ஹுமாயூன் (பொ.யு. 1530-1540, 1555-1556)
பாபரின் மறைவைத் தொடர்ந்து முகலாய அரியணையில் ஹுமாயூன் அமர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக இவர் எதுவும் எழுதவில்லை. எனினும், ’டெஸ்கெரெஹ் அல் வகியாட்’ (ஜௌஹர் என்பவரால் எழுதப்பட்டது) மற்றும் ’ஹுமாயூன் நாமா’ (அவரது சகோதரி குல்பதன் எழுதியது) நூல்களின் வழியாக அவரைப் பற்றி அறிய முடிகிறது.
ஷெர்ஷாவுடனான போரில் தோல்வியுற்ற பிறகு சிந்து பாலைவனத்தில் ஹுமாயூன் இருந்தபோது நடந்த நிகழ்வுகள் இந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு பின்வருமாறு,
’சில நம்பிக்கைக்குரியவர்களுடன் அந்தப் பாலைவனத்தில் இருந்தபோது தன்னுடைய ஆடைகளைத் துவைக்கக் கொடுத்துவிட்டுத் தனது அறையில் ஒரு எளிய ஆடையுடன் அவர் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சிறிய பறவை பறந்து வந்து அவரது அறையில் அமர்த்திருக்கிறது. அத்தகைய பறவையை அவர் அதற்கு முன்பு பார்த்ததில்லை. உடனே சட்டென அறையின் கதவை மூடி அப்பறவையைப் பிடித்து அதை வெகுநேரம் கவனித்தார். பிறகு அதன் சிறகுகளைச் சிறிய அளவில் மட்டும் கத்தரித்துவிட்டு, தன் ஓவியரிடம் அந்தப் பறவையைக் கொடுத்து அதை நுணுக்கமாக வரைய உத்தரவிட்டுள்ளார். ஓவியத்தை வரைந்து முடித்தவுடன் அப்பறவையை விடுதலை செய்யவும் அவர் ஆணையிட்டிருக்கிறார்.’
இந்தக் குறிப்பின் வழியாக உயிரினங்களை அறிந்துகொள்வதில் ஹுமாயூன் ஆர்வமுடன் இருந்துள்ளது தெரியவருகிறது.
அக்பர் (பொ.யு. 1556-1605)
அக்பர் பூக்களையும் நறுமணங்களையும் விரும்பும் ஒரு மனிதர் என்பதையே அனைத்து தரவுகளும் விவரிக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் புறாக்கள் மீது அவருக்குப் பெரிதும் விருப்பம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவரது அரண்மனையில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புறாக்கள் இருந்தனவாம்.
புறாக்களில் கலப்பினங்களை உருவாக்குவதில் அக்பர் ஆர்வத்துடன் இருந்ததாகவும், அதை அவர் செய்திருப்பதாகவும் அக்பர் நாமா நூலில் அபுல் பாசல் எழுதியிருக்கிறார். மிருகங்களுக்கிடையே நடைபெறும் சண்டையை ஆவலுடன் வேடிக்கை பார்க்கும் பழக்கம் அக்பருக்கு இருந்துள்ளது. யானை, ஒட்டகம், எருமை, சேவல், தவளை, சிட்டுக்குருவி, சிலந்தி போன்றவற்றை சண்டையில் ஈடுபடுத்தியது உண்டு.
அக்பர் ஒரு வேட்டைப் பிரியர். புலிகளை வேட்டையாடுவது அவரது விருப்பத்திற்குரிய பொழுதுபோக்காக இருந்துள்ளது. வேட்டையாடுதல் என்பது வழக்கமான ஒன்றாக இல்லாமல் உடலுக்குப் பயிற்சி கொடுப்பதாகவும், கண்ணிற்கு விருந்தளிப்பதாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கவேண்டும் என்று அவரது எண்ணமாக இருந்துள்ளது.
ஒருமுறை அக்பர் ஆக்ராவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எப்போதும்போல அவருக்குப் பின்னால் முகலாயப் படைகள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன. அச்சமயம் திடீரென ஒரு பெண் புலி தனது ஐந்து குட்டிகளுடன் அவருக்கு முன்பாக வர, அடுத்த சில நிமிடங்களில் அந்தப் புலியை தனி ஆளாகக் கொன்றிருக்கிறார். சில நிமிடங்கள் கழித்து வந்த முகலாயப் படையினர், புலியின் உடலில் வாளை செலுத்திய நிலையில் அக்பர் நிற்பதைக் கண்டனராம்.
குட்டிகளைக் காக்கும் நோக்கில் அப்புலி தன்னைத் தாக்க முற்படுவதைக் கணித்து, முந்திக்கொண்டு அதை அவர் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்தபோது அக்பரின் வயது 19 மட்டுமே. அவரிடம் இருந்த விலங்கியல் பூங்காவில் உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டுள்ளன.
நன்கு பழக்கப்படுத்தப்பட்ட சிவிங்கிப் புலிகள் அவரிடம் இருந்துள்ளன. சிறிய பறவைகளை வேட்டையாட வல்லூறுகளை அக்பர் பழக்கி வைத்திருந்தார். உலகில் இருந்த பெரும்பாலான வேட்டை நாய் இனங்களும் அவர் வசம் இருந்துள்ளன.
காபூலில் இருந்து முதல்முறையாக இந்தியாவிற்கு வந்தபோது பாபரிடம் துப்பாக்கிகள் இருந்தாலும், அக்பர் காலத்தில்தான் அவற்றின் புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. அக்பரின் விருப்பத்திற்குரிய ’சங்கரம் துப்பாக்கி’ பின்னாளில் அவரது மகன் ஜஹாங்கிர் வசம் இருந்தது. அதை வைத்து 3000-4000 பறவைகளை அவர் வேட்டையாடியதாக அக்பர் நாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜஹாங்கிர் (பொ.யு. 1605-1627)
’ஓவியங்களை ரசிக்கும் மனோபாவமும், அதை மதிப்பீடு செய்யும் பழக்கமும் என்னுள் நன்கு வளர்ந்திருக்கிறது; ஒரு ஓவியம் என்னிடம் எப்போது கொண்டுவரப்பட்டாலும், அது கடந்தகால ஓவியர்களுடையதா இன்றைய கால ஓவியர்களுடையதா என்பதைத் தெரியப்படுத்தாவிட்டாலும், யாருடைய கைப்பணி அது உருவானது என்பதை உடனேயே கூறுவேன். ஒரு ஓவியத்தில் பல உருவங்கள் இருக்க, ஒவ்வொரு உருவமும் வெவ்வேறு ஓவியர்களால் வரைந்ததாக இருந்தாலும், எதை யார் வரைந்தது என்று என்னால் உடனடியாகக் கூறிவிட முடியும். ஒருவர் ஓர் உருவத்தை வரைந்து, மற்றொருவர் அதன் கண்களையும் புருவங்களையும் வரைந்திருந்தாலும், அந்த முகத்தின் முந்தைய பாகத்தை யார் வரைந்தார், கண்களையும் புருவங்களையும் யார் வரைந்தார் என்பதை நான் கண்டுபிடித்துவிடுவேன்’ என்று துஸுக்-இ-ஜஹாங்கிரி நூலில் தன்னைப் பற்றி ஜஹாங்கிர் விவரித்துள்ளார்.
ஜஹாங்கிர் அரண்மனையில் ஒரு விலங்கு பூங்கா இருந்துள்ளது. அவர் ஓர் உயிரின ஆர்வலர் என்பது அவரது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் என்றல்லாமல் கடல் கடந்தும் தெரிந்திருந்தது. இதனால் அவரைச் சந்திக்க வருபவர்கள் தங்களிடம் இருக்கும் அரிதான தாவரங்களையும் விலங்குகளையும் பரிசளிப்பதை வழக்கமாகவே வைத்திருந்தனர். அப்படிப் பரிசாகப் பெறப்படும் உயிரினங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கி, அவற்றின் அமைப்பை நுணுக்கமாகக் கவனித்து, குறிப்புகளை எடுத்து, அவற்றை மறக்காமல் தன்னுடைய நூல்களில் சேர்க்கும் பழக்கம் ஜஹாங்கிருக்கு இருந்தது.
அதன்பிறகு, அந்த உயிரினங்களை தன் ஓவியர்களிடம் கொடுத்து அவற்றை வரைவதற்கு உத்தரவிடுவார். ஓவியங்களில் அந்த உயிரிகளின் நிறங்கள், அளவுகள் போன்றவற்றில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாமல் இருக்கும்படி அவர் பார்த்துக்கொண்டார். அதனாலேயே ஜஹாங்கிர் காலத்து ஓவியங்களில் அறிவியலும் கலந்திருந்தது.
ஓவியங்களால் அவரது காட்சியகம் நிரம்பி வழிந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை முகலாய ஆட்சி வீழ்ச்சியை சந்தித்தபோது திருடப்பட்டு, உலகின் பல்வேறு இடங்களில் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக ஆஸ்திரிய பேரரசி மரியா தெரேசாவின் (1745-1765) அரண்மனையில் ஹுமாயூன் காலத்து ஓவியங்கள் இருந்துள்ளன.
பேரரசராக இருப்பதைவிட ஒரு அருங்காட்சியக காப்பாளராக இருப்பதைத்தான் ஜஹாங்கிர் விரும்பியிருப்பார் என உயிரினங்கள் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை முன்வைத்து வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். நூல்கள், அறிவாளிகள் கூற்று ஆகியவை மூலமாக மட்டுமல்லாமல் அறிவியல் சோதனைகள் வழியாகவும் தன்னுடைய அறிவை அவர் வளர்த்துக்கொண்டார். இந்தச் சோதனைகளில் கலப்பின ஆய்வுகளும் அடக்கம். ஒரு ஜோடி சாரஸ் கொக்குகளில் இனப்பெருக்க சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
யபா கோச் என்கிற கட்டடவியல் கலை சார்ந்த வரலாற்றாய்வாளர் ஜஹாங்கிர் குறித்து கூறுகையில், ‘தொழில்முறை அறிவியலாளராக இல்லாதவர்கூட அறிவியலில் சாதனை புரிய முடியும். அப்படிப்பட்ட சாதனையைப் புரிந்த ஒருவர்தான் ஜஹாங்கிர்’ என்கிறார். இயற்கையாகவே ஜஹாங்கிருக்கு இருந்த ஆர்வம் மட்டுமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியாது, அவருடன் ஒரு நல்ல குழு இருந்திருக்கலாம் என்று கோச் கூறுகிறார். ஆனால் அது போன்ற எந்தவொரு நேரடிக் குறிப்பையும் ஜஹாங்கிர் எழுதியிருக்கவில்லை.
அதே வேளையில், ‘ஆகச் சிறந்த அறிவாளி’ ஒருவரின் ஆலோசனைபேரில்தான் ஆக்ராவில் தன் தந்தையின் (அக்பரின்) கல்லறையைக் கட்டியதாக தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பான முறையில் ஆக்ராவிற்கு அனுப்பும் பணிகளை கோவாவில் இருந்த முகாம் கான் என்பவர் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே இத்தகைய தகவல்களை அடிப்படையாக வைத்தே யபா கோச் அப்படிக் கூறியிருக்க வாய்ப்புள்ளது.
ஷாஜஹான் (பொ.யு. 1627-1658)
ஷாஜஹான் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான காடுகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. பசு மற்றும் யானை போன்ற விலங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விலங்குகளுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன.
ஔரங்கசீப் (பொ.யு. 1658-1707)
ஔரங்கசீப் காலத்தில், இயற்கை வளங்கள் மீதான கவனம் பெரும்பாலும் குறைந்திருந்தது. இயற்கை சார்ந்து புதிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் வேட்டையாடுவதற்குத் தடை இருந்தது.
பகதூர் ஷா II (பொ.யு. 1837-1857)
இரண்டாம் பகதூர் ஷா முகலாயப் பேரரசின் கடைசி அரசர் ஆவார். அவரது காலகட்டத்தில் இயற்கை சார்ந்து பெரிதாக எதுவும் நடைபெறவில்லை.
முகலாயர்கள் காலத்தில் வேட்டையாடும் முறை
முகலாயர்கள் பின்பற்றிய வேட்டையாடும் முறை ’கமார்கா’ என்று அழைக்கப்படுகிறது. முகலாய அரசவை மருத்துவராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய ஐரோப்பியரான பர்னியர் இது குறித்து கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்:
’ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட படையுடன் பேரரசர் எப்படி வேட்டையாடுகிறார் என்று எனக்கு எப்போதும் புரிந்ததில்லை. ஆனால் படையின் எண்ணிக்கையை வைத்து, 2 லட்சம் வீரர்களுடன் அவர் வேட்டையாடுகிறார் என்று கூறலாம். ஆக்ரா, தில்லி நகரங்களின் அருகிலும் யமுனை ஆற்றை ஒட்டியிருந்த பகுதிகளிலும் பரந்த நிலப்பரப்புகள் உண்டு.
அவை பெரும்பாலும் ஆறு அடி உயரத்திற்கு வளர்ந்த புற்களைக்கொண்ட புல்வெளிகளாக இருந்தன. அதுதான் அவர்களின் வேட்டைக்களம். யாரும் அந்த நிலத்தில் இருந்த விலங்குகளைத் தொல்லை செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை; எனவே விலங்குகள் அங்கே மிகுதியாக உள்ளன.’
வேட்டையாடுவது போருக்கு செல்லும் நிகழ்வுபோலவே இருந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேங்கைகள் அல்லது சிவிங்கிப் புலிகள் அக்பர் வசம் இருந்தன. இனப்பெருக்கத்தில் ஈடுபட அவை ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. காட்டில் இருந்து பிடித்து வரப்பட்ட பிறகு நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட சிவிங்கிப்புலிகளை வைத்துதான் அவர் எப்போதும் வேட்டையில் ஈடுபட்டார். வேட்டை தவிர்த்து அச்சிவிங்கிப் புலிகளை வைத்து மத்தள ஓசையுடன் காட்சிகள் நடத்தப்பட்டன.
அந்தக் காலகட்டத்தில் சிவிங்கிப் புலிகளைப் பயிற்றுவிப்பதில் புகழ் பெற்றவராக அக்பர் இருந்தார். இதற்காகவே பிரத்யேகமான பயிற்சியாளர்கள் இருந்தனர். அவற்றைப் பயிற்றுவிக்கப் பொதுவாக மூன்று மாதங்கள் வரை ஆனது. இந்தச் சிவிங்கிப் புலிகள் பெரும்பாலும் மான்களைப் பிடிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. (இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டில் இயற்கையாக சிவிங்கிப் புலிகள் இல்லை; இப்பொது இருப்பது நமீபியா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவை. ஆனால் அக்பர் காலத்தில் அவை அதிக எண்ணிக்கையில் இருந்தன.)
1555ஆம் ஆண்டில் முதல்முறையாக ஒரு சிவிங்கிப் புலியை அக்பர் பரிசாகப் பெற்றார். அப்போதிருந்து அவர் சிவிங்கிப்புலி ஆர்வலராகவே மாறிப்போனார். சிவிங்கிப் புலிகளின் வேட்டைத் திறனைப் பொறுத்து அவை எட்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப இறைச்சி அளவு நிர்ணயிக்கப்பட்டது. அரசின் சிவிங்கிப் புலிகளுக்கு கழுத்துப்பட்டை அணிவிக்கும் நடைமுறை இருந்துள்ளது.
1567ஆம் ஆண்டில் லாஹூர் அருகே இருந்த பத்து மைல் பரப்பளவிலான வேட்டைக்களத்தில் நடைபெற்ற காமர்கா வேட்டையில் சிவிங்கிப் புலிகள் பயன்படுத்தப்பட்டன. மேற்கூறிய அனைத்தும் ’இம்பீரியல் அக்பர் நாமா’ எனும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் (தற்போது லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளது) முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
முகலாயர்கள் காலத்தில் சிறு சிறு உயிர்களில் இருந்து யானை வரை வேட்டையாடப்பட்டுள்ளது. வேட்டையாடுவது கலாசாரத்தின் ஓர் அங்கமாக இருந்துள்ளது. ’இந்திய காண்டாமிருகம், காட்டு கழுதை உட்பட பல விலங்குகளை நான் குதிரையில் அமர்ந்து வேட்டையாடியிருக்கிறேன்’ என்று பாபர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தனது வேட்டை அனுபவங்களை ஜஹாங்கிர் விரிவாக எழுதி வைத்துள்ளார். அவருக்கு 47–48 வயதாகும்போது ’இதுவரை 28,532 விலங்குகளை நான் வேட்டையாடியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 12 வயதில் ஈடுபட்ட தன்னுடைய முதல் வேட்டை அனுபவத்தை அவர் பதிவு செய்துள்ளார். அந்த 28,532 விலங்குகளில் 17,167-ஐ அவர் நேரடியாகவே வேட்டையாடியதாகவும் கூறுகிறார்.
அவற்றில் 3,203 மான்கள் மற்றும் மலை ஆடுகள், 889 நீல்கைகள், 86 சிங்கங்கள், 64 காண்டாமிருகங்கள், 10,348 புறாக்கள், 3,473 காக்கைகள் மற்றும் 10 முதலைகள் ஆகியவை அடக்கம். வேட்டையாடும் இடங்களில் தங்குவதற்காவே ’ஹிரான் மினார்கள்’ எனப்படும் வேட்டை அரண்மனைகள் ஹுமாயூன் காலத்தில் கட்டப்பட்டன. அதில் ஒரு அரண்மனைக்குத் தன்னுடைய விருப்பத்திற்குரிய ஒரு மானின் பெயரை (‘ஹன்ஸ்ராஜ்’) அவர் சூட்டியிருந்தார்.
(தொடரும்)

