றிலும் மாறுபட்ட அறிவார்ந்த சிந்தனைகளின் விளைவாக உருவாகியிருக்கின்றன.
பழங்காலப் புராணங்களில் கடவுளாகச் சொல்லப்பட்டிருப்பதாகப் புரிந்துகொண்டு சொல்பவையெல்லாம் தனியாக ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர்கள் அல்ல. அவர் இப்படியானவர் அப்படியானவர்; இதைச் செய்தார் அதைச் செய்தார் என்றெல்லாம் சொல்ல முடிந்தவர்கள் அல்ல.
தேவர் என்பதை நாம் கடவுள் என்று மொழிபெயர்க்கிறோம். அது ஒரு பண்புப் பெயர் மட்டுமே. பூமி, ஆகாயம், சூரியன், அதிகாலை, நட்சத்திரங்கள், கடல் என எல்லாமும் பொதுவாகக் கொண்டிருக்கும் ஓர் உயரிய அம்சத்தைக் குறிப்பிடும் சொல் மட்டுமே. அதாவது ஒளிமயமானது என்று பொருள். ஆரம்ப காலத்தில் கடவுள் என்றால் இந்தப் பிரகாசமான அம்சங்கள் அனைத்திலும் பொதுவாக இருக்கும் அம்சங்களைக் கொண்ட ஒரு கருத்தாக்கத்தையே குறித்திருக்கிறது. அதாவது கடவுள் என்றால் தயார் நிலையில் பயன்படுத்த முடிந்த நிலையில் இருந்த இறுக்கமான கருத்துரு ஒன்று அல்ல. வானம், பூமி மற்றும் பிற பிரகாசமான பொருட்களில் இருந்து அவற்றையும் தாண்டி வளர்ந்துகொண்டே சென்ற ஒரு கருத்தாக்கம்.
விண்ணும் மண்ணும் அழிவற்றவையாக, தெய்விக அம்சம் நிறைந்த தாய் தந்தையாக, இயற்கை விதிகளைக் காப்பவர்களாக ஆக்கப்பட்டபின்னர் மக்களின் மத நம்பிக்கைகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள் என்றும் சொல்லமுடியாது. உண்மை அதற்கு நேர் மாறானதுதான். பிர துடிப்பான தனித்தன்மைகள் கொண்ட, இஷ்ட தெய்வங்கள் உருவாகத் தொடங்கியபின்னர் வேத கால ரிஷிகள், இந்த சொர்க்கத்தையும் பூமியையும் படைத்தவர் யார்? என்ற கேள்வியை வெளிப்படையாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்பு ஆகாயமும் பூமியும் என்று எதைச் சொன்னார்களோ அதை அல்ல; அன்றாடம் காணும் விண்ணும் மண்ணும் என்பதாக இயற்கை அல்லது பிரபஞ்சத்தின் அம்சம் என்பதாக அது புரிந்துகொள்ளப்பட்டிருந்தது.
கடவுள்களிலேயே அதி சிறந்த சிருஷ்டிகர்த்தாவாக இருந்தவர் ஆகாயம் மற்றும் பூமி என்ற இரண்டு அற்புதமானவற்றைப் படைத்தார். அதிலிருந்து அனைத்தும் உருவாகின. இந்த ஒளிமயமான இரண்டையும் தன் ஞானத்தால் அறிந்துகொண்டு அழிவற்று நிலைத்து நிற்கத் தேவையான அனைத்தையும் அவர் வழங்கினார் என்று வேத ரிஷி ஓரிடத்தில் சொல்கிறார்.
விண்ணையும் மண்ணையும் படைத்த அவர் மிகச் சிறந்த சிருஷ்டிகர்த்தா. இந்த இரண்டையும் விசாலமானவையாகவும் ஆழமானவையாகவும் அந்தரத்தில் அற்புதமாக நிலைநிறுத்தியிருக்கிறார் என்று இன்னொரு ஸ்லோகம் சொல்கிறது.
