தமிழ்ப் பண்பாட்டில் பண்டைய காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் அரச சமயங்களாகக் கோலோட்சி வந்தன. நாளடைவில் இரு சமயங்களுக்கும் இடையே ஆங்காங்கே பிணக்குகளும் தோன்றி வளர்ந்தன.
சைவ சமயத்தில் இருந்த குறைபாடுகளைக் களைந்து இராமலிங்க அடிகளார், சைவ சமயக் கோட்பாடுகளை உள்வாங்கி ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்றை நிறுவி சமயப் பணிகளை ஆற்றி வந்தார்.
இராமலிங்க அடிகளார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் கடவுளாக அம்பலவாணரையே முன்நிறுத்தினார். குருவாக திருஞானசம்பந்தரை வழிபட்டார். வேதமாக திருவாசகத்தை ஓதினார். ஒழுக்கமாக சீவ காருண்யத்தைப் பின்பற்றினார்.
அதனால்தான் வேதாசலனாரும் அருட்பா மருட்பா வாதத்தில் இராமலிங்க அடிகளாருக்கு ஆதரவாக வாதாடினார். மற்றபடி சைவ சமயத்தை எங்கும் வேதாசலனார் மறுக்கவும் வெறுக்கவும் இல்லை என்று அவரின் நூல்கள் வாயிலாக நாம் நன்கு அறிய இயலும்.
வேதாசலனார் இளமைக் காலம் முதலே தமிழின் சமய நூல்களை ஆழமாகக் கற்றுணர்ந்தார். அவற்றுள் சைவ சமய உண்மைகளை எடுத்துரைக்கும் திருமுறை நூல்களையும், சைவ சித்தாந்த சாத்திர நூல்களையும் விரும்பிக் கற்றார்.
தமிழ் மொழி நூல்கள் சமய நூல்களைப் பின்பற்றியே பெரும்பாலும் இருந்தமையால், வேதாசலனார் இலக்கியக் கல்வியை சமயக் கல்வியோடு பொருத்தி அழகோடு கற்று அதனைத் தம் வாழ்விலும் பிற்பற்றி வந்தார்.
வேதாசலனார் சென்னைக் கிறித்தவக் கல்லூரி ஆசிரியர் பணி ஏற்ற காலத்திற்கு முன்பாகவே சோமசுந்தர நாயக்கருடன் இணைந்து சமய உண்மைகளைப் பல இடங்களில் உரையாற்றி வந்தார். தமிழாசிரியர் பணி ஏற்ற பிறகு கோடை விடுமுறைக் காலங்களில் மறைகளைப் போதிக்கும் பணியை விருப்பமுடன் ஆற்றி வந்தார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற இடங்களுக்கும் சென்று சைவ சமயம் பற்றியும் செந்தமிழின் திறம் பற்றியும் நல்லுரைகளை ஆற்றினார்.
இந்தியாவின் வட மாநிலங்களில் ஆரிய சமாசம், பிரம்ம சமாசம் போன்ற இயக்கங்கள் தோன்றி சமயத்தைப் பாதுகாக்கும் பணிகளை வேதாசலனார் ஆவலுடன் கேட்டறிந்தார். விவேகானந்தர் போன்றோர் இந்து சமய உண்மைகளை அயல்நாடுகளுக்குச் சென்று பரப்பி வந்தமையைக் கண்ணுற்று, நாமும் நம் சமயத்திற்காக இதுபோன்று இயக்கம் காண வேண்டும் என்று பெரு விருப்பம் கொண்டு இயங்கினார்.
சென்னையில் பல இடங்களில் தமிழின் திறத்தினை வேதாசலனார் உரைகள் வாயிலாகவும் நூலாராய்ச்சிகள் வாயிலாகவும் செய்து வந்தாலும், தமிழகம் தழுவி இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணி வந்தார்.
சைவ சமயத்தின் மேன்மையைப் பறைசாற்ற தனியே ஓர் இயக்கம் தொடங்க ஆவலுற்றார். சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற பெயரில் பேரியக்கம் தொடங்க எண்ணி வந்தார். சைவ சமயத்திற்கு என்று தனி இயக்கம் தொடங்கினால், யாரை அந்த இயக்கத்தின் தலைவராக இருக்கச் செய்யலாம் என்று எண்ணிய வேளையில் மனதில் தோன்றிய ஓர் பெயர் ஞானியாரடிகள்.
திருக்கோவிலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தமிழும் வடமொழியும் நிரம்பக் கற்றுப் பண்பால், மொழியால் உயர்ந்த இடத்தில் வணங்கும் நிலையில் வீற்றிருந்தார்.
மே 18, 1905ஆம் நாள் அன்று திருப்பாதிரிப்புலியூர் அடைந்து ஞானியாரடிகளின் அன்பைப் பெற வேதாசலனார் முயன்றார். வேதாசலனாரின் தமிழ்ப்பணிகளை ஏற்கனவே கேள்வியுற்ற ஞானியாரடிகள், அவரை விருப்புடன் வரவேற்று அன்பு செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஞானியாரடிகளின் அழைப்பின் பேரில் பலமுறை விடுமுறைக் காலங்களில் திருப்பாதிரிப்புலியூர் சென்று வேதாசலனார் உரையாற்றினார்.
ஜூலை 7, 1905ஆம் ஆண்டு ஞானியாரடிகள் அழைப்பின் பேரில் திருக்கோவிலூர் ஆதீனம் சென்று ‘திருச்சிற்றம்பல விளக்கம்’ என்ற தலைப்பில் நல்லதொரு உரையினை வேதாசலனார் வழங்கினார். வேதாசலனாரின் உரையைக் கேட்ட ஞானியாரடிகளும் கூட்டத்தினரும் மகிழ்ந்திருந்த வேளையில், உரையின் நிறைவில் சைவ சித்தாந்த சமாசம் அமைக்க தவத்திரு ஞானியாரடிகள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். வேதாசலனாரின் அன்பு வேண்டுதலை மறுப்பேதும் கூறாமல் ஏற்ற ஞானியாரடிகள் சமாசம் தொடங்க அனுமதி வழங்கினார்.
தவத்திரு ஞானியாரடிகள் தலைமையில் சைவ சித்தாந்த சமாசப் பணிகளை வேதாசலனார் செயலராக இருந்து சிறப்புடன் செய்து வந்தார். சைவ சித்தாந்த மகா சமாசத்தின் கிளைகள் தமிழகம் எங்கும் பல இடங்களில் தோற்றம் பெற்றன.
சைவ சித்தாந்த மகா சமாசத்தின் கிளைகளாக சென்னையில் திருவருட்பிரகாச சபை, மெய்கண்ட சித்தாந்த சபை ஆகியன பணியாற்றின.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திரிசிரபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் இந்த சமாசத்தின் கிளைகள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்தன. வேதாசலனார் இந்தக் கிளைகளுக்கு விடுமுறை நாள்களில் பயணம் செய்து உரை நிகழ்த்தி வந்தார்.
சைவ சித்தாந்த சமாசத்தின் பணிகளுக்காக வேதாசலனார் தமிழகம் முழுவதும் பயணங்கள் செய்து உரை நிகழ்த்தி நிதி திரட்டி சமாசத்தை நன்கு வளர்த்தார்.
1906ஆம் ஆண்டு சைவ சித்தாந்த சமாசத்தின் முதலாமாண்டு நிகழ்வைச் சிறப்பாக நடத்த வேதாசலனார் பெருமுயற்சிகள் எடுத்தார். சைவ சமயத்தின் தலைமை இடமாகத் திகழும் தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் முதலாமாண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. சிதம்பரம் நகரமே விழாக் கோலம் பூண்டது. சைவ சித்தாந்த மகா சமாசத்தின் நிகழ்வில் தமிழகம் முழுமையும் திரளாக மக்கள் கலந்துகொண்டனர் என்று வேதாசலனார் தம் நாட்குறிப்புகளிலும் பதிவு செய்துள்ளார்.
சைவ சித்தாந்த மகா சமாசத்தின் இரண்டாம் ஆண்டு நிகழ்வையும் வேதாசலனார் சிதம்பரத்தில் சிறப்பாக நடத்தி பெரும் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்.
மூன்றாம் ஆண்டு விழா நாகப்பட்டினம் வெளிப்பாளையம் சபையில் சிறப்பாக நடத்திட பல்வேறு முயற்சிகளை முன்னின்று நடத்தி பொருளுதவிகளைத் திரட்டினார். சைவ சித்தாந்த மகா சமாசத்தின் ஆண்டு விழாக்கள் ஒவ்வோராண்டும் மூன்று நாட்கள் நடத்திட வேதாசலனார் திட்டங்கள் வகுத்து செயலாற்றினார்.
வேதாசலனாரின் பெரும் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சைவ சித்தாந்த மகா சமாசம், தமிழ்நாடு மட்டுமின்றி கடல் கடந்தும் பிற நாடுகளில் சிறப்பாக இயங்கியது. இதைக் கண்டு வேதாசலனரார் மகிழ்ந்தார். தமிழகம் முழுமையும் பயணம் செய்து தமிழ்ப் பணியும் சமயப் பணியும் செய்வதைத் தம் கடமையாக எண்ணி பெரும் யாத்திரைகளை மேற்கொண்டு தமிழ்ப் பணியாற்றி, சைவ சமயப் பணியும் ஆற்றினார்.
(தொடரும்)