Skip to content
Home » இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #5 – இந்திய பேரரசுகளும் விலங்குகளும்

குப்தர்கள் காலம் (பொ.யு.பி 320 – பொ.யு.பி 550)

குப்தப் பேரரசின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொற்காலமாகத் திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் கலை, இலக்கியம், மதம் மற்றும் இயற்கையுடனான மனிதனின் உறவுமுறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டின. குப்தர்கள் ஆட்சியின்போது வனவிலங்குப் பாதுகாப்பு தொடர்பான எண்ணக்கருவும் சட்டமுறையும் மௌரியர்களின் வழியைப் பின்பற்றியே இருந்துள்ளது. பசு, யானை, புலி, மயில் ஆகிய விலங்குகள் கலைகளிலும் இலக்கியங்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்தன.

குப்தர்கள் காலத்தில் இயற்றப்பட்ட தர்மசாஸ்திரங்களும் புராணங்களும் இயற்கையைப் பாதுகாக்கும் செயலை மனிதனுக்கான கடமையாக முன்மொழிந்தன. கிராமிய சூழல்களின் உயிரோட்டமாக புனிதக்காடுகள் (Sacred Groves) இருந்தன. வரலாற்றுச் சான்றுகளும் இலக்கிய நூல்களும் அந்தக் காலகட்டத்தின் காடுகள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றைப் பதிவு செய்துள்ளன.

விலங்குகளைப் புனிதமாகப் புராணங்கள் கருதியதாலும் பக்தி இயக்கத்தின் வளர்ச்சியாலும் பசு, யானை, நாகம் உள்ளிட்ட உயிரினங்கள் பாதுகாப்பு அந்தஸ்தைப் பெற்றன. ஆசிரமங்கள் மற்றும் கோவில்களின் நிலங்களில் பாதுகாக்கப்பட்ட முறையில் விலங்குகள் வளர்க்கப்பட்டன. ஜைனமும் பௌத்தமும் அஹிம்சையை வலியுறுத்தியதால் விலங்குகள் கொல்லப்படுவதும், வேட்டையாடப்படுவதும் வெகுவாகக் குறைந்தன. மனு ஸ்மிருதி, யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதி போன்ற நூல்களில் விலங்குகளைக் கொல்வது குறித்த சட்டவிதிகள் இருந்தன.

அரச குடும்பத்தினருக்கும், மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் வேட்டையாடுவதற்கான உரிமை இயல்பாகவே இருந்துள்ளது. பொதுமக்களுக்கு மட்டும் வேட்டையாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வேட்டைக்காடுகள் இருந்துள்ளன. எனினும் மௌரியப் பேரரசைப் போலில்லாமல் காடுகளை குப்த அரசு நிர்வகித்ததற்கான நேரடி ஆதாரங்கள் குறைவாகவே கிடைக்கப்பெற்றுள்ளன.

குப்தர்கள் காலத்தில் மதுரா, சாஞ்சி, அஜந்தா உள்ளிட்ட இடங்களில் உருவாக்கப்பட்ட சிற்பங்களிலும் தீட்டப்பட்ட ஓவியங்களிலும் யானை, மான், சிங்கம் உள்ளிட்ட விலங்குகளும் பறவைகளும் இடம்பெற்றுள்ளன. விலங்குகளுக்கான முக்கியத்துவம் சமய ரீதியாக மட்டுமல்லாமல் கலையிலும் பிரதிபலித்ததை இவை வெளிப்படுத்துகின்றன.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிகழ்காலத்தில் பல்லுயிர் இழப்பை உலகம் எதிர்கொள்கிறது. சுமார் ஒரு மில்லியன் எண்ணிக்கையிலான இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதால், வலுவான சுற்றுச்சூழல் உள்ளடக்கம் கொண்ட கவிதைகள் பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைப்போன்ற சுற்றுச்சூழல் கவிதைகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த காளிதாசர் இயற்றியுள்ளார்.

கோடைக்காலம், மழைக்காலம், இலையுதிர் காலம், உறைபனிக்காலம், குளிர்காலம், வசந்த காலம் என ஆறு பருவங்களில் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களை காளிதாசரின் ரிதுசம்ஹாரம் விவரிக்கிறது. பூக்கள், தாவரங்கள், விலங்குகள், கற்கள், ஆறுகள், மலைகள், நட்சத்திரங்கள், மழை, வானவில், காற்று, சூரியன், சந்திரன் என உயிருள்ள மற்றும் உயிரற்ற விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெவ்வேறு பருவங்களில் விலங்குகளுக்கு ஏற்படும் அவலங்களையும் தங்களுக்குள் ஆதரவளிக்க உள்ளுணர்வுடன் அவை ஒன்றிணையும் முறைகளையும் விவரிக்கும்போது, பச்சாதாபம் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் கவிஞராக காளிதாசர் மிளிர்கிறார். அவருடைய எழுத்துகள் வழியாக வரித்தலை வாத்துகள் மற்றும் சாம்பல் வாத்துகளின் இடப்பெயர்ச்சி மிகவும் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் அழிவில் இருந்து பூமியைக் காப்பதே கவிதையின் செயல்பாடு என்று ஜெர்மன் தத்துவவாதி மார்ட்டின் ஹைடெகர் கருதினார். காளிதாசரின் கவிதை இந்தக் கருத்தை மெய்ப்பிக்கிறது.

முகலாயர்கள் காலம் (பொ.யு.பி 1526 – பொ.யு.பி 1857)

முகலாயர்கள் ஆட்சிக்காலத்தின்போது இந்தியாவின் இயற்கை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவானது. இது தேசத்தின் கலை, கலாசாரம், இயற்கை வளங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்ட காலகட்டமாகும். முகலாயர்களின் மரபணுக்களில் இயற்கை மீதான காதல் இயல்பாகவே இருந்துள்ளது. முகலாயப் பேரரசர்களின் வாழ்க்கை வரலாறு வழியாகவும், அரசவையில் இருந்த நபர்களால் எழுதப்பட்ட நூல்கள் மூலமாகவும், இயற்கை மேல் அவர்களுக்கு இருந்த ஆர்வம் நமக்குத் தெரிய வருகிறது.

பாபரின் சுயசரிதையான துஸுக்-இ-பாபுரி, குல்பதன் பேகம் எழுதிய ஹுமாயூன்-நாமா, அபுல் ஃபாசலின் அக்பர் நாமா மற்றும் ஐன்-இ-அக்பரி உள்ளிட்ட வரலாற்று நூல்கள் முகலாயர்கள் காலகட்டத்திற்கான இலக்கிய ஆதாரங்களில் முதன்மையானவை. பாரசீக, துருக்கிய மற்றும் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட அந்தக் காலகட்டத்து நூல்கள் அனைத்தும், முகலாயப் பேரரசர்களின் வாழ்க்கை, ஆட்சி நிர்வாகம், சமூகப் பழக்கவழக்கங்கள், மத நடைமுறைகள் போன்றவை குறித்த மதிப்புமிக்கத் தகவல்களை வழங்குகின்றன.

 பாபர் (பொ.யு.பி 1526-1530)

1526இல் பானிபட் போரில் வெற்றிபெற்ற பாபர், அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் அவர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் அங்கிருந்த மிருகங்கள், தாவரங்கள் போன்றவற்றை மிக அழகான குறிப்புகளாக துஸுக்-இ-பாபுரியில் தொகுத்துள்ளார். ஹிந்துஸ்தானின் கருப்பொருள் களஞ்சியம் உருவாக அதுவே முதன்மையான காரணமாயிற்று.

பாபரின் எழுத்துக்களில் இருந்த உண்மையும் நுணுக்கமும் அவரது விஞ்ஞானப் பார்வையை வெளிப்படுத்துவதாகவே இருந்துள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நுணுக்கமான பார்வையின் வழியாக விஷயங்களை அணுகுவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். போருக்குச் சென்றால்கூட அப்படித்தான். ஒரு முறை கங்கையைக் கடக்கும்போது கண்ட கருப்பு வெள்ளை மைனாவைப் பற்றி அவர் விளக்கியிருப்பதை அதற்கான உதாரணமாகக் கூறலாம்.

 ‘ஹிந்துஸ்தான் என்பது ஒரு விசித்திரமான தேசமாகும். நமது தேசத்துடன் ஒப்பிடும்போது இது வேறொரு உலகம்போலத் தெரிகிறது’ என இந்தியாவைப் பற்றி பாபர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்த ஊரைப் பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்ததால், இந்தியாவின் தாவரங்களும் விலங்குகளும் அவற்றிலிருந்து வேறுபட்டிருந்ததை அவரால் உணர முடிந்தது. அதுவே உண்மையும்கூட! பாபரும் அவரது மத்திய ஆசிய சகாக்களும் அதுவரை அறிந்திடாதப் பல வகையான தாவரங்களாலும் விலங்குகளாலும் இந்தியத் துணைக்கண்டம் நிரம்பியிருந்தது.

1526இல் தொடங்கி இந்தியாவில் பார்த்த தாவரங்களையும் விலங்குகளையும் மிகச் சிறப்பான முறையில் அவர் பதிவுசெய்துள்ளார். ஒவ்வொரு உயிரினத்தையும் வெகு சிரத்தையோடு விவரித்ததுடன் அவற்றின் இருப்பிடம், தன்மை, இறைச்சியின் சுவை ஆகியவை குறித்தும் விளக்கமாக எழுதியுள்ளார். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, முகலாயப் பேரரசர் அக்பர் உத்தரவின் கீழ் துஸுக்-இ-பாபுரி பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, புகழ்பெற்ற ஓவியர்களால் வரையப்பட்ட விளக்கப் படங்களுடன் ’பாபர் நாமா’ என்ற பெயரில் வெளியானது.

அக்பருக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாபர் நாமாவில், முகலாய அரசவை ஓவியர்களின் கூட்டு முயற்சியில் உருவான ஓவியங்கள் இடம்பெற்றன. அந்த வகையில் இயற்கையை மிகச்சிறந்த முறையில் காட்சிப்படுத்திய ஓவியர்களில் ஒருவரான மன்சூர், இந்தியாவில் காணப்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் நுணுக்கமாக வரைந்து பழகியதன் மூலம் ஒரு குறுகிய காலகட்டத்திலேயே தலைசிறந்த ஓவியராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அவருடன் பாரசீகத்திலிருந்து வந்திருந்த ஃபருக் பெக் போன்றோரும் ஓவியங்கள் வரையும் பணியில் இணைந்துகொண்டனர்.

தென்னை மரம் குறித்து பாபர் எழுதியவை: ‘அரேபியர்களால் ’நர்ஜில்’ எனத் தென்னை அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தான் மக்கள் இதை ‘நளியார்’ என அழைக்கின்றனர்; பொதுமக்களிடையே நிலவும் தவறான உச்சரிப்பாக இது இருக்கலாம். இந்தத் தென்னையின் கனியையே ‘இந்திய வால்நட்’ எனக் கூறுவர்; இதிலிருந்து கரண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பெரிதாக இருப்பவை ‘கிச்சக்’ இசைக்கருவியைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் பனைமரத்தை ஒத்திருக்கும். ஆனால் தென்னங் கிளைகளில் இலைகள் அதிகம்; இலைகளுக்கு அதிக ஒளி உண்டு. தேங்காயின் மேல்பகுதியில் பச்சைத் தோல் காணப்படும்; இது வால்நட்டின் பச்சை உறையைப்போல் உள்ளது. ஆனால் தேங்காயின் பச்சைத்தோல் நார்ச்சத்து நிறைந்தது. இந்த நார்களிலிருந்து படகுகளிலும் கப்பல்களிலும் பயன்படும் கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன; மேலும், படகுகளின் உடல் பாகங்களை இணைப்பதற்கான நாரும் இதிலிருந்தே தயாராகிறது. நாரை அகற்றிய பின்பு, தேங்காயில் முக்கோண வடிவில் அமைந்துள்ள மூன்று துளைகள் வெளிப்படுகின்றன — இரண்டு உறுதியானவை, ஒன்று மென்மையானது. அந்த மென்மையான துளையை சிறிது அழுத்தினால் எளிதில் துளைக்க முடியும். தேங்காய் உறையும் முன்பு அதற்குள் ஒரு திரவம் இருக்கும். ஊசி போன்ற ஒன்றால் துளையிட்டு அந்தத் திரவத்தைக் குடிக்கலாம். அதன் சுவை மோசமாக இல்லை — அது உருகிய ஈச்சம் பழம் பன்னீர் போன்ற சுவையுடன் இருக்கிறது.’

விலங்குகளைப் பற்றி பாபர் நாமாவில் குறிப்பிட்டதாவது,

யானை: பாபர் கூற்றின்படி, கல்பி பிரதேசத்தின் எல்லையிலும் அதன் கிழக்குப் பகுதியிலும் யானைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இது உயரிய அறிவைக்கொண்ட விலங்காகும். மனிதர்கள் சொல்வதைக் புரிந்துகொள்ளும். ஒரு யானை நூறு ஆட்கள் இழுக்கும் வண்டியை இழுக்கவல்லது. ஆனால் இதற்கான உணவுத்தேவை மிகவும் அதிகம் – இரண்டு ஒட்டகங்கள் உண்ணும் அளவுக்கு ஒரு யானை சாப்பிடும்.

குரங்குகள்: பல வகையான குரங்குகளை பாபர் குறிப்பிட்டுள்ளார். சிறிய வால், வெள்ளை முகத்துடன் இருக்கும் மஞ்சள் நிறக் குரங்கானது பயிற்சி அளிக்கக்கூடியது. மற்றொன்று (லங்கூர்) வெண்மையான முடி, கருப்பு முகம் மற்றும் நீண்ட வாலை உடையது. இதில் ஒரு வகை, தீவுகளில் வாழ்கின்றது; அதன் உடலின் வண்ணம் நீலமும் அல்ல, மஞ்சளும் அல்ல – ஆனால் அதன் ஆண் உறுப்பு எப்போதும் எழுச்சியுடன் இருக்கிறது.

கிளிகள்: பல வகையான கிளிகளை பாபர் விவரித்துள்ளார். சொல்லித் தராததை கிளிகள் ஒருபோதும் சொல்லாது என்று பாபர் நினைத்திருந்தார். ஆனால் ‘மூட்டையைத் திற சுவாசிக்க முடியவில்லை’ என்று கூண்டுக்குள் இருந்த ஒரு கிளி சொன்னதாக பாபரின் நண்பர் அபூல் காஸிமிடம் சிலர் கூறியது, அவரது எண்ணத்தை மாற்றியுள்ளது.

அஜுடண்ட் கொக்கு: நதிக்கரைகள் மற்றும் நீர்ப்பகுதிகளில் வாழும். இதன் சிறகுகள் சராசரி மனிதனின் உயரத்திற்குச் சமம். தலையிலும் கழுத்திலும் வெறுமை, மார்பில் வெள்ளை நிறம். காபூலில் இருந்த ஒரு அஜுடண்ட் கொக்கு ஓர் ஆறு அடுக்குக் காலணியையும் ஒரு முழு கோழியையும் விழுங்கியதாக பாபர் பதிவு செய்துள்ளார்.

வௌவால்: பசு குட்டியின் முகம் போன்ற அமைப்புடையது. ஓர் ஆந்தையைப்போல் பெரிதானது. இது மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

முதலை: காஸிப்பூருக்கும் வாரணாசிக்கும் இடைப்பட்ட பகுதியில் மூன்று, நான்கு படைவீரர்கள் முதலை ஒன்றைப் பிடித்ததாக பாபர் குறிப்பிட்டுள்ளார்.

 பாபர் நாமா நூலில் காண்டாமிருகத்தைப் பற்றி எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்க விஷயமாகும். ‘இந்துஸ்தானின் விலங்குகள்’ என்ற பகுதியில் காண்டாமிருகத்தைப் பற்றி பாபர் எழுதியவை, 

‘காண்டாமிருகம் என்பது மற்றொரு விலங்காகும். இதுவும் மிகவும் பெரிதாக இருக்கும். இது அளவில் மூன்று எருமைகளுக்குச் சமமாக இருக்கும். எங்கள் நாட்டில் பரவலாக நம்பப்படுவதுபோல, இது தன் கொம்பில் ஒரு யானையையே கொத்தி தூக்கிவிடும் என்பது உண்மை அல்ல. இதன் மூக்கின் மீது ஒரு கொம்பிருக்கும்; அதன் நீளம் சுமார் ஒரு கர்வளையம் (23 செ.மீ.) இருக்கும்; இரண்டு கர்வளைய அளவுள்ள கொம்பிருக்கும் காண்டாமிருகங்களைக் கண்டதில்லை. அதில் பெரிதான ஒரு கொம்பிலிருந்து நான் குடிப்பதற்காக குவளை ஒன்றைச் செய்தேன். அது போக மேலும் 3-4 விரல் நீள அளவிற்கு அதில் மீதமிருந்தது. அதன் தோல் மிகவும் தடிமனாக இருக்கும். ஒரு வலுவான வில்லை முழுமையாக இழுத்து அம்பெய்தால்கூட, மூன்று அல்லது நான்கு விரல் (10 செ.மீ.) அளவுக்கு மட்டுமே அதன் உடலில் அம்பு துளைக்கும். ஆனால் உடலின் சில பகுதிகளில் அம்பை எளிதில் ஊடுருவச் செய்துவிடலாம் என்றும் கூறுவர். அதன் தோள்பட்டை மற்றும் தொடைப் பகுதியில் நெகிழும் மடல்களைப்போலத் தோன்றும் அடுக்குகள் உள்ளன; தொலைவில் இருந்து பார்க்கும்போது அவை துணியால் மூடிய மாடம்போலத் தெரிகின்றன. இது குதிரையைப் போலவே இருக்கிறது. குதிரையின் வயிறு பெரிதாக இருப்பதைப்போல இதற்கும் வயிறு பெரிதாகவே இருக்கும். குதிரையின் கால் மூட்டு ஒற்றை எலும்பால் ஆனது போலவேதான் இதற்கும். குதிரையின் முன்னங்கால்களில் இருக்கும் குருதிப்பாதம் போலவேதான் இதற்கும் இருக்கும். இது யானையைவிடக் கடுமையான கட்டுக்கடங்காத விலங்காகும். பெஷாவர் மற்றும் ஹஷ்நகர் காடுகளில் இதன் பெருமளவு இருப்பை நாம் காணலாம்; சிந்து மற்றும் பெஹ்ரே நதிகளுக்கிடையே உள்ள காடுகளிலும், இந்தியாவில் சரயூ நதிக்கரையிலும் இது நிறைந்து காணப்படுகிறது.’

 ஆனால் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அஸ்ஸாமில் மட்டுமே காண்டாமிருகங்கள் தற்போது காணப்படுகின்றன. காண்டாமிருகத்தை வேட்டையாடிய நிகழ்வு குறித்த பாபரின் விவரிப்பு:

பிப்ரவரி 16, 1519 – ‘நான் முகாமைவிட்டு நதிக்குச் சென்ற பிறகு, பெஷாவர் நகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் சிந்து நதியின் கிளை நதியான ஸ்வாட்டின் கரையோரத்தில் அமைத்திருந்த ‘கார்க்-கானா’ (காண்டாமிருகத்தின் காடு) என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்று வேட்டையாடத் தொடங்கினோம். சில காண்டாமிருகங்கள் கண்டறியப்பட்டன. ஆனால் காடு மிக அடர்த்தியாக இருந்ததால் அவை வெளியே வரவில்லை. ஒரு தாய் காண்டாமிருகமும் அதன் குட்டியும் வெளியே வந்ததும், பலரும் அம்புகளை ஏய்தனர்; ஆனால் அது மீண்டும் காட்டுக்குள் ஓடியது. காட்டை எரித்தனர். ஆனால் அதே விலங்கு மீண்டும் கிடைக்கவில்லை. ஒரு குட்டி மட்டும் எரிந்த நிலையில் கிடந்தது; ஒவ்வொருவரும் அதைப் பங்கிட்டுகொண்டனர். நான் முகாமைச் சென்றடைந்தபோது இரவு நேர ஜமாத்துக்கு நேரமாகிவிட்டது.’

மற்றொரு வேட்டையை குறித்த பாபரின் விவரிப்பு: டிசம்பர் 10, 1525 – பீகிராம் அருகே ‘காலை விடிந்தவுடன் நான் புறப்பட்டேன். பீகிராமில் தங்கியிருந்த முகாமிலிருந்து புறப்பட்டு கார்க்-ஆவிக்குச் சென்றோம். சியாஹ்-ஆப்பைக் (கரும்புனல் நதி) கடந்து சென்று வேட்டைக் குழாமை அமைத்தோம். அருகிலுள்ள ஒரு காட்டில் காண்டாமிருகம் இருப்பதாகக் கூறப்பட்டது. நாங்கள் வட்ட வடிவில் காட்டை நெருங்கிச் சத்தம் எழுப்ப, ஒரு காண்டாமிருகம் வெளியே வந்தது. ஹுமாயூனும் உடன் வந்த தாஜிக்கும், ஆப்கான் வீரர்களும் அதைப் பார்த்து பெரிதும் ஆச்சரியமடைந்தனர். இரண்டு மைல் தூரத்திற்கு அதை எனது வீரர்கள் துரத்தினார்கள். பல அம்புகள் அதன் மீது எய்யப்பட்டன; அது எங்களைத் திருப்பித் தாக்கும் முன்பே கொல்லப்பட்டது. மேலும் இரு விலங்குகள் கொல்லப்பட்டன. யானைக்கும் காண்டாமிருகத்திற்கும் நேரில் மோதல் நிகழ்ந்தால் என்னவாகும் என்று எப்போதும் நான் யோசித்துக்கொண்டிருப்பேன். எதிர்பார்த்ததைப்போல அந்த வேட்டையின்போது ஒரு காண்டாமிருகம் யானைகளை நோக்கி வந்தது. ஆனால் பாகன்கள் யானைகளை வைத்து அதை விரட்டியபோது, காண்டாமிருகம் அவற்றை எதிர்த்து நிற்காமல் வேறு திசையில் ஓடியது.’

இவை அனைத்தும் பாபர் காலத்து இந்தியாவின் புவியியல் மற்றும் வனவியல் குறித்த வரலாற்றுத் தகவல்களை நமக்கு வழங்குகின்றன. இதனால் இயற்கை வரலாற்றின் ஒரு முக்கியமான ஆவணமாக பாபர் நாமா விளங்குகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *