போயுமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனீஸ், மௌரியப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கத் தூதராக இந்தியாவிற்கு வருகை தந்தார். சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியா, சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி உள்ளிட்டவை குறித்து இண்டிகா நூலில் எழுதியுள்ளார்.
இந்த நூல் முழுமையாக கிடைக்காவிட்டாலும் ஸ்ட்ராபோ, அரியான், டியோடோரஸ் சிக்குலஸ் போன்ற பிற்கால கிரேக்க-ரோம அறிஞர்களின் மேற்கோள்கள் வழியாக அதன் உள்ளடக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
இயற்கை குறித்த விழிப்புணர்வு பண்டைய காலம் தொட்டே இந்தியாவில் இருந்துள்ளதாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்குகளைப் பாதுகாக்க இந்தியர்கள் பயன்படுத்திய வழிமுறைகளை மெகஸ்தனீஸ் ஆச்சரியத்துடன் விவரித்துள்ளார்.
மௌரியப் பேரரசில் விலங்குகளைப் பாதுகாக்க அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவான காடுகளையும் பேரரசர் வேட்டையாடும் காடுகளையும் இவர்கள் கண்காணித்து, விலங்குகளுக்கு எந்தவிதமான தீங்கும் நேராதபடி பார்த்துக்கொண்டனர்.
அரசின் முன் அனுமதியுடன் மட்டுமே வேட்டையாட முடியும் என்கிற நிலை இருந்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த சில விலங்குகளை, குறிப்பிட்ட காலத்தில் வேட்டையாடிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் வழியாக விலங்குகளின் அழிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியர்களால் சில விலங்குகள் புனிதமாகக் கருதப்பட்டதால் அவற்றுக்கான பாதுகாப்பு இயல்பாகவே உறுதிசெய்யப்பட்டிருந்தது. குறிப்பாக மாடுகளைக் கொல்லும் செயல் என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்துள்ளது. யுத்தங்களிலும் திருவிழாக்களிலும் யானைகள் பயன்படுத்தப்பட்டதால், அவற்றைப் பாதுகாக்கப் பிரத்யேகமாக ஒரு துறை செயல்பட்டுள்ளது. காடுகளில் பிடிக்கப்பட்ட யானைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, மருத்துவப் பராமரிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சில காடுகளைப் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அரசு வரையறுத்திருந்ததாக மெகஸ்தனீஸ் குறிப்படுகிறார். அங்குள்ள எந்தவொரு உயிரினத்துக்கும் யாரும் தீங்கு விளைவிக்கக்கூடாது என்கிற விதிமுறை அமலில் இருந்துள்ளது.
இண்டிகாவில் இடம்பெற்றிருந்த பல அதிசயக் கதைகளை வரலாற்றாய்வாளா்கள் நிராகரித்துள்ளனர். ஒற்றைக் கொம்புடன் மானைப் போன்ற தலையுடைய குதிரைகள், பெரிய பாம்புகள் நிரம்பிய ஆறுகள், பின்நோக்கித் திரும்பிய கால்களுடன் ஒவ்வொரு காலிலும் தலா எட்டு விரல்களுடன் காணப்படும் மனிதர்கள், நாய் தலையைக்கொண்ட மனிதர்கள், வடமேற்கு மலைகளில் தங்கத்தைத் தோண்டியெடுக்கும் எறும்புகள் என இக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் நம்பகத்தன்மைகொண்ட வரலாற்று உண்மைகளாக அணுகப்படுவதில்லை.
எனினும் சில வரலாற்றுக் குறிப்புகளில் இவை தொடர்ந்து இடம்பெறுகின்றன. கற்பனைகள், ஊகங்கள் அல்லது பிற தேசத்தவரை ஆச்சரியப்படுத்தும் வகையிலான விவரிப்புகள் என்றே இவற்றைக் கருதவேண்டியுள்ளது.
மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்தரின் அமைச்சராகக் கௌடில்யர் இருந்தாக நம்பப்படுகிறது. இவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் அர்த்த சாஸ்திரம் என்கிற நூலில் இயற்கை வரலாறு குறித்துப் பல அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
காடு வளர்ப்புப் பணிகள், தாவரங்களைப் பாதுகாக்கும் முறைகள் போன்ற அறிவுறுத்தல்களும் காடுகளைச் செல்வமாகக் கருதும் பார்வையும் அதில் இடம்பெற்றுள்ளன. ஏனெனில் அரசின் முக்கிய வருமான ஆதாரங்களுள் ஒன்றாகக் காடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற விளைபொருட்கள் இருந்துள்ளன.
காடுகளை நிர்வகிக்கும் பொறுப்பை ’சமஹர்த்தா’ எனப்படும் அதிகாரி மேற்கொள்வார் என்றும், வருவாய் ஈட்டப்படும் முக்கியப் பகுதியாக காடுகள் இருந்துள்ளன என்றும், அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசு, யானை உள்ளிட்ட விலங்குகளும் தாவரங்களும் அடங்கிய பிரதேசம் என்பதே `காடு’ என்கிற சொல்லுக்கான அர்த்தம் என்ற விளக்கம் அதில் இடம்பெற்றுள்ளது (அ.சா. 2.6.6)
ஒரு புதிய அரசாட்சியை நிறுவும்போது குடியிருப்புகள் இல்லாத நிலங்களிலும் வேளாண்மைக்கு உதவாத நிலங்களிலும், புதிய காடுகளை அமைக்கத் திட்டமிடவேண்டும் என அர்த்தசாஸ்திரத்தின் பூமிச்சித்ர விதானம் அத்தியாயம் கூறுகிறது (அ.சா. 2.2). மேலும், புதியதோர் கிராமத்தை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் எல்லைப் பகுதியில் காடொன்று இருக்கவேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது (அ.சா. 2.1.3).
பொதுப் பயன்பாட்டிற்கான காடுகளைத் தரிசு நிலங்களில் அமைக்கப்பதற்கான அவசியம் குறித்தும் அர்த்தசாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது. அரசர் மற்றும் மக்களின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட காடுகள் இவற்றில் அடங்கும். இன்றைய காலகட்டத்தின் பாதுகாக்கப்பட்ட காடுகள் அல்லது உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றுக்கு நிகரானதாக இவற்றைக் கருதலாம்.
அதுமட்டுமல்லாமல், தபோவனம் (துறவிகள் வசிக்கும் காடு), பிரம்ம-சோமாரண்யம் (வேதங்களைப் பயிலும் பிராமணர்களின் வசிப்பிடம்) எனப் பிற வகையான காடுகளும் அப்போது இருந்துள்ளன. உயிரியல் பூங்காக்கள் ஒரு க்ரோஷம் (சுமார் 3.66 கி.மீ.) பரப்பளவில் அமைந்திருக்கவேண்டும் என்கிற விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு வன வளப் பாதுகாப்புப் பணிகள் கொடுக்கப்படவேண்டும் என அர்த்தசாஸ்திரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடவி, ஆடவிகா ஆகிய சொற்கள் காடுகளில் வாழும் பழங்குடியினரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சமஹர்த்தாவின் கீழ் செயல்பட்ட குப்யாத்யக்ஷர் என்கிற அதிகாரி, காடுகளிலும் மரங்களிலும் இருந்து பெறப்படும் விளைபொருட்களை வைத்துப் பயனுள்ள பண்டங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் (அ.சா. 2.17.2).
காடுகளில் அமைந்திருந்த இந்தத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை ஆயுதகாராதயக்ஷர் (ஆயுதக்கூட அலுவலர்) என்பவர் மேற்பார்வையிட்டுள்ளார் (அ.சா. 2.18.20). பெரும்பாலான ஆயுதங்கள் இத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டதால், இவை இயங்குவதற்கான செயல்முறைகளை இந்த அலுவலர் நன்கு அறிந்திருக்க வேண்டியிருந்தது.
குப்யாத்யக்ஷருக்குக் கீழ் பணியாற்றிய வனபாலர்கள் என்கிற அதிகாரிகள் காடுகளையும், தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருட்களையும் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டிருந்த இவர்களுக்காக மிகப்பெரிய தொகையை அரசு செலவிட்டுள்ளது.
சொந்தப் பயன்பாட்டிற்காக முன் அனுமதியுடன் காடுகளில் இருந்த மரங்களை வெட்ட விரும்பிய நபர்களுக்குத் ’தேயம்’ (கட்டாய கட்டணம்) விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைச் செலுத்தாமலோ அல்லது தவறான முறையில் மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டாலோ, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு ’அத்யயம்’ (தண்டனை) விதிக்கப்பட்டுள்ளது.
