போர்த்துகீசியர்களைத் தொடர்ந்து டச்சு, பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனிகள் இந்தியாவைக் காலனியாக ஆட்சி செய்தன. அவர்களது வருகையால் இந்தியாவின் இயற்கைச் சூழல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் இயற்கைப் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அந்தக் காலகட்டத்தில் இயற்கையை முதலில் வணிகப் பொருளாகவும், பின்னர் அறிவியல் ஆய்வுக்குரியதாகவும் காலனி ஆட்சியாளர்கள் கருதினர்.
இந்திய தாவரவியல் அளவாய்வு (Botanical Survey of India), இந்திய விலங்கியல் அளவாய்வு (Zoological Survey of India) போன்ற சிறப்புக்குரிய அமைப்புகள் இந்தியாவில் உருவாக இதுவே காரணமானது. அவர்களது காலத்தில்தான் இந்திய வனங்களும் அவற்றில் வாழும் உயிரினங்களும் முதன்முதலாக அறிவியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஒருபுறம் அறிவியல் வளர்ச்சியை இது உறுதிசெய்தாலும், மறுபுறம் இயற்கை மீதான தீவிர சுரண்டலுக்கும் வழிவகுத்தது.
கட்டுக்கடங்காத வேட்டையாடலும் வனங்களை விவசாய நிலங்களாக மாற்ற முன்னெடுக்கப்பட்ட திட்டங்களாலும் இந்தியச் சூழலியல் நிலையை மோசமாக்கின. அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டதன் மூலம் பல்வேறு சட்டங்கள், பாதுகாப்புத் திட்டங்கள், தேசியக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு வளையங்கள் வழியாக இயற்கையைக் காக்க தற்காலத்தில் இந்தியா முயற்சி செய்கிறது.
இருப்பினும் நகரமயமாக்கலின் வளர்ச்சி, தொழில்நுட்ப அடிப்படையிலான குடியிருப்பு விரிவாக்கங்கள், பொருளாதார வளர்ச்சிப் பாதைகள் போன்றவை பல்வேறு உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
இன்றளவும் இந்திய இயற்கை வரலாறு என்பது ஓர் எளிய வரிசையைக்கொண்ட கட்டமைப்பாக அல்லாமல், ஒவ்வொரு காலத்திலும் தனித்துவ அடையாளத்தைக் கொண்டிருக்கும் பரிணாமத் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மானுட சமூகம் இயற்கையுடன் கொண்டிருந்த உறவு மாறுபட்டிருந்தாலும், ’இயற்கையை மீற முடியாது’ என்ற பொதுவான உணர்வுடன் அவை பின்னிப் பிணைந்திருந்தன.
இந்திய இயற்கை வரலாற்றில் டேனிஷ் மற்றும் போர்த்துகீசிய காலனி ஆட்சிகளின் தடங்கள்
இந்தியாவின் காலனியாதிக்க காலத்தின்போது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு அடுத்ததாக, டேனிஷ் மற்றும் போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பெனிகளின் ஆட்சிகள் அதிகப்படியான விளைவை ஏற்படுத்தியிருந்தன. இவர்களின் ஆளுகைக்கு உட்பட்டு குறுகிய பகுதிகளே இருந்தாலும், இந்திய இயற்கையின்பால் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இவ்விரு ஆட்சிகளும் கடற்கரை வர்த்தக மையங்களிலேயே பெரும்பாலும் செயல்பட்டன. இவர்களது வருகை இந்திய இயற்கைச் சூழலிலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்விலும் ஒரு சில தடங்களைப் பதித்தாலும், பெரிய அளவில் இயற்கைப் பாதுகாப்புக் கொள்கைகள் ஏதும் இல்லாமலே அவர்களது ஆட்சிக்காலம் கடந்துவிட்டது என்பதே உண்மை.
டேனிஷ் காலனிய ஆட்சி
1620ஆம் ஆண்டில் தமிழகத்தின் தரங்கம்பாடி பகுதியில் நுழைந்த டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1845 வரையில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியது. பிற கிழக்கிந்திய கம்பெனிகளை ஒப்பிடும்போது குறுகிய காலமே இந்தியாவில் இருந்தாலும் மறைபணி, கல்வி மற்றும் தோட்டக் கலாசாரம் மூலமாக இயற்கை குறித்த விழிப்புணர்வை டேனிஷ் கம்பெனி இந்தியாவில் எழுப்பியது.
பார்ததலமேயு சீகன்பால்க், ஹென்றிச் ப்ளூடாச்சு ஆகிய முதன்மை மறைபணியாளர்கள் இயற்கையோடு தொடர்புடைய வாழ்வியலை மக்களிடம் வலியுறுத்தினார்கள். தரங்கம்பாடி பகுதியில் உள்ள நியூ ஜெருசலேம் தேவாலயம் மற்றும் அத்துடன் இணைந்த பள்ளிக்கூடங்களில், மர நிழலுடன் கூடிய பசுமை வளாகங்கள் உருவாக்கப்பட்டன.
இதற்காகவே வேம்பு, மருதம், புன்னை, புளி போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன. இயற்கை மீதான அவர்களின் புரிதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை இருந்தது. டேனிஷ் ஆய்வாளர்கள், குறிப்பாக கிருஸ்தவ பாதிரியாரான கிறிஸ்டோபர் சாமுவேல் ஜான் மற்றும் ஜே.ஜி. கீனிக் போன்றோர், விலங்கின மற்றும் தாவர ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கல்விப்பணி இறைப்பணி தவிர்த்து இனப் பண்பாட்டியல், மொழியியல், விலங்கியல், வரலாறு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஆய்வுகளை ஜான் மேற்கொண்டுள்ளார். இவர் வரைந்த விலங்குகளின் ஓவியங்களும் ஆய்வுக்குறிப்புகளும்தான் மார்கஸ் எனும் மிகச்சிறந்த அறிவியலாளர் பின்னாளில் எழுதிய ’மீன்களின் வரலாறு’ நூலுக்கு அடிப்படையாக அமைந்தன.
அறிவியல் துறைக்குப் பாதிரியார் ஜான் ஆற்றிய சேவைக்கு மரியாதை செய்யும் விதமாக, ஜெர்மன் ஆய்வறிஞர்கள் சங்கம் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கியது. இந்தியப் பாம்புகள் பற்றிய படிப்பின் தந்தை என்று அறியப்படும் பேட்ரிக் ரசல், பாதிரியார் ஜானின் பணியைப் போற்றும் விதமாக இந்திய சிவப்பு மண்ணுளி பாம்புக்கு ’எரிஸ் ஜானிய்’ என்ற அறிவியல் பெயரைச் சூட்டினார்.
தன்னுடைய 66வது வயதில் பக்கவாத பாதிப்பால் ஜான் இறந்தார். தரங்கம்பாடியில் உள்ள நியூ ஜெருசலேம் தேவாலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டார். இன்றும் அந்தக் கல்லறை அங்கு உள்ளது.
18ஆம் நூற்றாண்டில் இந்திய இயற்கை வரலாற்றின் ஆரம்பகட்ட வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த வெளிநாட்டு அறிஞர்களில் ஜோஹன் ஜெரார்ட் கோனிக்கும் (1728–1785) ஒருவர். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் முதலில் டேனிஷ் மறைபணியாளர்கள் அழைப்பின்பேரில் தரங்கம்பாடிக்கு வந்தார். அங்கு மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியதோடு சுற்றியிருந்த தாவரங்கள், விலங்குகள், கனிமங்கள் ஆகியவற்றை முறையாக ஆவணப்படுத்தினார்.
குறிப்பாக, அவரை முன்வைத்து முரயா கோனிகி என்கிற அறிவியல் பெயர் கறிவேப்பிலைச் செடிக்கு சூட்டப்பட்டது. அவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் நம்பகத்தன்மைக்கான சான்று இதுவாகும்.
மருத்துவப் பயனுள்ள பல இந்தியச் செடிகளை ஐரோப்பிய மருத்துவத் துறைக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். மதராஸ், பாண்டிச்சேரி, இலங்கை ஆகிய பகுதிகளில் சுற்றி தாவர மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை ஐரோப்பிய விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவைத்து அவை பற்றிய பல உண்மைகளை உலகிற்கு இவர் வெளிக்கொணர்ந்தார். அவர் சேகரித்த தரவுகள் பிற்காலத்தில் இந்திய இயற்கை வரலாற்றின் அடிப்படை ஆவணங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
பின்னாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவ சேவைப் பணியில் கோனிக் இணைந்தார். இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை அவர் அழகாகத் தொகுத்துள்ளார். இவர் கார்ல் லின்னேயஸின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ரிக் ரசலுடன் இணைந்து இந்திய அறிவியலுக்கு இவர் பெரிதும் பங்களித்துள்ளார்.
தென்னிந்தியாவின் கரையான்கள் குறித்த ஒரு தொகுப்பு, ஈசல்களைச் சேகரித்து உணவாக உட்கொள்ளுதல், பூச்சிகள் ஆகியவை பற்றிய குறிப்புகள் இந்திய அறிவியலுக்கான இவரது பங்களிப்பாக இன்றும் நிலைத்து நிற்கின்றன.
போர்த்துகீசிய காலனிய ஆட்சி
1498இல் வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பின்னர் கோவா, டாமன், டையூ மற்றும் பாஸின் போன்ற இடங்களில் போர்ச்சுகீசியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. இந்தியாவில் 1961ஆம் ஆண்டு வரை அவர்களது ஆட்சி நீடித்தது.
கோவாவில் காடுகள் அழிக்கப்பட்டு தோட்டப் பயிர்களான காஃபி, ஏலக்காய் போன்றவை பயிரிடப்பட்டன. இயற்கை வளங்கள் உற்பத்திக்காக கட்டுப்படுத்தப்பட்டன. கார்சியா டா ஓர்டா என்பவர் போர்ச்சுகலைச் சேர்ந்த மருத்துவரும் இயற்கை வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஆவார். 1534ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தந்து கோவாவில் தங்கினார்.
அங்கிருந்தபடி தாவரங்கள், மூலிகைகள், மசாலா பொருட்கள், கனிமங்கள் போன்றவற்றின் மருத்துவ மற்றும் பொருளாதாரப் பயன்களை ஆராய்ந்தார். அவரது ’இந்தியாவின் எளிய மற்றும் மருந்துப் பொருட்கள் பற்றிய உரையாடல்கள்’ (1563) என்கிற நூல் மிகவும் புகழ்பெற்றது. இது இந்திய தாவரங்கள், மூலிகைகள் குறித்த விரிவான முதல் ஐரோப்பிய நூலாகும்.
கருமிளகு, சுக்கு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கற்பூரம் போன்ற பல இந்தியச் செடிகள் மற்றும் கனிமங்களின் மருத்துவப் பயன்பாடுகளை அதில் அவர் முறையாகப் பதிவு செய்திருந்தார். ஐரோப்பிய மருத்துவ மற்றும் இயற்கை வரலாற்று உலகில் அந்த நூலில் இடம்பெற்றிருந்த குறிப்புகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் உரையாடல் பாணியில் அந்நூல் எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக, இந்திய மூலிகை மருத்துவ அறிவும் ஐரோப்பிய மருத்துவ அறிவும் அதில் ஒப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் கரோலஸ் கிளூசியஸ் என்பவர் இதை லத்தீனில் மொழிபெயர்த்து 1567இல் வெளியிட்டார். அதனால் ஓர்டாவின் ஆய்வுகள் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் விரைவாகப் பரவின. கார்சியா டா ஓர்டாவின் இந்தப் பணி இந்திய இயற்கை வரலாற்றில் மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் மூலிகை மருத்துவ அறிவை உலகளாவிய அறிவியல் வரலாற்றுடன் அவர் இணைத்தார்.
இதன் மூலம் பின்னாளில் வில்லியம் ராக்ஸ்பர்க், ஜோஹன் ஜெரார்ட் கோனிக் போன்ற இயற்கை வரலாற்றாய்வாளர்கள் மேற்கொண்ட பணிகளுக்கு அவர் அடித்தளமாக இருந்தார். இதெல்லாம் இருப்பினும், மற்ற காலனி ஆட்சிகளில் இருந்ததைப் போலவே போர்த்துகீசிய ஆட்சியின்போது வணிகச் சுரண்டலுக்காக இயற்கை பயன்படுத்தப்பட்டது.
பசுமை வளங்களைப் பாதுகாப்பதற்கான எந்த சட்டங்களும் அச்சமயம் அமலில் இல்லை. போர்த்துகீசிய கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் புலிகள், கரடிகள், மயில்கள் போன்றவற்றை வேட்டையாடினார்கள். அப்போது இருந்த உலகத்தர அளவீடுகளுக்கு ஏற்ப தாவரங்களை அடையாளப்படுத்தும் பணி அவர்களது காலத்தின்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
(தொடரும்)