பிற பல்வேறு சாதனைகள் எல்லாம் இந்திரனால் செய்யப்பட்டதாகப் பின்னாளில் சொல்லப்பட்டதுபோலவே ஆகாயம், பூமி ஆகியவற்றைப் படைத்தவரும் அவரே என்றும் சொல்லப்பட்டன. கிரேக்க ஜூபிடர் போல் அல்லது மழைக்கடவுள் போல்தான் இந்திரனை முதலில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தோலை இழுத்து விரிப்பதுபோல் விண்ணையும் மண்ணையும் விரியச் செய்தவர்; தன் கைகளில் விண்ணையும் மண்ணையும் தாங்கி நிற்பவர்; தன்னைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கு விண்ணுலக வாசத்தையும் மண்ணுலக வாசத்தையும் தருபவர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறார். காலப்போக்கில் விண்ணையும் மண்ணையும் படைத்தவரும் அவரே என்று போற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.
அனைத்து தெய்வங்களின் தாய் தந்தையாக, குறிப்பாக இந்திரனின் பெற்றோராக, விண்ணையும் மண்ணையும் வேறொரு இடத்தில் புகழ்ந்து சொல்லியிருப்பது நினைவுக்கு வந்ததும் ‘முந்தைய ரிஷிகள் எல்லாம் உன் மகிமையை முழுவதும் உணர்ந்தாரில்லை. உன் உடம்பிலிருந்தே உன் தாய் தந்தையரை உருவாக்கியதும் நீயேயன்றோ’ என்று சொல்லிவிட்டிருக்கிறார்.
இப்படியான சாதனையைச் செய்ய முடிந்த கடவுளுக்கு அதன் பின் எதைச் செய்வதுதான் கடினமாக இருந்திருக்கும்? விண்ணையும் மண்ணையும்விட இந்திரனே உயர்ந்தவர் என்ற இந்தக் கருத்தை வேறொரு ரிஷி, ‘ஆகாயத்தையும் பூமியையும்விட இந்திரன் உயர்ந்தவர்; அவை இரண்டும் ஒன்று சேர்த்தாலும் இந்திரனில் பாதிக்குத்தான் இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘தெய்வாம்சம் கொண்ட தஸ்யுக்கள் இந்திரன் முன் அடிபணிந்தனர். அகன்று விரிந்த பூமியும் (பூமாதாவும்) தலை தாழ்த்தி வணங்கியது’ என்று ஒருவர் போற்றியிருக்கிறார்.
‘இந்திரன் தோன்றியதும் அவருடைய கோபத்துக்கு அஞ்சி தஸ்யுக்கள் நடுங்கினர்; பூமி நடுங்கியது’ என்று இன்னொருவர் சொல்லியிருக்கிறார்.
ஒரு கோணத்தில் பார்த்தால் ஆகாயமும் பூமியும் மாபெரும் தெய்வங்கள். அனைத்துக்கும் அவர்களே பெற்றோர். எனவே அனைத்துக் கடவுளர்களுக்கும் அதாவது இந்திரனுக்கும் அவர்களே தாய் தந்தை.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் சர்வ வல்லமை கொண்டவர்களாகச் சொல்லப்படும் எல்லா கடவுளருமேதான் விண்ணையும் மண்ணையும் படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் விண்ணையும் மண்ணையும் விட உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. அப்படியாகக் குழந்தையானது தந்தையைவிடப் பெரிதாகி தந்தைக்கே தந்தையாகிவிட்டது. இந்திரனைப் போலவே பல கடவுள்கள் விண்ணையும் மண்ணையும் படைத்ததாகச் சொல்லப்படுகிறார்கள்.
ஒரு ரிக்வேதப் பாடல் சோமன் மற்றும் புஷன் விண்ணையும் மண்ணையும் சிருஷ்டித்ததாகச் சொல்கிறது. இவர்கள் அப்படியொன்றும் முக்கியமான கடவுளர்கள் அல்ல. இன்னொரு பாடல் ஹிரண்யகர்ப்பத்தில் இருந்து இவை தோன்றியதாகச் சொல்கிறது. தாத்ரி அல்லது விஷ்வகர்மா இந்த உலகைப் படைத்ததாக இன்னொரு பாடல் சொல்கிறது. வேறொரு பாடல் மித்ரன், சாவித்ரி (சூரியனின் பிற பெயர்கள்) விண்ணையும் மண்ணையும் படைத்ததாகச் சொல்கிறது. சில பாடல்களில் வருணனே இதைச் செய்ததாகப் போற்றப்படுகிறார்.
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் இந்தக் கடவுளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அல்லது தேவர்கள் எல்லாம் எவ்வளவு சுதந்தரமாக, நெகிழ்வாகப் போற்றப்பட்டிருக்கிறார்கள் பாருங்கள். இந்தக் குழப்பமான பல தெய்வக் கோட்பாட்டு மரபில் எவ்வளவு சரளமாக ஒரு நேரத்தில் ஒருவர் சர்வ வல்லமை படைத்தவராகவும் இன்னொரு நேரத்தில் இன்னொருவர் சர்வ வல்லமை படைத்தவராகவும் மதித்துப் போற்றப்பட்டிருக்கிறார்கள்.
கிரேக்க மதங்களில் நாம் காணும் பல தெய்வக் கோட்பாடு, யூத மதங்களில் காணும் ஓரிறைக் கொள்கை ஆகியவற்றிலிருந்து வேத கால மதம் வேறுபடும் மிக முக்கியமான புள்ளி இது. வேதங்கள் நமக்கு வேறு எதையுமே கற்றுத் தரவில்லை என்று சொன்னால்கூட கிரேக்கத்திலும் ரோமாபுரியிலும் நாம் பார்க்கும் நன்கு வரையறுக்கப்பட்ட பல தெய்வக் கோட்பாட்டுக் காலகட்டத்துக்கு முன்னதாக சர்வ வல்லமை கொண்ட பல ஓரிறைகள் கொண்ட தொகுப்பான ஹீனோதீஸிய காலகட்டம் பற்றி ஆராய வேதங்கள் குறித்த ஆய்வு மிகவும் அவசியமே.
வேதச் செய்யுள்கள் எல்லாம் இன்றைய நம் கவிதை ரசனையின்படி சிறந்தவையாக, ஆழமானவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை நமக்குப் பல உண்மைகளைக் கற்றுத் தரக்கூடியவையாக இருக்கின்றன. வேத கால மதத்தின் பின்புலத்தில் விண்ணையும் மண்ணையும் எடுத்துக்கொண்டால் அவை ஒரு காலகட்டத்தில் தெய்வமாகவே போற்றப்பட்டிருக்கின்றன. அதன் பின் இளமையும் துடிப்பும் மிகுந்த கடவுள்கள் தோன்றியதும் முந்தையவர்களின் முக்கியத்துவம் குறைந்து போய்விட்டன. கடவுள்கள் எப்படி உருவாகிறார்கள்… எப்படிப் பின்னடைவைச் சந்திக்கிறார்கள் என்பது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவின் இந்த வேத காலம் தவிர வேறு எதுதான் நமக்கு எதையேனும் கற்றுத் தரமுடியும்?
எல்லாவற்றையும் கடந்த, எல்லையற்ற தெய்வாம்சமானது எப்படி மனிதர்களின் மனதுக்கு நெருக்கமாகக் கொண்டுவரப்படுவதற்காகப் பல்வேறு பெயர்கள் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படியான பல பெயர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் பயனற்றுப் போய்விடவே பெயரற்ற கடவுளே மனித மனதின் எல்லையற்ற ஏக்கங்களுக்கும் தேடல்களுக்கும் விடையாகக் கிடைத்திருக்கிறார் என்பதை வேத காலம் பற்றிய ஆய்வே நமக்குத் தெளிவாகப் புரியவைக்க முடியும்.
(தொடரும்)