பேரழிவுக் காலங்களில் (வெள்ளம், வறட்சி, விலங்குகள் மற்றும் கொள்ளையர்களால் தாக்கப்படுதல்) தேயம் மற்றும் அத்யயம் ஆகியவற்றுக்கு விலக்கப்பட்டுள்ளது (அ.சா. 2.17.3).
காடுகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகத் தனியாக ஒரு துறை செயல்பட்டுள்ளதாகவும், அவை பொதுச் சொத்தாக இருந்துள்ளதாகவும் தோன்றுகிறது. மேலும், அந்தக் காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மிகப்பெரிய அளவில் காடுகள் இருந்துள்ளதையும் அவற்றின் மீது அரசர் அல்லது அரசு நிர்வாகத்திற்கு முழுமையான உரிமை இருந்துள்ளதையும், காடுகள் மற்றும் அதன் விளைபொருட்கள் தொடர்பாக கௌடில்யர் அளிக்கும் விரிவான விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
மரங்கள், செடிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முக்கியமான விளைபொருட்களின் (குப்யவர்கம்) பட்டியலை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது. சில விளைபொருட்களுக்காகப் பிரத்யேகமான காடுகள் (dravyavana) உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வனவியல் மற்றும் அது சார்ந்த பணிகள் மிகவும் பழமையான காலத்திலேயே தோன்றியுள்ளதையும், கௌடில்யர் காலத்தில் அவை அதிகப்படியான வளர்ச்சியை எட்டியதையும் அறிய முடிகிறது.
மௌரியப் பேரரசில் காடுகளைப் பாதுகாக்கும் வகையிலான விதிமுறைகளும், அவற்றை நிர்வகிப்பதற்கான தெளிவான கொள்கைகளும் வகுக்கப்பட்டு கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
நீளமான விட்டத்தைக் கொண்ட மூங்கில் மற்றும் நாணல் வகைகளின் (வேணு வர்க்கம்) பட்டியலை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது (அ.சா. 2.17.2). சில வனவிலங்குகளின் தோல்களை வீட்டிலோ அல்லது பிற தேவைகளுக்கோ பயன்படுத்த, அவற்றை எப்படியெல்லாம் உரித்தெடுக்கவேண்டும் என்கிற விளக்கங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இறந்த வனவிலங்குகளின் எலும்புகள் (அஸ்தி), பித்தம் (பித்த), நரம்புகள் (ஸ்நாயு), கண்கள் (அக்ஷி), பற்கள் (தந்த), கொம்புகள் (ஸ்ரிங்க), நகங்கள் (குர), வால்கள் (புச்ச) ஆகியவை குப்யாத்யக்ஷரின் கண்காணிப்பின் கீழ் சேகரிக்கப்பட்டுள்ளன (அ.சா. 2.17.13). சேகரிக்கப்பட்ட வன வளங்களைச் சேமிக்க நகரப் பகுதிகளில் பிரத்யேகமான கூடம் (குப்யக்ரஹம்) அமைக்கப்பட்டிருந்தது. சன்னிதாட்டா எனப்படும் சேமிப்புக் கிடங்குப் பொறுப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இந்தக் கூடம் செயல்பட்டுள்ளது (அ.சா. 2.5.1).
`பொருட்களைத் தரும் காடுகள், யானைக் காடுகள், பாசன அமைப்புகள், சுரங்கங்கள் ஆகியவற்றை அரசன் பாதுகாக்கவேண்டும்; அவை பழங்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவற்றின் உருவாக்கம் இடையில் தடைபட்டிருக்கலாம். இருப்பினும் புதிய காடுகளையும் தொழிற்சாலைகளையும் உருவாக்க அரசன் முயற்சி செய்யவேண்டும்’ என்று காடுகளின் முக்கியத்துவம் பற்றி அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், உயிரியல் சமூகத்தின் நிலைத்த வாழ்வை உறுதி செய்யக் காடுகள் அவசியம் என்கிற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
த்ரவ்யவன – பொருட்களைத் தரும் காடுகள், ஹஸ்திவன – யானைக் காடுகள் எனக் காடுகளை இரு வகையாக கௌடில்யர் வகைப்படுத்தியுள்ளார். யானைக் காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக இருந்திருக்கக்கூடும்.
தனது நாட்டின் எல்லைப் பகுதிகளில் யானைக் காடுகளை உருவாக்க ஓர் அரசன் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பகுதிகள், நதிக்கரைகள், ஏரிக்கரைகள், சதுப்புநிலங்கள் ஆகியவற்றில் யானைக்காடுகளை உருவாக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது (அ.சா. 2.2.7).
இவற்றில் இருந்த யானைகளைப் பாதுகாக்கும் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வனக்காவலர்கள் (அடவியாரக்ஷ) ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தக் காடுகள் நாகவனாத்யக்ஷர் என்பவரின் பொறுப்பின் கீழ் இருந்துள்ளன. யானைகளுக்கான பயிற்சி மற்றும் பராமரிப்புப் பணிகளின் பொறுப்பாளராக ஹஸ்தியத்யக்ஷர் என்பவர் செயல்பட்டுள்ளார். அரசனின் யானைகளைப் பயிற்றுவிப்பதும், அவற்றின் உடல்நலனைப் பேணுவதும் இவரது கடமைகளாகும்.
`யானைகளைப் பொருத்தே அரசனின் வெற்றிகள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்று அர்த்தசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும் (அ.சா. 2.2.13).
யானைக் காடுகளில் இருந்து வருமானம் ஈட்ட முடியவில்லை என்றாலும், போர்களுக்காக யானைகளின் தேவை இருந்ததால் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்துள்ளது. எனவே பொருட்களைத் தரும் காடுகள் (த்ரவ்யவன) மற்றும் யானைக் காடுகள் (ஹஸ்திவன) ஆகிய இரண்டும் அரசின் சொத்துகளாக இருந்திருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
மரங்களையும், காடுகளையும் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்துக் கௌடில்யர் நேரடியாக எதுவும் குறிப்பிடவில்லை. எனினும், மரங்கள் மற்றும் அதன் கிளைகள், கனிகள், செடிகள், கொடிகள் ஆகியவற்றுக்குச் சேதம் விளைவிக்கும் செயல்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
காடுகளுக்குத் தீ வைப்பவனைத் தீயிலிட்டுக் கொளுத்தவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் கூறுகிறது (அ.சா. 4.11.20). காடுகளைப் பாதுகாக்க முயலும் ஓர் அரசின் நோக்கத்திற்கான வலுவான எடுத்துக்காட்டு இதுவாகும்.
நகரங்களிலும் அதனை ஒட்டியுள்ள பூங்காக்களிலும் இருக்கும் பூக்களையும், பழங்களையும் தரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் வெட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்களுக்கு ஆறு பணா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறிய கிளைகள் வெட்டப்பட்டால் பன்னிரண்டு பணாவும், பெரிய கிளைகள் வெட்டப்பட்டால் இருபத்து நான்கு பணாவும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.
மரக்காம்புகளை வெட்டுவதும், மரங்களை வேரோடு பிடுங்குவதும் கடுமையான குற்றங்களாகக் கருதப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. வேண்டுமென்றும், அறியாமலும் வன வளங்களுக்கு மக்களால் நேரக்கூடிய சேதங்களைத் தடுக்கும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காடுகளுக்குத் தீவைத்தல், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல், அறிவியல் விழிப்புணர்வு இல்லாத செயல்களில் ஈடுபடுதல், போன்றவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
ஒரு தேசத்தை நிர்வகிப்பதற்கான திறமை கௌடில்யரிடம் இருந்துள்ளது. காடுகளையும் அதன் வளங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையை நல்லாட்சிக்கான முக்கிய அளவுகோலாக அவர் முன்னிறுத்தினார். காட்டு வளங்களை முறையாகச் சேகரிப்பதும், காடுகளைப் பலவிதமான பயன்பாட்டிற்கு உட்படுத்துவதும் இதில் அடங்கும்.
இயற்கையின் கூறுகளான காடுகள், மரங்கள், நீர் வளங்கள் ஆகியவை உயிரினங்களின் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிப்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆரோக்கியமான இயற்கைச் சூழலில் மக்களை வாழச்செய்தல், காடுகளில் இருந்து விளைபொருட்களைப் பெறுதல், அவற்றின் வழியாக அரசை வளப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களை முன்வைத்து, அனுபவத்தின் அடிப்படையில் அனைத்துவிதமான காடுகளையும் நிர்வகிப்பதில் கவனம் செலுத்தினார்.
0
மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக்காலம் தொடர்பான ஆதாரங்களுள் மிகவும் முக்கியமானவையாக அவரது பிரகடனங்கள் கருதப்படுகின்றன. பௌத்த மதத்தைத் தழுவிய பிறகு, தனது ஆட்சியில் நீதி, கருணை, தர்மம் இருக்கும்படி அசோகர் பார்த்துக்கொண்டார். போயுமு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அவரது பிரகடனங்கள் அத்தகைய நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாறைகளிலும், பாறைத் தூண்களிலும் பிராமி, கரோஷ்தி மொழிகளில் பொறிக்கப்பட்ட இந்தப் பிரகடனங்களின் அர்த்தங்களை 1838ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிரின்செப் என்ற ஆங்கிலேய அதிகாரி கண்டறிந்தார். அதன்பிறகே இவற்றின் வரலாற்று முக்கியத்துவம் உலகிற்குத் தெரிய வந்தது.
அசோகரின் பிரகடனங்களில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பாக இடம்பெற்றுள்ள குறிப்புகளில், அன்றைய காலகட்டத்தின் பசுமைச் சூழல், உயிரினங்களின் மதிப்பு போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாறைப் பிரகடனம் எண் 1இல், தம்மத்தைப் (தர்மத்தைப்) பின்பற்றும் மக்கள் விலங்குகளைக் கொன்று சாப்பிடும் பழக்கத்தைக் கைவிடவேண்டும் என்று அசோகர் கூறுகிறார். விலங்குகளைப் பரிசளிக்கும் நடைமுறையும், அவற்றைக் கொல்லும் செயல்களும் குறையவேண்டும் என்பதும், அஹிம்சை வழியைப் பின்பற்றி உயிர்களின் மதிப்பு உணரப்படவேண்டும் என்பதும் இந்தப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேட்டையாடப்படுவதில் இருந்து சில உயிரினங்களுக்கு விலக்களிப்பதாகவும், அவற்றைப் பாதுகாப்பது அரசின் கடமையாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாறைப் பிரகடனம் எண் 2இல் அனைத்து ஜீவராசிகளும் இன்பமடைய வேண்டும் என்பதே தம்மத்தின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் துக்கமின்றி வாழும் உரிமை கொண்டவை என்கிற அசோகரின் உயரிய பார்வை இதில் வெளிப்பட்டுள்ளது.
மேலும், ’எனது தேசத்திலும், பிற தேசங்களிலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன’ என்று அசோகர் இதில் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் ஓர் அரசால் விலங்குகளுக்காக முன்னெடுக்கப்பட்ட முதல் மருத்துவமனைத் திட்டமாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் விலங்குகளின் நலனைப் பேணுவது அரசின் கடமையாகியுள்ளது.
பாறைப் பிரகடனம் எண் 5இல், அசோகர் காலத்து மௌரியப் பேரரசில் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகளான `தம்ம மஹாமாத்ரர்கள்’ பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பராமரித்தல், பாதுகாத்தல், காயங்களைப் போக்குதல் உள்ளிட்ட செயல்களின் மூலம் விலங்குகளின் நலன்களைப் பேணுவது இந்த அதிகாரிகளின் கடமையாகக் கூறப்படுகிறது.
பாறைப் பிரகடனம் எண் 7 மற்றும் 8இல் நீர், கிணறுகள், மரங்கள், பசுமை வழித்தடங்கள் ஆகியவை குறித்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மரங்கள் வளர்ப்பிலும், பொதுமக்களின் நலனிலும், அரசின் தலையீடு இருந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது. சூழலியல் பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பாக இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாறைத் தூண் பிரகடனம் எண் 7 இல், அனைத்து உயிரினங்களின் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்; நன்னெறி எதுவாயினும் அது அனைத்து உயிரினங்களின் நலன்கள் மீதும் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ’தம்மம்’ என்பது உயிரினங்களின் பராமரிப்பு மனித குணநலத்தோடு இணைந்தது, என்கிற கருத்தாக்கம் இதில் நிறுவப்பட்டுள்ளது.
(தொடரும்)