Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

குறுநிலத் தலைவர்கள் #10 – பழுவேட்டரையர்கள்

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்

கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்

மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்

பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே.

சிறுபழுவூர் எனப்படும் இன்றைய அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் காணப்படும் ஆலந்துறை மகாதேவர் கோயில், திருஞானச்சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாக உள்ளது. இக்கோயிலில் இறைவனுக்குப் பூஜை செய்வோர் மலையாள நாட்டு அந்தணர்கள் ஆவர் என சம்பந்தர் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். எனில், சேர தேசத்தினர் அவ்வுரிமையைப் பெற்றிருப்பதன் மூலம் சோழ நாட்டில் வலிமையான தகுதிவாய்ந்தவர்களாகக் கருதப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. பழுவூர் அரசர்களான பழுவேட்டரையர்கள் சேரரின் மரபினைச் சேர்ந்தவர்கள் என அன்பில் செப்பேடு வாயிலாக அறிய முடிகிறது.

பழுவூரின் இறைவனான சிவன் பாசங்களைக் கடந்தவன். திரிசூலம் ஏந்தி, மறைபொருளாய் நின்று மனிதர்களுக்குத் தத்துவம் உரைத்திடுபவன். இவ்விறைவன் வாழும் இடம், நன்மக்கள் நிறைந்த சோலைகள் நிறைந்த பழுவூராகும் என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார். வெண்காந்தள் மலர்களையும் அரவத்தினையும் தன் தலையில் ஏந்தியுள்ள இறைவனின் புகழினை எடுத்துரைக்கும் பாடல்களை பழுவூரின் மாளிகைகளின் மீதுஏறி மகளிர் இசைத்து மகிழ்கின்றனர் என்று ஞானசம்பந்தர் விளக்கியுள்ளார்.

முப்புரம் எரித்து சாம்பலாக்கிய திரிபுராந்தக மூர்த்தியாகிய சிவனை, தாமரை மலரினை ஒத்த மகளிர். இனிய பாடல்களுடன் ஆடல்புரிந்து போற்றுகின்ற இடம் இப்பழுவூராகும் என்றும் இவ்வூரைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

திருஞானசம்பந்தரின் காலமான 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இங்கு மலையாள தேசத்தவரின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதால், களப்பிரர் வீழ்ச்சிக்குப் பின் இப்பகுதியில் மலையாள தேசத்தவர்கள் குடியேற்றம் நிகழ்ந்திருக்க கூடும். இங்குள்ள கல்வெட்டு ஒன்று, இப்பகுதியில் திருவிழாவின்போது சாக்கைக்கூத்து ஆடப்பட்டதைத் தெரிவிக்கிறது. சாக்கைக்கூத்து என்பது இன்றைய கேரளாவில் ஆடப்படும் கதகளி எனும் ஆடல்வகையினைப் போன்றதாகும்.

பழு – ஆல், அதாவது ஆல்மரமாவது இக்கோவிலின் தல மரமாதலின் பழுவூர் என்று இவ்வூர் பெயர் பெற்றது, இவ்வூர் இறைவன் பெயர் கூட ஆலந்துறையார்தான்.

பழுவேட்டரையர் என்ற சொல்லின் மையத்தில் அமைந்துள்ள ‘வேட்ட’ அல்லது ‘வேடு’ என்ற வார்த்தை வேட்டைத் தொழிலைக் குறித்திடும் சொல்லாகக் கருதலாம். இதனடிப்படையில் சேர நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வந்து வேட்டைத் தொழிலை மேற்கொண்ட குடியினராக இவர்களைக் கருதலாம்.

இன்று கீழையூர் என்றழைக்கப்படும் பகுதி அந்நாளில் அவனிகந்தர்வபுரம் என்றழைக்கப்பட்டிருந்தது. மன்னு பெரும் பழுவூர் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகின்றது. இருப்பினும் மன்னுபெரும்பழூவூர் என்ற இப்பகுதி மேலப்பழுவூர் மற்றும் கீழப்பழுவூர் பகுதியை உள்ளடக்கியதாக இருந்துள்ளது. இப்பகுதிகளில் கீழையூரில் அவனிகந்தர்ப்ப ஈஸ்வர கிரகம் என்ற சிவலாயம், மேலப்பழுவூரில் சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படும் திருத்தோற்றமுடையார் கோயில், கீழப்பழுவூரில் ஆலந்துறையர் மகாதேவர் கோயிலும் அமைந்துள்ளன. இக்கற்றளிகள் யாவும் பழுவேட்டரையர்கள். சோழ மன்னர்களாகிய ஆதித்தன் மற்றும் பராந்தகனுக்குச் சார்புடைய குறுநில மன்னர்களாகத் திகழ்ந்தபோது ஆதித்தன் மற்றும் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டவை.

குறுநில மன்னர்கள் என்ற நிலையில் கி.பி.881-893க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த குமரன் கண்டன் என்ற பழுவேட்டரையர் மன்னரைப் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு திருவையாற்றிலுள்ள பஞ்சநதீஸ்வரம். கோயிலில் இடம்பெற்றுள்ளது.

முதலாம் ஆதித்தன் என்றழைக்கப்படும் ராஜகேசரியின் 10ஆம்(கி.பி.881) ஆட்சியாண்டு கல்வெட்டில், கோயிலுக்குக் கொடையளித்த செய்தியில் அந்நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடும்போது, கிழக்கு மற்றும் வடக்கெல்லையில் இருந்த குமரன் கண்டனின் நிலப்பகுதி, கொடையளிக்கப்பட்ட செய்தி விளக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் அடிப்படையில் பழுவேட்டரையர்கள் ஆட்சியினைப் பற்றிய தரவுகள் முதன்முறையாக ஆதித்தனின் 10வது ஆட்சியாண்டின் தொடக்கத்தில் கிடைப்பதை உறுதிசெய்ய முடிகிறது.

இராஜகேசரி எனப்படும் முதலாம் ஆதித்தனின் 13ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் பகைவிடத்து ஈஸ்வர தேவனார் என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளது. இப்பகைவிடத்து ஈஸ்வரத்து தேவனாரை பழுவேட்டரையர் தகப்பனார் என்றும் முதலாம் ஆதித்த சோழனுக்கு துணையாக இன்றைய உடையார் பாளையம் பகுதியில் ஆட்சி செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும் இவர் விஜயாலயன் ஆட்சிக்காலத்திலேயே குறுநில மன்னர் என்ற நிலையில் இருந்திருக்கலாம். இவருக்குப் பின் குமரன் கண்டன், குமரன் மறவன், கண்டன் அமுதனார், கோதண்டன் தப்பிலிதர்மன், அம்பலவாணன், பழுவூர் நக்கன், விக்ரமாதித்த பழுவேட்டரையர், விக்ரம சோழ பழுவேட்டரையர் போன்றோர்களின் கல்வெட்டுகள் கிடைக்கிறது.

குமரன் மறவன்

 கி.பி.893-913இல் ஆட்சி புரிந்த இம்மன்னன் தொடர்பான செய்திகளை ராஜகேசரியின் கல்வெட்டு ஒன்று குமரன் மறவன் என்பவர் பழுவேட்டரையர் பிரிவைச்சார்ந்த படைத்தளபதி என்று குறிப்பிடுகிறது.

வால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் காணப்படும் பரகேசரியின் 5ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன் 80 கழஞ்சு பொன்னை இக்கோயிலுக்குக் கொடையளித்த செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தது ஆகும். ராஜகேசரி முதலாம் ஆதித்தனின் 22வது ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மேலப்பழுவூரில் உள்ள அவனிகந்தப்ப ஈஸ்வரகிரகத்தில் உள்ள இரட்டைக் கோயிலுக்கு குமரன் மறவனின் அனுமதியுடன் விளக்கு தானம் செய்த செய்தி விளக்கப்பட்டுள்ளது. கி.பி.893இல் குமரன் கண்டனைத் தொடர்ந்து முதலாம் பராந்தகன் காலத்திலும் இவர் ஆட்சி புரிந்துள்ளார். முதலாம் பராந்தகனின் 5ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த லால்குடி கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. முதலாம் பாராந்தகன் மனைவிகளில் ஒருவரான பழுவேட்டரையர் குல இளவரசி குமரன் மறவனின் மகளாக இருக்கலாம். முதலாம் பராந்தகனின் 17வது ஆட்சியாண்டு கல்வெட்டுக் கொடையாளியாகக் குறிக்கப்பட்டுள்ள இப்பெண், பழுவேட்டரையரின் மகள் அருள்மொழி நங்கை என்பவராவார்.

கண்டன் அமுதன்

கி.பி.913 முதல் 921 வரை இம்மன்னரின் கல்வெட்டுகள் கீழப்பழுவூர் ஆலந்துறை கோவில் மற்றும் திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலும் கிடைக்கிறது. ஆலந்துறையார் கோயிலில் காணப்படும் கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 12ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும். முதலாம் பராந்தகன் மற்றும் பாண்டியன் இராஜசிம்மனுக்கு இடையே நடைபெற்ற போர் தொடர்பான செய்தி இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இப்போரில் சோழர்களுக்காக கண்டன் அமுதன் பங்கேற்றுள்ளார்.

திருவையாற்று பஞ்சநதீஸ்வரர் கோவிலில் பராந்தகரது 14ஆம் ஆட்சியாண்டில் இவர் இடம் பெறுகிறார். அதன்பின் அவர் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை.

கோதண்டன் தப்பிலிதர்மன்

கண்டன் அமுதனார் மற்றும் மறவன் கண்டன் ஆகிய இரு பழுவேட்டரையர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சில காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தவர் கோதண்டன் தப்பிலி தர்மன் என்பவராவார்.

உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள பரகேசரியின் 2வது ஆட்சி ஆண்டில் இப்பெயர் காணப்படுகிறது. பரகேசரி என்பது உத்தம சோழன் என்று கல்வெட்டு அறிக்கையில் காணப்பட்ட போதிலும் கோதண்டன் என்ற பெயர் முதலாம் பராந்தகனின் மகன் இராஜாதித்தனின் மற்றொரு பெயராகும். பொதுவாக குறுநில மன்னர்கள் தங்கள் சார்ந்துள்ள மன்னர்களின் பெயர்களைத் தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளும் மரபின் அடிப்படையில் தப்பிலிதர்மன் பெயருடன் கோதண்டன் என்று இடம்பெற்றிருக்கலாம் இதனடிப்படையில் இராஜாதித்தனின் (கி.பி.947- கி.பி.949) காலத்தில் இம்மன்னன் இருந்திருக்கலாம் என்று கருதலாம். இவர் மன்னராக இருந்தாரா அல்லது இராஜாதித்தரின் முக்கிய அலுவலராக இருந்தாரா? என்ற ஐயம் இன்றும் நீடிக்கிறது. ஏனெனில் உடையார்குடி தவிர வேறெங்கிலும் இவர் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறவில்லை.

பழுவேட்டரையர் விக்ரமாதித்தர்

உத்தமசோழரின் 8ஆம் ஆட்சியாண்டில் இவர் குறித்த கல்வெட்டு ஒன்று ஆலந்துறையார் கோவிலில் உள்ளது. இதில் பழுவேட்டரையர் விக்ரமாதித்தரின் மனைவி காமன் கோவியார் என்பவர் சிறுபழுவூர் சபையிடம் 12 ஆடுகள் கொடுத்து கோவிலுக்குத் தினமும் ஒரு பிடி நெய்த்தானம் வழங்கியுள்ள செய்தியைத் தெரிவிக்கிறது. இவர் குறித்து வேறு செய்திகள் இல்லை.

மறவன் கண்டன்

கி.பி.960-985-க்கும் இடைப்பட்ட காலத்தில் மறவன் கண்டன் ஆட்சிப்புரிந்தார். கோதண்டதப்பிலிதர்மனைத் தொடர்ந்து இவன் ஆட்சிப் பொறுப்பேற்றார். இராஜகேசரி சுந்தரசோழன் எனும் இரண்டாம் பராந்தகனின் 5ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இவர் முதன்முதலாக இடம் பெறுகிறார். இம்மன்னனின் கல்வெட்டுகள் மேலப்பழுவூர் அவனிகந்தர்ப்ப ஈஸ்வர கிரக கோவிலில் உள்ளது.

சுந்தர சோழனின் ஆட்சிக்காலத்தில் மறவன் கண்டன் சிறப்புத் தகுதி பெற்ற ஓர் குறுநில மன்னனாகத் திகழ்ந்துள்ளார் என்பதை, கோவிந்த புத்தூரில் உள்ள ஸ்ரீ விஜய மங்களத்து மகாதேவர் கோயிலுக்கு மன்னபெருமாள்சாமி என்ற அரசு அலுவலரைப் பணியமர்த்தி கொடையளித்த கல்வெட்டுச் செய்தியின் வாயிலாக அறிய முடிகிறது.

கீழப்பழுவூரில் காணப்படும் திருஆலந்துறை மகாதேவர் கோயிலின் சிகரம் மறவன் கண்டனால் வைக்கப்பட்டதை அங்கு கிடைத்துள்ள ஒரு கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. பரகேசரி உத்தமசோழனின் மனைவியான பஞ்சவன் மாதேவி என்பவள் மறவன்கண்டனின் மகள் என்று கல்வெட்டு சான்றுகளின் மூலம் அறிய முடிகிறது.

இம்மன்னன் இறந்தபின் இவரது மகனான கண்டன் மறவன் என்பவர், அவர் நினைவாக ஒரு பள்ளிப்படைக் கோவிலை எழுப்புகிறார். இன்று அக்கோவிலை அடையாளம் காண முடியாவிடினும், அப்பள்ளிப்படை குறித்த தகவல் நமக்குக் கிடைக்கிறது.

அக்கல்வெட்டின் வாசகம்

1.க்காக…..

2.டுப்பித்த பள்ளிப்படை ஸ்ரீகண்டஈ…..

3.வட்டரையர் கண்டன் மறவனா…..

4.து தரவேண்டுமென்று கொங்….

5.யக் கிழவரோமும் அடிகள்….

6.ர் எடுப்பித்த பள்ளிப்படை ஸ்ரீகண்டஈ….

7.றப் பொன்னும் அந்தராயமும்…….

 (ARE 128 of 1987-88)

மேற்குறிப்பிட்ட தகவலையளிக்கும் இந்தக் கல்வெட்டு இன்று ஆலந்துறையார் கோவிலின் அலுவலகத்தின் சுவற்றில், சுண்ணாம்புப் பூச்சில் சிக்கிக் கொண்டுள்ளது.

கண்டன் மறவன்

மறவன்கண்டனின் மகனாகக் கருதப்படும் இவர் கி. பி.985இல் ஆட்சிக்கு வந்ததாக அறியப்படுகிறது. இவர் ஏறக்குறைய முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஏழு ஆண்டுகள் வரையிலும் முழுமையாகச் செயல்பட்டதை அறிய முடிகிறது.

பரகேசரி உத்தம சோழனின் 12வது ஆட்சியாண்டு கல்வெட்டில், கண்டன் மறவன் தனது சகோதரனான சத்ரு பயங்கனார் என்பவர் நலம் கருதி வீரநாரயண சதுர்வேதி மங்கலத்திலுள்ள கோவிலில்

ஐந்து பிராமணர்களுக்கு அன்னதானம் அளித்திட ஓர் அறைக்கட்டளை அமைப்பினை உருவாக்கியதோடு, நந்தா விளக்கெரிக்கக் கொடையளித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. தென்னாற்காடு மாவட்ட எல்லைக்குள் பழுவேட்டரையர் தொடர்பாகக் கிடைக்கப் பெற்றுள்ள முதல் கல்வெட்டு இதுவாகும்.

பழுவேட்டரையர் கண்டன்மறவன், குன்றக்கோட்டத்தின் நாட்டார்களுக்கு அளித்த ஆணை ஒன்றில் ஓரத்தூர் என்ற கிராமத்தின் பெயர் கருப்பூர் என்று மாற்றம் பெற்று அப்பகுதியில் பெறப்பட்ட வரி உரிமையை மருதூர் காடன் மதிராயரிடமிருந்து செம்பியன் வீரநாட்டு கோணார் எனப்படும் வேங்கடவன் அரங்கன் என்பவனுக்கு மாற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. இது உத்தம சோழனின் (கி.பி.1985) 15வது ஆட்சிக் காலத்திய கல்வெட்டாகும்.

அவனிகந்தர்ப்ப ஈஸ்வர கிரகத்தில் காணப்படும். இக்கல்வெட்டுகள் வாயிலாக பழுவேட்டைரையர்களின் நிலம் மற்றும் வரி நிர்வாக அமைப்பு முறை தெளிவாகப் புலப்படுகிறது. முதலாம் இராஜராஜனின் 7வது ஆட்சியாண்டு கல்வெட்டில் கண்டன்மறவன் மேலபழுவூரில் உள்ள திருத்தோற்றமுடையார் கோயிலை எடுப்பித்ததையும் அக்கோயிலுக்கு முதலாம் இராஜராஜன் மனைவி நிலக்கொடை வழங்கிய செய்தியையும் அறிய முடிகிறது.

முதலாம் இராஜராஜன் காலத்தில் பழுவேட்டரையர்கள் மற்றும் சோழர்களுக்கான மண உறவு தொடர்ந்து வளர்ந்துள்ளது என்பதைக் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. கண்டன்மறவன் என்ற பழுவேட்டரையன் இளைய ரனமுகராமன் என்ற சிறப்புப் பட்டப் பெயரினைப் பெற்றிருப்பதாக திருவாலந்துறை கோவில் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவருக்குப் பின் பழுவேட்டரையர்கள் முழுமையான வரலாற்றினை அறிய முடியவில்லை. ராஜேந்திர சோழனின் 8ஆம் ஆட்சியாண்டில், மன்னுபெரும் பழுவூரில் இருந்து ஆட்சி செய்த அடிகள் பழுவேட்டரையர் என்பவனின் பணியாளர் (பெண்டாட்டி) வீராணன் ஒற்றியூர் என்பவர் சிறுபழுவூர்ச் சபையாரிடம் 50 காசுகள் முதலீடாகக் கொடுத்து ஆலந்துறையார் கோயிலில் சித்திரைவிஷு, ஐப்பசி விஷு, உத்திர அயனம், தட்சிண அயனம் ஆகிய நான்கு நாட்களில் இறையனுக்குத் திருமஞ்சனம் செயவித்து நான்கு தூணி அரிசியில் ஆக்கிய பெருந்திருவமுது படைக்கவும் ஏற்பாடு செய்தார். இப்பொறுப்பைச் சிறுபழுவூர் சபையார் ஏற்று நடத்த ஒப்புக் கொண்டனர். என்ற தகவல் ஆலந்துறையார் கோவில் கல்வெட்டில் உள்ளது. இக்கல்வெட்டிலும் பொதுவாக பழுவேட்டரையர் என கூறப்படுகிறதே தவிர, மன்னர் பெயர் வரவில்லை.

7ஆம் நூற்றாண்டில் கேரளத்திலிருந்து குடியேறிய பழுவூர் அரச மரபு சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் நிலைபெற்றிருந்தது. ராஜராஜன் காலம் வரையிலும் அதிகாரம் செலுத்திய இம்மரபினர். ராஜேந்திரசோழனின் காலத்திற்குப் பின் வீழ்ச்சியை சந்தித்தனர். இறுதியாக, திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில், குணலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கல்பாளையம் எனும் ஊர். இங்குள்ள அய்யனார் சிலையருகே காணப்படும் பலகைக் கல்லில் உள்ள கல்வெட்டில் சனநாதநல்லூர் காணியுடைய புத்தாம்படையான் பழுவேட்டரையன் என்பார் பெருவாய்க்கால் வெட்டி, குளங்கள் கண்ட தகவல் கிடைக்கிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு. 13ஆம் நூற்றாண்டில் காணியுடைய சீறூர் கிழாராய் விளங்கியுள்ளனர். அதன் பின் இவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *