‘சுருதிமாந் ராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள் வடவழிநாடும் திருப்பிடவூர் நாடும் ஊற்றத்தூர் நாடும் குன்றக் கூற்றமும் மேற்காரைக் காடும் உள்ளிட்ட அஞ்சுநாட்டுப் படைமுதலிகளும்’
மேற்கண்ட கல்வெட்டுச் செய்திகள், இன்றைய திட்டக்குடி வட்டத்திலுள்ள ஆதனூர் கல்வெட்டு சுருதிமான்கள் ஐந்துநாட்டு எனும் பிரிவின் கீழ் ஒரு கட்டமைப்புடன் இருந்ததினைக் கூறுகிறது. சுருதிமான்கள் முதன்முதலாக பராந்தகசோழனின் 35ஆம் ஆட்சியாண்டில் அறியப்படுகின்றனர். இதில் ஐந்துநாட்டு சுருதிமான்களும், ஊற்றத்தூர் நாட்டின் கீழ் பாடாலூரிலிருந்து (இன்றும் இவ்வூர் அதே பெயரில் உள்ளது) சுமார் 33 கி.மீ தொலைவிலிருந்து வந்து ஆநிரையைக் கவர்ந்து செல்லும் வெட்சிப்போரில் ஈடுபட்டு சென்றுள்ளனர். சுருதிமான்களின் ஐந்து நாடு என்பவை குறித்து காண்போம்.
1.வடவழிநாடு (இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெள்ளரை)
2.திருப்பிடவூர் (திருச்சிராப்பள்ளி மாவட்ட திருப்பட்டூர்)
3.குன்றக்கூற்றம் (அரியலூர் மாவட்டம் குன்னம் பகுதி)
4.மேற்காரைக்காடு (அரியலூர் மாவட்டம் சென்னிவனம்)
5.ஊற்றத்தூர் (இன்றைய பெரம்பலூர் மாவட்டம் ஊட்டத்தூர்)
திருவெள்ளரையில் ஆரம்பித்து குன்னம் வரையில் சுமார் 180 கி.மீ. வரையிலும் உள்ள பகுதிகளை ஐந்துநாடாகப் பிரித்து அதில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்களாக சுருதிமான்கள் இருந்துள்ளனர்.
நடுகல்லில் சுருதிமான்கள்
முதலாம் பராந்தகச் சோழனின் 35ஆம் ஆட்சியாண்டில் மியமாநாட்டு, வள்ளுவப்பாடி, விரியூர் என்ற ஊரைச்சார்ந்த (இன்றைய துறையூர் அருகேயுள்ள கரட்டாம்பட்டி) பசு, ஆட்டுக் கூட்டங்களை ஊட்டத்தூர் நாட்டு பாடாலூர் என்ற ஊரைச் சேர்ந்த ஐந்துநாட்டு சுருதிமான்கள் கவர்ந்து சென்றனர்.
அந்தப் பசுக் கூட்டங்களைப் பின்தொடர்ந்து சென்று அவற்றைத் திரும்பக் கொண்டு வருவதில் வெற்றிபெற்ற நாகன் என்னும் வீரன் அப்போது நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தான்.
நாகனின் மகளுக்கு விரியூர் மக்கள் ஏகமனதாக முடிவு செய்து வரி நீக்கப்பட்ட நிலத்தைக் கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு வாசகம்
- ஸ்வஸ்தீ ஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பர்மருக்கி யாண்டு ஙயரு
- ஆவது இவ்வாண்டு, மியமானாட்டு
- வள்ளுவப்பாடி விரியூர், ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ்சுருனிமான்கள் நிரை கொண்டுபோக, நிரைப்பின்பு சென்று, ஆடு ஈடு கொண்டுபட்ட நாகன் வீர
- ன் மகளு(க்கு) ஓர்(ரோ)ரால், இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்.
அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் சங்ககாலம், பல்லவர் காலங்களில் மக்கள் வாழ்ந்த தடங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை. முதலாம் ஆதித்தன் காலத்தில், அதாவது 9ஆம் நூற்றாண்டில்தான் இப்பகுதியில் மக்கள், வணிகர்கள் குடியேற்றங்கள் நடந்துள்ளது. வாலிகண்டபுரம் கல்வெட்டுகள் வாயிலாக இக்கூற்றினை அறியலாம். திருக்கோவிலூரிலிருந்து மக்கள் இங்கு பெரிய அளவில் வந்துள்ளனர். இக்குழுவில் சுருதிமான்களும் இப்பகுதியில் குடியேறிருக்க வாய்ப்புள்ளது. அதன்பின் தொடர்ச்சியாக 18ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
பராந்தக சோழனின் இந்நடுகல் கல்வெட்டிற்கு பின்னர் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சுருதிமான்கள் குறித்த குறிப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கிறது.
ஊற்றத்தூரின் சுருதிமான்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஊற்றத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோவிலில் காணப்படுகிறது இக்கல்வெட்டு. ராஜேந்திரனின் இக்கல்வெட்டு மேலைச்சாளுக்கிய நாட்டில் சோழப்படைக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் கடும்போர் நிகழ்ந்ததைக் கூறுகிறது. சத்தியாசிரயனோ யானை மீது அமர்ந்து போர் புரிந்து வர, ஊற்றத்தூரைச் சேர்ந்த ‘சுருதிமான் நக்கன் சந்திரனான ராஜமல்ல முத்தரையன்’ எனும் வீரன், சத்தியாசிரயன் அமர்ந்து போர்புரியும் யானையைக் கொல்ல முயன்று விழ்ந்துபட்டான். அவ்வீரனின் நினைவாக அவ்வீரனின் ஊரில் உள்ள சிவன் கோவிலில் பேரரசர் இராஜேந்திரன் விளக்கெரிக்க ஆணையிட்டார். (ARE.NO.515 of 1912)
இதன்பிறகு இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், குறிச்சி உடைய சுருதிமான் திருச்சிற்றம்பலமுடையான் ஜனநாதனான அணுக்கநம்பி வடசேரி நத்தத்து ஷேத்ரபிள்ளாயாருக்கு அமுதுபடி படைக்க நிலதானம் அளித்துள்ளார். (ARE.NO.523of1912)
மூன்றாம் ராஜராஜன் காலத்தில், நிலவிற்பனை தொடர்பாக வடபாடவூரைச் சேர்ந்த சுருதிமான் ஊர் நம்பியான் வீரமேதாவி பெரியன் என்பவர் கையொப்பமிட்டுள்ளார். (ARE.NO.495of1912)
அதே மன்னரின் மற்ற இரு கல்வெட்டுகளில், ஊற்றத்தூர் நாடுடையான் மல்லன்சியநான பிரமாதமுத்தரையன் என்பவரின் அகமுடைய சேவகர், நெற்குளமுடைய சுருதிமான்சோறனான இளங்கோளன் காணியாய் நிலவிற்பனை செய்த தகவலும், (ARE.NO.499of.1912) இதே சுருதிமானின் தம்பி மகன் மல்லன் மனவாளனான கெங்கதிரையனும், மற்றும் இருவரும் சேர்ந்து, காணியாக நில விற்பனை செய்துள்ள தகவலும் இடம்பெறுகின்றன. (ARE.NO.500Zof.1912)
சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 5ஆம் ஆட்சியாண்டில், நெற்குளத்து காணியுடைய சுருதிமான் மாதியாண்டானான சோறன் இருங்கோளன், மற்றொரு சுருதிமானான நாடறிபுகழநல்லூர் சுருதிமான் தேவன் போரில்மிகாமனான இருங்கோளனுக்கு நில விற்பனை செய்துள்ளார். இதில் பயின்று வரும் மீகாமன் என்ற சொல்லுக்குக் கப்பலின் தலைவன் எனப் பொருளாகும். எனவே இவர் சுந்தரபாண்டியன் காலத்தில் கப்பற்படைத் தலைவனாய் இருந்திருக்கக்கூடும்.
முதலாம் குலோத்துங்கனின் 38 வரிகள் உடைய கல்வெட்டு ஒன்று (ARE.NO.489of.1912) சுருதிமான்களின் ஐந்து நாடு மற்றும் இடங்கை வலங்கை பற்றிய புராணக்கதையுடன் சேர்த்த தகவல் ஒன்றினை அளிக்கிறது.
இந்தக் கல்வெட்டில், இடங்கை சமூகத்தின் பிறப்பு மற்றும் நிலை பற்றிய விரிவான புராண விளக்கம் இடம் பெற்றுள்ளது. கல்வெட்டின் தகவலின்படி, முனிவர் காஷ்யபர் தமது யாகங்களை அசுரர்கள் இடையூறு செய்தபோது, அவர்களை அழித்து யாகத்தைத் காக்கும் நோக்கில், அக்னிகுண்டத்திலிருந்து இடங்கைச் சமூகத்தை உருவாக்கினார். அவர்கள் யாகங்களைப் பாதுகாத்து, தங்கள் கடமையை நிறைவேற்றினர்.
பின்னர், சக்ரவர்த்தி அரிந்தமன், அந்த முனிவர்களை மரியாதை செய்யும் பொருட்டு, வண்டிகளில் ஏற்றி புதிதாக நிறுவிய ஆகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அச்சமயம், இடங்கைச் சமூகத்தினர் முனிவர்களின் வண்டிகளின் பின்புறத்தில் அமர வைக்கப்பட்டு, அவர்கள் செருப்பு மற்றும் குடைகளைச் சுமக்கும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னர், இந்தச் சமூகத்தினர், அந்த முனிவர்களுடன் சேர்ந்து திருவெள்ளரை, பாச்சில், திருவாசி, திருப்பிடவூர், ஊற்றத்தூர், காரைக்கால் ஆகிய சென்னிவளக் குற்றத்திற்குள் உள்ள கிராமங்களில் குடியேற்றப்பட்டனர். அப்போது, முனிவர்கள் வண்டியில் இருந்து இறங்கும்போது இடது பக்கம் தாங்கிய காரணத்தினால், இந்தச் சமூகத்திற்கு ‘இடங்கை’ என்ற பெயர் வழங்கப்பட்டது.
கல்வெட்டு குறிப்பிடுவது என்னவெனில், இவர்களின் முன்னோர்கள் காட்டிலும் காடுகளிலும் தங்கள் வரலாற்றை அறியாமல் வாழ்ந்தனர். இந்நிலையில், தங்கள் தோற்ற வரலாற்றை அறிந்த பின், 98 பிரிவுகளைச் சேர்ந்த இடங்கைச் சமூகத்தினர், அரசின் நாற்பதாவது ஆண்டுயில், ஒரே தாயின் பிள்ளைகள் போல் ஒன்றினைந்து, நல்லது–கெட்டது எதுவாக வந்தாலும் அதனைப் பகிர்ந்து கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
மேலும், இடங்கைச் சமூகத்தின் உரிமையைத் தாழ்த்தும் சம்பவம் நிகழ்ந்தால், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமையை நிலைநாட்டுவோம் எனவும் கல்வெட்டு பதிவு செய்கிறது.
அத்துடன், சமூகக் கூட்டங்கள் கூடும்போது கொம்பு, கரணை, குடை போன்ற சின்னங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், தனித்துவ அடையாளமாக கொக்கு இறகு மற்றும் சிதறிய சடை அணிய வேண்டும் என்றும் விதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இச்சமூகத்தினரின் முன்னிலையில் சங்கு, கரணை, கொம்பு ஒலிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த விதிகளை மீறுவோர் சமூகத்திற்குப் பகைவராகக் கருதப்படுவார்கள்.
இவ்விதமான கல்வெட்டு, திருநல்லூர் உடையான் இளையகோயில் திருச்சிற்றம்பலம் உடையான் என்பவரால், ஐந்து நாட்டாரின் உத்தரவின்படி எழுதப்பட்டது எனவும் பதிவு செய்கிறது. இவர் சுருதிமான் என்பதை இக்கல்வெட்டு கூறுகிறது.
கொளக்காநத்தம் பலகைக்கல் கல்வெட்டு
பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் சிவன் கோவில் வடக்குத்தெருவில் உள்ள ஒரு பலகைக்கல்லில் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு ஒன்றுள்ளது. இக்கல்வெட்டு ஊற்றத்தூரைச் சேர்ந்த, சுருதிமான் ஜனநாதன் அரையதேவனான வானவிச்சாதிர நாடாழ்வான் என்பவர் இவ்வூரிலுள்ள ஏரியில் குமிழித்தூம்பு அமைத்த செய்தியைக் கூறுகிறது.
(ஆவணம் இதழ்-17 பக்கம்89-90)
ஆனந்தவாடி செப்பேடு
கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது இச்செப்பேடு இதில் ஆனந்தபாடி, ஆந்தைநகர், ஆந்தைப்பாடி என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஊர் ஆனந்தவாடி என்ற பெயரில் இன்று விளங்குகிறது. இச்செப்பேட்டில் சென்னிவளநாட்டில் அமைந்த ஊராக ஆந்தைநகர், சோழன்குறிச்சி, கிளியூர் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. சோழர் காலத்தில் சென்னிவலக்கூற்றம் என்று அழைக்கப்பட்ட நாட்டுப்பிரிவின் பெயர் சென்னிவளநாடு மிகவும் பிற்காலத்தில் கூட நினைவுகூரப்படுவதை இச் செப்பேட்டால் அறியமுடிகிறது.
கணார்ச்சி மூப்பனார் என்பவருக்கும் அவருடைய உறவினர், வம்சத்தார்க்கும் பெரியபாளையப்பட்டுக்களும் பாடிகாவல் உரிமைகளும் ஆந்தைநகர், சோழன்குறிச்சி ஆகிய ஊர்களில் உரிமைகளும் மற்றும் சென்னியாண்டவர் கோயிலை நிர்வாகம் செய்ய வழங்கப்பட்ட பல்வேறு காவல் உரிமை, பூட்டு சாவி வைத்திருக்கும் உரிமை, விழாக்காலங்களில் வழங்கப்படும் முன் மாலை, முன் சந்தனம், தலைக்கட்டு வமி, சாதி ஞாயம் (பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் உரிமைகள்) போன்ற உரிமைகள் கொடுக்கப்பட்டது பற்றி இப்பட்டயம் கூறுகிறது.
இவர் சுரிதிருலம் (சுருதிமான்கள்) என்னும் குலத்தில் மிகச்சிறந்து விளங்கிய தலைவராக விவரிக்கப்படுகிறார். இக்குலத்தவர் ஆற்றிய வீரதீரச் செயல்களால் சேர, சோழ, பாண்டியர்கள் மகிழ்ந்து பல்வேறு விருதுகளும் மஞ்சக்காணி, பாளையப்பட்டு, பாடிகாவலும், பல்லக்கு பரிவாரங்களும் பலயாக ஆயுதங்களும் சுருதிமான் இனத்தவருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது.
ஆந்தபாடியான், நொனாவன், களார்ச்சி மூப்பன், வைரத்தூணன், கொல்லத்திரையன், செவிமூப்பன் போன்றவர்கள் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். பெரியதிருக்கோணம் என்ற ஊர் இச்செப்பேட்டில் பெரியருணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்தபாடியான், நொணாவன் இவ்விரண்டு பேர்களில் நொணாவனுக்கு முன்மாலை முன் சந்தனமும், ஆந்தபாடியானுக்கு இரண்டாவது மரியாதையும் செய்ய வேண்டும் இதில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்பட்டால் காஞ்சிபுரம் போய் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றுள்ளது.
சென்னி ஆண்டவர் திருக்குளம், செக்கான் மோடு, கொக்குப்புளியடி, வண்ணான் பள்ளம், குருந்தம் பள்ளம், நத்தமோடு, நாவலடி, தீர்த்தான் ஏரி, கிளியூர் ஒடை, அணை உடையான் ஏரி, ஒட்டான் ஓடை ஓதியம் பள்ளம் போன்ற இடங்கள் எல்லைகளாகக் குறிப்பிடப்படுகிறது. காமாட்சி அம்பன் கைலாசநாதர், மழுவடி அம்மன், சென்னி ஆண்டவர் ஆகிய கடவுள்கள் சாட்சிகளாகவும் துணையாகவும் குறிப்பிடப்படுகின்றனர். இச்செப்பேட்டில் சுருதிமான்கள் மூப்பனார் என்று பட்டத்துடன் குறிப்பிடப்படுகின்றனர்.
பட்டயத்தின் முதல் பக்கத்தில் 46 வரிகளும் பின்பக்கம் 33 வரிகளும் எழுதப்பட்டுள்ளன.
பராந்தக சோழர் காலத்தில் அறிமுகமான சுருதிமான்கள், நாடாழ்வார்கள், காணி உடையவர்கள், படை வீரர்கள் என்ற நிலையில் சோழ பாண்டியர் ஆட்சியாளர்கள் காலத்தில் சிறப்புடன் விளங்கி அதன்பின் தொடர்ந்து 18ஆம் நூற்றாண்டு வரையிலும் அவர்கள் ஐந்து நாடு என்றழைக்கப்பட்ட பகுதிகளில் நிலைகொண்டிருந்ததை அறிய முடிகிறது.
(தொடரும்)

