மதமும் தத்துவமும்
இந்தியாவில் நடந்திருக்கும் மதங்களின் வளர்ச்சி எப்படியாக இந்தியத் தத்துவ மரபின் விதைகளையும் தன்னுள்ளே கொண்டிருந்திருக்கிறது என்று சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் தத்துவம் என்பது மதத்தை மறுதலிக்கக்கூடியது அல்ல; மதத்தின் நிறைவு, முழுமையே தத்துவம். அது மதங்களின் உச்சம். இந்தியாவின் தத்துவப் பிரிவுகளில் மிக மிகப் பழமையானது வேதாந்தம். அதாவது வேதங்களின் இறுதி; வேதங்களின் இலக்கு; வேதங்களின் உன்னதமான நோக்கம்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த மிகப் பழமையான இறையியலாளர் பக்கம் மீண்டும் திரும்புவோம். அவருக்கு முன்பு கூட மொத்தக் கடவுள்களில் மூன்று கடவுள்கள் மட்டுமே உருவாகியிருந்தனர். பூலோக தெய்வங்கள், வாயு லோக தெய்வங்கள், விண்ணில் உறையும் கடவுள்கள் இவர்களே பல்வேறு பெயர்களில் எழுந்தருளும்படி வேண்டிக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சீனாவிலும் இதே விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. கன்ஃபூசியஸ் இளவரசர் சுங்கிடம் சொல்கிறார்: விண்ணை மகிமைப்படுத்துங்கள் (தேவர்களை வணங்குங்கள்); முன்னோரை மதியுங்கள் (பித்ருக்களை வழிபடுங்கள்); இவற்றைச் செய்தால் சூரியனும் சந்திரனும் சரியான ஒழுங்கில் சரியான நேரத்தில் அனைத்தையும் செய்யும் (ரிதம் காக்கப்படும்).
வேத கால ரிஷி, உண்மையில் இருப்பது ஒரே ஒரு கடவுள் மட்டுமே என்கிறார். ஆனால் அவரை அனைத்துக்கும் மேலான கடவுள் என்றோ அரசர் என்றோ படைத்து, காத்து, ஆட்சி செய்யும் நபர் என்றோ சொல்லவில்லை. ஆத்மன் (பரமாத்மா) என்று சொல்கிறார். இந்த ஆத்மாவை அதன் தெய்விகத் தலைமைக் குணத்தால் பல்வேறு வழிகளில் போற்றிப் புகழ்கிறார். மேலும் அவர் பிற கடவுள்கள் எல்லாம் ஒரே ஆத்மாவின் பல்வேறு அங்கங்களே என்று சொல்கிறார். அப்படியாக ஒவ்வொரு ரிஷியும் தாம் புகழ்ந்து பாடும் இறை அம்சத்தை அவற்றின் இயல்புக்கு ஏற்ப புகழ்கிறார்கள்.
இது உண்மையில் பழங்கால கவியின் வார்த்தைகள் அல்ல. இது இறையியல் தத்துவவாதியின் மொழி. இருந்தும் இந்தத் தத்துவ சிந்தனை கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான். அதற்கு முந்தையது அல்ல. வேத ஸ்லோகங்களில் இதன் வேர்கள் இருப்பதைப் பார்க்க முடியும். அவர்கள் மித்ரா, வருணன், அக்னி பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அவரே விண்ணில் உறையும் கருத்மான் பறவை. இருப்பது ஒன்றே. அதையே யமா, அக்னி, மாதரிஸ்வான் என்று பல பெயர்களில் ரிஷிகள் அழைக்கிறார்கள்.
இன்னொரு பாடலில் சூரியன் ஒரு பறவையைப் போன்றது என்று சொல்லப்படுகிறது: ‘ஞானிகள் ஒன்றாக இருக்கும் அந்தப் பறவையை (சூரியனை) பல பெயர்களில் அழைக்கிறார்கள்’.
இவையெல்லாமே புராணங்களுடன் தொடர்புடையது. ஆனால் வேறு சில ஸ்லோகங்களில் இருந்து துல்லியமான வெளிச்சம் நம்மீது பாய்கிறது.
‘அவர் பிறந்ததை யார் அறிவார்கள்? எலும்புகளே இல்லாதவர் எலும்புகள் கொண்டவரை எப்போது ஜனிப்பித்தார்? உலகின் சுவாசம், ரத்தம், ஆத்மா எல்லாம் எங்கிருந்தது? யார் சென்று எதனிடம் இதைக் கேட்டனர்?’
இங்கும் இந்த விளக்கம் கொஞ்சம் புரியாததாகத்தான் இருக்கிறது. ஆனால் ‘ஆவி உற்சாகமானது; மாம்சமோ பலவீனமுள்ளது’ தானே. எலும்புகள் உள்ளது என்பது கண்ணால் பார்க்க முடிந்த தெளிவான உருவம் கொண்ட ஒருவரைக் குறிக்கிறது. எலும்புகள் அற்றவர் என்பது உருவமற்ற, யாருமில்லாத ஒன்றை, பார்க்க முடியாத ஒன்றைக் குறிக்கிறது. உலகின் சுவாசம், ரத்தம், ஆத்மா என்பது எத்தனையோ முயற்சிகள் செய்தாலும் என்னென்ன பெயர்கள் சூட்டினாலும் என்னென்ன கோட்பாடுகள் முன்வைத்தாலும் புரிந்துகொள்ளமுடியாதது. அது பெயரிடப்படமுடியாததும் கூட.
வேத இலக்கியங்களின் இரண்டாம் காலகட்டத்தில் அதாவது பிரமாணங்கள் எழுதப்பட்ட காலத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் உபநிடதங்கள் அல்லது வேதாந்தங்கள் எழுதப்பட்டபோது இந்தத் தத்துவ சிந்தனைகள் மிகத் தெளிவாக, நன்கு வரையறுக்க முடிந்ததாக முன்னேறிவிட்டிருக்கின்றன. ஆரம்ப வேத ஸ்லோகங்களில் முளைவிடத் தொடங்கிய மத சிந்தனைகள் வளர்ந்து வளர்ந்து இங்கு முழுமையை அடைகின்றன. ஒரு வட்டம் முழுமை அடைகிறது.
அனைத்துக்கும் அப்பாலான அந்த ஒன்றை பல்வேறு பெயர்களில் அழைக்கவும் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதற்குப் பதிலாக அனைத்துப் பெயர்களும் இப்போது ஒன்றையே குறிப்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. பழைய பெயர்கள் எல்லாம் இந்தக் காலகட்டத்தில் வெளிப்படையாகக் கைவிடப்பட்டன. பிரஜாபதி (உயிர்களின் அதிபதி), விஸ்வகர்மா (அனைத்தையும் படைத்தவர்), தாத்ரி (சிருஷ்டி கர்த்தா) போன்ற பெயர்கள் எல்லாமே அந்த அப்பாலான ஒன்றைச் சொல்லப் போதுமானதாக இல்லை என்று சொல்லிக் கைவிடப்பட்டுவிட்டன.
இப்போது பயன்படுத்தப்படும் பெயர் ஆத்மன் (பரமாத்மா). நமது சுய ஆளுமை சார்ந்த தனிப்பட்ட ஆத்மா (ஜீவாத்மா) என்பதையும்விட புதிரானது. மேலானது. அனைத்துப் பொருட்களின் ஆத்மா. அனைத்து தெய்வங்களின் ஆத்மா. பல்வேறு கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. அவை அனைத்துக்கும் அப்பாலாகவும் அனைத்துள்ளாகவும் இருக்கும் ஒன்றைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட பெயர்கள். இறுதியாக ஒவ்வொரு உயிருக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் அனைத்து உயிர்களுக்குள்ளுமாக இருக்கும் பரமாத்மனை உணரவேண்டும். தன்னுடைய சுய ரூபத்தை, தன்மையை உணரவேண்டும்.
முதல் விரிவுரையில் தந்தையால் பலியிடப்பட்ட சிறுவன் ஒருவனைப் பற்றிய கதையைக் குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். இறந்தவர்களின் உலகை ஆளும் எமனைச் சென்று சந்திக்கும்போது அந்தச் சிறுவனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். அதில் மூன்றாவதாக, இறந்த பின் ஒருவர் என்னவாக ஆகிறார் என்பதைச் சொல்லவேண்டும் அதுவே மூன்றாவது வரம் என்று கேட்கிறான். உபநிடதங்களின் ஒரு பாகமாக இந்த உரையாடல் இடம்பெற்றிருக்கிறது. அது வேதாந்தத்தின் பாகம். வேதங்களின் உச்சம் வேதாந்தம். அதிலிருந்து சில வரிகளை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.
இறந்தவர்களின் அதிபதி எமன் சொல்கிறார்:
‘மனிதர்கள் அறிவற்றவர்கள்; அறியாமையில் உழல்கிறார்கள். தம்மைத் தாமே அறிவாளிகளாகச் சொல்லிக்கொள்ளும் அவர்கள் பயனற்ற அறிவைச் சுமந்து திரிகிறார்கள். இங்குமங்குமாக முன்னும் பின்னுமாக அலைகிறார்கள். ஒரு குருடர் இன்னொரு குடருக்கு வழிகாட்டுவதுபோல் அலைகிறார்கள்.
கவனமற்றுத் திரியும் குழந்தைக்கு எதிர்காலம் புலப்படாமல் இருப்பதுபோல் செல்வம் குறித்த மாய மயக்கங்களினால் பீடிக்கப்பட்ட மனிதர்களுக்கு சத்தியம் புலப்படாது. அவர்கள் வாழும் இந்த உலகமே உண்மை என்று அவர்கள் நம்புகிறார்கள். வேறொரு உலகம் இல்லை என்று நினைக்கிறார்கள். அதனால் மீண்டும் மீண்டும் இறப்புச் சுழலுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.
ஆத்மாவைக் குறித்து ஒருமுகப்பட்டு தியானிக்கும் ஞானியர் கண்ணால் காண முடியாத, இருளுக்குள் நுழைந்திருக்கக்கூடிய, குகைகளில் மறைந்திருக்கும், மறைந்து வாழும் சனாதனமானதொன்றை கடவுளாக உணர்கிறார்கள். அவர்கள் இன்ப துன்பம் அனைத்தையும் கடந்த நிலையை அடைகிறார்கள்.
ஆத்மன் அனைத்தையும் அறிந்தவர். பிறப்பதும் இல்லை; மறைவதும் இல்லை. அது சூன்யத்தில் இருந்து தோன்றியது. எதுவாகவும் ஆகவும் இல்லை. பரமாத்மா பிறக்கவில்லை. எனவே அழிவற்று சனாதனமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆத்மனைக் கொல்லவே முடியாது. உடல் அழியும்.
ஆத்மன் சிறியதினும் சிறியது; பெரியதினும் பெரியது. அனைத்து உயிர்களுக்குள்ளும் மறைந்திருக்கிறது. ஆசைகளும் சோகங்களும் அற்றவர் ஆத்ம தரிசனத்தை சிருஷ்டிகர்த்தாவின் பெரும் கருணையினால் புரிந்துகொள்கிறார்.
ஓரிடத்தில் நிலையாக அமர்ந்தபடியே உலகமெல்லாம் வலம் வருவார். படுத்த நிலையிலேயே எல்லா இடங்களுக்கும் சென்றும்விடுவார். தன்னைத் தான் அறிபவர் கடவுளை அறிவார். அவர் ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்.
வெறும் வேத பாராயணம் மூலம் ஆத்மனை உணரமுடியாது. அர்த்தம் புரிந்துகொள்வதால் உணரமுடியாது. மேலும் மேலும் கற்றுக் கொள்வதாலும் முடியாது. ஆத்மன் தேர்ந்தெடுப்பவர்களாலேயே ஆத்ம ஞானத்தைப் பெற முடியும்.
ஆத்மன் தனதாக ஒன்றைத் தானாகவே தேர்ந்தெடுக்கிறது. துர்குணங்கள் நீங்கி தூய்மையடைந்திருக்காவிட்டால், அமைதியும் உள்ளொடுங்குதலும் இல்லாவிட்டால், சஞ்சல மனதுடன் இருந்தால் என்ன கல்வி கற்றிருந்தாலும் ஆத்ம ஞானத்தை அடையவே முடியாது.
மேலும் கீழும் உள்ளும் புறமும் சென்று வரும் சுவாசத்தால் ஓர் உயிர் உயிர்வாழவில்லை. வேறொன்றே உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம். அதிலேயே இரண்டும் அடங்குகிறது.
இப்போது நான் பரபிரம்மம் என்ற புதிரின் விடையைச் சொல்கிறேன். இறந்த பின் ஓர் ஆத்மாவுக்கு என்ன நடக்கிறது என்பதையும் சொல்கிறேன்.
தமது வினைகள் மற்றும் ஞான நிலைக்கு ஏற்ப சிலர் மீண்டும் உயிரினங்களாகப் பிறக்கிறார்கள். மற்றவர்கள் கல்லாகவும் மண்ணாகவும் ஆகிறார்கள்.
அனைத்து உயிர்களும் உறங்கும்போதும் அதனுள் விழித்திருப்பவர்; ஒன்றன் பின் ஒன்றாக அழகிய உலகை, காட்சிகளை கணந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருப்பவர்; அவரே ஒளியானவர்; அவரே பிரம்மன். அவரே அழிவற்றவர். அனைத்து உலகங்களின் ஆதார சக்தி; அனைத்தையும் தாண்டிச் செல்பவர்; தத் த்வம் அஸி. நீயே அதுவாக இருக்கிறாய். அஹம் பிரம்மாஸ்மி. நானே அது.
அக்னி இந்த உலகுக்குள் நுழைந்த பின்னர் எதை எரிக்கிறதோ அதற்கேற்ப மாறுவதுபோல் பரமாத்மா உலகில் உள்ள உயிர்கள் அனைத்தினுள்ளும் கலந்த பின்னர் வெவ்வேறாக ஆகிறது. ஆனால் அது அனைத்துக்கு அப்பாலும் இருக்கிறது.
உலகின் கண்ணாகிய சூரியன் அதனால் பார்க்க முடிந்த மாசுகளால் துளியும் களங்கப்படாமல் இருப்பதுபோல் பரமாத்மாவானது அனைத்துக்குள் கலந்த பின்னும் இந்த உலகில் தென்படும் எந்தவொரு துயரங்களினால், உணர்வுகளால் பாதிக்கப்படாமல் தனித்துத் தானாக இருக்கவும் செய்கிறது.
அழிவற்ற சிந்தனையாளர் அழியும் சிந்தனைகளையெல்லாம் சிந்தித்தவண்ணம் இருக்கிறார். அவர் ஒருவரே… ஆனால் பலருடைய ஆசைகளைப் பூர்த்திசெய்கிறார். தமக்குள் பரமாத்மாவை தரிசிக்கும் ஞானிகளுக்கு அழிவற்ற ஜீவிதம் கிடைக்கும். நிரந்தர அமைதி கிடைக்கும்.
பிரம்மத்திலிருந்து பிரிந்த உலகம் அவருடைய மூச்சுக்காற்று பட்டாலே நடுங்கும். பர பிரம்மம் உருவிய வாளைப் போல் படு பயங்கரமானது. இந்த உண்மையை உணர்பவர்கள் அழிவின்மையை அடைவார்கள்.
வாக்கினால் பிரம்மத்தை எட்ட முடியாது; மனதால் புரிந்துகொள்ள முடியாது; கண்ணால் பார்க்க முடியாது. நானே அது; அவரே எல்லாம் என்று உணர்பவர் அல்லால் வேறு யாராலும் அவரைப் புரிந்துகொள்ளமுடியாது.
மனதில் எழும் ஆசைகள் எல்லாம் மறைந்தபின், அழியும் எல்லாம் அழிவற்ற நிலையை பரப்பிரம்ம நிலையை அடைகிறது.
இதயத்தின் அனைத்து எண்ணத் துடிப்புகள் எல்லாம் நின்று, பந்த பாசங்கள் எல்லாம் அறுந்து போனபின் அழியும் உடல்கள் அழிவற்ற நிலையை அடையும்.
இதற்கு மேல் அறிந்துகொள்ள எதுவும் இல்லை.
இதுவே வேதாந்தம். வேதங்களின் அந்தம். இதுவே வேத மதம் அல்லது தத்துவம் என்று நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். இதுவே கி.மு.500 தொடங்கி இன்றுவரை தொடர்ந்து நீடித்துவருகிறது. முன்னோர்-பித்ரு வழிபாடுகள், சிராத்தங்கள், ஜாதிச் சடங்குகள் அல்லாமல் இந்தியர்களுக்கு மதம் என்று ஏதேனும் இருப்பதாகச் சொல்லமுடியுமென்றால் அது வேதாந்த தத்துவத்தில்தான் இருக்கிறது. இந்தியாவின் அனைத்து கிராமங்களில் இருப்பவர்களுக்கும் இந்தத் தத்துவத்தின் முக்கிய அம்சங்கள் தெரியும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ராஜா ராம்மோஹன் ராய் மறுமலர்ச்சியடைய வைத்த மதம் பிரம்ம சமாஜம் என்று இன்று அழைக்கப்படுகிறது. என்னுடைய கண்ணியமிகு நண்பரான கேசவ் சந்திர சென்னின் தலைமையில் உருவாக்கப்பட்ட அந்த மதம் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதாந்த சாரத்தை ஆன்மாவாகக் கொண்டது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஹிந்து சிந்தனையின் அதி தொன்மையான சிந்தனைக் காலகட்டத்துக்கும் இன்றைய அதி நவீன காலகட்டத்துக்கும் இடையில் இடையறாத தொடர்ச்சி இருக்கிறது.
இன்று வரையிலும் மதம், சடங்கு சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், சட்ட திட்டங்கள் ஆகிய விஷயங்களில் வேதங்களுக்கு மேலாக இந்தியர்கள் இன்றுவரை எதையும் அங்கீகரிக்கவே இல்லை. இந்தியா இந்தியாவாக இருக்கும்வரையில் வேதாந்தத்தின் ஆதி தொன்மையான சாரத்தை எதனாலும் அழிக்கவே முடியாது. ஒவ்வொரு ஹிந்துவும் தன் பால்யம் காலம் தொடங்கி பல்வேறு வகையான வழிபாடுகளில் (உருவ வழிபாடுகளிலும்) அது நிறைந்து காணப்படுகிறது. தத்துவ ஞானிகளின் கோட்பாடுகளிலும் ஏழை எளியவர்களின் வாய்மொழிகளிலும் பழமொழிகளிலும் அது வெளிப்படுகிறது.
அந்தவகையில் முழுக்கவும் நடைமுறைப் பயன் சார்ந்து அதாவது இந்திய மக்களில் அதி உயர்ந்தவர் தொடங்கி அதி கடை நிலையில் இருப்பவர் வரை அனைவருடைய நடத்தை, சிந்தனைகள், செயல்கள் அனைத்தின் ரகசிய ஊற்றுக்கண்ணாக இருக்கும் வேதாந்தம் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். வேதங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தியர்களின் மதம் பெற்றித் தெரிந்துகொள்ளவும் அது அவசியம். அவர்களின் தத்துவங்களுமே கூட வேதாந்தத்தின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. எனவே அப்படியான வேதாந்தம் பற்றி நாம் அறிந்துகொள்வது ஆய்வு நோக்கில் நமக்கும் அவசியமே.
அரசியலுக்கும் மதத்துக்கும் தத்துவத்தும் என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்பது எளிதுதான். ஐரோப்பாவில் கூட சில அரசியல்வாதிகள் இதைக் கேட்டிருக்கிறார்கள். இந்தியர்களே உலகத்தோர் முன்பாக மதம் சார்ந்த விஷயங்களில் பல்வேறு மாறுபட்ட சித்திரங்களை முன்வைத்திருக்கிறார்கள். என்றாலும் இன்றும் இந்தியாவில் மதமும் தத்துவமும் மாபெரும் சக்திகளாகவே இருக்கின்றன. செளராஷ்டிரா, ஜுனாகத் மற்றும் பவநகர், கோகுலஜ் – கெளரிசங்கரா ஆகிய முன்னணி நகரங்களில் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகிகளாக இருக்கும் இந்திய ராஜ தந்திர பிரமுகர்கள் சொல்லியிருப்பதைப் படித்துப் பாருங்கள்.
கோகுலாஜி சம்பத்தராம ஜாலா சிறுவயதிலேயே பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் கற்றார். பிரிட்டிஷ் அரசில் மிகவும் உயரிய பதவியில் இருக்கிறார். வெற்றிகரமான அரசியல்வாதியாக இருந்தபோதிலும் அவருடைய பிரதான விருப்பம் வேதாந்தமே. அந்த வேதாந்த சிந்தனைகள் அவருக்கு உலகின் துயரங்கள், சோகங்கள் அனைத்திலிருந்தும் விடுதலையைத் தந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் எழுதியிருப்பவற்றைப் படித்துப் பாருங்கள். வேதாந்தம் என்பது இந்தியாவில் ஒழுக்கம் மற்றும் அரசியல் சக்தியாக இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும். இதுவே அக வாழ்க்கையின் திருப்புமுனை.
புகழ் பெற்ற வேதாந்த ஞானி ராம பாவா ஜுனாகத்துக்கு வந்தபோது கோகுலஜி அவருடைய சீடரானார். இன்னொரு துறவியான பரமஹம்ச சச்சிதானந்தா, கிர்னாருக்கு ஜுனாகத் வழியா சஞ்சாரம் செய்தபோது கோகுலஜி முறையாக வேதாந்த தீக்ஷை பெற்றார். விரைவில் வேதாந்த விசாரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தார். அதிகாரத்தில் இருந்தபோதும் சரி இல்லாதபோதும் சரி தன் வாழ்நாள் முழுவதும் வேதாந்தக் கோட்பாடுகளிலேயே பெரிதும் ஆழ்ந்தார். அதுவே அவருடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியது. இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் அனைவரும் உள்ளூர் (இந்திய) அரசு அதிகாரி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான லட்சிய முன்மாதிரியாக அவரை மதித்தனர்.
நான் வேதாந்தத்துக்கு அதையும்விட அதிக முக்கியத்துவம் தரச்சொல்வேன். இந்திய குடிமைப் பணிகள் பதவிக்குச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல; தத்துவக் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவருமே கூட வேதாந்தத்தைப் படிக்கவேண்டும் என்று பரிந்துரைப்பேன். வாழ்க்கை குறித்த ஒரு பார்வையை அது முன்வைக்கிறது. தத்துவ வரலாற்றில் நம் முன் வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பார்வைகளில் இருந்தும் மாறுபட்ட பார்வை. அனைத்து தேவர்கள், தெய்வங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆத்மா – பரமாத்மாவே இருக்கிறது என்பதை உபநிடதங்களை எழுதியவர்கள் எப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அது அவசியம்.
பராமாத்மா பற்றி அவர்கள் மூன்று விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். பரமாத்மாவே அனைத்தையும் சிந்தித்து உருவாக்கி எல்லையற்ற ஆனந்தத்தில் ஆழ்ந்திருக்கிறது. பிற எல்லாமே எதிர்மறையானவையே. இது அல்ல; இது அது அல்ல. அதுவும் அல்லாததும் அல்ல – நேதி நேதி – நாம் புரிந்துகொள்ளவோ பெயரிடவோ முடியாத அனைத்துக்கும் அப்பாலானது.
அந்த அதி உன்னத உயர்ந்த ஆத்மாவான பரமாத்மாவை கடுமையான தவ ஒழுக்கம், அறிவார்ந்த சிந்தனை ஆகியவற்றின் பின்னரே கண்டுகொள்ளமுடியும். ஞான மார்க்கத்தின் அந்த சிரமங்களைத் தாண்டி அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அடுத்த நிலையிலான தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். தமது எளிய மனித அபிலாஷைகளைப் பூர்த்தி செய்துகொள்ள பக்திபூர்வமாக கவித்துவ அலங்காரமாக என்ன பெயர்கள் வேண்டுமானாலும் சொல்லி அழைத்துக்கொள்ளலாம்.
பிற தெய்வங்கள் எல்லாம் வெறும் பெயர் மற்றும் நபர்கள் மட்டுமே… ஒருவகையான முக மூடிகள் மட்டுமே என்று புரிந்தவர்கள் இந்தப் பெயர்கள், நபர்களை வழிபடுபவர்கள் எல்லாம் அந்தப் பரம்பொருளையே தம்மையும் அறியாமல் கும்பிடுகிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டிருந்தார்கள். இந்திய மதங்கள் தொடர்பான வரலாற்றில் இது மிகவும் முக்கியமான அம்சம். வேதாந்தத்தின் புகழ்பெற்ற விளக்க உரையான பகவத் கீதையில் கூட பகவான் சொல்கிறார்: ‘உருவங்களை வழிபடுபவர்களும் (உருவமற்ற) என்னையே வழிபடுகிறார்கள்’.
அக்னி, இந்திரன், ப்ரஜாபதி போன்ற பெயர்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகள் சார்ந்த புராணப் பெயர்கள் அனைத்தின் பின்னாலும் இந்தியப் பழங்காலத் துறவிகள் பரமாத்மாவே இருப்பதை கண்டுணர்ந்திருக்கிறார்கள். உடம்பின் திரையால், உலகக் காட்சிகளின் திரையால் புலன்களின் திரையால் மனம், தர்க்க சிந்தனைகள் என பலவற்றாலும் இன்னொரு ஆத்மாவான ஜீவாத்மா மறைக்கப்பட்டிருக்கிறது.
ஆத்மா தொடர்பான புராண நம்பிக்கைகளை நாம் பொதுவாக உளவியல் என்று அழைக்கிறோம். இந்த ஜீவாத்மாவின் இருப்பையும் கடுமையான ஒழுக்கம், ஞான மார்க்கப் பயணம் ஆகியவற்றின் மூலமே கண்டுணரமுடியும். அதை உணர விரும்புபவர்கள், தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் புலன்களை, மனதை, தர்க்க சிந்தனை அல்லது சாதாரண சுய ஆளுமை அனைத்தையும் தாண்டிச் சென்றாகவேண்டும். இவையெல்லாமும் கூட தேவர்களைப் போல் வெறும் பெயர் மாத்திரமே. இருந்தும் இந்தப் பெயர்களும் அப்பாலானதைக் குறிப்பவையே.
பெரு விருப்பத்துக்குரிய சுயத்தை முழுமையாகச் சரணடையச் செய்யவேண்டும். ஆத்மாக்களின் ஆத்மாவான பரமாத்மாவை, அனைத்தையும் சாட்சியாக நின்று பார்ப்பவரை, அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் ஆளுமையை அனைத்து உயிர்களில் இருந்தும் விலகிய ஒன்றை அப்போதுதான் கண்டடையமுடியும்.
அந்த ஆத்ம தரிசன நிலையை எட்டியதும் அதி உன்னத ஞானம் உதிக்கத் தொடங்கும். ஜீவாத்மாவானது பரமாத்மாவை நோக்கி ஈர்க்கப்படும். தானும் அதுவும் வேறு வேறல்ல என்பதை உணரும். மதத்தின் மூட்டமான கனவாகவும் தத்துவத்தின் பேரொளியாகவும் அது அமையும்.
இந்த அடிப்படை சிந்தனை வேதாந்தத்தில் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெர்க்லேயின் தத்துவப் பாடங்களைப் படித்துப் பாராட்டிப் புரிந்துகொள்ள முடிந்தவர்கள் உபநிடதங்களையும் பிரம்ம சூத்திரங்களையும் அவற்றின் விளக்க உரைகளையும் படித்தால் மேலும் அறிவுச் செழுமையும் ஆழமும் கொண்டவராக நிச்சயம் ஆவார்.
பொறுமை, பிரித்தறியும் திறன், ஓரளவுக்கு சுய மறுதலிப்பு ஆகியவை இருந்தாலே கீழைத்தேய தத்துவத் தாதுப் படுகையில் இருந்து பொன் துகள்களைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்கிறேன். ஒரு உள்ளீடற்ற விமர்சகர் பழங்கால மதத்திலும் தத்துவத்திலும் இருக்கும் அபத்தமான மற்றும் விசித்திரமான விஷயங்களைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பது மிகவும் எளிதுதான். ஆனால் ஆர்வமுள்ள மாணவராலேயே இந்த விநோதமானவற்றின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையையும் ஞானத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
நம்முடைய மிக மிகக் குறுகிய கால வாழ்க்கையிலேயே இந்தத் திசையில் சிறிய அளவில் முன்னோக்கிய நகர்வுகள் ஆரம்பித்துவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. கீழைத்தேய உலகின் புனித நூல்கள் எல்லாம் மிஷனரிகளின் வசைமாரிகளுக்கும் தத்துவ ஞானிகளின் கிண்டலுக்குமானவை மட்டுமே அல்ல. அவையெல்லாம் வரலாற்று ஆவணங்கள். மனித மனதின் மிக மிகப் பழமையான காலத்து சிந்தனைகளின் ஆவணங்கள். நெபுலா பெருவெடிப்பினால் கோள்கள் உருவானவிதம், மனிதர்கள் உருவான விதம், பரிணாம வளர்ச்சி நடந்தவிதம் என்பதையெல்லாம் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள தொல்லுயிர் எச்சங்கள் எப்படிப் பயன்படுகின்றனவோ அதுபோல் கீழைத்தேய இலக்கியங்கள் மனித சிந்தனை வளர்ச்சி வரலாறைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
நான் மிகைப்படுத்திச் சொல்வதாக உங்களுக்குத் தோன்றுகிறதா… உலகின் மாபெரும் தத்துவ மேதை ஆர்த்தர் ஷோபன்ஹவர் வேதாந்தம் பற்றி, குறிப்பாக உபநிடதங்கள் பற்றிச் சொல்வதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அவர் பொதுவாக மற்றவரைப் பற்றி புகழ்ந்து சொல்பவரே அல்ல. அவர் சொல்கிறார்:
‘இந்த உலகில் உபநிடதங்களைப் படிப்பதுபோல் ஒருவரை உன்னதப்படுத்தும் விஷயம் வேறு எதுவும் இல்லை. அது என் வாழ்வின் ஒரே ஆறுதலாக இருக்கிறது. என் மரணத்துக்குமே அதுவே இதமளிப்பதாகவும் இருக்கும்’.
ஒரு கல்விப் பருவத்துத் தொடர் விரிவுரைகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழங்கால இந்தியா, அதன் தொன்மையான இலக்கியங்கள் குறிப்பாக அதன் பழங்கால மதம் பற்றி விவரித்திருக்கிறேன். உங்கள் முன் வெறும் பெயர்களையும் தரவுகளையும் முன்வைப்பது மட்டுமே என் நோக்கமான இருந்திருக்கவில்லை. மனித இனத்தின் மிகப் பழங்கால அத்தியாயத்தில் இடம்பெற்றிருந்த பொதுவான மனித சிந்தனைகள், நலன்கள் இவற்றைத் தெரிந்துகொண்டு அவற்றை நீங்களும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
வேதங்களும் அதன் மதமும் தத்துவமும் உங்களுக்கு வெறும் ஆர்வமூட்டும் அல்லது புதுமையான விஷயமாக மட்டுமே இருக்கக்கூடாது. அதில் நமது பால்ய காலம் போல் அல்லது நமது சொந்த இனத்தின் பால்யகாலம் போல் நம்மைப் பற்றியும் நம்முடைய அறிவின் வளர்ச்சியும் நம்முடையதான நினைவுகள் பற்றியும் அதில் இருப்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நாம் இன்று இந்த இடத்தில் இருக்கிறோம். ஹோமர், விர்ஜில் பற்றி பள்ளிகளில் என்ன படிக்கிறோமோ அதுபோலவே வேதங்களிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றன. பிளேட்டோ அல்லது ஸ்பினோஸாவின் தத்துவ சிந்தனைகளைப்போலவே வேதாந்தமும் நமக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கற்றுத் தரமுடியும்.
மனித இனம் இப்போது எந்த நிலையை அடைந்திருக்கிறது; மொழிகள் என்ன நிலையை அடைந்திருக்கின்றன; மதங்கள் இப்போதைய நிலையை எப்படி அடைந்தன; பழக்க வழக்கங்கள், சட்ட திட்டங்கள், அரசாங்க வகைகள் எல்லாம் எப்படி இன்றையை நிலையை எட்டியிருக்கின்றன; நாம் யாராக இருக்கிறோமோ அதை எப்படி வந்தடைந்தோம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் ஒருவர் கட்டாயம் சமஸ்கிருதம் படித்தாகவேண்டும்; வேதங்களைப் படித்தாகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், மனித சிந்தனை வரலாற்றின் இருண்ட பக்கங்களில் சமஸ்கிருதப் படிப்பும் வேத ஆய்வுகளும் என்னவிதமான வெளிச்சத்தை ஏற்கெனவே பாய்ச்சியிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் துரதிஷ்டமே. அந்த மனித சிந்தனைகளைத்தான் நாம் சார்ந்தும் உள்வாங்கியும் வாழ்ந்துவருகிறோம். அதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படியானாலும் ஓர் இழப்பே.
பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி உருவாகின அல்லது அவற்றின் இயக்கங்களை என்னவிதமான விதிகள் கட்டுப்படுத்துகின்றன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளாமலே வாழும் வாழ்க்கை எப்படி இழப்புக்குரியதோ அதுபோன்ற இழப்புதான் சமஸ்கிருதம், வேதம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருப்பதும் என்று நம்புகிறேன்.
(முற்றும்)

