Skip to content
Home » இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

இயற்கை வரலாறு வழியாக இந்தியா #10 – பிரெஞ்சு காலனி ஆட்சியின் தடம்

பிரெஞ்சு காலனி ஆட்சிக்காலம் (1673ஆம் ஆண்டு முதல் 1954 வரை), இந்திய இயற்கைப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மிதமான பாதிப்பை ஏற்படுத்தியது. பிராந்திய அடையாளங்களைக் கொண்டதாகவும் அது இருந்தது. பிரிட்டிஷ் காலனி அரசைப்போல் இந்தியாவை முழுமையாக ஆட்சி செய்யாமல், பிரெஞ்சு காலனி ஆட்சியின் செயல்பாடுகள் குறிப்பிட்ட இடங்களுக்குள் சுருங்கிவிட்டன.

இருப்பினும் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் நிர்வாகமும், நகரமைப்புக் கொள்கைகளும், கலாசாரக் கட்டமைப்புகளும் இயற்கையோடு ஒரு வித்தியாசமான உறவுமுறையை உருவாக்கின. பசுமை நகரமைப்பு, தாவரவியல் மீதான ஆர்வம் மற்றும் சுற்றுச்சூழல் சிந்தனைகள் அதில் அங்கம் வகித்தன. இந்தியாவின் பாண்டிச்சேரி, மாஹே, யானம், காரைக்கால் மற்றும் சந்திரநகர் போன்ற இடங்களில் மட்டுமே பிரெஞ்சு காலனி ஆட்சி நடைபெற்றது.

பிரெஞ்சு ஆட்சியின்போது நன்கு திட்டமிடப்பட்டு பாண்டிச்சேரி நகரம் கட்டப்பட்டது. நிழல் தரும் மரங்கள் சாலையோரங்களில் நடப்பட்டு, ஒரு பசுமை நகரமாக பாண்டிச்சேரி மாற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரி நகர சபையால் சாலைகளில் மரம் நடுவதற்கான ஒழுங்குமுறைகள் வெளியிடப்பட்டு, மர நிழலுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டன.

1930-களில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் (வீதியின் இருபுறங்களிலும் மரங்களை நடுவதற்கான விதிமுறைகள்) மூலம் நகரத்தைப் பசுமையாக வைத்திருக்க பிரெஞ்சு காலனி அரசு நிர்வாகம் முயற்சி செய்தது. சில நேரங்களில் இயற்கையின் மீது அறிவியல் பார்வையுடன் கூடிய ஆர்வத்தைப் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தினார்கள்.

பாண்டிச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்கா, 1826ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தின்போது நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண பொழுதுபோக்கு மைதானமாக மட்டுமே இருந்தது. பின்னர் 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், பிரெஞ்சு தாவரவியல் நிபுணர் பெர்ரோட்டேட் (1805–1870) தலைமையில் ஓர் அறிவியல் நோக்குடன்கூடிய தாவரவியல் பூங்காவாக இது மாற்றப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாவர இனங்கள் கொண்டு வரப்பட்டு இங்கு நட்டு வளர்க்கப்பட்டன. குறிப்பாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து பல அரிய வகை தாவர இனங்கள் கொண்டு வரப்பட்டன. அச்சமயம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்த நாட்டுச் செடிகளும் இங்கு பாதுகாக்கப்பட்டன.

நேரான பாதைகள், சதுரப் பகுதிகள், ஒழுங்கான மர வகைகள் என பிரெஞ்சு தோட்டக்கலை பாணியில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதால், இந்தத் தாவரவியல் பூங்கா சிறப்பாகக் காணப்படுகிறது. இந்தியாவில் இயற்கை வரலாறு, தாவரவியல் மற்றும் மருத்துவ ஆய்வுகள் போன்றவை வளர்ச்சியடைந்த 18–19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்தப் பூங்கா பிரதிபலிக்கிறது. குறிப்பாகப் பெர்ரோட்டேட், ஜோசப் பெஸ்னியர், ஜோஹன் ஜெரார்ட் கோனிக் உள்ளிட்டோர் இந்த மையத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்கள்.

பிரெஞ்சு ஆட்சியின்போது இந்திய விலங்குகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்புடைய பதிவுகள் குறைவாகவே கிடைத்துள்ளன. வேட்டைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், வேட்டையிடக்கூடாத பகுதிகளாக சில இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டது ஆகியவை குறித்த பதிவுகள் உள்ளன.

பிரெஞ்சு காலனி ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சில இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஊசுட்டேரி மற்றும் பஹூர் ஏரி ஆகியவை பறவைகள் வசிக்கும் முக்கிய இடங்களாகக் கருதப்பட்டதால், அவற்றைப் பாதுகாப்பதற்கான சிறப்பு ஆணைகள் பிரெஞ்சு நிர்வாகத்தால் வெளியிடப்பட்டன.

நீர் – நில பறவைகள், குடிவந்த பறவைகள் மற்றும் உள்ளூர் பறவைகள் வாழும் முக்கிய இடங்களாக இந்த ஏரிகள் இருந்தன. இதனால் அப்பகுதிகளில் வேட்டையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில், ’பறவைகள் பாதுகாப்பு நிலம்’ என அவற்றை வகைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.

அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புப் பக்கங்களில் இந்த ஊசுட்டேரியை ’புகசூடு ஏரி’ எனக் குறிப்பிடுகிறார். சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்காக மதகுகளைக் கட்டி கால்வாய்களை வெட்டியதாகவும், கிருஷ்ணதேவராயர் புதுச்சேரி வழியாகச் சென்றபோதெல்லாம் இந்த ஏரியின் அழகைக் கண்டு ரசித்ததாகவும் கல்வெட்டுகளும் வரலாறும் கூறுகின்றன.

ஆனால் ஊசுட்டேரியின் உண்மைக் கதை இன்னும் சற்று ஆழமானது. அது புதுச்சேரி தாய்மண்ணுடன் இணைந்திருக்கும் அன்பு, பெண்களின் உழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கதையாகும். முத்தரையர்பாளையத்தில் நீர் ஆதாரம் தேடி உதவிய தாசியான ஆயிக்காக புதுச்சேரியில் ’ஆயி மண்டபம்’ கட்டப்பட்டது. ஆயியின் தங்கை மெலிந்த உடலமைப்புடன் இருந்ததால் அனைவராலும் அவள் ’ஊசி’ என்று அழைக்கப்பட்டாள்.

அந்த ஊசி, முத்தரையர்பாளையம் அருகில் பாழடைந்து கிடந்த ஒரு ஏரியைக் கண்டாள். மழைக்காலத்தில் கிராமம் முழுவதும் பயன்பெறவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் ஏற்பட்டது. தன் உடலுழைப்பையும் சொத்துக்களையும் செலவழித்து, அந்த ஏரியை ஊசி மீண்டும் உயிர்ப்பித்தாள். அவள் உழைப்பைக் கண்டு அப்பணியில் ஊர்மக்களும் இணைந்தனர்.

இதனால் ஏரி சீராகிப் பரந்து விரிந்து நீலக்கடலைப்போல் காட்சி அளித்தது. மக்களது நன்றியின் வெளிப்பாடாக, ’ஊசி சீரமைத்த ஏரி’ என்பதைக் குறிக்கும் வகையில் அப்போது அது ’ஊசியிட்ட ஏரி’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி அதன் பெயர் ’ஊசுட்டேரி’ ஆனது.

 18ஆம் நூற்றாண்டில் புதுச்சேரி முழுவதும் பிரெஞ்சு காலனி அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பிறகு ஊசுட்டேரியின் கதையில் புதிய அத்தியாயம் தொடங்கியது. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள் புதுச்சேரியைத் தங்களது வணிக மற்றும் ராணுவத் தலைமையகமாக மாற்றியபோது, குடிநீர் ஆதாரங்களின் அவசியத்தை உணர்ந்தனர். ஊசுட்டேரிதான் அந்தத் தேவைக்கான பிரதான ஆதரமாக மாறியது.

பிரெஞ்சு கவர்னர் டுப்ளே போன்றோர் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, நீர்பிடிப்புப் பகுதியைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஊசுட்டேரியின் நீரைச் சேமித்து வைப்பதற்கான வழிமுறைகளை அவர்கள் மேம்படுத்தினார்கள். கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டன, சில இடங்களில் கல்லால் ஆன அணைகள் கட்டப்பட்டன.

நகரின் கோட்டைச் சுவர்களுக்குள் வசித்த ஐரோப்பியக் குடிமக்கள் தொடங்கி புறநகர் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் வரையில் அனைவருக்கும் குடிநீரை வழங்கும் முதன்மை ஆதாரமாக இந்த ஏரி விளங்கியது. ஏரியின் இயற்கை அழகை பிரெஞ்சு ஆர்வலர்கள் ரசித்தனர். காலனி ஆட்சிக் காலத்துப் பல்வேறு பதிவுகளில், ஊசுட்டேரி சுற்றுப்புறங்கள் பசுமையாக இருந்ததாகவும், அங்கு பறவைகள் கூட்டங்கூட்டமாகக் காட்சி அளித்ததாகவும் எழுதப்பட்டுள்ளது. சில பிரெஞ்சு வரைபடங்களில்கூட புதுச்சேரியின் முக்கிய நீர்நிலையாக ஊசுட்டேரி சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு காலனி அரசின் நிர்வாக ஆவணங்களில் சில விலங்குகள் ’காப்பாற்றப்பட வேண்டிய உயிரினங்கள்’ எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் நரி, புலி, மயில், பருந்து போன்ற விலங்குகளும் பறவைகளும் அடக்கம். இதன் மூலம் பாதுகாக்கவேண்டிய முக்கிய உயிரினங்களாக இவை சுட்டிக்காட்டப்பட்டன. அந்நேரத்தில் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பிற அந்நிய காலனி அரசின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடந்த கடுமையான வேட்டைச் செயல்பாடுகளுக்கு எதிரான ’பிரான்ஸ் காலனித்துவத்தின் சிறப்புக் கொள்கையாக’ இது கருதப்படுகிறது.

இத்தகைய ஆவணங்கள், புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியில் இயற்கை வரலாறு குறித்த புரிதலும், விலங்கு பாதுகாப்பு குறித்த ஆரம்பகால விழிப்புணர்வும் இருந்ததை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக ஊசுட்டேரி ஏரி இன்றும் பறவைகள் பாதுகாப்பு மையமாகவும், ஈரநில வாழ்விடமாகவும் தொடர்கிறது என்பதே அக்காலத்து முயற்சியின் நீட்சியாகும்.

இயற்கையை மனிதநேய கண்ணோட்டத்திலும் நகர அமைப்பு சார்ந்த கோணத்திலும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அணுகினர். அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பசுமை நடவடிக்கைகள் இந்தியாவின் சுற்றுச்சூழல் வரலாற்றில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், நகர அமைப்பு திட்டமிடல், தாவர பூங்காக்கள் மற்றும் தற்காலிக பசுமை திட்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால் உயிரினங்களைப் பாதுகாக்கும் நிலைத்த கொள்கைகள் எதுவும் இல்லாததால், இவர்களின் இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகள், பார்வை மற்றும் அழகை நோக்கமாகக்கொண்டே அமைந்திருந்தன.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *