Skip to content
Home » டார்வின் #16 – ஆய்வாளர்கள் தேவை!

டார்வின் #16 – ஆய்வாளர்கள் தேவை!

அக்டோபர் 4, 1836 அன்று வீடு திரும்பியபோது நள்ளிரவு. எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சத்தமில்லாமல் சென்று அறையில் படுத்துக்கொண்டார் டார்வின். விடிந்து, காலை உணவின்போதுதான் அவர் வீட்டுக்கு வந்ததே எல்லோருக்கும் தெரிந்தது. தந்தை டார்வினைக் கட்டியணைத்து வரவேற்றார். சகோதரிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். அந்த வீடே கொண்டாட்டத்தில் மூழ்கியது.

சரியாக ஐந்து வருடம், இரண்டு நாட்கள். டார்வின் இல்லாத சமயத்தில் இங்கிலாந்தே மாறி இருந்தது. கிராமங்களில் எல்லாம் நகர வாசனை அடிக்கத் தொடங்கியது. லண்டன் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. புதிய ரயில் பாதைகள் வீதிகளில் வழிந்தோடின. ஆங்காங்கே மழைக்காலக் காளான்களைப்போல கட்டுமானங்கள், தொழிற்சாலைகள் முளைத்திருந்தன.

இங்கிலாந்து அரசியலும் பழமைவாத டோரிக்களின் கைகளில் இருந்து வணிக வர்க்கமான விக்குகளின் கைகளுக்கு மாறி இருந்தது.

இங்கிலாந்தில் அப்போதைய பெரிய மாற்றம், புதிதாக அமலாகி இருந்த வறுமைச் சட்டம். இங்கிலாந்தில் முதலாளித்துவம் வளர வளர வறுமையும் அதிகரித்தது. வீதியெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம், பசி, பட்டினி. ஏராளமானோர் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். இதற்கு முன் இருந்த பழமைவாத டோரிகளாவது தர்ம காரியம் என்ற பெயரில் ஏழைகளுக்கு உணவு, தங்குவதற்கு இடம், உதவித் தொகை என சிலவற்றை வழங்கி வந்தனர்.

ஆனால் வணிக விக்குகளின் ஆட்சியில் வறுமை சோம்பேறித்தனம் என வரையறுக்கப்பட்டது. ஏழைகள் தண்டிக்கப்பட்டனர். இதற்கு அடிப்படையாக தாமஸ் ராபர்ட் மால்தஸின் மக்கள் தொகை குறித்த கோட்பாடு இருந்தது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சிந்தனையாளரான தாமஸ் ராபர்ட் மால்தஸ், உணவு உற்பத்தியைவிட மக்கள் தொகை அதிகரிக்கும்போது வறுமை தவிர்க்க முடியாதது என்றார். பஞ்சமோ, நோய்மையோ, வறுமையோ வந்ததால்தான் மக்கள் தொகை கட்டுப்படும். இதனால் வறுமை இயற்கையானது என வாதிட்டார்.

இதையடுத்து வறுமையில் உள்ளவர்கள் அழிய வேண்டியவர்கள் எனக் கருதியது இங்கிலாந்து அரசு. ஒன்று, அவர்கள் போட்டியிட்டு உணவு தேட வேண்டும், இல்லை என்றால் செத்து மடிய வேண்டும். இதுதான் முடிவு.

ஏழைகளை உழைக்கத் தூண்டும் வகையில் ‘பணிவீடு’ (Workhouse) என்கிற கட்டமைப்பை உருவாக்கியது. அங்கே ஏழைகளைத் தங்க வைத்துத் துன்புறுத்தியது. பணிவீடுகளில் மோசமான உணவுகள் வழங்கப்பட்டன, கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டன. இத்தகைய கொடூரங்கள்தான் சோம்பேறி மக்களை உழைக்கத் தூண்டும் என நியாயப்படுத்தியது அரசு. இதுதான் இங்கிலாந்து அமல்படுத்தியிருந்த புதிய வறுமைச் சட்டம்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் மக்கள் உணவுக்காகச் சொற்பக் கூலிக்கு தொழிற்சாலைகளில் பணி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனைப் பயன்படுத்தி முதலாளிகள் மக்களைச் சுரண்டினர். இந்த வறுமைச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்களும் வெடித்தன. டார்வின் திரும்பி வந்தபோது இங்கிலாந்து முழுவதுமே ஆங்காங்கே கலவரங்கள் வெடித்துக்கொண்டிருந்தன. லண்டனில் மட்டும் வறுமைச் சட்டம் அமலுக்கு வரவில்லை. அதனால் லண்டன் ஒப்பீட்டளவில் அமைதியான இடமாக இருந்தது.

0

பீகல் பயணம் முடிந்தவுடன் சில மாதங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தார் டார்வின். ஆனால் அவரால் வீட்டில் ஓரிரு நாட்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. பீகிலில் இருந்து கொண்டு வந்த உயிர் மாதிரிகள் ஏராளமாகக் குவிந்து கிடந்தன. நிறையச் சேகரிப்புகள் இன்னும் கப்பலிலேயே வேறு இருந்தன. அவற்றை நிபுணர்கள் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி வைத்திருந்தார் டார்வின். ஆனால் இவற்றை எல்லாம் யாரிடம் கொடுத்து ஆய்வு செய்வது? எல்லாவற்றையும் தான் ஒருவன் மட்டுமே ஆய்வு செய்ய முடியாது. மேலும், சில துறைகளில் தனக்குப் போதிய ஞானமும் கிடையாது என்றும் உணர்ந்திருந்தார் டார்வின். இதனால் விஞ்ஞானிகளைத் தேடத் தொடங்கினார்.

லண்டனில் இருந்த அறிவியல் நிறுவனங்களுக்கு எல்லாம் சென்றார் டார்வின். விலங்கியல் சங்கங்கள், புவியியல் சங்கங்கள், லின்னியன் சங்கம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் என எல்லா இடங்களிலும் தம்மை அறிமுகம் செய்துகொண்டார். தன்னுடைய சேகரிப்புகளைப் பற்றிப் பேசினார். ஏற்கெனவே புவியியலாளர்கள் மத்தியில் டார்வினின் செல்வாக்கு பரவியிருந்தது. அவர் கொண்டு வந்த தொல்லுயிர் எச்சங்கள் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருந்தனர். இதனால் புவியியல் ஆய்வாளர்கள் நிறையப் பேர் டார்வினின் சேகரிப்புகளை ஆய்வு செய்ய முன்வந்தனர். ஆனால் ஆட்கள் பற்றாக்குறையாக இருந்தது உயிரியல் ஆய்வுகளுக்குத்தான்.

அப்போது இங்கிலாந்தின் விலங்கியல் சங்கம், வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும் வணிகர்கள், ராணுவ வீரர்களிடம் எல்லாம் அங்கே காணும் விநோத விலங்குகளைச் சேகரித்து வரும்படி அறிவுறுத்தி இருந்தது. விளைவு, ஆயிரக்கணக்கான சேகரிப்புகள் குவிந்துகிடந்தன. ஆய்வு செய்யதான் ஆட்கள்தான் இல்லை. இதனால் டார்வினின் மாதிரிகளையும் யாரும் தீண்டத் தயாராக இல்லை.

மேலும் விலங்கியல் சங்கங்களில் உள்கட்சிப் பூசல் வேறு பூதாகரமாக புகைந்துகொண்டிருந்தது. டார்வினின் முதல் ஆசிரியரான ராபர்ட் கிரான்ட் இருக்கிறார் அல்லவா? அவர், விலங்கியல் ஆய்வுகளைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று போராடிக்கொண்டிருந்தார். அப்போது விலங்கியல் ஆய்வுகளில் பெரும்பாலும் செல்வம் படைத்த, அதிகாரவர்க்கத்தினர் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள், அறிவியல் ஆய்வுகளை ஆர்வத்தின் காரணமாகவோ, பொழுதுபோக்கின் காரணமாகவோ, அரசியல் காரணத்திற்காகவோ செய்து வந்தனர். ஆனால் கிரான்டோ அந்த ஆய்வுகளை மக்களுக்கு நலன் பயக்கும் விதத்தில் முறையான நிபுணர்கள் கொண்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். அதிகார வர்க்கத்தினர் கிரான்டின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை. இதனாலும் நிறைய ஆய்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதுவே டார்வின் கிரான்டை நிராகரிக்கும் நிலையை உருவாக்கியது.

கிரான்ட் அவரது முதல் ஆசானாக இருக்கலாம். ஆனால் இப்போது அவரது கொள்கைகளிடம் இருந்து வெகு தூரம் வந்துவிட்டதாகவே கருதினார் டார்வின். கிரான்ட் புரட்சி, புடலங்காய் எனப் பேசிக்கொண்டு திருச்சபையை எதிர்ப்பதும் டார்வினுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. கேம்பிரிட்ஜ் சமய ஆதரவாளர்களால் நிரம்பிய அறிவியல் வட்டத்திலேயே தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினார் டார்வின்.

உயிரியளாளர்கள் மட்டுமல்ல, மற்ற அறிவியல் நிறுவனங்கள் மீதும் புரட்சியாளர்களின் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்த அதிகார வர்க்கக் கொடையாளர்களை நீக்க வேண்டும் என்று புரட்சியாளர்கள் குரல் கொடுத்தனர். அருங்காட்சியகத்தை வெறும் காட்சிக்கூடமாக இல்லாமல் முறையான ஆய்வு மையமாக மாற்ற வேண்டும் என்றனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததும் கிரான்ட்தான். இதனாலேயே அவரைக் கொஞ்சம் எச்சரிக்கையுடன் அணுகத் தொடங்கினார் டார்வின்.

டார்வின் ஆய்வு செய்ய ஆட்கள் கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்தபோது, தாமே ஆய்வுப்பணிகளை முன்னெடுக்க முன்வந்தார் கிரான்ட். ஆனால் கிரான்டின் உதவியைக் கராராக மறுத்துவிட்டார் டார்வின். அவருடனான தொடர்பையும் துண்டித்துக்கொண்டார். இத்தனைக்கும் அப்போது மிக வேகமாக ஆய்வு செய்யக்கூடிய திறன் வாய்ந்த ஒருசில ஆய்வாளர்களில் கிரான்டும் ஒருவர். ஆனால் கொள்கை காரணமாக கிரான்டை முற்றிலுமாக நிராகரித்தார் டார்வின்.

0

இந்தச் சமயத்தில்தான் டார்வினுடைய தென் அமெரிக்கா பற்றிய கட்டுரைகளை வாசித்துவிட்டு தாமாக உதவ முன்வந்தார் லண்டனின் புகழ்பெற்ற புவியியலாளரான சார்லஸ் லைல். அவர்தான் டார்வினுக்கு பல விஞ்ஞானிகளை அறிமுகம் செய்துவைத்தார்.

லைல் அறிமுகப்படுத்திய முதல் நபர் ரிச்சர்ட் ஓவன். அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான அரசுக் கல்லூரியின் பேராசிரியர். அரசு சார்பில் பெரும்பாலான விலங்கியல் ஆய்வுகளை முன்னெடுத்தவர். அவர் டார்வினின் தொல்லுயிர் எச்சங்களிலும், உயிர் மாதிரிகளிலும் ஆய்வு செய்ய முன்வந்தார்.

அடுத்ததாக டார்வின் சேகரித்த ஊர்வனங்களை ஆய்வு செய்ய சம்மதித்தது கிங்க்ஸ் கல்லூரியின் விலங்கியல் பேராசிரியர் தாமஸ் பெல். அவரைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் புவியியலாளர் வில்லியம் பங்க்லேண்ட், கலாபகஸில் சேகரித்த கடல் உடும்புகளை ஆய்வு செய்ய விருப்பம் தெரிவித்தார். மற்ற உயிரியலாளர்களும் ஒவ்வொரு உயிரினங்கள் மீது விருப்பம் காட்டினர்.

உண்மையில் அப்போதுதான் டார்வினுக்கு தான் சேகரித்த பல விலங்குகளின் பெயர்களே தெரியவில்லை என்று புரிந்தது.

டார்வினின் பறவைகளை ஆய்வு செய்ய முன் வந்தவர் ஜான் குட். பறவை கலைஞர் என அறியப்பட்டவர் அவர். சாதாரண கூலி வேலையில் இருந்து ஆர்வம் காரணமாக ஆய்வுகள் மேற்கொண்டு விஞ்ஞானியாக உயர்ந்தவர். ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாட்டுப் பறவைகள் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியிருந்தார் குட். ஒரு பறவையைப் பார்த்தவுடனேயே எளிதாக அடையாளம் கொண்டுபிடிக்கக்கூடிய திறன் வாய்ந்தவர் குட். கலாபகஸ் பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, தான் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த ஆய்வுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு டார்வினின் பறவைகளை ஆய்வு செய்ய வந்திருந்தார் குட்.

இறுதி நிகழ்வாக, டார்வின் சேகரித்த எண்பது வகை பாலூட்டிகள், நானூற்று ஐம்பது வகை பறவைகளை ஆய்வு செய்வதாக விலங்கியல் கழகம் ஏற்றுக்கொண்டது.

இப்படியாக லைலின் புண்ணியத்தால் டார்வினின் உயிர் மாதிரிகள் எல்லாம் ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இப்படி உயிரியல் ஆய்வுகள் ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, நிலவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருந்தார் டார்வின். குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டம் கடலில் இருந்து தோன்றியது குறித்தும், மலை உச்சியில் கடல் உயிரிகளின் தொல் எச்சங்கள் கிடைத்தது பற்றியும், கண்டங்கள் மூழ்கும்போது மலைகள் உயரும் என்பது பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.

இதன் விளைவாக அவருக்குப் புவியியல் கழகத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது புவியியல் கழகத்தின் தலைவராக இருந்தவரும் லைல்தான். ஜனவரி 4, 1837 அன்று லைல் முன்னிலையில் அறிஞர்கள் சூழ்ந்த அரங்கில் தன் முதல் உரையை ஆற்றினார் டார்வின்.

சிலேவின் கடற்கரை ஒருகாலத்தில் கடல்படுகையாக இருந்ததாகவும், இப்போது உயர்ந்து நிலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்கு ஆதாரங்களாக பல்வேறு சித்திரங்களையும், வரைபடங்களையும் காட்டி விவரித்தார். அங்கே மலைகளில் காணப்பட்ட சிப்பிகளின் எச்சங்களை அறிஞர்கள் முன்னிலையில் காட்டி தன் வாதத்தை நிறுவினார். உரை முடிந்தபோது அரங்கமே கரகோஷத்தில் நிறைந்தது. அறிஞர்கள் பாராட்டு மழையைப் பொழிந்தனர்.

லைல் எழுந்து வந்து புவியியல் கழகத்துக்கு மிகச்சிறந்த ஆய்வறிஞர் கிடைத்திருப்பதாகப் பாராட்டினார். இத்தனைக்கும் பவளத் திட்டுகள் குறித்த தனது ஆய்வுக் கட்டுரையிலும் உரையிலும் லைலின் கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்திருந்தார் டார்வின். ஆனாலும் தன்னுடைய ஆய்வுகளை டார்வினின் ஆய்வுகள் செழுமைப்படுத்துவதாக பெருமைகொண்டார் லைல். அங்கேயே புவியியல் கழகத்தின் உறுப்பினராகவும் டார்வினை அங்கீகரித்தார்.

ஆனால் இந்தப் பாராட்டுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல அரங்கேறியது ஒரு நிகழ்வு. அது, தந்தை ராபர்ட்டின் பெருமைமிகு பார்வை. ஆம், டார்வினின் உரையைக் கேட்க அவரது குடும்பமும் அங்கே கூடியிருந்தது. டார்வின் தனது வாதத்தை நிறைவு செய்தபோது வியப்புடன் மகனை ஒரு பார்வை பார்த்தார் ராபர்ட். அப்போதுதான் உண்மையிலேயே எதையோ சாதித்ததுபோல இருந்தது டார்வினுக்கு.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *